Advertisement

“இது எப்படி அதற்குள் இவருக்குத் தெரியும்…” என யோசித்த அகிலா, “இன்னும் முடிவாகல, பேசிருக்கோம்… உங்களுக்கு எப்படித் தெரியும்…” என்றார் திகைப்புடன்.
“அதெல்லாம் வீட்டு விஷயம் வெளிய வரவா தாமதம்… காத்து வாக்குல எல்லார் காதுக்கும் வந்துடாது…” கேட்டுக் கொண்டே அவர் எடுத்து வைத்த காய்களை நிறுத்திப் போட்டவர், “உங்க ஸ்கூல்ல வேலை செய்யுற ஜோதி தான் முந்தாநாள் சொல்லிட்டு இருந்துச்சு… அது சும்மா புரளி பேசுதோன்னு தான் முதல்ல தோணுச்சு… அப்புறம் நேத்து அந்தத் தம்பி கார்ல நம்ம பொண்ணு வந்து இறங்கவும் தான் நிசந்தான் போலருக்குன்னு நினைச்சேன்…” என்றார் அவர்.
“இருந்தாலும் ஒவ்வொரு விஷயமும் இத்தன வேகமாகவா பரவும்…” என வியந்து கொண்டே காசைக் கொடுத்து வந்தார்.
“இந்த ஜோதிக்கு இருந்தாலும் ரொம்பதான் லொள்ளு… நாம பேசி முடிக்கறதுக்கு முன்னாடியே அவ ரெண்டு பேருக்கும் சம்மந்தம் பண்ணி பேசிருக்கா பாரேன்… நல்ல வேள, இந்து கல்யாணத்துக்கு சம்மதிச்சா… இல்லேன்னா ஊரே தப்பால்ல பேசிருக்கும்…” என சிந்துவிடம் புலம்பிக் கொண்டே வீட்டுக்கு சென்றார் அகிலாண்டேஸ்வரி. அன்று பிளேஸ்கூல் லீவ் என்று அனைவருக்கும் அழைத்து சிந்து சொல்லி இருந்தாள்.
காலையில் பவிக்குட்டி உற்சாகத்துடன் எழுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தாள். பெரியசாமி, பார்வதியிடம் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டாள்.
“பாத்தி, அம்மாக்கும், அப்பாக்கும் கல்யாணம் நடக்கப் போகுதாம்… அம்மா எங்களோதவே இருப்பாங்களாம்… அப்பா சொன்னாங்க…” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அங்கே இந்துவை அலங்காரம் பண்ண சொல்லி சிந்து கெஞ்சிக் கொண்டிருக்க, அகிலா உணவு தயாரிப்பதில் மும்முரமாய் இருந்தார். உறவுகள் யாருக்கும் இப்போது சொல்ல வேண்டாம்… என்று பரமசிவம் சொல்லி விட்டார்.
ஹாலுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருந்தவர் வெளியே நின்று வெற்றியின் வீட்டைப் பார்ப்பதும் உள்ளே செல்வதுமாய் இருக்க அவனது காரைக் காணவில்லை.
சிறிது நேரத்தில் வாசலில் கார் நிற்கும் ஓசை கேட்க, ஆகாஷின் பெற்றோர் கீழே இறங்கினர். உடன் பவித்ராவும், வெற்றியும். அவர்கள் தங்களது காரில் வருவதாய் சொல்ல கேட்காமல், “நாம ஒரே குடும்பம்தானே… ஒண்ணாவே போகலாம்…” என்று காலையிலேயே மகளையும் அழைத்துச் சென்று அவர்களைத் தனது காரிலேயே அழைத்து வந்தான்.
நலம் விசாரிப்பு முடிந்து, “இந்து ரெடியாகிட்டாளா…” என்ற ஆகாஷின் அன்னை அவளைக் காண அறைக்கு செல்ல சாதாரண காட்டன் சேலையில் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் முறைத்தார்.
“கல்யாணப் பொண்ணு இப்படியா சிம்பிளா புறப்படறது… அப்புறம் எங்களுக்கும், உனக்கும் என்ன வித்தியாசம்…” என்றவர் அவரே ஒரு மைசூர் சில்க் புடவையைத் தேர்ந்தெடுத்து, “இதைக் கட்டிக்க மா…” என்று கொடுக்க, விருப்பமில்லா விட்டாலும் மறுக்காமல் கட்டிக் கொண்டாள்.
“நகை எல்லாம் எங்கே…” என்றவரிடம் அலமாரியைக் காட்ட அவரே கழுத்தோடு ஒரு நெக்லசும், நீளமாய் ஒரு ஆரமும் அணிவித்து சிந்து கொடுத்த பூவை வைத்து விட்டார்.
