Advertisement

அத்தியாயம் – 23
ஞாயிற்றுக் கிழமை…
காலை நேரத்திலேயே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருக்க துணிகளை வாஷிங் மெஷினில் போடலாமா, வேண்டாமா… என்று யோசித்தாள் இந்து.
“என்னக்கா, வானத்தைப் பார்த்து மழை வருமா, வராதான்னு ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கியா…” கேட்டுக் கொண்டே கையில் இருந்த நிலக் கடலையை வாய்க்கு பவுலிங் செய்து கொண்டு அருகே வந்து நின்றாள் சிந்து.
“அழுக்குத் துணி இருக்கு… மெசின்ல போடலாம்னு பார்த்தா இப்படி இருட்டிட்டு இருக்கு… அதான் யோசிச்சேன்…”
“ம்ம்… டெய்லி தான் வேலை செய்யறயே… இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான…”
“நீயும் எந்நேரமும் தின்னுட்டு தான இருக்க… வாய்க்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாமே…” இந்து கிண்டலாய் கேட்கவும், “வளர்ற புள்ள மேல கண்ணு போடாதக்கா…” சிணுங்கினாள் சிந்து.
அப்போது மாடியிலிருந்து, “ம்மா…” என்று பவியின் குரல் கேட்க, நிமிர்ந்தவள் மாடியில் குழந்தையைக் கண்டதும் கை ஆட்டினாள். 
“மழை வரும் போலருக்கு… உள்ள போ…” என்று செய்கையில் சொல்ல பவிக்கு புரியாமல் இரண்டு கைகளையும் விரித்து தலையை ஆட்டி, “என்னம்மா, சொல்லற… புரியல…” என்றது. 
அதற்குள் வெற்றியின் தலை தெரியவே சட்டென்று இந்து உள்ளே செல்ல, “அட… மாம்சைப் பார்த்ததும் இந்தக்கா இப்படி ஓடறா…” என்று நினைத்துக் கொண்டே அவளும் பின்னில் சென்றாள். அன்னையின் மூலம் வீட்டில் வெற்றி பேசியதை அவளும் அறிந்திருந்தாள்.
“ஏன்க்கா சட்டுன்னு உள்ள வந்துட்ட…”
“அந்தாளு வந்தார்ல, அதான் வந்துட்டேன்…”
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்த சிந்து, “அக்கா, நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே…”
“தப்புன்னு தோணினா கேக்க வேண்டாம்…”
“ப்ச்… என்னக்கா, நீ எதிரியா இருந்தாலும் மரியாதை இல்லாம பேச மாட்டியே… இதென்ன, பவி அப்பாவை அந்தாளு இந்தாளுன்னு பேசற…” சிந்து கேட்கவும் திகைத்தவள், “அ..அது வந்து, எனக்கு அவரைக் கண்டாலே ஆத்திரமா வருது… அதான் அப்படிப் பேசிட்டேன்…” என்றாள்.
“ஓ…” என்று தலையாட்டிய சிந்து, “அவர் அப்படி என்னக்கா தப்பா கேட்டுட்டார்… நீ ஏன் இப்படி கோபப்படற… கொஞ்சம் அவரோட நிலைல இருந்து யோசிச்சுப் பார்க்கலாம்ல…”
“சிந்து, நீ சின்ன பொண்ணு… இதெல்லாம் யோசிக்காத…”
“நான் கேட்டதுல என்னக்கா தப்பு… பாவம் பவி, உன் மேல அம்மான்னு உசுரா இருக்கா… அவருக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு… கல்யாணம் பண்ணிக்கலாமான்னு நியாயமா தானே கேட்டார்…” சிந்து கேட்கவும் அமைதியாய் இருந்தாள்.
“பதில் சொல்லுக்கா, ஏன் வேண்டாம்னு சொல்லற…”
“அந்தக் குழந்தைக்கு இந்த அப்பாவாவது இருக்கட்டும்னு தான்…” என்றாள் வேதனையுடன்.
