Advertisement

அத்தியாயம் – 18
“சரி இந்து…” என்று கூறி வீட்டுக்கு நடந்த வெற்றி அவன் வார்த்தையில் வந்த மாற்றத்தை உணர்ந்திருக்கவில்லை. இந்துவின் சிரிப்புக்குப் பின்னில் ஒளிந்திருக்கும் சோகத்தை அறிந்த பின் அவளுக்காய் மனம் பரிதவித்தது.
“இந்த சின்ன வயதில் இந்துவுக்கு இத்தனை பெரிய துயரம் நடந்திருக்க வேண்டாம்… ஆகாஷைப் போலவே அவனது அன்னையும் எத்தனை அன்பானவர்… மகனுக்கு மருமகளைப் பிடித்துவிட்டாலே அவளை எதிரியாக பாவிக்கும் மாமியார் மத்தியில் மகனுக்குப் பின் மருமகளை மகளாய் நினைப்பது எத்தனை அன்னையருக்கு வரும்…” யோசித்தவனுக்கு தனது அன்னையின் நினைவு வந்தது.
“அம்மா, நீயும் இப்படிதானேமா, பிள்ளைங்களோட விருப்பமே உன் விருப்பமா வாழ்ந்தியே… அதனால தானே சக்தியோட வாழ்க்கைல அந்த ராட்சசி வந்தா… அவளை சொந்த மகளா தானே பார்த்துகிட்ட… அப்படி இருந்தும் அவ இப்படி…” யோசித்தவனின் மனம் அன்னையின் நினைவில் கலங்க கண்கள் கசிந்திருந்தது.
சோபாவில் கண் மூடி அமர்ந்திருந்தவனின் அருகே வந்த பார்வதி, “தம்பி, சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா…” என்று கேட்க, “ம்ம்… சரிம்மா… குளிச்சிட்டு வந்திடறேன்…” என்று தனது அறைக்கு சென்றான்.
குளித்து சாப்பிட்டு தனது அறையில் லாப்டாப்பை எடுத்து வைத்து அமர்ந்தவன் மனதில் அப்போதும் இந்துவின் இறந்தகாலமே நிழலாடியது. பரமசிவத்தின் கலங்கிய கண்கள் கண்ணுக்குள்ளேயே நின்றது.
“நல்ல மனிதர்களுக்கு தான் எத்தனை சோதனைகள்… அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் ஒரு சந்தோஷத்தைக் கொடு இறைவா…” என நினைத்தவனுக்கு அவள் தனது அலுவலகத்தில் வேலைக்கு விண்ணப்பித்தது நினைவுக்கு வர, “போட்டோவுடன் அனுப்பிய அப்ளிகேஷனில் எப்படி போட்டோ மிஸ் ஆகியிருக்கும்…” என யோசித்தான்.
“பவித்ரா வந்ததும் கேட்க வேண்டும்…” என நினைத்துக் கொண்டே மெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அழைப்பு மணியின் ஓசையைத் தொடர்ந்து பார்வதி கதவைத் திறந்து ஏதோ பேசுவது புரிய கீழே வந்து பார்க்க ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
அப்போதுதான் சக்தி அனுப்பிய பெரியசாமியின் நினைவு வர யோசனையுடன் அவரிடம் சென்றான்.
வெற்றியைக் கண்டதும் புரிந்து கொண்டு புன்னகைத்தவர், “வணக்கம் தம்பி, என் பேரு பெரியசாமி…” என்றதும், “உள்ள வாங்க… அம்மா, காபி கொண்டு வாங்க…” என்று பார்வதியை அடுக்களைக்கு அனுப்பிவிட்டு சோபாவில் அமர்ந்தான். என்னதான் சக்தியுடன் நெருக்கமாய் பழகி இருந்தாலும் வெற்றியின் தோற்றமும் பார்வையும் அவரை சற்று எட்டியே நிறுத்த தயக்கத்துடன் நின்றார்.
“உக்காருங்க…” என்று அவன் சோபாவைக் காட்ட தயக்கத்துடனே அமர்ந்தார்.
