Advertisement

அத்தியாயம் – 25
வெற்றி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆகாஷை நினைவுபடுத்த தவிப்புடன் அவனைப் பார்த்தாள் இந்து.
“இந்துமா… இந்த மரத்தடியில் நீ தனியா உக்கார்ந்திருக்கறதை எத்தனயோ தடவ பார்த்திருக்கேன்… இப்ப உன் பக்கத்துல நானும் இருக்கிற இந்த நிமிஷம் எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா… இந்த நிமிஷம் என் உயிர்…” அவன் சொல்லி முடிப்பதற்குள் வாயைப் பொத்தியவள், “போதும்…” என்றாள்.
அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன், “ஏன் இந்துமா, வாயைப் பொத்திட்ட… நான் ரொம்ப போர் அடிக்கிறேனா… நான் தப்பா எதும் சொல்ல வரல… இந்த நிமிஷம் என் உயிர் உள்ளவரைக்கும் தொடரனும்னு ஆசையா இருக்குன்னு சொல்ல வந்தேன்…” அவன் சொல்லவும் தான் அவளது மூச்சு சீரானது.
“ஏன் இந்து, ஒரு மாதிரி பதட்டமாவே இருக்க… நான் பேசறது உனக்குப் பிடிக்கலையா… என் மூஞ்சியைப் பார்த்தா லவ் பண்ணற மூஞ்சி போல இல்லயா… அவ்ளோ கேவலமாவா இருக்கு… நேத்து நீ சொன்னதும் எனக்கு ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு… அதான் ஒண்ணும் சொல்லாமயே போயிட்டேன்… வீட்டுக்குப் போயி கண்ணாடில பார்த்தப்ப தான் புரிஞ்சுது…” என்றான் வெற்றி.
“என்ன புரிஞ்சது…” அவள் கேட்க, “நான் நேத்து கூலர் போடல, அதான் கிளாமர் கொஞ்சம் கம்மியா தெரிஞ்சுது போலருக்கு…” என்றவன் பாக்கெட்டில் செருகி வைத்திருந்த கூலரை எடுத்து போட்டுக் கொண்டு, “இப்ப என் மூஞ்சி லவ் பண்ணற போல இருக்கா…” என்று கேட்க அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது.
அவள் இதழில் விரிந்த மென்னகையை ரசனையாய் நோக்கியவன், “நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும் இந்துமா…” என்றான் மனதின் காதலை வார்த்தையில் தேக்கி.
“எப்பவும் சிரிச்சா பைத்தியம்னு சொல்லிருவாங்க…”
“இந்தப் பைத்தியத்துக்கு வைத்தியம் என்னன்னு எனக்குத் தெரியும்…” என்றான் வெற்றி.
“நீங்க டாக்டர்னு சொல்லவே இல்ல…” அவள் கிண்டலாய் கேட்க, “பைத்தியத்துக்கு வைத்தியம் பண்ணற பைத்தியக்கார டாக்டர்னு வச்சுக்க…” என்றான் அவன் சிரிப்புடன்.
சட்டென்று மீண்டும் ஒரு அமைதி அவளில் சூழ்ந்து கொள்ள குனிந்திருந்தவளின் முகத்தைத் தனது விரலால் தூக்கியவன், “இந்து, நான் இதுவரைக்கும் எந்தப் பொண்ணையும் நேசித்ததில்லை… கல்யாணம் பத்தியும் நினைச்சதில்லை… என் மனசுல முதல் முதலா தடம் பதிச்சது உன்னோட முகம் தான்… உன் மனசுல இப்பவும் ஏதோ ஒரு சஞ்சலம் இருக்கு… உனக்கு எப்ப சொல்லத் தோணுதோ எங்கிட்ட சொல்லலாம்… அதுவரைக்கும் நல்ல நண்பனா, கணவன் பிரமோஷனுக்கு காத்திருப்பேன்…”
அவன் சொல்லி முடிக்கவும் தாழ்ந்திருந்த கண்களை ஏறிட்டு அவனை நோக்கியவள் அந்த விழிகளில் தெரிந்த நேசத்தைக் கண்டு தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
அடுத்து எல்லாரும் கல்யாணப் பரபரப்பில் மும்முரமாக உடை, தாலி வாங்குவது என்று பிஸியாகினர்.
“வருண், என் அப்பாக்கும் அம்மாக்கும் கல்லாணம் ஆகப் போகுது…” பவித்ரா குஷியுடன் சொன்னாள்.
“ம்ம்… சூப்பர்ல, எனக்கு தான் என் அம்மா, அப்பா கல்யாணத்தைப் பார்க்கவே முடியல… நான் எங்கிருந்தேன்னு கேட்டா, நான் பொறக்கவே இல்லன்னு அம்மா சொன்னாங்க… உனக்காச்சும் உன் அம்மா, அப்பா கல்யாணத்தைப் பார்க்கலாம், புது டிரஸ் போட்டு போட்டோ எடுக்கலாம்… அப்ப இந்துக்கா நிஜமாலுமே உன் அம்மா தானா…” என்று வருண் சந்தோஷப்பட பவித்ராவுக்கு குஷியாய் இருந்தது.
