Advertisement

அத்தியாயம் – 21
பவி சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்க அவள் நீட்டிய போட்டோவை வாங்கிப் பார்த்த இந்துவின் முகம் அனலாய் சிவந்தது.
“பவி… இந்த போட்டோ யார் உனக்கு கொடுத்தாங்க…”
“நம்ம வீத்துல தான் இருந்துச்சு… அப்பா அலமாரில இருந்து நான் எதுத்து வச்சுகித்தேன்…” அவள் சொல்லவும் இந்துவின் முகம் கோபத்தில் சிவக்க கணவனை நோக்கிய அகிலா, “இந்தப் புள்ள என்னங்க இப்படி சொல்லுது…” என்றார்.
“பவி, வா வீட்டுக்கு…” என்று இந்து கோபமாய் கிளம்ப, “இந்து இருடா, என்னன்னு விசாரிப்போம்…” என்றார் பரமசிவம்.
“இல்லப்பா, நான் கேட்டுட்டு வந்திடறேன்…” என்றவள் முன்னே நடக்க, பவி அவள் வீட்டுக்கு வரும் சந்தோஷத்தில் பின்னாடியே ஓடி வந்தது.
பெரியசாமி திறந்திருந்த கேட் அருகே நிற்க, நேரமாகவே அலுவலகத்திலிருந்து கிளம்பி இருந்த வெற்றி அப்போதுதான் வண்டியை உள்ளே நிறுத்திக் கொண்டிருந்தான். பிரஷ் ஆகிவிட்டு பவியை அழைக்க நினைத்தவன் உள்ளே வந்த இந்துவையும், குழந்தையையும் கண்டு புன்னகைத்தான்.
“நான் வரலாம்னு நினைச்சேன்… நீங்களே வந்துட்டிங்களா…” என்றவனிடம் ஓடிவந்து கட்டிக் கொண்டாள் பவித்ரா.
“அப்பா, நான்தான் அம்மாவை வீத்துக்கு வர சொன்னேன்…”
“அப்படியா செல்லம்…” என்று மகளைத் தூக்கிக் கொண்டே நிமிர்ந்தவன் இந்துவின் முகத்தில் தெரிந்த கோபத்தை அப்போது தான் கவனித்தான்.
“என்னாச்சு இந்து, எதுவும் பிராப்ளமா…”
“மிஸ்டர்… நீங்க ஏன் என்னைப் பேர் சொல்லி கூப்பிடறீங்க… எதுக்கு இப்படி உரிமை எடுத்துக்கறிங்க…”
முதன்முறையாய் அவளது சிடுசிடுப்பைக் கண்டவன் காரணம் புரியாமல் அதிர்ந்தான்.
“மனசுல என்ன நினைச்சு பண்ணிட்டு இருக்கீங்க… குழந்தைட்ட என் போட்டோவைக் காட்டி அம்மான்னு சொல்லிருக்கீங்க… எங்க வீட்டுக்கு முன்னாடியே வீடு பார்த்து குடி வந்து குழந்தைய விட்டு அம்மான்னு கூப்பிட வச்சிங்க… அப்பாக்கு முடியாதப்ப ஹெல்ப் பண்ணற போல வந்து நல்லவன்னு காட்டிகிட்டீங்க… இதெல்லாம் எதுக்கு, உங்க பிளான் என்ன…” கேட்டவளின் முகத்தில் தெரிந்த கோபமும் வெறுப்பும் அவனை பளாரென்று முகத்தில் அறைந்தது போல் தோன்றியது. இதுவரை யாரும் ஒரு வார்த்தை சொல்வது போல இருக்கக் கூடாது என்று பார்த்துப் பார்த்து எல்லாக் காரியங்களையும் செய்பவன் அவளது கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் கூசினான்.
பவித்ரா அவளது கோபத்தின் காரணம் தெரியாமல் பயத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க கண்ணில் கண்ணீர் திரண்டு நின்றது.
