Advertisement

அத்தியாயம் – 2
சுள்ளென்று முகத்தில் விழுந்த சூரியக் கதிரில் கண்ணைச் சுருக்கியபடி திறந்தான் வெற்றி. சுவரில் இருந்த டிக்டாக் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருப்பதை சொல்ல அவசரமாய் எழுந்தவன் பவித்ராவைத் தேட அவள் ஜன்னலருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஆசுவாசமானான்.
“பவிக்குட்டி எழுந்திருச்சுட்டியா…”
“ம்ம்…” என்று பதில் கொடுத்தவள் பார்வையை மட்டும் அங்கிருந்து விலக்கவில்லை.
“வா, பிரஷ் பண்ணிட்டு பால் குடிக்கலாம்…” என்றவன் அவளைத் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் செல்ல சமத்தாய் பல்லைக் காட்டினாள் குழந்தை. அவளது காலைத் தேவைகளை முடித்து அவனும் குளித்து டீஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்து வந்தான்.
பவிக்குட்டி அப்போதும் ஜன்னல் அருகிலேயே கையில் ஜோக்குட்டியுடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் பால் எடுத்து வருவதற்காய் கீழே சென்றான்.
முன்தினம் வாங்கி பிரிட்ஜில் வைத்திருந்த பாக்கெட்டை எடுத்து பாலைக் காய்ச்சி சிறிது சர்க்கரை போட்டு கலக்கிக் கொண்டு கொண்டு மாடிக்கு வர அப்போதும் அவள் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருக்க யோசனையுடன் அருகில் சென்றான்.
“பவி, என்ன ரொம்ப நேரமா பார்த்திட்டு இருக்க…”
அவன் கேட்கவும் திரும்பிய குழந்தை, “ப்பா…” என்று ஜன்னலைக் கை காட்ட அவனும் சென்று நோக்கினான்.
அங்கே குட்டிச்சுட்டீஸ் ஷூட்டிங் நடத்த வந்தது போல் இரண்டு மூன்று வயதிலான குழந்தைகள் பட்டாம்பூச்சி போல அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க அவர்களை அடக்கி நிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருந்தனர் அவர்களின் அம்மாக்கள்.
அவர்களுக்கு நடுவே மத்திம வயதில் ஒரு பெண்மணி நிற்க அருகே இளம்பெண் ஒருத்தி புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். சில குழந்தைகள் அழுது கொண்டிருக்க அவர்களுக்கு மிட்டாய் கொடுத்தும் விளையாட்டு சாமான்களைக் காட்டியும் வசப்படுத்திக் கொண்டிருந்தாள் சுரிதார் அணிந்த பெண்ணொருத்தி. அது ஒரு டேகேர் சென்டர் என்பதை முன்னில் இருந்த பெயர்ப்பலகையும் உறுதி செய்ய திரும்பினான்.
குழந்தைகளைக் கண்டு தான் பவி அங்கேயே நிற்கிறாள் என நினைத்துக் கொண்ட வெற்றி, “என்ன பவி, உனக்கும் அங்கே போகணுமா…” என்றான்.
“ம்ம்…” வேகமாய் தலையாட்டியவளின் கண்ணில் மிகுந்த ஆவல் தெரிய, “சரி, அப்புறம் போகலாம்…” என்றவன் அழைப்பு மணி ஓசை கேட்டதும் கீழே சென்றான்.
கதவைத் திறக்க அவனது ஆபீஸ் ஸ்டாப் வேணு கோபால் நின்று கொண்டிருந்தான்.
“சாரி, சார்… கொஞ்சம் லேட்டாகிடுச்சு…” சொல்லிக் கொண்டே கையிலிருந்த டிபன் பார்சலையும், பைலையும் அங்கிருந்த மேசை மீது வைத்தான்.
“ம்ம்… இந்த திங்க்ஸ் எல்லாம் செட் பண்ண ஆளைக் கேட்டிருந்தேனே…”
“கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க சார்…”
“ஓகே… சமையல் செய்ய, வீட்டைப் பார்த்துக்க ஆள்  கிடைச்சாங்களா…”
“வீட்டு வேலைக்கு நம்ம வாட்ச்மேன் சம்சாரம் வரேன்னு சொல்லுச்சு… சமையலுக்கு தான் ஆளே கிடைக்கலை… ரெண்டு நாள்ல சரி பண்ணிடலாம் சார்…” என்ற கோபால் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதமே ஆகியிருந்தது.
“பாப்பா எங்க சார்… பசியோட இருக்கப் போகுது…” சொல்லிக் கொண்டே அடுக்களைக்கு சென்று வேண்டிய பாத்திரங்களை எடுத்து வந்து மேசை மீது வைத்தான்.
