Advertisement

அத்தியாயம் – 29
“இப்ப தான் மனசு நிறைஞ்சிருக்கு மாப்பிள… என் பொண்ணு வாழ்க்கை தனி மரமாவே நின்னுடுமோன்னு ரொம்ப கவலைப்பட்டேன்… நல்ல வேளை… ஆகாஷ் அம்மா, அப்பா மூலமா உங்களைப் பேச வச்சேன்… இல்லன்னா இந்த கல்யாணத்துக்கு அவ இப்பவும் சம்மதிச்சிருக்க மாட்டா…”
“ம்ம்… உங்க கவலை புரியுது மாமா… பெத்தவங்களுக்கு பொண்ணு வாழாம வீட்ல இருந்தா கவலை இருக்கத்தானே செய்யும்…” என்றான் வெற்றி.
“ம்ம்… அதை அவ புரிஞ்சுக்கலயே மாப்பிள… என் பொண்ணு வாழவே தொடங்காம வாழ்க்கை இழந்துட்டு நிக்கறாளேன்னு அவளைப் பாக்குற ஒவ்வொரு நொடியும் என் மனசு துடிக்கும்… எத்தனை சம்மந்தம் கொண்டு வந்தோம்… எதுக்கும் சம்மதிக்கவே இல்லை… அவ மனசுல ஆகாஷ் தம்பி மேல இருந்த அன்பை விட, அவருக்கு அப்படி ஆனதுக்கு தன்னோட ராசிதான் காரணமோங்கற பயம் தான் அதிகமா இருந்துச்சு…” என்றார் வருத்தத்துடன்.
“ம்ம்… நானும் அதைப் புரிஞ்சுகிட்டேன் மாமா… அவ மனசுல உள்ள பயத்தைப் போக்கி சந்தோஷமா வச்சுக்க வேண்டியது என் பொறுப்பு… இனி இதுக்காக அவளை நினைச்சு கவலைப் பட்டு உடம்பைக் கெடுத்துக்காதிங்க…”
“இல்ல மாப்பிள… நீங்க எப்ப அவ வாழ்க்கைல வந்திங்களோ அப்பவே என் கவலை எல்லாம் போயிடுச்சு… இனி எங்க கைல ஒரு பேரன், பேத்தியைப் பெத்துக் கொடுத்துட்டா ரொம்ப சந்தோஷமாயிடுவேன்…” என்றார் பரமசிவம்.
“உங்க மனசு போல எல்லாம் நல்லாவே நடக்கும் மாமா… இந்துவைப் போல ஒரு பெண் எங்க வாழ்க்கைல வந்ததுக்கு நான் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்… நீங்க அன்னைக்கு அவ வாழ்க்கைல நடந்ததைப் பத்தி எங்கிட்ட சொல்லாம இருந்திருந்தா அவளையும் சாதாரண பெண்ணைப் போல தான் நான் நினைச்சிருப்பேன்… ஆனா, தன்னை விரும்பி கல்யாணம் பண்ணிகிட்ட ஒருத்தன் அவளோட வாழவே இல்லன்னாலும் அவனை நினைச்சுட்டு வேற கல்யாணமே வேண்டாம்னு இருந்தாளே… அந்த மனசு எனக்கு ரொம்பப் பிடிச்சுது… அவளை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன்…” என்றான் வெற்றி நெகிழ்ச்சியுடன்.
“எனக்கு இந்த வார்த்தை போதும் மாப்பிள…” அவன் கையைப் பற்றிக் கொண்டவர், “என் பொண்ணு உங்களோட சந்தோஷமா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்றவர் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டார். தந்தை தன்னைப் பற்றிய கவலையில் வெற்றியிடம் பேசியதைக் கேட்டு நின்ற இந்துவின் கண்களும் கலங்கியது.
“என் வருத்தத்தைப் பெருசா நினைச்சு இவங்களையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டனே… இனியாச்சும் அவங்க மனசு நிறையற போல நடந்த்துக்கணும்…” என மனதுள் நினைத்துக் கொண்டே அவர்கள் பேசுவதை செவி மடுத்தாள்.
“சரி, அதை விடுங்க மாமா… நீங்க எப்ப டியூட்டில ஜாயின் பண்ணப் போறீங்க…” வெற்றி பேச்சை மாற்றினான்.
