Advertisement

 

 

வானம் – 8

டுத்து மணமக்கள் விருந்துக்கு ஒவ்வொரு சொந்தமும் அழைக்க எல்லா இடத்துக்கும் அம்மா, அக்கா, தம்பி சகிதம் சென்று வந்தனர். ஒரு மாதம் முடிந்து நந்தினியின் பிரசவத்திற்காய் மருத்துவமனையில் சேர்த்திருக்க கையில் பணம் இல்லாமல் பரத் திணறினான். கவலையுடன் யோசனை முகமாய் அமர்ந்திருந்த கணவனின் அருகில் வந்தவள் அவனை அழைத்தாள்.

 

“பரத்….. என்ன யோசிக்கறிங்க….” கேட்ட மனைவியிடம் திரும்பியவன்,

 

“நந்தினி பிரசவத்துக்கு பிஎப் எடுக்க டிரை பண்ணேன்…. அது அடுத்த மாசம் தான் கிடைக்கும் போலருக்கு…. இப்ப செலவுக்கு என்ன பண்ணறதுன்னு தெரியலை…..” கவலையாய் சொன்னவனை நோக்கி ஆறுதலாய் சிரித்தவள்,

 

“அவ்ளோதானே….. என் நகை எல்லாம் எதுக்கு இருக்கு…. இதுக்குப் போயி இவ்ளோ யோசிச்சிட்டு இருக்கீங்க…. அவசரத்துக்கு உதவாத நகையை அலமாரில பூட்டி வச்சு என்ன லாபம்…..” என்றவள் அவளது ஆரம் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.

 

அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன், “தேங்க்ஸ்டி அனுக்குட்டி…..” என்று முத்தமிட்டு அதை வாங்கிச் செல்ல கணவனின் வருத்தம் நீங்கிய சந்தோஷத்தில் அவள் புன்னகையுடன் நின்றாள். நந்தினியும் நல்லபடியாய் ஒரு ஆண்குழந்தையை பிரசவித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

 

அத்தை சமையல் வேலை எல்லாம் பார்த்துக் கொண்டாலும் மேல் வேலையுடன் வீட்டுக்கு குழந்தையைக் காண வரும் உறவினர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் சேர்ந்து கொள்ள அனுவுக்கு வேலை சரியாய் இருந்தது.

 

நந்தினியின் கணவன் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவுக்கு வருவதாக சொல்லிவிட்டார். நந்தினிக்கு வேண்டிய பத்திய மருந்துகள் எல்லாம் பரத்தின் பாட்டி லிஸ்ட் போட்டு கொடுக்க பரத் எல்லாவற்றையும் வாங்கி வந்து கொடுத்தான். அன்று மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பியவன் மிகவும் உற்சாகமாய் இருந்தான்.

 

அறைக்குள் துணி மடித்துக் கொண்டிருந்த அனுவைத் தேடிச் சென்றவன், பின்னிலிருந்து அணைத்துக் கொண்டான்.

 

“என்ன பரத்…. கதவு திறந்திருக்கு…. யாராவது வரப் போறாங்க….” சொல்லும்போதே அவனது மாமா அங்கே வரவும் சட்டென்று விலகினர்.

 

“அய்யய்யோ… உங்க சொர்கத்துல கட்டெறும்பா நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…… நான் கிளம்பிடறேன் பா….” என்றவர் ஓடியே விட்டார்.

 

பரத் அசடு வழிய நின்று கொண்டிருக்க, “பார்த்திங்களா….. இதுக்கு தான் சொன்னேன்…..” என்று முறைத்தாள் அனு.

 

“ஹூம் அதெல்லாம் பரவால்லை…. என் பொண்டாட்டி… நான் அணைக்கறேன்…. அதில் அவருக்கு என்ன பிரச்சனை… அவர் ஒண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டார்….. அவரும் ரெண்டு புள்ளைங்களை பெத்தவர் தானே….” என்று சொல்லிக் கொண்டே கதவை சாத்தியவன் மீண்டும் அவளை அணைக்க,

 

“அச்சோ…. என்ன பரத்… வந்ததும் இப்படிப் பண்ணிட்டு இருக்கீங்க….” என்றவள் அவனை விலக்க முயல, அவனோ இறுக்கினான்.