குழந்தையைக் கண்ட வெற்றி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு, “ப்ளீஸ் இந்து… என்ன நடந்துச்சுன்னு புரியாம வார்த்தையை விட வேண்டாம், ஒரு நிமிஷம் நான் சொல்லுறதைப் பொறுமையா கேளு…” அவனது உரிமையான பேச்சு அவளை மேலும் கோபமூட்டியது. அதற்குள் அவளது வீட்டிலிருந்து பெற்றோரும் சிந்துவும் ஓடி வந்தனர்.
“எதுக்கு கேக்கணும்… நீங்க சொல்லுற எந்தக் காரணமும் எனக்குத் தேவையில்லை… முதல்ல என்னை இப்படி பேர் சொல்லி கூப்பிடறதை நிறுத்துங்க… சம்மந்தமில்லாத ஒரு பொண்ணு போட்டோவைக் கொடுத்து அம்மான்னு குழந்தை கிட்ட எப்படி சொல்லலாம்… அதுவும் உங்க ஆபீஸ்க்கு வேலைக்கு நான் போட்ட அப்ளிகேஷன்ல இருந்து எடுத்த போட்டோ…” படபடவென்று அவள் பேச அகிலா அவளது கையைப் பிடித்தார்.
“இந்து, எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம்… என்னன்னு விசாரிக்கலாம்…” என்று சொல்ல, “வேண்டாம்மா… நாம எதுக்கு இவங்க விளக்கத்தைக் கேக்கணும்… என் அனுமதி இல்லாம என் போட்டோவை எப்படி இப்படி தப்பா யூஸ் பண்ணலாம்…” பொங்கினாள்.
“இந்து, அவர் எதுவோ சொல்ல வராரே…” தந்தை சொல்ல, “வேண்டாம் பா… இப்படி ஒரு எண்ணத்தை குழந்தை மனசுல வளர்த்தா அது எந்த மாதிரி பிரச்சனையில் கொண்டு போய் விடும்னு யோசிக்க வேண்டாம்… ஏதோ அம்மா இல்லாத குழந்தை… ஆசையா அழைக்குதேன்னு எதுவும் சொல்லாம இருந்தா இப்படி பண்ணலாமா… இனியும் இதை என்னால அனுமதிக்க முடியாது…” என்றவள், அவனை ஒட்டிக் கொண்டு நின்ற குழந்தையை அழைத்தாள்.
“பவி…” கண்ணில் கண்ணீருடன் பயமாய் ஏறிட்டது குழந்தை.
“பவி இங்க பாரு, நான் உன் அம்மா இல்லை, இனி என்னை அப்படி அழைக்க கூடாது… அங்கே என்னைப் பார்க்க வரவும் வேண்டாம்… என்னை யாரும் நேசிக்கவும் வேண்டாம்…” என்றவள் கையிலிருந்த தனது போட்டோவை சுக்கலாய் கிழித்தெறிந்து, அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடிவிட்டாள்.
அதைக் கண்ட பவி, “அம்மா போத்தோ…” அழத் தொடங்க அவளை சமாதானப்படுத்தக் கூடத் தோணாமல் குற்றவுணர்வுடன் நின்றான் வெற்றி. பெரியசாமி ஓடி வந்து குழந்தையை எடுத்துக் கொண்டார். பார்வதி புரிந்தும் புரியாமல் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவளது கோபத்தைக் கூட அமைதியாய் ஏற்றுக் கொண்ட வெற்றிக்கு அவளது அழுகையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் வலித்தது.
“ச்சே… என்னால் தானே எல்லாம்… குழந்தையிடம் முன்னமே அழுத்தமாய் சொல்லியிருக்க வேண்டும்… இப்போது இந்துவின் மனம் நோகும்படி ஆகிவிட்டதே…” அவள் மீது மெதுவாய்த் துளிர் விடத் தொடங்கிய நேசம் காற்றில் ஆதரவின்றி வேகமாய் ஆடிக் கொண்டிருந்தது.
