Advertisement

அத்தியாயம் – 11
“ப்பா…” பழைய நினைவுகளை அசை போட்டதில் மனது கனத்துப் போக அப்படியே கண் மூடிக் கிடந்தான் வெற்றி. உறங்கி எழுந்த பவித்ரா அழைத்துக் கொண்டிருந்தாள்.
விழி மூடி என்
இமை அழைக்கும்
இருளைப் பகலாக்கிடும்
கனவு நீ…
“ப்பா… பேக் வாங்கப் போகலாம், எந்திதிப்பா…”
பவி எழுந்துவிட்டதை உணர்ந்தவன் எழுந்து அமர்ந்தான்.
“பேகா…. எதுக்கு…” என்றவன் முழிக்க குழந்தை முறைத்தாள்.
“நாளக்கி பவிக்குட்டி ஸ்கூல் போணும்ல, அதுக்குதான் பேக்…”
“ஓ…” என்றவன் நாளை அவளை பிளே ஸ்கூல்க்கு விடலாமா வேண்டாமா என்று தீர்மானிக்காமல் இருக்க, இவளோ முடிவு செய்து விட்டது போல் பேக் வாங்க வேண்டுமென்று சொல்கிறாளே…” என யோசித்தான்.
“பவிக்குட்டி, நீ எங்கயும் போக வேணாம்… அப்பா கூட இங்கயே இருந்துடேன்…” என்றதும் அவள் முகம் சுருங்கியது.
“ம்ஹூம்… நானு ஸ்கூல் போகணும்… விளையாதணும்…” என்றவள் கோபத்துடன் முகத்தைத் தூக்கி வைத்து தள்ளி நின்று கொண்டாள்.
அவள் இந்துவை அம்மா என்று அழைத்தது மனதை உறுத்தினாலும் இத்தனை ஆசையோடு இருக்கும் குழந்தையை ஏமாற்றவும் மனசு வரவில்லை. எங்கும் விடாமல், யாருடனும் பழகாமல் தன்னுடனே வைத்துக் கொள்வதும் சரியல்ல என்று தோன்ற நாளை பிளே ஸ்கூல் அனுப்புவது என்று முடிவு செய்தவன் பவியிடம் சென்றான்.
“பவிக்குட்டிக்கு எந்த மாதிரி பேக் வேணும்… வாட்டர் பாட்டில், ஸ்நேக்ஸ் பாக்ஸ் எல்லாம் என்ன கலர்ல வேணும்…” என்று கேட்டதும் ஆவலுடன் திரும்பியவள் செல்லமாய் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
“ஐ… அப்ப வெளிய போகலாமா…” என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட, “ம்ம்… போலாம்டா செல்லம்…” என்றவன் அவளைப் புறப்பட வைத்து தானும் ரெடியாக, கீழே வந்தனர்.
“பாத்தி, நானும் அப்பாவும் பேக் வாங்க கதைக்குப் போதம்… உனக்கு ஏதாச்சும் வேணுமா…” பெரிய மனுஷி போல் தன்னிடம் வந்து கேட்ட குழந்தையின் பேச்சில் நெகிழ்ந்தார் பார்வதி. ஒரு நாளே கண்டு பழகிய தன்னிடமும் அக்கறையாய் அவள் விசாரித்தது சந்தோஷமாய் இருந்தது.
“எனக்கு எதுவும் வேண்டாம்டா செல்லம்… பாட்டின்னு வாய் நிறைய கூப்பிடறியே… அதுவே போதும்…” என்று கன்னத்தை வழிக்க பார்த்துக் கொண்டே வந்த வெற்றியின் இதழிலும் சிறு புன்னகை ஒட்டிக் கொண்டது.
“உங்களைப் பார்த்தா என் அம்மா மாதிரி அவளுக்குத் தோணியிருக்கும் மா… நாங்க வெளிய போயிட்டு வர்றோம்…”
“எனக்கும் சந்தோஷம் தான் தம்பி… நைட் டிபனுக்கு என்ன பண்ணட்டும்…” என்றார்.
