Advertisement

அத்தியாயம் – 17
எல்லாம் முடிந்துவிட்டது… ஆம், எல்லாமே முடிந்துவிட்டது.
ஆகாஷ் மாலையிட்ட புகைப்படத்துக்குள் அழகாய் சிரித்துக் கொண்டிருக்க அவனுக்கு முன்னால் சோகமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது தீபம் ஒன்று.
ஒரு நொடிக்குள் கல்யாண வீடு துக்க வீடாய் மாறியிருக்க ஒரு நாள் முடிந்திருந்தும் அவனது அன்னையின் கண்ணில் கண்ணீர் ஓய்ந்தபாடில்லை. புத்திர சோகத்தை மனதுக்குள் ஒதுக்கி மனைவியை தேற்றும் நிலையில் அவன் தந்தையும் இருக்கவில்லை. மிகவும் தளர்ந்து போயிருந்தார்.
மகள் கழுத்தில் தாலி ஏறிய சந்தோசத்தை அனுபவித்து முடிக்குமுன்னே தாலி இறங்கும் சூழ்நிலை உருவானதை ஜீரணிக்க முடியாமல் பரமசிவம் அமைதியாய் கண்ணீர்  வடிக்க, அகிலா மகளின் நிலையை நினைத்து, அவளைத் தேற்றும் வழி அறியாமல் அழுதழுது ஓய்ந்திருந்தார்.
சிந்து, நடந்த இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஓரமாய் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். ஆகாஷின் அன்னை அழுவதும் மயக்கமாவதும், அவன் புகைப்படத்தை நோக்கி மீண்டும் அழுவதுமாய் ஓரமாய் படுத்திருந்தார்.
“இந்து… அவள் எங்கே…”
ஆகாஷ் மயங்கி விழுந்தபோது எப்படி அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தாளோ அதே போல இறுகிய முகத்துடன் அழுகாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். அவனது உயிரற்ற சடலத்தை வீட்டுக்கு கொண்டு வந்து கிடத்தியது முதல், மயானத்திற்கு கொண்டு செல்லும் வரை அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டு அருகிலேயே அமர்ந்திருந்தவள் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீருக்கு கூட பஞ்சமாகியிருக்க வேண்டும். அழவே இல்லை.
கூடியிருந்த உறவினர்களும், நட்பும் அவளிடம் ஏதாவது சமாதானம் சொல்லப் பேசினாலும் அவளிடம் எந்த இணக்கமும் இல்லாமல் ஒரே இடத்தில் வெறித்திருந்தாள்.
அவளது நிலை கண்டு பயந்த அகிலா சிந்துவை அவள் அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ள சொன்னார். உறவினவர்கள் மட்டும் அங்கங்கே இருந்தனர். ஆகாஷின் அன்னை அவரது அறையில் படுத்திருக்க சற்றே திறந்திருந்த ஜன்னல் வழியே அவர் காதில் விழுந்த வார்த்தைகள் ஈயத்தைக் காச்சி ஊற்றியது போல் இதயத்தை சுட்டது.
சுவருக்கு அந்தப்பக்கம் நின்று சில பெண்கள் பேசிக் கொண்டிருப்பது புரிந்தவர் அதிர்ச்சியுடன் கேட்டிருந்தார்.
“என்னத்த சொல்ல, அந்த பொண்ணு காலெடுத்து வச்ச நேரம் புருஷனையே கொன்னுட்டுல்ல நிக்குது…”
“ம்ம், நல்லா இருந்த பையன்… இந்தப் பொண்ணோட ராசி சரியில்ல, இல்லேன்னா இப்படி ஆகிருக்குமா… அந்தப் பொண்ணேயே தான் கட்டிக்குவேன்னு இந்த ஆகாஷ் ஒத்தக் கால்ல நின்னதால ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்க்காம கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்கன்னு நினைக்குறேன்…” என்றாள் மற்றவள்.
