Advertisement

அத்தியாயம் – 16
“கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்ற குரலைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் சத்தத்தில் முழங்க, சுற்றமும் நட்பும் அட்சதைகள் தூவி மணமக்களை வாழ்த்த, மனம் நிறைந்த மங்கையவள் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டிய ஆகாஷின் மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.
அடிக்கடி அவனது பார்வை தன் மேல் ஆவலுடன் படிந்து மீள்வதை இந்துவால் உணர முடிய, “யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க, இவர் இப்படிப் பார்க்கிறாரே…” என்று வெட்கம் பிடுங்கித் தின்றது.
அவனது விரல்கள் அவள் நெற்றியில் செந்தூரத்தை வைக்க கண் மூடி நின்றவள் உடலில் சிறு நடுக்கத்தை உணர்ந்தான் ஆகாஷ். அவனது விரல் பற்றி அக்னியை வலம் வருகையில் தனது நடுக்கம் அந்த கைகளுக்குள் காணாமல் போவது போலத் தோன்றியது அவளுக்கு.
இவன் என்னவன் எனும் எண்ணம் இதயத்துக்குள் ஊடுருவ கண்கள் ஆவலுடன் தன்னவனை ஏறிட்டது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் புருவத்தை தூக்கி என்னவென்று கேட்க வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டவளை தேவதை போலத் தோன்றியது அவளுக்கு.
மனம் கவர்ந்த இதய தேவதையே மனைவியாய் அருகில் நிற்பதை எண்ணிப் பூரித்துப் போயிருந்தான். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
ஆகாஷின் தந்தை அருகில் நின்ற மனைவியிடம், “நம்ம புள்ள முகத்துல உள்ள சந்தோஷத்தைப் பார்த்தியா… மனசுக்குப் பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிக்கறதுல அவ்ளோ சந்தோஷம்… ரெண்டு பேருக்கும் எவ்ளோ பொருத்தமா இருக்கு… எத்தனை காசு பணம் இருந்தாலும் இந்த சந்தோஷத்தைக் கொடுக்க முடியுமா…” என்ற கணவரின் வார்த்தையில் உள்ள உண்மை உரைக்க ஆகாஷின் அன்னையும் நெகிழ்ந்திருந்தார்.
சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிந்து மேடையில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த மணமக்களை ஒவ்வொருத்தரும் வாழ்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். சிந்து அக்காவின் அருகிலேயே துணைக்கு நின்று கொண்டிருக்க பரமசிவம் நெகிழ்ச்சியுடன் கண்கள் பனிக்க மகளை மணக்கோலத்தில் பார்த்திருந்தார். அகிலாவின் உள்ளமும் நிறைந்திருந்தது.
வருபவர்கள் எல்லாம் மணமக்களின் ஜோடிப் பொருத்தத்தை ரசித்துப் பாராட்டி செல்ல கேட்ட பெரியவர்களுக்கு சந்தோஷமாய் இருந்தது. மாலை ரிஷப்ஷனை வீட்டருகே இருந்த ஹால் ஒன்றில் ஆர்கெஸ்ட்ராவுடன் ஏற்பாடு செய்திருந்தான் ஆகாஷ்.
மேடையில் கூட்டம் குறைந்ததும் மணமக்களை டிபன் சாப்பிட அழைத்துச் சென்றனர். இலையில் பரிமாறிய இனிப்பை முதலில் இந்துவுக்கு ஆகாஷ் ஊட்ட அவளையும் ஊட்ட சொல்லி வம்பு செய்தனர் ஆகாஷின் நண்பர்கள்.
“டேய், பாவம் பயந்துடப்போறா… வற்புறுத்தாதிங்க…” என்ற கணவனை அவளுக்கு இன்னும் பிடித்தது. வெட்கத்துடன் அவன் வாயில் இனிப்பைக் கொடுக்க அவன் பார்வையில் வழிந்த காதலில் தவித்துப் போனாள். வேகமாய் தலை தாழ்த்தியவளைக் கண்டு அவனுக்கு சிரிப்பாய் வந்தது.  நண்பர்களின் சீண்டல்களும் இந்துவின் அருகாமை தந்த சந்தோஷமும் ஆகாஷுக்கு பெரும் பரவசத்தைக் கொடுத்தது.
மதியம் வரை யாராவது ஒருவர் வந்து கொண்டிருக்க மதிய உணவு முடிந்ததும் ஆகாஷின் வீட்டுக்கு கிளம்பினர்.