“நாங்க வெளிய சாப்பிட்டு வந்திடறோம்மா… நீங்க எப்ப வீட்டுக்கு கிளம்பணும்…” என்றான்.
“எனக்கென்ன தம்பி, ரெண்டு தெரு தள்ளினா வீடு… அங்கமட்டும் யாரு காத்துக்கிடக்காங்க… நீங்க வந்தப்புறம் போயிக்கறேன்…” என்றார் பார்வதி.
“சரிம்மா, பார்த்துக்கங்க…” என்றவன் காரை எடுக்க சந்தோஷமாய் ஏறிக் கொண்டாள் பவித்ரா. இருவரும் கடைக்கு சென்று வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றனர். டிபன் ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க, யாரோ தோளில் கை வைக்கவும் சட்டென்று திரும்பிய வெற்றி நண்பனைக் கண்டதும் புன்னகைத்தான்.
“வெற்றி, எப்படிடா இருக்கே…” கேட்டுக் கொண்டே உரிமையுடன் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
“நல்லாருக்கேன்டா… நீ எப்படி இருக்க…”
“ம்ம்… ரொம்ப நல்லாருக்கேன்… பாமிலியோட சின்னதா ஒரு பர்ச்சேஸ் முடிஞ்சு ஹோட்டலுக்கு வந்தோம்… சாப்பிட்டு அவங்க காருக்குப் போயிட்டாங்க… நான் பில் செட்டில் பண்ணிட்டு இருக்கும்போது தான் உன்னைப் பார்த்தேன்…” என்றவன் கண்கள் பவித்ராவின் மீது பரிதாபமாய் படிந்தது.
“வெற்றி இது… சக்தியோட…” என்று தொடங்கவும், “ம்ம்…” என்று வேகமாய் முடித்தான் வெற்றி.
சற்று மௌனித்தவன், “ப்ச்… கேள்விப்பட்டேன்… நான் துபாய் போன இந்த மூணு வருஷத்துல ஏதேதோ நடந்திருச்சு போலருக்கு… அம்மாவும் தவறிட்டாங்களாமே…” என்றான் உண்மையான வேதனையுடன். 
“ம்ம்…” என்ற வெற்றியின் முக இறுக்கம் அவன் உணர்வுகளைச் சொல்ல புரிந்து அமைதியானான்.
பவித்ரா அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க குழந்தையிடம்  சினேகமாய் புன்னகைத்தான்.
“ஹாய் பேபி, உங்க பேரென்ன…” புதியவன் கேட்டதும் கூச்சத்தில் நெளிந்தவள் வெற்றியின் மடியில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“பவித்ரா…” என்றான் வெற்றி.
“ம்ம்… நைஸ் நேம்… ஸ்கூல் போறீங்களா…”
“நாளைக்குப் போதேன்… இல்லப்பா…” என்றாள் ஆர்வத்துடன்.
“பிளே ஸ்கூல்ல ஜாயின் பண்ணப் போறதை சொல்லறா… அடுத்த வருஷம் தான் ஸ்கூல்…” என்றான் வெற்றி.
“ம்ம்… குட் கேர்ள்… ரொம்ப கியூட்டா இருக்கடா செல்லம்… நல்லாப் படிக்கணும் சரியா…” என்றவன், “சரிடா வெற்றி… நீ கொஞ்சம் டிஸ்டர்பா இருக்கன்னு தோணுது… இதான் என் கார்ட்… உனக்கு பேசணும்னு தோணும்போது கூப்பிடு…” என்று தனது விசிட்டிங் கார்டை நீட்ட வாங்கிக் கொண்டான்.
அவன் சென்றதும் வெற்றியின் மடியிலிருந்து இறங்கி அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்ட பவித்ரா, “அப்பா, அந்த அங்கிள் யாது…” என்றாள்.
