Advertisement

அத்தியாயம் – 3
கோவை மத்திய சிறைச்சாலை, மாலை ஐந்து மணி.
குழைய வடித்த குண்டரிசி சாதத்தை டிபன் பாக்ஸில் போட்டுக் கவிழ்த்து பெரிய டிரேக்களில் வைத்து ஒவ்வொரு பிளாக்காக தள்ளிக் கொண்டு வந்தனர் இரு சிறைக் காவலர்கள். கைதிகள் இரவு உணவை வாங்குவதற்காய் தங்கள் தட்டுடன் வரிசையில் நிற்க, ஒவ்வொரு தட்டிலும் ஒருவர் சாதத்தைப் போட குழம்பு என்ற பெயரில் ஒரு திரவத்தை ஊற்றினார் மற்றொருவர். அது மடை திறந்த வெள்ளம் போல பாத்திரத்தில் பாய்ந்தோடியது.
சாதாரணமாய் நமது வீட்டில் சாம்பார் வைக்க மூன்று டம்ளர் ஊற்றுவோமென்றால் சிறையில் பத்து டம்ளர் ஊற்றுவார்கள். மிகவும் மட்டரக பருப்பில் செய்த சாம்பார் என்பதால் கருப்பு நிறத்தில் இருக்கும். தனக்குரிய படியை (உணவை) தட்டில் வாங்கிக் கொண்டு தனது செல்லுக்குள் நுழைந்தான் சக்திவேல்.
சிறையில் இரவு உணவை ஆறு மணிக்கு முன்பே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மாலை ஆறுமணிக்கு கதவை அடைத்தால் காலை ஆறு மணிக்கு தான் திறப்பார்கள்.
அவனுடன் தங்கியிருக்கும் பெரியசாமியும் உணவை வாங்கி வந்து மூடி ஓரமாய் வைத்துவிட்டு அவன் அருகில் சோர்வாய் அமர்ந்தார். ஆறு மணிக்கு எல்லா அறையிலும் கைதிகளைப் பரிசோதித்து பூட்டிச் சென்றார்கள்.
“என்ன சக்தி, எதோ யோசனையா இருக்க…” அமைதியாய் இருந்தவனிடம் கேட்டார் பெரியசாமி.
“ஒண்ணும் இல்லீங்க ஐயா… ஏதோ பழைய நினைப்பு… அம்மாவைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்…”
“ம்ம்… இந்த சாம்பாரைப் பாக்குற ஒவ்வொரு தடவையும் அம்மா சாப்பாடு நினைவு வராம இருந்தா தான் அதிசயம்…”
“ம்ம்… உங்க ரிலீஸ் டேட் சொல்லிட்டாங்களா…”
“நாளைக்குத் தெரியும் சக்தி… இனி நான் வெளிய போயிதான் என்ன பண்ணப் போறேன்… எங்க போவேன்…” என்றார் விரக்தியுடன்.
“இந்த உலகத்துல ஒவ்வொரு பிறப்புக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கும் ஐயா… நீங்க எதாச்சும் முதியோர் இல்லத்துல தங்கிக்கலாமே… அங்கே உங்க வயசுப் பெரியவங்களோட பழகினா மனசுக்கும் ஆறுதலா இருக்கும்…”
“ம்ம்… அதான் யோசிச்சிருக்கேன்… யாரும் இல்லாம பூமிக்கு பாரமா இன்னும் எத்தன காலம் இருக்கணுமோ…” சொல்லிக் கொண்டே நிலத்தில் வெறுமனே படுத்துக் கொண்டார். அவரது கண்கள் மூடிக் கொள்ள பழைய நினைவுகளை யோசிக்கிறார் எனப் புரிந்து கொண்டான் சக்தி.
சிறைக்கைதிகள் அனைவருமே திட்டமிட்டு குற்றவாளி ஆவதில்லை. பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளே அவர்களைக் குற்றவாளியாக்குகிறது. அடிதடி வழக்கு, திருட்டு, கூலிக்கு கொலை செய்வது போன்ற வழக்கில் உள்ளே வந்தவர்களுக்கு சிறை ஒரு பிரச்சனை இல்லை… அவர்கள் திட்டமிட்டு தவறென்று தெரிந்தே செய்கிறார்கள்… ஆனால் சூழ்நிலையால் கொலை செய்து உள்ளே வந்தவர்களுக்கு சிறை வாழ்க்கை பெரும் துயரத்தையும் சுமையையும் தீராத வலியையும் கொடுக்கும் என்பது உண்மை.
