Advertisement

அத்தியாயம் – 13
தனக்கான பேருந்து நிறுத்தத்தில் சிந்து இறங்க பின் பக்கத்தில் இருந்து அந்தப் பையனும் இறங்கினான். சற்று இடைவெளிவிட்டு அவளைப் பின்தொடர்ந்தான்.
சூரியன் சுள்ளென்று சுட்டுக் கொண்டிருக்க தெருவில் அதிகம் ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. முக்கிய சாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் கிளைச் சாலையில் சிந்து நடக்க பின்னில் வந்தவன் சற்று வேகமாய் எட்டுவைத்து அவளை நோக்கி நடந்தான். தெரு வளைவில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய வெற்றியும் அவர்கள் பின்னாலேயே இடைவெளி விட்டு தொடர்ந்தான்.
“சிந்து…” பின்னில் ஒலித்த குரலில் சற்று அதிர்ந்து திரும்பியவள் அவனைக் கண்டதும் முறைத்தாள். “கணேஷ்… உனக்கு அத்தனை சொல்லியும் புரியவே இல்லையா… எதுக்கு என் பின்னாடி வர்ற…” என்றவள் பதட்டமாய் சுற்றும் பார்த்துக் கொண்டே நிற்காமல் நடந்தாள்.
“சிந்து, ப்ளீஸ் சிந்து… என்னால உன்னை மறக்க முடியாது… தயவு செய்து நான் சொல்லுறதைப் புரிஞ்சுக்க… என் லவ்வை ஒத்துக்க சிந்து…” கெஞ்சினான் கணேஷ்.
நின்று திரும்பியவள் அவனை முறைத்தாள்.
“சரி, ஒத்துகிட்டு…” என்றவள் அவனை உறுத்து நோக்க முதலில் முழித்தவன் பிறகு சந்தோஷித்தான்.
“நீ ஒத்துகிட்டா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்… கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம் சிந்து…”
“எப்படி…” என்றாள் அவள் கடுப்புடன்.
“நான் வேலைக்குப் போறேன் சிந்து… உன்னை கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்கறேன்…”
“அடச்சீ… முதல்ல உன் பேத்தலை நிறுத்து… உன் அம்மாவே இப்பவும் வேலைக்குப் போயிதான், அப்பா இல்லாத உன்னைப் படிக்க வைக்குறாங்க… நல்லாப் படிச்சு, ஒரு வேலைக்குப் போயி அவங்களை பார்த்துக்கணும்னு தோணல… என்னை நீ நல்லா வச்சுப்பியா… கல்யாணம்ங்கறது வெறும் விளையாட்டுன்னு நினைச்சியா… இன்னும் பிளஸ் டூ கூட முடிக்கல, கல்யாணத்தைப் பத்தி யோசிச்சிட்டு இருக்க… முதல்ல சுயமா நம்ம கால்ல நிக்கப் பழகணும்… அதுக்கு படிப்பு முக்கியம்… இப்ப அதைத் தவிர வேற எதையும் யோசிச்சு உன் எதிர்காலத்தை ஸ்பாயில் பண்ணிக்காத… எனக்குன்னு சில இலட்சியங்கள் இருக்கு, கனவுகள் இருக்கு… அதை எல்லாம் எதுக்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க நான் தயாரா இல்லை… உனக்கு சப்போர்ட்டா பேசினதையும், நட்பா பழகினதையும் காதல்னு நினைச்சின்னா உன்னைப் போல முட்டாள் வேற யாருமில்ல… இதெல்லாம் இந்த வயசில் வர்ற சலனங்கள் தான்… இதுக்கு முக்கியத்துவம் கொடுக்காம படிப்புதான் நம்ம எதிர்காலம்னு யோசிச்சு கடந்துடணும்… சுயமா நம்ம கால்ல நின்ன பிறகு இந்த காதல், கல்யாணம் பத்தி எல்லாம் யோசிக்கலாம்… நான் சொன்னது புரிஞ்சுதா… நீ இப்ப வீட்டுக்கு கிளம்பு…” என்றாள் அழுத்தமாக.