“அப்பாவோட பிரண்டுடா செல்லம்…” அவன் சொல்லும்போதே உணவு வந்துவிட சாப்பிடத் தொடங்கினர். பவித்ராவுக்கும் ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு முடிக்க, “அடுத்தது ஐஸ்கீம் தானப்பா சாப்பிதுவோம்…” என்றாள் பவித்ரா.
அதைக் கேட்டு புன்னகைத்தவன், “இப்ப ஐஸ்க்ரீம் சாப்பிட்டா சளி பிடிக்காதா பவி…” என்று கேட்க, “ம்ம்… ஆமா, அம்மா சொன்னா, வேணாம்…” என்றதும் மறுபடி குழம்பினான்.
அவள் அம்மா என்றதும் அபர்ணாவின் முகம் மனதி்ல் தோன்ற சுர்ரென்று கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு “அம்மா சொன்னாளா… எப்ப, யாருகிட்ட…” என்றான்.
“நாளிக்கு (நேற்று) நாம ஸ்கூல் போனம்ல… அங்க அம்மா கூட வருண் இருந்தான்ல… அவன்ட்ட தான் அம்மா ஐஸ்கீம் சாப்பித்தா சளி பிதிக்கும் சொன்னா…” என்றாள் மழலையில்.
பவி, இந்துவைதான் அம்மா என்று சொல்கிறாள் எனப் புரிந்ததும் சற்று ஆசுவாசமாய் உணர்ந்தாலும் ஏன் அவளை அம்மா எனச் சொல்கிறாள் எனப் புரியாமல் யோசித்தான்.
அதற்குள் சர்வர் வந்து வேற எதுவும் வேணுமா சார்…” என்று கேட்க, “அப்பா பாத்திக்கும் இத்தி வாங்கிட்டுப் போகலாம்… பாவம் பாத்தி…” என்றாள் பவித்ரா.
மறுக்காமல் அவருக்கும் இட்லி, தோசை பார்சல் சொல்லி பில்லை வாங்கிக் கொண்டு காஷியரிடம் வந்தான்.
காரில் மீண்டும் அந்த சந்தேகம் உதிக்க மடியில் புதிய பேகை வைத்து பார்த்துக் கொண்டிருந்தவளிடம் கேட்டான்.
“பவி, நீ ஏன் அந்த ஆன்ட்டியை அம்மான்னு சொல்லற…”
“அச்சோ அப்பா, நீதான் அம்மாவை அம்மான்னு சொல்லாம ஆன்ட்டின்னு சொல்லற…” என்றாள் தெளிவாக.
“அவங்கதான் உன் அம்மான்னு யாரு சொன்னா…”
“யாரும் சொல்லல… எனக்கு தெரியும்… அது என் அம்மாதான்…” என்றதும் அவனுக்கு கோபம் அதிகமாக, “சும்மா அம்மா, அம்மான்னு லூசு மாதிரி சொல்லிட்டு இருந்தா எனக்கு கெட்ட கோபம் வரும்…” என அதட்டவும் உதட்டைப் பிதுக்கியவள் அழுகைக்கு ரெடியாக, அவனுக்கு “ஐயோ…” என்றிருந்தது. அவள் சொன்னதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் முடியாமல் தலை சுற்ற அதற்கு மேல் கேட்காமல் அமைதியாய் வண்டி ஓட்டினான்.
அடுத்தநாள் காலையில் சீக்கிரமே எழுந்து பவித்ரா பேகை எடுத்துக் கொண்டு தயாராக அவளை புறப்படவைத்து அழைத்துச் சென்றான் வெற்றி.
குழந்தைகள் அப்போதுதான் வரத் தொடங்கியிருக்க முன்னில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த இந்துஜா இவர்களைக் கண்டதும் சினேகமாய் புன்னகைத்தாள்.
“வாங்க சார், ஹாய் குட்டி… வாங்க வாங்க…” வரவேற்க, அவளை வெட்கமாய் பார்த்து புன்னகைத்தவளின் கையைப் பற்றியவள், “வா செல்லம்…” என்று அழைக்க, “அப்பா, பை… டாட்டா…” என்று சொன்னவளைக் கண்டு வெற்றிக்கே ஆச்சர்யமாய் இருந்தது. அத்தனை சீக்கிரம் யாரிடமும் ஒட்டிக் கொள்ளாதவள் இந்துவின் கையைப் பிடித்துக் கொண்டு தனக்கு விடை தரவும் வியந்தான்.
