Advertisement

அத்தியாயம் – 15
“இந்து… ரெடியாகிட்டியா மா…” கேட்டுக் கொண்டே மகளின் அறைக்குள் நுழைந்தார் அகிலாண்டேஸ்வரி.
ஊதா நிற பட்டு சேலை அணிந்து நீண்ட கூந்தலைத் தளர்வாய் பின்னி பூ வைத்திருந்தாள் இந்துஜா. அழகான மையிட்ட கண்கள் பொலிவுடன் சிரித்தன. கழுத்தை ஒரு நெக்லசும், நீண்ட செயினும் அலங்கரிக்க அளவான அலங்காரமே அவளுக்கு பேரழகைக் கொடுத்தது.
மகளை கண் நிறைய பூரிப்புடன் பார்த்தவர், “அழகா இருக்கடா இந்து…” என்று அவள் கன்னத்தை வழிக்க, “என்ன அண்ணி, என் அலங்காரம் எப்படி…” என்றார் பரமசிவத்தின் தங்கை கல்பனா.
“ரொம்ப அழகாருக்கா கல்பனா… சரி, நான் ஹாலுக்கு போறேன்… மாப்பிள்ளை வீட்டுல வர நேரமாச்சு…”
“சரி அண்ணி…” என்றவர் இந்துவின் சேலையை சரி பண்ணிக் கொண்டிருக்க கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள் இந்து.
என்றுமுள்ளதை விட முகத்தில் தெரிந்த பொலிவும், இதயத்தின் வேகமான துடிப்பும், மனதுக்குள் உண்டான எதிர்பார்ப்பும் புதுவித அனுபவத்தைக் கொடுக்க, இந்துவின் உடலின் ஒவ்வொரு செல்லும் தன் கரம் பிடிக்கப் போகும் மணாளனின் வரவுக்காய் காத்திருந்தது.
அன்று கல்யாண மண்டபத்தில் ஆகாஷ் தன்னை மணக்க விரும்புவதாக சொன்னபோது வீட்டில் வந்து பேசுமாறு கூறியவள் அதற்குப் பிறகு ஒரு மாதமாகியும் அவனிடம் இருந்து எந்த விவரமும் இல்லாததால் அதை அப்படியே மறந்துவிட்டாள். நேற்று தந்தை வந்து ஒரு சம்மந்தம் வந்திருப்பதாகக் கூறி கல்யாண மண்டபத்தில் இந்துவை மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்… பெயர் ஆகாஷ் என்றதும் சின்னதாய் ஒரு ஆசை துளிர் விடத் தொடங்கியிருந்தது.
வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவளது விருப்பத்தோடு தன்னை விரும்பிய ஆகாஷே மணமகன் என்றதும் மனதில் ஒரு சந்தோஷ ஊஞ்சல் ஆடத் தொடங்கியது.
எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் கல்யாண ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் அவளுக்குள்ளும் செல்லமாய் சிணுங்கிக் கொண்டிருக்க ஆகாஷின் முகம் கண்ணுக்குள் வந்து அவளை நோக்கி கண் சிமிட்ட திகைத்துப் போனாள். அதுவரை அவனைப் பற்றி பெரிதாய் யோசிக்காமல் இருந்தாலும் தனது வீட்டினருடன் இன்று பெண் காண வரப் போகிறான் என்றதும் ஆவலும் எதிர்பார்ப்பும் மனதுக்குள் வந்து குடியேறி இருந்தது.
கண்ணாடியில் தன்னைத் தானே நாணத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள், “அக்கா, அவங்க வந்துட்டாங்க… மாமா ஹீரோ மாதிரி சூப்பரா இருக்கார்…” ஓடிவந்த சிந்து ஒலிபரப்பிச் சென்றாள்.
அதைக் கேட்டதும் இந்துவிடம் பரபரப்பு வந்து ஒட்டிக் கொள்ள இயல்பாய் இருக்க முடியாமல் தவிப்பாய் இருந்தது. சிறிது நேரத்தில் கல்பனா அத்தை அவளை அழைத்துச் செல்ல வந்தார்.
