Advertisement

அத்தியாயம் – 12
தனது அலைபேசி ஒலிக்கவே கண்ணை சுருக்கி யாரென்று பார்த்த பார்வதி வெற்றியின் எண்ணைக் கண்டதும் வேகமாய் காதுக்குக் கொடுத்தார். வீட்டில் சும்மா இருந்த அலைபேசி ஒன்றில் சிம்மைப் போட்டு அவரது உபயோகத்திற்காய் கொடுத்திருந்தான் வெற்றி.
“ஹலோ, சொல்லுங்க தம்பி…”
“பார்வதிம்மா, பவியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டிங்களா… என்ன பண்ணிட்டு இருக்கா…”
“இல்ல தம்பி, நான் அழைக்கப் போனேன்… அப்பா வர்ற வரைக்கும் அவங்க வீட்லயே இருக்கறேன்னு சொல்லுச்சு… இந்துவும், அங்கயே இருக்கட்டும், பார்த்துக்கறேன்னு சொன்னதால விட்டுட்டு வந்தேன்…” என்றவருக்கு அவன் எதுவும் சொல்லுவானோ என பயமாயிருந்தது.
“ஓ… சரிம்மா, நான் வர்றதுக்கு எப்படியும் ஒன்பது ஆகிடும்… நீங்க டைம் ஆனா வீட்டுக்கு கிளம்பிக்குங்க… நான் பவியை அழைச்சுக்கறேன்…” என்றான் வெற்றி.
“சரி தம்பி…” என்றவர் அழைப்பைத் துண்டித்துவிட்டு மதியம் மீதமிருந்த உணவை சாப்பிட்டு வீட்டுக்குக் கிளம்பினார். அப்படியே இந்துவின் வீட்டுக்கு வந்து வெற்றி சொன்னதை சொல்லிவிட்டு சென்றார்.
இந்துவும், அகிலாவும் அடுக்களையில் இருக்க சிந்துவின் அருகில் அமர்ந்து எதையோ பேப்பரில் கிறுக்கிக் கொண்டிருந்தாள் பவித்ரா. பரமசிவம் ஏதோ வேலை இருந்ததால் இன்னும் வந்திருக்கவில்லை.
ரெக்கார்டு நோட்டில் படம் வரைந்து கொண்டிருந்த சிந்து அடுக்களையிலிருந்து வந்த வாசனையை நுகர்ந்து “ம்மா, பசிக்குது… என்ன டிபன்…” குரல் கொடுத்தாள்.
“இட்லி ஊத்தி வச்சிருக்கேன்… சட்னிக்கு ரெடியாகுது…”
“என்னது இட்லியா… எப்பப் பார்த்தாலும் இந்த இட்லி தோசை, பொங்கலைத் தவிர வேற எதுவும் உங்களுக்கு தெரியாதா…” முகத்தை சுளித்தபடி கேட்டாள்.
“ஓஹோ, அம்மணிக்கு வேற என்ன வேணுமாம்…” கேட்ட அகிலா அவளை முறைக்க பவி வேடிக்கை பார்த்தாள்.
“ஒரு ஆலு பராத்தா, மட்டர் பனீர், சென்னா பட்டூரா, டால் மக்கினி… இப்படிலாம் புதுசா டிரை செய்து உங்க சமையல் அறிவை வளர்த்துக்க கூடாதா…” கேட்டவளை முறைத்துக் கொண்டே அங்கு வந்தார் அகிலாண்டேஸ்வரி.
“எங்களுக்கு இருக்கற சமையல் அறிவு போதும்… இதெல்லாம் என்ன, யாராச்சும் இங்கிலீஷ்காரங்க பேரா…”
“ஐயோ மம்மி… இதெல்லாம் இங்லீஷ்காரங்க பேரு இல்ல… வடநாட்டு புட் அயிட்டம்ஸ் பேரு… பேருல உலகத்தை வச்சிருந்தா மட்டும் போதாது… கொஞ்சம் உலக அறிவையும் வளர்த்துக்கணும்…” என்றவளின் தலையில் குட்டினார்.