அவனையே பார்த்த பரமசிவம், “தம்பி, வருத்தப்படாதீங்க… ஏதோ தப்பு நடந்திருக்குன்னு மட்டும் புரியுது…” என்றுவிட்டு மகளை சமாதானப்படுத்த வீட்டுக்கு சென்றனர்.
“இந்து அவளது அறையில் அழுது கொண்டிருக்க சிறிது நேரம் அமைதியாய் இருந்த சிந்து அவளது முதுகில் ஆறுதலாய் கை வைத்தாள்.
“அக்கா… அழாதக்கா… போகட்டும் விடு…”
“அதானே… இப்படி எதுவும் ஆயிடக் கூடாதுன்னு தான் அந்தக்குழந்தை உன்ன அம்மான்னு அழைச்சப்பவே சொன்னேன்… நான் நினைச்ச போலவே ஆயிடுச்சா…” அகிலா வாய்விட்டுப் புலம்பிக் கொண்டிருக்க பரமசிவம் அதட்டினார்.
“என்ன அகிலா பேசற… இப்படிலாம் நடக்கும்னு யாராவது யோசிப்பாங்களா…” என்றவர் மகளிடம் வந்து அமர்ந்தார்.
“இந்து அழாதமா… எங்கயோ பிறந்து வளர்ந்த குழந்தை உன்னை அம்மான்னு மனசுல பதிஞ்சு வச்சிருக்கு… அந்தத் தம்பி அவ்ளோ உலகம் தெரியாதவரா என்ன… அப்படிலாம் சொல்லி இருக்க மாட்டார்மா… இதுல வேற ஏதோ விஷயம் இருக்கு… எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்தத் தம்பி எதார்த்தமா தான் பழகினார்…” மகளுக்கு ஆறுதல் சொல்லப் போய் வெற்றிக்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டிருந்தார் பரமசிவம்.
“அப்ப நான் பேசினது தப்பாப்பா… அந்தாளு குழந்தைக்கு சொல்லி கொடுக்காமலா இப்படி சொல்லும்… குழந்தைக்கு எதுவும் தெரியாதுதான்… ஆனா அவ அப்பாவுக்கு தெரியும்ல…” என்றவள், “நான் கொஞ்சம் தோட்டத்துல இருந்துட்டு வரேன்…” என்று பவளமல்லி மரத்தடியில் போய் அமர்ந்து கொள்ள சுகமாய் தழுவிய காற்றில் மீண்டும் கண்ணில் கண்ணீர் பொங்கிக் கொண்டிருந்தது.
“கடவுளே, ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது… என்னை அதிகமா நேசிக்கறவங்களுக்கு துக்கத்தைத் தவிர வேற எதுவும் என்னால குடுக்க முடியலையே… இந்த விதி ஏன் மறுபடி இந்த நேச வளையத்துல என்னை சிக்க வைக்குதுன்னு புரியலை…” சுய பச்சாதாபத்தில் மீண்டும் கண்ணீர் நிறைய, பவிக்குட்டியின் அழுகை முகம் கண்ணில் வந்து மனதைப் பிசைந்தது.
அங்கு பவிக்குட்டியோ அழுதழுது உறங்கிக் கொண்டிருந்தது. இந்து சென்றதும் வெற்றியைக் கட்டிக் கொண்டு, “அம்மா ஏன்ப்பா போத்தோ கிழிச்சாங்க… அம்மாக்கு நம்ம மேல கோபமா… நம்ம வீத்துக்கு வரப் பிதிக்கலயா… என்ன ஏன்ப்பா, அம்மா சொல்ல வேணாம் சொன்னாங்க… நான் தப்புப் பண்ணித்தேனா… அம்மாத்த சாரி சொல்லத்துமாப்பா…” அழுகையின் நடுவே தேம்பிக் கொண்டே ஒவ்வொரு கேள்விகளையும் குழந்தை கேட்டுக் கொண்டிருக்க பதில் சொல்லத் தெரியாமல் வெற்றியின் கண்களும் கலங்கின.