அப்படி சூழ்நிலை காரணமாய் கொலை செய்து குற்றவாளி ஆனவர்கள் தான் சக்திவேலும், பெரிய சாமியும்.
தனது ஒரே மகன் குடி, போதைக்குப் பழக்கமாகி வேலைக்கு செல்லாமல் பணத்துக்காக பெற்றவர்களை நச்சரித்து, வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் விற்று குடிக்கத் தொடங்கியவன் விற்க ஒன்றுமில்லா சமயத்தில் அன்னையின் தாலிக்கயிறைப் பறிக்க முயல அன்னை சம்மதிக்கவில்லை. அப்போது போதையில் அம்மிக் குழவியைத் தூக்கி அவள் மீது போட வலியில் துடித்த மனைவியின் குரல் கேட்டு ஓடிவந்த பெரியசாமி ஆத்திரம் தலைக்கேற அரிவாளால் மகனின் கழுத்தில் வெட்டிவிட்டார். அவனும் அதே இடத்தில் துடிதுடித்து இறந்து போனான்.
ரத்தம் ஒழுக வேதனையில் துடித்த மனைவியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட யாருமற்ற தனிமரமாய் கலங்கி நின்றார் பெரியசாமி. அவரைப் போலீஸ் அரஸ்ட் செய்து ஏழாண்டுகள் தண்டனை முடிந்து வெளியுலகத்தைக் காணத் தயாராகிக் கொண்டிருந்தார்.
பெரியசாமியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த சக்திவேலின் நினைவுகள் தனது கடந்த காலத்திற்கு செல்ல ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு அவனும் படுத்துக் கொண்டான். இமைகளை அழுந்த மூடினாலும் மனதுக்குள் விரியும் காட்சிகளை மறைக்க முடியவில்லை. முகத்தின் கண்கள் காட்சியை மறந்தாலும் அகத்தின் கண்கள் காட்சி தந்த வலியை என்றும் மறப்பதில்லை.
விழிகள் மூடி
விழுங்கினாலும்
துயரங்கள் என்றும்
தூங்க விடுவதில்லை…
ஹேஏஏஏஏ… லால லல்லா…
லலலா லலலா லலலா
லல்லல்ல லல்ல… ஆஆஆ…
பூமாலை ஒரு பாவையாகுமா…
பொன்மாலை ஒரு பாட்டுப் பாடுமா…
இது பார்க்கப் பார்க்க புதுமை
இதைக் கேட்க கேட்க கொடுமை…
அட யார்தான் சொல்வது…
கல்லூரி மேடையில் பாடல் அதிர்ந்து கொண்டிருக்க தகதக உடையில் ஆடிக் கொண்டிருந்தார்கள் அந்தப் பெண்ணும் ஆணும். மாணவர்களின் கரகோஷம் மேடையெங்கும் எதிரொலிக்க அனைவரின் முகத்திலும் சிரிப்பு அப்பிக் கிடந்தது. கூச்சலிட்டு ஆர்ப்பரித்து நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
பாடல் முடிந்ததும், “ஒன்ஸ் மோர்…” என்று மாணவர்கள் உற்சாகக் குரல் கொடுக்க பேராசிரியர், பிரின்சிபல் உட்பட அனைவர் முகத்திலும் புன்னகை வழிந்தது.
அதற்குக் காரணம் இரட்டையர்களான வெற்றிவேலும், சக்திவேலும். வெற்றி ஆணாகவும், சக்தி பெண்ணாகவும் சினிமாவில் உள்ள காட்சி போலவே நளினமாய் இழைந்து ஆடிக் கொண்டிருக்க இரட்டையர்களின் ஜோடியில் அரங்கமே அதிர்ந்தது.
நடனம் முடிந்து கீழே இறங்கியவர்களை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கொண்டாடினர்.
பெண்ணைப் போல் அலங்காரம் செய்திருந்த சக்தியை நண்பர்கள் வேண்டுமென்றே அங்குமிங்கும் கிள்ளி கிண்டல் செய்ய வெற்றி சிரித்தான்.
“வெற்றி கலக்கிட்டிங்க… அதும் சக்தி செம மாஸ் டா… நீ மட்டும் உண்மைலயே பொண்ணா இருந்தா உன்னை அப்படியே அள்ளிட்டுப் போயிருப்போம்…” ஒருத்தன் சொல்ல வெற்றி முறைத்தான்.