“உன் வாய் மட்டும் இல்லடி, நாக்கும் ரொம்ப நீளமாதான் போயிருச்சு… டெய்லி உப்புமா கிளறிக் கொடுத்தா சரியாப் போயிடும்…” என்ற அகிலா மீண்டும் அடுக்களைக்குள் செல்ல, நடந்ததை விநோதமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்  பவித்ரா.
“நீ இதெல்லாம் பார்த்து பயப்படாத குட்டி… என் மம்மி வெறும் டம்மி… சும்மா விளையாடினோம்…” என்றாள் சிந்து.
அதற்குள் வாசலில் பைக் சத்தம் கேட்க, “வா… தாத்தா வந்துட்டார் போலருக்கு…” என்று வாசலுக்கு ஓடினாள்.
“சிந்து, என்னடா படிக்கறியா…” கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த தந்தையிடம், “ஆமாப்பா… புரோஜக்ட் முடிக்காம போனா உள்ள விட மாட்டேன்னு ஸ்கூல்ல கொடுமை பண்ணறாங்கன்னா, ஹோம் வொர்க் முடிக்காம சோறு போட மாட்டேன்னு வீட்ல உங்க சம்சாரம் கொடுமை பண்ணுது… ஒரு பச்சப் புள்ள எவ்ளோ கொடுமையை தான் தாங்குறது…” என்று பாவமாய் தலையாட்டினாள் செல்ல மகள்.
அதைக் கேட்டுக் கொண்டே கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு வந்த அகிலாண்டேஸ்வரி, “யாருடி, நான் கொடுமை பண்ணறேனா… ஸ்கூல் விட்டு வந்ததும் மூக்கு பிடிக்க சாப்பிட்டு கொஞ்ச நேரம் புக்கைத் திறந்து வைக்கறதுக்குள்ள மறுபடி பசிக்குது, பசிக்குதுன்னு சொல்லிட்டு இருக்க… உன் வயித்துக்குள்ள பூதம் எதாச்சும் இருக்கான்னு தெரியல…” என்றார் கடுப்புடன்.
“சரி விடு அகிலா, வளர்ற புள்ள… அப்படிதான சாப்பிடுவா…”
“சாப்பிட வேண்டாம்னு சொல்லலங்க… நான் சாப்பாடே போடாம கொடுமை படுத்துற போல பில்டப் பண்ணறதை தான் தாங்க முடியல…” என்றவர், பவிக்குட்டி பயமாய் அவர்களைப் பார்ப்பதைக் கண்டு கண் சிமிட்டினார்.
“அட பவிக்குட்டி, நீயும் இங்க தான் இருக்கியா..,” என்ற பரமசிவம், சிந்து கடலை மிட்டாய் வாங்கினேன்… குழந்தைக்கு எடுத்துக் கொடு…” என்றவர், “இந்து எங்கே…” எனும் போதே அவளும் வந்தாள்.
“என்னடா, இன்னும் சமையல் முடியலையா… குருமா வாசம் தெரு வரைக்கும் மணக்குது…”
“ம்ம்… ஆமாப்பா, சப்பாத்திக்கு குருமா வச்சிட்டு இருந்தேன்… குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம்…”
“என்னது சப்பாத்தியும், குருமாவுமா… அப்ப அந்த உலகம் இட்லின்னு எங்கிட்ட பொய் சொல்லிருக்கா…” என்றவள் அன்னையை நோக்க, அவர் சிரித்தார்.
“போடி போ, நாக்கை மட்டும் நீளமா வளர்த்து வச்சா போதாது, குருமாவுக்கும் சட்னிக்கும் மணத்துல வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியணும்…” என்று நக்கலடித்து சென்றார்.
