Advertisement

அத்தியாயம் – 27
அதிகாலை மூன்று மணி.
நல்ல உறக்கத்தில் இருந்த இந்து கதவு தட்டும் சத்தம் கேட்டு உணர்ந்து விட்டாள். ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் கலைந்திருந்த உடையைத் திருத்திக் கொண்டு எழுந்தவள் வெற்றி ஒரு கையைத் தலைக்கு மேல் வைத்து நல்ல உறக்கத்தில் இருப்பதைக் கண்டவள் முடியை ஒதுக்கிக் கொண்டு, “ஒருவேளை பவித்ராவா இருக்குமோ…” என நினைத்துக் கொண்டே கதவைத் திறக்க அவள் நினைத்தது போல பவித்ரா கண்ணைத் தேய்த்துக் கொண்டு நின்றாள்.
“பவி செல்லம்… ஏண்டா அழற… என்னம்மா, என்னாச்சு…” அவளை அழைத்து வந்த அகிலாவை நோக்க, “இவ்ளோ நேரம் நல்லாத் தூங்கிட்டு தான் இருந்தா… சட்டுன்னு எந்திரிச்சவ உன்னைப் பக்கத்துல காணம்னதும் அம்மாவைப் பார்க்கணும்… அம்மா கூட தான் தூங்குவேன்னு ஒரே அடம்… நான் எவ்ளோ சொல்லியும் கேக்க மாட்டேங்கறா… அதான் அழைச்சிட்டு வந்தேன்…” என்றார். அதைக் கேட்டதும் இந்துவுக்கு குற்றவுணர்வு தோன்ற, “சாரிடா செல்லம்…” என்று மகளை அணைத்துக் கொண்டாள்.
“ஏம்மா, என்னை அங்கயே வித்துத்து வந்த… நான் உன்னோத தான் தூங்குவேன் சொன்னேன்ல…” சொல்லிக் கொண்டே குழந்தை தேம்ப, “சரி… சரி, அழக் கூடாது… வா, நாம தூங்கலாம்…” என்றவள், “அம்மா நீங்க போயித் தூங்குங்க… நான் பார்த்துக்கறேன்…” என்று மகளை அழைத்துச் செல்ல,
“ஹூம்… இனி எங்க தூங்கறது…” என்று கொட்டாவி விட்டுக் கொண்டே சென்றார் அகிலா.
“பவிக்குட்டி, சாரிடா செல்லம்… இனி அம்மா, உன்னை எங்கயும் விட்டுட்டு வர மாட்டேன்… சரியா…” என்றதும் தலையாட்டியவள் கட்டிலில் படுத்துக் கொள்ள அவள் நெஞ்சில் தட்டிக் கொடுக்க உறங்கத் தொடங்கினர்.
கல்யாணக் களைப்பில் நல்ல உறக்கத்தில் இருந்த வெற்றி எதுவும் அறியவில்லை. காலையில் ஐந்தரைக்கு எப்போதும் உடற்பயிற்சி செய்ய எழுந்திருப்பதால் அந்த நேரத்தில் முழிப்பு வர உணர்ந்தவன் தன் மேல் காலைப் போட்டபடி உறங்கும் மகளையும், அவளை அணைத்தபடி உறங்கும் இந்துவையும் கண்டதும் திகைத்து புன்னகைத்தான்.
“பவிக்குட்டி எப்ப வந்து படுத்தா… எனக்குத் தெரியவே இல்லயே…” யோசித்துக் கொண்டே சத்தம் வராமல் எழுந்தவன் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.
அவன் வெளியே வரும்போது இந்து எழுந்து அமர்ந்திருக்க புன்னகைத்தவன், “குட் மார்னிங் இந்து…” என்று சொல்ல, “ம்ம்…” என்றவள் அவன் ஷாட்ஸ், டீஷர்ட்டுடன் நிற்கவும் கூச்சத்துடன் குனிந்து கொண்டாள்.
“நீ வேணும்னா இன்னும் கொஞ்சம் தூங்கிக்க இந்து… நான் எக்சர்சைஸ் பண்ணற டைம், அதான் எழுந்துட்டேன்…”
“ம்ம்… நானும் எழுந்துக்கற டைம் தான்…” என்றவள் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல், “உங்களுக்கு காபி, டீ ஏதாச்சும்…” என்று இழுக்க சிரித்தான்.
