Advertisement

 

வானம் – 6

 

டுத்து வந்த நாட்கள் கனவோடும் கற்பனையோடும் நகர கல்யாண நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அனுபமா. வழக்கம் போல் தொலைபேசி உரையாடலும் கடிதமும் அவர்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தன.

 

எல்லாருக்கும் புதிய ஆடைகள், நகைகள் வாங்குவது பத்திரிகை வைப்பது என்று பெரியவர்கள் பரபரப்பாய் இருக்க மனம் முழுதும் கல்யாணக் கனவுகளை சுமந்திருந்தாலும் கல்யாண செலவுக்காய் கஷ்டப்பட்ட தந்தைக்கு வேண்டி தன் தோழியின் வீட்டில் பணம் வாங்கிக் கொடுத்தாள் அனு. கல்யாணம் முடிந்ததும் கொடுப்பதாய் கூறி அவரும் வாங்கிக் கொண்டார்.

 

அங்கு பரத்தோ காலில் சக்கரம் கட்டாத குறையாய் பறந்து கொண்டிருந்தான். கல்யாண வேலை எல்லாவற்றையும் அவனே பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. உறவினர்களிடம் சில பொறுப்புகளைக் கொடுத்திருந்தாலும் அனைவரும் அதில் ஆதாயம் பார்க்கவே நினைத்தனர்.

 

வீட்டுக்கு புதுபெயின்ட் அடித்து பளபளவென்று மின்னியது. சித்தியின் மகள் கல்யாணத்திற்காய் பரத்திடம் வாங்கியிருந்த பணத்திற்கு இவன் சார்பாய் மணமகளுக்கான தாலிச் சங்கிலியை அவர்கள் கொடுப்பதாய் கூறியிருந்தனர்.

 

சென்னையில் இருந்து ஊருக்கு சொந்தங்களை அழைத்து வர பேருந்து, அடுத்தநாள் அங்கே நடக்கும் வரவேற்புக்கான ஏற்பாடுகள் என்று பரத் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான். கல்யாண செலவுகளுக்கு பணம் போதாமல் வழக்கம் போல கடன் வாங்கியிருந்தான். கல்யாண நாளும் நெருங்கியது.

 

அவனது அக்கா நந்தினி நிறைமாத கர்ப்பிணியாய் மும்பையில் இருந்து கணவனுடன் வீட்டுக்கு வந்தாள். உறவினர்களின் வருகையால் கல்யாணவீடு பரபரப்பாக இருந்தது. முன்தினம் மாலையில் அனைவரும் ஊருக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். மெதுவாய் பம்மிக் கொண்டே வந்து சேர்ந்தனர் பரத்தின் சித்தியும் சித்தப்பாவும். அவர்களின் முகமே எதோ சரியில்லை என்பதை உணர்த்தியது.

 

“வாங்க சித்தி….. தாலிச் செயின் வாங்கிட்டிங்களா…. எங்க காட்டுங்க…. டிஸைன் பார்ப்போம்….” என்றாள் பரத்தின் சகோதரி நந்தினி.

 

“அதுவந்து…. பணம் கொஞ்சம் சரியாகலை…. தாலிச் செயினை நீயே வாங்கிடு பரத்…. நாங்க அப்புறம் அதுக்கான பணத்தைக் கொடுத்திடறோம்….” என்று சற்றும் கூச்சமே இல்லாமல் கூறினாள் அவன் சித்தி. அதைக் கேட்டதும் பரத்தின் ரத்தஓட்டம் தாறுமாறாய் எகிறியது.

 

“சித்தி…. என்ன சொல்லறீங்க…. நைட் ஊருக்குக் கிளம்பனும்…. பணம் ரெடியாகலைன்னு இப்ப வந்து சாவதானமா சொல்லறீங்க…. நீங்கல்லாம் மனுஷங்க தானா…. கொஞ்சமாவது அறிவு வேண்டாம்…. இப்ப நான் என்ன பண்ணுவேன்……” கோபத்தில் வார்த்தைகள் பட்டாசாய் சிதறின பரத்துக்கு.

 

“என்ன பண்ணுறது பரத்…. பணம் கிடைச்சிரும்னு நினைச்சோம்…. கிடைக்கலை…. நீ ஏதாவது பண்ணு….” என்றார் அவர். அதற்குள் பரத்தின் அன்னையும் அங்கு வந்து அவனை சமாதானப்படுத்த அவரிடமும் கத்தினான்.

 

“நாளைக்குக் கல்யாணத்தை வச்சிட்டு இப்ப வந்து தாலிச்செயின் வாங்கலைன்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன்…… எல்லாரும் வரத் தொடங்கியாச்சு…. கடை வேற அடைக்கத் தொடங்கி இருப்பாங்க…..” என்றவன் கோபத்திலும் கவலையிலும் நிற்க அவனது நண்பன் அருகில் வந்தான்.

 

“பரத்…… எங்க கடையில் இருந்து நான் செயின் எடுத்துத் தரேன்…. நீ கல்யாணம் முடிஞ்சு பணம் கொடுத்தாப் போதும்….” என்றவனை கடவுளாய் பார்த்தான் அவன்.

 

அவன் நண்பன் ஒரு சின்ன நகைக்கடைக்கு மேனேஜராய் இருந்தான். அவன் பொறுப்பில் இருந்த கடையில் இருந்து செயினை எடுத்துத் தருவதாய் கூறியதும் சற்று நிம்மதியானான்.