வெற்றி பவியை அழைத்து வர இருவரும் சாப்பிட்டனர்.
“இங்கே கொஞ்சம் செட் ஆகற வரைக்கும் ஆபீஸ் வொர்க் எல்லாம் மானேஜரைப் பார்த்துக்க சொல்லிருக்கேன்… ஏதாவது முக்கியமான பைல்ஸ், செக் சைன் வாங்க வேண்டி இருந்துச்சுன்னா வீட்டுக்கு கொண்டு வந்திடு…”
“ஓகே சார்…” என்றவன், “வீட்டுக்கு முன்னாடியே டேகேர் ஸ்கூல் இருக்கும் போலருக்கே சார்…” என்றான்.
“ஆமாம், அதுக்கென்ன…”
“பாப்பாவைப் பார்த்துக்க ஆள் வேணுமே… அதான் அங்கே விடலாமேன்னு…” என்றவனை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவன், “ம்ம்… நான் பார்த்துக்குவேன்…” என்றான்.
தான் சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை வெற்றியின் முகத்திலிருந்து புரிந்து கொண்ட கோபால்,  “அப்ப நான் கிளம்பட்டுமா சார்… லஞ்ச் வாங்கிட்டு வரணுமா…” என்று கேட்க, “வேண்டாம் நான் ஆர்டர் பண்ணிக்கறேன்… நீ ஆபீஸ்ல இரு…” என்றான் வெற்றி.
“சரி சார்…” என்ற கோபால் கிளம்பிச் செல்ல பவியைத் தேடினான் வெற்றி. அவள் மீண்டும் மாடியில் ஜன்னல் அருகே நிற்பதைக் கண்டவன், “கோபால் சொன்ன போல அந்த கிட்ஸ் ஸ்கூல்ல பவியை சேர்த்துடலாமா… அங்கே நின்னு குழந்தைகளைப் பார்த்துட்டே இருக்காளே…” என யோசித்தான்.
வெற்றிவேல் ஒரு யார்ன் கமிஷன் ஏஜன்சி நடத்திக் கொண்டிருந்தான். கமிஷனில் கறாராய் இருந்தாலும் அவன் ஆர்டர் கொடுக்கும் மில்லின் நூல் தரமாக இருந்ததால் அவனுக்கென்று நிரந்தர வாடிக்கையாளர்கள் இருந்தனர். மார்க்கெட்டிங், பேமன்ட் பாலோ செய்வது மட்டும் அவன் பார்த்துக் கொள்ள மற்ற அலுவல்களை கவனித்துக் கொள்ள ஒரு மனேஜரும் நான்கு பணியாளர்களும் இருந்தனர். வெற்றியின் வேலை அதிகமும் அலைபேசியிலேயே முடிந்துவிடும் என்பதால் அலுவலகத்தில் தினமும் சிறிதுநேரம் இருந்துவிட்டு கிளம்பிவிடுவான்.
வெற்றிவேல் மேசை மீதிருந்த பைலைப் பார்த்துக் கொண்டிருக்க கோபால் ஏற்பாடு பண்ணியிருந்த ஆட்கள் பொருட்களை ஒழுங்குபடுத்த வந்து விட்டனர்.
அவர்களோடு நின்று எதை எங்கு வைக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்க வாசலில் ஒரு முதிர்ந்த பெண்மணியின் குரல் கேட்டு எட்டிப் பார்த்தான்.
“என்ன வேணும்…”
“தம்பி, இங்க புதுசா வந்திருக்கிங்கன்னு கேள்விப்பட்டேன்… சமையல் வேலை, வீட்டு வேலைக்கு ஆள் வேணுமான்னு கேக்கலாம்னு வந்தேன்…” சொன்ன பெண்மணிக்கு வயது அறுபது இருக்கலாம்.
யோசித்தவன், “நல்லா சமைப்பீங்களா… முன்னாடி எங்க வேலை செய்துட்டு இருந்திங்க…” விசாரித்தான்.
“இங்க பக்கத்துல தான் என் வீடு… வீட்டுல மெஸ் நடத்திட்டு இருந்தேன்… வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லாம நடத்த முடியாமப் போயிருச்சு… ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு… இப்ப அவரும் போயி சேர்ந்துட்டார்… அதான் எங்காச்சும் வேலை பார்த்து பொழைச்சுக்கலாம்னு இருந்தேன்…” சொன்னவர் கண்களில் சோகம் தெரிந்தது.