“இல்ல, நான் எக்சர்சைஸ் முடிச்சு வந்ததும் தான் காபி குடிப்பேன்… பிரஷ், சோப்பு, டவல் எல்லாம் அலமாரில இருக்கு… வேணுங்கறதை எடுத்துக்க…” என்றவன் கதவைத் திறந்து வெளியேற அங்கங்கே வாடிக் கிடந்த மலர்களும், பூ அலங்காரமும் கண்டால் குழந்தை ஏதாவது கேட்பாளோ என நினைத்தவள் முடிந்தவரை எல்லாவற்றையும் சுத்தம் செய்து ஒதுக்கிவிட்டு அலமாரியில் வேண்டியதை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் இந்து.
குளித்து தலையில் டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்தவள் அங்கிருந்த நிலைக் கண்ணாடியின் முன் நின்றாள். எப்போதும் ஒரு ஸ்டிக்கர் பொட்டை மட்டும் தொட்டுக் கொண்டு ஓடுபவள் இன்று கண்ணாடியில் தனது முகத்தை நிதானமாய் பார்த்தாள். லேசாய் பவுடர் போட்டு கண்ணுக்கு மையிட்டுக் கொண்டவள் நெற்றியில் வழக்கம் போல் ஒரு ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக் கொள்ள அவளுக்கே அவள் முகத்தைக் காணப் பிடித்திருந்தது.
அங்கிருந்த வெள்ளி குங்குமச் சிமிழ் “நான் உனக்காக தான் புதுசா இங்க வந்திருக்கேன்…” என்று பளபளப்புடன் சொல்ல அதைத் திறந்தாள். சாதாரணமாய் பெண்கள் உபயோகிக்கும் பொருட்களை வெற்றி அவளிடம் கேட்காமலே வாங்கி வைத்திருந்தான். சிமிழைத் திறந்தவள் குங்குமத்தை இரு விரலால் எடுக்க கண்ணாடியில் வெற்றியின் உருவம் தெரிந்தது. டவலால் உடல் வேர்வையைத் துடைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தவன் அவளை நோக்கி வருவதை உணர்ந்ததும் வேகமாய் வகிட்டில் குங்குமத்தைத் தொட்டுக் கொண்டு எழுந்தாள்.
புத்தம் புது மலராய் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் மனதுக்குள் பரபரக்க ஆவலுடன் அருகே வந்தவன் அவள் எழுந்ததும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“காபி கொண்டு வரட்டுமா…” அவள் கேட்க, “ஒரு பதினஞ்சு நிமிஷம் கழிச்சு கொண்டு வா இந்து… நான் குளிச்சிட்டு வந்திடறேன்…” என்றான் அவன்.
“சரி…” என்றவள் செல்லவும் பெருமூச்சு விட்டான் வெற்றி.
“ம்ம்… என்னடா இது, வெற்றிக்கு வந்த சோதனை… பெருசா நேத்து வசனம் எல்லாம் பேசிட்டு இன்னைக்கு அவளைப் பக்கத்துல பார்த்ததும் அப்படியே ஜிவ்வுன்னு ஏறுதே… இப்படி ஒரு அழகியைப் பக்கத்துலயே வச்சிட்டு எவ்ளோ நாள் என் வார்த்தையை காப்பாத்தப் போறனோ தெரியலியே முருகா….” என்று புலம்பிக் கொண்டே பவித்ராவைப் பார்த்தவன்,
“நானும் இவளைப் போல குழந்தையா இருந்தா என்னையும் கட்டிப்புடிச்சு தூங்கிருப்பா… அதுக்கும் வழியில்லாமப் போயிருச்சே… கல்யாணமாகியும் பிரம்மச்சாரியா என்னைப் புலம்ப விட்டுட்டுடியே கிருஷ்ணா… சீக்கிரமே அவ மனசு என்னை ஏத்துக்க நீதான் ஒரு வழி சொல்லணும்…” புலம்பிக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தான் வெற்றி. சில்லென்ற நீரின் குளுமை மனதின் உஷ்ணத்தைக் குறைக்க, “என்னடா வெற்றி, நீயா இப்படி…” என்று கேலியாய் கேட்ட மனசாட்சி அவனைத் துப்பி வைத்தது. அதை அசால்ட்டாய் துடைத்துக் கொண்டவன், “போ, போ… மனசுக்குள்ள காதல் வந்துட்டா இப்படிதான்… பொண்டாட்டி கிட்ட வெக்க, மானம்லாம் பாத்திட்டு இருக்க முடியாது…” என்று மனசாட்சியை விரட்டிவிட்டு குளித்து முடித்து எப்போதும் போல இடுப்பில் துண்டுடன் வெளியே வந்தான்.
