Advertisement

அத்தியாயம் – 20
அகிலா, இந்து பதட்டத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போதே வெற்றியின் கார் அவனது வாசலில் வந்து நின்றது. சக்தியை சிறைச்சாலையில் சந்தித்து திரும்பியவன் மனது அவன் சொன்ன விஷயங்களையே அசை போட்டுக் கொண்டிருக்க இந்துவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.
“குழந்தையின் மனதில் ஆழமாய் பதிந்திட்ட அவளைத் தான் மணந்து கொண்டால் இந்து நிச்சயம் நல்ல ஒரு அன்னையாய் அவளைப் பார்த்துக் கொள்வாள்… டாக்டர், கவுன்சிலிங் என்று குழந்தையைக் சிரமப்படுத்தத் தேவையில்லை…” என யோசித்தவனின் மனசாட்சி அவனைக் கேலி செய்தது.
“ஓஹோ… அப்ப, உன் குழந்தைக்கு ஆயாவாத்தான் அவளை யோசிக்க முடியுது… உனக்கு பொண்டாட்டியா அவளை யோசிக்க மனசு வரல… அப்படிதானே…” சக்தியின் குரல்  மனதில் கிண்டலாய் ஒலித்தது.
“ச்சே… இப்படி நினைப்பது பாவமில்லையா… என்னுடைய சுயநலத்திற்காக யோசிக்கக் கூடாது… அவளைப் போல ஒரு அன்பான பெண்ணைக் கல்யாணம் செய்ய பாக்கியம் செய்திருக்க வேண்டும்…” என்றது மூளை.
“ஓஹோ… அந்த பாக்கியசாலியா நீ இருக்கலாமேன்னு தான் நான் சொல்லறேன்…” மீண்டும் சக்தியின் குரல்.
“ம்ம்… நான் மட்டும் விரும்பினா போதுமா, அவளது  விருப்பமும் முக்கியம் தானே…”
“அதற்கு நீ முதலில் உன் விருப்பத்தை சொன்னால் தானே…”
“ம்ம்… பார்க்கலாம்… இந்து மீது எனக்கு வெறுப்பெல்லாம் இல்லை… ஆனால் இதுவரை அப்படி யோசித்ததில்லை…”
“டேய் அண்ணா, சும்மா சொன்னதையே சொல்லாம மாத்தி யோசி மேன்…” சக்தியின் நக்கல் குரல் கேட்க இயல்புக்கு மாறாய் வெற்றிக்கு சிரிப்பு வந்தது.
அதற்குப் பிறகு பயணம் முழுதும் இந்து, ஆகாஷ், பரமசிவத்தின் கவலை, பவிக்குட்டியின் அம்மா என்ற அழைப்பு, போட்டோ இவையே மாறி மாறி மனதுக்குள் சுழன்று கொண்டிருக்க, “இந்து எங்க வாழ்க்கையில் வந்தால் நல்லாத்தான் இருக்குமோ…” என்று மனது யோசிக்கத் தொடங்க வீட்டை நெருங்கியவன் கேட்டின் அருகேயே பதட்டத்துடன் அகிலா, இந்துவைக் காணவும் காரைத் தனது வீட்டு முன் நிறுத்திவிட்டு இவர்கள் வீட்டுக்கு வந்தான்.
அவனை கவனிக்காத இந்து, “அம்மா, நீ ஸ்கூலைத் திறந்து ஸ்டோர் ரூம்ல பவி இருக்காளான்னு பாரு… சிந்துகிட்ட வீட்டுக்குள்ள பார்க்க சொல்லு… நான் தோட்டத்துல பார்த்திட்டு வரேன்…” சொன்னவள் வேகமாய் தோட்டத்துக்கு சென்றாள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த வெற்றியின் நெற்றி யோசனையில் சுருங்க, “பவி எங்கே… அவளைத் தான் தேடறாங்களா…” சரியாய் புரியாமல் சுர்ரென்று பதட்டமும் கோபமும் தலைக்கு ஏற வேகமாய் இந்துவின் பின்னால் அவனும் தோட்டத்துக்கு சென்றான்.