“அதுவந்து தம்பி, சக்தி தம்பி தான் ஏதாச்சும் உதவி வேணும்னா உங்களைப் போயி பார்க்க சொல்லி அட்ரஸ் கொடுத்துச்சு… நானும் அவர்கூட…” என்று சொல்லிக் கொண்டே பார்வதி வருகிறாரா… எனப் பார்த்தார்.
அதைப் புரிந்து கொண்டவன், “என்ன விஷயம்னு சொல்லுங்க…” என்றான்.
கையிலிருந்த பையை எடுத்தவர் அதில் நாலாய் மடக்கி வைத்திருந்த தாள் ஒன்றை எடுத்து நீட்டினார்.
சக்தியின் சாய்வான அழகான எழுத்துகள் பளிச்சிட்டன.
“டியர் வெற்றி, சாரி அண்ணா… இந்த பெரியவர் பல கஷ்டங்களை அனுபவிச்சவர்… ஜெயில்ல இருந்தாலும் எனக்குன்னு பேசப் பழக இருந்த ஆறுதலான மனுஷன்… அவருக்குன்னு இப்ப உறவுகள் யாரும் இல்லை… உன்னால் முடிந்தால் ஏதாவது உதவியை செய்யவும்…” அன்புடன் உடன் பிறப்பு… என்று முடிந்திருந்தது கடிதம்.
அவரை ஏறிட்டவன் கண்களில் இப்போது ஒரு கனிவு வந்திருந்தது.
“நான் என்ன பண்ணனும் பெரியவரே…”
“இப்ப எங்க ஊருல எனக்குன்னு எந்த உறவும் வீடும் இல்ல… அதான், இங்க ஒரு முதியோர் இல்லத்துல சேரலாம்னு போனேன்… லோக்கல்ல தெரிஞ்சவங்க யாராச்சும் வந்து சொல்லனும்னு சொன்னாங்க… எனக்காக வர்றதுக்கு யாரும் இல்ல… நீங்க வர முடியுமா…” என்றார் தயக்கத்துடன்.
“எங்காச்சும் வேலைக்குப் போகலாமே, ஏன் முதியோர் இல்லத்துல சேர நினைக்கறீங்க…”
“இனி வேலைக்குப் போயி கஷ்டப்பட்டு சம்பாதிச்சு யாருக்கு குடுக்கப் போறேன் தம்பி… இருக்கற நாளை நாலு மனுஷங்களோட கழிச்சிட்டுப் போகலாம்னு தான்…” என்றவரின் வார்த்தையிலும் கண்களிலும் விரக்தி தெரிய யோசனையுடன் பார்த்தான் வெற்றி.
அதற்குள் பார்வதி காபியுடன் வரவே “காபி சாப்பிடுங்க…” என்றவன் தானும் ஒரு கோப்பையை எடுத்துக் கொள்ள கேட் திறக்கும் சத்தம் கேட்க வெளியே எட்டிப் பார்த்தான். பவியும், இந்துவும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.
“அப்பா…” கத்திக் கொண்டே சந்தோஷமாய் ஓடி வந்த பவிக்குட்டி அங்கிருந்த புதியவரைக் கண்டதும் அமைதியாகி வெற்றியின் மடியில் தஞ்சம் புகுந்தாள்.
இந்து தயக்கத்துடன் வாசலில் நிற்க மீண்டும் எட்டிப் பார்த்தவன், “இந்து… உள்ள வாங்க…” என்று குரல் கொடுக்க, “வாம்மா, காபி குடிச்சிட்டுப் போகலாம்…” என்று பார்வதியும் அழைக்க தயக்கத்துடனே வந்தாள்.
“குழந்தை எழுந்ததும் அப்பா வந்தாச்சான்னு கேட்டா… அதான், அழைச்சிட்டு வந்தேன்…” என்றாள் நின்று கொண்டே.
