Advertisement

அத்தியாயம் – 26
“வெற்றி… வராதீங்க…” இந்துவின் கத்தலைக் கேட்டவன் திகைத்து திரும்பிப் பார்த்தான்.
சற்று தூரத்தில் கார் ஒன்று வருவதைக் கண்டவன், “கார் அங்க தானே வந்துட்டு இருக்கு… என்னை எதுக்கு வர வேண்டாம்னு கத்துறா…” என யோசித்துக் கொண்டே வேகமாய் முன்னில் நடக்க இந்து ஓடி வந்து அவனை கை பிடித்து இழுத்துச் சென்றாள்.
“ஏன் வெற்றி இப்படி இருக்கீங்க… கார் வர்றதைப் பார்க்காம உங்க பாட்டுக்கு கிராஸ் பண்ணறீங்க…” படபடப்புடன் கேட்டவளின் கண்ணில் கண்ணீர் பளபளக்க திகைத்தான்.
“என்னாச்சு இந்து…” என்றவன் திரும்பிப் பார்க்க, அப்போதுதான் அந்தக் கார் எதிர் ரோட்டில் கூட்டத்தை வேடிக்கை பார்த்து மெல்ல அவனைக் கடந்து சென்றது.
கண்களும் முகமும் பயத்தில் சிவந்திருக்க பதட்டத்துடன் பெரிசாய் மூச்செடுத்துக் கொண்டு நின்றவளின் கரத்தை ஆதரவாய் அவன் பற்ற அழுது கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து தேம்பத் தொடங்கினாள்.
“இந்துமா… எதுக்கு அழற… எனக்குதான் ஒண்ணும் ஆகலியே…” அவள் முதுகில் ஆதரவாய் தடவிக் கொண்டே வெற்றி சொல்ல மீண்டும் அழுதாள்.
“உ..உங்களையும் என் ராசி கொன்னுருமோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்…” என்றவளின் வேதனையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“நீ ஏன் அப்படி நினைக்கற… உன் ராசிதான் என்னை இப்ப காப்பாத்தி இருக்குமோன்னு எனக்குத் தோணுது…” அவன் சொல்லவும் நெஞ்சிலிருந்து முகத்தைத் தூக்கிப் பார்த்தவள், “இல்ல, நீங்க பொய் சொல்லறீங்க… எனக்கு பயமா இருக்கு… நான் ஒரு ராசி இல்லாதவ… என் ராசி தான் ஆகாஷைக் கொன்னுச்சு… இப்ப உங்களுக்கும் ஆபத்து வந்துச்சு…” அவள் புலம்பத் தொடங்க அவனுக்கு வருத்தமாய் இருந்தது.
ஆகாஷின் மரணத்துக்கு காரணம் அவளது ராசிதான் என்ற எண்ணம் அவள் மனதை மிகவும் பாதித்திருப்பதைப் புரிந்து கொண்டான். அவனது அருகாமையும் அன்பும் மட்டுமே அந்த பயத்திலிருந்து அவளை வெளியே கொண்டு வர உதவும் என்று தோன்ற அணைப்புடனே அவளை காருக்கு அழைத்து வந்து கதவைத் திறந்தான்.
அவள் உள்ளே அமரவும் அவளிடம் குனிந்தவன், “இந்து… இங்க பார்… இந்த ராசி, அதிர்ஷ்டம் இதெல்லாம் நம்ம நம்பிக்கை மட்டும் தான்… அதுக்கான கணக்கு, வழக்கெல்லாம் ஆல்ரெடி நம்ம தலைல எழுதப்பட்டிருக்கு… நடக்குற எந்த நல்லது கெட்டதுக்கும் நாம வெறும் பார்வையாளர்கள் மட்டும் தான்… தேவையில்லாம எதையும் மனசுல பதிஞ்சு வச்சுக்கிட்டு வருத்தப்படுத்திக்காத சரியா…” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகினான்.
தனது இருக்கையில் அமர்ந்தவன் காரை எடுக்க இந்து கண் மூடி அமர்ந்திருந்தாள். அவளது கிருஷ்ணமணிகள் அங்குமிங்கும் அசைய தொண்டைக்குழி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. ஏதோ நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.