அகிலா, ஜோதியிடம் கடையில் அண்ணாச்சி சொன்னதைப் பற்றி சொல்லாமல் வெற்றி, இந்துவின் கல்யாணம் நிச்சயம் ஆனது பற்றி சொல்ல, “இப்படி நடக்கும்னு தான் எனக்கு முன்னமே தெரியுமேம்மா… ஹூம்… இந்து மனசுக்கு நல்லாருக்கட்டும்…” என்றுவிட்டு செல்ல விட்டுவிட்டார்.
வெற்றி சக்தியிடம் இங்கு நடந்த விஷயத்தை சொல்ல கிளம்ப, பெரியசாமியும் உடன் சென்றார். கல்யாணம் முடிவானது அறிந்து சக்தி மிகவும் சந்தோஷப்பட்டான்.
“இந்தக் கல்யாணத்துக்கு தொடக்கம் போட்டதே நீதான்… ஆனா உன்னால நேர்ல வந்து வாழ்த்த முடியலியேடா…” வெற்றி வருத்தப்பட, “நேர்ல வந்து வாழ்த்தினா தான் வாழ்த்தா… நான் இங்கிருந்தாலும் மனசு எப்பவும் உன்னை வாழ்த்திட்டு தான் இருக்கும்… எப்படியோ விஸ்வாமித்திரரா உர்ருன்னு சுத்திட்டு இருந்த உன் மனசுலயும் காதலை விதைச்சு முகத்துல சிரிப்பைக் கொண்டு வந்துட்டாங்க அண்ணி… அவங்களுக்கு ஒரு சபாஷ்…” என்றான் சக்தி.
“டேய், ரொம்பதான் ஓட்டாத…” என்ற வெற்றியின் முகத்தில் உண்மையிலேயே ஒரு பொலிவு வந்திருந்தது.
“சரிடா சக்தி… கல்யாணம் முடிஞ்சதும் உன் அண்ணியைக் கூட்டிட்டு வந்து உன்னைப் பாக்கறேன்… நாங்க கிளம்பட்டுமா…” எனவும், “சரிடா, அப்படியே பவிக்குட்டியும் அழைச்சிட்டு வரியா… ரொம்ப நாளாச்சு, அவளைப் பார்த்து…”
“அதெல்லாம் பவிக்குட்டியே இந்தும்மா வர்றாங்கன்னு சொன்னா கூட கிளம்பி வந்திடும் சக்தி தம்பி… ரெண்டு பேரும் தாயும் பிள்ளையுமா அவ்ளோ உசுரா இருக்காங்க…” என்றார் பெரியசாமி.
“ம்ம்… சரிங்க ஐயா… எங்களுக்குன்னு யாரும் இல்ல… கல்யாண வேலை எல்லாம் நீங்க தான் வெற்றி கூட இருந்து பார்த்துக்கணும்…” என்ற சக்தியிடம், “அதெல்லாம் சொல்லணுமா தம்பி… அநாதையா நின்ன எனக்கு நீங்கதான எல்லாம்…” என்றவரின் கண்களும் கலங்கியது.
நாட்கள் வேகமாய் ஓட விடிந்தால் கல்யாணம். அன்று இந்துவின் வீட்டில் அவளுடன் பேசி விட்டு வந்த வெற்றிக்கு அதற்குப் பிறகு அவளுடன் தனியே பேசும் சந்தர்ப்பம் அமையவில்லை. விடிந்தால் கல்யாணம் என்பது மனதுக்குள் ஒருவித எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் கொடுக்க அவளுக்கு அலைபேசியில் அழைத்தான் வெற்றி.
அடுத்த நாள் கோவிலுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை அகிலாவும் பரமசிவத்தின் தங்கை கல்பனாவும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க பரமசிவம் ஏதோ லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தார்.
சிந்து உடைக்கு மேட்சாய் வளையல், கம்மல் என்று எடுத்து வைத்துக் கொண்டே இந்துவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். இந்து எப்போதும் யோசனையாய் இருப்பதைக் கண்ட அகிலா சிந்துவை அவள் உடன் இருக்கும்படி கூறியிருந்தார்.
