Advertisement

அத்தியாயம் – 14
பரமசிவத்தை ICU வில் அட்மிட் செய்திருக்க மருத்துவ பரிசோதனைகள் நடந்து கொண்டிருந்தது. ரத்த அழுத்தம், இதயத் துடிப்பை பரிசோதித்து முதலுதவி செய்திருந்தனர். மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி, எக்கோ, சி.டி ஸ்கேன், எண்டாஸ்கோபி என்று ஏதேதோ பரிசோதனைகளின் பெயரை சொல்ல எல்லாவற்றுக்கும் வெற்றி தான் ஓடினான்.
அதிகப்படியான டென்ஷன், பதட்டம் காரணமாய் அவருக்கு லேசான மாரடைப்பு வந்திருப்பதாக டாக்டர் கூறினார். பரமசிவத்தின் இதயத்துடிப்பை கண்காணிக்க ஒரு மானிட்டர் வைத்திருக்க அதில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த அம்புக்குறிகள் அவரது துடிப்பின் வேகத்தைக் காட்டிக் கொண்டிருந்தன. மூச்சுத் திணறாமல் இருக்க ஆக்ஸிஜன் டியூபை மூக்கில் குத்தி வைத்திருந்தனர்.
கதவின் கண்ணாடி வழியே கணவரைப் பார்த்த அகிலாவுக்கு அழுகை பொங்கி வந்தது.
“முருகா, அவருக்கு எதுவும் ஆகிடாம காப்பாத்திக் கொடுத்திடு… இந்த பொண்ணுங்களோட நான் தனியா என்ன பண்ணுவேன்…” கண்ணீர் கன்னத்தில் வழிய நின்று கொண்டிருந்த அன்னையை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்திவிட்டு தானும் அருகே அமர்ந்தாள் இந்து.
“கடவுளே… எனக்காகத் துடிச்ச ஒரு இதயத்தை தான் பறிச்சுகிட்ட… இப்ப இந்த இதயத்தையும் எடுத்துக்காத…” மனதுக்குள் உருண்டு வந்த வேதனை தொண்டையை அடைக்க கலங்கத் தொடங்கிய கண்களை சட்டென்று சிமிட்டி அந்த உணர்வை மாற்றிக் கொண்டாள் இந்துஜா.
சிந்துவை வீட்டிலேயே விட்டு வந்திருந்தனர். பார்வதியை அலைபேசியில் அழைத்த வெற்றி, “சிந்து தனியா இருக்கும்… நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுங்கம்மா… நீங்க, ரெண்டு பேருக்கும் துணையா வீட்லயே இருங்க…” எனவும், அவர் பார்த்துக் கொள்வதாய் கூறினார். கணவனின் நிலையில் கலங்கிப் போயிருந்த அகிலாவைக் காண்கையில் தாயின் நினைவு வந்தது வெற்றிக்கு.
இந்துவும் மிகவும் சோர்ந்திருந்தாள்.
பரிசோதனை ரிப்போர்ட் வந்ததும், “மைல்ட் அட்டாக் தான்… பயப்படத் தேவையில்ல… டென்ஷன் ஆகாம பார்த்துக்கங்க… BP அதிகமா இருக்கு… ரெண்டு நாளைக்கு இங்கயே இருக்கட்டும்… உறக்க ஊசி போட்டிருக்கோம்… நல்லாத் தூங்கட்டும்… காலைல வந்து பார்க்கிறேன்…” என்று டாக்டர் சொன்ன பிறகே நிம்மதி ஆனது.
“நீங்க ரெண்டு பேரும் சாப்டீங்களா…” வெற்றி கேட்கவும் ஏதோ யோசனையில் இருந்த இந்து திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“இ..இல்ல… அச்சோ, நீங்களும் சாப்பிட்டிருக்க மாட்டிங்களே…”
“ஆமா தம்பி, நானும் அதை மறந்தே போயிட்டேன்… எங்களுக்காக சாப்பிடாம, தூங்காம உங்களுக்கும் சிரமம்… சரியான நேரத்துல அவரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து ரொம்பப் பெரிய உதவி பண்ணி இருக்கீங்க… நீங்க கிளம்பிக்கங்க… நாங்க பார்த்துக்கறோம்…”
“என்னமா, ஒரு அவசரத்துக்கு உதவலேன்னா என்ன மனுஷங்கன்னு சார் சொன்னது இப்பவும் எனக்கு நினைவு இருக்கு… உங்களை மட்டும் தனியா இங்க விட்டுட்டு போற அளவுக்கு நான் கல்மனசு உள்ளவன் கிடையாது… சிந்து, பவித்ராவுக்கு துணையா பார்வதிம்மாவை வீட்லயே இருக்க சொல்லிருக்கேன்… அவங்க பார்த்துப்பாங்க… நான் சார் கண் விழிச்சதுமே கிளம்பறேன்…” என்றான்.
