Advertisement

சிறிது நேரத்தில் வெற்றி சிந்து, பவித்ராவுடன் அங்கே வர, தந்தையைக் கண்ட சிந்து ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“அப்பா, ஏன்ப்பா இப்படி…” என்று கலங்கிய மகளை சமாதானப்படுத்தி வெற்றிக்கு நன்றி கூறினார்.
“ப்பா, தாத்தாக்கு என்ன… காச்சலா… ஊசி போத்தாங்களா…” பவி கேட்கவும், “ஆமாடா பவிக்குட்டி…” என்றவன், “இப்ப எப்படி இருக்கு சார்… டாக்டர் என்ன சொன்னார்…” என்று விசாரித்தான்.
“நீங்க வீட்டுக்குப் போயி குளிச்சு சாப்பிட்டு வாங்க… நான் சார் கூட இருக்கேன்…” வெற்றி சொல்ல, “நானும் அப்பா கூட இருக்கேன்…” என்றாள் சிந்து. இந்துவையே நோக்கிக் கொண்டிருந்த பவித்ரா, வெற்றியின் கையை விட்டுவிட்டு  இந்துவின் அருகே சென்று அழைத்தாள்.
“ம்மா… வா வீத்துக்குப் போலாம்…” என்று இழுத்தாள்.
“ம்ம்… சரிடா பவிக்குட்டி…” என்ற இந்து, “சரிப்பா… நாங்க கிளம்பறோம்… மதியம் சாப்பாடு எடுத்திட்டு வரோம்…”
“ம்ம்… சிந்து, நீ மட்டும் எதுக்குடா இங்கிருக்க… அதான் சார் இருக்காரே… நீயும் போ…” என்றார் பரமசிவம்.
“ஆமாடி வா, எல்லாருமா சீக்கிரம் வேலை முடிச்சிட்டு வந்துடலாம்…” அகிலா சொல்லவும், “சரிம்மா…” என்று அவளும் கிளம்பினாள்.
இந்துவின் கையைப் பிடித்து முதல் ஆளாய் செல்லத் தயாரான பவித்ராவிடம், “பவிக்குட்டி, நீ அப்பா கூட இங்க இரு… அவங்க வீட்டுக்கு போயிட்டு சீக்கிரம் வந்திடுவாங்க…” என்றான் வெற்றி.
“ம்ஹூம்… நானும் அம்மா கூட டாத்தா போதேன்…” என்றவள் இந்துவின் விரலைக் கெட்டியாய் பிடித்துக் கொள்ள, மகளை அவளது அம்மா என்ற அழைப்பு அகிலாவுக்கு என்னவோ போல இருந்தது.
ஆனால் இந்துவின் முகத்தில் அவள் சொன்னதைக் கேட்டு புன்னகை எட்டிப் பார்க்க, “குழந்தையை ஹாஸ்பிடலில் விட வேண்டாம்… வீட்டுக்கு கூட்டிட்டுப் போறோம் சார்… நாங்க வரும்போது பார்வதி அம்மாகிட்ட விட்டுட்டு வரோம்…” என்றவள் குழந்தையின் விரல் பிடித்து நடக்க, “பை தாத்தா… பை ப்பா…” என்ற குழந்தையின் ஆனந்த முகம் வெற்றியின் மனதை இம்சையாய் பிசைய மௌனமாய் பார்த்திருந்தான்.
அவனது கண்களில் ஏதோ வேதனை நிழலாடுவதை பரமசிவமும் கண்டு கொண்டார்.
“குழந்தைக்கு இந்துவை ரொம்பப் பிடிச்சிருச்சு போல தம்பி…”
“ம்ம்… ஆமா சார்… உங்களுக்கு டயர்டா இருந்தா தூங்குங்க…”
“நிறையநாள் ராத்திரி தூங்காம இருந்ததுக்கு தான் ஒண்ணா ஊசியப் போட்டு தூங்க வச்சுட்டாங்க…” என்று சிரித்தார்.
“ஏன் சார் தூக்கம் வரல, உடம்புக்கு எதுவும் பிரச்சனையா…”
அவன் கேட்கவும் பெருமூச்சை வெளியேற்றியவர், “உடம்புக்கு பிரச்சனை இருந்தா மாத்திரை போட்டுக்கலாம்… மனசுல பிரச்சனை இருந்தா இப்படிதான் வரும்…” என்றவர்,
“அதை விடுங்க தம்பி… நீங்க ஏதோ யார்ன் கமிஷன் ஏஜன்சி வச்சிருக்கேன்னு சொல்லிருந்தீங்க… ஆபீஸ் எங்க இருக்கு…”
“அண்ணா நகர்ல, ராயல் யார்ன்ஸ் பிரைவேட் லிமிடட்…”
“ராயல் யார்ன்ஸ், அண்ணா நகரா…” யோசனையுடன் கேட்டவர், “கேள்விப்பட்ட போல இருக்கு…” என்றார்.