“பவி… எங்கடா செல்லம் இருக்க… விளையாடாம வந்திடுமா…” அழைத்துக் கொண்டே அங்கிருந்த தண்ணீர் தொட்டி, டிரம், எல்லாம் தேடிக் கொண்டிருந்தவள், “ம்மா… நான் ஒளிஞ்சித்து இருக்கேன்… கண்டு பிதி பார்ப்போம்…” என்று குரல் வரவும் சட்டென்று திகைத்தவள் நிம்மதியாய் நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள்.
அவளது படபடப்பும், பதட்டமும் குழந்தையின் குரலைக் கேட்டதும் வந்த நிம்மதிப் பெருமூச்சையும் திகைப்புடன் பார்த்துக் கொண்டே அருகில் வந்தான் வெற்றி. பவியின் குரலைக் கேட்டதும் அவனது பதட்டமும் தணிந்திருந்தது.
அதற்குள் பவியின் குரல் வந்த திசையில் இந்து தேட பவளமல்லி மரத்தடியில் இருந்த சிமெண்டு திண்டின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தாள் குழந்தை.
அவளைப் பின்பக்கம் இருந்து தூக்கியவள், “நீ இங்க ஒளிஞ்சிட்டு இருக்கியா… ஒரு நிமிஷம் என்னைக் கலங்க வச்சுட்டியே குட்டிம்மா…” என்று நெஞ்சோடு அணைத்து முத்தமிட, “ஹஹா… பயந்துத்தியாம்மா… உன்கூட கண்ணாமூச்சி விளாத ஆசையா இருந்துச்சா… அதான் பவி ஒளிஞ்சித்து உன்னத் தேத வச்சேன்…” மழலையில் சிரித்துக் கொண்டே சொன்னவளின் கன்னத்தில் முத்தமிட்டவள், “இனி எங்கிட்ட சொல்லாம எங்கயும் போகக்கூடாது… சரியா…” என்று சொல்ல, “ம்ம்… சதி…” என்று தலையாட்டிய குழந்தை பின்னால் வந்து நின்ற வெற்றியைக் கண்டதும், “ஹை அப்பா…” என அவளிடமிருந்து இறங்கினாள். 
திடுக்கிட்டு திரும்பிய இந்துவின் மனதில் “கொஞ்சம் முன்னால் இவன் வந்திருந்தால் என்னாயிருக்குமோ…” எனத் தயக்கம் தோன்ற, “வாங்க சார்…” என்றாள். அதற்குள் அகிலாவும் சிந்துவும் அங்கே ஓடிவர பரமசிவமும் வாசலில் நின்று கொண்டிருந்தார்.
“பவிக்குட்டி, எதுக்கு இப்படிப் பண்ணின… எல்லாரும் எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா…” அகிலா சற்று உரக்க சொல்லவே குழந்தையின் முகம் சுருங்க, வெற்றியின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
“அம்மா, விடும்மா குழந்தை தானே… ஏதோ விளையாட்டுக்கு இப்படிப் பண்ணிட்டா… திட்டாத… பயந்துடப் போறா…” என்றாள் இந்து.
“ம்ம்… நீ இப்படியே சப்போர்ட் பண்ணிட்டு இரு… குழந்தைக்கு ஏதாச்சும் ஆனா யாரு பதில் சொல்லறது…” அகிலா சீற, பவி வெற்றியைக் கட்டிக் கொண்டாள்.
“ம்மா, விடும்மா… அவ அழுதுடப் போறா…” இந்து மீண்டும் சொல்ல, “என்னாச்சுமா, பவி என்ன பண்ணினா…” என்றான் வெற்றி அமைதியாக.
நடந்ததை தெளிவாய் சொன்ன அகிலா, “பயந்துட்டோம் தம்பி… குழந்தையக் காணோம்னதும் இவ மூஞ்சியப் பார்க்கணுமே… அப்படியே வெளிறிப் போயி… பார்க்கவே பயமா இருந்துச்சு… அதான் அப்படி சொல்லிட்டேன்… நீங்க ஏதும் நினைச்சுக்காதிங்க…” என்றார் தன்மையாக.
“ம்ம்… அவ செய்ததும் தப்புதானேம்மா… சொன்னவன்,
பரமசிவம் அங்கே வருவதைக் கண்டு, “என்ன அங்கிள், பவி பண்ணின களேபரத்துல நீங்களும் பயந்துட்டிங்களா…” என்று கேட்க அவர் புன்னகைத்தார்.
