Advertisement

அத்தியாயம் – 22
“பவித்ரா, என் தம்பியோட குழந்தை…” வெற்றி சொன்னதைக் கேட்டு பரமசிவம் அதிர்ச்சியுடன் நோக்க மற்றவர்கள் மனமும் அதிர்ந்தது.
“என்ன தம்பி சொல்லறிங்க…”
“ஆமாம் அங்கிள்… அவளோட அம்மாவை என் தம்பியே கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிட்டான்…” சொன்னவனை மேலும் அதிர்ச்சியுடன் பார்த்தார் பரமசிவம்.
காபியுடன் அகிலா வரவும், “குடிச்சிட்டு சொல்லுங்க தம்பி…” என்றார். காபியை எடுத்துக் கொண்டவன் கண்களில் பழைய நினைவுகள் நிழலாட முகம் சிவக்கத் தொடங்கியது.
அவன் குடித்து முடிக்கும் வரை பொறுமையுடன் பரமசிவம் காத்திருக்க கதவருகே நின்று கேட்டுக் கொண்டிருந்த இந்துவின் இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது.
“அப்பா, ஸ்தானத்துல இருந்து அவளை நல்லபடியா பார்த்துக்க முடிஞ்ச என்னால அம்மா பாசத்தை மட்டும் கொடுக்க முடியலை… அவ மனசுல இவ்வளவு ஏக்கம் இருக்குங்கறதை நான் இங்கே வந்த பிறகு தான் புரிஞ்சுகிட்டேன்…” என்றவனின் கண்கள் கலங்கியிருந்தது.
“சக்திவேலும் நானும் ஒண்ணாப் பிறந்த இரட்டைங்க… அப்பா இறந்த பிறகு அம்மாதான் எங்களுக்கு எல்லாம்… பணத்துக்கு குறைவில்லை… அம்மாவோட அன்புக்கும் குறைவில்லை… ரொம்ப சந்தோஷமாப் போயிட்டிருந்த எங்க வாழ்க்கைல அபர்ணாங்கற பிசாசு சக்தியோட காதல் மனைவியா நுழைஞ்சா… அதோட எங்க வாழ்க்கையே மாறிடுச்சு…” என்றவன் சுருக்கமாய் நடந்ததை சொல்லத் தொடங்கினான்.
அவன் சொல்வதை கனத்த மனதுடன் மூவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“சக்தி, ரொம்ப ஜாலியான டைப்… எங்க வீட்டுக்கு செல்லப் பிள்ளை… நாங்க ரெட்டையா இருந்தாலும் விளையாட்டுத் தனமா இருந்த அவனை நான் கவனமாப் பார்த்துக்குவேன்… எல்லா அம்மாக்களைப் போல எங்க அம்மாவுக்கும் பிள்ளைங்களோட வாழ்க்கை நல்லா அமையணும்னு ஆசை இருந்துச்சு… சக்தி அந்தப் பொண்ணை லவ் பண்ணறேன்னு சொன்னப்ப எனக்கு விருப்பம் இல்லேன்னாலும் அவனோட சந்தோஷத்துக்காக சம்மதிச்சோம்… ஆனா அவ… இவனை விட பெட்டரா பணத்தோட இன்னொருத்தன் வந்ததும் பிறந்த குழந்தையைக் கூடத் தூக்கிப் போட்டுட்டு அவனோட போயிட்டா… தப்பான பொண்டாட்டியைக் கொன்னுட்டு என் சக்தி ஜெயிலுக்கு போயிட்டான்… செல்ல மகனோட வாழ்க்கை இப்படி ஆயிருச்சேன்னு என் அம்மா ரொம்ப தளர்ந்து போயிட்டாங்க… ஆனாலும் அவன் குழந்தையைக் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துகிட்டாங்க… அம்மா நடத்தை கெட்டவ, அப்பா கொலைகாரன்னு ஊரு ஏசுச்சு… கிண்டலாப் பார்த்துச்சு… அதைத் தாங்கிக்க முடியாம அவங்களும் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க… பவி வளரும்போது அங்க இருந்தா அவளையும் வருத்தப்பட வைப்பாங்கன்னு தான் நான் இந்த ஏரியாவுக்கு குடி வந்தேன்…”
“ஓ… உங்க வாழ்க்கைல இவ்ளோ வேதனை இருக்கும்னு நாங்க நினைக்கல தம்பி… கல்யாணமாகி மனைவியை விட்டு தனியா குழந்தையோட இருக்கிங்க… இல்லேன்னா டைவர்ஸ் வாங்கி இருப்பீங்கன்னு நினைச்சோம்… கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்றார் பரமசிவம்.