“ஆமா சார், தொடங்கி அஞ்சு வருஷம் இருக்கும்…”
“ஓ… ஹான், நாலஞ்சு மாசம் முன்னாடி வான்டட் விளம்பரம் ஏதாச்சும் பேப்பர்ல கொடுத்திருந்திகளா…”
“ஆமா சார், ஒரு அட்மின் போஸ்ட்க்கு கொடுத்திருந்தோம்…”
“அப்ப சரி, இந்து கூட பயோடேட்டா அனுப்பிருந்தா…”
அவர் சொல்லவும் ஆச்சர்யமானவன், “அப்படியா…” என்றான் யோசனையுடன்.
“ஆமா தம்பி, போட்டோவோட தான் அப்ளை பண்ணினா… உங்களுக்கு நினைவில்லையா…” என்றதும் நெற்றியோடு மூளையும் சுருங்க யோசித்துப் பார்த்தான் வெற்றி.
“அவங்க பேரு இந்து மட்டும் தானா…”
“சர்டிபிகேட்ல இந்துஜா பரமசிவம்னு இருக்கும்…” அதைக் கேட்டதும் அவனுக்கு ஏதோ நினைவு வர மௌனமாய் யோசித்துக் கொண்டிருந்தவனிடம், “சரி, விடுங்க தம்பி… முதல்ல எங்காச்சும் வேலைக்குப் போகலாம்னு தான் இந்து டிரை பண்ணா… இண்டர்வியூ நல்லாப் பண்ணிருக்கேன்னு கூட சொன்னா… அப்புறம் அங்க கிடைக்கலேன்னதும், அம்மாவுக்கு ஹெல்பா இங்கயே இருக்கேன்னு தனக்கு பிடிச்ச நர்சரியையும் சேர்த்து பார்த்துக்கத் தொடங்கினா…” 
“ம்ம்…” தலையாட்டியவனுக்கு நிழலாய் நினைவு வந்தது.
அன்னை இறந்த சமயமாதலால் வெற்றி அதிகமாய் வீட்டில் பவித்ராவுடன் தான் இருப்பான். அந்த இண்டர்வியூவைக் கூட மேனேஜரிடம் பார்த்துக் கொள்ள சொன்னது நினைவு வந்தது. அவர் தேர்வு செய்த பத்து பேரின் விவரங்களை பைலில் வைத்து வீட்டுக்கு அனுப்பியிருந்தார்.
விண்ணப்பத்தில் போட்டோவும் மற்ற ஆவணங்களின் நகலும் அவசியம் இணைக்க வேண்டும் என்று முன்னமே கூறி இருந்தனர். ஒன்பது பேரின் விண்ணப்பங்களும் போட்டோ, ஆவணங்களுடன் இருக்க இந்துஜா பரமசிவத்தின் விண்ணப்பத்தில் மட்டும் போட்டோ இல்லை. “கேட்டதைக் கூட ஒழுங்கா தர முடியலை…” என எரிச்சலுடன் நினைத்தவன் பேரைத் தவிர வேறு எதையும் நோக்காமல் அதை அப்படியே நிராகரித்திருந்தான். பத்து பேரில் கோபாலைத் தேர்வு செய்திருந்தான்.
யோசனையாய் இருந்தவனைக் கலைக்காமல் பரமசிவமும் கண் மூடி படுத்திருந்தார். மனைவி, பிள்ளைகளிடம் தைரியமாய் காட்டினாலும் சற்று பயமாகவே இருந்தது.
“எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் அகிலா என்ன செய்வாள்… இந்துவுக்காவது ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்தால் பரவாயில்லை, அதுவும் முடியவில்லை…” என யோசித்தவருக்கு ஆயாசமாய் இருந்தது.
அப்போது பிரஷர் செக் பண்ணுவதற்காய் நர்ஸ் வரவும் மெல்ல எழுந்து அமர்ந்தார்.
பரிசோதித்து ஊசி ஒன்றை போட்டவள், “என்ன சார், இப்ப எப்படி பீல் பண்ணறீங்க…” என்றாள்.
“ம்ம்… பரவால்ல மா, கொஞ்சம் டயர்டா இருக்கு…” என்றார்.
“ம்ம்… கொஞ்சம் மெல்ல நடங்க, ஆரஞ்சு, இல்லேன்னா கிரேப் ஜூஸ் ஐஸ் போடாம கொடுங்க சார்…” என்றாள் வெற்றியிடம்.
“ஓகே சிஸ்டர்…” என்றவன் ஆரஞ்சு ஜூஸ் வாங்கி வந்து கொடுக்க குடித்தார்.
“உங்களுக்கு ரொம்ப சிரமம் தம்பி…”
“அதெல்லாம் எதும் இல்ல சார்… வேற ஏதாச்சும் வேணும்னாலும் சொல்லுங்க…”
“பாத்ரூம் போகணும் தம்பி…” என்றவர் கட்டிலில் இருந்து இறங்க முயல அவன் உதவி செய்தான். போய் வந்தவர் கட்டிலில் சாய்ந்த நிலையில் அமர்ந்து கொண்டார்.
