Advertisement

அத்தியாயம் – 28
ஒரே நாளில் வாழ்க்கையை அழகாய், அலங்கோலமாய் மாற்றும் வித்தை ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.
ஆகாஷ் இறந்த பிறகு எந்த சுப நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் வீடு, கோவில் என்று ஒதுங்கிப் போயிருந்தாள் இந்து. அவனது நேசம் வாழாமல் போனதன் துக்கம் அவளை மிகவும் வாட்டியது. வெளியே சென்றால் யாராவது குத்தலாய் வார்த்தையை விட்டு விடுவார்களோ என்று அஞ்சியதும் அவள் ஒடுங்கிப் போக ஒரு காரணம்.
மடியில் தலை வைத்துப் படுத்திருந்த குழந்தை அப்படியே உறங்கியிருக்க அவள் நெற்றியில் முத்தமிட்டாள் இந்து.
“பட்டுப் போன என் வாழ்க்கையை பசுமையாய் மாற்றித் தந்த தேவதை இவள்… இவளை என் கண்மணிபோல் பார்த்துக் கொள்வேன்…” நெகிழ்வுடன் மனதில் சொன்னாள்.
அவளது தலையைத் தூக்கி மெல்ல எழுந்தவள் அவளை அணைத்தபடி எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.
லாப்டாப்புடன் அமர்ந்திருந்த வெற்றி கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்தான். இந்து குழந்தையுடன் வருவதைக் கண்டு வேகமாய் எழுந்து மகளை வாங்கிக் கொண்டான்.
அசையாமல் மெல்ல அவளைக் கட்டிலில் கிடத்தியவன், “டீவி பார்த்துட்டே தூங்கிட்டாளா…” எனக் கேட்க, “ம்ம்…” தலையாட்டினாள் இந்து.
“இந்து எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா… ஒரு மெயில் அனுப்பனும்… நான் டிக்டேட் பண்ணினா டைப் பண்ணறயா…”
“சரி…” என்றவள் கட்டிலில் அமர்ந்து கொள்ள அவள் பக்கமாய் லாப்டாப்பை நகர்த்தினான் வெற்றி. மனதுக்குள் வார்த்தையை வடிவமைத்துக் கொண்டவன், “ம்ம்… ஸ்டார்ட் பண்ணிக்க… ரெஸ்பெக்டட் சார்…” என்று சொல்லத் தொடங்க, டைப் ரைட்டிங்கில் ஹையர் பாசாகி இருந்த இந்து வேகமாய் கீபோர்டில் தட்டத் தொடங்கினாள்.
புனேயில் உள்ள மில் ஒன்றில் இவனது ஏஜன்சி மூலம் நூல் வாங்குவது சம்மந்தமான மெயில் அது. கமிஷன் பத்தியும் அவனது கஸ்டமர்களைப் பற்றியும் பேமன்ட் பற்றியும் விவரமாக அவன் சொல்லிக் கொண்டே வர இந்து டைப்பிக் கொண்டே வந்தாள்.
எளிமையான ஆங்கிலத்தில் சரளமாய் அவன் சொல்லிக் கொண்டே அடிக்கடி அவள் டைப் செய்வதைப் பார்த்துக் கொண்டான். அவன் எட்டி நிற்கையில் தப்பில்லாமல் டைப் செய்பவள் அவன் அருகே வரும்போது தடுமாறினாள்.
“ம்ம் அவ்ளோதான்…” என்றவன் அவளை உரசியபடி அருகே நின்று முழுவதும் வாசிக்க அவளுக்கு மூச்சு விடவும் கஷ்டமாய் இருந்தது. “சூப்பர் இந்து, ஸ்பெல் மிஸ்டேக் இல்லாம டைப் பண்ணிருக்க… ஓகே, பெஸ்ட் ரிகார்ட்ஸ் போட்டு என் பெயரைப் போட்டுடு…” அவன் சொல்லவும் அவளும் அப்படியே செய்ய அதை அனுப்பினான்.
“சரி, நான் கீழ போகட்டுமா…” அவள் எழுந்து கொள்ள, “எங்க ஓடற… இங்க வா, உனக்கு பாமிலி போட்டோஸ் எல்லாம் காட்டறேன்…” அவன் சொல்லவும் அவளுக்கும் ஆவலாய் இருக்க கட்டிலில் அமர்ந்தாள். ஏதோ போல்டரைத் திறந்தவன், காலேஜில் எடுத்த போட்டோஸ், அன்னையுடன் சகோதரர்கள் இருவரும் நிற்கும் போட்டோக்களைக் காட்ட ஆவலுடன் நோக்கினாள்.