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியல தம்பி… பெத்த மகனைப் போல கூட நின்னு பார்த்துகிட்டீங்க…” என்ற அகிலாவின் கண்கள் நெகிழ்ச்சியில் கலங்கியது.
“என்னமா நீங்க, எங்க அப்பாவுக்கு இப்படி வந்தா பார்த்துக்க மாட்டேனா… சாருக்கு இனி எதுவும் பிரச்சனை இல்லேன்னு டாக்டர் சொல்லிட்டாங்களே… ரொம்ப டயர்டா தெரியறீங்க… வாங்க, காண்டீன்ல ஏதாச்சும் சாப்பிட்டு வருவோம்…”
“இ..இல்லப்பா, அவருக்கு இப்படி ஆனதும், பசி, தூக்கமெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல… நீங்க போயி சாப்பிட்டு வாங்க… இந்து, நீயும் கூடப் போ மா… உனக்கு தலைவலி வந்துடப் போகுது… ஏதாச்சும் சாப்பிட்டு வா…”
“இல்லமா பசிக்கல…” என்ற இந்துவின் குரலே அவளது பலஹீனத்தை சொல்ல, “அட வாங்க மேடம்… அப்பாக்கு உடம்புக்கு முடியாதப்ப காபி குடிச்சா சாமி ஒண்ணும் கண்ணைக் குத்திடாது…” என்று அவன் கிண்டல் செய்ய மெல்ல அவனை ஏறிட்டவள் புன்னகைத்தாள்.
“அம்மா, உனக்கும் காபி வாங்கிட்டு வரட்டுமா…”
“ம்ம்… சரிமா…” என்று அகிலா சொல்ல முன்னே நடந்த வெற்றியைத் தொடர்ந்து இந்துவும் கான்டீனுக்கு சென்றாள்.
இரவாகியதால் ஹாஸ்பிடலும் உறங்கத் தொடங்கியிருக்க உணவென்று எதுவும் கான்டீனில் இல்லை. வெற்றிக்கு பயங்கரமாய் பசிக்கவே ஒரு பாக்கெட் பிஸ்கட்டை வாங்கியவன் இருவருக்கும் காபி சொல்லிவிட்டு இந்துவின் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அமைதியாய் அமர்ந்திருந்தவள் ஏதோ யோசனையில் இருப்பது புரிய அவனும் பேசவில்லை. காபி ரெடியானதும் சென்று வாங்கி வந்தவன் அவளுக்கு முன்னில் கோப்பையை வைக்க அவள் கவனிக்காமலே இருந்தாள்.
“மேடம், காபி ஆறுது…” அவன் சொல்லவும் சுதாரித்தவள், “தேங்க்ஸ் சார்…” என்று எடுத்து குடிக்கத் தொடங்கினாள்.
“பிஸ்கட் எடுத்துக்கங்க…” என்றவனிடம், “இல்ல வேண்டாம் சார்…” என்றவள் மீண்டும் அமைதியாய் கீழே குனிந்தபடி யோசனையில் இருக்க அவன் புருவத்தை சுளித்தான்.
“ம்ம்… பகல்ல எல்லாம் இந்தப் பொண்ணு நல்லாதானே இருக்கு… அதென்ன தூங்கற நேரம் ஆனா மட்டும் பவளமல்லி மரத்தடியில் போயி உக்கார்ந்துக்குது… இப்ப வெறிக்க, வெறிக்க மேசையைப் பார்த்திட்டு இருக்கு…” என யோசித்தவன், “ஹூம் அதுக்கு என்ன பிரச்சனையோ, யாருக்கு தெரியும்…” என்று நினைத்துக் கொண்டே காபியுடன் பிஸ்கட்டை உள்ளே தள்ளத் தொடங்கினான்.
அவனுக்கு அப்போது காபி தான் முக்கியமாய் தெரிந்ததே ஒழிய அவளது கவலை பெரிதாய் தெரியவில்லை. சாப்பிட்டு முடித்து அகிலாவுக்கும் ஒரு காபியை வாங்கிக் கொண்டு இருவரும் மீண்டும் ICU வார்டுக்கு வந்தனர்.
அதற்குள் வேறு நர்ஸ் டியூட்டி மாறி வந்திருக்க இவர்கள் மூன்று பேர் இருப்பதைக் கண்டவள், “சார்… ICU வார்டுல மூணு பேரெல்லாம் இருக்கக் கூடாது… யாராச்சும் ரெண்டு பேர் மட்டும் இருங்க…” என்று சொல்ல, “இல்ல சிஸ்டர், இவங்க லேடீஸ் மட்டும் தான் இருக்காங்க… நாங்க இங்கே வெளியே தானே இருக்கோம்…” என்றான் வெற்றி.