 

“அனுக்குட்டி… உன்கிட்டே ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும்…. காதுக்குள் கிசுகிசுக்க அவளுக்கு கூசியது. நெளிந்து கொண்டே நின்றவளிடம், “நாம ஹனிமூன் போகப் போறோம்……” என்றான் அவன்.

 

“என்னது ஹனிமூனா….” அவள் ஆச்சர்யத்துடன் கேட்க,

 

“ஆமாண்டி செல்லம்….. நாம, அப்புறம் மது, சுபாஷ் பாமிலி சேர்ந்து போகலாம்னு ஒரு பிளான் போட்டிருக்கோம்….” என்றான் அவன். அவனுடன் பணிபுரியும் அவர்களும் இவர்களைப் போல புதிதாய் கல்யாணமான தம்பதிகள்.

 

“நந்தினி அக்காவுக்கு இப்பதான் பிரசவம் ஆகியிருக்கு…. நாம எப்படிப் போக முடியும்….”

 

“அவளுக்கு தேவையானது எல்லாம் பண்ணிக் கொடுத்திட்டு தானே போறோம்….”

 

“இருந்தாலும் அவங்க இல்லாம….” அவள் தயங்கினாள்.

 

“ஏய் லூசு….. எல்லாத்தையுமா கூட்டிட்டுப் போனா அதுக்குப் பேரு டூரு…. புதுசா கல்யாணமானவங்க போகும்போது அவங்களை எப்படி கூட்ட முடியும்…. அவனவன் கல்யாணத்துக்கு அடுத்தநாளே ஹனிமூன் கிளம்பிடறான்….. நாம இப்பவே லேட்தான்…..”

 

“இருந்தாலும்…. அத்தை என்ன நினைப்பாங்க…..”

 

“ஒரு இருந்தாலும் இல்லை…… அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…..” என்றான் அவன். கணவனுடன் தனியே செல்வது பிடித்திருந்தாலும் இப்போது போனால் எதுவும் சொல்வார்களோ என்ற தயக்கமும் இருந்தது.

 

பரத் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை… வீட்டில் எல்லாக் கடமைகளையும் பொறுப்போடு செய்பவனுக்கு இது ஒரு ரிலாக்ஸாகவே நினைப்பார்கள் என நினைத்தான். அன்னையிடம் இப்படி செல்வதாகக் கூறியவன் அனுவிடம் தயாராய் இருக்கும்படி கூறினான்.

 

அவளும் வேண்டியதை எல்லாம் பாக் செய்து எடுத்து வைக்க இருவரும் கிளம்பினர். மகன் பேருக்குக் கூட தங்களை அழைக்காமல் புது மனைவியுடன் ஜோடியாய் கிளம்பிவிட்டானே என்று அவரது மனது பொருமியது.

நந்தினியும், “இப்ப இவனுக்கு என்ன பொண்டாட்டியோட ஊர் சுத்தப் போக அவசரம்….. நான் இங்கே பிரசவம் முடிஞ்சு படுத்திருக்கேன்…. ஏதாவது வேணும்னா என்ன பண்ணறது….. கல்யாணம் ஆனதுமே மாறிடறானுங்க…. எப்பவாச்சும் நம்மளை கூட்டிட்டுப் போயிருக்கானா…..” என்று அன்னையிடம் கூற அவரது கடுப்பு அதிகமானது.

 

பரத்தின் தம்பிதான் அவர்களை சமாதானப் படுத்த முயன்றான்.

 

“புதுசா கல்யாணமாகி அவங்க போகும்போது எல்லாரையும் எப்படி கூட்டிட்டு போவாங்க…. இங்கே தேவையானது எல்லாம் செய்து கொடுத்துட்டு தானே அண்ணனும், அண்ணியும் கிளம்பினாங்க…. பின்னே என்ன……” என்று இவர்களுக்கு ஆதரவாய் பேசினான்.

 

வீட்டுக்கவலை எல்லாம் மறந்து மூன்று நாட்கள் சந்தோஷமாய் ஊட்டி, கொடைக்கானலில் உற்சாகமாய் கழித்துவிட்டு மனம் நிறைய சந்தோஷத்துடன் டிராவலரில் இரவு கிளம்பியவர்கள் அதிகாலையில் வீட்டை நெருங்கினர்.