“ரொம்ப தேங்க்ஸ்ங்க… அட உக்காருங்க… ஒரு காபி குடிச்சா தெய்வக் குத்தம் எல்லாம் ஆகிடாது…”
அவன் அவளிடம் சகஜமாய் பேசுவதை பெரியசாமி சற்று ஆச்சர்யத்துடனே பார்த்தார். சக்தி சொன்ன வரையில் வெற்றி பெண்களைக் கண்டாலே தெறித்து ஓடுவான் என நினைத்திருந்தவருக்கு அவன் இயல்பாய் பேசியது வியப்பைக் கொடுத்தது.
பெரியசாமியைக் கண்டவள், “ஏதோ பேசிட்டு இருந்தீங்க போலருக்கு… நான் இன்னொரு நாள் வரேன்…” என்றாள் அவஸ்தையுடன்.
“அதெல்லாம் முடியாது, பர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்கே… காபி குடிச்சிட்டு தான் போகணும்…” என்ற பார்வதி அடுக்களைக்கு செல்ல சோபாவில் அமர்ந்தாள். உடனே வெற்றியின் மடியிலிருந்த குழந்தை இறங்கி வந்து இந்துவின் மடியில் அமர்ந்து கொண்டாள்.
பார்வதி அவளுக்கு ஒரு கோப்பையில் காபியுடன் வரவும் மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டாள்.
“பவிகுட்டி, வா… அவங்க காபி குடிக்கட்டும்…” வெற்றி சொல்ல, “ம்ஹூம்…” என்ற குழந்தை, “நான் தத்தாம இதுக்கேன்…” என்று சமாதானம் சொன்னது.
“இந்த பவி இந்துகிட்ட இப்படி ஒட்டிக்கறது சரியில்லையே…” என நினைத்தாலும் “ஒருவேளை அவளுக்கும் குழந்தையுடன் இருப்பது மனதுக்கு நிம்மதியைக் கொடுக்குமோ…” என யோசித்தான் வெற்றி.
“ம்மா, மாடில நிதைய பொம்மை இதுக்கு… வா காத்தறேன்…”
பவி சொல்லவும் புன்னகைத்த இந்து, “இன்னொரு நாளைக்கு வந்து பார்க்கறேன் செல்லம்…” என்று காபியை குடித்து எழுந்து கொண்டவள், “சரி, நான் வரேன்… வீடு சும்மா சாத்திட்டு வந்தேன்…” என்றவள் அவசரமாய் தலையாட்டி கிளம்பி விட்டாள்.
“பை மா… நான் நாளைக்கு வதன்…” பவித்ரா குரல் கொடுக்க, “ஓகே பவிக்குட்டி…” என்றவள் கேட்டுக்கு சென்றிருந்தாள்.
“எதுக்கு இப்படி ஓடறாங்க… நாம என்ன கடிச்சு தின்னுடவா போறோம்…” என மனதுக்குள் சுணங்கிக் கொண்டே வெற்றி பெரிய சாமியை ஏறிட அவர் பவித்ராவையே பார்த்திருந்தார்.
“ஐயா, என்ன யோசிக்கறீங்க…”
“அதுவந்து, குழந்தை…” என்று இழுக்க புரிந்து கொண்டவன் பார்வதியம்மா நிற்பதைப் பார்த்து, “அம்மா, கப்பெல்லாம் எடுத்திட்டுப் போங்க…” என்று நீட்ட அவர் வாங்கி சென்றார்.
“ம்ம்… ஆமா…” என்றதும் புரிந்து கொண்டவர், “பாப்பா, தாத்தாகிட்ட வாடா செல்லம்…” என்றார் அன்புடன். வெற்றியை ஏறிட்ட குழந்தை, “ப்பா, தாத்தா தான் ஹாஸ்பிதல்ல இருக்காரே… இவரும் தாத்தா சொல்லதார்…”
“ம்ம்… ஆமா டா, இவரும் தாத்தா தான்…” என்றவன், “ஐயா, நீங்க ஏன் முதியோர் இல்லம் போறீங்க… இங்கே தோட்ட வேலை, மளிகை வாங்கறதெல்லாம் பார்த்துட்டு எங்களோடவே இருந்திடுங்களேன்…” என்றான்.
அதைக் கேட்டு திகைப்புடன் நோக்கியவர், “என்னயா தம்பி சொல்லறீங்க…” என, “ம்ம்… என் தம்பிக்கு வேண்டியவர் எனக்கும் வேண்டியவர் தான்… இங்கயே இருங்க…” என்றான்.
