Advertisement

இந்துவின் வீட்டினர் ஒரு சுமோவிலும், காரிலுமாய் கோவிலுக்குக் கிளம்ப ஆகாஷின் வீட்டிலிருந்து இரண்டு காரில் அவனது ஆட்கள் கிளம்பினர். பரமசிவம் முன்னமே கோவிலுக்கு சென்று ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார்.
இந்து எளிமையான அலங்காரத்தில் ரெடியாகியிருக்க, பட்டு வேட்டி சட்டையில் ராம்ராஜ் வேட்டி விளம்பர மாடல் போலிருந்த வெற்றியின் கண்கள் அடிக்கடி ஆவலுடன் அவளைத் தழுவி மீண்டது. பவிக்குட்டி இந்துவின் கையைப் பிடித்துக் கொண்டு அவளுடனே அமர்ந்திருந்தது.  
சற்று நேரத்தில் ஆகாஷின் பெற்றோரும் வந்துவிட கல்யாண சடங்குகள் தொடங்கின. தன் அருகே அமர்ந்திருந்த இந்துவின் முகத்தில் படர்ந்திருந்த அச்சத்தை வெற்றியும் கவனித்தான். அதைத் தன் அருகாமையால் மட்டுமே மாற்ற முடியுமென நினைத்தவன் அமைதியாய் இருந்தான். அர்ச்சகர் மந்திரம் சொல்லி மணமகனின் கையில் மங்கல நாணைக் கொடுக்க நண்பர்கள் கையிலிருந்த அலைபேசியில் மங்கல வாத்தியம் முழங்க, கெட்டி மேளம் முழங்கியது.
இரண்டாம் முறையாய் தன் கழுத்தில் ஏறிய தாலி நெஞ்சில் கனக்க கண்களில் கண்ணீர் துளிர்த்தது இந்துவுக்கு. கண்ணை மூடிக் கொண்டிருந்தவளின் நெஞ்சம் பிரார்த்தித்தது.
“கடவுளே… இதையாவது என் வாழ்வில் நிலையாகத் தா…” என்று கண்ணீருடன் வேண்டிக் கொண்டது. அவளது மனநிலை வெற்றிக்கும் புரிய, “இந்துமா, நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்…” என்று காதில் கிசுகிசுக்க அவனை ஏறிட்டவளை நோக்கி கண்ணை சிமிட்டி சிரித்தான் வெற்றி.
மகளை மணக் கோலத்தில் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர் பரமசிவமும் அகிலாவும். இந்துவின் அருகில் வெற்றியின் இடத்தில் ஆகாஷ் நின்றது நிழலாட கண்ணீர் வழிந்தது அவனது அன்னையின் கண்ணில்.
“ஐ… என் அம்மாக்கும், அப்பாக்கும் கல்யாணம் ஆகிருச்சு…” அருகில் நின்ற பவிக்குட்டி சந்தோஷத்தில் குதூகலித்தது.
அவள் அருகில் நின்ற ஆகாஷின் தந்தை, “ஆமாடா கண்ணா… உனக்கு இப்ப ஹாப்பியா…” என்று கேட்க, “ரொம்ப ஹாப்பி தாத்தா…” என்றாள் குழந்தை. பெரியவர்கள் காலில் விழுந்து மணமக்கள் ஆசி வாங்கிக் கொண்டனர்.
இருந்தாலும் இந்துவின் முகத்திலிருந்த கலக்கம் மாறவோ, அவள் புன்னகைக்கவோ செய்யாமல் அமைதியாய் இருந்தது வெற்றிக்கு வருத்தமாய் இருந்தது. அடுத்திருந்த தரமான ஹோட்டலில் இருந்து உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எல்லாம் நல்லபடியாய் முடிய வீட்டுக்குக் கிளம்பினர்.
வெற்றியின் வீட்டுக்குச் சென்றவர்களை ஆரத்தி எடுத்து பூஜை அறையில் விளக்கேற்ற அழைத்துச் சென்றார் ஆகாஷின் அன்னை. பழைய நினைவுகள் மனதில் திகிலைக் கொடுக்க நடுங்கும் விரலால் விளக்கேற்றினாள் இந்து.
“கடவுளே… என் ராசி இவர்கள் வாழ்வை இருட்டாக்காமல் நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும்…” வேண்டிக் கொண்டாள்.
அவர்களை அமர வைத்து ஒவ்வொருவராய் பால், பழம் கொடுக்க, “எனக்கும் வேணும்…” என்றாள் பவிக்குட்டி. அதைக் கேட்டு அனைவரும் சிரிக்க, ஆகாஷின் அன்னை அவள் வாயிலும் ஒரு ஸ்பூன் ஊட்டி விட்டார்.