 

அதுவரை உள்ள சந்தோசம் வடிந்து அனுவின் மனதில் ஏனோ சிறு கலக்கம் வந்து உட்கார்ந்து கொண்டது. அன்று அவளது கல்யாணத்திற்குப் பிறகு வந்த முதல் பிறந்தநாள். அதிகாலை இரண்டு மணிக்கு அவர்கள் வீட்டுக் கதவைத் தட்ட பரத்தின் அன்னை அமிர்தவள்ளி வந்து திறந்தார்.

அவரிடம் புன்னகைத்தவளைக் கண்டு கொள்ளாமல் திரும்ப அறைக்கு சென்றவரின் கடுமையான முகம் கண்டு அதிர்ந்து நின்றாள்.

 

அவளுக்குப் பின்னில் லக்கேஜை எடுத்து வந்த பரத், “அம்மா எங்கே அனு…..” என்று கேட்க,

 

“கதவைத் திறந்திட்டு ரூமுக்குப் போயிட்டாங்க…..” என்றாள் வருத்தம் நிறைந்த குரலில்.

 

“சரி…. தூங்கட்டும்…. வா…… நாமளும் கொஞ்சம் தூங்கலாம்…. ரொம்ப டயர்டா இருக்கு…….” என்றவன் அவர்களின் அறைக்கு செல்ல அனு அத்தையின் செயலை யோசித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

 

காலையில் அறைக்கதவு பலமாய் தட்டப்படும் ஓசைகேட்டு கண்ணைத் திறந்தவள் கடிகாரத்தில் கண்ணைப் பதிக்க அது ஏழு மணி என்றது.

 

தன் மீதிருந்த கணவனின் கையை மாற்றியவள் அவசரமாய் எழுந்து கலைந்திருந்த உடையை சரியாக்கி பரத்தை அழைத்து சொல்லிவிட்டு கதவைத் திறக்க வெளியே அவள் செல்ல நாத்தனார் நந்தினி கடுகடு முகத்துடன் நின்று கொண்டிருக்க அங்கிருந்த ஹால் சோபாவில் அத்தை முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

 

“சாரி நந்தினிக்கா…. அலுப்புல தெரியாம தூங்கிட்டேன்…..” என்றவள் உதிர்த்த சிரிப்பு அவளை அடையவே இல்லை.

“ஊரெல்லாம் சுத்தி ஆட்டம் போட்டுட்டு வந்தா அலுப்பு இல்லாமலா இருக்கும்…..” சூடாய் வந்த அவளது வார்த்தை கண்ணை மூடி வெறுமனே படுத்திருந்த பரத்தின் காதிலும் விழ அவன் எழுந்து வந்தான்.

 

அனு என்ன சொல்வதென்று தெரியாமல் விக்கித்து நிற்க, “என்னாச்சு…. எதுக்கு இப்ப காலங்கார்த்தால கத்திட்டு இருக்கே……” என்றான் பரத் அக்காவிடம்.

 

“ஓ… நான் கத்தறேனா…. கல்யாணமாகி கொஞ்ச நாள் கூட ஆகலை… அதுக்குள்ள பொண்டாட்டியை கூட்டிட்டு ஊர் சுத்தக் கிளம்பியாச்சு…. இங்கே ரெண்டுபேரும் ஒண்ணா கொஞ்சிட்டுதானே இருக்கீங்க…… அப்புறம் அங்கே வேற போயி கொஞ்சிக்கணுமா……” அதிர்ச்சியுடன் அனு கேட்டிருக்க பரத்துக்கு கோபம் தலைக்கேறியது.

 

“ஏன்…. நாங்க போனதுல உனக்கு என்ன பிரச்னை…. உனக்கு இங்க வேண்டியதெல்லாம் பண்ணிட்டு தானே கிளம்பினோம்…..” முகம் சிவக்க கேட்டான்.

 

“ஆமா செஞ்சு கிழிச்சே…. அப்படி என்ன அவசரம்…. இப்ப போறதுக்கு….. இப்படிதான் அந்த அரவிந்தனும் என் பொண்டாட்டி அம்புஜம் போல உண்டான்னு அவளைக் கூட்டிட்டு உலகமெல்லாம் சுத்தினான்…. அப்புறம் அவன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு எவன் எவனோ சுத்த ஆரம்பிச்சான்…. நீயும் அந்த மாதிரிதான் ஆயிடுவ போலருக்கு……” அந்தத் தெருவில் மோசமான தம்பதிகளை ஒப்பிட்டுக் கூறவும் பரத்தின் கோபம் எல்லை கடந்தது. பரத்தின் தம்பி முந்தினநாள் இரவு ஒரு வேலையாக வெளியூர் சென்றிருந்ததால் அவனும் வீட்டில் இல்லை.