அகிலாவின் மனதிலும் வருத்தம் இருக்க அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இந்துவின் மனம் துடித்துக் கொண்டிருந்தது.
“கடவுளே… இப்படி ஒரு குழந்தையை நான் என்னவெல்லாம் பேசி விட்டேன்… அந்த பிஞ்சு மனது எத்தனை பாடுபடும்…” தலைவலி மேலும் அதிகமாகத் தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்து கொண்டாள்.
“என் தம்பியோட வாழ்க்கை இப்படி ஆனதுக்குப் பிறகு கல்யாணத்துல எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை அங்கிள்… பவியை நல்லபடியா வளர்க்கணும்னு மட்டும் தான் ஆசை இருந்துச்சு… ஆனா, எனக்கு ஒரு மனைவி வேண்டாம்னாலும் அவளுக்கு ஒரு அம்மா அவசியம்னு யோசிக்கத் தவறிட்டேன்… அதுதான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்…” என்றவன், “அங்கிள், ஒரு நிமிஷம் இந்துவை வர சொன்னா இந்த சம்பவம் எப்படி நடந்துச்சுன்னு சொல்லிடுவேன்…” என்றான் தயக்கத்துடன்.
பரமசிவம் அர்த்தமாய் மனைவியைப் பார்க்க அவர் இந்துவின் அறைக்கதவைத் தட்டினார். கண்களில் திரண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவள் வெற்றியை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தபடி இருக்க சோர்வுடன் நின்றவளைக் கண்டு அவன் மனமும் வருந்தியது.
“சாரி இந்து… இப்படிலாம் நடக்கும்னு நான் நினைக்கலை… எங்களால உங்களுக்கு ரொம்ப வருத்தம்… ஒரு நிமிஷம் என்ன நடந்துச்சுன்னு மட்டும் நான் சொல்லிடறேன்…”
அவள் எதுவும் மறுக்காமல் மௌனமாய் நின்றதையே சம்மதமாய் எடுத்துக் கொண்டவன் அதையும் சொன்னான்.
“போட்டோ விஷயம் எதுவும் முதல்ல எனக்குத் தெரியாது… பவி உங்களை எப்படி அம்மான்னு நினைக்க ஆரம்பிச்சானு தெரியுமா…” என்றவன் பவி அம்மா வேண்டுமென்று அழுதபோது ருக்மணியம்மா இவனது அலமாரியில் பார்க்க சொல்ல, அங்கே அப்ளிகேஷனில் இருந்த இந்துவின் போட்டோவை எடுத்து வைத்துக் கொண்டதை சொன்னான்.
“எனக்கு அவ அம்மாவைப் பிடிக்காது, அதனால அம்மா போட்டோவைக் காட்டவோ அதைப் பத்தி பேசவோ கூடாதுன்னு அவங்க சொல்லிருப்பாங்க போலருக்கு… பவி அதை நினைச்சிட்டு எங்கிட்ட எதையும் சொல்லவும் இல்லை… இந்த விஷயமே எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் சொன்னா… அம்மான்னு உங்களைக் கூப்பிடக் கூடாதுன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறா… அதான் அடுத்த வாரம் அவளை ஒரு மனநல மருத்துவர் கிட்ட கன்சல்டிங் கூட்டிப் போகலாம்னு அப்பாயின்ட்மென்ட் வாங்கிருக்கேன்…” அவன் சொன்னதும் ஜிவ்வென்று ஏதோ தலைக்கேற கோபத்துடன் நிமிர்ந்தாள் இந்து.