“அக்கா, என்னக்கா இப்படி சொல்லற…”
“ஏன்னு தெரியாதா… இப்படிதான் ஒருத்தன் என் மேல உசுரையே வச்சிட்டு வீட்டுல போராட்டம் பண்ணி சம்மதிக்க வச்சு ஆசை ஆசையா கல்யாணம் பண்ணிகிட்டான்… என்னாச்சு… அப்படியே வாழ்ந்துட்டோமா… என்னோட ராசி அவன் உசுரையே அடிச்சிருச்சே… அப்பா, அம்மா இல்லாத இந்தக் குழந்தைக்கு இவராச்சும் இருக்கனும்ல…”
சொல்லும்போதே குரல் இடற அடுக்களைக்கு சென்று விட்டாள் இந்து. சிந்து வேதனையுடன் நோக்கி நிற்க அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த பரமசிவத்தின் கண்களும் கலங்கியது.
மதிய உணவு முடிந்து அனைவரும் ஓய்வாய் அமர்ந்திருக்க இந்துவின் அலைபேசி சிணுங்கியது. அதில் ஒளிர்ந்த பெயரைக் கண்டதும் சட்டென்று அட்டென்ஷன்க்கு வந்த இந்து பவ்யமாய் எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
“ஹ..ஹலோ அத்த…”
“இந்துமா, எப்படிடா இருக்க… வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா… அப்பாக்கு இப்ப எப்படி இருக்கு… பரவால்லியா…” நலம் விசாரித்தது ஆகாஷின் அன்னை.
“ம்ம்… நல்லாருக்கோம் அத்த… அப்பா ரெஸ்ட்ல தான் இருக்கார்… நீங்க, மாமா நல்லாருக்கீங்களா…”
“ம்ம்… இருக்கோம் டா… உன் மாமாக்குதான் பிரஷர் அதிகமாகி அப்பப்போ தலை சுத்துதுன்னு சொல்லறார்…”
“ஓ… டாக்டரைப் பார்த்திங்களா அத்த…”
“ம்ம்… அதெல்லாம் பார்த்தாச்சு மா… ஆனா அவர் தான் ஒழுங்கா மாத்திரை போட மாட்டேங்கறார்… கேட்டா தலை சுத்தினா வசதி தான… திரும்பாமலே பார்த்துக்கலாம்னு கிண்டல் வேற…” என்றார் வருத்தத்துடன்.
“என்ன அத்தை, மாமாக்கு எதுல விளையாடறதுன்னு இல்லியா… இதுல கூடவா விளையாட்டு…” அவள் கடிந்து கொள்ள,
“ம்ம்… அதென்னமோ மாத்திரை போடற விஷயத்துல அப்பாவும், மகனும் ஒரே போல இருக்காங்க…” என்றவர் சட்டென்று மகனின் நினைவில் மௌனமாகிவிட இந்துவின் மனதிலும் அவன் முகம் குழந்தைத்தனமாய் சிரிக்க அவளும் அமைதியாய் இருந்தாள்.
“சாரி மா, ஏதோ ஞாபகத்துல பேசிட்டேன்… உன் மாமாக்கு உன்னைப் பார்க்கணுமாம், வீட்டுக்கு வர்றியா…” என்றார்.
“பரவால்ல அத்த, நான் ப்ரீயா தான் இருக்கேன்… இப்பவே வர்றேன்…” என்றாள் இந்துஜா.
“சரிமா, வச்சிடறேன்…” என்றவர் அழைப்பைத் துண்டித்துவிட பெற்றோரிடம் சொல்லிவிட்டு இந்து கிளம்பினாள்.
“சிந்துவை வேணும்னா துணைக்கு அழைச்சிட்டுப் போடி…” அகிலா சொல்ல, “ப்ச்… வேண்டாம் மா… நான் தனியாவே போயிட்டு வந்திடறேன்…” என்றவள் கிளம்பினாள். காலையில் மிரட்டத் தொடங்கிய வானம் இப்போதுவரை பெய்தபாடில்லை… வானம் தெளிவதும் மூடிக் கட்டுவதுமாய் மேகம் விளையாடிக் கொண்டிருந்தது. 
சிறிது நேர காத்திருப்பில் அவளுக்கான பேருந்து வந்தது. அதிக கூட்டமில்லாமல் இருக்க ஜன்னலோர இருக்கையே கிடைக்க அமர்ந்து கொண்டாள்.
காட்சிகளைப் பின்னுக்கு தள்ளி பேருந்து முன்னுக்கு செல்ல வெளியே பார்வையைப் பதித்திருந்தாலும் காட்சிகள் எதுவும் அவள் மனதில் பதியவில்லை. எங்கோ செல்லும் சின்ன மேகம் ஒன்று தீர்த்தம் போல் நீரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெளித்து சென்றது.
