Advertisement

“இந்துமா… வாடா… உக்கார்… என்னங்க, நம்ம இந்து வந்திருக்கா பாருங்க…” என்று மேலே நோக்கிக் குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன்…” என்று மாடியிலிருந்து இறங்கி வந்தார். ஆகாஷின் தந்தையின் குரலில் இருந்த உற்சாகம் உடலில் இல்லை.  
“வாம்மா இந்து, எப்படிடா இருக்க… உக்காருமா…” அமராமல் நின்று கொண்டிருந்தவளிடம் கூற, “ரெண்டு பேரும் ரொம்ப மெலிஞ்சு போயிட்டிங்க… உடம்பை சரியா கவனிக்கறதில்லையா…” கேட்டுக் கொண்டே சோபாவில் அமர்ந்தாள் இந்து.
“ம்ம், என்ன கவனிச்சு என்ன மா… அதை விடு… நீ எப்படி இருக்கே… அப்பா எப்படி இருக்கார்… அன்னைக்கு நாங்க ஹாஸ்பிடல்ல பார்க்க வந்தப்ப நீ வீட்டுக்குப் போயிட்டன்னு சொன்னாங்க… இப்போ நல்லாருக்காரா…”
“ம்ம்… வீட்ல ரெஸ்ட்ல இருக்கார் மாமா…”
“ம்ம்… நல்ல மனுஷன்… மனசுல என்ன கவலையை வச்சிட்டு இருக்காரோ… பார்த்துக்க மா…” என்றார். அவள் அமைதியாய் இருக்க மனைவியிடம் திரும்பியவர், “குழந்தைக்கு சாப்பிட ஏதாச்சும் எடுத்திட்டு வா… என்ன ஸ்பெஷலா பண்ணிருக்க…” என்றார் மனைவியிடம்.
“அவ வரேன்னு சொன்னதுமே அவளுக்குப் பிடிச்ச கேசரி செய்து வச்சிட்டேங்க…” என்றவர், “நிர்மலா…” அழைக்க அடுக்களையிலிருந்து ஒரு பெண் எட்டிப் பார்த்தாள்.
“ரெண்டு கப்புல கேசரி எடுத்திட்டு வாம்மா…” என்றதும் அந்தப் பெண் அழகான கண்ணாடி பவுலில் கேசரியுடன் வந்தாள். புதிய பெண்ணாய் இருக்க வேண்டும்… இந்துவைப் பரிச்சயமில்லாத பார்வை பார்த்துச் சென்றாள்.
“அதென்ன ரெண்டு கப்… எனக்கில்லையா…” குழந்தையாய் கேட்ட ஆகாஷின் தந்தை மனைவியின் கப்பைப் பிடுங்கிக் கொண்டார்.
“என்னங்க, ஆல்ரெடி உங்களுக்குப் பிரஷர் அதிகம்… இனி சுகரும் கூடிடப் போகுது… அப்புறம் உடம்புக்கு முடியலைனா நீங்க தான் ரொம்ப சிரமப்படுவீங்க…” மனைவியின் புலம்பலைக் கண்டு கொள்ளாமல் வேகமாய் இரண்டு முழு ஸ்பூன் கேசரியை எடுத்து வாயில் போட்டு விழுங்கியவரைக் கண்டு இந்துவுக்கு சிரிப்பாய் வந்தது.
“என்ன மாமா, இது… குழந்தை போல பண்ணிட்டு இருக்கீங்க… பாவம் அத்தை, உங்களுக்காம ரொம்ப வருத்தப் படறாங்க பாருங்க…” கேட்டுக் கொண்டே அவளும் சிறிது எடுத்து சுவைக்கத் தொடங்கினாள்.
“இருக்கறவரைக்கும் நல்லா சாப்பிட்டு சந்தோஷமா இருந்திட்டுப் போகணும்மா… சும்மா, அதை சாப்பிடாத, இதை சாப்பிடாதன்னு இருக்கற நாளையும் நரகமா வாழ்ந்து தீர்க்கணுமா… எல்லாம் அனுபவிக்க வேண்டிய பிள்ளையே சட்டுன்னு போயிட்டான்… நானெல்லாம் எம்மாத்திரம்…” தன்னை மீறி வார்த்தை விட்டவர் இரு பெண்களின் முகமும் வாடியதைக் கண்டு தலையில் தட்டிக் கொண்டார்.
“நான் ஒரு லூசு… சரி அதை விடு… ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு தான் உன் அத்தை உன்னை வர சொன்னா…” என்றவர், “அடுத்த மாசம் எனக்கு அறுபது வயசு ஆகுது மா… அறுபதாம் கல்யாணத்தை நல்லா விசேஷமா கொண்டாடனும்னு உன் அத்தைக்கு ஆசை…”
“ஓ… சூப்பர் மாமா, நல்ல விஷயம் தானே… இப்படி எல்லாருக்கும் பாக்கியம் அமையறதில்லை… கண்டிப்பா கொண்டாடலாம்…” என்றாள் இந்து உண்மையான சந்தோஷத்துடன்.