“பவிக்குட்டி, பசிக்குதா… சப்பாத்தி சாப்பிடறியா…” அவளிடம் இந்து கேட்க புன்னகையுடன் தலையாட்டினாள். ஒரு பிளேட்டில் சப்பாத்தி குருமாவை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் குழந்தையை அமர்த்தி தட்டைக் கொடுத்துவிட்டு தந்தை வருவதற்காய் காத்திருந்தாள்.
பவித்ரா சாப்பிடாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, “ஏண்டா செல்லம், பிடிக்கலையா…” என்றாள்.
“அப்பாதான் சப்பாத்தி ஊட்டி விதும்…” என்றாள் பாவமாக.
“ஓ… சரி, இன்னைக்கு நான் ஊட்டி விடட்டுமா…” இந்து கேட்டதும் பவி பலமாய் தலையாட்ட சிரித்தாள்.
குளித்து வந்த பரமசிவம், “அட, பவிக்குட்டி இந்துகிட்ட நல்லா ஒட்டிகிட்டா போலருக்கு…” என்றார்.
“ஆமாங்க, இவளும் அந்த வருண் மாதிரி இந்து பின்னாடியே தான் சுத்திட்டு இருப்பா…”
“ம்ம்… பவிக்குட்டி நல்லா சாப்பிடனும் சரியா…”
“சதி தாத்தா…” அவள் சொல்லவும் புன்னகைத்தவர் தலையைக் கோதிவிட்டு உணவு மேசைக்கு செல்ல சிந்துவும், அகிலாவும் எல்லாவற்றையும் மேசை மீது எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
பவித்ரா சாப்பிட்டு முடித்ததும் அவளுக்கு டீவியில் கார்ட்டூன் வைத்துவிட்டு இந்துவும் சாப்பிட சென்றாள்.
“அம்மா, நாளைக்கு ஸ்கூல் ஹால்ப் டே தான்… பிரண்டு பர்த்டேக்கு ட்ரீட் கொடுக்கறேன், மதியம் ஹோட்டல்ல சாப்பிடலாம்னு சொன்னா… போகட்டுமா…” என்றாள் சிந்து.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… கிளாஸ் முடிஞ்சதும் ஒழுங்கா வீட்டுக்கு வா…” என்றார் அகிலா பட்டென்று. அதைக் கேட்டதும் சிந்துவின் முகம் வாட, அடுத்து தந்தையிடம் அப்ளிகேஷனைப் போட்டாள்.
“அப்பா, ப்ளீஸ் ப்பா… நான் மட்டும் இல்ல, பிரண்ட்ஸ் எல்லாரும் வராங்க… இனி ப்ராக்டிகல், எக்ஸாம்னு எல்லாரும் பிஸியாகிடுவோம்… இந்த ஒரு டைம் ஓகே சொல்லுங்க… என் செல்லப்பா தானே..” அப்பாவை சிபாரிசுக்கு அழைத்தவள் இந்துவிடமும் கண் காட்டினாள்.
“லஞ்ச் தானே, போயிட்டு வரட்டுமே…” இந்துவும் சொன்னாள்.
“ஆமா, அகிலா… இதெல்லாம் இந்த ஸ்டேஜ்ல வர்ற சின்னச் சின்ன ஆசைகள்…” என்று பரமசிவமும் சொன்னார்.
“ம்ம்… சரி, பத்திரமா போயிட்டு வரணும்… சாப்பிட்டதும் நேரா வீட்டுக்கு வந்திடணும்… எங்கயும் போகக் கூடாது…” என்று ரூல்ஸ் சொல்லி அகிலாண்டேஸ்வரி சம்மதித்தார்.
“ஓகே… என் உலக நாயகியே…” என்று இடுப்புவரை குனிந்து சொன்னவள், “அப்பா, எப்பவும் நம்ம வீட்ல மதுரையே ஆட்சி நடந்தா எப்படி… சிதம்பர ஆட்சியும் வர வேண்டாமா…” என்று கேட்க முதலில் குழம்பியவர் சிரிக்க, “அடி… உன்னை…” என்று அகிலா பின்னாடியே செல்ல இந்துவும் சிரித்தாள்.