“ம்ம்… என்ன காதலோ, அவசரமோ… அதிர்ஷ்டம் இல்லாத பொண்ணை மருமகளாக்கிட்டு இப்ப மகனை இழந்துட்டு நிக்குது அந்தக்கா…”
“அதச் சொல்லு… அந்தப் பொண்ணோட ராசிதான் ஆகாஷை அடிச்சிருச்சு… மாங்கல்ய பலம் இல்லாத பொண்ணைக் கல்யாணம் பண்ணா இப்படிதான் நடக்குமாம்…”
எல்லாம் தெரிந்தது போல் சொன்னாள் மற்றொருத்தி. இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆகாஷின் அன்னைக்கு கோபமாய் வந்தது.
“என் மகன் எத்தனை ஆசையாய் இருந்தான்… இந்த கல்யாணத்திற்கு என்னை சம்மதிக்க வைப்பதற்காய் சாப்பிடாமல் பேசாமல் இருந்தது எல்லாம் அந்தப் பொண்ணு மேல வச்ச பிரியத்தினால் தானே… இப்ப அவளை இப்படித் தனியா விட்டுட்டு வீண் பழி வாங்கிக் கொடுத்து அவசரமா போயி சேர்ந்துட்டானே…” என யோசித்தவருக்கு கண்கள் கரகரவென்று ஊற்றத் தொடங்கியது.
அந்த அறையை ஒட்டியது போல் இருந்த அறையில் தான் இந்துவும் படுத்திருந்தாள். அவளது காதிலும் இவர்கள் பேசியது கேட்டது தான் கொடுமை. அதற்கு முன்னும் சிலர் ஜாடை மாடையாய் அவள் வந்த நேரம் தான் ஆகாஷுக்கு இப்படி ஆகிவிட்டது என்பது போல் பேசிக்கொண்டு தான் இருந்தனர். எதற்கும் மறுப்பு சொல்ல முடியாமல் அவள் மனமே அவளைக் குற்றப்படுத்திக் கொண்டு தான் இருந்தது.
“என் ராசிதானா, அவன் வாழ்வில் நான் வந்த நேரம்தான் அவனையே அழித்து விட்டதா…” என மனதுக்குள் அரற்றிக் கொண்டிருந்தாள் இந்து. அன்று மாலையில் கிளம்பிய உறவுப் பெண்கள் சிலர் ஆகாஷின் அன்னையிடம் வந்தனர்.
“ஒரே ஒரு பையனை ஆசையா வளர்த்தி, அவ காலெடுத்து வச்ச நேரம் தூக்கிக் கொடுத்தாச்சு… அந்த ராசியில்லாத பொண்ணை வீட்ல வச்சிருந்து வேற ஏதாச்சும் அசம்பாவிதம் நடக்கப் போகுது… சீக்கிரம் அதோட வீட்டுக்கு அனுப்பிடு…” ஆகாஷின் பெரியம்மா சொல்ல கோபத்துடன் அவரை ஏறிட்டார் ஆகாஷின் அன்னை.
இந்துவின் அன்னையும், தந்தையும் ஹாலில் இருக்க அந்தப் பெண்மணி பேசியதைக் கேட்டு அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
“அக்கா, என்ன அர்த்தமே இல்லாமப் பேசற… இதுல அந்தப் பொண்ணோட தப்பு என்ன இருக்கு… ஆகாஷ்க்கு விதி முடிஞ்சது… அவனோட அதீத சந்தோஷமே அவன் உயிருக்கு ஆபத்தா முடிஞ்சிருச்சு… அந்தப் பொண்ணை எதுக்கு குத்தம் சொல்லற….” கண்ணீருடன் சீறினார்.
“இதென்னடி அதிசயமா இருக்கு… உண்மைய தானே சொன்னேன்… உனக்கும் உன் பையன் மாதிரி அந்தப் பொண்ணு மேல கிறுக்குப் பிடிச்சிருச்சா… வந்த நாளே புருஷனை முழுங்கினவளை அடிச்சு துரத்தாம சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்க…” என்றார் அவரது அக்கா.