“சரி, ரெண்டு நாள் கழிச்சு வாங்க… சொல்லறேன்…” வெற்றி சொல்லவும், “நன்றி தம்பி…” என்று வணங்கிவிட்டு சென்றார்.
அவனது பார்வை எதிர்வீட்டுக்கு செல்ல குழந்தைகளின் சத்தம் பல விதமாய் கேட்டது. சில குழந்தைகள் முன்னில் விளையாடிக் கொண்டிருக்க சில உள்ளே அழும் சத்தமும் கேட்டது. ஒரு பெண்மணி அதட்டிக் கொண்டிருந்தார்.
பூட்டி இருந்த கேட்டை ஒரு பையன் உலுக்கிக் கொண்டு, “கேத்த தித… அம்மாத்த போணும்…” என்று அழுது கொண்டிருக்க அவனிடம் புன்னகை முகமாய் ஒரு பெண் மண்டியிட்டு அமர்ந்து சமரசம் பேசிக் கொண்டிருந்தாள்.
“வருண் சமத்துப் பையன் தான… நல்ல பிள்ளையா விளையாடிட்டு இருந்தா அம்மா சீக்கிரம் வந்து வீட்டுக்கு கூட்டிட்டுப் போவாங்க… அம்மா வரும்போது வருணுக்கு என்ன வாங்கிட்டு வருவாங்க தெரியுமா…”
“எனக்கு ஒண்ணும் வேணாம் போ…” அவன் சிலிர்த்துக் கொள்ள, “அச்சோ உனக்கு கிண்டர்ஜாய் பிடிக்காதா… அம்மாக்கு போன் பண்ணி வாங்க வேண்டாம்னு சொல்லிடட்டுமா…” அவள் கேட்கவும் யோசித்தான் வருண்.
“நிஜம்மா அம்மா கிந்தர்ஜாய் வாங்கி வதுவாளா…”
“ஆமாடா கண்ணா… அதும் ஒண்ணுல்ல, ரெண்டு…” சிரித்த முகமாய் சொன்னவள் அவன் தலையை செல்லமாய் கலைக்க, அவன் அழுகையை கிண்டர்ஜாய் லஞ்சத்துக்கு தொலைத்துவிட்டு விளையாடச்சென்றான்.
அவர்கள் பேசியதும் அப்பெண்ணின் முகமும் சரியாகத் தெரியாவிட்டாலும் அவள் எதோ சமரசம் பேசுகிறாள் என்பது மட்டும் பக்கவாட்டு தோற்றத்தில் புரிந்தது. வேலைகளின் அணிவகுப்பு நினைவில் வர உள்ளே சென்றான்.
வருணிடம் சமாதானம் பேசி நிமிர்ந்த இந்து எதேச்சையாய் எதிர்வீட்டைப் பார்க்க அங்கே தட்டலும் முட்டலுமாய் ஒரே சத்தமாய் இருந்தது.
“அக்கா, எனக்கு பாத்தூம் போணும்…” ஒரு குட்டிப் பெண் அவளிடம் சொல்ல, “செல்விக்கா, சங்கவியை பாத்ரூம் கூட்டிப் போங்க…” என்று குரல் கொடுத்தாள்.
அந்த செல்வி, “ஐயய்ய, ஒரு நிமிஷம் நிக்க விடறாங்களா, ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பாத்ரூம் போயிட்டே இருக்க வேண்டியது…” புலம்பிக் கொண்டே செல்வி வரவும்,
“அப்படி சொல்லாதிங்க செல்விக்கா, அவங்க அப்பா, அம்மா நாம நல்லாப் பார்த்துக்குவோம்னு நம்பிதானே விட்டுட்டுப் போறாங்க… குழந்தைங்கன்னா இப்படிதானே இருப்பாங்க…” அவள் சொல்லவும்,
“ஹூக்கும், இந்தப் புள்ளைக்கு என்னவோ பெரிய அன்னை தெரசான்னு மனசுக்குள்ள நினைப்பு… யாரையும் ஏதும் சொல்ல விடாது…” மனதுக்குள் நினைத்தாலும் வெளியே சொல்லாமல் சங்கவியை அழைத்துச் சென்றார்.
