Advertisement

“கல்பனா, இந்துவை அழைச்சிட்டுப் போம்மா…” என்றதும் பால் சொம்பை எடுத்து அவள் கையில் கொடுத்து மாடியறைக்கு அழைத்துச் சென்றார் கல்பனா. அதுவரை அவளது காலடிச் சத்தத்திற்காய் காத்திருந்த வெற்றி அவள் வருவது புரிந்ததும் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல் பாவனை செய்தான்.
அழகாய் அலங்கரிப்பட்டிருந்த அறையும் கட்டிலும் ரம்மியமாய் மனதை நிறைக்க தயக்கத்துடன் உள்ளே வந்தவள் வெற்றி உறங்குவதைக் கண்டதும் கதவைத் தாளிடுவதா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டே பால் சொம்பை அங்கிருந்த டீபாய் மீது வைத்துவிட்டு கதவையும் தாளிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
தான் வருவதற்குள் அவன் உறங்கியது, ஒரு மாதிரி நிம்மதியாய் இருந்தாலும் மனதின் எங்கோ ஒரு ஓரத்தில் சிறு ஏமாற்றமும் எட்டிப் பார்ப்பதை உணர்ந்தவளுக்கு தன்னை நினைத்து வியப்பாய் இருந்தது. அவனது அருகாமையில் விலகத் துடிப்பதும், விலகினால் நெருங்க  நினைப்பதுமாய் ஏங்கும் தன் மனதை நினைத்து அவளுக்கு ஆச்சர்யம் வந்தது. அதுதான் தனது கழுத்தில் அவன் கட்டிய மாங்கல்யத்தின் மாயம் என்பது அவளுக்குப் புரியவில்லை.
“இவன் என்னவன், எனக்கே எனக்கானவன்.. இந்தக் குடும்பம் என்னுடையது… இந்தக் குடும்பத்தின் சந்தோஷம், துக்கத்தில் எனக்கும் பங்குண்டு…” என்று ஒவ்வொரு பெண்ணும் அந்த தாலிக் கயிற்றின் மகத்துவத்திற்கு மனதிற்குள்ளேயே செய்து கொள்ளும் கல்யாண உடன்படிக்கை அது… இந்துவின் மனதிலும் சாதாரணப் பெண்களின் எல்லா ஆசாபாசங்களும் உண்டு… இளமையின் ஏக்கங்களும், தேடல்களும், ஆசைகளும் சுமந்திருந்தவளை ஆகாஷின் இழப்பு மிகப் பெரிய இடியாய் விழ தனக்குள்ளேயே சுருண்டு எல்லா ஆசாபாசங்களையும் ஒதுக்கிக் கொண்டிருந்தாள். இப்போது வெற்றியின் நேசத்தை உணர்ந்து கொண்டவளுக்கு தனது ராசியால் அதுவும் இல்லாமல் போய்விடுமோ என்ற பரிதவிப்பும், பயமும் நிறையவே இருந்தது.
அவனை பார்க்கவே தயங்கிக் கொண்டிருந்தவள் இப்போது அவன் உறங்குகிறான் என்ற தைரியத்தில் அவன் முகத்தில் விழியைப் பதித்திருந்தாள்.
பரந்த நெற்றி, எடுப்பான மூக்கு, அடர்த்தியான புருவம், அழகாய் டிரிம் செய்யப் பட்டிருந்த தாடி, மீசை, இயல்பாய் சிவந்திருந்த இதழ்கள், அகன்ற விழிகள்…
“ம்ம்… அழகன்தான்…” என்றவள், “நானா இப்படியெல்லாம் ரசிக்கிறேன்…” நாணத்துடன் புன்னகைத்துக் கொண்டாள்.  மாலையில் தான் பதறிய போது தன்னை சமாதானப் படுத்துவதற்காய் நெற்றியில் அவனிட்ட முத்தம் மனதுக்குள் வந்து தேகத்தை சிலிர்க்க செய்ய அவனை ஆவலுடன் பார்த்துக் கொண்டே கட்டிலின் மறுபக்கத்தில் அமர்ந்தாள்.
அவள் அருகே வந்து வெகுநேரம் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தது வெற்றிக்குப் புரிய பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான் அவன்.
மனம் ஒருவித நிம்மதியாய் இருக்க அமைதியாய் அமர்ந்திருந்தவள், “ஆராய்ச்சி எல்லாம் முடிச்சாச்சா…” என்று கேட்ட வெற்றியின் குரலில் தூக்கி வாரிப் போட சட்டென்று எழுந்து கொண்டாள்.