“அக்கா, உனக்கு அவ்ளோதான் மரியாத… இதோட நிறுத்திக்க சொல்லிட்டேன்… என் ஆகாஷ் இந்த உலகத்துலயே ரொம்ப ஆசைப்பட்டு கேட்டது அந்த பொண்ணைத்தான்… அவளைக் கல்யாணம் பண்ணின சந்தோஷமே அவனை சாய்ச்சிருச்சு… அதுக்காக என் மருமகளைப் பத்தி நாக்குல நரம்பில்லாம பேசாதிங்க… பாவம், எத்தனை ஆசைகளோட இந்த வாழ்க்கைல அடி எடுத்து வச்சிருப்பா… அவளும் நம்மைப் போல பொண்ணுதானே… ஒரு பொண்ணுக்கு இன்னொரு பொண்ணே எதிரின்னு சொல்லுறதை நிரூபிச்சுடாதிங்க…” கோபமாய் சொன்னாலும் கண்கள் கண்ணீரை சிந்திக் கொண்டிருக்க வேகமாய் இந்துவின் அறைக்கு சென்றார்.
சுவரில் சாய்ந்து கண்கள் மூடி அமர்ந்திருந்தவளைக் கண்டு அவரது இதயம் வலித்தது. “இந்தப் பெண்ணின் மீதான பிரியத்திற்கு தானே என் மகன் என்னிடம் கோபித்துக் கொண்டான்… அவளை வெங்காயம் வெட்டக் கூட அழ வைக்க மாட்டேன் என்று சிறுபிள்ளை போல் சத்தியம் வாங்கிக் கொண்டான்… இப்போது அவனே அவளை துயரத்தில் தள்ளி சென்று விட்டானே…” என யோசிக்கையில் அந்தத் தாயின் இதயம் மகனின் பிரிவுக்காய் கலங்கியது. அவளது அருகில் சென்று அமர்ந்தவர் அந்த முகத்தையே ஒரு நிமிடம் பார்த்துவிட்டு ஆறுதலாய் கையைத் தொட்டார்.
“இந்துமா…”
அன்பான குரலிலும், தொடலிலும் சட்டென்று கண்ணைத் திறந்தவளுக்கு அந்த அழைப்பு ஆகாஷை உணர்த்தியதோ  என்னவோ, ஒரு தேடலுடன் பார்த்தவளின் கண்கள் அவரைக் கண்டதும் கலங்க தேம்பத் தொடங்கினாள்.
“அ…அத்தை…” அவரது மடியில் சாய்ந்து சத்தமாய் கதறத் தொடங்க எல்லாரும் ஓடி வந்தனர். அவளது அழுகை தனக்கும் அழுகையை வர வைத்தாலும் அடக்கிக் கொண்டு அவளை அழவிட்டவர் ஆறுதலாய் முதுகில் தடவிக் கொடுக்க வெகு நேரம் அழுது கொண்டிருந்தாள்.
“என்னால தானா அத்த… ஏன் அத்த, உங்க பிள்ள என்ன விட்டுட்டுப் போனார்… அதிக சந்தோஷமே அவருக்கு ஆபத்தா முடியும்னு தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணத்துக்கு நானே சம்மதிச்சிருக்க மாட்டேனே…” அழுகையின் நடுவே புலம்பிக் கொண்டிருந்தவளைக் கண்டு குற்றம் சொன்ன பெண்களுக்குமே கண்கள் கலங்கின.
அகிலாவும், சிந்துவும் ஒருபுறம் அழுது கொண்டிருக்க மகளின் அழுகையில் இதயமே வெடித்துவிடுவது போல உணர்ந்தார் பரமசிவம்.