“இந்த ரெண்டு காமெடி பீசுங்களை வச்சிட்டு…” சிரித்துக் கொண்டே பரமசிவமும் எழுந்தார். இந்துவும் கை அலம்பி ஹாலுக்கு வர பவித்ரா சோபாவிலேயே உறங்கி இருந்தாள்.
“அச்சோ, குட்டி தூங்கிட்டாளே…” என்றவள் அவளைத் தனது கட்டிலில் படுக்க வைத்து போர்த்தி விட்டாள்.
அதைக் கண்ட அகிலா, “குழந்தை… தூங்கிட்டாளா… இன்னும் இவ அப்பாவைக் காணோமே… மணி ஒன்பதரை ஆச்சு…” என்று சொல்ல, “ம்ம்… ஏதோ வேலையா தானே போயிருக்கார்… முடிச்சிட்டு வரட்டும்மா…” என்ற இந்து அடுக்களையை ஒதுக்க சென்றாள்.
பரமசிவம் சிட்டவுட்டில் இருந்த திண்டின் மீது அமர்ந்திருக்க அகிலாவும்  அருகில் வந்து அமர்ந்தார்.
“என்னங்க, ஏதோ யோசனையாய் இருக்கீங்க… தூங்கலயா…”
“”ப்ச் நம்ம இந்துவைப் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்…”
“ம்ம்… அவளை நினைக்கும்போது தாங்க மனசுக்கு ரொம்ப பயமா இருக்கு… நாமளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம்… எதுக்கும் பிடி கொடுக்க மாட்டேங்கிறா…”
“ம்ம்… எனக்கும் அதான் கவலையா இருக்கு…” என்றவர் அமைதியாக அகிலாவும் ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்.
அப்போது வெற்றியின் கார் ஹாரன் அடித்துக் கொண்டே எதிர் வீட்டு வாசலில் நிற்க பரமசிவம் எழுந்தார். வேகமாய் சென்று சாவியை எடுத்து கதவைத் திறந்து லைட்டைப் போட்டு விட்டு இங்கு ஓடி வந்தான்.
“இந்து, பவி அப்பா வந்துட்டார்மா…” குரல் கொடுத்த அகிலாவும் கணவருடன் கேட்டுக்கு சென்றார்.
“சாரி சார், ரொம்ப லேட் ஆகிடுச்சு…” சொல்லிக் கொண்டே அவர்களிடம் வந்தான்.
“அதனால என்ன தம்பி பரவால்லை… பக்கத்துலயே இருந்துட்டு இந்த சின்ன உதவி கூட செய்யலைனா எப்படி.. குழந்தை தூங்கிட்டா போலருக்கு… உள்ள வாங்க…” என்று அழைக்க மறுக்காமல் சென்றான்.
“சாரிமா… எல்லாருக்கும் ரொம்ப சிரமத்தைக் கொடுத்துட்டேன்… தூங்காம காத்திருந்திங்க போலருக்கு…” என்றான் வெற்றி.
“அச்சோ, என்ன தம்பி… குழந்தையைப் பார்த்துக்கறதுல என்ன சிரமம் இருக்கு… எங்க வேலையே அதானே… இதுக்கெல்லாம் எதுக்கு சாரி…” என்றார்.
“வாங்க சார், பவி நல்லாத் தூங்கறா… கட்டில்ல படுக்க வச்சிருக்கேன்… தூக்கிக்கறீங்களா… இல்ல எழுப்பனுமா…”
“நான் தூக்கிக்கறேன்…” என்றவனிடம் அறையைக் கைகாட்ட, அவன் சென்று மகளைப் பூ போலத் தோளில் அள்ளிப் போட்டுக் கொண்டான்.