முகூர்த்தப் பட்டை மாற்றி ஆகாஷ் கொடுத்த சேலையை உடுத்தி புகுந்த வீட்டுக்கு கிளம்பிய இந்துவின் கண்கள் பெற்றோரைக் கண்டதும் கலங்க, அவள் தோளில் கையிட்டு இயல்பாய் அணைத்துக் கொண்டவன், “இந்து… நாம இதே ஊர்ல தானே இருக்கப்போறோம்… எப்ப வேணும்னாலும் அவங்களைப் பார்த்துக்கலாம்… அழாதே…” என்றவன், “ரிஷப்ஷன்ல பார்க்கலாம் மாமா…” என்று விடைபெற்றான்.
மகளுக்கு எல்லாமாய் மருமகன் இருந்து கொள்வான் என்ற நம்பிக்கையை அவள் பெற்றவர்களுக்கும் அளித்து காரில் மனைவியுடன் தனது வீட்டுக்குக் கிளம்பினான் ஆகாஷ். பிறந்தவீட்டு நினைவில் அமைதியாய் அமர்ந்திருந்தவளின் கையை அவன் கைகள் ஆறுதலாய் பற்றிக் கொண்டது.
“பெத்தவங்களையும், கூடப் பிறந்தவங்களையும் விட்டுட்டு, பிறந்து வளர்ந்த வீட்டை விட்டுட்டு கல்யாணமானதும், புகுந்த வீட்டுக்குப் போற வழக்கம் எல்லாப் பெண்களுக்கும் இது பெரிய கஷ்டம்தான்… கவலைப்படாத இந்துமா… உனக்கு எப்ப தோணுதோ அவங்களைப் போயி பார்த்திட்டு வரலாம்…” என்றவனின் அன்பான வார்த்தைகள் இதத்தைத் கொடுக்க புன்னகைத்தாள்.
“அப்பாடா, என் பொண்டாட்டி சிரிச்சுட்டா…” என்றவன் சிரிக்க, டிரைவிங் சீட்டில் இருந்த அவன் நண்பன், “சாதனை தான் நண்பா… பெரிய சாதனை…” என்று சொல்ல “டேய், வழியைப் பார்த்து வண்டிய ஓட்டுடா…” என்றான் ஆகாஷ்.
ஒரு குட்டி சைஸ் பங்களாவின் முன்னில் கார் நிற்க முதலில் இறங்கிய ஆகாஷ், அவளது பக்கம் வந்து கார்க்கதவைத் திறக்க இறங்கியவள் திகைத்தாள். “என் இதய சிம்மாசனத்தில் குடிகொண்ட இதய தேவதையே, நமது மாளிகைக்கு உன்னை வரவேற்கிறேன்…” இடுப்பு வரை குனிந்து அவன் வரவேற்க, அவளுக்கு வெட்கமாய் வந்தது.
“டேய் ஆகாஷ், என்னடா சினிமா ஹீரோ போல ஆயிட்ட…” நண்பன் கலாய்க்க, “அது அப்படிதான்…” கண் சிமிட்டினான்.
பின்னாலேயே மற்றவர்களின் காரும் வந்து நிற்க இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார் ஒரு பெண்.
“வாம்மா…” என்று மருமகளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்ற ஆகாஷின் அன்னை பெரிய குத்துவிளக்கை அவளை ஏற்றச் சொன்னார். இருவரும் கடவுளை வணங்கி முடித்து ஹாலுக்கு வர சோபாவில் அமர்த்தி பாலும், பழமும் கொடுத்தனர்.
அங்கிருந்த உறவினர்களை அவளுக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்த ஆகாஷ் சற்று படபடப்பாய் உணர்ந்தான். சட்டென்று முகத்தில் ஒரு சோர்வு வந்திருக்க அதை கவனித்த இந்து, “என்னாச்சுங்க… ஏன் ஒரு மாதிரி ஆயிட்டீங்க… தல வலிக்குதா…” என்றாள்.
