Advertisement

அத்தியாயம் – 10
டீப்பாய் மீது சதீஷுக்குப் பிடித்த வெளிநாட்டு விஸ்கி பாட்டிலும் அபர்ணாவுக்காய் அவன் கொண்டு வந்திருந்த ரெட் ஒயின் பாட்டிலும் கம்பீரமாய் நின்றது. அழகான கண்ணாடிக் குடுவையில் இருந்த சிவப்பு திரவத்தை ஒரு மிடறு இறக்கியவள் சிறு போதையோடு சதீஷை நோக்க அவன் இழுத்து அணைத்துக் கொண்டான்.
“ஹனி, நான் இப்ப எவ்ளோ ஹாப்பியா இருக்கேன் தெரியுமா… எனக்குப் பிடிச்ச மது கையில, மாது மடியில… இந்த நிமிஷம் சொர்க்கமா தோணுது… அப்படியே சந்தோஷமா ஆடிப் பாடணும் போலருக்கு…” என்றவன் அவளை மடியில் சாய்த்துக் கொண்டான்.
“ஓ… என்ன பாடத் தோணுது டார்லிங்…” அவளது குரல் ஒயின் உபயத்தில் மேலும் குழைந்திருக்க, “இரு…” என்றவன் கண்ணை சுருக்கி அலைபேசியைப் பார்த்து ஒரு பாடலைத் தேடியெடுத்து ஒலிக்க விட்டான்.
சொர்க்கம் மதுவிலே… சொக்கும் அழகிலே…
மது தரும் சுகம் சுகம்… எதில் வரும்… நிதம் நிதம்…
இன்பம் இரவுதான்… எல்லாம் உறவுதான்…
இன்பம் இரவுதான்… எல்லாம் உறவுதான்…
அவன் பாட்டைப் போட்டதுமே எழுந்து விட்டவள் பாட்டுக்கு ஏற்ப ஆடத் தொடங்க அவனும் சேர்ந்து கொண்டான். விஸ்கி அருந்திய அவன் இதழ்கள் ஒயின் குடித்த அவள் இதழை சுவைக்கத் தொடங்குகையில் அழைப்புமணியின் “கிரர்ர்ர்ரர்ர்ர்ர்…” ஒலிக்க விருப்பமின்றி விலகினான்.
“யாரது, சொர்க்கத்துல கட்டெறும்பா டிஸ்டர்ப் பண்ணறது…” சொல்லிக் கொண்டே அவளை விலக்கிவிட்டு கதவை நோக்கிச் சென்றான்.
“கிர்ர்ர்ரர்ர்ர்ர்…” அதற்குள் மீண்டும் ஒருமுறை அழைப்புமணி அலற, “ப்ச்… கமிங்…” என்று குளறிக் கொண்டே சென்று கதவைத் திறந்தவன் முன்னில் ருத்ரமூர்த்தியாய் நின்ற வெற்றியைக் கண்டதும் ஏறியிருந்த போதை இறங்கியது.
வெற்றியும், சக்தியும் இரட்டையர் என்றாலும் இருவருக்கும் சின்னச் சின்ன வித்தியாசங்கள் ஹேர் ஸ்டைல் முதல் உடை வரை இருக்குமாதலால் பழகியவர்களுக்கு எளிதாய் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
அவன் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டே உள்ளே நுழைந்த வெற்றி, “எங்க அந்த கேடு கெட்டவ… ஏய், அபர்ணா, இங்க வாடி…” கோபத்துடன் கத்தியவனின் இரும்புப் பிடியில் விடுபட முடியாமல் திணறினான் சதீஷ்.
அதற்குள் அபர்ணாவைக் கண்டு விட்டவன் சதீஷை விட்டுவிட்டு அவளிடம் பாய்ந்தான்.
