Advertisement

அத்தியாயம் – 1
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை…
இயர் போன் வழியே ஜானகியின் குரல் காதில் வழிந்து கொண்டிருக்க உடன் பாடிக்கொண்டே செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் இந்துஜா.
சாலையை ஒட்டியபடி இருந்த கேட்டுக்குள் அளவான வீடு, அதை ஒட்டியது போல ஒரு சின்ன கட்டிடத்தில் மழலையர் பள்ளி, அதோடு சேர்ந்தபடியே செடிகளின் நர்சரி. விதவிதமான வண்ணங்களில் பலவிதமாய் பூத்திருந்த பூக்களும் அவளோடு சேர்ந்து தலையாட்டிக் கொண்டிருந்தன.
நாளை முதல் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பும் சேர்ந்து கொள்ளும் என்பதால் செடிகளை அதிகமாய் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
ரோஜாக்களில் பன்னீர் துளி…
வழிகின்றதேன்… அது
என்ன தேன்…
ரோஜாவின் மீது அமர்ந்திருந்த தண்ணீர் துளிகள் சூரிய ஒளியில் பளபளக்க அதனிடம் கேட்டுக் கொண்டே பாடிக் கொண்டிருந்தவள் எதிர்புறம் இருந்த வீட்டின் முன்னே பெரிய லாரி வந்து நிற்கவும் நிமிர்ந்து கவனித்தாள்.
அதில் முழுதும் வீட்டு சாதனங்கள் தெரிய, “ஓ… வாடகைக்கு ஆள் வந்துட்டாங்க போலருக்கு…” என நினைத்துக் கொண்டு மீண்டும் தனது பணியில் ஆழ்ந்தாள்.
வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்த சிந்துஜா, “என்னக்கா, முன்னாடி வீட்டுக்கு ஆளுங்க வந்துட்டாங்க போலருக்கு…” கேட்டுக் கொண்டே தலை முடியை சீவிக் கொண்டிருக்க, “ம்ம்…” என்றதோடு முடித்துக் கொண்டு மீண்டும் செடியில் கவனமான அக்காவை முறைத்துக் கொண்டாள் தங்கை.
“ஹூக்கும்… இந்த செடி, பூவோட பேசற அளவுக்கு கூட நீ என்னோட பேசறதில்லை… ஏதாச்சும் கேட்டா பதில் சொல்லறியா…” என்று சிலிர்த்துக் கொள்ள அமைதியாய், “சிந்து, உனக்கு இப்ப என்ன தெரியணும்…” என்றாள்.
“ஹூம்… கொரோனா குட்டி போடுமா… இல்ல அதைப் பிடிச்சு சட்டியில் போடுவாங்களான்னு தெரியணும்…” கோபமாய் சொல்லியவள் கேட்டின் அருகே சென்று வேடிக்கை பார்க்கத் தொடங்க அவள் சொன்ன விதத்தைக் கண்டு புன்னகைத்த இந்துவும் அருகில் சென்றாள்.
“சிந்துமா, வா… நான் தலை பின்னி விடறேன்…”
“ஒண்ணும் வேண்டாம்… நீ வளர்க்குற உன் புள்ள குட்டிகளையே கொஞ்சிட்டு இரு… நானே பின்னிக்கிறேன்…”
“ரொம்பதான் சிலிர்த்துக்காத… வாடி…” என்றவள் சீப்பை வாங்கிக் கொண்டு அழகாய் பின்னலிடத் தொடங்க சிந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள்.
“வண்டி நிறைய சாமான் இருக்கு… ஆளுங்க யாரையும் காணோமே…” அவள் கேட்கும்போதே ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவனைக் கண்டதும் அவள் முகம் மாறியது.
“அய்யே, இந்த முசுடனா…”
அவள் சொன்னதும் ஏறிட்டுப் பார்த்த இந்து, “அவரை உனக்குத் தெரியுமா…” என்றாள்.