அவள் சொன்னதைத் திகைப்புடனும், சிறு ஏமாற்றத்துடனும் கேட்டு நின்ற கணேஷ்க்கு முழுதாய் ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும் புரியவே செய்தது.
“நீ சொல்லுறது எனக்குப் புரியுது சிந்து… ஆனா என் காதல் வெறும் சலனமெல்லாம் இல்லை… இதை உனக்கு நிரூபிக்க வேண்டியே நான் நல்லாப் படிச்சு நல்ல வேலைக்குப் போவேன்… அதுக்குப் பிறகு உன்கிட்ட வந்து என் காதலை சொல்வேன்… அப்ப நீ ஏத்துக்குவியா…”
அவன் சொன்னதும் வியப்புடன் நோக்கியவள், “ம்ம்… அதுக்கு இன்னும் ரொம்ப காலம் இருக்கு… நடக்கட்டும், அப்பப் பார்க்கலாம்…” என்று முன்னே நடக்கத் தொடங்கினாள்.
“நிச்சயம் நடக்கும் சிந்து…” என்ற கணேஷ் அவள் கண்ணிலிருந்து மறையும் வரை நோக்கி நின்றுவிட்டு நிதானமாய் வந்த வழியே பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கத் தொடங்க அவர்கள் பேசுவதை மரத்தின் பின்னிலிருந்து கேட்ட வெற்றிக்கு திகைப்பாய் இருந்தது.
“இந்தக் காலத்து பிள்ளைகள் இப்படியும் இருக்கிறார்களா… இன்று காதல் சொல்லி, நாளை பிரேக்அப் சொல்லி வேறு ஒருவனுடன் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களும் இருக்கிறார்கள்… தான் நேசித்த பெண் காதலை மறுத்தால் அடுத்தநாள் ஆசிட் வீசும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்… அவர்களுக்கு மத்தியில் இவர்கள் பேசியதில் எத்தனை பக்குவம்…” சிந்து பேசியதைப் பற்றி பெருமையாய் யோசித்த வெற்றிக்கு கணேஷ் பேசியது புன்னகையைக் கொடுத்தது.
“அவன் சொன்னது போல் படித்து வேலைக்குப் போன பின்னும் இந்தக் காதல் நிலைத்திருக்குமா என்று நிச்சயம் சொல்ல முடியாது… ஆனாலும் அவன் அதற்கான முயற்சியாய் படிப்பை கவனிப்பான்…” என்றே தோன்றியது.
ரெஸ்டாரண்டில் சிந்து கணேஷின் காதலை மறுத்ததற்கு அவன் ஏதாவது முட்டாள்தனமாய் இவளைப் பழி வாங்கி விடுவானோ… என அஞ்சியே அவர்களைப் பின்தொடர்ந்து வந்தான் வெற்றி. ஆனால் இப்படியும் யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு புது நம்பிக்கையை கொடுத்தது.
சென்று காரை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய வெற்றியின் மனதில் சிந்துவின் மீதான அபிப்ராயம் கூடியது. மாலையில் தானே மகளை அழைக்கச் சென்றான். சிந்து குழந்தைகளின் பாகில் அவர்கள் பொருள்களை வைத்துக் கொண்டிருக்க அவளைக் கண்டவன் புன்னகைத்தான்.
“என்னடா இது, உலக அதிசயமே…” என நினைத்துக் கொண்ட சிந்துவும் பதிலுக்கு சின்னதாய் புன்னகைத்தாள்.
“அப்பா…” வருணுடன் விளையாடிக் கொண்டிருந்த பவித்ரா அவனைக் கண்டதும் ஓடி வந்தாள். அடிக்கடி அவனைக் கண்டிருந்ததால் வருணும் சிநேகமாய் கையாட்டினான் “ஹாய் அங்கிள்… பவியை கூட்டிட்டு போறிங்களா…”
“ஆமா, நீயும் எங்க வீட்டுக்கு பவியோட விளையாட வர்றியா…” என்றான் புன்னகையுடன்.
“அது..வந்து… அக்கா விட மாத்தாங்க…” என்றான் இந்துவைக் கை காட்டி.