“உங்க தம்பிக்கும், உங்களுக்கும் சின்ன சின்ன வித்தியாசம் இருக்கும் போலருக்கு… அத்தை உங்களைப் போலவே இருக்காங்க…” என்றாள் புன்னகையுடன்.
“ம்ம்… என்னைப் போலவா, தம்பி போலவா…” கிண்டலாய் கேட்டுக் கொண்டே அவள் அருகில் மல்லாக்கப் படுத்து லாப்டாப்பை நெஞ்சில் வைத்துக்  கொண்டான் வெற்றி.
ஒரு மாதிரி கூச்சமாய் உணர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் அடுத்த போட்டோவைப் பார்த்தவள் புன்னகைத்தாள். பவிக்குட்டி ஜட்டியுடன் குப்புறப்படுத்து புன்னகைத்துக் கொண்டிருந்தது.
“பவிக்குட்டி செம கியூட்டா இருக்கா… அவளுக்கு உங்க யார் ஜாடையும் இல்லையே, இவ யாரு போல…” கேட்கவும் வெற்றியின் முகம் கடுகடுவென்று மாறியது.
அதை கவனித்தவள், “ஏன், என்னாச்சு…” என்று கேட்க, “ப்ச் ஒண்ணும் இல்ல…” என்றவன் எழுந்து அமர்ந்து கொண்டான். சட்டென்று அவனது மனநிலை மாறக் காரணம் தான் கேட்ட கேள்விதான் என்பது அவளுக்குப் புரிந்தது.
“என்னங்க, நான் ஏதாச்சும் தப்பா கேட்டுட்டேனா…”
“குழந்தையோட உருவம் அவளைப் பெத்த சாக்கடை போல தான்… ஆனா வளர்ப்பு உன்னைப்போல இருக்கணும்…” அவனது வார்த்தைகள் வலியோடு வர முகத்தில் தெரிந்த கோபமும் வெறுப்பும் அவளுக்கு கஷ்டமாய் இருந்தது. 
“சாரிங்க… பழசை நியாபகப் படுத்திட்டேனா…” அவளது வருத்தத்தைக் கண்டவன், “ப்ச்… இல்ல இந்து… அதென்னவோ அவளைப் பத்தி யோசிச்சாலே அப்படியொரு வெறுப்பு வருது… இப்பவும் அவளை என்னால மன்னிக்க முடியல… என் தம்பி வாழ்க்கையை அழிச்சு, இதோ இந்தக் குழந்தையைப் பால் குடிக்கிற வயசுல வேண்டாம்னு தூக்கிப் போட்டுப் போக ஒரு தாய்க்கு எப்படி மனசு வரும்… எங்க குடும்பத்தையே அசிங்கப்படுத்தி, தம்பி வாழ்க்கையைத் தொலைச்சு, அன்பான அம்மாவை இழந்து… முடியல இந்து…” அவனது கண்கள் கலங்க அவளுக்கு வருத்தமாய் இருந்தது.
“சரி விடுங்க… இப்ப எதுக்கு அதெல்லாம்… நான் உங்களுக்கு பாயசம் எடுத்திட்டு வரட்டுமா… சூடு ஆறிடப் போகுது…” “ம்ம்…” என்றவன் அமைதியானாலும் மனதுக்குள் அந்த நாள் நினைவுகள் அலட்டிக் கொண்டே இருந்தன.
இந்து அடுக்களைக்கு பாயசம் எடுக்க செல்ல பார்வதி கிரைண்டரில் மாவரைத்துக் கொண்டிருந்தார்.
“நீங்க பாயசம் குடிச்சிங்களா பார்வதிம்மா…” அவள் கேட்க, “தம்பிக்கு குடுங்கம்மா, நான் அப்புறம் குடிக்கறேன்…” என்றதும் இரண்டு கப்பில் ஸ்பூனுடன் மாடிக்கு கொண்டு சென்றவளைக் கனிவுடன் நோக்கி நின்றார்.
“கடவுளே… இவங்க மூணு பேரும் ஒவ்வொரு விதத்துல பாதிக்கப்பட்டு கஷ்டத்தை மட்டுமே பார்த்தவங்க… இனியாச்சும் இவங்களை சந்தோஷமா இருக்க வைப்பா…” என்று மனமார வேண்டிக் கொண்டார் அந்த அன்னை.