“ஆனா, அதுல எனக்கு விருப்பம் இல்ல மா…” என்றவரை அவள் கேள்வியுடன் நோக்க, “வாழ வேண்டிய வயசுல நீ துணையில்லாம தனியா நிக்கும்போது வாழ்ந்து முடிச்ச எங்களுக்கு என்ன அறுபதாம் கல்யாணம் வேண்டிக் கிடக்குது…” வேதனையுடன் வார்த்தைகள் வெளிப்பட்டது.
“அது என் விதி மாமா, அதுக்காக நீங்க ஏன் இதை கொண்டாடாம இருக்கணும்…”
“அப்படிப் பண்ணினா என் மகனோட ஆத்மாவே என்னை மன்னிக்காது மா…” சொன்னவரின் கண்கள் கலங்கியிருக்க, ஆகாஷின் அன்னையும் மூக்கை உறிஞ்சி கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
“ஆமாம் இந்து மா… இவருக்கு உன் வாழ்க்கைய இப்படியே விட்டுட்டோமேன்னு மனசுல பெரிய குறை… தினமும் இதைப் பத்தி தான் பேசிட்டு இருக்கார்… உன் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்ப கூட இதைத்தான் சொன்னார்… பெத்தவருக்கு எத்தனை வேதனையா இருக்கும்னு…”
“அத்த… என் வாழ்க்கைல இப்படிலாம் நடக்கனும்னு விதி இருக்கும்போது யாரைக் குத்தம் சொல்லி என்ன…”
“அன்னைக்கு நடந்தது விதியா இருந்தாலும் இப்பவும் நீ கல்யாணமே வேண்டாம்னு சொல்லறது எப்படி மா விதியில சேரும்…” என்றார் அவர்.
அவள் அமைதியாய் இருக்க தொடர்ந்தார்.
“கொஞ்ச நாள் பழகின ஆகாஷை மனசுல நினைச்சுட்டு வாழ்க்கை முழுசும் தனியா இருக்க நீ நினைக்கலாம்… ஆனா, பெத்தவங்க மனசை கஷ்டப்படுத்தக் கூடாதுல்ல… இறந்தவனை நினைச்சுட்டு இருக்கவங்களையும் இல்லாமப் பண்ணிடக் கூடாது… அவங்க சந்தோஷத்தையும் நினைக்கணும்… ஏன் ஆகாஷோட சந்தோஷம் கூட அதானே.. உன்னை இப்படி விட்டுட்டுப் போனதில் அவன் ஆத்மாவும் அமைதி கொள்ளாம சுத்திட்டு தான் இருக்கும்… அந்த ஆத்மாக்கு சாந்தி கிடைக்கனும்னா நீ வேற ஒரு நல்ல வாழ்க்கைக்கு சம்மதிச்சு தான் ஆகணும்…”
“அத்த… என்னோட அதிர்ஷ்டம் தான் ஆகாஷை…” அவள் முடிக்குமுன்னே குறுக்கிட்டவர், “அப்படிலாம் எதும் இல்ல மா… நீ தப்பா புரிஞ்சிருக்க, நீ சந்தோஷமா வாழணும், உன் வயித்துல குழந்தையா அவன் வந்து பிறக்கணும்… இதை எங்க ஆசையா நினைச்சு நிறைவேத்திக் கொடும்மா…” சொல்லி முடிக்கும் போதே அழத் தொடங்கியவர் கெஞ்சலாய் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
பதில் சொல்ல முடியாமல் அவளுக்கும் அழுகை வந்தது.
“இந்துமா, எங்க பொண்ணு வாழ்க்கைல இப்படி ஒரு துயரம் நடந்திருந்தா நாங்க அப்படியே விட்டிருவோமா… அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கறதும் எங்க கடமை தானே… நீ சம்மதிக்கணும் மா… எங்க மகன் சந்தோஷமா வாழறதைத் தான் பார்க்க முடியல… நீ சந்தோஷமா இருக்கறதையாச்சும் கொஞ்ச காலம் பார்த்திட்டு எங்க பேரப் பிள்ளைகளைக் கொஞ்சிட்டு நிம்மதியா போயி சேரனும் மா… தயவு செய்து மறுப்பு மட்டும் சொல்லிடாத…” கண்ணீருடன் வேண்டினார்.
தனது அன்னையின் கேள்விக்கு முடியாது என்று அழுத்தமாய் மறுத்தவளுக்கு இந்த அன்னையின் கண்ணீருக்கு மௌனத்தை தான் பதிலாய் கொடுக்க முடிந்தது. அவளது கண்களிலும் கண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்க ஆகாஷின் தந்தை கூறினார்.