“இந்துமா, உங்களுக்கு எங்க சின்ன கல்யாணப் பரிசு…” என்ற ஆகாஷின் தந்தை ஒரு பெரிய கவரை அவளிடம் நீட்டி, “எங்க காலத்துக்குப் பின்னாடி நாங்க இருக்கற வீட்டை உங்க பேருல எழுதி வச்சிருக்கோம்மா…” என்றார்.
“அச்சோ, அதெல்லாம் எதுக்கு மாமா…” என்றவள் திருப்பிக் கொடுக்க முயல, “பரிசைத் திருப்பிக் கொடுக்கக் கூடாது… உனக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப்பட்டோம்… வீட்டை உங்களுக்கு கொடுக்கறது தான் சரின்னு பட்டுச்சு…” என்றார்.
“அப்பா, எதுக்குப்பா இதெல்லாம்…” வெற்றியும் சொல்ல, “அப்பான்னு வாய் நிறைய கூப்பிடறியே… இதுக்குதான்ப்பா…” என்றவரின் கண்கள் பனித்திருந்தது. இந்துவிலும், வெற்றியிலும் அவர்களுக்கு ஆகாஷே தெரிந்தான். சடங்குகள் முடிந்து இருவரையும் ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு அவர்கள் கிளம்ப வெற்றி சம்மதிக்கவில்லை. மதிய விருந்துக்கு அக்கம் பக்கம் உள்ளவர்களையும் அழைத்திருந்ததால் வெற்றியின் வீடு நிறைந்திருந்தது.
பரமசிவமும், அகிலாவும் வந்தவர்களை வரவேற்று உபசரித்து அனுப்பினர். மணமக்களை வாழ்த்தி பரிசளித்து அவர்களும் கிளம்பினர். வருணும் அன்னையும் விருந்துக்கு வர பவித்ரா அவனிடம் பெருமை பேசிக் கொண்டிருந்தது.
மதிய உணவு முடிந்து வெற்றியின் சில நண்பர்களைத் தவிர மற்றவர் கிளம்பினர்.
ஆகாஷின் தந்தைக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் கீழே இருந்த அறையை அவரை உபயோகிக்க சொல்லிவிட்டு மாடியில் இருந்த இரண்டு அறையில் ஒன்றை இந்துவின் உபயோகத்திற்கு விட்டனர். சிந்து இந்துவுக்குத் துணையாய் நகையைக் கழற்றி வைக்க உதவி செய்ய பவிக்குட்டியும் அவளுடன் இருந்தது.
சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு மாலையில் ஆகாஷின் பெற்றோர் வீட்டுக்குக் கிளம்ப இருவரையும் கோவிலுக்கு சென்று வருமாறு கூறினார் அகிலாண்டேஸ்வரி.
இரவு உணவு இந்துவின் வீட்டில் தயாராகிக் கொண்டிருக்க, சாந்தி முகூர்த்தத்துக்கு வெற்றியின் அறையை தயாராக்கிக் கொண்டிருந்தனர் அவனது நண்பர்கள்.
இந்து நீல நிற பனாரஸ் காட்டன் புடவை உடுத்து வர வெற்றியும் அழகாய் வேஷ்டி சட்டை அணிந்து வந்தான். கம்பீரமாய் வந்தவனை ஏறிட்டவள் அவன் அவளை நோக்கிப் புன்னகைக்கவும் பார்வையைத் தழைத்துக் கொண்டாள். பவிக்குட்டி களைப்பில் உறங்கி இருந்ததால் அவர்கள் மட்டும் கிளம்பினர். காரை எடுத்தவன் அகிலா சொன்ன கோவிலுக்கு வண்டியை விட்டான்.
அமைதியாய் பயணம் தொடர கோவில் முன்னில் வண்டியை நிறுத்தியவன், “பூஜைக்கு ஏதாச்சும் வேணும்னா வாங்கிக்க இந்து… நான் பார்க் பண்ணிட்டு வந்துடறேன்…” என தலையாட்டியவள் பூஜைப் பொருட்கள் விற்கும் கடைக்கு சென்றாள். வாங்கி முடித்து அவனுக்காய் வெயிட் பண்ண வந்தவன், “போலாமா…” என்று கேட்க, “பணம் கொடுக்கணும்…” என்றவளின் குரல் அமைதியாய் ஒலிக்க சிரித்தவன் பர்சிலிருந்து பணத்தை எடுத்து நீட்ட கொடுத்து பாக்கியை வாங்கிக் கொண்டாள். இருவரும் கடவுளைப் பிரார்த்தித்து வலம் வந்தனர்.
“கிளம்பலாமா…” வெற்றி கேட்க, “கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகலாம்…” என்றாள் இந்து. இருவரும் அமர்ந்தனர்.