இந்து பாயசத்துடன் அறைக்கு வர வெற்றி முகத்தின் மீது கையை வைத்து மூடியபடி படுத்திருந்தான். அவன் மனது இப்போதும் பழையதை யோசித்துக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டவள் கப்பை மேசை மீது வைத்துவிட்டு அவன் அருகே சென்றாள்.
“என்னங்க, எழுந்திருங்க… பழசையே நினைச்சிட்டு இருக்காம குடிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க…” அவனது கையைத் தொட்டு அவள் அழைக்க, சட்டென்று நின்று கொண்டிருந்தவளின் வயிற்றில் தலையை வைத்து கட்டிக் கொண்டான் அவன். அவள் திகைத்து புரியாமல் நிற்க அவனது கண்ணீர் சூடாய் அவள் வயிற்றை நனைக்க பதறிப் போனாள்.
“அச்சோ, என்னப்பா இது… எதுக்கு இவ்ளோ எமோஷன் ஆகறீங்க…” கேட்டவள் குழந்தை போல் தன் வயிற்றைக் கட்டிக் கொண்டிருப்பவனின் தலை முடியை அன்போடு கோதி விட்டாள்.
“இ..இல்ல இந்து… என்னால முடியல… இத்தனை நாளா யாரு கிட்டயும் சொல்லக் கூட முடியாம எனக்குள்ளயே ஒதுக்கிட்டு இந்தக் குழந்தையைத் தனியா வளர்க்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்… நாங்க யாருக்கு என்ன துரோகம் பண்ணினோம்… எங்க குடும்பத்தையே இப்படி சிதைச்சுட்டுப் போயிட்டாளே பாவி…”
அவனை என்ன சொல்லித் தேற்றுவதென்று புரியாமல் மௌனமாய் நின்றவளுக்கும் அவனது வேதனை கண்டு கண்ணீர் வந்தது.
ஒரு கம்பீரமான ஆண் இப்படி கண்ணீர் விடுவதென்றால் அவன் மனதில் எத்தனை வலி இருந்திருக்க வேண்டும்…
“என்னதான் நான் நல்லாப் பார்த்துகிட்டாலும் இந்தக் குழந்தை மனசுல தாயைப் பிரிஞ்ச ஏக்கம் இருக்கத்தானே செய்யும்… என் தம்பியைப் பார்த்தேல்ல, எவ்ளோ சந்தோஷமா ஜாலியா சிரிச்சிட்டு இருக்கான்… அவன் என்னை விட எவ்ளோ நல்லவன் தெரியுமா… ரொம்ப அப்பாவி, அவனைப் போயி வெறுக்கவோ, ஏமாத்தவோ எப்படி மனசு வரும்… அவள்லாம் பெண்ணே இல்ல பேய்…” உணர்ச்சி வசப்பட்டு சொன்னவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவளின் மனதில் எந்த விரசமும் இல்லை. ஒரு அன்னை குழந்தையைத் தேற்றுவது போல் அவன் முதுகில் தடவிக் கொடுத்து பேசவைத்துக் கொண்டிருந்தாள்.
“பேசிவிடு… மனதில் உள்ளதை மொத்தமாய் என்னிடம் கொட்டிவிட்டு தெளிந்துவிடு…” அவள் மனது அவனுக்காய் கலங்க அமைதியாய் நின்றாள்.
“இந்தக் குழந்தை வளரும்போது யாராச்சும் அவ அம்மாவை சொல்லி இவளை அசிங்கமாப் பேசிடுவாங்களோன்னு எவ்ளோ பயந்தேன் தெரியுமா… ஊரோட கேலிப் பேச்சு தாங்காம என் அம்மாவை இழந்தது போதும்… இவளையும் இழந்துடக் கூடாதுன்னு தான் ஏரியாவே மாத்திட்டு இங்க வந்தோம்… இவ உன்னைப் பார்த்து அம்மான்னு ஒட்டிக்கவும் கலக்கமா இருந்துச்சு… சொல்லிப் பார்த்தும், அதட்டிப் பார்த்தும் கேக்கவே இல்ல… பாக்கி நடந்தது தான் உனக்குத் தெரியுமே… ஆனா ஒண்ணு மா… குழந்தைக்காக மட்டும் தான் நான் உன்னைக் கல்யாணம் பண்ண விரும்பினேன்னு மட்டும் நினைச்சுடாத… அதுக்கு முன்னாடியே நீ என் மனசுல அடியெடுத்து வச்சிட்ட…” அவன் நிறுத்த வியப்புடன் அவனை ஏறிட்டவள் “நீங்க என்ன சொல்லறீங்க…” கேட்டுக் கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள்.

Advertisement