“ச்சீ… என்னடா சொல்லற…” வெற்றி கேட்கவும்,
“இல்லடா வெற்றி, பெண் வேஷத்துல சக்தி அவ்ளோ அழகா இருக்கான்னு சொல்ல வந்தேன்…” சமாளித்தான் அவன்.
“சக்தி இல்லையேல் சிவம் இல்லைன்னு சொல்லுவாங்க, இங்கே சக்தி இல்லையேல் வெற்றி இல்லை மச்சி…” ஆளாளுக்கு மாறி மாறி சகோதரர்களை புகழ்ந்து கொண்டிருக்க இருவரும் உடை மாற்றுவதற்காய் நகர்ந்தனர்.
அவர்கள் எதிரில் வந்த அபர்ணா சக்தியையே ஆவலுடன் நோக்கினாள்.
“சக்தி, யூ ஆர் லுக்கிங் வெரி பிரெட்டி…” என்றவளின் கண்கள் அவனிடம் சங்கேதமாய் மொழிகள் பேச கண்களில் ஆவலுடன் அவளையே பார்த்த சக்தியைக் கண்ட வெற்றி, “ம்ம் போச்சுடா, நயாகராவைத் திறந்துட்டான்…” என்றபடி முன்னில் சென்றுவிட்டான். வெற்றிக்கு பெண்களுடன் அவசியமில்லாமல் பேசுவதோ குழைவதோ பிடிக்காது… தேவையின்றி எந்தப் பெண்களுடனும் பேச மாட்டான்… இந்த விஷயத்தில் சக்தி அவனுக்கு அப்படியே ஆப்போசிட்.
நிறைய பெண் தோழியர் அழகனான அவனோடு நட்பாய் பழகி வந்தாலும் அபர்ணா அவனுக்கு சம்திங் ஸ்பெஷல்.
“நான் அவ்ளோ அழகாவா இருக்கேன் அபு… நீதான் அழகு… என்னைக் கொள்ளை கொள்ளும் அழகு…” என்றான்.
“ஹாஹா, உன்னை இந்த வேஷத்தில் பார்க்கும்போது நான் ராவணனாப் பிறந்திருக்கக் கூடாதான்னு இருக்கு சக்தி…”
“ராவணனா, ஏன் ராமன்னு சொல்லலாமே…”
“ராமனை விட ராவணனுக்கு தான் சீதையின் அருமை தெரிஞ்சிருக்கு… அதான் அவளுக்காக ஒரு தேசத்தையே பழி கொடுக்கக் கூட அவன் தயங்கல… ஆனா, ராமன் அப்படியா… தன் மேல் உயிரையே வைத்திருந்த கற்புக்கரசியான மனைவியை யாரோ சொன்னதுக்காக சந்தேகப்பட்டு சிதையில் இறக்கியவன் தானே… அவளோட அருமை தெரிஞ்சா அப்படிப் பண்ணுவானா…” அவள் சொன்ன விளக்கத்தைக் கேட்டு திகைத்தவன்,
“அபு, நீ சொல்லறது புதுசா இருந்தாலும் சரிதானோன்னு தோணுது…” என்றான்.
“ம்ம்… எனக்கு ராமனை விட ராவணனைத் தான் பிடிக்கும்…”
“ஹாஹா… நீ எப்பவும் வித்தியாசமா யோசித்து என்னை லாக் பண்ணிடறே… நான் சரண்டர்…” என்றவனின் கன்னத்தில் செல்லமாய் தட்டி, “சரி சீக்கிரம் போயி டிரஸ்ஸை மாத்து… எனக்கே உன்னைப் பார்க்க ஒரு மார்க்கமா இருக்கு… நான் போறேன்…” என்றவள் கண்ணடித்து முன்னே செல்ல அவள் மறையும் வரை நோக்கி நின்றவன் உடை மாற்றும் அறைக்கு சென்றான்.
மனம் சந்தோஷத்தில் துள்ள அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதையாய் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
அதற்குள் நடன உடையை மாற்றி பழைய உடையை அணிந்திருந்த வெற்றி இவனைக் கண்டதும் முறைத்தான்.
“டேய் சக்தி, அந்த அபர்ணா கூடப் பழகாதேன்னு சொன்னா கேக்கவே மாட்டியா… அவ பேச்சும், பார்வையும் சுத்தமா சரியில்லை… அவகூட உனக்கு என்ன பிரண்ட்ஷிப்…” வெற்றி கேட்க,
“ஆஹா, நட்புன்னு நினைச்சதுக்கே இவன் இப்படிக் கத்தறானே… நட்பைத் தாண்டி நாங்க காதலிக்கத் தொடங்கினது தெரிஞ்சா இவன் என்ன சொல்லப் போறானோ…” என மனதுக்குள் கலவரமானான் சக்தி.