கண்ணாடி முன் நின்று தலை சீவிக் கொண்டிருக்க இந்து காபியுடன் உள்ளே வந்தாள். அவன் டவலுடன் நிற்பதைக் கண்டவள் சட்டென்று திரும்பிக் கொண்டு, “காபி…” என்று சொல்ல வேண்டுமென்றே அவள் முன்னில் வந்து திறந்த மார்புடன் நின்றவனைக் கடுப்புடன் பார்த்தாள் இந்து.
“பெரிய ஆணழகன்னு நினைப்பு… கொஞ்சம் கூட கூச்சமில்லாம என் முன்னாடி இப்படி அரைகுறையா உலாத்துறதைப் பாரு…” மனதுக்குள் அவள் திட்டிக் கொண்டிருக்க அவளையே பார்த்துக் கொண்டு காபியை வாங்கிக் கொண்டவன், “நீ காபி குடிச்சியா இந்து…” கேட்க,  “இல்லை…” என்று தலையாட்டினாள் அவள். தலை குனிந்தபடி நின்றவள் கப்புக்கு காத்திருக்க மேசையில் சாய்ந்து நின்றவன் அவளை ரசித்துக் கொண்டே காபியை துளித்துளியாய் இறக்க அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.
“அப்புறம் வந்து கப்பை எடுத்துக்கறேன்…” என்றவள் அங்கிருந்து நகரவும், சட்டென்று அவளைத் தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டவன் அவள் கூந்தலில் வாசம் பிடிக்க அந்த அணைப்பில் அவளது ஹார்மோன்கள் வேகமாய் வேலையைச் செய்ய தவித்துப் போனாள் இந்து.
அவனது மேனியிலிருந்து வந்த சோப்பு மணமும் அவனது உதடுகள் உரசிச் சென்ற கழுத்து வளைவும் அவளை கிறங்கச் செய்ய, குளிர்ந்த அவனது வெற்றுடம்பில் உரசிக் கொண்டிருந்த தன் உடலில் சூடேறுவதை அவளால் உணர முடிந்தது. மனம் முழுதும் கணவன் மட்டுமே நிறைந்திருக்க ஆதரவு தேடி அவள் கைகள் அவன் முதுகைத் தழுவ செல்கையில், அகிலாவின் குரல் கீழிருந்து கேட்க சட்டென்று அவளை விட்டு விலகினான் வெற்றி.
“இந்து…” நாங்க வீட்டுக்குப் போறோம் மா… அப்பா எழுந்திருவாங்க…” அவள் அன்னை மாடிப்படி அருகே நின்று குரல் கொடுக்க, “சரிம்மா…” என்றவளிடம் கப்பை நீட்டினான் வெற்றி. நிமிட நேர அணைப்பில் உடலில் கிளர்ந்தெழுந்த ஆசைகளை அடக்க மிகவும் சிரமப்பட்டாள் இந்து. அவள் மனது ஏமாற்றத்துடன் அவனைப் பார்க்க அவனோ கூலாய் “காபி ரொம்ப சூப்பர் இந்து… தேங்க்ஸ்…” என்றான்.
“ச்சே… இம்சை பண்ணுறானே…” என கடுப்புடன் அவள் செல்ல அவன் சிரித்துக் கொண்டான். “கட்டிப்புடி வைத்தியம் சீக்கிரமே வொர்க் அவுட் ஆயிடும் போலருக்கே…” என சிரித்துக் கொண்டே உடையை எடுத்து அணிந்து கொண்டான்.
இந்துவின் மனதில் இருந்த பயம் கூட வெற்றியின் அருகாமையில் சற்றுப் பின் சென்றிருந்தது. கழுத்தில் தாலி ஏறிய உடனேயே கணவனாய் அவன் முகம் பதிந்து போக, அவனது அன்பும் அணைப்பும் தன் மனதுக்கு இதம் கொடுப்பதை உணர்ந்தவள் அதை ஒரு தேவையாய் கூட நினைத்தாள். ஆனால் வெற்றியோ அதைப் புரிந்து கொள்ளாமல் அவளுக்கு டைம் கொடுப்பதாய் நினைத்துக் கொண்டு, விலகியும் நிற்காமல் இப்படி உணர்ச்சிகளைத் தூண்டி விளையாட அவளுக்கு கோபம் தான் வந்தது. அவள் மனநிலையை வெற்றிதான் புரிந்து கொள்ளாமல் இருந்தான்.

Advertisement