“நாளைக்கு மாப்பிள… ஆல்ரெடி உடம்புக்கு முடியாமயும், கல்யாண வேலைன்னும் நிறைய லீவு போட்டாச்சு… நாளைக்கு ஆபீஸ் போகலாம்னு இருக்கேன்…”
“ம்ம்… சரி மாமா, நாங்க நாளைக்கு சக்தியைப் பார்க்கப் போகலாம்னு இருக்கோம்…” என்றவனின் முகம் சுருங்கியது.
“அவன் ஆசப்பட்ட போல எனக்கு நல்ல மனைவி அமைஞ்சிட்டா… ஆனா, நான் ஆசப்பட்ட போல அவன் வாழ்க்கை தான் அமையல…” என்றான் வருத்தத்துடன்.
“கவலப்படாதீங்க மாப்பிள, அவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை நிச்சயம் அமையும்… கடவுள் எப்பவும் கஷ்டத்தை மட்டுமே கொடுக்கறதில்ல… சில நேரம் நன்மையும் கொடுப்பார்… நல்லது நடக்கும்னு நம்புவோம்…”
“ம்ம்… உங்க வார்த்தை பலிக்கட்டும் மாமா…” என்றவன் இந்துவின் குரலைக் கேட்டு திரும்பினான்.
“அப்பா… இந்த நேரத்துல பனியில நின்னுட்டு இருக்கீங்க உடம்புக்கு சேராமப் போயிட்டா…” அக்கறையுடன் கேட்ட மகளை நோக்கி புன்னகைத்தார் பரமசிவம்.
“மனசு நிறைஞ்சிருக்கும்போது இந்த பனி உடம்பை என்ன பண்ணிடும் மா…” என்றார்.
“ஓ… சரி பேசினது போதும்… ரெண்டு பேரும் கீழ வாங்க, அம்மா கூப்பிடறாங்க…” என்றவள் முன்னில் நடந்தாள்.
“ம்ம்… இதோ வர்றோம் மா…” என்றவர், “வாங்க மாப்பிள, ஹோம் மினிஸ்டர் கூப்பிட்டாச்சு, கீழ போவோம்…” என்று சொல்ல சிரித்த வெற்றி, “அத்தைனா உங்களுக்கு பயமா மாமா…” என்று கேட்க அவரும் சிரித்துக் கொண்டே சொன்னார்.
“வாழ்க்கை சந்தோஷமா இருக்க நான் எப்பவும் ரெண்டு மந்திரத்தை தான் கடைபிடிக்கிறேன் மாப்பிள… ஒண்ணு சரி மா… இன்னொன்னு சாரி மா… இதை நீங்களும் உங்க ஹோம் மினிஸ்டர் கிட்ட யூஸ் பண்ணிப் பாருங்க… உங்க வாழ்க்கையும் ஒஹோன்னு இருக்கும்…” என்று சிரிக்க, “ஹாஹா… சூப்பர் மந்திரம் மாமா… நானும் பாலோ பண்ணறேன்…” என சிரித்துக் கொண்டே கீழே வந்தனர்.
“என்ன ரெண்டு பேரும் ஏதோ பெரிய காமெடி சொல்லி சிரிக்கிற போல இருக்கு… எங்களுக்கு சொன்னா நாங்களும் சிரிப்போம்ல…” மகளுடன் வாசலில் நின்று கொண்டிருந்த அகிலா கேட்டார்.
“அது வந்து மா… நாங்க சும்மா ஆபீஸ் விஷயம் பேசி சிரிச்சிட்டு இருந்தோம்…” என்ற பரமசிவம் மருமகனைப் பார்த்து கண் சிமிட்ட பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் வெற்றி. இதை எல்லாம் கவனித்தாலும் கண்டு கொள்ளாமல் நின்றாள் இந்து.
“நீங்க இப்படிப் பேசி சிரிச்சு எவ்ளோ நாளாச்சுங்க… பார்க்கவே சந்தோஷமா இருக்கு…” என்ற மனைவியிடம், “சரி, இனி எப்பவும் சிரிச்சுட்டா போகுது… சிந்துவும், குழந்தையும் எங்கே…” என்றார் பரமசிவம்.
“சிந்து கைல போட்டிருந்த மருதாணியைப் பார்த்திட்டு பவியும் வேணும்னு கேட்டா… அதான் ரூம்ல குழந்தைக்கு வச்சு விடுறா போலருக்கு…” என்றவர், “சிந்து, பவியை அழைச்சிட்டு வா…” என்று குரல் கொடுத்தார்.