“கடவுளே… இந்தப் பிஞ்சு நெஞ்சை என்ன சொல்லி மாற்றப் போகிறேன்… இந்து தான் அவளது அம்மா என்று இத்தனை அழுத்தமாய் பதிந்து வைத்திருக்கிறாளே… அன்னையின் அன்புக்காய் அவள் மனது இத்தனை ஏங்கும் எனப் புரிந்து கொள்ளாமல் போய் விட்டேனே… இப்படி எதுவும் நேர்ந்து விடக் கூடாதென்று தானே டாக்டரிடம் அழைத்துச் செல்ல நினைத்தேன்… இப்போது எல்லாம் கை மீறிப் போய் விட்டதே… நான் என்ன செய்யப் போகிறேன்…” எனத் தன்னைத் தானே குற்றப்படுத்திக் கொண்டே குழந்தையை மடியில் போட்டு தட்டிக் கொடுத்து உறங்க வைத்திருந்தான்.
உறக்கத்தின் நடுவில் கூட குழந்தை அடிக்கடி சிணுங்கிக் கொண்டிருந்தாள். “ம்மா… சாரிம்மா, போகாதம்மா…” அவளது சின்ன இதழ்கள் குழறியபடி உச்சரிக்கும் வார்த்தைகள் அவன் நெஞ்சைக் கீறிக் கொண்டிருந்தன. இரவு உணவுக்கு பார்வதியம்மா அழைக்க வேண்டாமென்று மறுத்துவிட்டான்.
யோசனையுடன் வெளியே அமர்ந்திருந்த பெரியசாமியிடம் வந்தவர், “யாருமே சாப்பிடலையே அண்ணா, பாவம் குழந்தை… அப்படியே தூங்குது… என்ன நடந்துச்சுன்னு எனக்குப் புரியலை… ஆனா இந்துப் பொண்ணும் சரி, இந்தத் தம்பியும் சரி… ரொம்ப நல்லவங்க… ஏதோ ஒரு குழப்பம், அந்தப் பொண்ணு இப்படிலாம் பேசிட்டுப் போயிருச்சு… இது மூலமா இவங்க வாழ்க்கைல ஒரு நல்லது நடந்தா சந்தோசம் தான்…” என்றவர், “நான் வீட்டுக்கு கிளம்பறேன்… குழந்தை எழுந்தா பால் மட்டுமாச்சும் சூடு பண்ணி குடிக்கக் கொடுங்க…” என்றவர் வீட்டுக்கு கிளம்பி விட்டார்.
பெரியசாமியின் மனதும் இந்து பேசியதையே நினைத்துக் கொண்டிருக்க அவரும் உண்ணாமலே படுக்க சென்றார். அன்பான இதயங்களின் தூக்கத்தைப் பறித்துக் கொண்ட வருத்தமான அந்த இரவும் விடிந்தது.
அதிகாலையில் உறங்கத் தொடங்கி இருந்த வெற்றி பவியின் அனத்தல் குரலில் கண் விழித்தான். நெற்றியில் கை வைத்துப் பார்க்க அனலாய் சுட்டது.
“அய்யய்யோ, குழந்தைக்கு இப்படி சுடுதே…” என்றவன்,  அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு கீழே சென்றான்.
அப்போதுதான் எழுந்த பெரியசாமி வெற்றியைக் கண்டதும், “என்ன தம்பி, காபி வேணுமா…” என்று கேட்க, “ஐயா கொஞ்சம் பால் சூடு பண்ணிக் கொடுங்க… பவிக்கு காய்ச்சல் அடிக்குது… பாரசிடமோல் கொடுக்கணும்…” என்றதும், “அடடா… குழந்தைக்கு அம்மா ஏக்கத்துல காய்ச்சலே வந்திடுச்சு போலருக்கே…” என நினைத்துக் கொண்டே பாலை சூடு பண்ணி ஆற்றி எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றார்.
