Advertisement

உடை மாற்றியவன் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, எழுந்து அமர்ந்த பவிக்குட்டி கண்ணைத் தேய்த்துக் கொண்டு, “குத் மார்னிங் அப்பா…” என்றது.
“குட் மார்னிங் செல்லம்… வாங்க, பிரஷ் பண்ணிட்டு பால் குடிக்கலாம்…” அவன் சொல்ல, “அம்மா எங்கேப்பா… எனக்கு அம்மாதான் செய்யணும்…” என்றாள் குழந்தை.
“ம்ம்… கீழ இருப்பாங்க, போயி பாரு…” என்றதும் குழந்தை எழுந்து கீழே செல்ல கட்டில் விரிப்பை சரியாக்கி விட்டு அவனும் கீழே வந்தான். பெரியசாமியும் இந்துவும் தோட்டத்தில் இருக்க, பார்வதி அம்மா அப்போதுதான் வரவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
“அம்மா…” ஓடி வந்து குழந்தை அவள் காலைக் கட்டிக் கொள்ள, “பவிக்குட்டி… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காட்டறேன் வா…” என்றவள் அன்று அவர்கள் அவளிடம் வாங்கிய எல்லோ ரோஸ் செடியிடம் அழைத்துச் செல்ல அதில் குட்டியாய் புதிய மொட்டு வந்திருந்தது.
“இது என்னம்மா…” குழந்தை புரியாமல் அவளிடம் கேட்க,
“இந்த மொட்டு விரிஞ்சு கொஞ்ச நாள்ல எல்லோ ரோஸ் வரப் போகுது…” புன்னகையுடன் அவள் சொல்ல “ஐ… எல்லோ ரோஸா…” என்று கண்களை விரித்தபடி குழந்தை துள்ளிக் குதித்தாள். அதைக் கண்டு பார்வதி சிரித்தார்.
“அம்மாக்கும், மகளுக்கும் செடின்னா அவ்ளோ விருப்பமா…” சொல்லிக் கொண்டே, “காலைல டிபனுக்கு என்னமா பண்ணட்டும்…” இந்துவிடம் கேட்க, அவள் முழித்தாள்.
“அவருக்கு என்ன பிடிக்குமோ அதே பண்ணிடுங்கம்மா…”
“தம்பிக்கு காலைல இட்லி தான் பிடிக்கும்… கூட சட்னியும் சாம்பாரும் வச்சிடட்டுமா…” அவர் கேட்க தலையாட்டினாள்.
“அம்மா, பெஷ் பண்ணனும் வா…” பவி குஷியோடு இந்துவை அழைக்க பெரியசாமி நெகிழ்ச்சியுடன் அந்த குழந்தையின் சந்தோஷத்தைப் பார்த்தபடி நின்றார். குழந்தையின் காலைத் தேவைகளை முடித்து குளிக்க வைக்க சென்றவளைத் தண்ணியில் விளையாடி அவளையும் நனைத்து குளிக்க வைத்திருந்தாள் மகள்.
“பவி, என்னடா இது… பாரு, என் சேலை எல்லாம் நனைஞ்சிடுச்சு…” அவள் புலம்ப, “சாரி, மா… நாளிக்கு தண்ணி தெளிச்சு விளாத மாத்தேன்…” என்றாள் குழந்தை. அவள் விரும்பியது போல் குளிப்பாட்டி தலை சீவி, பெரியசாமி வாங்கி வந்த மஞ்சள் ரோஸ் வைத்து விட்டாள்.
கண்ணாடியில் அழகு பார்த்த குழந்தை, “நானு அம்மா மாதியே அழகா இருக்கேன்ல மா…” என்றது ஆவலுடன். அதுவரை அவர்கள் செய்வதைப் பார்த்து சிரித்துக் கொண்டே லாப்டாப்பில் ஆழ்ந்திருந்த வெற்றி, பவி சொன்னதைக் கேட்டதும் முகம் இறுகுவதைக் கண்ட இந்து வியப்புடன் கவனிக்க சிறிது நேரத்தில் சரியாகிவிட்டான். இந்துவை ஒரு வாரம் பிளே ஸ்கூல் வர வேண்டாமென்று அகிலா சொல்லி இருந்ததால் அவளுடன் பவியும் போகவில்லை.
“பவிக்குட்டி, இட்லி தரட்டுமா…” இந்து கேட்க “இங்க கொண்டு வாம்மா…” என்றாள் குழந்தை.