தலையில் ஒரு கையைக் கொடுத்து ஒருக்களித்து சாய்வாய் படுத்திருந்தவன் அவளைக் கிண்டலாய் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு “அச்சச்சோ, பார்த்துட்டானா…” என்று படபடப்பாய் இருந்தது.
“இப்படி உக்காருங்க மேடம்…” அவன் சொல்ல அவள் நின்று கொண்டே இருந்தாள்.
எழுந்து அமர்ந்தவன், “கண்ணை மூடிட்டு இருந்தா தான் நிறைய பூனைக்குட்டி வெளிய வரும் போல இருக்கு…” என்று சொல்ல, “ச்ச்சே… சரியான திருட்டுப் பூனை…” என்று மனதுள் நினைத்தபடி வெட்கத்துடன் கையைப் பிசைந்தவள் முதுகைக் காட்டியபடி திரும்பி நின்று கொண்டாள்.
அதைக் கண்டு அவனுக்கு உற்சாகமாய் இருக்க எழுந்தவன் அவள் அருகே வந்தான். அவன் தன்னிடம் வருவதை உணர்ந்தவளுக்கு படபடப்பாய் வந்தது. அவனுக்குள்ளும் இந்த புதிய அனுபவம் உல்லாசமாய் தோன்ற ஆவலுடன் அவளை நெருங்கினான்.
“இந்துமா…” தோளில் கை வைக்க சட்டென்று விலகியவள், “பால் ஆறிடுச்சு… குடிங்க…” என்று சொம்பை எடுத்துக் கொடுக்க நிதானித்தவன் வாங்கி பாதியைக் குடித்துவிட்டு, “என்னோடு வாழ்நாள் முழுதும் பயணிக்கப் போகும் என்  எல்லாமுமாகிய சகதர்மினிக்கு…” என்று மீதிப் பாலுடன் சொம்பை நீட்ட அவளுக்கு கூச்சமாய் இருந்தது.
“இ..இல்ல எனக்கு ஆறின பால் பிடிக்காது…”
“ஓ… சூடா தான் பிடிக்குமா…” கேட்டவனின் பார்வை ஆவலுடன் அவள் இதழ்களில் படிய மனதுக்குள் பொங்கிய இனம் புரியாத உணர்வு தேகத்தை சிலிர்க்கச் செய்தது.
ஒருவிதத் தவிப்புடன் குனிந்து நின்று மேசையை சுரண்டிக் கொண்டிருந்தவளைக் கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது.
“போதும், மேசை கையோட வந்திடப் போகுது…” அவன் சொல்ல கையை இழுத்துக் கொண்டாள்.
“இப்ப எதுக்கு இந்த பதட்டம்…”
“ப..பதட்டமா, அ…அதெல்லாம் ஒண்ணும் இல்லயே…”
“ஓ… அப்ப, இப்படி வந்து உக்காரு…” என்றவன் கையைப் பற்றி கட்டிலுக்கு அழைத்துச் சென்று அமர்த்தினான்.
“ஹூம், சாயந்திரம் கார்ல அடிபட்டிருவனோன்னு நினைச்சு அப்படி ஓடி வந்து கட்டிகிட்ட… இப்ப எதையும் காணோமே…”
“அ…அதுவந்து… ஒரு பயத்துல அப்படிப் பண்ணிட்டேன்…” அவள் திக்கிக் கொண்டே சொன்னாள்.
“ஓஹோ… அடுத்து எப்ப பயம் வரும்னு சொன்னா நாங்க கொஞ்சம் தயாரா இருப்போம்ல…” அவன் கிண்டலாய் சொல்ல தலையைத் தாழ்த்திக் கொண்டாள் அவள்.
“இந்து… நிமிர்ந்து என்னைப் பார்…” குனிந்தபடி இருந்தவளை அவனது கம்பீரக் குரல் நிமிரச் செய்ய, படபடத்த அவள் விழிகளில் தன் விழிகளைக் கலக்க விட்டவன், அவள் பார்வையைத் தழைத்துக் கொள்ளவும், தன் கைகளுக்குள் அவள் கையை எடுத்து நெஞ்சோடு வைத்துக் கொண்டான்.