அதற்குள் வெற்றி நனைந்த டவலால் அவள் நெற்றி, கை காலில் துடைத்து விட்டுக் கொண்டிருக்க, “அப்பா…” என்று அரற்றிக் கொண்டிருந்தாள் குழந்தை.
“பவிக்குட்டி, இங்க பாருடா செல்லம்… இந்தப் பாலைக் கொஞ்சம் குடி…” என்று அவளைத் தன் நெஞ்சில் சாய்வாய் கிடத்திக் கொண்டவன் மெல்ல அவள் வாயில் வைக்க உதடுகள் எல்லாம் வறண்டு கிடந்தன.
சோர்வுடன் கண்களை மெல்லத் திறந்தவள், “ம்ஹூம், வேணாம்…” என்று சொல்ல, “பவிகுட்டி குட் கேர்ள் தானே… கொஞ்சம் பால் குடி டா…” என்றான் வெற்றி.
“இல்ல, நான் குத் கேர்ள் இல்ல… என்னதான் அம்மாக்குப் பிதிக்கலயே…” என்றவள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு மீண்டும் அழுகைக்குத் தயாராக வெற்றிக்கு அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று புரியாமல் கலங்கினான். இதைக் கண்டு கொண்டிருந்த பெரியசாமியின் கண்களும் பனித்து விட்டது.
“பாப்பா, உன்னை எல்லாருக்கும் பிடிக்கும் தங்கம்… பாலைக் குடிமா…”
“இல்ல தாத்தா, அப்புறம் ஏன் அம்மா கோபப்பத்தாங்க… எனக்கு அம்மாவைப் பார்க்கணும்…”
“நீ பாலைக் குடிச்சிட்டு மருந்து குடிடா செல்லம்… தூங்கி எழுந்து காய்ச்சல் சரியானதும் அம்மாவைப் பார்க்க தாத்தா அழைச்சிட்டுப் போறேன்…” அவர் சொல்லவும் வெற்றி வேகமாய் திரும்பினான்.
“வேண்டாம் ஐயா… இனியும் அவளுக்கு எந்தப் பொய்யான நம்பிக்கையும் கொடுக்க வேண்டாம்…” என்றவன், “பவி… பால் குடி… இல்லேன்னா அப்பாவும் எங்காச்சும் போயிடுவேன்…” என்று அதட்டலாய் சொல்ல பவியின் குட்டிக் கண்கள் அதிர்ந்து பிறகு மீண்டும் சோகமானது.
“எனக்கு பால் நானா, நானும் பாத்தி மாதி சாமிகித்தப் போறேன்…” என்றவள் கண்ணை மூடிக் கொண்டாள்.
வெற்றி அதிர்ந்து நோக்க, “தம்பி, குழந்தை மனசு அவ்ளோ சீக்கிரம் மாறாது… அது வழியில போயி தான் சரி பண்ணனும்…” என்றார் பெரியசாமி.
“பாப்பா, தாத்தா சொல்லறேன்ல… பாலைக் குடிச்சாதான் உன்னை அம்மாக்கு பிடிக்கும்…” என்று சொல்ல கண்ணைத் திறந்தவள், “அம்மாக்குப் பிடிக்கும்னா குடிக்கறேன்… ப்பா, குடு…” என்று சமத்தாய் குடித்து முடித்து மருந்தையும் துப்பாமல் இறக்கிக் கொண்டாள்.
“ம்ம்… கொஞ்ச நேரம் தூங்குங்க…” என்று பெரியசாமி சொல்ல கண்ணை மூடிப் படுத்துக் கொண்டாள். வேதனையுடன் அவளைப் பார்த்து நின்ற வெற்றியிடம், “தம்பி, வருத்தப்படாதீங்க… இதுக்கான தீர்வு உங்ககிட்ட தான் இருக்கு…” என்றார் அவர்.
“என்ன சொல்லறீங்க ஐயா…” என்றவனிடம், “சில உண்மைகளை நேரம் வரும்போது சொல்லித்தான் ஆகணும்…” என்றவர் அர்த்தமாய் பார்க்க புரிந்து கொண்டான்.