“அழகா இருக்கடா இந்துமா…” என்றவருக்கு அந்த சமயத்தில்  மகனின் நினைவு வந்தாலும் அடக்கிக் கொண்டு, “கொஞ்சம் சிரிச்சா இன்னும் அழகா இருப்ப இந்துமா…” என்றதும் கண்ணீருடன் அவரை ஏறிட்டாள் இந்து.
“அத்த… உங்க பெருந்தன்மையும் அன்பும் யாருக்கும் வராது… உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுத்துதான் இப்படி நிக்கறேன்… எ… எனக்கு பயமா இருக்கு…” என்றாள் அவள்.
“அடச்சீ… அசடு… தப்பா எதுவும் யோசிக்காத… இனியாச்சும் உனக்கு எல்லாம் நல்லதா நடக்கட்டும்…” என்றவர் அவளது  கண்ணீரை கைக்குட்டையால் ஒப்பினார். அப்போது உள்ளே வந்த பவிக்குட்டி, “ஐ… என்னோத அழகு அம்மா…” என்று சொல்லி அமர்ந்திருந்தவளின் கன்னத்தில் எம்பி முத்தம் வைக்க இந்துவும் புன்னகைத்தாள்.
“அம்மா, எனக்கும் பூ வச்சு விதறியா…” குழந்தை இயல்பாய் அவளிடம் கேட்க, “வச்சு விடறேன்டா செல்லம்…” என்ற இந்துவும் மேசையில் இருந்த பூவை சிறிது எடுத்து அவள் தலையில் வைத்து பின் குத்தினாள்.
“ஐ… நானும் அம்மா போல அழகாதுக்கேன்…” கண்ணாடியில் தன்னைப் பார்த்து சந்தோஷமாய் சொன்ன குழந்தையை அணைத்துக் கொண்டாள் இந்து.
அவர்களுக்குள் இயல்பாய் வளர்ந்திருந்த அன்னை, மகள் உறவு நிச்சயம் வெற்றியையும் அதில் இணைத்துக் கொண்டு வெற்றி கொள்ளும் என்று அவர் மனம் கணக்குப் போட்டது.
சம்பிரதாயமாய் பெண் பார்க்கும் சடங்குடன் கல்யாண நாளை முடிவு செய்யவே அனைவரும் கூடி இருந்தனர்.
பெரியசாமியையும், பார்வதியையும் வெற்றி வர சொன்னதால் அவர்களும் வந்திருந்தனர். பார்வதி அகிலாவுடன் அடுக்களையில் இணைந்து கொள்ள பெரியசாமியும் சின்ன சின்ன உதவிகளை செய்து கொண்டிருந்தார்.
“சிந்து, இந்துவை அழைச்சிட்டு வாம்மா…” என்றுவிட்டு ஆகாஷின் அன்னை ஹாலுக்கு செல்ல அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருந்தார் அகிலாண்டேஸ்வரி.
சிந்து இந்துவை அழைத்து வர அவள் நிலம் பார்த்து அமைதியாய் நின்று கொண்டிருந்தாள்.
இந்துவை ஏறிட்ட வெற்றியின் கண்கள் அவள் மீதே ஒட்டிக் கொள்ள மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதை உணர்ந்தான்.
“அப்புறம், சம்மந்தி, கல்யாணத்தை எப்படி வச்சுக்கலாம்னு நினைக்கறீங்க…” ஆகாஷின் தந்தை கேட்க பரமசிவம் வெற்றியைப் பார்த்தார்.
“தம்பி எப்படி சொல்லுதோ, அப்படியே வச்சிடலாம்…”
“சிம்பிளா கோவில்ல வச்சிடலாம் அங்கிள்… எல்லாருக்கும் வீட்ல அழைச்சு விருந்து கொடுத்துடலாம்…”
“சரி தம்பி… எப்ப வச்சுக்கலாம்…” என்றார் பரமசிவம்.
“உங்களுக்கு எப்ப வசதியோ, பார்த்துக்கோங்க அங்கிள்…”
“அட, இன்னும் என்ன தம்பி, அங்கிள்னு சொல்லிட்டு இருக்கீங்க… ரெண்டு பேரும் மாப்பிள்ளை, மாமான்னு உறவு முறைக்கு மாறுங்க…” ஆகாஷின் தந்தை சொல்லவும் அனைவரும் சிரித்தனர்.
“அடுத்த வாரமே நல்ல முகூர்த்த நாள் வருது… கல்யாணத்தை அன்னைக்கே வச்சிடலாமா…” ஆகாஷின் அன்னை கேட்க, வெற்றி இந்துவைப் பார்த்தான்.