“ஏய் அபர்ணா, என் தம்பி என்னடி பாவம் பண்ணினான்… கண் மூடித்தனமா உன் மேல அன்பையும் நம்பிக்கையும் வச்சிருந்த அவனுக்கு இப்படி ஒரு துரோகத்தைப் பண்ண எப்படி மனசு வந்துச்சு… உன் வயித்துல சுமந்த குழந்தையை உனக்கு ஏன் பிடிக்காமப் போயிருச்சு… அந்தக் குழந்தைக்கு பால் கூட கொடுக்காம எதுக்காக தண்டிக்கற…”
அவன் ஆவேசமாய் கேட்க அவள் நிதானமாய் பதில் சொன்னாள்.
“ஏன்னா, எனக்குப் பிடிக்கலை… அதான் காரணம்…” என்றவள் அவன் உறுத்து நோக்கவும், “இங்க பாரு வெற்றி, சும்மா இங்க வந்து கத்திக் கூப்பாடு போடறதால எதுவும் மாறிடப் போறதில்லை… எனக்கு உன் தம்பியோட வாழப் பிடிக்கல… என் சுதந்திரத்துக்கு தடையா இருக்கற குழந்தையைப் பிடிக்கவே பிடிக்கல… எனக்கு இந்த வாழ்க்கை தான் பிடிச்சிருக்கு… இனி என் வாழ்க்கை சதீஷ் கூட தான்னு நான் முடிவு பண்ணிட்டேன்… சீக்கிரமே விவாகரத்து நோட்டீஸ் வீட்டுக்கு வரும்… அவனை சைன் பண்ணி அனுப்ப சொல்லு…” கூலாய் சொன்னவளை வெறுப்புடன் நோக்கினான் வெற்றி.
“ச்சீ… நீயெல்லாம் ஒரு பொண்ணா… பெத்த குழந்தையைப் பிடிக்கல, கட்டின புருஷனைப் பிடிக்கல… உன்னப் போயி சக்தி…” என்றவனின் கண்கள் கலங்கத் தொடங்க குரல் உடைந்து வார்த்தைகள் வெளிவந்தது.
“உன்னைப் போயி உயிருக்கு உயிரா லவ் பண்ணினானே, பாவி… அவனைப் போல ஒரு சாதுவை, அப்பாவியை வஞ்சிக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு…” என்றவனின் கண்கள் அவனை மீறி கண்ணீர் விட்டது.
“வெற்றி, அவ தான் அவனோட வாழப் பிடிக்கல… நான் போதும்னு வந்துட்டாளே… அப்புறம் என்ன…” சதீஷ் சொல்லவும், “நீ பேசாதடா… குடும்பத்த கெடுக்க வந்த பாவி…” என்றவன் ஒரு விரலை மட்டும் நீட்டி எச்சரிக்க அவன் கண்ணில் தெரிந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த அழுத்தமும் சதீஷை அமைதியாக்கியது.
“ப்ச்.. சரி… போனது போகட்டும்… ப்ளீஸ் அபர்ணா… பாவம் குழந்தை, தாய்ப்பால் இல்லாம புட்டிப்பால் குடிச்சு புட் பாய்சன் ஆகி ஹாஸ்பிடல்ல இருக்கு… சக்தி என்ன பண்ணறதுன்னே தெரியாம அழுதுட்டே இருக்கான்… நீ உன் விருப்பப்படியே வாழ்ந்துக்க… எப்படி வேணும்னாலும் இருந்துக்க… கொஞ்சநாள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மட்டும் ஒத்துக்க…” என்றான் கெஞ்சலுடன்.
அவனை அலட்சியமாய் பார்த்தவள், “குழந்தையாம் குழந்தை… மண்ணாங்கட்டி… அங்கிருந்து கிளம்பினதுமே டாக்டரைப் பார்த்து மாத்திரை வாங்கிப் போட்டு பாலை நிறுத்திட்டேன்… வேண்டாம்னு வந்துட்டா விட வேண்டியது தான… இதுக்கு மேல வற்புறுத்தினா பால் இல்லை, பாய்சன் கொடுக்கவும் தயங்க மாட்டேன்…” என்றாள் ஆத்திரத்துடன்.
“என்னடி சொன்ன…” என்றவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைய தெறித்து விழுந்தவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு “டேய்…” என்று கத்தினாள்.