அவளைக் கனிவுடன் நோக்கியவன், “நீ கல்யாணமே வேண்டாம்னு மறுத்ததுக்கு காரணம் இப்பப் புரியுது இந்து… உன் பயத்தை மாத்த வேண்டியது என் பொறுப்பு…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
இருவரும் வீட்டுக்கு வந்ததும் பவி ஓடிவந்து இந்துவைக் கட்டிக் கொண்டாள்.
“அம்மா, ரெண்டு பேரும் என்ன வித்துத்து எங்க போனிங்க…”
“கோவிலுக்குப் போனோம்டா… நீ தூங்கிட்டிருந்தியா, அதான் எழுப்பலை…” என்றாள் இந்து.
“ம்ம்… சரி, நாம நம்ம வீத்துக்கு போலாமா…”
“சாப்பிட்டு போகலாம் பவிக்குட்டி…” சொல்லிக் கொண்டே அவர்களிடம் வந்த அகிலா, “வாங்க மாப்பிள்ள, மூணு பேரும் சாப்பிடுங்க… அம்மா வந்து ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன்னு பவிக்குட்டியும் சாப்பிடல…” என்று சொல்ல பவியையும் அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றனர். வெற்றியின் நண்பர்களையும் சாப்பிட அழைக்க அவர்களும் சேர்ந்து கொண்டனர்.
இந்துவின் அருகில் பவித்ரா அமர அவளுக்கும் ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டாள் பவித்ரா. அதை கவனித்துக் கொண்டிருந்த வெற்றியின் மனது நெகிழ்வாய் உணர்ந்தது. அந்தக் குழந்தையின் மனதில் தான் எத்தனை ஏக்கங்கள்.
சாப்பிட்டு முடிந்து அவர்களை வெற்றியின் வீட்டுக்கு அழைத்துச் செல்ல இந்துவின் அத்தை கல்பனாவும் உடன் வந்தார். வெற்றி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க கீழ் அறையில் இந்துவை உடை மாற்றி சிம்பிளாய் புறப்பட வைத்தார். இந்துவின் மனதில் ஒரு அச்சம் இருந்தாலும்  இப்போது சின்னதாய் ஒரு எதிர்பார்ப்பும் வந்திருந்தது.
“அம்மா, தூக்கம் வருது… வா…” பவித்ரா கண்ணைக் கசக்க, “படுத்துக்கடா செல்லம்…” என்று அருகில் அழைக்க, “மாடில நம்ம ரூமுல போயி தூங்கலாம்… வா…” என்றாள் குழந்தை.
“மாடில எப்படி, இங்கயே தூங்க வை…” என்றார் கல்பனா.
“இல்ல, பரவால்ல அத்தை… குழந்தையைத் தூங்க வச்சிட்டு வரேன்…” அவள் சொல்ல, “அடி அசடே… அங்க உங்க சாந்தி முகூர்த்தத்துக்கு ரூமெல்லாம் அலங்காரம் பண்ணி வச்சிருக்கு… அதைப் பார்த்தா குழந்தை என்ன, ஏதுன்னு கேள்வி கேப்பா…” என்றதும் இந்துவும் முழித்தாள்.
“என்ன முழிக்கற… இப்ப எதுக்கு உனக்கு பூவெல்லாம் வச்சு அலங்காரம் பண்ணினேன்னாச்சும் தெரியுமா…”
அவர் கேட்கவும், “ம்ம்…” என்று முனங்கினாள்.
“அப்பாடி, தெரியும்னு சொன்னியே… அதான் சொல்லறேன்… குழந்தையை இங்கயே தூங்க வை…” என்றார் அவர்.
அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த பவித்ரா, “அம்மா, சாந்தி முகூர்த்தம்னா என்ன…” என்று கேள்வியைத் தொடங்க அர்த்தமாய் கல்பனா அவளைப் பார்க்க என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தவள், “அதெல்லாம் நீ பெருசானதும் தெரிஞ்சுப்ப… இப்ப தூங்கு…” படுக்க வைத்து  முதுகில் தட்டிக் கொடுக்கத் தொடங்கினாள்.