அவனைத் திகைப்புடன் நோக்கியவர் சந்தோஷமாய் தலையாட்டினார். “சக்திதான் தங்கம்னு நினைச்சேன்… நீங்க கொஞ்சமும் குறைவில்லைன்னு காட்டிட்டீங்க…” என்று பாராட்ட, சிரித்தான்.
“போங்கயா, உங்க பொருள் ஏதாச்சும் இருந்தா எடுத்திட்டு வாங்க… இங்கயே இருங்க…” எனவும், “ரொம்ப நன்றி தம்பி… எனக்குன்னு இருக்கறது கொஞ்சம் துணி மணியும், ஒரு பெட்டியும் தான்… அதை பஸ்ஸ்டாண்டு லக்கேஜ் ரூம்ல வச்சிருக்கேன்… எடுத்திட்டு வந்திடறேன்…” என்றவர் உற்சாகத்துடன் கிளம்ப வெற்றியின் மனது நிறைந்திருந்தது.
“யாருமில்லாத அவருக்கு இதை விட என்ன உதவியைக் கொடுக்க முடியும்… பணத்தை விட மனித உறவுகள் என்றும் பெரிதல்லவா…” என்று மனது சந்தோஷித்தது.
“ப்பா… விளையாதலாமா…” பவி கேட்கவும் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டவன், “பவிக்குட்டிக்கு என் மேல பாசமே இல்லை… என்னைக் பிடிக்கவே இல்லை…” என்றான்.
புரியாமல் பார்த்த பவித்ரா அவன் அருகில் சென்று, “ப்பா… எனக்குதான் உன்னை ரொம்ப பிதிக்குமே…” என்றாள்.
“நீ பொய் சொல்லற, என்னைப் பிடிக்கும்னா எதுக்கு அவங்க வீட்டுக்குப் போயி அங்கயே தூங்கின…” சிணுங்கினான்.
“அச்சோ, அப்பா… பவிக்குட்டி சின்னப் பாப்பா தானே… அது, எனக்கு அம்மா மடில படுத்ததும் தூக்கம் வந்துச்சா… அதான் தூங்கிட்டேன்…” என்றாள் பவித்ரா.
“ஓ… அப்ப உனக்கு அப்பாவைப் பிடிக்கும் தான… நான் ஒண்ணு கேட்டா உண்மைய சொல்லணும்…” என்றான்.
“நான் எப்பவும் உண்மைய தானேப்பா பேசுவேன்… பொய் சொன்னா சாமி கண்ண குத்தும்னு பாட்டி சொல்லிதுக்கா…”
“ம்ம்… இங்க வா…” என்று அவளை மடியில் அமர்த்திக் கொண்டவன், எப்படித் தொடங்குவது என யோசிக்க அவள் அவனது கேள்விக்காய் காத்திருந்தாள்.
“சரி, நாம மாடிக்குப் போகலாமா…” என அவளை எடுத்துக் கொண்டு மாடி அறைக்கு சென்றான். கட்டிலில் மகளை  அமர்த்தியவன் எதிரில் அமர்ந்து கொண்டான்.
“பவிக்குட்டி, நீ ஏன் அகிலாம்மா, சிந்து எல்லாம் இருக்கும்போது இந்துவை மட்டும் அம்மான்னு கூப்பிடற…”
“அச்சோ அப்பா, அம்மாவைத்தானே அம்மான்னு கூப்பிடுவாங்க… உனக்கு இது கூடத் தெதியாதா…”
“ம்ம்… சரி, இந்து தான் உன் அம்மான்னு உனக்கு எப்படித் தெரியும்… யார் சொன்னாங்க…” என்று கேட்டதும் அவள் சற்று யோசித்துவிட்டு, “நான் சொல்ல மாட்டேன்…” என்றாள்.
“ஏன் சொல்ல மாட்ட…” கடுப்புடன் கேட்க அமைதியானாள்.