“எனக்கும் வீட்டுக்குப் போகணும்…” அழுது கொண்டிருந்த ஒரு குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டே இவனைப் பார்த்து புன்னகைத்தாள் இந்து.
“அப்பா, இங்க நிதையா ரோஸ் செதி இதுக்குப்பா… எல்லோ கூட இதுக்கு… நாமும் வீத்ல வைக்கலாமா…” பவி கேட்கவும், “ஓ… பவிக்குட்டி சொல்லிட்டா வச்சுடலாமே…” என்றவன் இந்துவின் அருகில் சென்றான்.
“சங்கவி, அம்மாதான் கொஞ்ச நேரத்துல வந்திருவேன்னு சொன்னாங்களே… அப்புறம் எதுக்கு அழுதுட்டு இருக்க…”
“எனக்கு இப்பவே அம்மாத்த போணும்… சூர்யா, கார்த்திக் மட்டும் வீத்துக்கு போயித்தாங்க…” அழுகையினூடே அவள் சொன்ன காரணத்தைக் கேட்டு சிரித்தாள்.
“ஏய் சங்கவி… நானும், பவியும் வீத்துக்குப் போகாம இங்க தான இதுக்கோம்… உன்ன மாதி அழுதுட்டா இருக்கோம்… இல்லக்கா…” என்றான் வருண்.
“ஆமாடா கண்ணா..” என்றவள், “சங்கவி, அவங்க அம்மா வேலை முடிஞ்சு வந்துட்டதால கூட்டிட்டுப் போயிட்டாங்க… உன் அம்மாக்கு ஆபீஸ்ல இன்னும் வேலை முடியலையாம் செல்லம்… முடிஞ்சதும் வந்திருவாங்க… உனக்கு சாக்கி தரட்டுமா…” என்று கேட்க, “எனக்கு சாக்கி வேணாம்… பிஸ்கத் தான் வேணும்…” என்றாள் சங்கவி.
“சரி தரேன், அழக் கூடாது…” என்றவள், “ஜோதிக்கா, சங்கவிக்கு பிஸ்கட் எடுத்திட்டு வாங்க…” என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜோதியை அனுப்பினாள்.
அவர் பிஸ்கட் கொண்டு வந்து குழந்தையிடம் கொடுக்க, “அக்கா, இவளை உள்ள கூட்டிட்டுப் போங்க…” என்றவள்  சங்கவியை அனுப்பிவிட்டு வெற்றியிடம் திரும்பினாள்.
“ரொம்ப கஷ்டம்தான் இல்லயா, இந்த வயசுக் குழந்தைகளை சமாளிக்கறது…” என்றான் வெற்றி. “அவங்களை குழந்தைங்கன்னு நினைச்சு பார்த்தா கஷ்டமா தெரியாது சார்…” என்றாள் இந்துஜா.
“அக்கா, பவிக்கு எல்லோ ரோஸ் செடி வேணுமாம்…” வருண் சொல்ல, ஆவலாய் தந்தையை நோக்கினாள் பவி.
“ஓ… கொடுத்துடலாமே…” என்றவள், “வாங்க சார்…” என்று தோட்டத்திற்கு அழைத்து சென்றாள்.
மல்லிகை, முல்லை, ரோஜா, அரளி, செம்பருத்தி, நந்தியார்வட்டை இன்னும் பல பூச்செடிகள் அரும்பத் தொடங்கிய பூக்களுடன் வரவேற்பாய் தலையசைக்க அழகான அந்த சூழ்நிலையும், நறுமணமும் மனதுக்கு இதத்தைத் தருவதை உணர்ந்தான் வெற்றி. அந்த பவளமல்லி மரத்தைக் கண்டதும் இந்து இரவில் அங்கே அமர்ந்து கொண்டிருந்தது நினைவுக்கு வர கேட்க மனது நினைத்தாலும் வார்த்தைகள் முட்டுக்கட்டை போட்டது.
“அப்பா, இந்த எல்லோ ரோஸ் தான் சொன்னேன்…” பவிகுட்டி ஓடிச் சென்று ஒரு செடியைக் காட்ட, “ஓ, வாங்கலாம் செல்லம்…” என்றவன், “அந்தச் செடியும் ஒரு பூந்தொட்டியும் குடுங்க மேடம்… இதை எப்படி மெயின்டன் பண்ணனும்னும் கொஞ்சம் சொல்லிடுங்க, எனக்குத் தெரியாது…” என்றான்.
