Advertisement

அத்தியாயம் – 24
வெற்றி நீட்டிய தட்டை வாங்குவதற்காய் நீண்ட இந்துவின் கைகள் நடுங்குவதை அவன் கவனிக்கத் தவறவில்லை.
“இப்பதான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…” என்ற ஆகாஷின் அன்னை, “சீக்கிரமே வீட்ல கலந்து பேசி அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சிடலாம்…” என்றார். இந்து அமைதியாய் இருக்க, “அம்மா, எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க…” என்ற வெற்றி இந்துவைப் பார்க்க இருவருமாய் அந்த அன்புப் பெற்றோரின் காலில் விழுந்து வணங்கினர்.
“ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்மா… இவ்ளோ நாள் நீங்க பட்ட வேதனைக்கு ஒருத்தருக்கொருத்தர் மருந்தா, சந்தோஷமா இருங்க…” மனமார வாழ்த்தினர்.
“அப்ப நாங்க கிளம்பட்டுமா…” வெற்றி கேட்க, “சரிப்பா… நாளைக்கே இந்து வீட்டுக்கு வந்து மத்த விஷயங்களைப் பேசி முடிச்சிடலாம்…” என்றார் ஆகாஷின் தந்தை.
“ம்ம்… சரிப்பா…” என்று அழைத்தவனை அவர் கண்கள் வியப்புடன் நோக்க, “என்னப்பா பார்க்கறிங்க… நீங்க மட்டும் தான் என்னை உங்க பிள்ளையா நினைக்கணுமா… நான் உங்களை அப்பா, அம்மாவா நினைக்கக் கூடாதா…” வெற்றி கேட்க அந்த பெற்றோரின் கண்கள் நெகிழ்ந்து கலங்கின.
இந்து திகைத்தாலும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
“உண்மைலேயே நீ எங்க பிள்ளை தான்ப்பா… சரி, பத்திரமா போயிட்டு வாங்க…”
“சரிப்பா, வர்றோம் மா…” இருவரும் விடை பெற்று வாசலுக்கு வந்தனர்.
இந்து அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாய் இருப்பது மனதை உறுத்த அவளது கையைப் பற்றிக் கொண்ட ஆகாஷின் அன்னை, “நாங்க உன்கிட்ட கேட்காம இப்படி முடிவு பண்ணினதுல உனக்கு எதுவும் வருத்தம் இல்லையே இந்துமா…” என்றார்.
“அச்சோ, அதெல்லாம் இல்ல அத்த… நீங்க எது செய்தாலும் என் நன்மைக்காக தான் இருக்கும்… என் விஷயத்தில் எதை தீர்மானிக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கு…” என்றவளை கண்கள் பனிக்க அணைத்துக் கொண்டார் அந்த அன்னை. வெளியே வந்ததும் சில்லென்ற மழைத் துளி அவர்களை வாழ்த்தித் தூவத் தொடங்கியது.
“அடடா மழை வந்திருச்சே… நல்ல சகுனம் தான்…” என்றார்.
“இந்து, நீ இங்கயே இரு… நான் போயி கார் எடுத்திட்டு வந்திடறேன்…” என்றவன் மழையிலேயே கேட்டுக்கு செல்ல, “இருப்பா… குடை எடுத்திட்டு போ…” என்றவர் வேகமாய் குடையை எடுத்து வந்தார்.
வெற்றி காரை அடுத்த தெருவில் நிறுத்தி இருந்தான்.
சிறிது நேரத்தில் அவனது கார் கேட்டுக்குள் நுழைந்து வீட்டு போர்டிகோவில் நிற்க, குடையை அவர்களிடம் கொடுத்துவிட்டு இருவரும் கிளம்பினர்.
முன் சீட்டின் கதவை வெற்றி திறந்து கொடுக்க மறுக்காமல் அமர்ந்து கொண்டாள். புன்னகையுடன் பெரியவர்களிடம் தலையசைத்து விடை கொடுத்தவன் காரை எடுத்தான்.
கார் கண்ணாடியில் மழைத் துளிகள் விழுந்து வழியை மங்கலாக்க அதை வைப்பர் வழித்துக் கொண்டு தெருவைப் பளிச்சென்று காட்டியது.
அந்தத் தெருவைத் தாண்டும் வரை அமைதியாய் ஒருவித அவஸ்தையுடன் அமர்ந்திருந்தவள், தெரு முடிந்து ரோட்டில் வண்டி திரும்பியவுடன், “கொ…கொஞ்சம் வண்டியை நிறுத்தறீங்களா…” என்றதும் அவன் திகைத்தான்.