“நீங்க அந்தப் பொண்ணு வீட்டுல போயி பேசுங்க… நடந்ததை சொல்லுங்க… அப்பத்தான் சரியான ஒரு தீர்வு கிடைக்கும்…” அவர் சொன்னதும் யோசித்தவன், “ம்ம் பேசறேன்…” என்று தீர்மானமாய் தலையாட்டினான்.
சற்று நேரத்தில் பார்வதியம்மா வந்துவிட பவித்ராவும் எழுந்து விட்டாள். குழந்தைக்கு காய்ச்சல் என்றதும் கஞ்சி வைத்து கிண்ணத்தில் எடுத்து வர பவித்ரா, “அம்மாத்த கூத்திப் போனா தான் குடிப்பேன்…” என்று அடம் பிடித்தது.
“உனக்கு காய்ச்சல் அடிக்குது செல்லம்… சரியானா தான் அங்க போக முடியும்… இல்லேன்னா உன்னோட காய்ச்சல் அம்மாவுக்கும் வந்திடும்ல…” என்றார் பார்வதி.
“ஓ… கஞ்சி குடிச்சா சரியாகிடுமா…” என்றவள் வேகமாய் வெற்றியின் கழுத்தில் கை வைத்துப் பார்த்துவிட்டு, “அப்ப ஏன் அப்பாக்கு மட்டும் என் காய்ச்சல் வதல…” என்றதும் பார்வதி என்ன சொல்லுவதென்று புரியாமல் முழித்தார்.
“கேர்ள்ல இருந்து கேர்ள்க்கு தான் பீவர் வரும்… அப்பா பாய்தான அதான் வரல, அப்படித்தான பாத்தி…” அவளே ஒரு தீர்மானத்திற்கு வரவும் ஆசுவாசமாய் மூச்சு விட்டவர், “ஆமா டா செல்லம்… சீக்கிரம் கஞ்சி குடிங்க…” என்று வெற்றியிடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றார்.
அம்மாவிடம் செல்லவேண்டும் என்பதற்காகவே சமத்தாய் குடித்தாள் பவித்ரா. காலையில் நேரமாய் மருந்து கொடுத்ததால் மறுபடியும் 11 மணிக்கு கொடுத்தான். நெற்றியில் கை வைத்துப் பார்க்க லேசாய் வியர்த்திருந்தது.
“அப்பா, எனக்கு ஜோ வேணும்…” அவள் கேட்கவும் கரடி பொம்மையை எடுத்து கொடுத்தான் வெற்றி. அதன் ஜிப்பைத் திறந்து பார்த்தவள் கண்கள் ஏமாற்றமாக உதட்டைப் பிதுக்கிக் கொண்டு தேம்பினாள்.
“எனக்கு அம்மா போத்தோ வேணும்ப்பா…” என்ற குழந்தையின் ஏமாற்ற முகம் வெற்றியின் இதயத்தை என்னவோ செய்தது.
“சரி, நீ தூங்குடா செல்லம்… சாயந்திரம் அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போயி போட்டோ வாங்கித் தரேன்…” என்றான்.
“அம்மா தான் போத்தோ கிழிச்சுத்தாளேப்பா…” அவள் தேம்பலுடன் சொல்ல, “அம்மாவையே அழைச்சிட்டு வரேன்… நீ தூங்கு…” என்றவன் உடை மாற்றி கீழே வந்து பெரியசாமியிடம் அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு இந்துவின் வீட்டுக்கு கிளம்பினான். பிளே ஸ்கூலில் அகிலாவும் ஜோதியும் இருக்க கேட் அருகே இவன் வந்து நின்றதும், “பாப்பா இன்னைக்கு வரலியா சார்…” கேட்டுக் கொண்டே திறந்து விட்டாள் ஜோதி.