அவள் அமைதியாய் இருக்க, “ஏன் இந்து, எதுவும் பேச மாட்டேங்கற…” என்றான் வெற்றி ஆழ்ந்து நோக்கி.
“ப்ச்… என்ன பேசறது…”
“என்னம்மா, இப்படி கேட்டுட்ட… புருஷன் பொண்டாட்டிக்கு பேசறதுக்கா பஞ்சம்… எதை வேணும்னாலும் பேசலாமே…” அவன் சிரிப்புடன் சொல்ல, “ஓ… அப்ப எனக்கு பயாலஜின்னா ரொம்பப் பிடிக்கும்… அது பத்தி பேசலாமா…” அவள் கேட்க “பயாலஜியா…” என்றான் அவன் திகைப்புடன்.
“ம்ம்… ஏன் வேண்டாமா…” என்றாள் சிரிப்புடன்.
“எம்மா தாயே… நாம வீட்டுக்குக் கிளம்பலாம்… இன்னொரு நாள் உனக்கு நான் கெமிஸ்ட்ரி சொல்லித்தரேன்…” என்றவன் எழுந்து நடக்க புன்னகையுடன் தொடர்ந்தாள் இந்து. அவனுடன் மனம் விட்டுப் பேச விரும்பினாலும் மனதில் இருந்த பயம் பேச விடாமல் செய்தது. காரை எடுத்தவன் அந்தத் தெருவைக் கடந்து சாலையில் கலந்தான். வீட்டுக்கு செல்லும் சாலையில் திரும்பாமல் கார் ஹைவே ரோடில் செல்லவும் திகைத்தாள் இந்து.
“ஏன் வீட்டுக்குப் போகலயா…”
“ம்ம்… போகலாம்… அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை…” என்றவன் பாதையில் கவனமாக அமைதியானாள் இந்து.
ஹைவே தாண்டி சிட்டிக்குள் நுழைந்து ஒரு நகைக் கடை முன்னே நிறுத்தியவன், அவளை அழைத்துச் சென்றான்.
“என் தம்பி உனக்கு ஒரு கிப்ட் வாங்கிக் கொடுக்க சொன்னான்…” என்றவன் ஒரு பிரேஸ்லட் செலக்ட் செய்து “பிடிச்சிருக்கா…” என்று கேட்க, தலையாட்டினாள் இந்து.
அதை பில்லிட்டு வாங்கிக் கொண்டு இருவருமாய் காருக்கு நடக்க எதிரில் ஒரு பைக் வந்ததை இந்து கவனிக்காமல் வர சட்டென்று அவளது கையைப் பற்றி தன் அருகே இழுத்தவன் கையை விடாமலே அழைத்துச் செல்ல அவனது கைக்குள் தனது கை இருப்பது ஒருவித பாதுகாப்பாய், பயம்  விலகுவது போல் உணர்ந்தாள் இந்து.
காரில் அமர்ந்து மீண்டும் ஹைவேயில் கலக்க எதிர்ப்புறம் இருந்த ரோட்டில் கூட்டம் கூடியிருந்தது. ஒரு பைக்கும், காரும் முன்னில் தகர்ந்து கிடக்க அங்கங்கே ரத்தம் சிதறிக் கிடந்தது. அதைக் கண்டு அதிர்ந்த வெற்றி ஓரமாய் காரை நிறுத்தி, “இந்து… இங்கயே இரு… பார்த்திட்டு வந்திடறேன்…” என்று சொல்ல, வேண்டாம் என்று மனம் சொன்னாலும் வார்த்தைகள் வெளி வராததால் அவன் நடந்திருந்தான்.
சம்பவத்தைக் கண்டு திகிலுடன் அமர்ந்திருந்த இந்து, வெற்றி வருவதைக் கண்டதும் சமாதானமாக, பக்கவாட்டில் வேகமாய் வந்து கொண்டிருந்த காரை கவனிக்காமல் அவன் தன்னையே நோக்கிக் கொண்டு ரோட்டைக் கிராஸ் பண்ணுவதைக் கண்டதும் அதிர்ந்து கத்தினாள்.
“வெற்றி… வராதீங்க…” கத்தியபடி இறங்கினாள் இந்து.
பழைய சுவடுகள் தந்த
பயத்தின் மிச்சங்கள்
வடுக்களாய் மனதுள்
நிறைந்திருக்க அதன்
வலி மாறும் முன்னே
எனக்குள் நுழைந்திட்டாய்…
என் விதியை எண்ணி
பயப்படுவதா… பரிதவிப்பதா…
உனை உணரும் முன்னே
புரியாமல் தவிக்கிறேன் நான்…

Advertisement