“என்னது, குழந்தையை டாக்டர் கிட்ட கூட்டிப் போறீங்களா…”
“ம்ம்… இந்த போட்டோ பிரச்சனை தெரிஞ்சதும் எனக்கு இந்த எண்ணம் தான் வந்துச்சு… ஆனா, இப்ப வேற ஒண்ணு தோணுது…” என்றவன் அழுத்தமாய் அவளை நோக்கினான்.
“இருந்தாலும் சின்னக் குழந்தை… புரியாம மனசுல பதிய வச்சிருக்கா… அதுக்காக டாக்டர் எல்லாம் தப்பில்லையா…” என்றார் அகிலாண்டேஸ்வரி.
“ம்ம்… ஆமாம் மா, அதான் இதுக்கு வேற ஒரு தீர்வோட வந்திருக்கேன்…” என்றான் வெற்றி.
“இந்து பார்க்கக் கூடாது, பேசக் கூடாதுன்னு சொன்னதுக்கே அழுதழுது குழந்தைக்கு காய்ச்சல் வந்திருச்சு… அவளுக்கு சொல்லி எல்லாம் புரிய வைக்க முடியாது… அதுக்கு பேசாம அவ ஆசைப்படி இந்துவே அம்மாவா வந்துட்டா இந்தப் பிரச்சனையும் முடிஞ்சிரும்ல… எனக்கு மனைவியா, பவிக்கு அம்மாவா உங்க மகளை அனுப்ப சம்மதமா…” என்றான்.
அதைக் கேட்டதும் அகிலா வியப்புடன் கணவனை நோக்க அவரது முகம் தெளிவாய் இருந்தது. ஆனால் அதிர்ச்சியோடு நோக்கிய இந்துவின் முகம் இறுகியது.
“சார், என்ன பேசறீங்க… நீங்க சொன்னதைக் கேட்டு எனக்கும் வருத்தமா தான் இருக்கு… பவியோட வாழ்க்கைல இப்படி எல்லாம் நடந்திருக்க கூடாதுதான்… அம்மா இல்லாத குழந்தையை நான் அப்படிப் பேசினதுக்கு ரொம்ப வேதனைப்படறேன்… அந்த போட்டோ விஷயம் கூட தப்பான ஒரு புரிதல்ல பேசிட்டேன்… அதுக்கும் சாரி… ஆனா, உங்க பொண்ணுக்கு அம்மா வேணும்னா நீங்க வேற ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க… என்னை ஏன் இதுல இழுக்கறீங்க…” என்றாள் கோபத்தை அடக்கி.
“எனக்கு மனைவியா யார் வேணும்னாலும் வரலாம்… ஆனா, பவிக்கு அம்மாவா உன்னால மட்டும் தான் முடியும்… யாரோ ஒரு குழந்தையா இருந்தாலும் அம்மான்னு அழைக்க சம்மதிச்ச உன் மனசு மத்தவங்களுக்கு வருமா… வேற யாரா இருந்தாலும் அவளை உண்மையான புரிதலோட நேசிக்க முடியாது இந்துமா…” என்றான் வெற்றி.
அவனது தன்மையான பேச்சும், இந்துமா என்ற அழைப்பும் மண்டைக்குள் ஏற ஆகாஷின் நினைவு வந்தது. சட்டென்று கண்களில் கண்ணீர் அரும்ப, “சாரி, என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது…” என்றவள் வேகமாய் அவளது அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.
