Advertisement

“ம்ம்… மாமாவுக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல இருந்தப்ப நான் கூட இருந்தேன்ல… அப்ப உன்னைப் பத்தி தான் ரொம்ப கவலைப்பட்டு உனக்கு நடந்ததை சொல்லிட்டு இருந்தார்… அப்பத்தான் உன் மேல உள்ள மரியாதை அன்பா மாறுச்சு…” அவள் புரியாமல் பார்க்க,
“காதலிச்சு தாலி கட்டின புருஷன், பெத்த குழந்தையை விட்டுட்டு கண்டவனோட ஓடிப் போன அவ எங்கே, தாலி கட்டின புருஷன் அன்னைக்கே இறந்ததுக்காக யாரையும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கற நீ எங்கே… அவ சாக்கடைன்னா, நீ சந்தனம்… அப்பவே என் மனசுக்குள்ள மணம் வீசத் தொடங்கிட்ட… ஆனா அப்ப எனக்கு புரியல…” அவன் சொல்லி நிறுத்த அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவள் கையைத் தன் கைகளுக்குள் வைத்தபடி அவன் கண்களில் காதல் மின்ன சொல்லிக் கொண்டிருந்தான்.
“உன்னைப் பத்தி பெரியசாமி ஐயா என் தம்பிகிட்ட சொல்லிருப்பார் போலருக்கு… அவனும் சொன்னான்… அப்பக் கூட என் மனசுக்குள்ள நீ வந்ததை நான் உணரலை… ஆனா, அந்த போட்டோவைப் பார்த்துட்டு கோபமா நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ரொம்ப வலிச்சுது… நீ அழுததை என்னால தாங்கிக்கவே முடியல… அப்பதான் எனக்குத் தோணுச்சு… நான் உன்னை லவ் பண்ணறேன்னு…”
அவன் சொல்கையில் மனதுக்குள் யாரோ தாமரைப் பூச்செண்டு கொண்டு சாமரம் வீசுவது போல் சுகமாய் உணர்ந்தாள் இந்துஜா.  
என் சிரிப்பு உனை
பாதிப்பதில்
அதிசயமொன்றுமில்லை…
சிரிப்பு பகரக் கூடிய
தொற்றுவியாதி…
ஆனால் என் அழுகை
உனை பாதித்தால்
அதுவே அன்பின் நியதி…
அவன் அன்று மாடியில் இருந்து தன்னை நோக்கி சிரித்தது நினைவு வர, “கள்ளன்… அன்னைக்கு இப்படி நினைப்புல தான் என்னை லுக் விட்டுட்டு இருந்தான் போலருக்கு…” என சிரித்துக் கொண்டாள்.
“என் மனசுல உள்ளதை எல்லாம் உன்கிட்ட கொட்டிட்டேன்… இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு…” சொல்லிக் கொண்டே அவள் கைகளை சொடுக்கு எடுத்தான்.  
“சரி பாயசம் ஆறியிருக்கும்… நான் வேற சூடாக்கி எடுத்திட்டு வரவா…” என்றாள் அவள் கைகளை உருவிக் கொண்டு.
“ஆறினாலும் பாயாசம் இனிக்கதானே செய்யும்… உனக்கு இதுவும் சூடாதான் பிடிக்குமா…” என்றவன் அவனே எழுந்து ஒரு கப்பை எடுத்து கொண்டு அவளிடம் அமர்ந்தான். அவன் குடித்து சொல்லப் போகும் ரிசல்டுக்காய் அவள் ஆவலாய் நோக்க, “ம்ம் சூப்பர், கொஞ்சம் இனிப்புதான் கம்மியாருக்கு…” என்று குடிக்கத் தொடங்கினான்.
“நீயும் குடிச்சுப் பார்க்கறியா…” அவன் கேட்க, “நான் சூடாக்கிக் குடிச்சுக்கறேன்…” என்று மறுத்தாள் அவள்.
“நான் வேணும்னா சூடாத் தரட்டுமா…” என்றவன் அர்த்தத்துடன் அவள் இதழைப் பார்க்க அவளுக்குள் ரத்தம் வேகமாய் ஓடுவதை உணர்ந்து சிவந்து போனாள். அதையே சம்மதமாய் எடுத்துக் கொண்டு முன்னேறினான் அவளவன்.
அவனது இதழ்கள் தன் இதழைப் பருக நெருங்குவதை உணர்ந்தாலும் எழுந்து செல்லாமல் கண்ணை இறுக மூடிக் கொண்டவளைக் கண்டு அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது.