“ஏய், என் ஹனியை என் கண்ணு முன்னாடியே அடிக்கறயா…” கேட்டுக் கொண்டே வெற்றியின் மீது பாய்ந்த சதீஷை ஒரு தள்ளு தள்ள அவன் சோபாவில் விழுந்தான்.
“ச்சீ… ஏதோ மோகத்துல அறியாம தப்புப் பண்ணிட்ட… குழந்தைக்கு முடியலைன்னு சொன்னா ஒரு பொண்ணா உன் தாய் மனசு துடிக்கும்னு தப்பா நினைச்சுட்டேன்… உன்னைப் போல மனுஷத் தன்மையே இல்லாத பேய் கொடுக்கிற தாய்ப்பால் எங்க குழந்தைக்கு வேண்டாம்… நீ கொடுத்தா பால் கூட விஷமாகிடும்… பாவம், உன் வயித்துல பிறந்த பாவத்துக்கு தான் அந்தக் குழந்தை இப்பவே தண்டனை அனுபவிக்குது…” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் கிளம்பிவிட்டான்.
அவன் தள்ளிய தள்ளில் சோபாவில் விழுந்த சதீஷ் இடுப்பைப் பிடித்துக் கொண்டு எழுந்திருக்க அபர்ணா கோபத்துடன் கொக்கரித்தாள்.
“என்ன தைரியம் இருந்தா என் மேல கை வச்சிருப்பான்… அவனை சும்மா விடக்கூடாது…” உதடு கிழிந்து வழிந்திருந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே கத்தினாள் அபர்ணா.
“நீ கோபப்படாத ஹனி… உன்கிட்ட தகாத முறையில் நடந்துக்க பார்த்தான்னு போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணி அந்தத் திமிர் பிடிச்சவனை உள்ள தள்ளிடலாம்…” ஐடியா கொடுத்தான் தகாத உறவின் அர்த்தம் புரியாத அந்தக் கயவன்.
“ம்ம்… உடனே கிளம்பு… போலீஸ் ஸ்டேஷன் போகலாம்… பிடிக்கலன்னு வந்தவளைத் தேடி வந்து அடிப்பானா… அவனை கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்தணும்…” என்றவள் எழுந்து உடை மாற்ற செல்ல சதீஷும் சென்றான்.
பெண்ணுக்கே கிடைத்த
அருமை பொறுமை…
படைத்தவன் கொடுத்தான்
தாய்மை எனும் பெருமை…
தாயாக மட்டுமல்ல
பேயாகவும் இருக்க
தகுதி இல்லா சில
பெண்களால் கலங்கி
நிற்கிறது பெண்மை
கொண்ட தாய்மை…
சில நிமிடத்தில் மீண்டும் அழைப்புமணி அலற, புலம்பிக் கொண்டே கதவைத் திறக்க வந்தான் சதீஷ்.
“நீயா…” என்று கேட்ட மறுநிமிடம், “ஆ… ஐயோ…” என்று அவனது அலறல் கேட்க, அரைகுறை ஆடையில் பதட்டமாய் ஓடி வந்தாள் அபர்ணா. சதீஷ் கழுத்தில் வெட்டுப்பட்டு மடங்கி சரிந்திருக்க உடல் துடித்துக் கொண்டிருந்தது.
சதீஷைக் கண்டு பீதியில் கண்கள் விரிய, “ஐயோ…” என்று வீறிட்டவள், ரத்தம் சொட்டும் அறுவாளுடன் அமைதியாய் நின்ற சக்தியைக் கண்டதும் அச்சத்துடன் அலறினாள்.
“ஆ…ஐயோ… என்ன பண்ணிட்ட சக்தி… ஐயோ சதீஷ்…” என்றவள் வாசல் கதவின் அருகே அவன் நின்றதால் உள்ளே ஓட முயல ஒரே எட்டில் பிடித்தான் சக்தி. மரண பீதியில் முகம் வெளிறி, கண்கள் துருத்தி வெளியே வந்துவிடுவது போல் பயத்துடன் அவனைப் பார்த்தவள், “வே..வேண்டாம் சக்தி, எ..ன்னை விட்டுடு…” கெஞ்சினாள்.