அவள் வருந்துவதைக் கண்டவன், “ஹூம்… அதெல்லாம் இல்ல மா… காலைல நேரமா எழுந்து இவ்ளோ நேரமும் நின்னுட்டே இருந்தோம்ல… அதான் கொஞ்சம் டயர்டா இருக்கு…” என்றான். அதைக் கேட்டுக் கொண்டே வந்த ஆகாஷின் அன்னை, “சரி, ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க… அப்பத்தான் ரிசப்ஷனுக்கு பிரஷ்ஷா இருக்க முடியும்…” என்றவர், “இந்து, நீ அந்த ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கமா… உன்னோட திங்க்ஸ் எல்லாம் வச்சிருக்கேன்… ஆகாஷ், நீ உன் ரூமுக்குப் போ…” என்றார்.
அன்னையைப் பாவமாய் பார்த்தவன், “ஏன்மா, இந்துவும் என் ரூம்ல ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்று சொல்ல முறைத்தார்.
இந்துவிற்கு அவர் சொன்னதன் காரணம் புரிய வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள்.
“அடேய், இம்ச பண்ணாத… நைட்டு உன் ரூமுக்கு வந்திருவா… போ…” என்று விரட்ட, “ஓ… “ என்றவன் அவளை நோக்கி கண் சிமிட்டிவிட்டு மாடிப் படிகளில் தாவிச் செல்ல சட்டென்று தலை சுற்றுவது போல் தோன்ற நிதானித்தவன் மெல்ல ஏறி தனது அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தான்.
மாலை வரை நல்ல உறக்கத்தில் இருந்தவனைத் தட்டி எழுப்பினார் அன்னை.
“டேய் ஆகாஷ், எழுந்திரு… என்ன AC லயும் வேர்த்திருக்க…” என்று கேட்க சோர்வுடன் கண் விழித்தவனுக்கு அன்றைய தினம் நினைவுக்கு வர, “இந்து எழுந்தாச்சா…” கேட்டுக் கொண்டே சட்டென்று எழுந்து அமர்ந்தவனுக்கு தலை கிர்ரென்றது. சமாளித்துக் கொண்டு எழுந்தவன் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் குளித்து ரிசப்ஷனுக்கு உரிய கோட் சூட்டுடன் அவன் தயாராக இந்துவும் கீழே அவன் வாங்கிக் கொடுத்த முத்து கவுனில் அளவான ஆபரணங்களுடன் தேவதையாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள். மேக்அப் செய்ய பியூட்டிஷியனை ஏற்பாடு செய்ய வேண்டுமா என்று ஆகாஷ் கேட்டபோது வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.
அவளுக்கு உதவி செய்ய ஆகாஷின் அன்னை உறவுக்காரப் பெண் ஒருத்தியை துணைக்கு விட்டிருந்தார். இந்துவின் கழுத்தில் நெக்லஸ் அணிந்து கொண்டிருந்தவள் கதவு தட்டப்படவும் சென்று திறக்க ஆகாஷ் நின்றிருந்தான்.
“இந்து ரெடியாகிட்டாளா…” அவனது பார்வை ஆவலுடன் அறைக்குள் செல்ல வெல்வட் தேவதையாய் நின்றவளைக் கண்டு கண்களை அகற்றத் தோணவில்லை.
“நாங்க கொஞ்சம் செல்பி எடுத்துக்கறோம் மா… கதவை சாத்திட்டுப் போயிடு…” என்று மறைமுகமாய் அந்தப் பெண்ணை வெளியே அனுப்பி தாளிட்டு வந்தவனின் சாமர்த்தியம் இந்துவுக்குப் புரிய அவள் முறைத்தாள்.
“என்ன ஆகாஷ், எதுக்கு அந்தப் பொண்ணை வெளிய அனுப்புனிங்க… அத்தை ஏதாச்சும் நினைக்கப் போறாங்க…” அவள் சொல்லிக் கொண்டிருக்க அவனது கால்கள் அவளை மிகவும் நெருங்கி வருவதை உணர்ந்தவளுக்கு படபடவென்று வரவே பின்னுக்கு நகர்ந்தாள்.
எட்டி அவள் கையைப் பிடித்தவன், “எதுக்கு பயந்துக்கற இந்து, நான் உன்னை ஒண்ணும் பண்ணிட மாட்டேன்…” என்று சொல்லிக் கொண்டே தன்னிடம் இழுக்க நெஞ்சில் விழுந்தவளை “லுக்கிங் கார்ஜியஸ் இந்து…” அவனது குரல் காதுக்குள் உரச நெளிந்தவளை இதமாய் அணைத்துக் கொண்டான். அந்த முதல் அணைப்பு அவளுக்குள் புதிய ஸ்வரங்களை மீட்ட கண்ணை மூடிக் கொண்டாள். தாடையை உரசிய அவளது தலைஉச்சியில் முத்தமிட்டு அவள் முகம் நிமிர்த்தியவன் நெற்றியில் இதழ் பதித்தான்.