“இந்து… போதும் மா, எழுந்திரு… இனி நீ அழக்கூடாது… இதுவரைக்கும் எது வேணும்னும் என்கிட்ட கோச்சுக்காத ஆகாஷ், உனக்காக மட்டும் தான் கோச்சுகிட்டான்… நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு மட்டும் தான் என் பிள்ளை எங்கிட்ட சொன்னான்… அவனோட ஆத்மா சாந்தி அடையணும்னா நீ அழக்கூடாது… நீ சந்தோஷமா இருக்கணும்… இப்ப முடியலைனாலும் கொஞ்ச நாள் எடுத்துக்க… ஆனா, அழுது, சோர்ந்து அவன் ஆத்மாவைக் கஷ்ட படுத்திடாத… சம்மந்தி, இந்து இங்க இருந்தா ஆகாஷ் நினைவு வரும்… உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க… அவளுக்கு ஒரு புது வாழ்க்கையை அமைச்சு கொடுங்க… எங்களுக்கு மகன் தான் இல்லாமப் போயிட்டான்… மகளோட வாழ்க்கையாச்சும் சந்தோஷமா அமையணும்… போங்க, என் பொண்ணை கூட்டிட்டுப் போங்க…” என்றவர் பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறத் தொடங்க இந்துவும் அவரைக் கட்டிக் கொண்டு அழுதாள். மூன்றாம் நாள் காரியம் முடிந்து அவளை பிறந்த வீட்டுக்கே பெற்றவர்களுடன் வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.
அதற்குப் பிறகு வீட்டிலேயே அடைந்து கிடந்தவள் அவளது சோகம் வீட்டினரையும் தாக்குவதை உணர்ந்து தனக்குள் ஒதுக்கிக் கொண்டு இயல்பாய் இருக்க முயன்றாள். ஆகாஷின் அன்னையும், தந்தையும் அலைபேசியில் அவ்வப்போது அவளை அழைத்துப் பேசுவர்.
ஒரு மன மாற்றத்திற்காய் வேலைக்கு செல்ல நினைத்த போதுதான் நியூஸ் பேப்பரில் வெற்றியின் வான்டட் விளம்பரத்தைக் கண்டு விண்ணப்பித்திருந்தாள். அங்கு கிடைக்கவில்லை என்றதும் தனக்குப் பிடித்த செடிகளின் நர்சரியை வீட்டுத் தோட்டத்தில் வைக்க முடிவு செய்து அன்னையின் டேகேர் சென்டரையும் பார்த்துக் கொண்டாள். மெல்ல மனது இழப்பை ஏற்றுக் கொண்டாலும் எப்போதாவது அவன் நினைவு வரும்போது பவளமல்லி மரத்தடியில் அமர்ந்து அன்று பேசியதை நினைத்துக் கொண்டிருப்பாள். இரவில் உறக்கம் வராமல் அறையில் உலாத்திக் கொண்டிருக்கும் பரமசிவம் அதைக் காணும் போதெல்லாம் மகளை நினைத்துக் கலங்கினார்.    
மனதில் உள்ளதை எல்லாம் வெற்றியிடம் கொட்டி முடித்த பரமசிவத்திடம் நீண்ட பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.
“ஒண்ணர வருஷத்துக்கு மேலாச்சு… இப்பவும் வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உறுதியா இருக்கா… ஆகாஷ் மேல அவளுக்கு காதல் எல்லாம் இருந்ததா தெரியலை… ஆனா, ஆகாஷ் அவ மேல வச்சிருந்த காதலை ரொம்ப மதிக்கிறா… தன்னோட ராசிதான் அவனை இல்லாமப் பண்ணிடுச்சோன்னு நினைச்சு வேதனைப்படறா… நாங்க எவ்ளோ சொல்லியும் அந்த எண்ணத்தை மட்டும் அவ மனசுல இருந்து மாத்த முடியல…” கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு மகளுக்காய் வேதனைப்பட்ட அந்த தந்தையின் தவிப்பை வெற்றியால் உணர முடிந்தது.
ஒரு ம்ம் கூட சொல்லாமல், சத்தமாய் மூச்சும் கூட விடாமல் பரமசிவம் சொல்லிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த வெற்றியின் மனம் கனத்திருந்தது.