“பவி, இது காயற வரைக்கும் கையை இப்படியே விரிச்சு வச்சுக்கணும்… இல்லன்னா ஒண்ணுல ஒண்ணு முட்டிட்டு எல்லாம் கீழே விழுந்திடும்…” குழந்தையிடம் சொல்லிக் கொண்டே அழைத்து வந்தாள் சிந்து.
“சரி, டைம் ஆச்சு… நாங்க கிளம்பறோம் மாமா, பவி கொஞ்ச நேரத்துல தூங்கத் தொடங்கிடுவா…” என்று வெற்றி சொல்ல அவர்களுக்கு விடை கொடுத்தனர்.
“அப்பா, தூக்கு…” பவி இரண்டு கையையும் மேலே தூக்க அவளை அள்ளிக் கொண்டான் வெற்றி.
“பை மாம்ஸ், பை அக்கா…” சிந்து கையசைக்க அவர்களுக்கு பை சொல்லி கணவனுடன் நடந்தாள் இந்து. பெரியசாமி இவர்களின் குரல் கேட்டு கேட் அருகிலேயே காத்திருந்தார்.
“சாப்பிட்டிங்களா, ஐயா… பார்வதிம்மா கிளம்பிட்டாங்களா…” கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் இந்து. அவளுக்கு பதில் சொல்லியபடி கேட்டை பூட்டிவந்தார் அவர்.
“ஐயா, நாளைக்கு நாங்க சக்தியைப் பார்க்கப் போறோம்…”
“ஓ… நல்லது தம்பி… உங்களை இப்படிப் பார்த்தா சக்தி தம்பி ரொம்ப சந்தோஷப்படும்…”
“ம்ம்… சரிங்க ஐயா, டைம் ஆச்சு… நீங்க போயி தூங்குங்க.…” என்றவன் குழந்தையுடன் மாடிக்கு செல்ல,
“பவி, தூங்கிடாத… அம்மா பால் எடுத்திட்டு வரேன்…” சொல்லிக் கொண்டே இந்து அடுக்களைக்கு சென்றாள். பார்வதியம்மா எல்லா வேலையும் முடிந்து அடுக்களையைப் பளிச்சென்று துடைத்து வைத்து சென்றிருந்தார். பாலை எடுத்து சூடுபடுத்தி இரு கண்ணாடி கிளாஸில் ஊற்றிக் கொண்டு மாடிக்கு சென்றாள்.
பவி அப்போதே அரைத் தூக்கத்தில் இருக்க, “பவி, எழுந்து பாலைக் குடிடா செல்லம்… அம்மா பால் கொண்டு வர்றேன்னு சொன்னன்ல…” என்றவள் அவளை எழுப்பி பால் குடிக்க வைத்து படுக்க வைத்து தட்டிக் கொடுத்தாள்.
மொபைலை நோண்டிக் கொண்டிருந்த வெற்றி சார்ஜில் போட்டு விட்டு, “நான் குளிச்சிட்டு வந்திடறேன் இந்து…” என்று பாத்ரூமில் நுழைந்து கொண்டான்.
பவி உறங்கத் தொடங்கியிருக்க கட்டியிருந்த சேலை கசகசக்க நைட்டிக்கு மாற நினைத்த இந்து எழுந்து ஒரு நைட்டியை எடுத்துக் கொண்டு அறையில் வெற்றி இல்லாத தைரியத்தில் சேலையில் குத்தியிருந்த பின்னை நீக்கிவிட்டு அதைக் கழற்றினாள். பாவாடையுடன் நின்றவள் பிளவுசின் பாதி ஊக்கை கழற்றி இருக்கையில் பாத்ரூம் கதவு திறக்கும் ஓசை கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பினாள்.
“டவல் எடுக்க மறந்துட்டேன்…” சொன்னபடி வெளியே வந்த  வெற்றியின் பார்வை அரைகுறையாய் நின்றவளின் பளிச்சென்ற அங்க வளைவுகளில் ஆவலுடன் படிய அதிர்ந்து வேகமாய் சேலையை எடுத்து மேலே போட்டுக் கொண்டு திரும்பி நின்ற இந்துவின் இதயம் வேகமாய் படபடப்பதன் ஓசை அவள் காதில் கேட்டது.

Advertisement