“ம்ம்… காய்ச்சல்…” என்றதும், “என்னது, பாப்பாவுக்கும் காய்ச்சலா… இங்க இந்துமாக்கு காய்ச்சல்னு சொன்னாங்க…” என்றாள் திகைப்புடன்.
அதைக் கேட்டு வியந்தாலும் காட்டிக் கொள்ளாமல், “அம்மா இருக்காங்களா…” எனக் கேட்க அவரே அதற்குள் அவனது குரல் கேட்டு வெளியே வந்திருந்தார். அவனைக் கண்டதும் அவரது முகம் கனக்க, “ஜோதி, நீ போயி குழந்தைகளைப் பார்த்துக்க…” என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே வந்தார்.
“அம்மா, சார் வீட்ல இருக்காரா… கொஞ்சம் பேசணும்…”
“ம்ம் வாங்க…” என்றவர் முன்னில் நடக்க தொடர்ந்தான்.
சிந்து ஸ்கூல் சென்றிருக்க இந்துவின் அறையை நோக்க அது சாத்தியிருந்தது.
“நைட்டு பூரா அழுதிருப்பா போலருக்கு… தலைவலின்னு மாத்திரை போட்டுப் படுத்திருக்கா… உக்காருங்க, அவரைக் கூப்பிடறேன்…” என்றவர், அழைக்க செல்ல அவனது பார்வை வேதனையுடன் இந்துவின் அறைக்கதவை தழுவியது.
மாத்திரையின் உபயத்தில் வெறுமனே கண் மூடி படுத்திருந்த பரமசிவம் மனைவி வந்து சொல்லவும் முகத்தைக் கழுவிக் கொண்டு எழுந்து வந்தார்.
“வாங்க தம்பி, அகிலா… காபி போடு மா…” என்று மனைவியிடம் சொல்ல, “இல்ல வேண்டாம் அங்கிள்…” அவசரமாய் மறுத்தான் வெற்றி.
“இருக்கட்டும் தம்பி, ஒரு காபி குடிச்சா கடவுள் ஒண்ணும் கண்ணைக் குத்திட மாட்டார்…” என்று சொல்லி கண்ணைச் சிமிட்ட திகைப்புடன் ஏறிட்டான் அவன்.
“அங்கிள்… நான் வந்து…”
“ம்ம்… தன்னிலை விளக்கம் கொடுக்க வந்திருக்கிங்க… அப்படிதானே…” என்றார் புன்னகையுடன்.
அவன் அமைதியாய் தலையாட்ட, “நிச்சயம் நீங்க தெரிந்து எந்தத் தப்பும் பண்ணியிருக்க மாட்டிங்கன்னு நான் நம்பறேன்… சொல்ல வந்ததைத் தயங்காம சொல்லுங்க தம்பி…” என்றார் பரமசிவம். அவரது பெருந்தன்மையை வியந்தவாறே தனது நிலையைத் தெளிவாய் சொல்லத் தொடங்கினான் வெற்றி.
“நான் சொல்லப் போறது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்… என்ன நடந்ததுன்னு அப்படியே சொல்லிடறேன்…” என்றவன்,
“பவி என் குழந்தை இல்லை… என் தம்பியோட குழந்தை…” என்றதும் உண்மையிலேயே அதிர்ந்தார் பரமசிவம். அடுக்களையில் காபி வைத்துக் கொண்டிருந்தாலும் காதை இங்கே பதித்திருந்த அகிலாவின் காதிலும், வெற்றியின் குரலைக் கேட்டதும் கோபமாய் எழுந்து கதவருகே வந்த இந்துவின் காதிலும் அந்த வார்த்தைகள் விழ அவர்களும் அதிர்ச்சியுடன் கவனித்தனர்.
எனைத் தேடி அலையா
உன் விழிதனை
தண்டித்திடவே நாடுகின்றேன்
என் கல்லறை வாசல்…
நேசங்களைப் பயிரிட்டு
வேரோடு பறித்துக் கொள்ள
இதயம் வெறும் மண்ணல்ல…
நேசத்தின் கருவறை…

Advertisement