“குழந்தையைக் காணோம்னு சொன்னா ரெஸ்ட் எடுக்கவா தம்பி தோணும்… ஒரு நிமிஷம் பதறிட்டேன்…” என்றவர், “பவிக்குட்டி… இனிமே யாருகிட்டயும் சொல்லாம இப்படி போயி ஒளியக் கூடாது சரியா…” என்று சொல்ல, மெல்ல தலையைத் தூக்கி நோக்கியவள், “ம்ம்… சதி தாத்தா, அம்மாவ திட்ட வேணாம் சொல்லுங்க…” என்றதும் அனைவரும் திகைத்து நோக்க இந்துவின் முகத்திலும் அதே பிரமிப்பு தெரிந்தது.
“ஓ… அப்ப உன்னைத் திட்டினதுக்கு உனக்கு வருத்தம் வரலியா… இவளைத் திட்டினதுக்கு தானா… சரியாப் போச்சு…” என்ற அகிலா, “வாங்க தம்பி, காபி சாப்பிட்டுப் போகலாம்…” என்று வீட்டுக்கு அழைக்க, “பரவால்ல மா, இன்னொரு நாள் வரேன்…” என்றவனிடம், “ஒரு காபி குடிச்சா சாமி ஒண்ணும் கண்ணைக் குத்திடாது…” சிரிப்புடன் சொன்னாள் இந்து.
திகைப்புடன் திரும்பியவன் புன்னகைக்க பரமசிவம் மகள் பேசுவதை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தார். காபி குடித்தபின்னரே அங்கிருந்து மகளுடன் கிளம்பினான் வெற்றி.
மனம் அன்று ஏனோ எப்போதும் விட நிம்மதியாய் சந்தோஷமாய் இருப்பது போல உணர்ந்தான். அவனையும் அறியாமல் அவன் மனதுக்குள் இந்து மெதுவாய் நுழைந்து கொண்டிருந்தாள்.
பார்வதியம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த பெரியசாமி இவனைக் கண்டதும் புன்னகையுடன் அருகில் வந்தார்.
“தம்பி, வந்ததும் வீட்டுக்குள்ள கூட வராம மகளைக் கூட்டிட்டு வரப் போயிட்டிங்களா…” என்று கேட்க, “ஆமாம் பெரியவரே… ஒரு நிமிஷம் மாடிக்கு வாங்க…” என்றவன், “அம்மா நைட்டுக்கு சப்பாத்தியும் குருமாவும் பண்ணிடுங்க…” என்றான் பார்வதியிடம்.
“தாத்தா, எப்ப நம்ம ரோஸ் செதில பூ வரும்…”
“இன்னும் கொஞ்சம் பெருசானதும் வந்திடும்டா செல்லம்…”
“ஓ…” என்றவள் யோசித்துவிட்டு, “தாத்தா, நாம வேணும்னா செதிக்கு காம்ப்ளான் குதுக்கலாமா… சீக்கிதம் பெருசாயிதும்…”
“ஹாஹா… அதெல்லாம் பவிக்குட்டி போல பாப்பாக்களுக்கு தான்… செடிக்கு தண்ணியே போதும் மா…”
“ஓ… சதி… பாத்தி, எனக்கு பூதி தான் வேணும்… சப்பாத்தி நானா…” என புன்னகைத்தவர், “சரிடா செல்லம், உனக்கு மட்டும் பூரி போட்டு தரேன்…” என்ற பார்வதி அடுக்களைக்கு சென்றார்.
“தாத்தா, கார்ட்டூன் வச்சுத் தாங்க…” பவி சொல்லவும் பெரியசாமி கார்டூன் வைத்துக் கொடுத்துவிட்டு மாடிக்கு செல்ல வெற்றி உடை மாற்றி இடுப்பில் டவலுடன் குளிக்க தயாராகிக் கொண்டிருந்தான்.
“தம்பி, சக்தி தம்பி எதாச்சும் சொல்லுச்சா…”
“ம்ம்… சொல்லுச்சு சொல்லுச்சு, அதெப்படி, ஒரே ஒரு டைம் பார்த்ததும் அந்தப் பொண்ணை நல்லவன்னு முடிவு பண்ணீங்க பெரியவரே…” என்றவனின் கேள்வியில் புன்னகையே நிறைந்திருக்க அவரும் புன்னகைத்தார்.