“நீ எங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுப்ப தானே இந்து மா… இதுக்கு சம்மதிப்ப தானே…” அவரது கலங்கிய குரல் ஆகாஷே கேட்பது போல் தோன்ற, “சரி மாமா… எனக்காக இல்லேன்னாலும் உங்க எல்லாரோட சந்தோஷத்துக்கு வேண்டி நான் சம்மதிக்கறேன்…” என்றாள் அழுகையுடன்.
அதைக் கேட்டதும் டீபாய் மீது மீதமிருந்த கேசரியை எடுத்த ஆகாஷின் அன்னை, “இந்தாங்க, இப்ப ஸ்வீட் சாப்பிடுங்க… நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா…” என்று கணவரின் வாயில் ஊட்டிவிட்டு அவளுக்கும் கொடுக்க வர கண்ணீருடன் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டாள் இந்து. “இந்துமா, இப்பதான் எங்களுக்கு நிம்மதியாருக்கு… இனி நீ அழக்கூடாது…” என்றவர் கண்களைத் துடைத்து விட்டார்.
“என்னங்க, இனி நம்ம அறுபதாம் கல்யாணத்தை நடத்துறதுல உங்களுக்கு சம்மதம் தானே…”
“டபுள் ஓகேம்மா… அதுக்கு முன்னாடி நம்ம பொண்ணு கல்யாணத்தையும் முடிச்சிருவோம்… தம்பதியரா நம்ம கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கட்டும்…” என்றார் சந்தோஷத்துடன்.
இந்து அமைதியாய் இருக்க, “இந்துமா, உன் சம்மதம் கேட்காமலே நாங்க ஒருத்தருக்கு வாக்கு கொடுத்திட்டோம்… உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே…” என்றதும் அவசரமாய் பவி, வெற்றியின் முகம் மனக்கண்ணில் வந்து போக, என்ன சொல்வதென்று புரியாமல் அதிர்ச்சியுடன் நோக்கினாள் இந்து.
“பயப்படாத மா… உனக்குத் தெரிஞ்சவங்க தான்…” என்றவர், “தம்பி, இனி நீங்க வெளிய வரலாம்…” என்றதும் பக்கத்தில் இருந்த ரூமிலிருந்து வெளியே வந்த வெற்றி அவளைப் பார்த்து புருவத்தை தூக்கி அழகாய் சிரிக்க அவள் முறைப்புடன் திரும்பிக் கொண்டாள்.
“ஓ… எல்லாம் உன் வேலை தானா…” பிளான் போட்டு இவங்களைக் காக்கா பிடிச்சு காரியத்தை சாதிச்சுட்டியா… மவனே… இருடா… வச்சுக்கறேன்…” அவள் மனதுக்குள் ஓடிய மைன்ட் வாய்சை வெற்றியால் புரிந்து கொள்ள முடிய அவன் வெற்றிப் புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னம்மா, உனக்கு சந்தோஷமா… பவிக்குட்டிக்கு அம்மாவா, வெற்றிக்கு மனைவியா இருக்க உனக்கு சம்மதம் தானே…” என்றார் ஆகாஷின் தந்தை.
“ம்ம்…” தலையாட்டியவள் மேலே எதுவும் பேசவில்லை.
“ஒரு நிமிஷம் உக்காருங்க தம்பி… ஏங்க வாங்க…” அவர்கள் செல்ல, குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த இந்துவை வைத்த கண் எடுக்காமல் வெற்றி சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு கடுப்பாய் வந்தது. ஆகாஷின் பெற்றோர் சில நிமிடங்களில் திரும்பி வர அன்னையின் கையில் பெரிய கவர் இருந்தது.
அடுக்களைக்கு சென்று பெரிய தாம்பாளம் ஒன்றை எடுத்து வந்தவர், “தம்பி, இன்னைல இருந்து நீங்களும் எங்களுக்குப் பிள்ளை தான்… இதெல்லாம் ஆகாஷ் ஆசையா இந்துவுக்கு வாங்கி வச்சது… நீங்களே இவளுக்குக் கொடுங்க…” என்றவர் அதில் பட்டு சேலையை வைத்து அதன் மீது நகைப் பெட்டிகளை அடுக்கி அவனிடம் நீட்டினார்.
“ரெண்டு பேரும் இப்படி வாங்க…” என்றவர், ஆகாஷின் போட்டோ அருகே இருவரையும் நிற்க வைத்து, “ம்ம்… இந்தாங்க தம்பி, இந்துக்கு கொடுங்க…” என்று சொல்ல, ஆகாஷ் அவர்களை வாழ்த்தி சிரித்துக் கொண்டிருக்க அவள் கையில் தட்டைக் கொடுத்தான் வெற்றி.
இன்னார்க்கு
இன்னாரென்று
சில நேரம்
விதி மட்டுமல்ல…
மனித மதிகளும்
தீர்மானிக்கிறது…

Advertisement