“ஹூம், பழக்கம் இல்லை… ஆனா சரியான கஞ்சப் பிசுனாரி… ரொம்பத் திமிர் பிடிச்சவன்… ஒருமுறை வெள்ள நிவாரணத்துக்கு வேண்டி எங்களை டொனேஷன் கலக்ட் பண்ண சொன்னாங்கல்ல… நாங்க ஒருநாள் சிக்னல்ல வசூல் பண்ணிட்டு இருக்கும்போது இந்தாளு கார்ல இருந்தான்… இவன்கிட்ட டொனேஷன் கேட்டா ஒண்ணா கொடுக்கணும், இல்லேன்னா அமைதியாப் போயிருக்கணும்… இந்தாள் என்ன சொன்னான் தெரியுமா…” நிறுத்தியவள்,
“ஸ்கூல்க்கு உங்களை படிக்க அனுப்பினாங்களா, இல்ல பிச்சை எடுக்க அனுப்பினாங்களா… போயி படிக்கற வேலையைப் பாருங்கன்னு… சொல்லிட்டுப் போயிட்டான்…”
தங்கை கடுப்புடன் சொல்ல அதைக் கேட்ட இந்துவின் மனமும், “ச்சே… இதென்ன, முன்னப் பின்னத் தெரியாத பொண்ணுகிட்டே இப்படி சொல்லிருக்கார்…” என மனதுக்குள் நினைத்தாலும், “சரி விடு சிந்து… அவருக்கு அன்னைக்கு என்ன பிரச்சனையோ…” என்று சமாதானம் சொன்னாள்.
“என்ன பெரிய பிரச்சனை… இவர் என்ன, பிரசவ வலில துடிச்சிட்டு இருக்கும் போதா பணம் கேட்டேன்… எதுவா இருந்தாலும் சொல்லற விதம்னு ஒண்ணு இருக்குல்ல… ஹூக்கும், உன்கிட்ட போயி சொல்லறேன் பாரு… நீ எல்லாத்தையும் பாசிடிவா தான் எடுத்துப்ப… என்னால முடியாது…” என்று பின்னலை முன்னில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு நடந்தவள், “எல்லாத்துலயும் பாசிடிவா யோசிக்கிற என் அக்கா வாழ்க்கையை ஏன் இப்படி நெகடிவா மாத்திட்ட கடவுளே…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
லாரியில் இருந்து கூலி ஆட்கள் பொருட்களை இறக்கத் தொடங்கி இருக்க, அந்த நெடியவன் முன்னில் நின்று அவர்களுக்கு உத்தரவிட்டு ஏவிக் கொண்டிருந்தான். அதற்கு மேலும் அங்கே நிற்காமல் தோட்டத்துக்கு தன் செல்லப் பிள்ளைகளை தேடி நடந்தாள் இந்து.
இந்துஜா அளவான உயரத்தில் மிதமான அழகில் இயல்பாய் இருந்தாள். எப்போதும் சிரிக்காமலே இதழில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகை முகத்தின் அழகைக் கூட்டியது. அழகான சின்ன நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு மட்டுமே அவளது அலங்காரம். காட்டன் சுரிதாரில் உயர்த்திக் கட்டிய கூந்தலுடன் இருந்தவள் அவளுக்குப் பிடித்தமான பவளமல்லி மரத்தடியில் வந்து சிறிதுநேரம் அமர்ந்தாள்.
இடுப்பளவு வளர்ந்த பூச்செடிகள் அவளை நோக்கி தலையாட்டி வாவென்று ஆவலுடன் அழைப்பது போலத் தோன்ற எழுந்தவள் அதன் அருகில் சென்றாள். குட்டிக் குட்டியாய் பதியனிடப்பட்டிருந்த சில பூச்செடிகளில் இலைகள் தளிர் விட்டிருக்க அதை மென்மையாய் வருடிக் கொடுத்தவள் கேட் திறக்கப்படும் ஓசை கேட்டு, “அப்பா வந்துட்டார் போலருக்கே…” என வாசலுக்கு வந்தாள்.
“என்னடா இந்து, உன் பூச்செடிகளுக்கு கதை சொல்லி முடிச்சுட்டியா…” கேட்டுக் கொண்டே பைக்கை நிறுத்தி இறங்கினார் பரமசிவம்.
அவர் கையில் இருந்த காய்கறிப்பையை வாங்கிக் கொண்டவள், “இன்னைக்கு நேரமா வந்துட்டிங்கப்பா…” எனக் கேட்க, “ஆமாடா, வேலை முடிஞ்சது… கிளம்பிட்டேன்… அம்மா இன்னும் வரலியா…” என்றார்.
“இல்லப்பா, அத்தை வீட்டுல இருந்து கிளம்பிட்டேன்னு சொன்னாங்க… நான் காபி எடுத்திட்டு வறேன்…” என்றவள் வீட்டுக்குள் நுழைய, “ம்ம் மெதுவா போதும் மா… குளிச்சிட்டு வந்திடறேன்…” என்றார் பரமசிவம்.