“இந்துமா, இங்க பாரு… நானும் எல்லா ஆசைகளும் உள்ள சராசரி ஆண்தான்… ஆனாலும் உன் மனசைப் புரிஞ்சுக்க முடியாம அவசரப்படுறவன் எல்லாம் இல்ல… முதல்ல நம்மளுக்குள்ள நல்ல புரிதல் வரட்டும்… உனக்கு முழுமனசா என்னை எப்ப எல்லா விஷயத்துலயும் ஏத்துக்க முடியுதோ அப்பதான் நமக்குள்ள எல்லாமே நடக்கும்… முதல்ல உன்னோட தயக்கமும், பயமும் உன்ன விட்டுப் போகட்டும்… அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்… எல்லாத்துக்கும்…” என்றவனின் பார்வை ஏக்கத்துடன் அவள் உதடுகளைத் தழுவி விலக, அவள் திகைப்புடன் பார்த்திருந்தாள். சில்லென்ற அந்தப் பார்வை அவளுக்குள் ஆழமாய் ஊடுருவி இதயத்துக்குள் ஆணியடித்து இறங்கியது.
“இந்து, ஒரு நிமிஷம் எழுந்து நில்லேன்…” அவன் சொல்லவும், “ஒரு வேளை, நாம அவன் கால்ல விழலைன்னு நம்ம கால்ல விழப் போறானோ…” என அதிசயித்துக் கொண்டே அவள் எழுந்து நிற்க, சட்டென்று இறுக்கமாய் அவளை அணைத்துக் கொள்ள தேகமெங்கும் சுகமாய் பரவிய அனுபவத்தில் கண் மூடி நின்றவளை சற்று நேரம் கழிந்து விடுவித்தவன் அந்த இதழ்களில் ஆழமாய் கவிதை எழுத அவளுக்குள் அடங்கிக் கிடந்த ஆசைகளும் தவிப்பும் கிளர்ந்தெழ அதில் அடங்கி ஆழ்ந்து போனாள். அவளது உடல் சிலிர்ப்பதை அவனால் உணர முடிந்தது. மெல்ல அவளை விடுவித்தவன், “சாரி இந்து, என்னால ரொம்ப நல்லவனா எல்லாம் நடிக்க முடியல, இது என் ஆசைக்கு…” என்று சொல்லிவிட்டு அவளை விலகி கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்துக் கொள்ள அவளது நிலை தான் கஷ்டமாகிப் போனது. முத்தத்தில் தொடங்கியவன் யுத்தத்தில் முடித்திருந்தாலும் அவள் ஒன்றும் மறுக்கப் போவதுமில்லை… அப்படியிருக்க தானே ஒன்றைத் தீர்மானித்துக் கொண்டு தனக்காக விலகிப் போனவனை நினைத்து அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.
“அதுக்காக கீழ எல்லாம் என்னால படுக்க முடியாதும்மா… இவ்ளோ பெரிய கட்டில்ல ஆளுக்கொரு பக்கம் படுத்தா சாமி ஒண்ணும் தப்புன்னு கண்ணைக் குத்திடாது…” அவன் சொன்னது கேட்டு சிரிப்பு வர மனம் லேசாய் உணர்ந்தாள்.
“பவிக்குட்டி, தூக்கத்துல தேடுவாளோ…” யோசித்தவள், அம்மா பார்த்துப்பாங்க…” என சமாதானித்தாள். அவனது முத்தம் இப்போதும் மனதில் இதமாய் தித்திக்க கண்ணை மூடியவளை நித்திரை தழுவிக் கொண்டது. அமைதியாய் உறங்கத் தொடங்கியவள் மனம் அவனது பாதுகாப்பு வளையத்தில் சுகமாய் இருப்பது போல் உணர்ந்தாள். “இந்த நேசம் என்றும் எனக்கு வேண்டும் கடவுளே…” என்று மனம் மீண்டும் பிரார்த்தனை செய்தது.
நான் காதலிக்கும் வரை தான்
இந்தத் தடுமாற்றம் எல்லாம்…
காதலிக்கத் தொடங்கிவிட்டால்
உன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா…
இப்பேரண்டத்தின் பெருவெளியில்
நிறைந்திருக்கும் நேசம் முழுதும்
உனைப் பார்க்கும் நொடியிலெல்லாம்
என் கண்களில் சுரப்பதை
உன்னால் உணர்ந்திட முடியுமா…
பிரியங்களின் பெரும் பூந்தோட்டமாய்
என் மனச் சிறைக்குள் உன்னை
மட்டுமே சிறையெடுத்துக் கொண்டால்
உனக்கு மூச்சு முட்டுகிறது என்பாயா…
அன்பும் காதலும் அக்கறையும் கூட
அதீதமானால் விஷமாய், சிறையாய்
தண்டிக்கவே செய்யும்…
என் காதலை நீ தரிசிப்பாயா…
இல்லை தண்டிப்பாயா…

Advertisement