அதுவரை அமைதியாய் அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பரமசிவம், “தம்பி, அவளோட மனநிலை உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன்… அவளைப் பத்தி எல்லாமும் உங்களுக்குத் தெரியும்… அப்படி இருந்தும் அவளைக் கல்யாணம் செய்யணும்னு நினைக்கறிங்களா…”
“ம்ம்… ஆமாம் சார், இது இந்து மேல உள்ள பரிதாபத்திலோ, பவிக்கு அம்மா வேணும்கிறதுக்காகவோ எடுத்த முடிவில்ல… எனக்கு இந்துவைப் பிடிச்சிருக்கு… அவ எங்க வாழ்க்கைல வந்தா சந்தோஷமா இருக்கும்னு நம்பறேன்…”
அழுத்தமாய் சொன்னவனைத் திகைப்புடன் பார்த்த அகிலா கணவரை நோக்க, “அவருக்கு எல்லாம் தெரியும் மா…” என்றார் பரமசிவம்.
“இனி நீங்க தான் முடிவு பண்ணனும் அங்கிள்…” என்றவன், “ஒரே ஒரு விஷயம் மட்டும் இந்துகிட்ட சொல்லிக்கறேன்…” என்றவன் கதவருகே நின்று, “இந்து, அம்மா வந்தா தான் சாப்பிடுவேன், மருந்து குடிப்பேன்னு குழந்தை அடம் பிடிச்சிட்டு இருக்கா… எனக்காக இல்லேன்னாலும் அவளுக்காக ஒரே ஒரு முறை வீட்ல வந்து பார்த்து பேசிடு…” என்றவன், “வரேன் அங்கிள், வர்றேன் ம்மா…” என்று வீட்டுக்கு கிளம்பி விட்டான்.
அகிலாவை அழைப்பதற்காய் வந்த ஜோதி, அவன் இறுதியாய் சொன்னதைக் கேட்டு திகைத்து, “ஓ… அப்படிப் போகுதா விஷயம்… சும்மாவா அந்தப் புள்ள அம்மா, லொம்மான்னு கூப்பிட்டு கிடக்கு… நெருப்பில்லாமப் புகையுமா…” என்று யோசித்துக் கொண்டு அவனையே பார்த்தபடி நிற்க அவளை அகிலா கவனித்து விட்டார்.
“ஜோதி, இங்க என்ன பண்ணுற…” அதட்டலாய் கேட்டார்.
“அது வந்து மா… சங்கவிக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்லுச்சு… அதான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்… ஆமாம், அந்த தம்பி என்ன சொல்லிட்டுப் போகுது…” என்று கேட்க,
“அதெல்லாம் உனக்கெதுக்கு… நீ போ, நான் வரேன்…” என்றவர் அவளை அனுப்பிவிட்டு கணவனிடம் வந்தார்.
“என்னங்க, அந்தத் தம்பி இப்படி சொல்லிட்டுப் போகுது… நீங்க என்ன நினைக்கறிங்க…” என்றார்.
“ம்ம்… அவர் சொன்ன மாதிரி நடந்தா நல்லாத்தான் இருக்கும்னு நினைக்கறேன்…” என்றவர் எழுந்து தனது அறைக்கு செல்ல அகிலாவுக்கும் அதே யோசனையாய் இருந்தாலும், சங்கவியைப் பற்றி யோசித்தவர் அவளைப் பார்க்க சென்றார். ஜோதியின் கேள்விக்கு அவர் சரியான பதிலை சொல்லாததால் அவளே தனக்குத் தோன்றிய பதிலை நிரப்பிக் கொண்டிருந்தாள்.
“பவி ஏன் இன்னைக்கு வரல ஆன்ட்டி… அவளுக்கு காய்ச்சலா…” மாலையில் வருண் அகிலாவிடம் வந்து கேட்க அவர் திகைத்தார்.
“இவனுக்கு எப்படி இது தெரியும்…” என்று யோசிக்க, “ஜோதி ஆன்ட்டி தான் சொல்லிட்டு இருந்தாங்க…”
“ம்ம்… நாளைக்கு வந்திருவாங்க… நீ போயி விளையாடு…”   
“ம்ம்… இந்துக்காவும் வரல, பவியும் வரல… இன்னைக்கு செம போரிங்…” என்றவன் தனியாய் விளையாட விருப்பமில்லாமல் அமர்ந்திருந்தான். குழந்தைகள் கிளம்பியதும் வருண் இந்துவின் வீட்டுக்கு வந்துவிட்டான்.