“இந்து, எனக்கும் இங்கயே கொண்டு வந்திடேன்… அவசரமா மெயில் அனுப்பிட்டு இருக்கேன், பசிக்குது…” என்றான் அவன். இருவருக்கும் ஒரு ஹாட்பாக்ஸில் இட்லியை எடுத்துக் கொண்டு அதற்கான சட்னி, சாம்பாரையும் எடுத்துக் கொண்டு தட்டுடன் மாடிக்கு கொண்டு வந்தாள் இந்து.
குழந்தைக்கு ஒரு தட்டில் இட்லியை வைத்தவள், “உங்களுக்கும் இப்ப தரட்டுமா…” என்று கேட்க, “பசிக்குது… ஆனா டைப் பண்ணும்போது சாப்பிட முடியாதே… ஒண்ணு பண்ணு… பவி கூட எனக்கும் நீயே ஊட்டி விட்டுடேன்…” அவன் சொல்லவும் முறைத்தவள், “என்னது, அதெல்லாம் என்னால முடியாது…” என்றாள்.
“பவி பாருடா, பாட்டி உனக்கு ஊட்டும்போது அப்பாக்கும் ஊட்டி விடுவாங்கல்ல… அம்மாவயும் அது போல அப்பாக்கு ஊட்டி விட சொல்லுடா…” என்று குழந்தையை சிபாரிசுக்கு அழைத்தவனை முறைத்தாள் இந்து.
“அம்மா, அப்பாவும் பாவம் தான… அப்பாவோத அம்மா எனக்கு ஊத்தி வித்தாங்க… என்னோத அம்மா, அப்பாக்கு ஊத்தி விடுங்க…” என்றாள் தலையாட்டிக் கொண்டு. அவள் சொன்னதைக் கேட்டவளுக்கு மறுக்கத் தோன்றாமல் வெற்றியைப் பார்க்க அவன் புருவத்தைத் தூக்கி “எப்படி…” என்று கண்ணை சிமிட்டினான்.
முறைத்தாலும் மறுக்காமல் இட்லியுடன் தனக்காய் நீண்ட அவளது கையை நோக்கிக் கொண்டே வாயைத் திறந்த வெற்றியின் கண்கள் கலங்கின.
“என்னாச்சு காரமா இருக்கா…” இந்து கேட்க சிரித்தான்.
“அம்மா நினைவு வந்திருச்சு இந்து… வேலை இருக்கு, அப்புறம் சாப்பிடறேன்னு சொன்னா தட்டுல சாப்பாட்டை எடுத்திட்டு பக்கத்துல வந்து உக்கார்ந்துப்பாங்க… நீ சாப்பிடு, நான் ஊட்டி விடறேன்னு… அப்பல்லாம் கிண்டலா சிரிப்பேன்… என்னம்மா, நான் என்ன, சின்னக் குழந்தையான்னு… ஆனா, இப்பதான் அம்மாவோட அருமை தெரியுது…” என்றவனின் குரல் அன்னையின் நினைவில் நெகிழ்ந்திருந்தது.
இத்தனை வளர்ந்த பின்னும் அவனுக்குள்ளும் தாயின் தேடல் இருப்பதை அவள் புரிந்து கொண்டாள். குழந்தை போல் கண் கலங்குபவனை தாயாய் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, “என்னையும் உன் அம்மாவா நினைச்சுக்க…” என்று ஆறுதல் சொல்லத் தோன்றியது. தாரமும் பல நேரங்களில் தாய் போலத் தாங்குபவள் தானே.
“விடுங்க… அதான் நான் ஊட்டி விடறனே…” என்றவளை அன்போடு நோக்கினான் வெற்றி.
“நீயும் சாப்பிடு இந்து…” அவன் சொல்ல, “உங்க ரெண்டு பேருக்கு தான் எடுத்திட்டு வந்தேன்… நீங்க சாப்பிடுங்க… நான் கீழ போயி சாப்பிட்டுக்கறேன்…” என்றவள், இருவருக்கும் மாறி மாறி ஊட்டி விட எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிட்டிருந்தனர்.
“அம்மாக்கு நான் ஊத்தி விதத்தா…” குழந்தை கேட்க, “வேண்டாம்டா பவிக்குட்டி… நான் பாட்டி, தாத்தா கூட சாப்பிட்டு வர்றேன்… நீ அப்பாவை டிஸ்டர்ப் பண்ணாம விளையாடிட்டு இரு…” என்றவள் கீழே செல்ல வெற்றியின் மனம் அவளது அக்கறையிலும் அன்பிலும் மகிழ்ந்தது.
பார்வதி, பெரியசாமியை அழைத்து அவர்களையும் சாப்பிட சொன்னவள், “மதியம் நான் சமைக்கிறேன் பார்வதிம்மா… நீங்க மத்த வேலை இருந்தா பாருங்க…” என்றவள் அவனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டுக் கொண்டு சமைக்கத் தொடங்கினாள்.