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்… ஒரு வேலையா போனவன் அவுட்டர்ல மாட்டிகிட்டேன்…”
“பரவால்ல சார்… பவி சமத்து… எங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை, நீங்க பீல் பண்ண வேண்டாம்…” என்றதும் எல்லாரிடமும் விடை பெற்றவன் வீட்டுக்கு சென்று அவளை மாடி அறையில் கட்டிலில் கிடத்திவிட்டு காரை எடுத்து உள்ளே நிறுத்த கீழே வந்தான்.
பரமசிவமும், அகிலாவும் உள்ளே சென்றிருக்க இந்து தோட்டத்தில் பவிள மல்லி மரத்தடியில் அமர்ந்திருப்பது பல்பின் மங்கிய வெளிச்சத்தில் தெரிய புருவத்தைத் தூக்கினான் வெற்றி.
“இந்த நேரத்தில் தோட்டத்தில் என்ன செய்கிறாள்…” என யோசித்தாலும் அதைத் தொடராமல் கதவை சாத்தித் தாளிட்டு குளிக்க சென்றான்.
அடுத்தநாள் வழக்கம் போல காலையில் குழந்தையை விட்டுவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பிய வெற்றி பார்வதி அம்மாவிடம் வந்தான்.
“நான் ஆபீஸ் கிளம்பறேன்… மதியம் எனக்கு லஞ்ச் வேண்டாம்… உங்களுக்கும் பவிக்கும் மட்டும் சமைச்சுட்டு பவிக்கு கொண்டு போயி கொடுத்துடுங்க…”
“சரி தம்பி, நான் பார்த்துக்கறேன்…” பார்வதி சொல்லவும் வெற்றி அலுவலகத்திற்கு கிளம்பினான்.
நேரமாய் அலுவலகத்திற்கு சென்ற வெற்றியின் மேசை மீது ஒரு பைலைக் கொண்டு வந்து வைத்தான் கோபால்.
“சார், இந்த கொட்டேஷன் எல்லாம் நீங்க சரிபார்த்து கையெழுத்து போட்டுட்டா அனுப்பிடலாம்…”
“ஓகே… அந்த புது கஸ்டமருக்கு கன்பர்மேஷன் மெயில் அனுப்ப சொல்லிடு…” சொல்லிக் கொண்டே பைலை ஆராயத் தொடங்கியவன் எல்லாம் சரிபார்த்து கையெழுத்திட்டான்.
அப்போது அலைபேசி சிணுங்க நண்பனின் எண்ணைக் கண்டவன், “ஆஹா, மறந்துட்டேனே…” என தன்னைத் தானே கடிந்து கொண்டு எடுத்து காதுக்குக் கொடுத்தான்.
“மச்சான்… லஞ்சுக்கு வந்திருவ தான…”
“ம்ம்… வரேன்டா… எத்தன மணிக்கு…” விவரத்தைக் கேட்டு அழைப்பைத் துண்டித்தான். நண்பன் ஒருவன் வெளிநாடு செல்வதால் ட்ரீட் கொடுக்க நட்புகளை அழைத்திருந்தான்.
மதியம் சரியாய் பனிரெண்டரை மணிக்கு ஆபீசில் இருந்து கிளம்பிய வெற்றி டிராபிக்கைக் கடந்து நண்பன் சொன்ன ரெஸ்டாரண்டுக்கு வந்து சேரும்போது சரியாய் ஒரு மணி.
வெகுநாட்களுக்குப் பிறகு காண்பதால் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு உள்ளே சென்றனர். ஏசி ஹாலில் ஒரு ஓரமான மேசையை சுற்றி நால்வரும் அமர, ஆர்டர் எடுக்க வந்த பையனிடம் வேண்டிய உணவை சொல்லிவிட்டு பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர்.