“எத்தனை வருஷப் பழக்கம் தம்பி… ஜெயிலுக்குள்ள எல்லா விதமான மனுஷங்களோடவும் இருந்து பழகிருக்கேன்… ஒரு பொண்ணைப் பார்த்ததும் புரிஞ்சுக்க முடியாதா… அதும் இல்லாம நம்ம பவி பாப்பா அதை அம்மான்னு கூப்பிட அனுமதிக்குதே… எந்தப் பொண்ணு சம்மதிக்கும்… இது ஒண்ணு போதாதா…” என்றார் சிரிப்புடன்.
அவன் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருக்க, “மனுஷங்க முகத்தைப் பார்த்தே, தங்கமா, தகரமான்னு கண்டு பிடிக்குற அறிவை அனுபவம் எனக்குக் கொடுத்திருக்கு தம்பி… அந்தப் பொண்ணு தங்கம்… அது இந்த வீட்டுக்கு வந்தா உங்க எல்லார் வாழ்க்கையும் சிறப்பா இருக்கும்… ஒரு பெரியவனா என் மனசுல பட்டதை சொன்னேன்… அப்புறம் உங்க விருப்பம்…” என்றார் அமைதியாக.
“ம்ம்… யோசிப்போம் பெரியவரே… சக்தி உங்களை கேட்டதா சொல்ல சொன்னான்… நீங்க எங்களோட இங்க இருக்கறதுல அவனுக்கும் ரொம்ப சந்தோசம்… நான் குளிச்சிட்டு வந்திடறேன்… நீங்க கீழ போங்க…” என்றதும் அவர் சென்று விட அவர் சொன்னதை யோசித்துக் கொண்டே ஷவர் அடியில் நின்றவனின் இதயம் எப்போதும் விட இன்று சற்று வேகமாய் துடிப்பது போல உணர்ந்தான். புதிதாய் ஒரு உணர்வு சுகமாய் பரவுவது போல தோன்றியது.
“இந்துஜா… ம்ம்… அவ முகத்துல எப்பவும் உள்ள சோகமான புன்னகையே அழகா இருக்கும்… அவ சந்தோஷமா சிரிச்சா எவ்ளோ அழகா இருப்பா…” மனது கேள்வி கேட்டது.
“நாம பாட்டுக்கு அவளை மனசுல நினைச்சுட்டு அவளுக்கு ஒருவேளை என்னைப் பிடிக்கலன்னா…” மீண்டும் மனது கேள்வி எழுப்ப அவஸ்தையாய் உணர்ந்தான்.
“ஆகாஷ் கூட அவ வாழ நினைச்ச சந்தோஷமான வாழ்க்கையை என்னால கொடுக்க முடியுமா… என்னதான் பவி மேல பாசமா இருந்தாலும் அவளுக்கு அம்மாவா வர சம்மதிப்பாளா… அவ சக்தியோட குழந்தைன்னு சொல்லாம மறைக்கிறது தப்பாச்சே… சக்தியைப் பத்தி அவங்க வீட்டுல சொன்னா என்ன நினைப்பாங்க…” கேள்விகள் மாறி மாறி உருவெடுக்க மனதுக்குள் குழம்பினான்.
அவளைப் பற்றி யோசிக்கத் தொடங்கிய இதயத்தை, “எதுவும் நடக்குமென்று முடிவாகும் வரை யோசிக்காதே…” என்று கடிவாளமிட்டு அடக்கினான். மொத்தத்தில் அந்த நாளில் சந்தோசம் வலி, அவஸ்தை எல்லாமே உணர்ந்தான். குளித்து மகளிடம் வந்து டீவி முன்னால் அமர்ந்தவன் மியூசிக் சானலை வைக்க அவன் மனநிலைக்கு ஏற்ற போல ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
வலி என்றால் காதலின் வலி தான்
வலிகளில் பெரிது…
அது வாழ்வினும் கொடிது…
உனை நீங்கியே உயிர் கரைகிறேன்…
வான் நீலத்தில் எனைப் புதைக்கிறேன்…
இதயத்திலே தீ பிடித்து காதல்
என்னைப் பிழிகிறதே…
கண்ணீர் நதியாய் வழிகிறதே…
நினைப்பது தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே…
ஹரிகரன் உருகும் குரலில் பாடிக் கொண்டிருக்க வெற்றிக்கு சிரிப்பாய் வந்தது.