“மழை வருது இந்துமா… இப்ப எதுக்கு நிறுத்தணும்…”
“ப்ச்… கேள்வி கேட்காம கொஞ்சம் நிறுத்துங்க ப்ளீஸ்…” அவள் எரிச்சலாய் சொல்லவும் நிறுத்தினான். சட்டென்று கார்க்கதவைத் திறந்து அவள் இறங்க அதிர்ந்தவன் பின்பக்கக் கதவைத் திறந்து அமரவும் தான் நிம்மதியானான்.
“ச்சோ… ஒரு நிமிஷம் பயந்துட்டேன்…”
“எதுக்கு… அப்படியே இறங்கி ஓடிப் போயிருவேன்னு நினைச்சிங்களா…” கிண்டலாய் கேட்டாள்.
“ஆமாம்…” என்று சொல்ல முடியாமல் அவன் அமைதி காக்க, “இந்த விஷயத்துல நீங்களோ நானோ முடிவெடுத்திருந்தா ஒருவேளை அப்படி பண்ண சான்ஸ் இருக்கு… ஆனா இதைத் தீர்மானம் பண்ணினது, நான் வாழ்க்கைல ரொம்பவும் மதிக்கற பெரியவங்க… அதுனால அதுக்கெல்லாம் இனி வாய்ப்பில்ல…” என்றாள் முகத்திலிருந்த மழைத் துளியைத் துடைத்துக் கொண்டு.
“ஓ… அப்புறம் எதுக்கு பின்னாடி போயி உக்கார்ந்துட்ட…”
“அவங்க சொன்னதுக்காக உங்களோட பயணிக்க தயார் ஆயிட்டேன்… ஆனாலும் உங்க பக்கத்துல பயணிக்க இன்னும் என் மனசு தயாராகலை…” என்றவளின் குரலில் ஒரு வலி தெரிய வெற்றி அமைதியானான்.
கார்க்கண்ணாடியில் மோதி வரியாய் வழிந்து ஓடும் மழைத் துளிகளை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். கண்ணாடி வழியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்த வெற்றிக்கு அவள் மனநிலை புரியாமலில்லை.
“இருந்தாலும் உடன் வாழவே தொடங்காத ஒருத்தன் மீதும், அவன் குடும்பத்தின் மீதும் இத்தனை அன்பும் மரியாதையும் ஒரு பெண்ணால் வைக்க முடியுமா…” என்ற ஆச்சர்யம் அவள் மீதான அன்பை அவனில் அதிகரிக்கச் செய்தது.
சிறிது நேரம் மௌனமாய் கழிய வெற்றியே பேசினான்.
“ரெண்டு பேரும் ஒண்ணா பயணிக்கத் தீர்மானிச்ச பிறகு எதுக்கு இந்த மௌனம்… ஏதாச்சும் பேசிட்டு வரலாமே…”
“எனக்கு எதுவும் பேசறதுக்கு இல்லையே…”
“ஆனா, எனக்கு இருக்கு இந்து…” என்றவனின் குரலில் ஒரு கனம் வந்திருக்க கார் கண்ணாடியில் அவனைப் பார்த்தாள்.
அந்த கண்களிலும், முகத்திலும் ஏதோ யோசனை தெரிந்தது.
“இந்துமா, நான் இப்படிப் பண்ணதுல உனக்கு வருத்தம் இருக்கலாம்… ஏன் கோபம் கூட இருக்கலாம்… ஆனா, நாம ரெண்டு பேர் இணையறதால எத்தனை பேருக்கு சந்தோசம், நிம்மதி… என் தம்பி வாழ்க்கைல வந்த பெண் எங்க குடும்பத்தோட மொத்த சந்தோஷத்தையும் எடுத்திட்டுப் போயிட்டா… அதை எல்லாம் திரும்பக் கொண்டு வர உன்னால தான் முடியும்… எனக்கு உன் மனநிலை புரியாம இல்லை… உனக்கு என்னை முழு மனசா எப்ப ஏத்துக்க முடியுமோ அது வரைக்கும் நான் காத்திருப்பேன்… தாலி கட்டிய கணவனா மட்டும் இல்லை, நல்ல நண்பனா…”
அமைதியாய் தெளிவாய் தனது மனதை அவன் எடுத்துச் சொல்ல அவளுக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.
ஆனாலும் மனதின் ஓரத்தில் மீண்டும் அந்த பயம் எட்டிப் பார்க்க, “ஐயோ, இவன் என்னை நேசித்து இவனுக்கும் ஏதாவது ஆகிவிட்டால்…” மனம் பதறியது.