“அக்கா, பவிக்கு காய்ச்சல்னு சொன்னாங்க… நாம போயி பார்த்திட்டு வரலாமா…” இந்துவிடம் வருண் கேட்க யோசித்தாள். வெகு நேர யோசிப்பில் குழந்தையைக் காண மனம் நினைத்தாலும் மூளை வேண்டாமென்று கடிவாளமிட்டுக் கொண்டிருந்தது.
அவள் அமைதியாய் அமர்ந்திருப்பதைக் கண்ட பரமசிவம், “இந்து… குழந்தை பாவம்டா… போயி பார்த்திட்டு வா…” என்றார்.
“ம்ம்…” என்று எழுந்தவள், “குழந்தைக்காக போறேன்ப்பா… அந்தாளு எதுவும் சொன்னா அப்புறம் போகவே மாட்டேன்…”
“அவர்தான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டாரே… இனி என்ன சொல்லப் போறார்…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே, தலையாட்டினார் தந்தை.
வருணை அழைத்துக் கொண்டு வெற்றியின் வீட்டுக்கு சென்றவளின் கால்கள் முன்னுக்கு நடப்பேனா என்று அடம் பிடிக்க தயக்கத்துடன் கேட்டைத் திறந்தாள்.
அவளைக் கண்டதும் புன்னகைத்த பெரியசாமி, “வாங்கம்மா, நீங்க வந்தாச்சான்னு, பாப்பா கேட்டுட்டே இருக்கா… இப்பதான் அழுகையை நிறுத்திட்டு வரேன்… தம்பி மருந்து தீர்ந்திடுச்சுன்னு வாங்கப் போயிருக்கார்…” என்றார்.
வீட்டில் அவனில்லை என்றது ஒரு ஆசுவாசத்தைக் கொடுக்க நிம்மதியுடன் உள்ளே சென்றாள்.
“பவி, எங்க இருக்கா பாட்டி…” பார்வதியைக் கண்டதும் வருண் கேட்க, “மாடில படுத்திருக்கா கண்ணா… வாங்க…” என்று அழைத்துச் சென்றார்.
வாடிய ரோஜாவாய் சோர்வுடன் கண்ணை மூடிப் படுத்திருந்தாள் பவித்ரா. இதழ்கள் வெடித்து சிவந்திருக்க தலை முடி கலைந்து எப்போதும் அழகாய் நடமாடும் குழந்தை ஒரு நாள் காய்ச்சலில் துவண்டிருந்தாள். அதைக் கண்டு இந்துவின் மனம் வேதனைப்பட, “பவி தூங்கறாளா பாட்டி…” என்றான் வருண்.
“ம்ம்… கூப்பிடறேன்… என்றவர், “பவிக்குட்டி, யாரு வந்திருக்காங்க பாரு செல்லம்…” பார்வதி சொல்லவும், மெல்ல கண்ணைத் திறந்தவள் முன்னில் இந்துவும் வருணும் நிற்பதைக் கண்டதும் மலர்ந்தாள்.
“ம்மா… வருண்…” இரண்டு கையையும் நீட்டிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
“ம்மா… என் மேல கோபம் போயிடுச்சா…” சின்னக் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க கேட்ட குழந்தையை அருகில் சென்று அணைத்துக் கொண்டாள் இந்து. அவளது கதையைக் கேட்ட பின் அந்தக் குழந்தையின் மேல் மேலும் பரிவு தோன்றியது.
“இல்லடா செல்லம்… எனக்கு உன்மேல எந்தக் கோபமும் இல்லை…”
“அப்புறம் ஏன்மா என்னைப் பேச வேணாம், வர வேணாம்னு சொன்ன…” கேட்டுக் கொண்டே குழந்தை தேம்பத் தொடங்க இதயத்தில் வலியை உணர்ந்தாள்.