அவர் சொல்லி முடித்து கண்களை ஆயாசமாய் மூடிக் கொள்ள கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. அப்போதும் அவருக்கு எந்த ஆறுதலோ, பதிலோ சொல்ல அவனால் முடியவில்லை. “தன்னை நேசித்த ஒருவன் மணமுடித்த அன்றே இறந்து போனபின்னும் அவனையே நினைத்து… இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்களா…” என யோசித்தவனுக்கு இந்துவின் மேலிருந்த மதிப்பு கூடியது.
“என் பொண்ணு ரொம்ப பாவம் தம்பி, எந்த ஒரு விஷயத்துக்கும் ஆசைப்பட மாட்டா… நாங்க சொல்லறது தான் அவளுக்கு எல்லாமே… ஆனா முதன் முறையா எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லறா தம்பி… அதைதான் என்னால தாங்கிக்க முடியல…” என்றவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்க அது அவர் உடல்நிலைக்கு ஆபத்தாகுமோ என வருந்தியவன் அவரைத் தேற்றினான்.
“சார், ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க… உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லறதுன்னு தெரியல… இப்படில்லாம் நடக்கக் கூடாதுதான், நடந்திருச்சு… எப்படியாச்சும் இந்து மனசை மாத்த முயற்சி பண்ணுவோம்… நீங்களே இப்படி உடைஞ்சு போனா அவங்க என்ன பண்ணுவாங்க…” என்றான் வெற்றி.
“ஹூம், என் காலம் முடியறதுக்குள்ள பொண்ணுகளுக்கு நல்லதைப் பண்ணிட்டேன்னா போதும்…” என்றார் ஒரு  தந்தையின் கவலையுடன்.
“நடக்கும் சார்… கவலைப் படாதீங்க…” என்றவன் அலைபேசி சிணுங்கவே பார்வதியம்மாவின் எண்ணைக் கண்டதும் வேகமாய் காதுக்குக் கொடுத்தான்.
“சொல்லுங்க பார்வதிம்மா…”
“தம்பி, பெரியசாமின்னு ஒருத்தர் உங்களைப் பார்க்கணும்னு வந்திருக்கார்… நீங்க இல்லன்னு சொன்னேன்… காத்திருந்து பார்த்திட்டுப் போறேன்னு சொல்லுறார்…”
“பெரியசாமியா…” என்று நெற்றியை சுளித்தவன், “எங்கிருந்து வரார்னு கேட்டிங்களா… எதுக்கு என்னைப் பார்க்கணும்…”
“அது, உங்க தம்பி சக்தி அனுப்பினார்னு சொன்னார்…”
சக்தி அனுப்பினான் என்றதும் சற்று அதிர்ந்தவன், “அவரை சாயந்திரம் வரசொல்லி அனுப்பிடுங்க…” என்றான்.
“சரி தம்பி…” என்றவரிடம், “பவி என்ன பண்ணுறா…” என்று கேட்க, “அவ இங்க வரவே இல்ல… இந்து வீட்ல இருக்கா…” என்றார் பார்வதி.
“ம்ம்… சரிம்மா, பார்த்துக்கங்க…” என்றவன் வைத்துவிட்டான்.
யோசனையாய் அமர்ந்திருந்தவனின் முகத்தை கவனித்த பரமசிவம், “என்ன தம்பி, ஏதாச்சும் பிரச்சனையா…” என்று கேட்க, “அதெல்லாம் இல்ல சார்…” என்றான் வெற்றி.
“என் சோகக் கதை சொல்லி உங்களை போரடிச்சுட்டேன்…”
“அப்படிலாம் ஏதும் இல்ல சார்…” என்றவன் ஏதோ நினைவு வந்தவனாய், “சார், இந்து எங்க கம்பெனி ஜாபுக்கு அப்ளை பண்ணி இருந்ததா சொன்னிங்களே… அந்த பார்ம்ல போட்டோ ஏதாச்சும் ஒட்டி இருந்தாங்களா…” என்று கேட்க அவர் யோசித்தார்.