“வா இந்து… அவங்க ஏதாச்சும் கேட்டா பதில் சொல்லு… குனிஞ்சுட்டே உக்கார்ந்து மாப்பிள்ளையைப் பார்க்காம விட்டுடாத…” என்று கிண்டலுடன் அழைத்து சென்றார். அகிலா மகளின் கையில் காபிக் கோப்பை நிரம்பிய டிரேயை கொடுத்து, “எல்லாருக்கும் காபி கொடு இந்து…” என்றார்.
கால்கள் நிலத்தோடு ஒட்டிக் கொண்டது போல் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் தயக்கமாய் இருந்தது இந்துவுக்கு. குனிந்த தலையுடன் அழகாய் வந்தவளை கண் எடுக்காமல் ஆவலோடு பார்த்திருந்தான் ஆகாஷ்.
அவனது தந்தை, அன்னை, உறவினர் என்று அமர்ந்திருக்க ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தவள் ஆகாஷிடம் வந்ததும் மெல்ல ஏறிட்டாள். அந்த நிமிடத்திற்காய் காத்திருந்த ஆகாஷ் காபியை எடுத்துக் கொண்டு கண்ணடிக்க அவளுக்கு குபீரென்று வியர்த்துப் போனது. வேகமாய் அன்னையின் பின்னால் சென்று நின்று கொண்டவளை கல்பனா அழைத்து வந்து சபையில் அமர்த்தினார்.
“வீட்ல ஏசி இல்லையா, ஒரே புழுக்கமா இருக்கு…” என்ற குரலைக் கேட்டு திகைத்து நிமிர்ந்தவள் ஆகாஷின் அன்னையின் முகத்திலேயே அவருக்கு இந்த விஷயத்தில் விருப்பமில்லை என்பது தோன்ற குழம்பினாள்.
“ஏசி எதுக்கு மா, அதான் குளுகுளுன்னு தோட்டத்துல இருந்து காத்து வருதே…” என்ற ஆகாஷ் அன்னையை முறைக்க அவர் அத்தோடு வாயை மூடிக் கொண்டார். ஆகாஷின் குடும்பம் மிகவும் வசதியானது. வீட்டுக்கு அவன் ஒரே பையன். அவனது தந்தை பெரிய ரப்பர் இண்டஸ்ட்ரீஸ் வைத்திருக்க ஆகாஷும் இப்போது அதையே பார்த்துக் கொள்ள தொடங்கி இருந்தான்.
இந்துவின் குடும்பம் மிடில் கிளாஸ் வகையை சார்ந்தது. பரமசிவம் சாதாரண அரசுப் பணியில் இருந்தார். உடன் வந்த உறவினர்கள் பொதுவாய் இரு வீட்டினர் பற்றிய விவரங்களையும் பேசிக் கொண்டிருந்தனர்.
“ரெண்டு குடும்பத்துக்கும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு மத்த விவரத்தையும் பேசிடலாம்…” என்று ஒரு பெரியவர் சொல்ல,
“எங்களுக்கு பிடிச்சிருக்கு…” என்றார் ஆகாஷின் தந்தை.
“இந்து, நீ என்னமா சொல்லற…” மகளின் விருப்பத்தை பரமசிவம் கேட்க, “உங்க விருப்பம் ப்பா…” என்றாள் மகள்.
சந்தோஷத்துடன் புன்னகைத்தவர், “எங்களுக்கும் ஓகே தான்… என்ன எதிர்பார்க்கறீங்கன்னு சொல்லிட்டா…” இழுக்க,
“உங்களுக்கு என்ன செய்ய தோணுதோ பண்ணுங்க… எங்களுக்கு இருக்கிறது ஒரு பையன்… எங்க சம்பாத்தியம் முழுசும் அவனுக்கு தான்… அவன் விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம்…” என்றார் ஆகாஷின் தந்தை. அவர்கள் அடுத்து நிச்சயம், கல்யாணம் எங்கே, எப்போது என்று பேசத் தொடங்க, “பொண்ணுகிட்ட ஏதாவது பேசணும்னா பேசிக்கடா ஆகாஷ்…” என்றார் அவன் தந்தை.
கேட்டது தான் தாமதம் ஆகாஷ் அவசரமாய் எழுந்து நிற்க, “இந்து, மாப்பிள்ளையை தோட்டத்துக்கு அழைச்சிட்டு போயி பேசிட்டு வாங்க மா…” என்றார் பரமசிவம். இந்து அமைதியாய் எழுந்து வாசலுக்கு செல்ல ஆகாஷ் சந்தோஷத்துடன் தொடர்ந்தான்.