அவள் அமைதியாய் அப்போதும் குனிந்தே இருந்தாள்.
“எனக்கு ஓகே… இந்துகிட்ட கேட்டிருங்கம்மா…” என்றான் வெற்றி.
“என்னம்மா இந்து, உனக்கும் ஓகே தானே…” அவர் கேட்க, அருகிலிருந்த பவி, “ஓகே சொல்லும்மா…” என்றாள்.
“ம்ம்…” என்ற வார்த்தையை சம்மதமாய் உரைக்க அடுத்த வாரமே அருகிலுள்ள கோவிலில் திருமணம் என்று நிச்சயம் செய்து தாம்பாளம் மாற்றி உறுதி செய்து கொண்டனர்.
மற்ற விஷயங்களை அவர்கள் பேசிக் கொண்டிருக்க வெற்றியின் கண்கள் தவிப்பாய் அவளைத் தழுவிக் கொண்டிருக்க அதை ஆகாஷின் தந்தை கவனித்து விட்டார்.
“வெற்றி, உனக்கு ஏதாச்சும் இந்துகிட்ட பேசணுமா…” என்று கேட்க அவன் ஆமாம் என்று தலையாட்டினான்.
“இந்து, மாப்பிள்ளையை தோட்டத்துக்கு அழைச்சிட்டுப் போயி பேசிட்டு வாம்மா…” பரமசிவம் சொல்ல அவளுக்கு ஆகாஷின் நினைவு மனதுள் பொங்கிக் கொண்டிருந்தது.
“நானும் அம்மா கூட போவேன்…” பவி முதலில் எழுந்து நிற்க, “நீ அப்புறம் போகலாம் செல்லம், நான் உனக்கு எல்லோ ரோஸ் வாங்கி வச்சிருக்கேன்…” என்று சிந்து அவளை அழைத்துச் சென்று விட்டாள்.
“இந்து போம்மா…” அகிலா சொல்ல தோட்டத்துக்கு நடந்தவள் கால்கள் இயல்பாய் பவளமல்லி மரத்தடிக்கு செல்ல அங்கிருந்த திண்டில் அமர்ந்தான் வெற்றி.
“இந்து… நீயும் உக்கார், ஏன் இப்படி இருக்க… நான் என் குழந்தைக்காக தான் உன்னைக் கல்யாணம் பண்ணறேன்னு நினைக்கறியா… உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா…” என்றவனின் குரல் தவிப்புடன் வெளிவர அவளது கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு நிலத்தில் விழுந்தது. பவள மல்லிப் பூக்கள் அவள் மீது விழுந்து “அழாதே…” என்பது போல் சொல்ல அழுகையை அடக்கிக் கொண்டாள்.
“இந்து… எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு மா… கல்யாணத்தைப் பத்தியே யோசிக்காம இருந்த என் மனசுல மனைவின்னு உன்னை மட்டும் தான் நினைச்சுப் பார்த்திருக்கேன்… நல்ல காதலனா எப்படி நடந்துக்கணும்னு எனக்குத் தெரியல… ஆனா ஒரு நல்ல கணவன் எப்படி இருக்கணும்னு எனக்குத் தெரியும்… உன் மனசுல எதையோ போட்டு குழப்பிட்டு இருக்க… என்னன்னு சொல்லு மா…” அவன் கேட்க அவளுக்கு தனது பயத்தை எப்படி சொல்வதென்று புரியாமல் தவித்தாள்.
மெல்ல அவள் கையைப் பற்றியவன், “இந்துமா… என் வாழ்க்கைல நீ வந்தா ரொம்ப சந்தோஷமா இருப்பேன்… நிச்சயம் உன் கலக்கத்துக்கு என்னால மருந்தா இருக்க முடியும்னு நம்பறேன்… ஐ லவ் யூ டா…” என்றவன் அவள் கையைத் தன் நெஞ்சில் வைத்துக் கொள்ள பதறிப் போனவளின் மீது சட்டேன்று வீசிய காற்றில் சடசடவென்று உதிர்ந்த பவளமல்லிப் பூக்கள் அவளைத் தழுவி “கலங்காதே…” என்று ஆறுதல் கூறியது போலத் தோன்றியது.
இதயம் இறகாவதும்
இரும்பாவதும்
உன்னால் தானடி…
காதல் கனவாவதும்
கண்ணீராவதும்
உன் மறுப்பால் தானடி…
உன் கூந்தல் காட்டில்
மலர்ந்த பூவின் வாசமாய்
மனம் மோட்சம் கொள்ளும்
வரம் கொடுத்திடு பெண்ணே…
உருகுவதும், உதிர்வதும்
உன்னால் தான் நானே…

Advertisement