“அப்பா, நான் சொன்னதை வாங்கிட்டு வந்திங்களா…” கேட்ட இளைய மகளிடம், “வாங்கிருக்கேன் டா… பைல இருக்கு… எடுத்துக்க…” என்று கூற, “ம்ம்… நீங்க வெறும் அப்பா இல்ல… என் செல்லப்பா…” என்று அவர் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி கொஞ்சிவிட்டு அடுக்களைக்கு ஓடினாள் சிந்து.
பரமசிவம் அரசுப் பணியில் இருந்தார். அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி மழலையர் பள்ளியைப் பார்த்துக் கொள்ள மூத்த மகள் இந்துஜா உதவியாக இருந்தாள். செடிகளும் பூக்களும் அவளுக்கு மிகவும் விருப்பம் என்பதால் நர்சரியையும் பார்த்துக் கொண்டாள். வித்தியாசமான பலதரப்பட்ட பூச்செடிகள் அவளது நர்சரியில் இருந்ததால் அந்த வியாபாரமும் குழப்பமில்லாமல் சென்றது. இளையவள் சிந்துஜா இப்போதுதான் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.
அழகான அந்தக் குடும்பத்தில் அசந்தர்ப்பமாய் விதி சில விளையாட்டுகளை நடத்திச் செல்ல குடும்பத்தின் குதூகலமும், உற்சாகமும் சற்றுக் குறைந்திருந்தாலும் நேசம் மட்டும் சற்றும் குறையவில்லை.
அடுக்களையில் தந்தை கொண்டு வந்த பையை உருட்டிக் கொண்டிருந்தாள் சிந்துஜா.
“என்ன சிந்து தேடறே…”
“அதுவா, அது வந்து…” என்று இழுத்தவள், பால்கோவா பாக்கெட்டை கையிலெடுத்து “இதோ இதைத்தான்…” என்று காட்ட, “ஓ, அப்பாக்கு காபி வைக்கறேன்… உனக்கும் வேணுமா…” என்றாள்.
“ம்ஹூம், எனக்கு வேண்டாம்…” என்றவள் பாக்கெட்டைப் பிரித்து ஒரு துண்டை அக்காவின் வாயருகே கொண்டு செல்ல, “எனக்கு வேண்டாம்…” என்றாள் அவள்.
“ஓகே, எங்கே வேணும்னு சொல்லிருவியோன்னு நினைச்சேன்… ஈஈ…” என்று பல்லைக்காட்டிவிட்டு செல்ல, “சரியான வாலு…” என்று சிரித்துக் கொண்டாள் இந்து. காபியை தந்தைக்கு கொண்டு கொடுத்துவிட்டு இரவு சமையலுக்கு வேண்டிய வேலைகளை கவனித்தாள்.
சிறிது நேரத்தில் கேட் திறக்கும் சத்தம் கேட்க வண்டியின் சத்தத்தைத் தொடர்ந்து அன்னை அகிலாண்டேஸ்வரியின் குரல் கேட்டது.
“எதுக்கு சிந்து இப்ப வண்டியை எடுக்கற…”
“அம்மா, ஒரு ரவுண்டு போயிட்டு வந்திடறேன், ப்ளீஸ்…” என்றவள் அன்னையின் ஆக்டிவாவை எடுத்துக் கொண்டு செல்ல, “இந்நேரத்துல ரவுண்டு போகலேன்னா என்ன, சொன்னா கேக்கறதே இல்ல…” புலம்பிக் கொண்டே வந்த மனைவியை எதிர்கொண்டார் பரமசிவம்.
“என்ன அகிலா, போன காரியம் என்னாச்சு…”
“ம்ம், எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுங்க… அண்ணன் வரலியான்னு கீதா ரொம்ப வருத்தப்பட்டா…”
“இது சும்மா ஜாதகப் பொருத்தம் பார்க்கறது தானே… மத்த விஷேஷதுக்கெல்லாம் போகத்தானே போறோம்…”
“ம்ம்… நல்ல சம்மந்தம், பெரிய இடம்… ஜாதகமும் அருமையாப் பொருந்தி இருக்கு… கூடிப் பேசிட்டு சீக்கிரமே நிச்சயத்துக்கு நாள் குறிச்சிடுவாங்க போலருக்கு…”
“ம்ம்… என் தங்கை மக வாழ்க்கையாச்சும் நல்லபடியா அமையட்டும்…” பெருமூச்சுடன் கணவன் கூற மௌனமாய் இருந்தார் அகிலாண்டேஸ்வரி.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த இந்து எதையும் கண்டு கொள்ளாமல், “அம்மா, தோசைக்கு ரெண்டு சட்னி அரைச்சு வச்சுட்டேன்… ஒவ்வொருத்தரா சாப்பிட வந்தா சூடா தோசை வார்த்துக் கொடுத்துடறேன்…” என்றாள்.