ஆவலுடன் அவள் இதழில் தன் இதழைப் பொருத்தியவன் பாயசத்தின் மதுரத்தை அவளுக்கு உணர்த்தும் முன்  பவித்ராவின் குரல் கேட்க சட்டென்று அவனை உதறிய இந்து எழுந்து கொண்டாள். தவிப்புடன் தலையை உலுக்கிக் கொண்டவன் குழந்தையைப் பார்க்க அவள் கண்ணை மூடியபடி, “அம்மா…” என்று அழைத்துக் கொண்டிருந்தாள்.
“ச்ச்சே… வாய்க்கு எட்டியும், எட்டாம போயிருச்சே…” என நொந்து கொண்டவனைக் கண்டு அவளுக்கு சிரிப்பாய் வர, குழந்தை தலையைச் சொறிந்தபடி எழுந்து அமர்ந்தாள்.
“அம்மா…” என்றவள் எழுந்து இந்துவைக் கட்டிக் கொண்டாள்.
“அப்பா, உனக்கு இப்ப என் அம்மாவைப் பிடிக்கும் தானே…” குழந்தை கேட்கவும் அவன் திகைத்து நோக்க, “என்ன முழிக்கறிங்க… பவியோட அம்மா நான்தானே…” இந்து சொல்ல அவன் நெகிழ்ச்சியுடன் நோக்கினான்.
“ம்ம்… பவியோட அம்மாவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…”
“ம்ம்… சூப்பர்ப்பா, அப்ப அம்மா மேல கோபம் இல்ல தானே…”
“இல்லடா செல்லம்…” வெற்றி சொல்லவும் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “என் செல்ல அப்பா… உம்மா…” என்று கொஞ்சினாள் மகள்.
அவனும் குழந்தைக்கு முத்தம் கொடுக்க, “அம்மாக்கும் முத்தா குடுப்பா… பாவம் தானே…” குழந்தை சொல்ல, அவன் உற்சாகமாய் இந்துவை நோக்க திகைத்தவள் கூச்சத்தில் தலையைக் குனிந்து கொண்டாள்.
“நான் குடுப்பேன்… ஆனா, அம்மாக்குதான் பிடிக்குமான்னு தெரியல…” அவன் சொல்ல, இந்துவை நோக்கினாள் பவி.
“அம்மா, அப்பாவை உனக்குப் பிடிக்கும் தானே…” குழந்தை கேட்க அவன் ஆவலாய் மனைவியைப் பார்க்க அவளோ என்ன சொல்வதென்று புரியாமல் முழித்தாள்.
“சொல்லும்மா, பிடிக்கும் தானே…” மீண்டும் கேட்க, “ம்ம்…” என்று அவஸ்தையாய் அவள் தலையாட்ட வெற்றிக்கு இந்த விளையாட்டு சந்தோஷமாய் இருந்தது.
“அப்பா, அம்மாக்கு உன்னைப் பிடிக்குமாம்… இப்ப முத்தா குடு…” என்று சொல்ல வெற்றி புன்னகைத்தான்.
“குடுக்கட்டுமா…” பவியிடம் கேட்டுக் கொண்டே இந்துவை நோக்க அவள் அமைதியாய் அப்படியே அமர்ந்திருந்தாள்.
“குடுப்பா…” பவி சொல்ல, “குடுத்துருவேன்…” சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தைக் குறி வைத்து ஆவலுடன் முகத்தைக் கொண்டு வந்தவன் தயக்கத்துடன் நிறுத்தி, “உன் அம்மா என்னைக் குடுக்க சொல்லவே இல்லையே…” என்றான் மகளிடம்.
சட்டென்று திரும்பிய இந்து, அவன் முகத்தைப் பிடித்து அழுத்தமாய் கன்னத்தில் இதழைப் பதிக்க, கண்கள் விரிய திகைத்துப் போனான் வெற்றி.
“அவதான் குடுக்க சொல்லுறால்ல… அப்புறம், என் பர்மிஷன் வேற வேணுமா… உங்களுக்கு…” என்றவள் அவன் திகைப்புடன் கன்னத்தில் கை வைத்து தன்னையே இமைக்க மறந்து பார்ப்பதைக் கண்டு நாணத்துடன் கீழே சென்றுவிட்டாள்.