கண்களில் வேதனை வழிய மீண்டும் அறுவாளை உயர்த்தியவன் கைகள் அவள் கழுத்தில் ஆவேசத்துடன் இறங்கியது. ரத்த வெள்ளத்தில் அலறி சரிந்தவள் சிறிது நேரத்தில் துடிதுடித்து அடங்கினாள். இருவரது கழுத்திலும் ஆழமாய் பதிந்திருந்த வெட்டு அவன் மனதில் இருந்த வலியின் வலிமையைக் காட்டியது.
“என் குடும்பத்தை அசிங்கப்படுத்தி, பெத்த குழந்தையை தூக்கிப் போட்டு வந்ததும் இல்லாம என் வெற்றியையே நீ அசிங்கப்படுத்துவியா… யாருகிட்டயும் எதுக்கும் போயி நிக்காதவன் என் கண்ணீரைப் பார்த்துட்டு உன்கிட்ட கெஞ்ச வந்தா நீ என் குழந்தைக்கே பாய்சன் கொடுப்பேன்னு சொல்லற… சாவுடி… உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு எனக்கும், உன் வயித்துல பொறந்த பாவத்துக்கு குழந்தைக்கும் தண்டனை கொடுத்துட்ட… இப்ப என் கூடப் பிறந்தவனையும் தண்டிக்கனுமா… உன்னால என் குடும்பமே அசிங்கப்பட்டு நிம்மதி இல்லாம கிடக்குதுன்னு கோபத்துல நான் அறுவாளோட கிளம்பி வந்தப்ப கூட மனசுல சின்ன உறுத்தல் இருந்துச்சு… ஆனா, உன்னைப் போல ஒரு கேடு கெட்டவளை லவ் பண்ண குத்தத்துக்கு எனக்கு இந்த தண்டனை தேவை தான்…” என்றவன் குலுங்கி அழுதான்.
வெற்றி அபர்ணாவின் வீட்டுக்கு கிளம்பும்போதே சத்தியும் பின்னால் வந்திருந்தான். வெற்றி முதலில் கோபப்பட்டாலும், பிறகு குழந்தைக்கு வேண்டி வருந்தி கெஞ்சியதையும், அவளது கிண்டலான பதிலைக் கேட்டு வெறுப்புடன் திட்டிச் சென்றதையும் எல்லாம் திறந்திருந்த கதவின் வழியே கேட்டுக் கொண்டு கண்ணீருடன் நின்றிருந்தான் சக்தி.
வெற்றி சென்றபிறகு அபர்ணாவும் சதீஷும் பேசியதையும் கேட்டான். தன்னை அடித்ததற்கு அவனைப் போலீசில் சொல்லி தண்டிக்க வேண்டுமென்று அவள் ஆவேசத்துடன் பேசியதைக் கேட்டதும் அவனது பொறுமை பறந்திருந்தது. இனியும் இவர்கள் உயிர் வாழத் தகுதி இல்லாதவர்கள் என்று தோன்ற அறுவாளுடன் வீட்டுமுன் வந்து நின்றான்.
இருவரின் மரண அலறல் கேட்டு அடுத்திருந்த வீட்டினர் எல்லாம் கூடத் தொடங்க அறுவாளுடன் எழுந்து நடந்த சக்தியைத் தடுக்கும் தைரியம் அங்கே யாருக்கும் இருக்கவில்லை. நேராய் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மேலோட்டமாய் விஷயத்தை சொல்லி சரணடைந்தான்.
“காதலிச்சு கல்யாணம் பண்ணவளைக் கொன்னுட்டியா, ஏன்..” அவர்கள் கேட்டபோது கண்ணீருடன் பதில் சொன்னான்.