“என்னடா முழிக்கறே… என்னதான் ஒண்ணாப் பிறந்தாலும் உனக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி பிறந்த அண்ணன் நான்… உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன்… புரிஞ்சுதா…” வெற்றி சிடுசிடுத்தான்.
“நல்லாப் புரிஞ்சது, அஞ்சு நிமிஷம் முன்னாடி பொறந்த அண்ணன் அவர்களே…” என்று சக்தி புன்னகையுடன் சொல்ல வெற்றியும் சிரித்து விட்டான்.
“சரி, சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு முன்னாடி பிளவுஸ் உள்ளே வச்ச அந்த கருமாந்தரத்தை எல்லாம் எடு… ஏதோ கரகாட்டக்காரி போல இருக்கு உன்னைப் பார்க்க…”
“அடப்பாவி, எல்லாரும் நல்லாருக்குன்னு சொன்னாங்க…”
“அவங்க பார்வைக்கு நீ ஒரு பெண்ணாத் தெரிஞ்சிருக்கலாம்… ஆனா என் பார்வைக்கு நீ ஒரு கம்பீரமான ஆணா, என் தம்பியாத் தான் தெரியணும்…” என்றவன் அவன் தோளில் தட்டிவிட்டு நகர உடை மாற்றி முகத்தின் மேக்கப்பைக் கலைத்து விட்டு அழகாய் வந்தான் சக்தி.  
இருவரும் மீண்டும் அரங்கத்துக்கு சென்று நண்பர்களுடன் ஐக்கியமாயினர். அந்த இஞ்சினியரிங், ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் சகோதரர்கள் இருவரும் MBA இறுதியாண்டு படிக்க, அபர்ணா இஞ்சினியரிங் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி லைப்ரரியிலும் காண்டீனிலும், ஆடிட்டோரியத்திலுமாய் அவர்கள் சந்திப்பு வளர்ந்து கொண்டிருந்தது.
மாலையில் இருவரும் வீடு திரும்பும்போதே நெய்யின் வாசனை அன்னை ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதை உணர்த்த வெற்றி வண்டியை நிறுத்தி வருவதற்குள் சக்தி அடுக்களைக்குள் நுழைந்திருந்தான்.
“அம்மா, மம்மீ, ஆத்தா… என்ன தாயி, கேசரி மணம் தெரு வரைக்கும் தூக்குது… உன்னை யாராச்சும் பொண்ணு பார்க்க வராங்களா…” கேட்டுக் கொண்டே தன் பின்னில் வந்து தோளில் தலை வைத்துப் பார்த்த மகனிடம் செல்ல முறைப்புடன் திரும்பினார் வத்சலா. இரண்டு ஆணழகர்களைப் பெற்ற அன்னையல்லவா… அன்பு வடியும் அழகு முகத்தோடு கம்பீரமாய் இருந்தார்.
“உனக்கு கொழுப்பு ரொம்ப கூடிடுச்சு… வக்கனையா நெய் ஊத்தி செய்து தரேன்ல அதான்…” என்றவரிடம்,
“சரி சரி, கோச்சுக்காத மம்மி… இன்னைக்கு என்ன, ஸ்பெஷலா கேசரி எல்லாம் பண்ணிருக்க…”
“காலைல டிபன் சாப்பிடும்போது எங்கயோ நெய் வாசனை வருது… கேசரியா இருக்குமோனு சொன்னியா… அதான் பிள்ளைக்கு கேசரி சாப்பிட ஆசை வந்திருச்சு போலருக்குன்னு கொஞ்சம் கேசரி பண்ணினேன்…”
“வாவ்… சூப்பர் மம்மி… என் வாயில கேசரிய வார்த்த அன்னையே… நீ வாழ்க…” என்று கேசரியைத் தொடப் போனவனின் கையில் தட்டியவர், “அடேய் பறக்காத… இப்பதான் ஆப் பண்ணேன்… கை சுட்டுரும்…” என்றுவிட்டு, “வெற்றி எங்கே…” கேட்கும்போதே வந்து நின்றான் அவன்.