மூடியிருந்த கண் இமைகளுக்குள் உருண்டோடிய கிருஷ்ண மணிகள் அவள் உள்ளக் கிளர்ச்சியை சொல்ல இமைகளிலும் இதழ் ஒற்றினான். அவனைப் பற்றியிருந்த அவளது கைகள் இறுகுவதை உணர்ந்தவன் மெல்ல விடுவித்தான்.
“இது சும்மா அச்சாரம்தான் பொண்டாட்டி… பாக்கி ராத்திரி…” என்று கண்ணடித்து விலகி செல்ல உடலில் புதிதாய் உணர்ந்த உணர்வுகளில் இருந்து மீண்டு வர இந்துவுக்கு வெகுநேரம் பிடித்தது. மீண்டாலும் வேண்டுமென்றே மனம் எதிர்பார்ப்பதை உணர்ந்தவளுக்கு வெட்கமாய் வந்தது.
இந்துவைக் காண வந்தவன் அவளது அருகாமையில் தனது இதயம் தாறுமாறாய் தாளம் தப்பி துடிப்பதை உணர்ந்தான். “ஒருவேளை அவளை ஸ்பரிசித்ததால் வந்த தவிப்பாக இருக்குமோ…” என நினைத்துக் கொண்டான்.
அறைக்கு வெளியே முறைப்புடன் நின்ற அன்னையைக் கண்டதும், “அது..வந்து அம்மா, இந்து ரெடியாகிட்டாளான்னு பார்க்க வந்தேன்… ரெடியாகிட்டா… கிளம்பலாமா…” என்று நல்லவன் போலக் கேட்க, “ஹூம் நம்பிட்டேன்… எல்லாரும் ரெடி… அப்பா, உங்களை கூட்டிட்டு வர சொன்னார்னு வந்தேன்…” என்றார்.
அன்னையை குறுகுறுவென்று பார்த்தவன், “அம்மா, என் மேல உள்ள வருத்தம் எல்லாம் போயிடுச்சா…” என்று கேட்க, “ஆயிரம் இருந்தாலும் நீ என் பிள்ளை டா, உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்… உனக்கு எது பிடிக்குதோ அது எனக்கும் பிடிக்கத்தான் செய்யும்…” என்று சொல்ல, “என் செல்ல மம்மி, உன் மருமகளைக் கண்கலங்காம பார்த்துப்ப தான…” என்று கேட்க மீண்டும் முறைத்தார்.
“அட லூசு மாப்பிள்ள, உன் பொண்டாட்டிய நீதான் கண்கலங்காம பார்த்துக்கணும்…” என்று சொல்ல, “ஹிஹி, ஆமாம்ல…” என்று அசடு வழிந்தவன், “நான் பார்த்துக்குவேன் மம்மி, நீயும் பார்த்துப்பேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணு…” என்று சொல்ல, “இவனோட சரியான இம்சையா போயிருச்சு… உன் பொண்டாட்டியை வெங்காயம் கூட கட் பண்ண விடாம, கண் கலங்காம பார்த்துக்கறேன்… பிராமிஸ், போதுமா… நீ காருக்குப் போ… நான் இந்துவை அழைச்சிட்டு வரேன்…” என்று சொல்லவும், “குட் மம்மி…” என்று அவர் கன்னத்தில் முத்தம் வைக்க, “ச்சீச்சீ, கன்னத்துல எல்லாம் எச்சில் பண்ணிட்டு… ஓடு…” என்று விரட்டினார்.
அவர்கள் பேசுவது அறைக்குள் இருந்த இந்துவின் காதிலும் விழ நெகிழ்ச்சியாய் உணர்ந்தாள். “அன்னையிடம் அத்தனை அன்பை வைத்திருப்பவன் தன் மீது அன்பாய் இருப்பதில் அதிசயமில்லை…” என எண்ணிக் கொண்டாள்.
“இந்து…” அழைத்துக் கொண்டே உள்ளே வந்தவர், “சிம்பிளா புறப்பட்டாலும் அழகா இருக்கடாம்மா… வா, கிளம்பலாம்…” என்று அழைத்து வந்தார்.
