Advertisement

அத்தியாயம் – 19
அடுத்தநாள் காலையில் டாக்டர் செக் பண்ணிய பிறகுதான் பரமசிவத்தை டிஸ்சார்ஜ் செய்வதாக ஹாஸ்பிடலில் கூறியதால் அகிலாவும் சிந்துவும் அங்கேயே அவருடன் இருக்க, காலையில் நேரமாய் எழுந்த இந்து சமையல் வேலைகளை முடித்துவிட்டு ஜோதியின் துணையுடன் பிளே ஸ்கூலில் ஐக்கியமாகி இருந்தாள்.
“எங்க, நான் சொல்லிக் கொடுத்த ரைம்சை சொல்லுங்க பார்க்கலாம்…”
ரேன் ரேன் கோ வே…
கம் அகன் அந்தர் டே…
டாதி வான்ட்ஸ் து பே
ரேன் ரேன் கோ வே…”
கோரஸாய் குழந்தைகள் சொல்லிக் கொண்டிருக்க அதைக் கேட்டவளுக்கு சிரிப்பாய் வந்தது.
அவர்களை அதையே ரிபீட் செய்யுமாறு கூற குழந்தைகள் உற்சாகமாய் கத்திக் கொண்டிருக்க பவிக்குட்டி மட்டும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள்.
அதை கவனித்தவள் “ஸ்டாப்…” என்று கை காட்டி நிறுத்திவிட்டு, “பவிக்குட்டி ஏன் ரைம்ஸ் சொல்லலை…” என்று கேட்க, “ம்மா, மழ வந்தா எவ்ளோ ஜாலியா இருக்கும்… ஏன் அதை வர வேணாம் சொல்லணும்…” என்று கேட்க பதில் சொல்லத் தெரியாமல் முழித்தாள்.
“அது வந்து, மழ பெய்தா நமக்கு எங்கயும் போக முடியாது வெளியில விளையாட முடியாது… வேலை செய்ய முடியாது இல்லியா… அதான் மழைய போக சொல்லி பாடறாங்க…” என்றாள் சமாளிப்பாக.
“அக்கா, நான்லாம் மழ வந்தா சூப்பரா விளாடுவேன்… நானும் அப்பாவும் கப்பல் எல்லாம் செய்து விடுவோம்…” என்றான் வருண். “ஆமா நாங்களும் விளையாடுவோம்…” என்று மற்ற குழந்தைகளும் சொல்ல முழித்துக் கொண்டிருந்தாள் இந்து.
இந்தக் காலத்துப் பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது அத்தனை எளிதா என்ன… அவர்கள் கேள்விக்கு நாம் பதிலைச் சொன்னாலும் அதிலிருந்து பல கிளைக் கேள்விகள் முளைக்கவே செய்கிறது. அதற்கெல்லாம் சரியான பதிலை சொல்லவும் வேண்டும்.
இந்து யோசித்துக் கொண்டிருக்க குழந்தைகள் சலசலவென்று பேசிக் கொண்டிருந்தனர்.
“மழ நமக்கு ரொம்ப முக்கியம் தான் குட்டீஸ்… மழைல நனைஞ்சு விளையாடினா காய்ச்சல், சளி எல்லாம் வரும்… அதனால வீட்டுல விளையாட விடமாட்டாங்க… அதுக்கு தான் மழைய போக சொல்லி பாடி இருக்காங்க சரியா…”
“ஓகே அக்கா…” என்று சொன்னவர்களை மீண்டும் சிறிது நேரம் அந்த நாலு வரியையே ரிபீட் செய்ய சொன்னாள்.
கேட்டுக்கு முன்னால் டாக்சி வந்து நிற்பதைக் கண்டவள், “ஓகே… நீங்க ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டு விளையாடுங்க… நான் வந்திடறேன்… ஜோதிக்கா, பார்த்துக்கங்க…” என்று கேட்டின் அருகே சென்றாள். சிந்து கையில் ஒரு பையுடன் இறங்க பரமசிவம் மெல்ல இறங்கினார்.