“என்ன மா, இன்னைக்கு ஏதும் விசேஷமா…” கேட்ட மகனிடம், “பிள்ளைகளுக்குப் பிடிச்சதை செய்து கொடுக்க விசேஷம் எதுக்குடா… மனசு இருந்தாப் போதாதா…” கேட்டுக் கொண்டே இரு கண்ணாடிக் கோப்பையில் சூடான கேசரியைப் போட்டு ஸ்பூனுடன் எடுத்து வந்தார்.
“ரெண்டு பேரும் பிரஷ் ஆகிட்டு வந்து எடுத்துக்கோங்க… கொஞ்சம் சூடு ஆறட்டும்…”
அன்னை சொல்லவும், “சரிம்மா…” என்று வெற்றி செல்ல,
“கேசரி சாப்பிட எதுக்கு மா பிரஷ் ஆகணும்… சாப்பிட்டு போறேனே…” என்ற இளையவனை முறைத்தார் வத்சலா.
“உன் அண்ணன் சொல்லற போல உன்னை செல்லம் கொடுத்து ரொம்ப கெடுத்து வச்சிருக்கேன்… ரெண்டு பேரும் ஒண்ணாப் பிறந்தாலும் சுபாவம் வேற வேறயா இருக்கே… அவன் நான் எது சொன்னாலும் உடனே கேப்பான்… ஆனா  நீ தான் கேக்கவே மாட்டேங்கற…” அலுத்துக் கொண்டார்.
“யாரு அஞ்சு நிமிஷம் முன்னாடி பொறந்த அவன் எனக்கு அண்ணனா, சரியான சிடுமூஞ்சி சாமியார்… அவனைப் போல எல்லாம் என்னால இருக்க முடியாதுப்பா…” சொல்லிக் கொண்டே கேசரியை ஊதி வாயில் போட்டுக் கொண்டான்.
“ஓஹோ, எங்கே அவன் முன்னாடி இதை சொல்லு பார்ப்போம்… அவனைப் பார்த்தா மட்டும் அண்ணான்னு உருகுவே…” என்றார் புன்னகையுடன்.
“அது அவன் மனசு வருத்தபடக் கூடாதே… அதான் பாவம்னு அண்ணன்னு சொல்லறேன்…” என்றவனை நோக்கி கிண்டலாய் தலையாட்டினார் வத்சலா.
“அவன் உனக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி பொறந்தாலும் எவ்ளோ பொறுப்பா இருக்கான்… நீ இன்னும் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கியே டா…”
“போம்மா, வாழ்க்கையே ஒரு விளையாட்டுதான்… ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா அனுபவிச்சு விளையாடணும்… வெற்றி, தோல்வியைப் பத்தி எல்லாம் கவலைப்படாம வாழ்க்கை முடியுற வரை விளையாடிட்டே இருக்கணும்… இப்படி எப்பவும் உர்ருன்னு திரிஞ்சா இந்த உலகத்துல ஏதாச்சும் மாறிடப் போகுதா என்ன… ரிலாக்ஸா என்னைப் போல இருக்கணும் மா…” என்றான் சக்தி.
“ஹூம்… என்னமோ தத்துவம்லாம் சொல்லற… வாழ்க்கை விளையாட்டு இல்ல… கொஞ்சமாவது பொறுப்பா இரு…” அவர் எழுந்து செல்ல அவன் கேசரியில் ஐக்கியமானான்.
“சக்தி, சாப்பிடாம தூங்கிட்டியா…” பழைய நினைவில் ஆழ்ந்திருந்த சக்தியை உலுக்கினார் பெரியசாமி. கண்கள் கசிய படுத்திருந்த சக்திவேல் அவரது உலுக்கலில் நிகழ்விற்கு வந்தான்.
“இல்ல, சும்மா படுத்தேன்…”
“ம்ம்… சரி வாப்பா… சாப்பிட்டிருவோம்…” அவர் சொல்லவும் எழுந்து அமர்ந்தான். அலுமினியத் தட்டில் தண்ணி சாம்பாரும், குண்டு மணி அரிசிச் சோறும் அவனது விதியை கண்டு கேலியாய் சிரித்துக் கொண்டிருந்தது
பிறப்பும் இறப்பும் ஒரு முறை
இருக்கும்போதே வாழ்ந்திட வேண்டும்…
தொலைந்த பின் தேடுவதையும்
இழந்தபின் வாடுவதையும் விட்டு…
துக்கமோ சந்தோஷமோ
வாழ்ந்திடுவோம்
நமக்கான வாழ்க்கையை…

Advertisement