“ச்சே… காதல் வலி தான் பெருசாம்ல… இவங்களுக்கு வயித்துவலியும், பல்லு வலியும் வந்தா தெரியும்… எது பெருசுன்னு…” என நினைத்து சிரிக்க அவன் மடியில் படுத்துக் கொண்ட பவித்ரா, “எதுக்குப்பா சிரிக்கிற…” என்றது.
“ஹூம்… இந்த உலகத்த நினைச்சேன்… சிரிச்சேன் தங்கம்…”
“ஏன்ப்பா, உலகம் ரொம்ப காமெதியா இருக்கா…” அவள் புரியாமல் கேட்க அணைத்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் நேரமே எழுந்து மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவன் பார்வை எதேச்சையாய் எதிர்வீட்டுத் தோட்டத்தில் செடிக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த இந்துவின் மீது விழுந்தது.
குளித்து டவலை தலையில் சுற்றியிருந்தவள் நெற்றியில் குட்டிப் பொட்டும் ஒரு விபூதிக் கீற்று மட்டும். பிரவுன் நிற காட்டன் சுரிதார் அணிந்திருந்தவள் துப்பட்டாவை ஒரு பக்கமாய் முடிச்சிட்டிருந்தாள். டியூப் வைத்து செடிக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவள் நெற்றியில் புரண்ட முடிக் கற்றையை ஒதுக்கிக் கொண்டு வேலையில் கவனமாயிருக்க அவளைப் பார்த்துக் கொண்டிருந்த வெற்றியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“ம்ம்… சிம்பிளா இருந்தாலும் அழகா இருக்கா…” இதுவரை அவளை அப்படி எதுவும் யோசிக்காதவன் மனதில் முதன்முறையாய் ஒரு ரசனை உதித்தது. உடற்பயிற்சி செய்து தேகத்தில் துளிர்த்திருந்த வியர்வையை தென்றல் சுகமாய் தழுவ மனதுக்குள் குளிர்மையை உணர்ந்தான்.
எதற்கோ நிமிர்ந்த இந்து இவன் நிற்பதைப் பார்த்ததும் இயல்பாய் புன்னகைக்க, அவனுக்குதான் தடுமாறியது.
“நாம் பார்ப்பதை கவனித்திருப்பாளோ…” என யோசித்தவன் வேகமாய் புஷ்அப் எடுத்துக் கொண்டே அவள் பார்க்கிறாளா எனவும் கவனித்துக் கொண்டிருக்க அவளோ பின்பு அவனை நோக்கவே செய்யாமல் கடமையே கண்ணாயிருந்தாள். தனக்குள் புதிதாய் வந்த மாற்றத்தை அவன் உணரவில்லை.
காலையில் வழக்கம் போல பவியை பிளே ஸ்கூலில் விட செல்ல அகிலா தான் முன்னில் இருந்தார். இந்துவைக் கண்கள் துளாவ அவளது குரல் வீட்டிலிருந்து ஒலித்தது.
“ஓகே பவிக்குட்டி, பை…” என்று மகளை அங்கே விட்டுவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான்.
ஆபீஸ் சென்றதும் வரிசை கட்டி நின்ற வேலைகள் அவனை அதற்குள் இழுத்துக் கொள்ள ஒவ்வொன்றாய் முடிக்கத் தொடங்கினான்.
டே கேரில் அன்றைய பொழுது எப்பவும் போல் செல்ல மாலையில் வருணும், பவியும் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
“பவி… இன்னைக்கு எங்க அப்பா அம்மாக்கு வெட்டிங் டே… சாயந்திரம் நாங்க மூணு பேரும் ஹோத்தல் போறோமே…” என்றான் வருண்.