“மதியம் வந்து அழைச்சுக்கறேன் மேடம்… பை, பவிக்குட்டி…” என்றவன் வீட்டுக்கு செல்ல பவி உள்ளே சென்றாள்.
வெற்றிக்கு பவித்ரா இல்லாமல் வீட்டில் ஒருமாதிரி இருக்க அலுவலகத்திற்கு சென்றான். மதியம் அவளை அழைக்க பனிரெண்டு மணிக்கே வந்து விட இந்து சிரித்தாள்.
“என்ன சார், பவி உங்களை விட்டு இருந்தாலும் உங்களால இருக்க முடியாது போலருக்கு… ரொம்ப சமத்து சார் உங்க பொண்ணு… எந்த குறும்பும் பண்ணாம சொல்லறதைக் கேட்டு அமைதியா இருக்கா… ரைம்ஸ் சொல்லிக் கொடுத்தா திரும்ப சொல்லுறா…” என்று இந்து சர்டிபிகட் கொடுக்க பெருமையுடன் வெற்றியைப் பார்த்துக் கொண்டாள் குழந்தை. ஆனால் அவள் இந்துவை அம்மா என்று அழைத்ததை மட்டும் சொல்லவில்லை. சொன்னால் வெற்றிக்கு பிடிக்காதோ என்று தோன்ற இந்து சொல்லாமல் விட்டாள்.
“அப்பா, நான் இன்னைக்கு வருண் கூட நிறைய விளையாதினேன்… அவன் எனக்கு ஜெம்ஸ் தந்தான்… நானும் அவனுக்கு பிஸ்கட் கொடுத்தேன்… ஊஞ்சல் விளையாதினோம்… அப்புதம் அகிலாம்மா ரைம்ஸ் சொல்லித் தந்தாங்க… நானும் வருணும் அம்மா கூட தோட்டத்துல பூ எல்லாம் பார்த்தோம்…” என்றாள் சின்னக் கண்களை மலர்த்தி.
அதுவரை அவள் சொன்னதை மகிழ்வோடு கேட்டுக் கொண்டிருந்தவன் அம்மா என்றதும் குழம்பினான். ஏதோ ஒரு விதத்தில் குழந்தை மனதில் அவளை அப்படித் தோன்றி இருக்க வேண்டும் என்று புரிந்தாலும் அவளிடம் தெளிவுபடுத்திக் கொள்ள முடியாததால் யோசித்தான். அம்மா என்று அழைக்கவேண்டாம் என்று சொன்னால் குழந்தையின் பிடிவாதம் கூடுமோ என நினைத்தவன் அமைதியாய் இருக்க, அன்று நடந்ததை எல்லாம் லிஸ்ட் போட்டு சொல்லிக் கொண்டிருந்த பவித்ரா உண்டதும் சோபாவில் படுத்து உறங்கிவிட்டாள்.
“பரவால்லியே… இந்த டேகேர்ல நல்லாப் பார்த்துப்பாங்க போலருக்கு… பவி இவ்ளோ சீக்கிரம் அங்க ஒட்டிகிட்டா…” என்றான் வெற்றி பார்வதியிடம்.
“ஆமா தம்பி, இந்த ஏரியால வேலைக்குப் போறவங்க எல்லாம் அவங்களை நம்பிதான் குழந்தையை விட்டுப் போவாங்க… அகிலாம்மாவும் சரி, இந்துப் பொண்ணும் சரி, ரொம்ப நல்லா குழந்தைகளைப் பார்த்துப்பாங்க…”
“ம்ம்…” என்றவன் குழந்தையைத் எடுத்துக் கொண்டு படுக்கையறைக்கு சென்றான். அடுத்தநாளும் பவித்ரா உற்சாகமாய் கிளம்ப காலையில் கொண்டு விட சென்றவன் இந்துவிடம் பேச நினைக்க அவள் தோட்டத்தில் புதிதாய் வந்த செடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“பவி, நீ உள்ள போ…” என்று சொல்ல, “அம்மா, தோட்டத்துல இதுக்காங்கப்பா…” என்ற பவி இந்துவிடம் ஓடினாள்.