“தம்பி உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா… வேண்டாம்னு தான் நினைச்சேன்… மனசு கேக்கல…” என்றார்.
“என்ன சார், கேளுங்க…” என்றான் அவன்.
“குழந்தையோட அம்மா…” என்றதும் அவன் முகம் இறுக அதை கவனித்தவர், “விருப்பமில்லேன்னா உங்க மனைவி பத்தி சொல்ல வேண்டாம், இவ்ளோ நல்ல சுபாவமா இருக்கீங்களே… உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையோன்னு தான் மனசு கேக்காம கேட்டுட்டேன்…” என்றார்.
அவரது தயக்கமும், வார்த்தைகளும் தன் மேல் கொண்ட அக்கறையால் வந்தது எனப் புரிந்து கொண்டவன் சற்று இயல்புக்கு வந்தான்.
“அது முடிஞ்சு போன கதை சார், இனி தொடரும் போட எனக்கு விருப்பமில்லை…” என்றான் சுருக்கமாக.
“ஓகே தம்பி… சின்னக் குழந்தை, அம்மாவைத் தேடுற வயசு… அதான் கேட்டுட்டேன்…” என்றார் குற்றவுணர்வுடன்.
“பரவால்ல சார், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கறதில்லை… அவளும் பழகிப்பா…” என்றான் வெற்றி.
“ம்ம்… என் பொண்ணு வாழ்க்கை தான் சரியில்லைன்னு நினைச்சேன்… உங்க வாழ்க்கையும் பிரச்சனை தான் போலருக்கு…” என்றவர் கண்ணை மூடிக் கொள்ள கிருஷ்ண மணிகள் அங்குமிங்கும் உருண்டு கொண்டிருந்தது. அதைக் கேட்டதும் வெற்றியின் மனம் குழம்ப மனதில் ஆயிரம் கேள்விகள் முளைத்தன.
ஒருவேளை சிந்துவைப் பற்றி சொல்கிறாரோ என நினைத்தவன் “என்ன சார், எந்தப் பொண்ணோட பிரச்சனையைப் பத்தி சொல்லறீங்க…” என்றான் புரியாமல்.
அவனது வார்த்தைகளும், செயல்களும் மனதுக்கு நம்பிக்கை தருவதாய் இருக்கவே மனதில் இருப்பதை அவனிடம் சொன்னால் தப்பில்லை என்று அவருக்குத் தோன்றியது.
“இந்துவைத்தான் சொல்லறேன் தம்பி… என் பொண்ணு வாழாமலே வாழ்க்கையை முடிச்சிட்டு நிக்கறா…” என்றவரின் கண்கள் கலங்க அவனுக்கு கஷ்டமாய் இருந்தது.
“சார், நீங்க இந்த நிலைல உணர்ச்சிவசப் படக்கூடாது… எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்…” என்றான்.
“இல்ல தம்பி, வீட்ல இதைப் பத்தி பேசினா என் மனைவியும் பொண்ணுங்களும் வருத்தப் படுவாங்களோன்னு நினைச்சு நான் எதையும் பேசறதில்லை… உங்க கிட்ட சொன்னா கொஞ்சம் மனபாரம் குறையும்னு தோணுது…”
இங்கு நிறைய பேருக்கு மனதில் உள்ளதை யாரிடமும் சொல்ல முடியாததே பெரிய பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது. மற்றவர் ஒரு பிரச்சனையில் இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு தீர்வு சொல்ல முடியாவிட்டாலும் காது கொடுத்துக் கேட்பதே பெரிய உதவியாகும் என நினைத்த வெற்றி, “அப்படி என்ன இந்துவோட வாழ்க்கைல நடந்திருக்கும்…” என யோசித்துக் கொண்டே, “உணர்ச்சி வசப்படாம அமைதியா சொல்லுங்க சார்…” என்றான்.
“எங்க இந்து ரொம்ப அமைதி… ஆனா அவ நடந்துக்கற விதம், பக்குவமான பேச்சு, மாறாத புன்னகை எத்தனை பேர் நடுவுல இருந்தாலும் அவளைத் தனியா காட்டும்… அப்படிதான் அந்த கல்யாண வீட்ல அவ்ளோ பேர் இருந்தும் ஆகாஷ்க்கு அவளைத் தனியா தோணுச்சு…” என்றவரின் குரல் தடுமாற தண்ணீரை எடுத்துக் கொடுத்தான் வெற்றி.
அதை குடித்துக் கொண்டே பழைய நினைவுகளை அசைபோட்டவர் வெற்றியிடம் சொல்லத் தொடங்கினார்.
கடந்தவை எல்லாம்
கனவுகள் அல்ல…
நிகழ்பவை எல்லாம்
நிதர்சனம் அல்ல…
யாரோ எழுதிய
கவிதையின் பொருளாய்
புரிந்து கொள்ள
முயலுமுன்னே முடிந்து
முடிவுரை இல்லாத
வார்த்தைகளால்
தேக்கி நிற்கிறது…
நினைவுகளே பாரமாய்
சுமையாகும் வாழ்க்கை…

Advertisement