அனைவரும் காரில் ஏறிக் கொள்ள ரிஷப்ஷன் ஹாலை நோக்கி வண்டிகள் நீங்கத் தொடங்கின.
பளிச்சென்று அலங்கார விளக்குகள் மின்ன அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்த ரிஷப்ஷன் ஹால் ஆடம்பர மனிதர்களின் பகட்டில் மெதுவாய் நிறையத் தொடங்கியது. இளநீர் ஜூஸுடன் இனிதாய் தொடங்கிய ரிசப்ஷனில் பல்வேறு விபவங்கள் தயாராகிக் கொண்டிருந்தது.
ரிஷப்ஷன் மேடைக்கு எதிர்பக்கத்தில் இருந்த இடத்தில் ஆர்கெஸ்ட்ரா க்ரூப் பாடத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அன்னை, தந்தையுடன் உள்ளே நுழைந்த சிந்து இதை எல்லாம் பிரமிப்பாய் பார்த்துக் கொண்டே வந்தாள். ஆகாஷ் அருகில் புன்னகையுடன் நின்ற சகோதரியைக் கண்டதும் சந்தோஷமாய் அவளிடம் சென்று கட்டிக் கொண்டவள், “அக்கா, ரொம்ப அழகா இருக்கே…” என்று சொல்ல, “ஹலோ கொழுந்தி, நாங்களும் இங்கே தான் இருக்கோம்…” என்ற ஆகாஷ் மனைவியின் பெற்றோருக்கு அங்கிருந்தே வணக்கம் சொல்லி அவர்களை வரவேற்க சொல்லி தந்தையிடம் ஜாடை காட்டினான்.
அவர் சென்று அவர்களை மேடைக்கு அழைக்க சென்று மகள், மருமகனிடம் சிறிது பேசிவிட்டு கீழே வந்தனர். அவர்களின் உறவினர்கள் சிலரும் ரிசப்ஷனுக்கு வந்திருக்க அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். ஆர்கெஸ்ட்ராவின் இசையுடன் அழகாய் நகரத் தொடங்கியது மாலை நேரம்.
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
சுதியோடு லயம் போலவே… இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே…
மைக்கில் இனிமையான குரலில் பாடல் வழிந்து கொண்டிருக்க மனைவியை அர்த்தத்துடன் நோக்கி புன்னகைத்த ஆகாஷ் அவள் காதில் கிசுகிசுத்தான்.
“இந்து, சுதியும், லயமும் போல நாமளும் அன்பால இணைஞ்சு வாழணும்… எவ்ளோ அர்த்தமுள்ள பாட்டு…” அவன் ரசனையோடு சொல்ல அவள் புன்னகைத்தாள்.
தொழில் சார்ந்த நண்பர்கள் சிலர் வரவே இந்துவுக்கு அறிமுகப்படுத்தினான். காமிரா வெளிச்சம் அவர்கள் மீதே மேடையில் விழுந்து கொண்டிருக்க ஒரு மாதிரி உஷ்ணமாய் உணர்ந்தான் ஆகாஷ். அடிக்கடி வேர்வையைத் துடைத்துக் கொண்டே இருந்தவனிடம், “என்னாச்சு, ஒரு மாதிரி டென்ஷன் ஆவே இருக்கீங்க…” இந்து கேட்டாள்.
“இந்த காமரா வெளிச்சம் ஒரு மாதிரி உஷ்ணமா இருக்கு இந்து… சமாளிச்சுக்கறேன்… நீ வொர்ரி பண்ணாத…” என்றவன் சாதாரணமாய் காட்டிக் கொண்டாலும் ஒருவித அவஸ்தையுடனே இருப்பது போல் இந்துவுக்குத் தோன்ற, “முடியலேன்னா கொஞ்சம் உக்காரலாம்…” என்றாள்.
அவள் சொன்னதால் மேடையில் இருந்த சோபாவில், அமர்ந்து கொண்டான் ஆகாஷ். அதற்குள் நண்பர்கள் வரவே எழுந்து பேசிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் பபே முறையில் உணவு வழங்கத் தொடங்க சாப்பிட்டவர்கள் மெதுவாய் கிளம்பத் தொடங்கினர்.
மணமக்களும் சாப்பிட்டு வர ஆர்கஸ்ட்ரா ட்ரூப்பிடம் சென்ற ஆகாஷின் நண்பர்கள் ஸ்பீக்கரை சத்தமாய் வைத்து துள்ளலான பாடல்களை பாடுமாறு கேட்க, மென்மையான தாளம் அதிரடியாய் மாறியது.
ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ… டேக் மீ…
பாடலுக்கு ஏற்ப குழந்தைகள் சிலர் அங்கங்கே நடனமாடத் தொடங்க ரிசப்ஷன் உற்சாகத்துடன் களை கட்டியது. அடுத்து இளம் ஆண்கள் சிலரும் அங்கங்கே ஆடத் தொடங்கினர்.
அட்லாண்டிக்கின் ஆழம்
அரபிக்கடலின் நீளம்
அதுவே உந்தன் கண்கள்
பெண் குருவியே…
அடுத்து வந்த பாடலைக் கேட்டதும் ஆகாஷின் நண்பர்களும் ஆடத் தொடங்க மேடைக்கு வந்து அவனையும் அழைத்துக் கொண்டு சென்றனர். நடப்பதை புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஆகாஷும் நண்பர்களுடன் ஆடிக் கொண்டிருந்தான்.
எல்லாரும் கை கட்டி கிளாப் செய்து கொண்டிருக்க மணமகனும் சேர்ந்து ஆடுவதை வீடியோ கிராபர் பிலிம் ரோலில் சுருட்டுவதற்காய் அவன் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தார். உற்சாக மிகுதியில் ஒருத்தன் இன்னும் ஸ்பீக்கரின் சத்தத்தைக் கூட்ட அரங்கமே பாடலில் அதிரத் தொடங்க பெரியவர்களும் கிளாப் செய்யத் தொடங்கினர்.
எல்லாம் அழகாய் சென்று கொண்டிருக்க ஆட முடியாமல் தலை கிறுகிறுத்து நின்ற ஆகாஷ்க்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்ட அணிந்திருந்த கோட் சூட் தொப்பலாய் நனைந்து சட்டென்று மயங்கி சரிந்து விழுந்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அதிர்ந்து நோக்க ஆகாஷின் நண்பர்கள் அவனை எழுப்ப முயன்றனர். அவன் அன்னை அலறிக் கொண்டு ஓடி வந்தார்.
“ஆகாஷ்… என்னடா ஆச்சு…” அத்தனை நேர சந்தோசம் நிமிடத்தில் கனவு போல மாறிப் போக என்ன நடந்ததென்றே புரியாமல் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நோக்கிக் கொண்டிருந்தாள் இந்துஜா.
“ஐயோ மாப்பிள்ள, என்னாச்சு… எழுந்திருங்க…” என்ற பரமசிவத்தின் குரல் அவன் காதை எட்டியது போல் தெரியவில்லை.
“காரை எடு… ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்…” ஆகாஷின் தந்தை சொல்ல மற்றவன் ஓடினான். ஆகாஷின் நண்பர்கள் அவனைத் தூக்கிக் கொண்டு காருக்கு வர நடக்கும் எதுவும் கண்கள் பார்த்தாலும் மூளைக்கு செல்லாமல் பித்துப் பிடித்த போல பார்த்துக் கொண்டு நின்றாள் இந்துஜா.
ஆஸ்பத்திரிக்கு உயிரில்லா சடலமாகவே ஆகாஷை கொண்டு சென்றிருக்க அவனைப் பரிசோதித்த டாக்டர், “சாரி டு சே திஸ், சடன் கார்டியாக் அரஸ்ட்… சந்தோஷ மிகுதியோ, ஆர்கெஸ்ட்ராவின் அதீத சத்தமோ, வீடியோவின் வெளிச்சமோ ஏதோ ஒன்று காரணமாய் இருந்திருக்கலாம்…” என்று சோகமாய் கை விரித்தார்.
ஒரு நிமிடத்தில் கனவுகள் எல்லாம் கானலாகிப் போக சந்தோஷங்கள் எல்லாம் துக்கமாய் மாற அழகான அந்த கல்யாண வீடு கருமாதி வீடாய் மாறியிருந்தது.
லயம் தேடும் தாளங்களாய்
நிழல் தேடும் நிஜங்கள்…
கனவுகளின் ஸ்பரிசத்தை
நிஜத்தில் உணருமுன்னே
கண்ணீரான நிதர்சனங்கள்…
வரமே சாபமாய் மாறிய
வாழ்க்கை விசித்திரம் தானோ…

Advertisement