“குத் மார்னிங்மா…” என்றவளை இந்து புன்னகையுடன் ஏறிட்டு, “குட் மார்னிங் பவி குட்டி…” என அவள் பின்னில் திகைப்புடன் நின்றிருந்த வெற்றியைக் கண்டதும், “பவி… நீ கிளாசுக்கு போ, நான் வந்திடறேன்…” என்றாள்.
“ஓகே மா…” என்றவள், “ப்பா, டாட்டா…” என்றுவிட்டு குட்டி பாகுடன் சிரித்துக் கொண்டே சொல்ல வெற்றிக்கு அதிசயமாய் இருந்தது.
“சாரி மேடம், உங்ககிட்டே இதை கேட்க தான் வந்தேன்… பவி உங்களை நேத்தும் அம்மான்னு தான் சொன்னாளா…”
“இதுக்கு எதுக்கு சார் சாரி எல்லாம்… நீங்க குழந்தையைத் திட்டுவீங்களோன்னு நினைச்சு தான் நேத்து சொல்லலை… அவளுக்கு என்னை அம்மான்னு கூப்பிடத் தோணினா கூப்பிட்டுப் போகட்டுமே…”
“இல்ல, அவ அம்மா இல்லாத குழந்தை… புதுசா இப்படி ஒரு உறவை மனசுல எப்படிப் பதிஞ்சுகிட்டா புரியலை… இது நாளைக்கு உங்களுக்கும் தர்மசங்கடம் ஆயிடக் கூடாது…”
“நீங்க சொல்லுறது புரியுது சார்… எனக்கு அதுல எந்த சங்கடமும் இல்லை… அவ விருப்பப்படியே கூப்பிடட்டும்…” சம்மந்தப்பட்ட அவளே தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னதால் அவனும் அதோடு விட்டுவிட்டான்.
அடுத்து வந்த நாட்களிலும் பவித்ரா உற்சாகமாய் கிளம்ப அவனும் அலுவலக வேலைகளில் மும்முரமானான். பவித்ராவின் விருப்பம் உணர்ந்து மாலை ஐந்து மணி வரை அங்கேயே விட்டான். மதிய உணவை பார்வதியே கொண்டு போய் கொடுத்துவிடுவார். அதனால் வெற்றிக்கும் அலுவலை கவனிக்க நிறைய நேரம் கிடைத்தது.
“இந்து, கொஞ்சம் தலைவலிக்குது… குழந்தைகளுக்கு நீ எதாச்சும் ரைம்ஸ் சொல்லிக் கொடுக்கறியா…” அகிலா கேட்கவும், “நீங்க வீட்டுக்குப் போயி ரெஸ்ட் எடுங்கமா… நான் பார்த்துக்கறேன்… ஜோதிக்காவும் இருக்காங்களே…” என்றாள் இந்து. சிந்து பள்ளிக்கு சென்றிருந்தாள். “ம்ம்… சரிம்மா…” என்ற அகிலா வீட்டுக்கு செல்ல, “குட்டிங்களா, யாருக்கெல்லாம் தமிழ் ரைம்ஸ் தெரியும்… தெரிஞ்சவங்க கை தூக்குங்க பார்ப்போம்…” என்றாள்.
வருண் மட்டும் கை தூக்கினான்.
“வருண்… உனக்கு தெரியுமா… சொல்லு பார்க்கலாம்…”
“பச்ச மிளகாய் காரம்…
பன்னெண்டு மணி நேரம்…” என்றதும்,
“ஹாஹா… டேய், இது டோரிமூன்ல வர்ற ஜியான் பாடுற பாட்டு தானே…” என்றதும் எல்லாரும் சிரிக்க, “நான் ஒரு பாத்து பாதத்துமா…” என்றாள் பவித்ரா.