“அக்கா, இந்த கம்மல் டிரஸ்க்கு மேட்சாகுமா பாரு…”
ஒரு ஜிமிக்கியை எடுத்து அவள் காட்ட, “ம்ம்… நல்லார்க்கு, உனக்குப் பிடிச்சிருந்தா போட்டுக்க…” என்றாள் இந்து. அப்போது அவளது அலைபேசி அடிக்க எடுத்துப் பார்த்த சிந்து, “பவி அப்பா” என்ற பெயரைக் கண்டதும், “ரைட்டு, மாம்ஸ் கூப்பிடறார்…” என்றவள், இந்து வேண்டாமென்று சைகை செய்ய, “பேசுக்கா, பாவம் மாம்ஸ்… ஆசையா கூப்பிடறார்ல…” என்றவள் அழைப்பை எடுத்து அவளிடம் நீட்ட முறைத்துக் கொண்டே வாங்கினாள் இந்து.
சிந்து வெளியெ செல்ல பேசாமல் காதில் வைத்திருந்தாள். “ஹலோ, இந்து… இருக்கியா…” என்றது வெற்றியின் குரல்.
“ம்ம்… இருக்கேன்…”
“என்ன பண்ணிட்டு இருக்க இந்துமா… விடிஞ்சா நமக்கு கல்யாணம்னு நினைக்கும்போது ஒரு மாதிரி பரபரப்பா இருக்கு… படுத்தா தூக்கமே வர மாட்டேங்குது… பவி வேற எப்ப நாளக்கி வரும்… அம்மாவ கல்யாணம் பண்ணுவீங்கனு என்னைப் படுத்தி எடுக்குது… நீ கொஞ்சம் அவகிட்டப் பேசேன்…” என்ற வெற்றியின் குரலில் உற்சாகம் வழிந்தது.
“ம்ம்…” அவள் சொல்லவும் அலைபேசி கைமாற பவிக்குட்டியின் குரல் கேட்டது.
“ஹலோ அம்மா, என்ன பண்ணதீங்க…”
“நான் சும்மா தான் உக்கார்ந்துட்டு இருக்கேன் செல்லம்… நீ ஏன் இன்னும் தூங்கல…”
“எனக்கு தூக்கமே வரலம்மா, நாளக்கி கல்யாணம் முடிஞ்சதும் நீ நம்ம வீத்துக்கு வந்திருவ தான… எனக்கு சாப்பாடு ஊத்தி, பாத்தி போல குளிக்க வச்சு, என் பக்கத்துல படுத்து தத்திக்கொடுத்து தூங்க வைப்ப தான…” குழந்தையின் மனதிலுள்ள ஏக்கம் வார்த்தையாய் வெளிப்பட்டது.
“ம்ம்…” என்ற இந்துவுக்கும் அவளது ஏக்கம் புரிந்தது.
“பவிக்குட்டிக்கு அம்மா வேற என்ன பண்ணனும்…”
“அப்புதம் எனக்குத் தலை சீவி எல்லோ ரோஸ் வச்சு விட்டு, பவுதர் போத்து மேக்கப் எல்லாம் பண்ணி…” அவள் மழலைக் குரலில் அடுக்கிக் கொண்டே போக “இந்த சின்னக் குழந்தைக்குள் இத்தனை ஏக்கங்களா…” என்று இந்துவின் திகைப்பு கூடிக் கொண்டே போனது.
“சரி எல்லாம் பண்ணலாம்… இப்பப் படுத்து தூங்கு… அப்பதான் நாளைக்கு சீக்கிரம் ரெடியாக முடியும்… சரியா…”
“ம்ம்… சரிம்மா… லவ் யூ… குட் நைத்… உம்மா…” என்றவள் வேகமாய் வெற்றியிடம் போனைக் கொடுக்க, “ம்ம்… லவ் யூ டா செல்லம்… உம்மா…” என்றாள் இந்து.
அவளது லவ் யூ சுகமாய் இதயத்தைத் தடவ புன்னகைத்த வெற்றி, “மீ டூ லவ் யூ இந்துமா, உம்மா… ப்ச்…” என்று அழுத்தமாய் முத்தம் வைக்க அதிர்ந்து சிவந்து போனவள் அவசரமாய் அழைப்பைத் துண்டித்தாள். அதற்குப் பின்னும் அந்த லவ் யூ வும், ஆழமான இச்… சத்தமும் அவள் காதுக்குள்ளேயே நின்று இம்சை செய்ய படபடத்தாள். அவஸ்தையும் தவிப்பும் பயமுமாய் இந்துவுக்கு அந்த இரவு கழிய அழகாய் விடிந்தது விடியல்.
கல்யாணத்திற்கு வெகு சிலரை மட்டுமே அழைத்திருந்தனர். வெற்றியின் சார்பில் அவன் நண்பர்கள் சிலரும் பெரியசாமி, பார்வதியும் மட்டுமே. இந்துவின் வீட்டிலும் மிகவும் நெருங்கிய சில உறவுகளும் ஆகாஷின் பெற்றோரும் மட்டும். வெற்றி, இந்து வீட்டின் முன்னில் பந்தல் போடப் பட்டிருக்க மதிய விருந்துக்கு அருகில் இருந்த சுற்றத்தாரை அழைத்திருந்தார் பரமசிவம்.

Advertisement