அகிலா டாக்ஸிக்கு பைசா கொடுத்துக் கொண்டிருக்க தந்தையிடம் வந்தவள், “அப்பா…” என்று கையைப் பிடிக்க மகளது தோளில் கையிட்டு அணைத்துக் கொண்டவர், “இந்துமா..” என்று வாஞ்சையுடன் அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றார்.
“அம்மா… டிபன் ரெடியா இருக்கு… எல்லாரும் குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க… காபி மட்டும் இப்ப போட்டுத் தரட்டுமா…”
“ஆமாக்கா, ரொம்ப டயர்டா இருக்கு… காபி ப்ளீஸ்…” என்ற சிந்துவை முறைக்க கூட தோணாமல் அமைதியாய் அகிலா அமர்ந்திருக்க, “என்னமா, ஒரு மாதிரி இருக்கீங்க…” என்ற மகளை வலியுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “குளிச்சிட்டு வந்திடறேன்…” என்று அறைக்குள் சென்றுவிட மனைவியின் மனதில் உள்ள வேதனை பரமசிவத்துக்கு புரியவே செய்தது.
“அது ஒண்ணும் இல்லடா, அப்பாக்கு இப்படி ஆனதும் அம்மா பயந்திட்டா… நீ காபியோட அப்பாவுக்கு வெந்நீர் போடுடா… குளிச்சு சாப்பிட்டு நல்லா தூங்கணும்…” என்ற தந்தையை குற்றவுணர்வுடன் பார்த்துவிட்டு அவள் அடுக்களைக்கு செல்ல சிந்து பின்னிலேயே வந்தாள்.
“அக்கா, நீ ஏன் இப்ப பீலிங்க்ஸ் ஆப் இன்டியா ஆகிட்ட… அம்மா என்னைத் திட்டாம போனதுல அவ்ளோ வருத்தமா உனக்கு…” என்று அவள் தோளில் தொங்க,
“சிந்து முதல்ல குளிச்சிட்டு வா… அப்புறம் தான் உனக்கு காபி…” என்றாள் கண்டிப்புடன்.  
“ஹூக்கும்… அதானே… அந்த லேடி ஹிட்லர் கிட்ட தப்பிச்சா இந்த முசுட்டு முசோலினி கிட்ட மாட்டிக்க வேண்டிருக்கு…” அவள் புலம்பிக் கொண்டே செல்ல, “சிந்து, என்னை என்னவோ சொல்லற மாதிரி இருக்கு…” என்றாள் இந்து.
“நீ ஒரு சேலை கட்டின முசோலினின்னு சொன்னேன்…”
அவள் குரல் கொடுத்துக் கொண்டே அறைக்குள் சென்றிருக்க இந்துவுக்கு சிரிப்பு வந்தது. அடுத்த நிமிடமே தந்தையின் உடல்நிலை மனதை வருத்த அதற்கு தானும் ஒரு காரணம் என்பது மனதை வாட்டியது.
“தாத்தா…” வருண், பவித்ராவின் குரல் வாசலில் இணைந்து ஒலித்ததைத் தொடர்ந்து பரமசிவத்தின் குரலும் கேட்டது. “வாடா செல்லங்களா… நீங்க விளையாடலியா…” அவர் கேட்க உரிமையுடன் உள்ளே வந்தனர்.
“உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு அக்கா சொன்னா… டாக்டர் ஊசி போட்டாங்களா தாத்தா…” வருண் அக்கறையுடன் கேட்க சிரித்தார்.
“ஆமா நானு பாத்தேன்… இல்ல தாத்தா… கையில இதா இங்க ஊசி குத்தி வச்சாங்க… ரொம்ப வலிக்குதா தாத்தா…” என்றாள் பவித்ரா.
“ஹாஹா… இல்லடாமா, தாத்தாக்கு சரியாகிட்டு செல்லம்…”  
“ம்ம்… அம்மா எங்க தாத்தா…” என்றவளின் பார்வை இந்துவைத் தேட தந்தைக்கு காபியுடன் வந்தவள், “ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணறிங்க… போயி விளையாடுங்க… தாத்தா ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்று அனுப்பி விட்டாள்.