பிளாஸ்டிக் கவருக்குள் வேர் விட்டிருந்த ரோஸ் செடியில் மஞ்சள் ரோஜா மலர்ந்து அழகாய் சிரித்தது. இந்தத் தொட்டியில் செம்மண்ணைப் போட்டு குழி தோண்டி இந்த உரத்தையும் போட்டு செடியை வச்சிடுங்க சார்…” என்று ரெண்டு குட்டி பாக்கெட்டில் பொடி போல எதையோ கொடுத்தாள்.
வாங்கிக் கொண்டவன் “அமவுண்ட் எவ்ளோ மேடம்…” எனக் கேட்க, “பரவால்ல சார்… இது பவிக்குட்டிக்கு என்னோட ஸ்மால் கிப்ட்…” என்றதும் பவியின் முகம் ரோஜாவாய் மலர்ந்தது.
“ம்மா… கொஞ்சம் குனிங்க…” என்றதும் அவள் எதோ சொல்லப் போகிறாள் என்று நினைத்து இந்து குனிய கன்னத்தில் குட்டி இதழைப் பதித்த பவித்ரா, “தேங்க்ஸ்மா… லவ் யூ…” என்று சொல்லவும் நெகிழ்ச்சியாய் உணர்ந்தாள் இந்து. அதைப் பார்த்துக் கொண்டிருந்த வெற்றியின் மனதில் பவியின் மனதிலிருந்த ஏக்கம் புரிய முகம் இறுகியது.
“ஓகே தேங்க்ஸ் மேடம்… பார்வதி அம்மாவை அனுப்பறேன்… கொடுத்து விடுங்க… நாங்க கிளம்பறோம்…” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் பவியை அழைத்துக் கொண்டு கிளம்ப, “சட்டென்று இவனுக்கு என்னவாயிற்று…” மனதில் நினைத்தாலும் அமைதியாய் “சரி…” என்றாள்.
அவர்கள் சென்றதும் சிறிது நேரத்தில் சங்கவியின் அன்னை வர அவளை அனுப்பிவிட்டு, இந்துவே தொட்டியில் மண்ணிட்டு ரோஜாச் செடியை நட்டு வைத்தாள். பார்வதி வந்ததும் தொட்டியில் செடியுடன் அவரிடம் நீட்ட சிரித்தார்.
“மண்ணுக்கு எங்கடா போறதுன்னு நினைச்சேன்… நீயே எல்லாம் பண்ணிட்டியா கண்ணு…” என்று சந்தோஷமாய் வாங்கிக் கொண்டவர் வாசலில் அகிலாவைக் கண்டதும், “நல்லாருக்கிங்களாமா…” என்று நலம் விசாரித்து பொதுவாய் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்.
“அக்கா, பவிக்கு மட்டும் ஏன் காசு வாங்காம செடி கொடுத்திங்க… அன்னைக்கு அம்மா வாங்கினப்ப மட்டும் காசு வாங்கினிங்க…” வருண் இந்துவிடம் கேட்க பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தவள் சட்டென்று சமாளித்தாள்.
“அது, பவி சின்ன பாப்பா தானே, அவகிட்ட காசு இருக்காது… அதான் வேண்டாம்னு சொன்னேன்…” என்றாள்.
“இல்ல, உங்களுக்கு என்னை விட பவிய தான் பிடிக்கும்… இப்பல்லாம் என்ன விட பவிய தான் அதிகமா கொஞ்சறிங்க…” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான்.
“டேய் வருண், என்னடா ரொம்ப தான் பீல் பண்ணற… அக்கா உன்னைக் கொஞ்சலைனா என்ன, நான் கொஞ்சறேன் வா…” சிந்து அழைக்க, “ஒண்ணும் வேண்டாம்…” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள அகிலாவும், சிந்துவும் சிரித்தனர். “அதென்னடா இந்து கொஞ்சினா மட்டும் உங்களுக்குப் பிடிக்குது… சிந்து கொஞ்சினாப் பிடிக்காதா..” செல்லமாய் தலையில் தட்டவும் செய்தார் அகிலாண்டேஸ்வரி.
