Advertisement

“அப்படிப் பார்க்காத வெற்றி… எனக்குதான் நீ, பவி எல்லாம் இருக்கீங்களே…” என்றவனின் குரல் உடைந்திருந்தது.
வெற்றி அமைதியாய் நிற்க அவனே பேச்சை மாற்றினான்.
“அப்புறம், என்னோட நன்னடத்தை காரணமா தண்டனை காலத்தை குறைக்க சொல்லி விண்ணப்பம் போடறேன்னு ஜெயிலர் சார் சொல்லி இருக்கார்… இன்னும் ரெண்டு வருஷம் இருந்தா போதும்னு நினைக்கிறேன்…”
“ஓ… குட் நியூஸ் தான்…” என்றான் வெற்றி சந்தோஷத்துடன்.
“ம்ம்… நானும் ஒரு குட் நியூஸ் கேள்விப்பட்டேன்…”
“என்ன குட் நியூஸ்…” என்றான் வெற்றி புரியாமல்.
“உனக்கும் எதிர் வீட்டுப் பொண்ணுக்கும் சம்திங், சம்திங் போலருக்கு…” அவன் கண்ணை சிமிட்ட அதிர்ந்தான் வெற்றி.
“என்ன உளர்ற… இதெல்லாம் யாரு உனக்கு சொன்னது…”
“எங்களுக்கு நியூஸ் கொண்டு வரவும் ஆள் இருக்கு அண்ணே…” என்றவனை முறைப்புடன் பார்த்தான் வெற்றி.
“அநாவசியமா அந்தப் பொண்ணைப் பத்தி தப்பா பேசாத… பாவம், அதுவே கட்டின அன்னைக்கே புருஷனைத் தொலைச்சிட்டு வேற கல்யாணமே வேண்டாம்னு நிக்குது…” என்றவனின் கண்ணில் வருத்தம் தெரிந்தது.
“ஓ… அப்படியா…” வருத்தமாய் கேட்டவன், “அதெல்லாம் எனக்குத் தெரியாதுடா… ஆனா எந்தப் பொண்ணுகிட்டயும் எட்டி நின்னே பேசற நீ அந்தப் பொண்ணு கிட்ட உரிமையா பேசற போல கேள்விப்பட்டேன்… ஒருவேள, அந்த பொண்ணு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா உனக்கும் ஓகே தான…” அவன் கேட்கவும் இதுவரை அப்படி யோசிக்காத வெற்றி நெற்றியை சுருக்கினான்.
“என்னடா பேசற…” என்றதும் சக்தியின் குரல் சீரியசானது.
“எவ்ளோ நாள் தான் நீ இப்படி தனியாவே இருப்ப… உனக்கு கல்யாணமாகி சந்தோஷமா வாழறதை நானும் பார்க்க வேண்டாமா… அதுவும் அந்தப் பொண்ணை பவிக்குட்டி அம்மான்னு தான் கூப்பிடறா போலருக்கு… இதைக் கேள்விப் பட்டதும் எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா… ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த போலவும் ஆச்சு… உனக்கும் ஒரு வாழ்க்கையாச்சு…”
“டேய், எனக்கு வாழ்க்கை வேணும்னு நான் கேட்டேனா… அந்தப் பொண்ணு மேல மரியாதை இருக்கு… ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆகிருச்சேன்னு வருத்தம் இருக்கு… அதைத் தாண்டி நான் இப்படிலாம் யோசிக்கக் கூட இல்ல…” என்றான் வெற்றி சற்று கோபத்துடன்.
“இதுவரைக்கும் யோசிக்கலைனா என்ன, இனி யோசி… என் வாழ்க்கை தான் நாசமாயிருச்சு… உனக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு நம்ம அம்மா எவ்ளோ ஆசைப்பட்டாங்க… அவங்க ஆத்மாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டியாச்சும் நீ யோசிக்கலாம்ல…” சக்தி கலங்கிய குரலில் சொல்ல வெற்றி அமைதியாய் இருந்தான்.
“உனக்கு மட்டும் தான் என் வாழ்க்கை பத்தி கவலை இருக்குமா… உன் கூடப் பிறந்த எனக்கு உன் வாழ்க்கைல அக்கறை இருக்கக் கூடாதா…” என்றவனின் கண்கள் கலங்க வெற்றிக்கு மனம் நெகிழ்ந்தது.
“நான் அப்படி சொல்லலை டா…”
“நீ எப்படி சொன்னாலும் என் மனசுல உள்ளது இதுதான்… உனக்கும் ஒரு வாழ்க்கை வேணும்… அது இந்தப் பொண்ணா இருந்தா பவித்ரா சந்தோஷப்படுவா… இல்ல வேற பொண்ணுன்னாலும் நீ சந்தோஷமா இருக்கணும்…” அவனது குரல் நெகிழ்ந்திருக்க,
“சரி பீல் பண்ணாத… நம்ம கைல என்ன இருக்கு… அந்த கடவுள் நினைக்கற போல நடக்கட்டும்…” என்றான் வெற்றி. “ம்ம்… அதுக்காக நீ எந்த முயற்சியும் எடுக்காம இருக்கக் கூடாது…” சக்தி சொல்லவும் சிரித்தான்.