கணவனுக்கு சமைப்பது மனதுக்குள் உற்சாகமாய் இருக்க எப்போதும் இருப்பதைவிட அதிகமாய் மணத்தது சமையல். சாம்பார், ரசம் உருளை பொரியலுடன் அவளது பேவரிட் டிஷ் ஆன அவியலையும் செய்து அப்பளத்தைப் பொரித்து வைக்க பவிக்குட்டி அடுக்களையில் அவளிடமே சுற்றிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது. அதற்குள் பார்வதி வீட்டை ஒதுக்கித் துடைத்து வேலைகளை முடிக்க சீக்கிரமே வேலை முடிந்துவிட்டது.
“இன்னைக்கு முதல் டைம் சமைக்கிறோம்.. ஏதாச்சும் ஸ்வீட் செய்யலாமா…” யோசித்தவள் கொஞ்சமாய் பால்பாயசம் செய்தாள். அடுக்களையிலிருந்து வந்த நெய் வாசனையில் வெற்றிக்கு சீக்கிரமே பசிக்க சாப்பிட வந்தான்.
“என்ன பார்வதிம்மா, இன்னைக்கும் விருந்து தானா… நெய் வாசம் தூக்குது…” கேட்டுக் கொண்டே சாப்பிட அமர்ந்தவனை நோக்கி சிரித்தார் பார்வதி.
“இன்னைக்கு இந்தும்மா சமையல் பண்ணுச்சு தம்பி…” என்றதும் அவன் அவளை நோக்க அவள் மும்முரமாய் சமையல் கட்டை கிளீன் செய்து கொண்டிருந்தாள்.
“நான் பார்த்துக்கறேன் மா… நீங்க சாப்பிடுங்க…” பார்வதி சொல்லவும் உணவு மேசைக்கு வந்தவள் அவனுக்குப் பரிமாற, குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டவன், “பவி, சாப்பிடலாம் வா…” அழைத்தான். “எனக்கு அம்மா அப்பவே ஊத்தி வித்தாங்க பா… நான் சாப்தேன்…” என்றவள் சோபாவில் ஜோவை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
“ஓ…” என்றவன், “இந்து நீயும் சாப்பிடும்மா…” என்றான்.
“இல்ல, அப்புறம் சாப்பிடறேன்…” அவள் நின்று கொண்டே சொல்ல, “இப்ப உக்கார்ந்து சாப்பிடப் போறியா… இல்ல நான் ஊட்டி விடட்டுமா…” அவன் மிரட்டலாய் கேட்க, செய்தாலும் செய்வான் என நினைத்தவள் அமர்ந்து கொண்டாள்.
அவள் முன்னில் தட்டை வைத்தவன் பரிமாற, “ப்ச்… நீங்க சாப்பிடுங்க… நான் போட்டுக்கறேன்…” என்றவள் பாத்திரத்தை வாங்கிக் கொண்டாள். “இதென்ன டிஷ்… நல்லார்க்கு…” என்றவனிடம், “அவியல்… இன்னும் கொஞ்சம் போடட்டுமா…” என்று மீண்டும் பரிமாறினாள். அவன் திருப்தியாய் சாப்பிடுவதைக் கண்டு அவள் மனதும் நிறைந்தது. “பாயசம் இப்ப தரட்டுமா…” என்றவளிடம், “கொஞ்சம் கழிச்சு மாடிக்கு கொண்டு வா..” என்றவன் கை அலம்ப சென்றான்.
“பார்வதிம்மா, ஐயாவையும் கூப்பிட்டு நீங்க சாப்பிடுங்க…” என்றவள் பவிக்குட்டி கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருக்க அவள் அருகே அமர்ந்து கொண்டாள்.
“அம்மா…” என்று கட்டிக் கொண்ட குழந்தை, மடியில் படுத்துக் கொண்டு டீவி பார்க்கத் தொடங்கியது. அவள் தலையைக் கோதிக் கொண்டே சிங்க்சான் செய்யும் அலம்புகளைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தாள் இந்து. ஒரே நாளில் வாழ்க்கை மிகவும் அழகாய் மாறிவிட்டது போல் ஒரு உணர்வு மனதில் நிறைந்திருந்தது.
கரை தழுவும் அலையாய்
எனைத் தழுவி அலைக்கழிக்கிறாய்…
நுரையாய் மனதில் ஆசை பொங்க
எட்டி நின்று ஏங்க வைக்கிறாய்…
காதல் கடலில் முக்குளிக்க
மூச்சடக்கிக் காத்திருக்கிறேன்
முத்தமிட்டு முத்தெடுக்க வா…

Advertisement