“அட, பவிக்குட்டிக்கு ரைம்ஸ் தெரியுமா.. பாடுங்க…”
“நிலா நிலா ஓதி வா…
நில்லாமல் ஓதி வா…
மலை மீது ஏதிவா…
மல்லிகப்பூ கொண்டு வா…” என்று நிறுத்தியதும், “சபாஷ்…” என்று இந்து கை தட்ட குழந்தைகளும் தட்டினர்.
“ஓகே… நாளைக்கு புதிய ரைம்ஸ் சொல்லித் தரேன்… இப்ப எல்லாரும் விளையாடுங்க… ஜோதிக்கா பார்த்துக்கங்க… நான் இங்கே எல்லாம் சரி பண்ணிட்டு வரேன்…” என்றதும் எல்லாரும் வெளியே செல்ல பவித்ராவும் வருணும் மட்டும் அங்கே இருந்தனர்.
“நீங்க ரெண்டு பேரும் விளையாடலியா…”
“இல்லக்கா, நாங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ணறோம்…” என்ற வருண் கலைந்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க பவித்ராவும் உதவினாள்.
“அக்கா, அம்மா இன்னைக்கு என்னை அழைக்க வரும்போது கிண்டர் ஜாய் வாங்கிட்டு வரேன்னு சொன்னாங்க… பவி, உனக்கும் தரேன்… நாளைக்கு நீ எனக்கு பிஸ்கட் கொண்டு வா…” எனவும், “ம்ம்… சரி வருண்…” தலையாட்டினாள் பவி.  “பவி, உன்னை கூப்பிட ஏன் தினமும் அப்பா வர்றார்… உன் அம்மா எங்கே…” என்றான் வருண்.
“என் அம்மாதான் இங்கயே இதுக்காங்களே… இல்லமா…” என்றவள் ஆவலுடன் இந்துவின் கையைப் பிடிக்க அந்த விழிகளில் தெரிந்த எதிர்பார்ப்பு அவளை என்னவோ செய்ய எதுவும் சொல்லாமல் புன்னகைத்தாள் இந்து.
அப்போது ஏதோ சொல்வதற்காய் அங்கு வந்த ஜோதி, “என்ன இந்து… இந்தப் பொண்ணு உன்னை அம்மான்னு சொல்லுது…” எனக் கேட்க, அவள் “இல்லையென்று மறுத்து சொல்லிவிடுவாளோ…” என மிரண்ட விழிகளுடன் பார்த்தாள் பவித்ரா.
“சரி ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் விளையாடுங்க…” என்று அனுப்பி வைத்தவள், “பாவம் அம்மா இல்லாத குழந்தைக்கா, என்னை அம்மான்னு கூப்பிட்டுச்சு… சரி, ஏன் மறுக்கணும்னு நானும் விட்டுட்டேன்…” என்றாள் ஜோதியிடம்.
“ஓ… கதை இப்படிப் போகுதா…” மனதுக்குள் தானே யோசித்து ஏதோ தீர்மானத்திற்கு வந்த ஜோதி, “ம்ம்… சரி இந்துமா… நான் வெளிய இருக்கேன்…” என்று சென்று விட்டாள்.
நாட்கள் அழகாய் நகர இந்துவிடம் பவித்ரா மிகவும் நெருக்கமாய் ஒட்டிக் கொள்ள வருணுக்கு பவித்ரா மீது சற்று பொறாமையாய் இருந்தது.
தாகத்திற்கு கிடைத்திடாத
தண்ணீர் போன்றது
பாசத்திற்கு ஏங்கும்
பிள்ளை மனது…
அன்பென்னும் நீரூற்றைக்
கண்டாலோ எத்தனை
அள்ளி அருந்தினாலும்
சலித்திடாத மழலையாய்…
அன்பின் தாகம் மட்டும்
ஆவி உள்ளவரை
அடங்குவதேயில்லை…

Advertisement