 

“என்னடி சொல்லறே…. யாரை யாரோட சொல்லறே….. உன் புருஷனோட நீ எங்கெல்லாம் போயிருக்கே…… உனக்கு வேண்டியதை பார்த்துப் பண்ணிட்டு நாங்க கிளம்பினது உனக்கு உறுத்துதா…. கண்டவனோட எங்களை சேர்த்துப் பேசறே…..” அமைதியாய் நின்ற அனுவின் கண்கள் குளமாகின. அவளுக்கும் அந்த அரவிந்தனைப் பற்றி தெரியும்.

 

“ஏன்….. அவ கேட்டதுல என்ன தப்பு…. நீ ரொம்ப முந்தினவனா……. கல்யாணமான அடுத்த நாளே கோவிலுக்குப் போகும்போது என்கிட்டே சொல்லாமப் போனவன் தானே….. பொண்டாட்டி வந்ததும் அம்மா, அக்கால்லாம் வேண்டாமப் போயிடுச்சு…. இவளும் அம்புஜம் மாதிரி கைகாரி தான்…..” என்று அனுவை சொல்லவும் அவளது கண்ணீர் கன்னத்தை நனைத்தது.

 

“அதானே…. ஊமை மாதிரி இருந்துகிட்டு இவனை எப்படி மாத்திட்டா…..” நந்தினி கூறவும்,

 

“ஓங்கி அறைஞ்சேன்னா…. யாரை யாரோட சொல்லுறே….” கையைத் தூக்கியவன் கட்டுப் படுத்திக் கொண்டு,

 

“ச்சே….. நன்றி இல்லாத ஜென்மங்க….. உங்களுக்கு போயி எல்லாம் பார்த்துப் பண்ணினேனே…. எத்தனை வருஷமா இந்தக் குடும்பத்துக்காக நிக்காம ஓடிட்டு இருக்கேன்… எல்லாம் முடிச்சுட்டு மூணு நாள் டூர் போயிட்டு வந்தது உங்களுக்குப் பொறுக்கலையா…..” என்றவன், கதவை அறைந்து சாத்த, சத்தம் கேட்டு மாமா வீட்டில் இருந்து வந்தனர்.

 

“அனு…. கிளம்பு…. வேண்டியதைப் பெட்டியில் எடுத்துக்க…. நாம வீட்டை விட்டுப் போறோம்….” என்றான்.

 

பிறந்த நாளன்று வாழ்த்த வேண்டியவர்கள் வசைபாட நொந்து போனாள் அனு. இவர்கள் இப்படியெல்லாம் பேசுவார்களா என்று நம்ப முடியாமல் தன் கற்பனையில் வரைந்து வைத்த ஓவியத்தின் பிம்பம் மாறிப் போன அதிர்ச்சியில் நின்றிருக்க பரத், “ச்சே… எவ்ளோ கேவலமா சொல்லிட்டாங்க…. இனி இங்க நாம எதுக்கு… கிளம்பு….” என்று கோபத்தில் பரபரத்தான்.

 

“இல்லங்க… கொஞ்சம் அமைதியாருங்க… இப்ப நாம கிளம்பினா அதுக்கும் கல்யாணமானதும் புருஷனைக் கூட்டிட்டு கிளம்பிட்டேன்னு தப்பா பேசுவாங்க…. நாம போக வேண்டாம்….” என்றவளை முறைத்தான்.

 

“இதுக்கு மேல அமைதியா இருந்து என்ன சாதிக்கப் போறோம்…… என்னைப் பத்தி எல்லாருக்கும் தெரியும்…. என்ன பேசினாலும் நான் பார்த்துக்கறேன்…. கிளம்பு….”

 

என்று நின்றவனை, “வேண்டாம் பரத், நான் வந்து உங்க குடும்பத்தைப் பிரிச்சிட்டேன்னு சொல்லிடுவாங்க….” அவள் கண்ணீருடன் கூறவும் யோசித்தான். 

 

ஒத்தை சொல்லைக் கூட தாங்காத

என் மனம் உனக்காக எல்லாம் விட்டுக்

கொடுக்கிறதென்றால் – எனக்கு

உன்னைவிட உயர்வாய் உலகத்தில்

எதுவுமில்லை என்னவனே…..

 

 

 

Advertisement