“ஹே… அம்மா தான் சூப்பர்… நீ இப்பதி முழிச்சித்தே இரு, போப்பா…” என்ற மகளும் அன்னையின் பின்னாலேயே சென்றுவிட, “இப்ப இங்க என்னடா நடந்துச்சு… அப்ப நானா தான் தேவையில்லாம நல்லவன் வேஷம் போட்டுட்டு இருக்கேனா… அவளுக்கு ஓகே தானா… இது தெரியாம இத்தன நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேனே…” என நொந்து கொண்டே அவள் கொடுத்த இச்சை மீண்டும் மீண்டும் யோசித்து ரசித்துக் கொண்டிருந்தான் வெற்றி.
அவர்களை அன்று இரவு உணவுக்கு இந்துவின் வீட்டுக்கு அழைத்திருக்க மூவரும் அங்கே கிளம்பிச் சென்றனர்.
இந்துவின் முகத்தில் எப்போதும் இருக்கும் ஒதுக்கமும் அமைதியும் விலகியிருக்க அவள் முகத்தில் ஒரு சந்தோஷப் புன்னகை உறைந்திருப்பதைக் கண்ட அகிலாவுக்கும், பரம சிவத்துக்கும் அத்தனை சந்தோஷம். தடபுடலாய் சப்பாத்தி, ஆப்பம் கோழிக்கறி, வெஜிடபிள் ஸ்ட்டூ, என்று அசத்தி இருந்தார் அகிலா.  
இரவு உணவு முடிந்து பரமசிவமும், வெற்றியும் மாடியில் பேசிக் கொண்டிருக்க, பவியும் சிந்துவும் பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். இந்து அன்னைக்கு உதவியாய் அடுக்களையில் இருந்தாள்.
“சிந்துக்கா, பால் விளையாடினது போதும்… வேற விளையாதலாம்…” குழந்தை சொல்ல, “அதுக்கு முன்னாடி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்… உக்காரு…” என்றதும் குழந்தை அவள் அருகே அமர்ந்து கொண்டாள்.
“பவி… நீ இனி என்னை அக்கான்னு சொல்லக் கூடாது… சித்தின்னு தான் கூப்பிடணும்…”
“ஏன் சிந்துக்கா…” அவள் கேட்க, “அம்மாவோட தங்கச்சியை சித்தின்னு தான் கூப்பிடுவாங்க…”
“ஓ, அப்ப தம்பிய… என்ன சொல்லுவாங்க…” அவள் கேட்க, “மான்னு சொல்லுவாங்க, அப்பாவோட தம்பியை சித்தப்பா சொல்லுவாங்க… தங்கையை அத்தை சொல்லுவாங்க… என்று சொல்லிக் கொடுக்க உன்னிப்பாய் கேட்டுக் கொண்ட பவி, “சரி… நான் உன்ன சித்தின்னே கூப்பிடறேன்…” என்று  சொல்ல, “என் செல்லம்…” கொஞ்சினாள் சித்தி.
“இந்து, இப்ப உன் அப்பா மனசுல எவ்ளோ சந்தோசம் தெரியுமா… கல்யாணம் பண்ணிகிட்டாலும் எங்க நீ மாப்பிள்ளையோட ஒட்டாம விலகி நின்னுருவியோன்னு எங்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது… ஆனா நீ அவரோட சகஜமாப் பேசுறதும் பழகறதும் பார்த்ததும் தான் நிம்மதியா இருக்கு…” அன்னை சொல்ல பதில் சொல்லாமல் புன்னகைத்தாள் இந்து.
“சரி, நீ அப்பாட்டப் போயி பேசிட்டு இருமா, நான் முடிச்சிட்டு வந்திடறேன்…” அகிலா சொல்ல சிட் அவுட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிந்துவையும், குழந்தையையும் பார்த்துக் கொண்டே மாடிப்படி ஏறியவளின் காதில் தந்தை வெற்றியிடம் பேசுவது கேட்க அப்படியே நின்றாள்.
சொன்ன வார்த்தைகளின்
அர்த்தங்கள் சிலநேரம்
அபத்தங்களாகலாம்…
சொல்லாத வார்த்தையின்
மௌனங்கள் பலநேரம்
அடித்தளமாகிறது…
மனதில் காதல் புகுந்துவிட்டால்
மௌனமென்னும் முகமூடியுடன்
கள்ளத்தனமும் இணைந்தே 
பாடுபடுத்துகிறது…
அதை உரியவரிடம்
சேர்ப்பிக்கும் வரை
தவியாய் தவித்து
கொலையாய் கொல்கிறது…
சொல்லிய நேசத்தின்
வீரியத்தை விட
சொல்லாத காதலின்
மௌனம் சுகமானது…

Advertisement