“அதான் சார் சொல்லறேன்… வெளியவும் மூணு பேரெல்லாம் அலவ்டு கிடையாது…” பொறுமையாக சொல்லி சென்றாள்.
“சரி மா, நீங்க பார்த்துக்குவீங்களா… நான் கிளம்பட்டுமா…” என்றான் மனசில்லா மனதுடன். “கிளம்புங்க தம்பி… ராத்திரி நேரம், பத்திரமா போயிட்டு வாங்க…” அகிலா சொல்லவும் தலையாட்டி விடை பெற்றான்.
காலை ஐந்து மணிக்கு பரமசிவத்துக்கு விழிப்பு வந்தது.
“என்னங்க…” என்ற அகிலாவுக்கு வேறு வார்த்தைகள் வராமல் விசும்பத் தொடங்க புன்னகைத்தவர், “ஏய், அசடு… அவ்ளோ சீக்கிரம் உங்களை விட்டுப் போயிடுவேனா…” என்று மனைவியின் கையைப் பற்றிக் கொள்ள, “அப்பா…” என்று கண்ணீருடன் அழைத்த மகளின் முகத்தைக் கண்டவருக்கு மனதைப் பிசைவது போலத் தோன்றியது.
“இந்து, பயந்துட்டியா மா… ஒண்ணும் இல்லடா, அப்பா உங்களை விட்டுப் போயிட மாட்டேன்… அழாத டா…”
“என்னங்க, உங்களுக்கு டென்ஷன்… எதுக்கு மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டு வருத்திகிட்டு இருக்கீங்க.. உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா நான் என்னங்க பண்ணுவேன்…” என்றார் அகிலா அழுகையுடன்.
“ப்ச்… டென்ஷன் உலகத்துல யாருக்கு தான் இல்ல… விடுமா… எனக்கு தான் ஒண்ணும் ஆகலையே…”
“ம்ம்… டாக்டர் டென்ஷன் ஆகக் கூடாதுன்னு சொல்லி இருக்கார்… கடவுள் மேல பாரத்த போட்டுட்டு எது நடக்குதோ நடக்கட்டும்னு அமைதியா இருங்க…” என்றவரின் பார்வை இரண்டு மூன்று முறை இந்துவின் மேல் படிந்து மீள, அவளுக்கு புரியவே செய்தது. தந்தையின் இதயத்தைத் துடிக்க வைத்த டென்ஷனுக்கு தானே காரணி என்று…
“சரி விடுமா, சிந்து குட்டி வரலியா…” என்றவரின் பார்வை அவளைத் துளாவ ராத்திரி அவர் மயங்கி விழுந்ததையும், வெற்றி காரில் அழைத்து வந்து எல்லா பரிசோதனை முடியும் வரை உடனிருந்ததையும் சொன்னவர், “சிந்து அந்த தம்பி வீட்டுல தான் இருந்தா… அப்புறம் அவர் போனதும் பார்வதியம்மாவை துணைக்கு விட்டு நம்ம வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டதா போன் பண்ணி சொன்னார்…”
“ஓ… பொம்பளைங்க இல்லாத வீடாச்சே… நாளைக்கு ஏதும் பேர் தோஷம் வந்துட வேண்டாம்னு நினைச்சிருக்கலாம்…” என்றார் பரமசிவம்.
“ம்ம்… ஆமாங்க… காலைல சிந்துவைக் கூட்டிட்டு வரேன்னு சொன்னார்… இந்த மாதிரி நேரத்துல உதவவும் ஒரு மனசு வரணும்… நல்ல குணமாத்தான் தெரியறார்…”
அதற்குள் உள்ளே வந்த நர்ஸ், “பேஷண்டை அதிகம் பேச வைக்க வேண்டாம்… டாக்டர் ரவுண்ட்ஸ் வந்திட்டு இருக்கார்… கொஞ்ச நேரம் வெளிய இருங்கம்மா…” என்றாள்.
டாக்டர் வந்து பார்த்தபிறகு “ECG கொஞ்சம் நார்மல் ஆகிருக்கு… பிரஷர் இப்பவும் அதிகமாதான் இருக்கு… நாளைக்கு பார்த்திட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்…” என்றார்.
அவருக்கு எளிய வகை உணவு கொடுக்குமாறு சொல்லவே கான்டீனில் கஞ்சி வாங்கிக் கொடுத்தனர். இந்து அமைதியாய் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவர், “இந்து… ரொம்ப யோசிக்காதடா… எல்லாம் சரியாகிடும்…” என்றார்.
“அப்பா, என்னாலதானே உங்களுக்கு இப்படி…” அவள் தேம்பத் தொடங்க, “அப்படிலாம் இல்லடா…” என்று தட்டி கொடுத்தார்.

Advertisement