“நல்ல நண்பனா இருக்க தாலி எதுக்கு… இப்ப மாதிரியே இருந்திருக்க வேண்டியது தான…” அவள் சிடுசிடுக்க அவன் புன்னகைத்தான்.
“எனக்கொன்னும் பிரச்சனை இல்ல, தாலி கட்டாம ரெஜிஸ்டர் மேரேஜ்னாலும் ஓகே தான்…”
“ஹூக்கும், பண்ணறதெல்லாம் பண்ணிட்டு, கிண்டல் வேற…”
“சரி கிண்டல் பண்ணல, உனக்கு ஓகேன்னா காதல் பண்ண நான் ரெடி…” என்றான் அவனும் விடாமல்.
“காதல் பண்ணற மூஞ்சியப் பாரு…”
“ஏன் இந்த மூஞ்சிக்கு காதல் வராதா… நீ ஒரு சான்ஸ் கொடுத்துப் பாரேன்… ஆஸ்காரே வாங்கிக் காமிக்கறேன்…”
“ஆஸ்கார் வாங்க இதென்ன நடிப்பா… அதெல்லாம் மனசுல இருந்து வரணும்…” சட்டென்று அவள் சொல்ல அவன் அமைதியானான்.
“ஓவரா தான் சீண்டிட்டோமோ…” என யோசித்தவள் அமைதியாகிவிட அவனும் பேசவில்லை. அவனது முகத்தில் எதுவும் கோபம் தெரிகிறதா என்று இந்து கண்ணாடியில் தேடிக் கொண்டிருக்க அமைதியாய் இருந்தது.
சற்று நேரத்தில் வீடு வந்தது. வீட்டு வாசலில் காரை நிறுத்த மழையில் நனைந்து கொண்டே இறங்கியவள், அவனும் உள்ளே வருவான் என்று கேட்டைத் திறக்க அவனோ எதுவும் சொல்லாமலே காரை எடுத்துச் சென்று விட அவளுக்கு ஒரு மாதிரி கஷ்டமாய் இருந்தது.
இப்படிப் பேசிப் பழக்கம் இல்லாதவள் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றி இப்போது வருத்தப்பட்டாள். அந்த வருத்தம் அவன் மீதுள்ள பிரியத்தால் வந்ததென்று அவளால் யோசிக்க முடியவில்லை.
கேட் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த சிந்து, “என்னக்கா, மழைல நனைஞ்சிட்டு நிக்கற, “உள்ள வா…” என்று குடையுடன் ஓடி வந்து அழைத்துச் சென்றாள்.
வீட்டில் நெய் வாசம் தூக்கலாய் இருக்க பாயாசம் செய்து கொண்டிருந்த அகிலா ஓடி வந்தார்.
“இந்து… ஒரு வழியா கல்யாணத்துக்கு சம்மதிச்சியே… ரொம்ப சந்தோஷம்டி… என்றவர் முந்தானையால் அவளது லேசாய் நனைந்த தலையைத் துவட்டி “இரு, பாயாசம் ஆயிருச்சு…. எடுத்திட்டு வரேன்…” சந்தோஷமாய் சென்றார்.
“இந்துமா… தம்பி எங்க…” கேட்டுக் கொண்டே வெளியே பார்த்த பரமசிவம், “வீட்டுக்குப் போயிட்டாரா… இப்பதான் சம்மந்திம்மா கூப்பிட்டு பேசினாங்க… விஷயத்தை சொன்னதும் உன் அம்மாக்கு தலை கால் புரியல… இந்நேரத்துல பாயசம் செய்துட்டு இருக்கா பாரேன்…” என்ற தந்தையின் முகத்திலும் அத்தனை சந்தோசம்.
“மாம்ஸ் என்னக்கா, வீட்டுக்குள்ள வராமலே போயிட்டார்…” சிந்து கேட்க, “நாளைக்கு வருவார்… அவர்கிட்டயே கேளு… நான் டிரஸ் மாத்திட்டு வரேன்…” என்று தனது அறைக்கு சென்றவள் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அடுத்த நாள் மதியம் எல்லாருக்கும் அவர்கள் வீட்டில் உணவு என்று தீர்மானித்த பரமசிவம் காலையில் எழுந்ததுமே அவர்களை அழைத்து சொல்லிவிட்டார்.
காலையில் காய்கறி வாங்குவதற்காய் அகிலாவும், சிந்துவும் கடைக்கு செல்ல, “என்னம்மா மூத்த பொண்ணுக்கு கல்யாணம் சரியாகிடுச்சு போல… மாப்பிள்ளைக்கு குழந்தையும் இருக்கும் போலருக்கு… ரெண்டாம் தாரமா…” என்றார் கடைக்காரர்.

Advertisement