“சரி, இதெல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சுது… பெரியசாமி ஐயா அடுத்த நாள் காலைலயே வீட்டுக்கு வந்துட்டார்… வேற யாரு உனக்கு சொன்னாங்க…” என்றான் வெற்றி.
பெரியசாமி ஐயாவும் இங்க உள்ள வார்டனும் ரொம்ப நெருக்கம்… நான் எதார்த்தமா வார்டன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது அவர் கால் பண்ணார்… உன்னைப் பார்த்தது பத்தி அவர்கிட்ட சொல்ல சொல்லிருக்கார்… பக்கத்துல வேற யாரும் இல்லாததால வார்டன் என்கிட்டே கொடுத்து பேசிக்க சொன்னார்…” என்றான் சக்தி.
“ஓ… இதெல்லாம் இங்க நடக்குதா… அப்ப எனக்கு   உன்னோட பேசணும்னாலும் கால் பண்ணலாமா…”
“இதுக்கு மேலயும் நடக்கும்… ஆனா சிக்கினா அவ்ளோதான்… வார்டன் ஏதோ என்மேல உள்ள மரியாதைல என்கிட்ட பேச கொடுத்தார்… சிக்கினா அவரு வேலைக்கும் பிராப்ளம் ஆயிடும், நீ கால் பண்ண வேண்டாம்…” என்றான் சக்தி.
“ம்ம்… சரிடா, நான் கிளம்பறேன்…” என்றவனிடம், “ம்ம்… பவிக்குட்டிய பார்த்துக்க… நான் சொன்னதைப் பத்தி யோசி…” என்றவன் உடன்பிறப்புக்கு விடை கொடுத்தான்.
மாலையில் பள்ளி முடிந்து சோர்வுடன் வந்தாள் சிந்து. வழக்கம் போல் எல்லாக் குழந்தைகளும் வீட்டுக்கு செல்ல வருணும், பவித்ராவும் மட்டும் இருந்தனர்.
“ஹப்பா சாமி, முடியலப்பா… அக்கா பசிக்குது, காபி குடேன்…” கையிலிருந்த புத்தக மூட்டையை கீழே வைத்துவிட்டு பவி சாப்பிட்டுக் கொண்டிருந்த சிப்சை எடுத்து அவள் வாயில் போட்டுக் கொள்ள, “பசிக்குதா… இந்தா…” என்று பவி பிளேட்டை நீட்ட அகிலா சிரித்தார்.
“என்னமோ பத்து நாள் சோத்தைப் பார்க்காத கணக்கா வரும்போதே பசின்னு அலறிட்டு வர வேண்டியது… போயி கைகால் அலம்பிட்டு சாப்பிடு… அப்புறம் காபி குடிக்கலாம்…”
“என்ன அதிசயம், இன்னைக்கு தான் அகிலாண்டேஸ்வரி அன்னபூரணியா மாறி என் பசியைப் பத்தி யோசிச்சிருக்கு…” சொல்லிக் கொண்டே அவள் உள்ளே செல்ல புன்னகையுடன் இந்து அவளுக்கு தட்டில் சாப்பாடு எடுத்து வைத்தாள்.
“என்ன குழம்பு… ஆஹா, காரக் குழம்பா…” என்று சொல்லிக் கொண்டே அமர்ந்தவள், “பவிகுட்டி… உனக்கு மம்மு வேணுமா…” என்று கேட்க, “வேண்டாம், நீயே சாப்பிது…”
“வருண், உனக்கு…” எனவும், “வேண்டாம்…” என்றான் அவன்.
“சரி எனக்கு தோட்டத்துல வேலை இருக்கு…” என்ற இந்து கிளம்ப, குழந்தைகளும் உடன் சென்றனர். அதற்குள் ஜோதி அங்கே எல்லாம் கூட்டி சுத்தப்படுத்தி வந்தார்.
“அகிலாம்மா, வேலை முடிஞ்சுது… நீங்க பூட்டிக்குங்க… நான் வீட்டுக்கு கிளம்பறேன்…” என்று கிளம்பிவிட்டார். அப்போது பரமசிவத்தின் அலைபேசி ஒலிக்க, கல்பனாவின் எண்ணைக் கண்டவர், கணவரிடம் கொடுக்க சென்று மகளின் கல்யாண விஷயத்தைப் பற்றி அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார். சாப்பிட்டு முடித்து சிந்து வழக்கம் போல புத்தக மூட்டையுடன் ஹாலில் சென்று அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரம் இந்து செடிக்கு தண்ணீர் விடுவதையும் கீழே விழுந்திருந்த இலைகளைக் கூட்டி சுத்தப் படுத்துவதையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர் குழந்தைகள், போர் அடிக்கவே, “அக்கா, கண்ணாமூச்சி விளையாடலாமா…” வருண் கேட்க, “ஆமா, சூப்பரா இருக்கும்… ப்ளீஸ் விளாதலாம் மா…” என்றாள் பவி அழகாய் தலையை சரித்து.