“என் உயிருக்கு உயிரா காதலிச்சவளைக் கொல்லணும்னு எனக்கு மட்டும் ஆசையா… நான் அவ மேல வச்ச நம்பிக்கைக்கு மட்டும் அவ துரோகம் பண்ணல… பெத்த குழந்தைக்கும் பெரிய துரோகத்தைப் பண்ணிருக்கா… எவ்வளவு அசிங்கம்… என் பொண்ணு வளரும்போது இந்த அவமானமும் சேர்ந்து தானே வளரும்… என் மனசு எவ்ளோ வலிச்சிருந்தா என் குழந்தையோட எதிர்காலத்தைப் பத்திகூட யோசிக்காம நானே அவளைக் கொன்னிருப்பேன்… அவ இந்த உலகத்துல வாழத் தகுதி இல்லாதவ சார்… அவ ஒரு நல்ல மனைவியும் இல்லை, நல்ல அம்மாவும் இல்லை… நல்ல பெண்ணே இல்லை… அவ சாகணும்… சாகட்டும்…” என்றவன் கதறி அழத் தொடங்க கேட்டுக் கொண்டிருந்த காவலர்களுக்கே கண்கள் கசிந்தது.
வத்சலா நடந்ததைக் கேள்விப்பட்டு கதறினார். கையில் குழந்தையை வைத்துக் கொண்டு அன்னையும் இல்லாமல் தந்தையும் சிறை சென்று அந்தக் குழந்தையின் நிலையை யோசிக்கவே அவரால் முடியவில்லை. மகனின் வாழ்க்கை இப்படி நாசமாய் போனதை நினைத்து கலங்கி அழுவதைத் தவிர அவரால் என்ன செய்ய முடியும். அவனாகவே சரணடைந்து கோர்ட்டிலும் குற்றத்தை ஒத்துக் கொண்டதால் வழக்கு அதிக நாள் இழுக்கவில்லை. ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பானது.
“ஏண்டா இப்படிப் பண்ணின…” என்று வெற்றி கண்ணீருடன் கேட்டபோது விரக்தியுடன் சிரித்தான் சக்தி.
“இனி யாரும் என் பொண்ணை ஓடிப் போனவ குழந்தைன்னு சொல்ல மாட்டாங்க தானே… அவ அம்மா செத்துப் போயிட்டான்னு தான சொல்லுவாங்க…” என்றதும் அதில் இருந்த வலியை வெற்றியால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
“ஒரு தப்புக்கு இன்னொரு தப்புதான் சரின்னு நான் சொல்லலை… ஆனா, இது போல ஒரு தப்பு செய்ய யோசிக்கற ஒவ்வொரு பொண்ணும் பயப்படணும்… இனி என் குழந்தைக்கு எல்லாமா நீதான் இருக்கணும்… அம்மா பாவம், ரொம்ப உடைஞ்சு போயிருவாங்க… பார்த்துக்க, அண்ணா…” கோர்ட்டிலிருந்து இறுதியாய் சிறைக்கு செல்லும்போது இந்த வாசகங்களை சொல்லி புன்னகையுடன் அவன் கண் சிமிட்டிய போது வெற்றியின் இதயத்தில் ரத்தமே கசிந்தது.
அதற்குப் பிறகு வந்த நாட்களும் நரகத்தையே உணர்த்தின. பாலுக்கு அழும் குழந்தையை ஒரு விதத்தில் பால்பொடிக்கு பழக்கினாலும் எதுவுமே தெரியாமல் தன்னை நோக்கி குழந்தை சிரிக்கும் சிரிப்பில் வத்சலாவுக்கு தாங்கவொணா வேதனையே வந்தது.
“இந்தக் குழந்தையை வேண்டாமென்று சொல்ல ஒரு பெற்ற தாயால் முடியுமா… என் மகன் இப்படி ஒரு வேஷக்காரியை நேசமென்று நம்பிப் போனானே…” என்ற வேதனை அவரை உருக்குலைக்கத் தொடங்கியது.
குழந்தையும் வளரத் தொடங்கினாள். ஆனால் பெற்றவள் தந்த பழிச்சொல் மட்டும் மறையவில்லை.