“இல்லடா இனி சொல்ல மாட்டேன்… அழக் கூடாது…” என்று அவளது கண்ணைத் துடைத்துவிட்டு மீண்டும் அணைத்துக் கொண்டவள், “நல்லா சாப்பிட்டு மருந்து குடிக்கணும் சரியா… அப்பத்தான் காய்ச்சல் சரியானதும் அங்கே வர முடியும்…”
அவள் சொல்ல சந்தோஷமாய் தலையாட்டினாள் குழந்தை.
“சரிம்மா…” என்றவள், “நீ என் அம்மா இல்லேன்னு இனி சொல்ல மாத்த தான…” என்று கேட்கவும் அவள் பேசிய வார்த்தைகளை எண்ணி நொந்து போனாள். தான் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் குழந்தையின் மனதை எத்தனை தூரம் வேதனைப்படுத்தி இருக்கிறது என வருந்தினாள்.
“கோபத்தில் எதிரில் இருப்பது குழந்தை என்பதைக் கூட மறந்து போனேனே…” என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.
“பார்வதிம்மா, எதாச்சும் சாப்பிட்டாளா… காய்ச்சல் சரியாகலைன்னா டாக்டர் கிட்ட கொண்டு போகலாமே… இப்பவும் உடம்பு சுடுது…”
“ம்மா… டாக்தர் வேணாம்… ஊசி போதுவாங்க…” பவித்ரா சொல்ல, “ஆமாக்கா… வலிக்கும்… பவி இன்னைக்கு நீ வராம எனக்கு செம போரிங்கா இருந்துச்சு… நாளைக்கு கண்டிப்பா வந்திரு…” என்றான் வருண்.
“இன்னைக்கு சிரப் கொடுத்து சரியாகலைன்னா நாளைக்கு டாக்டர் பார்க்கணும்னு தான் தம்பியும் சொல்லுச்சு… பாப்பாக்கு ஊசின்னா பயம் போலருக்கு…” என்றார் பார்வதி.
“சரி, செல்லம்… நீ தூங்கு… நாங்க கிளம்பறோம்…”
“ம்மா…” என்றவள் இரண்டு கையையும் நீட்ட, “என்னடா… என்று அருகில் குனிந்தவளின் கன்னத்தில் சூடாய் இதழ் பதித்த குழந்தை, “ஐ லப் யூ மா…” என்றாள்.
அவளை அணைத்துக் கொண்டவள் நெற்றியில் முத்தமிட்டு, “சரி தூங்கு…” என்று சொல்ல, “நீ என்னோதவே இரும்மா…” குழந்தை சொல்லவும் தர்ம சங்கடமாய் உணர்ந்தாள். கீழே வெற்றியின் கார் நிற்கும் சத்தம் கேட்க அதற்கு மேல் அவளுக்கு அங்கே இருக்கவும் பிடிக்கவில்லை.
“சரிடா செல்லம், நாளைக்கு காய்ச்சல் சரியாகிட்டு அங்கே வா… வருண் அம்மா வந்திருவாங்க வா…” என்று அவனை இழுத்துக் கொண்டு நகர குழந்தை ஏக்கமாய் பார்த்திருந்தாள்.
காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்த வெற்றி அவளைக் கண்டதும் புன்னகைக்க அவள் உர்ரென்று அவனைக் கடந்து வாசலுக்கு சென்றுவிட, “ம்ம்… மேடம் இன்னும் மலை இறங்கல போலிருக்கு…” குழந்தைக்காகவாச்சும் தரிசனம் கொடுத்தாளே…” என மனதுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டு மாடிக்கு சென்றான்.