குழந்தைகளை சமாதானப்படுத்தியும், சாப்பிட வைத்தும், கதை, ரைம்ஸ் சொல்லியும் பொழுது ஓடிவிட மதியம் சில குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர். சில குழந்தைகளின் பெற்றோர் மாலை வேலை முடிந்து திரும்பும்போது தான் அழைத்துச் செல்ல வருவர். அதனால் ஐந்து குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்களை உறங்க சொல்லி படுக்க வைக்க ஒன்றிரண்டு குழந்தைகள் உறங்கினாலும் புதிதாய் வந்த குழந்தைகள் புதிய சூழ்நிலைக்குப் பொருந்தாமல் வீட்டுக்கு செல்ல வேண்டுமென்று அழுது அடம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டு இருந்தாள் இந்துஜா. சிந்து மதியம் வரை இருந்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாள். அகிலாண்டேஸ்வரி புதிதாய் வந்த குழந்தைகளின் விவரங்களை பைல் செய்து கொண்டிருக்க அலங்கோலமாய் கிடந்த பொருட்களை ஒதுக்கி வைத்து வாசலை செல்வி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.
உறங்கிக் கொண்டிருந்த வருண் சட்டென்று எழுந்து அமர்ந்து, “அக்கா, அம்மா வந்தாச்சா… கிந்தர் ஜாய் எங்கே…” என்று கேட்க, உறக்கத்திலும் அதையே நினைவு வைத்துக் கொண்டிருந்தவனைக் கண்டு புன்னகைத்த இந்து, “அம்மா கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க வருண்… நீ தூங்கு…” என்று சொல்ல, அவன் படுத்துக் கொண்டான்.
“இந்து, இந்த பழைய பைல் எல்லாம் மேல பரண்ல வச்சிடும்மா…” அகிலா சொல்ல, “சரிம்மா…” என்றவள், “உங்களுக்கு டயர்டா இருந்தா வீட்டுக்குப் போயி ரெஸ்ட் எடுங்கம்மா… நான் பார்த்துக்கறேன்…” என்றாள்.
“இல்லடா, நாலு மணிக்கு வருண் தவிர மத்த நாலு பேரையும் அழைச்சிட்டுப் போக வந்திருவாங்க… அவங்க போனதும் வருணை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடலாம்… அவன் அம்மா வர்றதுக்கு ஆறாகிடும்…”
“சரிம்மா…” என்றவள் பைல்களை அழகாய் அடுக்கி வைத்து பழைய பைல்களை பரணில் வைத்தாள். அங்கங்கே இரைந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களை ஒதுக்கி முடித்து குழந்தைகளின் பாகில் அவர்கள் கொண்டு வந்த பாத்திரங்களை சரி பார்த்து எடுத்து வைத்தாள்.
சிறிது நேரத்தில் ஒவ்வொருத்தராய் வந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல வருணை அழைத்து வரச் சொல்லிவிட்டு அகிலாவும் வீட்டுக்கு சென்றார். செல்வி ஹாலை துடைத்து சுத்தப்படுத்திக் கொண்டிருக்க வாசல்படியில் அன்னை வரவை எதிர்நோக்கி சோகமாய் அமர்ந்திருந்தான் வருண். அவன் முகத்துக்கு நேரே கிண்டர் ஜாய் ஒன்று நூல் ஒன்றில் தொங்கிக் கொண்டிருக்க அதைக் கண்டவன் விழிகள் திகைப்பில் மலர்ந்தன.
“அம்மா…” என்று ஆவலுடன் அதைப் பற்றியவன் திரும்ப, தனக்குப் பின்னில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த இந்துவைக் கண்டதும் முழித்தான்.
“அம்மா எங்கே…” குட்டிக் கண்கள் ஆவலுடன் தேட, அவனது அடர்ந்த சிகையை செல்லமாய் கலைத்து விட்டவள், “அம்மா கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க வருண்… ஏன் இந்த அம்மாவை உனக்குப் பிடிக்கலையா…” என்று சிரிக்க,
“ஐயே, நீ அம்மாவா… நீ அக்கா…” என்றான் வருண்.
“ஹாஹா ஓகே, சரி வா… கொஞ்ச நேரம் எங்க வீட்ல இருப்பியாம்… அதுக்குள்ளே அம்மா வந்திருவாங்களாம்…” சொல்லிக் கொண்டே அவன் கையைப் பற்றி வீட்டுக்கு அழைத்துச் செல்ல இப்போது அவளுடன் சிறிது பழகி விட்டதால் பிகு பண்ணாமல் கிண்டர் ஜாயுடன் நடந்தான் வருண். அவனது அன்னை ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிவதால் ஐந்தரை மணிக்கே கிளம்புவாள். தந்தை மில்லில் சூபர்வைசர் என்பதால் வீடு திரும்ப இரவாகிவிடும்.
இந்துவின் குடும்பத்தை ஓரளவுக்கு பழக்கம் இருந்ததால் அவர்களிடம் தனது சூழ்நிலையைச் சொல்லி ஆறு மணிவரை பார்த்துக் கொள்ள சம்மதம் வாங்கியிருந்தாள்.