“இவர் தனியா என்ன பேசப் போறாரோ…” என்று இந்துவின் மனது அடித்துக் கொண்டது.
காலையின் இளம் வெயிலை சுகமாய் வீசிய காற்று தழுவிச் செல்ல அழகாய் பராமரிக்கப்பட்ட தோட்டத்தின் பூச்செடிகளை ரசித்துக் கொண்டே வந்தான் ஆகாஷ்.
பவளமல்லி மரத்தடியில் இருந்த திண்டின் அருகே பேசுவதற்கு வசதியாய் அவள் நிற்க அவன் அமர்ந்தான்.
“உங்க தோட்டமும் உன்னை மாதிரியே ரொம்ப அழகாருக்கு இந்து… எவ்ளோ அழகான பூச்செடிங்க…”
“ம்ம்… செடி வளர்க்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்…”
“ஓ… அப்ப நம்ம வீட்டுக்கு முன்னாடி நிறைய காலி இடம் இருக்கு… அது எல்லாம் பூந்தோட்டம் ஆக்கிடலாம்…” அவன் சொன்னதும் அவள் அமைதியாய் இருக்க ஆர்வமாய் பார்த்தவன் கண்களில் சிறு குழப்பம்.
“நீயும் இப்படி உக்காரு இந்து…” அவன் சொல்லவும் அமைதியாய் அமர்ந்தவள் முகத்தில் யோசனை தெரிந்தது.
“இந்து, உனக்கு என்னைப் பிடிக்கலயா…” கேட்டவனின் வார்த்தைகளில் இருந்த வலி அவள் இதயத்தைப் பிசைந்தது.
சட்டென்று நிமிர்ந்தவள் கண்கள் அவன் கண்களுடன் கலக்க, “அப்படில்லாம் இல்ல… இந்த கல்யாணத்துல உங்க அம்மாவுக்கு விருப்பம் இல்லியா…” என்றாள்.
“ஓ… அதான் விஷயமா..” மெல்ல புன்னகைத்த ஆகாஷ்,  “அது வேற ஒண்ணும் இல்ல இந்து… என் அம்மாவுக்கு என்னை வச்சு புதையல் எடுக்கணும்னு ஆசை… அதுக்கு நான் சம்மதிக்கலை… அதான் கோபம்… அவங்களைப் பத்தி பெருசா வொர்ரி பண்ணிக்காத… சரியாகிடுவாங்க…”
“நீங்க அவங்களுக்கு ஒரே பையன்… அவங்க விருப்பம் முக்கியம் இல்லையா ஆகாஷ்…”
“முக்கியம் தான் இந்து, அதனால தான் ஒரு மாசமா உண்ணாவிரதம், மௌன விரதம் எல்லாம் இருந்து இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன்…” என்றவனை அவள் திகைப்புடன் நோக்க, “சின்ன வயசுல இருந்தே நான் இப்படி தான் இந்து… ஒரு விஷயம் எனக்குப் பிடிச்சு நான் ஃபிக்ஸ் ஆகிட்டா அப்புறம் மாற மாட்டேன்… உன்னை எப்பப் பார்த்தேனோ அப்பவே என் மனசுல பிக்ஸ் பண்ணிட்டேன்… நீதான் என் மனைவின்னு… என் அம்மாவுக்கு பணம் பெருசா இருக்கலாம்… ஆனா வாழப் போறது நான்… எனக்கு என் மனசுக்குப் பிடிச்ச பொண்ணோட வாழறது தான் முக்கியம்… அப்பதான் அந்த வாழ்க்கை முழுமை அடையும்னு நினைக்கிறேன்… முதல்ல அம்மா ஸ்டேடஸ் பார்த்து ஒத்துக்கல, அப்புறம் அப்பாவோட சப்போர்ட்டும், என்னோட ஒத்துழையாமை இயக்கமும் தான் அவங்களை சம்மதிக்க வச்சுது… சோ, நீ அதைப் பெருசா எடுத்துக்காத… என் சாய்ஸ் தப்பில்லன்னு அவங்களை உணர வச்சுட்டா போதும்…” என்றவனின் கண்களில் வழிந்த காதல் அவள் இதயத்தில் சில்லிப்பாய் இறங்க பிரமிப்புடன் பார்த்திருந்தாள்.