“ம்ம்… எங்க வயித்துக்கு சூடா கொடுக்கறேன்னு சொல்லற… உன் வாழ்க்கை இப்படி ஆறிப் போயிடுச்சே… இந்துமா…” பரமசிவம் மனதுக்குள் உருகினாலும் வெளியே எதுவும் சொல்லாமல் தலையாட்டிவிட்டு, “இதோ நான் வந்துட்டேன் இந்துமா… செம பசி… உன் தோசைனா ரெண்டு கூட சாப்பிடலாம்…” சொல்லிக் கொண்டே மேசைக்கு சென்றார்.
தந்தை, தங்கை, அன்னை மூவருக்கும் சூடாய் தோசை வார்த்துக் கொடுத்தாள்.
“உனக்கு வேணும்னா நான் சூடா வார்த்துத் தரவா இந்து…” கேட்ட அன்னையிடம், “இல்லம்மா நானே ஊத்திக்கிறேன்…” என்றுவிட்டு தனக்காய் மூன்று தோசைகளை தட்டில் சுட்டுப் போட்டுக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.
ஏனோ தொண்டையில் அடைப்பது போலத் தோன்றியது. பிடிக்காவிட்டாலும் தந்தை தனை கவனிப்பதை உணர்ந்தவள் வலுக்கட்டாயமாய் வாய்க்குள் போட்டு மென்று இறக்கினாள்.
“ஏய் சிந்து.. இந்த பாத்திரமெல்லாம் கழுவி வைக்கலாம்ல… ஒரு வேலை செய்யறதில்லை…” அன்னை குரல் கொடுக்க, “போம்மா, எனக்குத் தூக்க தூக்கமா வருது…” சொன்ன மகளிடம், “ஹூம் உன்னை நினைச்சா எனக்கும்தான் துக்க துக்கமா வருது… இப்படி எந்த வேலையும் பழகாம இருந்தா நாளைக்கு போற வீட்டுல புள்ளைய வளர்த்து வச்சிருக்கா பாருன்னு என்னை தான் சொல்லுவாங்க…”
“அதெல்லாம் யூ டோன்ட் வொர்ரி மம்மி… சமையலை யூ டியூப் பார்த்து மேனேஜ் பண்ணிப்பேன்… மத்த வேலை எல்லாம் என் மாமியாரை செய்ய சொல்லிடுவேன்…” என்று பதில் சொன்னவளின் தலையில் கொட்டியவர்,
“இந்த எகத்தாளத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…” என்று சொல்ல, “விடுங்கம்மா, நான் பார்த்துக்கறேன்…” என்று இந்து அடுக்களையில் இருந்து குரல் கொடுத்தாள்.
“ம்ம்… நீ இப்படி எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்யறதால தான் அவளுக்கு ரொம்ப குளிர் விட்டுப் போயிருச்சு…” என்றபடி வாசலில் இருந்த கணவரிடம் வந்தார்.
“என்னங்க, முன்னாடி வீட்டுக்கு வாடகைக்கு வந்துட்டாங்க போலருக்கு…”
“ம்ம்… நல்ல ஆளுங்களா இருந்தாப் பரவாயில்ல…” என்றபடி அவரும் எதிர்வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பொருட்களை இறக்கி முடித்ததும் பணம் கொடுப்பதற்காய் வெளியே வந்த வெற்றிவேல் இவர்களைக் கண்டதும் சிரிப்பதா வேண்டாமா என்று நோக்க, “ஹலோ சார்… நீங்கதான் இங்கே குடி வந்திருக்கிங்களா…” என்றார் பரமசிவம்.
“ம்ம்… ஆமாம்…” என்றவன், “அப்புறம் மீட் பண்ணுவோம் சார்…” என்றபடி உள்ளே சென்றுவிட்டான்.