“பவிக்குட்டி குட் கேர்ள் தானே… அப்பா கேட்டா சொல்லணும்ல… சொல்லுடா…” என்றான் கனிவுடன்.
“உனக்கு தான் அம்மா பிதிக்காதே…” அவள் சிணுங்கலுடன் சொல்ல அதிர்ந்தான் வெற்றி.
“அப்படின்னு யாருடா சொன்னா…” என்றான் குரல் உயராமல்.
“நம்ம பழைய வீத்துல ஒரு பாத்தி இதுந்தாங்களே… அவங்க தான் சொன்னாங்க… அப்பாக்கு அம்மாவைப் பிதிக்காது… அம்மா பத்தி பேசாதன்னு…”
அதைக் கேட்டு திகைத்தவன், “ருக்மணிம்மா ஏன் அப்படி சொல்லிருப்பாங்க… அதும் குழந்தைகிட்ட…” யோசித்தான்.
“அது அப்ப அம்மாவைப் பிடிக்காம இருந்துச்சு… இப்ப எனக்கு பிடிக்கும்டா…” என்றான் விஷயத்தை அறிந்து கொள்ள. அதைக் கேட்டதும் மலர்ந்தவள் அவன் அருகில் சென்று கன்னத்தில் முத்தமிட்டு கட்டிக் கொண்டாள்
“நிஜமாவா அப்பா… அம்மாவை உனக்குப் பிடிக்குமா…” என்றாள் ஆவலுடன்.
“ம்ம் ஆமாடா, இப்ப சொல்லு… இந்துவை ஏன் அம்மான்னு சொல்லற…” என்றதும் சந்தோஷமாய் இறங்கி ஓடிய குழந்தை செல்பில் இருந்த ஜோவைத் தூக்கி வந்தாள்.
“அப்பா, கண்ண மூடு…” அவள் சொல்லவும், “எதுக்குடா…” என்றவனிடம், “அப்பா…” என்று சிணுங்க கண்ணைப் பொத்திக் கொண்டான் வெற்றி.
பெரிய கரடி பொம்மையின் மார்பில் இதய வடிவில் ஜிப் வைத்த பாக்கெட் இருக்க அதைத் திறந்தவள் உள்ளிருந்து எதையோ எடுத்து கையில் வைத்துக் கொண்டாள்.
“ம்ம்… இப்ப கண்ணைத் திறங்க…” என்றதும் கண்ணைத் திறந்தவன் முன்னில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் அழகாய் அவனை நோக்கி இந்து சிரித்துக் கொண்டிருக்க கண்டவன் திகைத்தான்.
“என் அம்மா அழகா இருக்காங்கல்லப்பா…” குழந்தை சந்தோஷமாய் கேட்க பதில் சொல்லாமல் முழித்தான். உலகத்தில் எல்லாக் குழந்தைக்கும் அம்மா தான் அப்பா யாரென்று சொல்வார்கள்… இங்கே அப்பாவுக்கு அம்மாவை அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தாள் குழந்தை.
“இது உனக்கு எப்படி கிடைச்சது…” என்றான் கையில் வாங்கிக் கொண்டே.