“அதென்னவோ இந்த ரெண்டு பிள்ளைகளுக்கும் உன் மேல ஒரு தனிப் பிரியம் மா…” தந்தை சொல்ல, “ம்ம்… எனக்கே அது பயமா தான் இருக்குப்பா…” என்ற மகளை யோசனையுடன் அவர் பார்க்க,
“ஒரு அனுபவத்தோட வலியே  இன்னும் தாங்க முடியல…” என்றவளை அர்த்தமாய் அவர் நோக்க, “சரிப்பா, குளிச்சிட்டு சாப்பிடுங்க… நான் பிள்ளைங்க கிட்ட போறேன்…” என்றவள் அவர்களிடம் சென்றாள்.
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜோதி, “அப்பாவைப் பார்த்திட்டு வந்திடறேன் மா…” என்று சொல்ல, “சரிக்கா…” என்றவள் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டாள்.
“அம்மா…” ஓடிவந்த பவித்ரா அவள் கழுத்தைக் கட்டிக் கொள்ள வருண் முறைப்புடன் பார்த்தான். “இத்தனை நாள் பழகினாலும் தான் இந்துவின் விரல் பிடித்து மட்டுமே நடக்க இவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சுகிறாளே…” சின்ன மனது பொறாமையில் புகைந்தது.
கலகலவென்ற குழந்தைகளின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே தோட்டத்தில் இருந்த புல்லை வெட்டி நிலத்தை சீரமைத்துக் கொண்டிருந்தார் பெரியசாமி. காலையிலேயே அவர் தனது பாகை எடுத்து வந்துவிட ஹாலை ஒட்டி இருந்த சின்ன ரூமை அவரை உபயோகித்துக் கொள்ள சொன்னான் வெற்றி. பேச்சுவாக்கில் பவித்ராவுக்கு ரோஸ் பூ மிகவும் பிடிக்கும் என்றதும் “தோட்டத்துல எல்லா கலர் ரோஸ் செடியும் வச்சிட்டாப் போகுது…” என்றவர் உடனே பணியில் இறங்கி விட்டார்.
முதலில் அவரது வரவு பார்வதிக்கு அத்தனை பிடிக்காவிட்டாலும் ஒரு சகோதரனைப் போல் அவர் அன்போடு பழக அவருக்கும் பிடித்துவிட்டது.
அவருக்கும் குடும்பம், உறவென்று எதுவும் இல்லை என்பது புரிய மனம் நெகிழ்ந்தது. யாருமற்றவர்க்கு தெய்வமே துணை… எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி அமையும் உறவுகளை நேசிக்கப் பழகிக் கொண்டால் அநாதை என்ற வாக்கிற்கு அவசியம் தான் என்ன.
இரண்டு நாட்கள் கழிந்திருக்க பவித்ராவும் பெரியசாமியிடம் தாத்தா என்று ஒட்டிக் கொண்டாள். அவளுக்காகவே தினமும் சென்று மஞ்சள் ரோஜா வாங்கி வருபவரை நேசிக்க மட்டுமே தெரிந்த குழந்தைக்கு பிடிக்காமல் போகுமா என்ன… அவளுக்கும் அவரைப் பிடித்தது.
வருணிடம், “எங்க வீட்டுக்கு ஒரு புது தாத்தா வந்திருக்கார்… தினமும் எனக்கு எல்லோ ரோஸ் கொண்டு வதுவார்…” என பெருமை அடிக்கவும் அவள் தவறவில்லை.
“சரி, அதுக்கென்ன… எனக்கும்தான் எங்க தாத்தா வரும்போது கிண்தர் ஜாய், நிறைய டாய்ஸ் எல்லாம் வாங்கிட்டு வருவாரு…” என்று சமாதானப்பட்டுக் கொண்டான் வருண்.