“ஓ… வெத்திங் டேன்னா என்ன வருண்…”
“அது… அம்மாவும், அப்பாவும் புது டெஸ் எல்லாம் போட்டு நிறைய மேக்கப், நகை எல்லாம் போட்டு, மாலை மாத்தி, அப்பா அம்மா கழுத்துல தாலி கட்டினாங்களே… அந்த டே தான் வெட்டிங் டே… நான் வீடியோல பார்த்திருக்கேன்…”
“ஓ… அப்படியா…”
“ஆமா, கல்யாணம் முடிஞ்சா தானே ரெண்டு பேரும் ஒரு வீட்டுல இருக்க முடியும்…” என்றான் வருண் மேதாவியாய்.
பவி யோசித்துக் கொண்டிருக்க, “உன்னோட அப்பா இங்க இருக்காங்க, அம்மா எங்கே…” என்றான் வருண்.
“அம்மாதான் உள்ள இதுக்காங்களே…” என்று பவி சொல்ல, “இந்த அம்மா இல்ல, உன் அப்பா கல்யாணம் பண்ணின அம்மா எங்கே…” வருண் கேட்கவும் பவி முழித்தாள்.
அப்போது வாசலில் பைக் வந்து நிற்க வருணின் பெற்றோர் இருவரும் ஒன்றாய் வந்தனர். சத்தம் கேட்டு பூட்டிய கேட்டைத் திறக்க வந்த அகிலா, அவர்களுக்கு வாழ்த்து சொல்ல வருணை அழைத்துக் கொண்டு கிளம்பினர்.
பரமசிவம் முன்னில் ஈஸிசேரில் அமர்ந்திருக்க இரவு உணவுக்குத் தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு அகிலாவும் அவர் அருகில் வந்து அமர்ந்தார். ஒரு பிளேட்டில் உருளை சிப்சுடன் வந்த சிந்து, “பவிக்குட்டி… இந்தா சிப்ஸ் சாப்பிடு…” என்று அவளிடம் அமர்ந்து கொண்டாள். இந்து ஹாலில் துவைத்த துணிகளை மடக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு வேணாம்… நான் அம்மாத்த போதேன்…” என்றவள் எழுந்து இந்துவிடம் வந்தாள்.
“அம்மா…”
“என்னடா பவிக்குட்டி… போர் அடிக்குதா டீவி பாக்குறியா…”
“ஊஹூம்… நீ நம்ம வீட்டுக்கே வந்துதும்மா, அப்பாக்கு தான் இப்ப உன்னைப் பிதிக்கும் சொன்னார்ல… அப்புதம் ஏன் தாத்தா வீட்ல இருக்கே… நாம ஒரே வீத்துல ஒண்ணா இருக்கலாம் வாம்மா…” என்றதும் இந்து புரியாமல் குழம்ப மற்றவர்களும் கவனித்தனர்.
“என்னடா பவிக்குட்டி சொல்லற, இந்துவ எங்க கூப்பிடற…”
“பாத்தி, இது என் அம்மா தான… என்னோத, அப்பாவோத எங்க வீத்துல தான இதுக்கணும்… அம்மாவ என்னோத வர சொல்லுங்க பாத்தி…” என்றதும் விஷயம் புரிவது போல் இருக்க அதிர்ச்சியுடன் கணவர் முகத்தைப் பார்த்தார் அகிலா.
“பவி, என்ன விளையாட்டு… அப்படிலாம் சொல்லக் கூடாது…” இந்து அவளை அதட்ட குழந்தை தெளிவாய் சொன்னாள்.
“நான் விளையாதல மா… இங்க பார்த்தியா… உன் போத்தோ கூட வச்சிருக்கேன்…” என்றவள் ஜோவின் இதய ஜிப்பைத் திறந்து இந்துவின் போட்டோவை எடுத்து நீட்ட இந்துவின் இதயமே கிழிந்து விட்டது போல் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அவள் சொன்னதைக் கேட்டு விக்கித்துப் போன மற்றவர்களும் அதிர்ச்சியில் பேச மறந்து பார்த்திருந்தனர்.
தேடல் இல்லா
வாழ்க்கை என்றும்
முற்றுப் பெறுவதில்லை…
நமக்காக தவிக்கவும்
துடிக்கவும் ஓர் இதயம்
உண்டெனில் அதுவே
வாழ்வின் சிறப்பாகும்…
தேடல்களே வாழ்க்கையாகிறது…

Advertisement