“இவனுக்கு என் மேல் இத்தனை பிரியமா… இந்த அன்புக்கெல்லாம் நான் தகுதியானவள் தானா…” என தன்னையே மனதுக்குள் கேட்டுக் கொண்டு அமைதியாய் இருந்தவளை குறுகுறுவென்று பார்த்தான் ஆகாஷ்.
“இந்து, இப்ப என் மனசுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா… சுகமா வீசுற காத்து, பவளமல்லி மரம், பக்கத்துல என் மனசுக்குப் பிடிச்ச அழகான பொண்ணு… இந்த நிமிஷமே செத்துட்டாலும் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்…” 
அவன் சொல்லவும் நிமிர்ந்தவள் முறைத்தாள்.
“இன்னும் வாழவே தொடங்கல… அதுக்குள்ள சாகறதைப் பத்தி என்ன பேச்சு…” அவள் கோபமாய் கேட்டாலும் அவன் மீதுள்ள நேசத்தால் வந்த அக்கறை என்றே தோன்றியது.
சட்டென்று அவள் கையைப் பற்றியவன், “இந்து, ஐ லவ் யூ டா, இந்த நிமிஷம் என் சந்தோஷத்தை வார்த்தையால் சொல்ல முடியாது…” என்றவன் கண்ணை மூடி அவள் கையைத் தன் நெஞ்சில் வைத்துக் கொள்ள அவள் மனம் உருகியது. அந்த நிமிஷத்தை அவன் எத்தனை ரசிக்கிறான் என்பதை அவன் இதழோரம் கசிந்த புன்னகை சொல்ல அமைதியாய் பார்த்திருந்தாள்.
கண்ணைத் திறந்தவன் அவள் கையை மெல்ல விட்டு, “இந்த ஒரு மாசமா இப்படி ஒரு நிமிஷத்துக்காக தான் காத்திருந்தேன் இந்து… எனக்குத் தெரியும்… உனக்கு என் மேல லவ்வெல்லாம் வந்திருக்காதுன்னு… அதனால என்ன, சாகற வரைக்கும் லவ் பண்ணு… ஆனா இந்த நிமிஷம், இந்த இடம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்…” என்றவனின் உணர்ச்சிகளை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
“சொல்லு இந்து, உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா…” மனதில் உள்ள காதலை குரலில் தேக்கி விழி விரித்து அவன் கேட்க அந்தக் கண்களுக்குள் ஊடுருவி நோக்கி, “பிடிக்காமலா இவ்ளோ நேரம் உங்க காதலை உணர்ந்துட்டு இருக்கேன்…”  என்றவளின் பதில் அவனுக்கு போதுமானதாய் இருக்க அழகாய் கண்ணை சிமிட்டினான் ஆகாஷ்.
சிறகடிக்கும்
உன் இமைகளிடம்
சொல்லி வை…
அதில் சிக்கிக் கொண்டு
சின்னாபின்னமாவது
என் இதயமென்று…
இருவரும் அந்த நிமிடத்தை மனதில் தேக்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். அதற்குப் பிறகு கல்யாண ஏற்பாடுகள் மளமளவென்று நடக்கத் தொடங்கியது. தினமும் அவளது அலைபேசிக்கு அழைத்து உரையாட அவனுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன.
ஒரு மாதத்தில் கல்யாணம் என்பதால் இந்துவின் வீட்டிலும் பரபரப்பாய் வேலைகள் நடந்தது.
பரமசிவம் கையிலிருந்த சேமிப்பு போதாமல் பிஎப் பணத்தையும் எடுத்தார். இந்துவின் பெயரில் இருந்த டெபாசிட்டை எடுத்தார். பெரிய வீட்டு சம்மந்தம் என்பதால் ஓரளவிற்கு குறையில்லாமல் மகளைத் திருமணம் முடித்து அனுப்ப வேண்டும் என்று ஓடிக் கொண்டிருந்தார்.
இவர்கள் டிரஸ் வாங்க செல்லும் போதும், நகை வாங்க செல்லும்போதும் ஆகாஷும் உடன் சென்றான். அவன் சார்பில் வேறு நகைகளும், ஆடைகளும் வரப் போகும் மனைவிக்கு ஆவலுடன் வாங்கிக் கொடுத்தான்.