“அப்புறம் வெற்றி, பிசினஸ் எப்படிப் போகுது… எப்ப கல்யாண சாப்பாடு போடப் போற…”
“பிசினஸ் நல்லாப் போகுதுடா… கல்யாணத்தைப் பத்தி இன்னும் யோசிக்கலை…”
“ம்ம்… ஏண்டா எப்பப் பார்த்தாலும் கல்யாணத்தைப் பத்தியே கேக்கற… அவனாச்சும் சுதந்திரமா இருக்கட்டுமே…”
“ஆமா மச்சான்… கல்யாணம் ஆகுற வரைக்கும் எந்தப் பொண்ணாச்சும் நம்மைப் பார்க்காதா, செட் ஆகாதான்னு அவ்ளோ ஏக்கமா இருக்கும்… ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு இந்தப் பொண்டாட்டிங்க கொடுக்கிற நச்சு இருக்கே… அடடா, சகிக்க முடியாது… அதை செய், இதை செய்யாத… அங்க போ, இங்க போகாத… பத்து நிமிஷத்துக்கு ஒரு டைம் போன்ல கூப்பிட்டு எங்க இருக்கேன்னு கேட்டு படுத்தி எடுக்கிறாங்க… அப்ப நாம கல்யாணத்துக்கு முன்னாடி எவ்ளோ சுதந்திரமா சுத்திட்டு இருந்தோம்னு நினைச்சு பெருமூச்சுதான் வரும்…” என்றான் கல்யாணம் பண்ணியதால் நொந்து நூடுல்ஸ் ஆன அனுபவஸ்தன் ஒருவன்.
அதைக் கேட்டு வெற்றி சிரிக்க மற்றவர்களும் சிரித்தனர்.
“கொஞ்ச நேரம் வீட்ல டீவி பார்க்க முடியாது, அப்பத்தான் அவங்களுக்கு சீரியல் பார்க்கணும்… சரின்னு மொபைலை எடுத்தா அதை செய், இதை செய்… வெட்டியா தான இருக்கேங்கற ரேஞ்சுக்கு ஜாடையா திட்டுவாங்க மச்சி…” என்றான் மற்றவன்.
“டேய்… உங்க அனுபவத்தை எல்லாம் சொல்லி பிரம்மச்சாரியா இருக்கறவனை நித்ய பிரம்மச்சாரியா மாத்திடாதிங்க…” என்றான் மற்றவன் சிரிப்புடன்.
“நித்ய பிரம்மசாரின்னா எப்படிடா, நித்யானந்தா மாதிரியா…”
“ஆஹா, டேய்… இவன் நம்ம தலைவருக்கே Tuff கொடுப்பான் போலருக்கே…” என்று சிரித்தனர் மற்றவர்கள். வெகு நாளைக்குப் பிறகு நண்பர்களின் பேச்சில் மனசு சற்று லேசாக வெற்றியும் இயல்பாய் பேசிக் கொண்டிருந்தான்.
பேச்சுடன் பறக்கும், நடக்கும், நீந்தும் சில உணவு வகைகளும் வயிற்றுக்குப் போக உண்ணத் தொடங்கினர்.
எதேச்சையாய் நிமிர்ந்த வெற்றியின் கண்ணில் எட்டு பேர் அமரும் வட்ட மேசையை சுற்றி நண்பர்களோடு அமர்ந்திருந்த சிந்து கண்ணில் பட்டாள். அவர்களுடன் மூன்று ஆண் நண்பர்களும் இருக்க நெற்றியை சுருக்கினான்.
“இதென்ன, அந்த சிந்து பள்ளி நேரத்தில் நண்பர்களோடு ஹோட்டலுக்கு வந்திருக்கிறாள்… இது அவள் வீட்டுக்கு தெரியுமோ என்னவோ…” என யோசனை ஓடியது.
அவர்களின் கலகலவென்ற பேச்சும் சிரிப்பும் சில மேசைகளைக் கடந்து இவர்கள் காதில் எட்டியது. நண்பர்களுடன் பேசிக் கொண்டே உண்டு முடித்த வெற்றி எழுந்து கை கழுவிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்றான். கதவைத் திறக்கும் நேரத்தில் சிந்துவும், ஒரு பையனின் கெஞ்சும்  குரலும் அங்கு கேட்கவே வெளியே வராமல் தாமதித்தான்.