“இல்லடா, எனக்கு வேலை இருக்கு… நீங்க விளாடுங்க…” அவள் சொல்லும்போதே யாரோ செடி வாங்க வரவும் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள் இந்து.
“பவி, வா… நாம விளையாடலாம்…” என்ற வருண் அவளை அழைத்துக் கொண்டு நகர்ந்தான். அதை கவனித்த இந்து,
“பார்த்து விளையாடுங்க…” என்று சொல்லிவிட்டு வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு செடியைப் பத்தி நிறைய கேள்விகள் இருக்க சொல்லிக் கொடுத்தாள்.
“இந்து, லாஸ்ட் டைம் அம்மா வீட்டுல இருந்து அரளி குச்சி கொண்டு வந்து வச்சேன்… வரவே இல்ல… இங்க சிவப்பு அரளி இருக்கா… அப்புறம் ரோஸ், செம்பருத்தி, நந்தியாவட்டை, இட்லிப்பூ, வேற என்னவோ நம்ம பொண்ணு சொன்னாளே…” என்று கணவனிடம் கேட்க, “ரோஸ் செடியும் மல்லிகையும்…” என்று எடுத்துக் கொடுதான் அவன்.
ஆர்வமாய் ஒவ்வொரு செடியையும் அந்தப் பெண் பார்த்து வாங்கிக் கொண்டிருக்க அவள் கேட்ட செடிகளை எல்லாம் எடுத்து வைத்தாள் இந்து. அவர்களிடம் அதைக் கொடுத்து எப்படி வைக்க வேண்டும், உரம் போட வேண்டும் என்று சொல்லி பணம் வாங்கி முடித்து வரும்போது அகிலா டேகேர் கதவை மூடிவிட்டு அலைபேசியில் பேசிக் கொண்டே வீட்டுக்கு சென்றார்.
“வருணும், பவியும் எங்கே…” அவர்களை அங்கே காணாமல் யோசித்தவள் வீட்டுக்கு சென்று பார்த்தாள். அங்கே சிந்து மட்டும் எழுதிக் கொண்டிருந்தவள் இவளைக் கண்டதும், எங்க க்கா, உன்னோட கிட் கேட்ஸைக் காணோம்… “ என்று கேட்டாள்.
“கிட் கேட்டா… எங்கிட்ட இல்லயே…” முழித்தவளிடம்,
“உன்னோடவே சுத்திட்டு இருக்குமே ரெண்டு கிட்ஸ்… பவியும், வருணும்… அவங்களை தான் சொல்லறேன்…” என்றவள் மீண்டும் எழுதுவதில் முனைய வாசலில் இப்போதும் அலைபேசிக் கொண்டிருந்த அன்னையிடம் சென்றாள்.
“அம்மா…” என்றவளை சைகையில் “என்ன…” என்று அவர் கேட்க, “பவியும், வருணும் எங்கே… வீட்டுக்குப் போயிட்டாங்களா…” என்றாள்.
அதைக் கேட்டவர் குழப்பத்துடன் அவளைப் பார்த்துவிட்டு, “சரி, கல்பனா… நான் அப்புறம் பேசறேன்…” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு மகளிடம் நிமிர்ந்தார்.
“என்னடி சொல்லற… வருண் அம்மா கொஞ்சம் முன்னாடி வந்து அவனை அழைச்சிட்டுப் போனாங்க… பவியை நான் பார்க்கலையே… அவ உன்னோட தான் இருப்பான்னு நினைச்சேன்…” அவர் சொல்லவும் அதிர்ந்தாள் இந்து.
“ஐயோ அம்மா, ரெண்டுபேரும் தான் விளையாடிட்டு இருந்தாங்க… பவி என்கிட்ட சொல்லாம வீட்டுக்குப் போக மாட்டாளே… அச்சோ, குழந்த எங்க போனா…” பதறியவளைக் கண்டு அகிலாவின் மனதிலும் அச்சம் நிறைந்தது.
உனைக் காணாத நொடியே
இயங்க மறுக்கிறது என்னுலகம்…
இயல்பான உன் அழைப்பில்
சுமக்காமலே உணர்கிறேன்
அன்னையின் தவிப்பை…
நெஞ்சத்தின் கருவறையில்
நித்தம் சுமக்கிறேன் கண்ணே…
வந்துவிடு கண் முன்னே…

Advertisement