சக்தியைக் கண்டு வெகு நாட்கள் ஆகிவிட்டதால் மறுநாள் அவனைக் காண விண்ணப்பித்திருந்தான் வெற்றி. இரவு பெரியசாமியிடம் அதைப் பற்றிக் கூற, “போயி பார்த்திட்டு வாங்க தம்பி… சக்தி தம்பி எப்பவும் உங்களைப் பத்தியே தான் சொல்லிட்டு இருப்பார்… நீங்கன்னா அவருக்கு ரொம்ப உசுரு…” என்றவரின் கண்கள் நெகிழ்ந்திருந்தது.
“ம்ம்… எனக்கும் அவன் அப்படித்தான்… அவனைப் பற்றி எத்தனை கனவு கண்டிருந்தேன்… எல்லாம் கானலாப் போயிருச்சுங்கற வருத்தம் தான் கோபமா வெளிப்படுது…” மனதுக்குள் நினைத்துக் கொண்டே, “ம்ம்… நான் திரும்ப ஈவனிங் ஆயிடும், பவியை பார்த்துக்கங்க…” என்றவன் சோபாவில் கரடி பொம்மையை அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த மகளை எடுத்துக் கொண்டு மாடியறைக்கு சென்றான்.
அன்று பவித்ரா இந்துவின் போட்டோ ரகசியத்தை சொல்லிய பிறகு அவளுக்குத் தெரியாமல் அதை அவன் மாற்றி வைக்க உறங்கி எழுந்தவள் முதலில் அதைத் தான் தேடினாள்.
ஜோவின் பாக்கெட்டில் போட்டோ இல்லாததைக் கண்டு அழுது புரண்டவளை அதட்டி, கெஞ்சியும் சமாளிக்க முடியாமல் வேறு வழியின்றி அவனே போட்டோவை எடுத்துக் கொடுத்த பின்னரே அழுகையை நிறுத்தினாள் பவி.
அன்னையின் நேசத்துக்காய் ஏங்கும் இந்த குழந்தையைக் கூட நினைக்கவில்லையே அந்த அபர்ணா. யோசித்தவனுக்கு பின்னாலேயே இந்துவின் நினைவும் சேர்ந்து வந்தது.
காதலித்து மணமுடித்து ஒரு குழந்தையும் ஆன பின்பு அன்பான கணவனை, குடும்பத்தை, பெற்ற குழந்தையைக் கூட மறந்து தனது சுகம் மட்டுமே பிரதானமாய் எல்லாரையும் அசிங்கப்படுத்தி சென்ற அபர்ணா எங்கே… தனை நேசித்தவனின் அன்பைப் புரிந்து கொண்டு அவனை பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் செய்து, அன்றே அவனை இழந்த பின்னும் அவனது காதலை மதித்து வேறு யாரையும் மணக்க சம்மதிக்காத இந்து எங்கே… முன்னவள் சாக்கடை என்றால், இந்து சந்தனம் அல்லவா… இருவருக்குள்ளும் எத்தனை வித்தியாசம்…” யோசித்தான்.
குழந்தை மனதில் அன்னையாய் பதிந்த இந்துவின் முகத்தை மாற்றுவது எளிதில்லை எனப் புரிய என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினான். இரண்டு நாள் யோசனைக்குப் பின் மனநல மருத்துவரிடம் இவளை அழைத்துச் சென்றால் ஒருவேளை தீர்வு கிடைக்குமோ என யோசித்தவன் நல்ல மனநலமருத்துவர் ஒருவரை விசாரித்து அறிந்து அடுத்த வாரத்தில் அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்தான்.
அடுத்தநாள் காலை வெற்றி கிளம்பி சென்று விட்டான்.
சக்தியிடம் பெரியசாமியை வீட்டில் தங்க வைத்ததைப் பற்றிக் கூற, “ம்ம்… எனக்கு விஷயம் வந்துருச்சு… ரொம்ப சந்தோஷம்டா… பாவம் நல்ல மனுஷன்… பொண்டாட்டியைக் கொன்ன பிள்ளையை கொன்னுட்டு வந்தவர்… இந்த உலகத்துல நமக்காக யாருமே இல்லேங்கறது எத்தனை வலி தெரியுமா…” என்றவனை இவன் ஆழமாய் நோக்க சிரித்தான்.

Advertisement