“ப்ளீஸ் சிந்து… நீ ஓகே சொல்லலைனா நான் செத்திருவேன்… உன்னை ரொம்ப லவ் பண்ணறேன்… பிடிக்காதுன்னு மட்டும் சொல்லிடாத…” என்ற பையனின் குரலைத் தொடர்ந்து சிந்துவின் குரலும் ஒலித்தது.
“இடியட்… இன்னொரு டைம் லவ்வு, கிவ்வுன்னு சொல்லிட்டு என் பின்னாடி வந்தா நானே உன்னைக் கொளுத்திருவேன்… படிக்கிற வயசுல என்னடா லவ் வேண்டிக் கிடக்கு… நம்மை நம்பிக்கையோட ஸ்கூலுக்கு அனுப்புற பெத்தவங்களுக்கு நாம தர்ற மரியாதை இதுதானா… புதுசா ஸ்கூலுக்கு வந்த உன்னை யாரும் பிரண்டாக்கலையே, பாவம்னு நினைச்சு பிரண்டா சேர்த்துகிட்டா இப்ப லவ்வுன்னு வந்து நிக்கற… இனியும் இப்படியே பேசினா நான் உன்னோட பேசவே மாட்டேன்…” அடக்கப்பட்ட குரலில் தெளிவாக சொன்ன சிந்து வேகமாய் அங்கிருந்து நண்பர்களிடம் சென்று விட்டாள்.
உள்ளிருந்த வெற்றி மெச்சுதலாய் புருவத்தை உயர்த்தினான். அவர்கள் சென்று விட்டதை உணர்ந்து மெல்ல வெளியே வர அந்த நட்புக் கூட்டம் கிளம்பிக் கொண்டிருந்தது. நண்பர்களிடம் முக்கிய வேலை இருப்பதாய் கூறி உடனே கிளம்பியவன் சிந்து அறியாமல் காரில் பின் தொடர்ந்தான்.
அவர்கள் நேராய் பஸ் ஸ்டாப்புக்கு செல்ல அவளிடம் பேசிய பையன் மட்டும் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு அடிக்கடி சிந்துவைப் பார்த்துக் கொண்டிருக்க அவளோ அவன் பக்கமே திரும்பாமல் மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். பஸ் வந்ததும் ஏறிக் கொண்டாள்.
சிந்துவிடம் வெற்றி நேரிடையாய் பேசாவிட்டாலும் அவள் நடந்து கொள்ளும் விதத்திலும் பேச்சிலும் ஒரு விளையாட்டுப் பெண்ணாய் மனதில் உருவகப்படுத்தி வைத்திருந்தான். இப்போது அவள் நடந்து கொண்ட விதமும், அந்தப் பையனிடம் பக்குவமாய் பேசியதும் சிந்துவின் மேல் ஒரு நல்ல அபிப்ராயத்தை உருவாக்க புன்னகைத்தான். பஸ் எடுக்கும் நேரத்தில் அந்தப் பையனும் ஓடிச் சென்று அந்த பேருந்தில் ஏறிக்கொள்வதைக் கண்டவன் திகைத்து காரில் பேருந்தைப் பின் தொடர்ந்தான்.
அமைதியான ஓடையில்
அலை எழுப்பும் சத்தங்களாய்
அன்பின் சிறு சலனங்கள்…
மின்னுவதெல்லாம் பொன்னுமல்ல…
மனதின் சலனமெல்லாம் காதலுமல்ல…
புரிந்து கடந்தவன் யோகியாகிறான்…
புரியாமல் கிடப்பவன் கேலியாகிறான்…
புதிராய் என்றும் புன்னகைக்கிறது காதல்…

Advertisement