“என்னங்க, ஒரு மரியாதைக்கு நின்னு ரெண்டு வார்த்தை பேசாம அந்தப் புள்ள பொசுக்குனு இப்படி சொல்லிட்டுப் போகுது…” என்றார் அகிலா அங்கலாப்புடன்.
“இப்ப நிறைய வேலை இருக்கும்ல… அதான் அப்புறம் பேசலாம்னு போயிருப்பார்…” என்றார் பரமசிவம்.
“ஹூம்… என்னமோ, சிரிக்கவே கணக்கு பார்க்குற போல… இந்தக் காலத்துப் பசங்களுக்கு மரியாதை தெரிய மாட்டேங்குது…” என்றபடி அவர் உள்ளே சென்றுவிட்டார்.
உள்ளே ஒரு சோபாவில் உறங்கிக் கொண்டிருந்த பவிக்குட்டியின் சிணுங்கலைக் கேட்டுதான் வெற்றிவேல் பேசாமல் உள்ளே சென்று விட்டிருந்தான்.
அவன் செல்லும்போது எழுந்து அமர்ந்து கண்ணைத் தேய்த்துக் கொண்டு புதிய இடத்தை மிரட்சியாய் பார்த்தபடி அழத் தயாராகிக் கொண்டிருந்தாள் குழந்தை.
“பவிக்குட்டி எழுந்திருச்சுட்டியா… பசிக்குதா, சாப்பிடலாமா…” கேட்டுக் கொண்டே அவளைத் தூக்கிக் கொண்டவன் வாங்கி வைத்திருந்த பார்சலை எடுத்துக் கொண்டு உணவு மேசைக்கு வந்து அமர்ந்தான்.
அவளுக்கு இட்லியை ஊட்டிவிட்டு அவனும் பேருக்கு சாப்பிட்டுவிட்டு, “உனக்கு இந்த புதுவீடு பிடிச்சிருக்கா…” என்று கேட்க, “ம்ஹூம்… பிதிக்கல…” மூன்று வயதுப் பவித்ரா பிடிக்கவில்லை என்று இடவலமாய் தலையாட்டினாள்.
“ம்ம், இந்த சாமான் எல்லாம் ஒதுக்கி வச்சிட்டா அழகா இருக்கும்… நீ சாப்பிட்டு சமத்தா சோபால படுத்துப்பியாம்… நான் கட்டில் மேல பெட் எல்லாம் போட்டு ரெடி பண்ணுவேனாம்…” என்றபடி அவளை சோபாவில் அமர்த்த அவளது கண்கள் எதையோ தொளாவின.
“உன்னோட ஜோக்குட்டியைத் தேடறியா… இதோ இங்கிருக்கு…” என்றபடி பெரிய கரடி பொம்மையை எடுத்துக் கொடுக்க அதை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள் குழந்தை.
ஐந்தே நிமிடத்தில் தனித்தனியே இருந்த கட்டிலையும் படுக்கையையும் ஒன்றாக்கி பெட்ஷீட்டை விரித்து தயார் ஆக்கிய வெற்றி பவியைத் தூக்கி கட்டிலில் அமர்த்தினான்.
“பவிக்குட்டி கட்டில்ல உக்கார்ந்து விளையாடிட்டு இரு… அப்பா சீக்கிரம் குளிச்சிட்டு வந்திடறேன்…” என்றவன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
சுற்றுமுற்றும் பார்த்த பவித்ரா கட்டிலில் இருந்து மெல்ல இறங்கி அந்தப் பெரிய சைஸ் கண்ணாடி ஜன்னலின் முன் வந்து நின்றாள். கீழே ஒரு பெட்ரூம் ஹால், கிச்சனும் மேலே ஒரு பெட்ரூமும் ஹாலுமாய் இருந்தது அந்த வீடு. கர்ட்டன் இனியும் மாட்டாததால் தெரு விளக்கின் வெளிச்சத்தில் முன்னிலிருந்த வீடும் தோட்டமும் நன்றாகத் தெரிந்தது. அங்கே தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த இந்துஜாவைக் கண்டதும் உன்னிப்புடன் கண்கள் விரிய ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தொலைதூர வானை
வெறித்தபடி எதற்கிந்த
வாழ்க்கை என்று
விடை காணத் துடிக்கும்
மனதின் வெறுமை
ஏனோ ஆழ்த்தி விடுகிறது
எனை இந்தத் தனிமையில்…

Advertisement