“டேய் வருண், அப்படில்லாம் ஏதும் இல்லடா… உனக்கு வீட்ல அம்மா கொஞ்சுறாங்க… ஆனா, பவிய யாரு கொஞ்சுவா… அதான் நான் கொஞ்சறேன்…” என்றாள் இந்து.
“அவளைக் கொஞ்ச தான் அவ அப்பா இருக்காரே…” என்றான் அவன் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு.
“சரி விடுடா… இப்ப என்ன அவளை விட உன்னைக் கொஞ்சனுமா… கொஞ்சிட்டாப் போகுது…” என்று இடுப்பில் கிச்சுகிச்சு மூட்ட அதுவரை உள்ள கோபம் கரைந்து கலகலவென்று சிரித்தவன் கைக்கு எட்டாமல் ஓட இந்துவும் விடாமல் விரட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டாள்.
“பார்த்துடா, ஆளாளுக்கு என் அக்காவைப் பங்கு போட்டு கொஞ்சிட்டு இருக்கறதால தான் அவ என்னைக் கொஞ்ச மாட்டேங்கறா…” என்றாள் சிந்து.
“ஆமா இவ குழந்த பாரு, மடில போட்டு கொஞ்சறதுக்கு… போயி பாத்திரம் எல்லாம் தேச்சு வைக்கற வழிய பாரு…”
“அதானே… நான் கொஞ்ச நேரம் சும்மா இருக்கறதைப் பார்த்துடக் கூடாதே… உடனே வேலை சொல்லிடுங்க… கொடுமைக்கார மம்மி…” புலம்பிக் கொண்டே அவள் உள்ளே செல்ல இந்துவும் சிரித்தாள். இது எல்லாவற்றையும் மாடி ஜன்னல் வழியே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. மனம் இந்துவின் அருகாமைக்காய் ஏங்க கையில் வைத்திருந்த ஜோவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். “ஜோ, நான் தானே உன் அம்மா, எப்பவும் உன்னோடவே இருக்கேன் சரியா…” என்று சொல்லிக் கொண்டாள்.
வருணை உள்ளே அழைத்துச் சென்ற இந்து, “கார்ட்டூன் பார்க்கறியா…” என்று டீவியை வைத்து அமர்த்திவிட்டு குளிக்க சென்றாள். அகிலா வருண் அருகில் அமர்ந்து நியூஸ் பேப்பரைப் பார்த்துக் கொண்டிருக்க பரமசிவம் வந்தார். சோர்வுடன் பைக்கை நிறுத்தி வந்தவர், “தண்ணி குடும்மா…” என்றதும் கொண்டு வந்து கொடுத்தார் அகிலாண்டேஸ்வரி.
“என்னங்க, சீக்கிரம் வந்துட்டீங்க… முடியலையா… ரொம்ப டயர்டா தெரியறீங்க… காபி எடுக்கட்டுமா…”
காலி சொம்பை நீட்டியவர், “ம்ம்…” என்றுவிட்டு அறைக்கு செல்ல அகிலா காபி கலந்து எடுத்து வந்தபோது அவர் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டு நெற்றியை சுருக்கினார். “இப்படி படுக்க மாட்டாரே…” யோசித்தவர் அழைத்தார்.
“என்னங்க, காபி கொண்டு வந்திருக்கேன்… சூடா குடிங்க…”
“ம்ம்…” என்ற பரமசிவம் எழுந்து அமர்ந்தார்.
“என்னங்க, உடம்புக்கு என்ன பண்ணுது… மாலை நேரத்துல இப்படி படுக்க மாட்டிங்களே…” அக்கறையாய் கேட்ட மனைவியிடம்,
“என்னன்னு தெரியல, கொஞ்சம் படபடப்பா, தல சுத்தற போல இருக்கு… வேர்த்துக் கொட்டுது, நெஞ்சைக் கரிக்கிற போல தோணுது… சாப்பிட்ட எதுவும் சேரலையா தெரியல, வாந்தி வர்ற போலவே டிஸ்டர்பா இருக்கு…” “அச்சோ, என்னங்க சொல்லறிங்க… வாங்க ஹாஸ்பிடல் போகலாம்…” பதறினார் அகிலா.