அரை மணி நேரப் பயணத்தில் இறங்க வேண்டிய நிறுத்தம் வரவே இறங்கிக் கொண்டவள் அங்கிருந்த ஆட்டோ ஒன்றை அழைத்துக் கொண்டாள். ஆகாஷின் வீட்டுக்கு அந்த ஸ்டாப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்… எல்லாம் பெரிய வீடுகளாய் இருந்ததால் அனைவர் வீட்டிலும், கார் பைக் என்று வைத்திருந்தனர்.
ஆட்டோவில் அமர்ந்தவள் கையிலிருந்த குட்டி பாகைத் திறந்து பணத்தை எடுத்து வைத்துக் கொண்டாள். அதில் குடையைக் காணாமல் திகைத்தாள், “அச்சோ, குடையை எடுத்தேனே… பாகில் வைக்கலையா…” என்று கவலையுடன் யோசிக்க மேசை மீது வைத்து விட்டு மொபைலை எடுக்க சென்றவள் அப்படியே கிளம்பியது நினைவுக்கு வந்தது.
“ச்ச்சே… குடையையும் மறந்தாச்சு… ஒழுங்கா வண்டி ஓட்டிப் பழகி, லைசன்ஸ் வாங்கிருந்தா அதுல வந்திருக்கலாம்… அதுக்கும் பயம்… சிந்து கூட பழகிட்டா… நான் ஏன்தான் இப்படி இருக்கனோ…” என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் வெளியே கவனித்தாள்.
ஒவ்வொரு வீடாய் கடந்து ஆகாஷின் வீடு நெருங்க நெருங்க மனதில் ஒரு கலக்கத்தை உணர்ந்தாள். ஆகாஷின் மறைவுக்குப் பின் நான்கைந்து முறை மட்டுமே இங்கே வந்திருக்கிறாள். ஒவ்வொரு முறை வரும்போதும் அந்த உணர்வு மட்டும் மாறவே இல்லை.
கல்யாணம் முடிந்து அழகாய் அலங்கரிப்பட்ட காரில் அவன் அருகே அமர்ந்து நாணமும், எதிர்பார்ப்பும் போட்டி போட மனதில் பல கனவுகளுடன் கடந்து சென்ற பாதைகள் இப்போது கரடு முரடாய் வலித்தது.
ஒரு நெடிய மூச்சை வெளியேற்றியவள் ஆகாஷின் வீடு வந்ததும் ஆட்டோவை நிறுத்தி இறங்கினாள்.
வீட்டை ஏறிட்டவளுக்கு அதுவும் இப்போது களை இழந்து தன்னைப் போலவே பரிதவிப்பாய் நிற்பது போலத் தோன்றியது. கேட்டருகே இருந்த வாட்ச்மேன் இவளைக் கண்டதும் வேகமாய் ஓடி வந்தார்.
“சின்னம்மா, நல்லாருக்கீங்களா… வாங்க…” என்று கேட்டைத் திறந்து நலம் விசாரிக்க, “நல்லாருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க…” அவளும் பதிலுக்கு விசாரித்தாள்.
“கடவுள் புண்ணியத்துல நல்லாருக்கேன் மா… அம்மாவும், ஐயாவும் உள்ள தான் இருக்காங்க போங்க…”
“ம்ம்…” என்றவளின் பார்வை தோட்டத்துக்கு செல்ல இவளுக்குப் பிடிக்குமென்று ஆகாஷ் ஆவலுடன் வாங்கி வைத்திருந்த பூச்செடிகள் இப்போது நன்றாய் வளர்ந்து அவளைப் பார்த்து தலையாட்டிக் கொண்டிருந்தது. அவற்றைக் கடந்து வீட்டுக்கு செல்ல ஹாலில் அமர்ந்து ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்த ஆகாஷின் அன்னை இவளைக் கண்டதும் சந்தோஷமாய் வரவேற்றார்.
ஹாலில் ஷோ கேஸ் கண்ணாடிக்குள் சிரித்துக் கொண்டிருந்த ஆகாஷைக் கண்டதும் அவள் இதயம் நின்று துடிக்க மனதை சமன்படுத்தி அவரிடம் திரும்பினாள்.
முன்பை விடத் தளர்ந்திருந்தார். வயோதிகத்தின் நரையோ, மனதிலுள்ள குறையோ அழகான அந்த அன்னை உடல் மெலிந்து சட்டென்று வயதான போலத் தோற்றமளித்தார்.

Advertisement