எந்த நல்லது, கெட்டதுக்கும் செல்ல முடியாமல் தனக்குப் பின்னால் தொடரும் கேலிப் பார்வையும் கிசுகிசு பேச்சும் அவரை வீட்டோடு முடக்கிப் போட்டது.
கணவன் இறந்தாலும் இரண்டு மகன்களுடன் தலை நிமிர்ந்து வாழ்ந்த அந்த அன்னை கடனே என்று குழந்தைக்காய் வாழத் தொடங்கினார். மனதின் ரணம் உடலை உருக்க அடிக்கடி உடல்நிலை சரியின்றிப் போனது. குழந்தையுடன் அன்னையையும் கவனிக்கும் நிலை வெற்றிக்கு வந்ததால் உதவிக்கு ருக்மணி என்ற பெண்மணியை வைத்தான். வீட்டிலிருந்தே அலுவலக வேலையையும் கவனித்தான்.
கல்யாணமாகி, குழந்தை மனைவியோடு சந்தோஷமாய் வாழ வேண்டிய ஒரு மகன் எல்லாவற்றையும் இழந்து சிறையில் வாட, மற்ற மகனோ கல்யாணம் என்ற சொல்லையே வெறுத்தான். பவித்ராவைத் தன் சொந்த மகளாகவே வளர்த்தான் வெற்றி. அவள் நடக்கத் தொடங்கிய சமயத்தில் தன்னைப் பிடித்து நின்று “ப்பா…” என்றழைத்த போது மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தான்.
ஒருநாள் பவித்ராவை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த கடைக்கு சென்றார் வத்சலா. கடையில் காய் வாங்கிக் கொண்டிருந்த சில பெண்கள் இவரைக் கண்டதும் சிநேகமாய் புன்னகைத்தனர்.
“என்னக்கா, உங்களை இப்பல்லாம் அதிகமா வெளியவே காணறதில்லை… உடம்புக்கு சரியில்லைன்னு சொன்னாங்க… நல்லாருக்கீங்களா…” நலம் விசாரித்தது வத்சலாவிடம் என்றாலும் பார்வை இடுப்பிலிருந்த குழந்தைமேல் இருந்தது.
“ம்ம்… இப்ப நல்லாருக்கேன்…” என்றவர் மேலே பேச விரும்பாமல் வெண்டக்காயை எடுக்கத் தொடங்க அந்தப் பெண்மணி விடுவதாய் இல்லை.
“பேத்தி வளர்ந்துட்டாளே… அப்படியே அவ அம்மா ஜாடையா இருக்கா…” என்றவரின் முக சுளிப்புக்கு காரணம் தெரியுமாதலால் எதுவும் சொல்லாமல் “இதுக்கு எவ்ளோ ஆச்சு…” என்று எடை போட்டு அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.
“ஹூக்கும்… கேட்டா பதில் சொல்லாம அந்தம்மா ஓடுது பாரேன்… ஓடிப் போன மருமகளுக்குப் பிறந்த குழந்தைய ரொம்ப தான் சீராட்டுறாங்க… நாளைக்கு இதுக்கும் அதோட அம்மா புத்தி வராம இருந்தா சரி…”
“ஆமா, அப்பன் கொலைகாரன்… அம்மா ஓடுகாலி… புள்ள மட்டும் நல்லாவா வளர்ந்திடப் போகுது…” என்றாள் மற்றவள்.
சிலரின் நாக்கு தேளின் கொடுக்கை விட, வாளின் கூர்மையை விட மோசமானது என்பதைத்தான் அந்தப் பெண்ணும் நிரூபித்துக் கொண்டிருந்தார்.
எந்தப் பிரச்சனையும் மற்றவர்களின் வீட்டில் நடக்கும்போது அவலாகவும் அவரவர்க்கு வந்தால் அவஸ்தையாகவும் மாறிப் போவது தானே உலக வழக்கமாய் உள்ளது.
அவர்களிடமிருந்து வேகமாய் விலகி வந்துவிட வேண்டுமென்று எட்டி வைத்தாலும் ஒரு வார்த்தைகூடப் பிசகாமல் அப்படியே வத்சலாவின் காதில் விழவே செய்தது.