“ஆமா தம்பி, போட்டோவோட தான் அப்ளை பண்ணனும்னு சொல்லி இருக்கிறதா சொன்னா… அவளோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கைல இல்லேன்னு நான்தான் புது போட்டோ எடுக்க கூட்டிட்டுப் போனேன்… ஏன் தம்பி…”
அவர் சொன்னதும் மண்டைக்குள் ஏதோ பல்பெரிய, “அ..அது ஒண்ணும் இல்ல சார், இந்துவை இதுக்கு முன்னாடி போட்டோல கூட பார்த்த போல நினைவில்லை… அதான் கேட்டேன்…” என்று சமாளித்தான்.
“ம்ம்… உங்ககிட்ட பேசின பின்னாடி மனசுக்கு ஒரு நெருக்கம் வந்த போல நல்லாருக்கு… ஆனா, இந்த சாரை தான் நீங்க விட மாட்டீங்கறீங்க…” என்று சிரித்தார்.
“அது அப்படியே பழகிடுச்சு சார்… சாரி அங்கிள்…” என்றவன் சிரித்துக் கொண்டான்.
“ம்ம்… இது நல்லாருக்கு தம்பி…” என்றார் அவர். சற்று நேரத்தில் மதிய உணவுடன் அகிலாவும் சிந்துவும் அங்கே வந்தனர். இந்து குழந்தையுடன் வீட்டிலேயே இருந்தாள்.
பரமசிவத்துக்கு உணவைத் தட்டில் வைத்துக் கொடுத்தவர், “உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டோம்… நீங்களும் சாப்பிடறீங்களா…” என்று கேட்க மறுத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான் வெற்றி. பவித்ராவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல நினைத்தவன் காரை இந்து வீட்டு முன்னில் நிறுத்தினான்.
வாசலில் நின்று “பவி…” என்றழைக்க இந்து புன்னகையுடன் வெளியே வந்தாள்.
“பவிகுட்டி சாப்பிட்டு தூங்கிட்டா… எழுந்ததும் அழைச்சிட்டு வரேனே…” எனவும் அவனால் ஏனோ மறுக்க முடியவில்லை.
“சரி இந்து…” என்றுவிட்டு திரும்பி நடந்தவனை அதிசயமாய் பார்த்த இந்துவின் முகத்தில் யோசனை தெரிந்தது.
“என்ன இது, இன்னைக்கு இந்துன்னு சொல்லிட்டுப் போறார்… மேடம்னு தானே எப்பவும் கூப்பிடுவார்…” என நினைத்தவள் களைப்பாய் இருக்கவே கதவை சாத்திவிட்டு பவியின் அருகே படுத்துக் கொண்டாள்.
இரு கைகளையும் மேலே தூக்கி, அரைக் கண்ணை மூடி உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது. அவளது குட்டி இதழ்கள் லேசாய் விரிந்திருக்க அழகான கன்னங்களில் வருடி கலைந்திருந்த தலை முடியை ஒதுக்கினாள்.
“பவிக்குட்டி ரொம்ப அழகாருக்கா… அப்பா ஜாடை போலத் தோணலை… அம்மா மாதிரியா இருக்குமோ…” என யோசித்துக் கொண்டே அவளை அணைத்தபடி படுத்தவள் சிறிது நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
உன் நினைவுகளை
என்னுள் விதைத்து
எங்கோ பறக்கிறாய்…
அன்பெனும் நீரூற்ற
முளைத்து எழுகிறது
உனக்கான தேடல்கள்…
ஆலம் விழுதென
சிலநேரம் எனை
விழாமல் தாங்குகிறது…
ஆழ்கடல் நினைவென
தூங்காமல் கொல்கிறது…
உன் நினைவுகள்
தாங்கிய மரத்தடியில்
மனமும் உதிர்கிறது
சருகெனவே…

Advertisement