“அதுப்பா, நாளக்கி நானு டிவி பார்த்துத்து இருந்தப்ப ஒரு பாப்பா அம்மாவைக் காணாம அழுதுத்தே இருந்துச்சா… எனக்கும் அது பார்த்து அழுகையா வந்துச்சு… நான் அம்மாவே பார்த்தது இல்லையே… எனக்கும் அம்மாவைப் பார்க்கணும்னு ரொம்ப அழுதேன்… அப்ப அந்தப் பாத்திதான் சொன்னாங்க… உன் அம்மா போத்தோ அலமாரில இருந்தாலும் இருக்கும்… போயி தேதிப் பாருன்னு… நானும் தேதினேனா… அதுல நிறைய போத்தோ இருந்துச்சு… எல்லாம் பாய்ஸ்… இவங்க மட்டும் கேர்ளா இருந்தாங்க.. இதான் என் அம்மா போத்தோவான்னு பாத்திகித்த காத்தப் போனப்ப நீங்க வந்துட்டிங்க… அப்ப பாத்தி சொன்னாங்க… உன் அப்பாக்கு அம்மாவைக் கண்டாலே பிதிக்காது… நீ அப்பாகிட்ட இதைப் பத்தி பேசவோ கேக்கவோ கூதாதுன்னு… போத்தோவையும் காத்தக் கூதாதுன்னு… அதான் நான் யாருக்கும் காத்தாம ஜோ வயித்துக்குள்ள போத்தோவை மறச்சு வச்சுத்தேன்…”
அவள் தலையாட்டிக் கொண்டே நிறுத்தி நிதானமாய் சொல்லி முடிக்க அதைக் கேட்டவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. ருக்மணி அம்மாவுக்கு அபர்ணாவையும் இவர்கள் குடும்பத்தில் நடந்ததைப் பற்றியும் நன்றாகவே தெரியும்… பிறகு ஏன் குழந்தையிடம் இப்படி எல்லாம் சொல்ல வேண்டும்… அதுவும் போட்டோவில் யாரென்பதைக் காணாமலே அவர் அப்படி சொன்னது குழந்தையின் மனதில் எத்தனை ஆழமாய் பதிந்து விட்டது என வருந்தினான்.
“இப்படியெல்லாம் கூறினால் அது குழந்தையின் மனசை பாதிக்கும்னு அவங்களுக்குப் புரியாதா…” யோசித்தவனுக்கு ஒரு காரணமே தோன்றியது.
அபர்ணா வீட்டை விட்டுப் போனதுமே அவள் சம்மந்தமான எல்லாப் பொருட்களையும் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி விட்டனர். அவர்களின் கல்யாண ஆல்பம் வரை எரித்துப் போடுமளவிற்கு வெற்றி கோபத்தில் இருந்தான். அவளைப் பற்றி பேசுவதைக் கூட பாவமாய் நினைத்தான். அதற்குப் பின்னர் அன்னைக்கு உதவிக்காக வந்தவர் தான் ருக்மணியம்மா. எல்லாம் தெரிந்தும் அவர் இப்படி சொல்வதென்றால் “இவள் அழுகையை நிறுத்துவதற்காக அப்படி சொல்லி இருப்பாரோ…” என யோசித்தான்.
அதுதான் உண்மையும் கூட. அன்னையின் மறைவுக்குப் பிறகு வெற்றி வீட்டிலேயே அலுவலக விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருமுறை சக்தியைக் காண ஜெயிலுக்குப் போகும்போது ருக்மணி அம்மாவின் பொறுப்பில் குழந்தையை விட்டு சென்றிருந்தான். அந்த நேரத்தில் இண்டர்வியூவில் தேர்வு செய்த பத்து பேரின் அப்ளிகேஷனை அவன் பார்வைக்காய் வீட்டுக்கு ஸ்டாபிடம் கொடுத்தனுப்பி இருந்தார் மேனேஜர்.
கிளம்பும் நேரத்தில் கொண்டு வந்ததால் அதை வாங்கி அலமாரியில் வைத்துவிட்டு வெற்றி சென்று விட்டான். பவித்ரா ருக்மணியம்மா சொன்னதைக் கேட்டு அதே அலமாரியில் போட்டோவைத் தேட, அப்படி இந்துவின் போட்டோ குழந்தையின் கைக்கு வந்து அவளை அம்மா என்று மனதில் பதித்துக் கொண்டிருந்தாள்.
குழந்தைகள் மனதில் பதிந்ததை அத்தனை எளிதில் மாற்றத் தான் முடியுமா…
உருவான கருவறை
உணர்வாகவில்லை…
உதிரத்தில் உணர்கிறேன்
உன்னை என் தாயாக…
பெற்றவள் யாராயினும்
பெரும் பேரு பெற்றவளாய்
உன் மடியில் நான்….
உதிரத்தில் சுமக்காவிட்டாலும்
உள்ளத்தில் சூல் கொள்வாயா…
உத்தமங்கள் உருவாவதில்லை
உணரப் படுகின்றன…
நிஜங்கள் கானலான போது
நிழல்படம் நிஜமாகுதோ…

Advertisement