குழந்தை வெகு நேரம் உறங்காமல் ஏதேதோ கேட்டுக் கொண்டிருக்க பதில் சொல்லிக் கொண்டே இருந்தாள் இந்து. குழந்தை தூங்கக் காத்திருந்த அத்தை உறக்கம் வரவே அவள் அருகே படுத்தவர் களைப்பில் அப்படியே உறங்கி விட்டார். இப்போது என்ன செய்வதென்று புரியாமல் இந்து திரு திருவென முழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
நண்பர்கள் விடை பெற்றுக் கிளம்ப மனதில் ஆவலுடன் இந்துவின் வரவுக்காய் அறையில் காத்திருந்தான் வெற்றி. வெகு நேரம் பார்த்தவன் குழந்தையின் சத்தத்தையும் காணாமல் இந்துவையும் காணாமல் கீழே இறங்கி வந்தான்.
கீழ் அறையில் வெளிச்சம் தெரிய லேசாய் திறந்திருந்த கதவின் வழியே எட்டிப் பார்த்தவன் திகைத்தான்.
பவித்ராவும் அத்தையும் நல்ல உறக்கத்தில் இருக்க இந்து சுவரில் சாய்ந்த வாக்கில் கண் மூடி அமர்ந்திருந்தாள்.
“ஆஹா, நம்ம சாந்தி முகூர்த்தத்துல மண்ணள்ளிப் போட்டிருவாங்க போலருக்கே…” என கவலைப்பட்டவன் யோசனையுடன் உணவு மேசையின் அருகே நிற்க, வெற்றியின் நண்பர்கள் கிளம்பியதைப் பார்த்த அகிலா மகளை கல்பனா வெற்றியின் அறைக்கு அனுப்பி விட்டாரா எனப் பார்க்க வந்தவர் அவனை கவனித்து விட்டார்.
“என்ன மாப்பிள, இங்க நிக்கறிங்க…” என்று கேட்க, “ஒ… ஒண்ணும் இல்ல, தண்ணி குடிக்க வந்தேன்மா…” என்றவன் பாய்ச்சலாய் மாடிக்கு சென்று விட்டான். அவனது தடுமாற்றமே ஏதோ சரியில்லை என்பதை உணர்த்த, மேசை மீது சூடாக்கி வைத்திருந்த பால் சொம்பும் அப்படியே இருக்க விஷயத்தை ஊகித்துக் கொண்டார். அந்த அறைக் கதவைத் திறந்தவருக்கு விஷயம் புரிய கடுப்புடன் கல்பனாவை எழுப்ப அந்த சத்தத்தில் இந்துவும் உணர்ந்து விட்டாள்.
“ஏய் கல்பனா, உன்னை இங்க எதுக்கு அனுப்பினேன்… நீ இப்படி குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருக்க…”
“அச்சச்சோ, சாரி அண்ணி… குழந்தை தூங்கற வரைக்கும் படுப்போம்னு சும்மா தான் படுத்தேன்… அசதி, தூங்கிட்டேன் போலருக்கு…” என்றவர் தலையை சொரிந்து கொண்டார்.
இந்துவின் அருகே வந்தவர், “இந்து, எழுந்திருடா…” என்றவர் அவளது நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கி விட்டார்.
அவள், “அம்மா, பவி…” என்று குழந்தையைப் பார்க்க, “நான் அவளுக்குத் துணையா இங்கே படுக்கறேன்… தம்பி, ரூம்ல காத்திட்டிருக்கு மா… நீ மாடிக்குப் போ…” என்று சொல்ல அவளுக்கு ஒரு மாதிரி தயக்கமாய் இருந்தது.
அதைப் புரிந்து கொண்டவர், “இந்து, தாம்பத்தியம்ங்கிறது தப்பான விஷயம் இல்ல மா… ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு உடம்பாலும், மனசாலும் இணையறது தான் தாம்பத்தியத்தின் அடிப்படை… இணையை சந்தோஷப்படுத்த வேண்டியதும் மனைவியா உன் கடமை தான்… இங்கே உனக்கு சொல்லிக் கொடுக்க பெரியவங்க யாரும் இல்லை… அதான் நானே சொல்ல வேண்டியதாப் போயிருச்சு… மனசாலும், உடம்பாலும் கணவன் மனைவிக்குள்ள எந்தவித ரகசியமும் தேவை இல்லை… நீ இத்தனை நாள் அனுபவிச்ச வேதனையும் தனிமையும் போதும்… இப்ப இந்த குடும்பத்துக்கு நீதான் அச்சாணி மாதிரி… அதை அழகா வழி நடத்திப் போறதும் உன் கடமை தான்… புரிஞ்சுதா…” என்று கேட்க, “ம்ம்…” என்று தலையசைத்தாள் மகள்.

Advertisement