அவனைக் கண்டதும் மலர்ந்த குழந்தை, “அப்பா, அம்மா வந்து எனக்கு முத்தா எல்லாம் கொடுத்தாப்பா… நானும் ஐ லப் யூ சொல்லி அம்மா கன்னத்துல முத்தா கொடுத்தேன்… அம்மாக்கு என் மேல கோபம் இல்லியாம்… நாளைக்கு அங்கே வான்னு சொன்னாங்க…”
அவளது மலர்ச்சியும் சந்தோஷமுமே இனி அவளுக்கான மருந்து எனப் புரிந்து கொண்டவன் அவள் அருகில் அமர்ந்து கொண்டு மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
“அப்பா சொன்ன மாதிரி அம்மாவே வந்தாங்களா… பவிக்குட்டி ஹாப்பியா…” என்று கேட்க சிரித்தாள்.
“பவிக்குத்தி ரொம்ப ஹாப்பி ப்பா…” சொல்லிவிட்டு அவனைக் கட்டிக் கொண்டவளை நெகிழ்வோடு அணைத்துக் கொண்டான்.
குழந்தையின் சந்தோஷம் அருகில் இருப்பவர்களை எல்லாம் தொற்றிக் கொள்ளும் வல்லமை உடையது. இந்து இப்போது குழந்தைக்காய் இங்கே வந்தாலும் தனக்காய் கனிந்து வரும் காலம் தூரமில்லை என்ற நம்பிக்கை தோன்ற அவன் மனதிலும் சந்தோஷமாய் உணர்ந்தான்.
அடுத்த நாள் பவித்ராவின் காய்ச்சல் வந்த சுவடு தெரியாமல் ஓடிவிட்டிருக்க சோர்வு மட்டும் இருந்தது.
பிளேஸ்கூலுக்கு செல்ல வேண்டுமென்று பவி சொல்ல மறுக்காமல் அழைத்துச் சென்றான் வெற்றி.
முன்னில் ஜோதியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த இந்து இவனைக் கண்டதும் வேகமாய் உள்ளே சென்றுவிட, “அம்மா…” என்று குழந்தை அவள் பின்னாடியே ஓடினாள்.
அவள் தன்னைக் கண்டு கொள்ளாமல் சென்றதற்கு இவன் உதட்டைப் பிதுக்கி தோளைக் குலுக்கி திரும்பி செல்வதைக் கண்ட ஜோதி மனசுக்குள் தெரிந்த வாய்ப்பாடுகளை எல்லாம் போட்டு கூட்டி கழித்து பெருக்கிக் கொண்டிருந்தாள்.
நிஜக் கணக்குகளை விட மனக் கணக்குகள் இங்கே மிகவும் எளிதாயிற்றே. தப்பும் தவறுமாய் போட்டாலும், சரியாகவே கணித்தாலும் யாரும் கேட்கப் போவதில்லை.
அன்று மாலையில் அகிலா மகளிடம் இதைப் பற்றி பேச்சைத் தொடங்க, “அம்மா, இதுக்கு முன்னாடி சொன்ன பதில் தான் இப்பவும்… எனக்கு கல்யாணம் வேண்டாம்…” என்று பிடிவாதமாய் சொல்லிக் கொண்டிருந்தாள் இந்து.
“இப்படியே சொல்லிட்டு இரு… உன் அப்பா உன்னை நினைச்சே கவலைப்பட்டு தேஞ்சு போறார்… உனக்குப் பிறகு அடுத்தவளுக்கு ஒரு நல்லதைப் பண்ணனும்… எப்ப தான் எங்க கவலையைப் புரிஞ்சுக்கப் போறியோ… தானா வந்த சம்மந்தத்தை வேண்டாம்னு சொல்லற…” அகிலா புலம்பிக் கொண்டே எழுந்து செல்ல வெற்றியின் மீது கோபமாய் வந்தது இந்துவுக்கு. அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பரமசிவம் மனதிலும் அதே கேள்வி தான்.
அவருக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்ற, “ம்ம்… அதுதான் சரி…” என சந்தோஷமாய் நினைத்துக் கொண்டார்.

Advertisement