“இல்லமா, கேஸ் டிரபிளா இருக்கும்… காபி குடிச்சிட்டு கொஞ்சம் படுக்கறேன்… சரியாகலேன்னா போகலாம்…” சொல்லிவிட்டு முகத்தை சுளித்துக் கொண்டே அவஸ்தையை காபி குடித்து முடித்தவரை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார் அகிலா. காபிக் கோப்பையை நீட்டியவர் மறுபடி படுத்துக்கொள்ள, அகிலாவுக்கு பயமாய் இருந்தது. அப்போது வருணின் அன்னை அவனை அழைத்துச் செல்ல வரவும் அவனை அனுப்பிவிட்டு மீண்டும் கணவரிடம் வந்தார். குளித்துவிட்டு வந்த இந்துவிடம் இதைச் சொல்ல பதட்டத்துடன் அவளும் வந்து பார்க்க பரமசிவம் வலியில் உருண்டு கொண்டே படுத்திருந்தார்.
இடது கையில் தொடங்கிய வலி தோள் பட்டைக்கு சென்று, சுள்ளென்று இதயத்தில் மின்னலாய் இறங்க வேர்த்து ஊற்றியவர் வலி தாங்காமல் எழுந்து அமர்ந்தார். இதயத்தை அழுத்திப் பிசைவது போல் தோன்ற நெஞ்சைப் பிடித்துக் கொண்டு எழுந்தவரைக் கண்டு இந்துவும், அகிலாவும் பதற சத்தம் கேட்டு சிந்துவும் ஓடி வந்தாள்.
மூச்சு அடைக்க பேச முடியாமல் திணறியவர், “வ… வண்டி, டாக்டர்…” என இந்து வேகமாய் வெளியே ஓடினாள். “அப்பா, என்னாச்சுபா… பயமாருக்குப்பா…” என்று அழத் தொடங்கிய சிந்துவின் தலையில் ஒரு கையும் நெஞ்சில் ஒரு கையுமாய் பிடித்திருக்க, “அச்சோ என்னங்க, தண்ணிய குடிங்க…” என்ற அகிலா கொடுத்த தண்ணீரை சிரமத்துடன்  வெளியே சிந்திக் கொண்டே குடித்தவருக்கு வலி அதிகமாக நெஞ்சைப் பிடித்துக் கொண்டவர் கண்கள் செருகத் தொடங்கியது.
பதறிக் கொண்டே கேட்டுக்கு வெளியே வந்த இந்துவை  ரோஸ் செடியின் அருகே இருந்த பவித்ரா கவனித்துவிட, “அப்பா, அம்மா பாரு…” என்று கைகாட்ட அவளை கவனித்த வெற்றி அவளது பதட்டமும் நைட்டியோடு வெளியே நின்றவளையும் கண்டு ஏதோ சரியில்லை என்று தோன்ற வெளியே வந்து என்னவென்று விசாரித்தான்.
“அ..அப்பாவுக்கு உடம்புக்கு முடியல, ஹா…ர்ட் அ…ட்டாக் போலருக்கு… ஹாஸ்பிடல் போகணும், வண்டி…” என்று சொல்ல, பதறியவன், “என்னங்க, கார் எடுத்திட்டு வரேன்… சீக்கிரம் வாங்க…” என்ற அடுத்த நிமிடமே காரை எடுத்திருக்க பவியை பார்வதி அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பியிருந்தனர்.
என் விழி வழியே
வழியும் தாகம்
உன்னைத் தீண்டாதோ…
அழைக்கும் தூரத்தில்
நீ இருந்தும்
அலைக்கழிகிறேன்…
அம்மா என்றழைத்தால்
தீர்ந்திடுமா அன்பின் தாகம்
அனுதினமும் வேண்டும்
உன் அனுசரணைகள்…
மனம் நித்தமும் தேடும்
உன் வாசனைகள்…
எனக்கான பேரன்பின்
பெருமழையாய் நீ…

Advertisement