வழக்கம் போல பொங்கி வந்த அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்தவர் குழந்தையை ஹாலில் அமர்த்திவிட்டு எழவும் தலை சுற்றியது.
“ரு…ருக்கு…” என்று குரல் கொடுக்கும்போதே அப்படியே சரிந்துவிட்டார். அதைக் கண்டு ஓடிவந்த ருக்மணி, “தம்பி…” என்று அலற மாடியில் மடிகணினியுடன் அமர்ந்திருந்த வெற்றி, அதை வைத்துவிட்டு கீழே ஓடி வந்தான்.
“என்னாச்சு ருக்மணிம்மா…” குரல் கொடுத்துக் கொண்டே வந்தவன் கீழே மயங்கிக் கிடந்த அன்னையைக் கண்டதும் பதறிப் போனான்.
முகத்தில் தண்ணி தெளித்து எழுப்ப முயன்றும் “இனி இந்த உலகத்தைக் காண எனக்கு விருப்பமில்லை…” என்பது போல் அவரது கண்கள் திறக்கவே இல்லை. இரண்டரை வயது பவித்ரா பாட்டியின் அருகில் அமர்ந்து, “பாத்தி… பாத்தி, உம்மா…” என்று கன்னத்தில் முத்தமிடுவதையும் அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
தனது அன்னையும் போன பிறகு குழந்தைக்கு எல்லாமுமாய் வெற்றியே பார்த்துக் கொண்டான். முக்கியமான வேலைக்கு மட்டுமே ருக்மணியின் பொறுப்பில் குழந்தையை விட்டு செல்வான். மற்ற நேரத்தில் எல்லாம் அலைபேசியிலேயே வேலையை கவனித்துக் கொள்வான். ஏதாவது கையெழுத்து வேண்டுமென்றால் கூட வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ள சொல்லி விடுவான். ருக்மணியும் வத்சலாவை விட சிறிது வயதில் பெரியவர் என்பதால் அந்தக் குடும்பத்தின் சூழ்நிலை புரிந்து பக்குவமாய் நடந்து கொண்டார்.
ஆனால் அத்தனை பெரிய வீட்டில் அன்னை, தம்பியோடு சந்தோஷமாய் கழிந்த நாட்கள் அவன் மனதில் வந்து அலட்டியது. தான் அத்தனை சொல்லியும் கேட்காமல் அந்த புதைகுழியில் தெரிந்தே இறங்கி விட்டானே என்று சக்தி மேல் கோபமாய் வந்தது. அப்படியென்ன பொல்லாத காதல்… உண்மைக்கும், போலிக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ள முடியாத மூடன்… அவள் இல்லாவிட்டால் செத்து விடுவேன் என்றவன் கையாலேயே அவளைக் கொல்லும் சூழ்நிலையை உருவாக்கி விட்டாளே அந்தப் பாவி…” என்று சக்திமீது உள்ள பாசமே அவன் மீது கோபத்தையும் தோன்ற வைத்தது.
அந்த சமயத்தில் ருக்மணி அம்மாவும் மகளின் பிரசவத்தைப் பார்க்க மகள் வீட்டுக்கு சென்று விட்டார். குழந்தை வளரத் தொடங்கும்போது இங்கே உள்ள சூழ்நிலை அவள் மனத்தைக் காயப்படுத்திவிடுமோ என நினைத்தவன் வேறு ஏரியாவுக்கு வீடு மாற முடிவு செய்தான்.
ஆலம் விழுதானவள் செய்த பிழை
ஆயுளுக்கும் பெரும் தண்டனை…
பிழைத்தவள் அன்னையென்றால்
பிள்ளைக்கே பெரும் குற்றம்…
உடல் மடிந்தாலும் பிழை தந்த
பெயர் என்றும் மடிவதில்லை…
வாழ்நாள் தண்டனையாய்
தொடர்ந்து வரும் ஊமைக்காயம்…

Advertisement