அதற்குப் பிறகு இந்து என்ன செய்தாலும் அவள் பின்னிலேயே சுற்றிக் கொண்டிருந்தான் வருண். அவள் காபி குடிக்கும் போது அவனுக்கும் சிற்றுண்டி கொடுத்து சாப்பிட வைத்து தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள்.
“அக்கா, இந்த செதி பேதென்ன… இது என்ன பூ… இது ஏன் குத்தியா இதுக்கு… எனக்கும் வீத்ல வைக்க செதி ததுவியா…” என்ற அவனது கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாய் பதில் சொல்லிக் கொண்டே இந்து தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
ஆறுமணிக்கு வேலை முடிந்து திரும்பிய அவன் அன்னை அழைக்க வந்தபோது, “பை அக்கா, நாளைக்கு வதேன்… டாட்டா…” என்ற மகனைக் கண்டு வருண் அம்மாவே திகைத்துப் போனாள்.
“பரவால்லியே இந்து, வருண் உன்னோட நல்லா ஒட்டிகிட்டான் போல…” அவன் அன்னை கேட்க, “வருண் செம கியூட் அண்ட் ஸ்மார்ட் பாய் அக்கா…” என்றாள் இந்து புன்னகையுடன்.
அவர்கள் சென்றபின் வெகு நேரம் தோட்டத்தில் அமர்ந்திருந்தவள் இரவு உணவு தயார் செய்ய வீட்டுக்கு செல்ல அன்னையே சமையலைத் தொடங்கி இருந்தார்.
“இன்னைக்கு நான் சமைக்கறேன் இந்து மா… நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு…” என்று அகிலா சொல்ல, “ஹூக்கும், உன் பெரிய பொண்ணை மட்டும் ரெஸ்ட் எடுக்க சொல்லு… என்னை மட்டும் பாத்திரம் விளக்கு, பல்லு விளக்குன்னு இம்சை பண்ணு…” சிந்து சிணுங்கினாள்.
“அவ காலைல இருந்து நிக்காம வேலை செய்துட்டு இருக்கா, நீ என்னடி பண்ணின… ரெஸ்ட் எடுக்கறதுக்கு…” அகிலா சின்னமகளிடம் கத்த ஹாலில் தந்தையுடன் பேப்பர் படித்துக் கொண்டிருந்த இந்து புன்னகைத்தாள்.
“போம்மா, சும்மா இருக்கறது எவ்ளோ கஷ்டம்னு உனக்குத் தெரியுமா… உடம்பெல்லாம் தூங்கித் தூங்கி செம டயர்டா இருக்கு… கொஞ்சம் சூடா ஹார்லிக்ஸ் கலந்து தர்றியா…”
அவள் சொன்னதைக் கேட்டு இந்துவும் தந்தையும் சிரிக்க அகிலா கோபத்துடன் தோசைக் கரண்டியைத் தூக்கி வர, சிந்து ஓடிவந்து தந்தை பின்னில் ஒளிந்து கொண்டாள்.
“செல்லப்பா, அகிலாண்டேஸ்வரி காளி அவதாரம் எடுத்துட்டு என்னை கொல்ல வருது, ப்ளீஸ் காப்பாத்துங்க…” என்று அவர் நாற்காலியின் இடையில் புகுந்து சுவரோடு சேர்ந்து நின்று கொள்ள, முன்னில் நின்று கண்ணை உருட்டிய மனைவியைக் கண்ட பரமசிவம், “ஹஹா, விடு அகிலா… அவ அப்படிதான் பேசுவான்னு உனக்குத் தெரியாதா… நம்மோட இருக்கற வரைக்குமாச்சும் நம்ம புள்ளைங்க சந்தோஷமா இருக்கட்டும்…” சொல்லும்போதே அவரது குரல் மாற சட்டென்று மூத்த மகளை நோக்கினார் அகிலா. அவள் முகத்தில் எப்போதும் உறைந்திருக்கும் அதே சிரிப்பைத் தவிர வேறெதையும் காணவில்லை.
கவலைக்குக் காரணம் இருக்கலாம்
புன்னகைக்க காரணம் தேவையில்லை…
முகம் திருப்பும் மழலையின் கோபம்…
நிமிடத்தில் நீர்த்துப் போகும்…
எதற்காய் அழுதோம் என்பதே
மறந்து கை கோர்த்து நடந்து
அடைக்கலமாகும் உன்னத அன்பு…
எல்லாம் மறந்து புன்னகைக்க
கள்ளமில்லா கிள்ளையின்
சிரிப்பொன்றே போதாதோ…

Advertisement