“எதுக்கு மாப்பிள்ள, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கிக் கொடுக்கலாமே…” பரமசிவம் கேட்க,
“அது வேற, இது வேற மாமா… இப்ப வாங்கிக் கொடுக்கிறது என் பரிசு… அப்புறம் வாங்கிக் கொடுக்கிறது என் மனைவியோட உரிமை தானே…” என்று சிரிப்பவனை பார்த்து அவரும் மலைத்துப் போவார்.
உலகத்தின் நேசம் எல்லாம் அவன் ஒருத்தனில் தானோ என்பது போல் இந்துவின் மீது பெரும் காதலைப் பொழிந்து ஒவ்வொரு நாளும் அவளை பிரமிக்க வைத்தான். அவனது காதல் மூலமாகவே அவள் மனதிலும் காதல் என்னவென்பதைத் தடம் பதித்தான்.
“அக்கா, சான்ஸே இல்ல… மாமா ஒவ்வொரு நாளும் அசத்துறார் போ… சூப்பர் மாமா…” ரிசப்சனுக்கு இந்து அணிவதற்காய் ஆகாஷ் பிரத்யேக முறையில் ஆர்டர் செய்து வாங்கிய உடையை சொல்லிக் கொண்டிருந்த சிந்து அப்போது பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள்.
வெல்வட் வண்ண முழு கவுனில் அங்கங்கே முத்துகள் சரம் சரமாய் தொங்கிக் கொண்டிருக்க மேல்பகுதியில் ஜொலிக்கும் கற்களும் சேர்ந்து மேலும் அழகு படுத்தின… ஹைதராபாத்தில் இருக்கும் ஆகாஷின் நண்பன் ஒருவன் அந்த உடையை வடிவமைத்துக் கொடுத்திருந்தான்.
“என்ன கொழுந்து, உனக்கும் இப்படி டிரஸ் தைக்க சொல்லிடலாமா…” என்றான் ஆகாஷ் சிரிப்புடன்.
“ஐயையோ வேண்டாம் பா… நான் வேற உங்க ஆளைவிட கொஞ்சம் அழகா இருக்கேன்… அப்புறம் யார் பொண்ணுன்னு கன்பியூஸ் ஆகிடும்…” என்றாள் சிந்து.
“சிந்து சும்மாரு, நீ வேற உன் மாமாவை உசுப்பேத்தாத…” தங்கையை அதட்டியவள், “எதுக்கு ஆகாஷ் இதெல்லாம்… தேவையில்லாம ரொம்ப செலவு பண்ணறீங்க…” என்றாள்.
“உனக்காக நான் செய்வதெல்லாம் செலவல்ல பெண்ணே… என் இதய ராணிக்காய் நான் சேகரிக்கும் சந்தோஷ நிமிஷங்கள்…” மனதுக்குள் நினைத்தாலும் சிந்து இருந்ததால் வெளியே சொல்லவில்லை ஆகாஷ்.
“உனக்காக செலவு பண்ணும்போது நான் கணக்கு வைக்கிறதில்ல இந்து மா…” அன்போடு சொன்னவனிடம் அவள் என்ன தான் சொல்லி விட முடியும்.
கஷ்டங்களை கூட
கடந்துவிடும் இதயம்
அன்பை மட்டும்
தாங்கிக் கொள்ள முடியாமல்
விழுந்து விடுகிறது…
ஒவ்வொரு நாளும் விதவிதமான சந்தோஷங்களைக் கடந்து கல்யாண நாளும் வந்தது.
“ஆகாஷ் வெட்ஸ் இந்துஜா…” வாசலில் பெரிய பேனர் இருவரின் புகைப்படத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தது.
முதல் நாள் மாலையில் நிச்சயம் நல்லபடியாய் முடிந்து அடுத்த நாள் காலை கல்யாணத்துக்காய் விடிந்தது. ஆகாஷின் அன்னையும் மகனுக்காய் மனதை தேத்திக் கொண்டாரோ என்னவோ, இப்போது சற்று இணக்கமாய் பேசத் தொடங்கியிருக்க இந்துவுக்கு சந்தோஷமானது. கல்யாண மண்டபம் உறவுகளால் நிறையத் தொடங்கியது.
அன்பில் வீழ்ந்து போன
இதயம் மட்டுமே
என்றும் எழுந்து
கொள்ள மறுக்கிறது…

Advertisement