 

“வருண் ரொம்ப நன்றிடா…..” என்று அவன் கையைப் பற்றிக் கொண்டவனின் தோளில் ஆதரவாய்த் தட்டியவன்,

 

“சரி.. நீ வரியா… நானே எடுத்திட்டு வந்திடவா…..” என்றான்.

 

“நீயே உனக்குப் பிடிச்ச டிசைன்ல அஞ்சு பவனுக்கு செயின் எடுத்திட்டு வந்திடு வருண்….. நல்ல உறுதியான செயினா இருந்தாப் போதும்…. இங்கே எல்லாரும் வரத் தொடங்கிட்டாங்க…. நான் இப்போ வந்தா சரியாகாது….” என்ற பரத்திடம், அவன் பார்த்துக் கொள்ளுவதாய் சொல்லிக் கிளம்பினான்.

 

அவன் சென்று பேருந்து கிளம்பும் நேரத்திற்கு முன்னால் ஒரு செயினைக் கொண்டு வந்து நீட்டி, பிடித்திருக்கிறதா என்று கேட்க, நண்பனை அணைத்துக் கொண்டான் பரத்.

 

“ரொம்ப தேங்க்ஸ் டா…. எத்தனை சொந்தம் இருந்தாலும் நட்புதான் பெருசுன்னு நிரூபிச்சுட்டே….” என்றான். வீட்டில் சமையல், பந்தல், லைட்டிங்ஸ் என்று ஒவ்வொரு ஏற்பாடுகளையும் அவனது நண்பர்களே ஏற்றுக் கொண்டிருந்தனர்.

 

கல்யாணம் முடிந்து மும்பை சென்ற மகள் இப்போதுதான் ஊருக்கு வந்திருப்பதால் அவளை தாங்கிக் கொண்டிருந்தார் அமிர்தவல்லி. நந்தினியின் மாப்பிள்ளைக்கும் குடிப்பழக்கம் இருந்ததால் நந்தினி  அவரை அதட்டி மிரட்டிக் கொண்டிருந்தாள்.

 

இரவு உணவு முடிந்து அனைவரும் பேருந்தில் இடம் பிடிக்க பெரியவர்களும் பெண்களும் பேருந்தில் முன்புறம் அமர ஆண்கள் பின்புறம் அமர்ந்தனர்.

 

அப்படியே சற்று உற்சாகபானத்தை உள்ளுக்குள் தள்ளிக் கொண்டு உற்சாகமாய் ஆட்டம் பாட்டத்தோடு பேருந்திலும், காரிலுமாய் கிளம்பினர். இரவு முழுதும் உறங்காமல் ஒரு சுற்றுலா போல கும்மாளமிட்டு அதிகாலையில் கல்யாண மண்டபத்தை அடைந்தனர்.

 

இரவு உறங்காமலும் நண்பர்களுடன் கும்மாளமிட்டதிலும் பரத்தின் கண்களும் சிவந்து சோர்ந்திருந்தது. கல்யாண மண்டபத்தை அடைந்ததும் அவனுக்கு உடனே அனுவைக் காண மனம் துடிக்க, மெதுவாய் மண்டபத்தை சுற்றிப் பார்ப்பதுபோல மணமகள் அறையைத் தேடி வந்தான்.

 

அனு அப்போதுதான் குளித்து புத்தம் புது மலராய் ஒரு சாதாரண சேலையில் அமர்ந்திருந்தாள். முகூர்த்தத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருந்ததால் புறப்படத் தொடங்கி இருக்கவில்லை. அறையின் ஜன்னலில் நிழலாடவும் மெல்ல நிமிர்ந்தவள் பரத்தைக் கண்டதும் நாணத்தில் எழுந்து நின்றாள்.

 

அறையில் அவளுக்கு துணையிருந்த அத்தை மகள் தீபா பரத்தைக் கண்டதும் சிரித்தாள்.

 

“என்ன பரத்…. அதுக்குள்ளே அனுவைப் பாக்க அவசரமா….” கேட்கவும் சிரித்தவன், “என்ன இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி திருட்டுத் தனமா பார்க்கற போல வராதுல்ல……” சொல்லிக் கொண்டே ஆவலோடு அனுவைப் பார்க்க அவளோ அவனைக் காணாமல் நிலம் நோக்கி வெட்கத்தோடு நின்றிருந்தாள்.

 

அவளது எத்தனை வருடக் காத்திருப்பும் தவிப்பும்  இன்னும் சற்று நேரத்தில் நிஜமாகப் போகிறது…. வேகமாய் எழுந்து அவளது சூட்கேசைத் திறந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்தாள்.

 

“தீபா… இது அவருக்கு என் கல்யாணப் பரிசு….. கொடு…” என்று கூற அதை வாங்கிய தீபா, “ஆஹா…. கல்யாணத்துக்கு முன்னாடியே புருஷனுக்கு புது வாட்ச் பரிசு போலருக்கு…. சிரித்துக் கொண்டே அவனிடம் நீட்ட வாங்கிக் கொண்டான்.

 

“என்ன பரத்… நீங்க எதுவும் பரிசு கொண்டு வரலயா….”

 

“அவளுக்கு நானே பெரிய பரிசுதானே….. அதான் வேற பரிசு கொண்டு வரலை….” என்று சமாளித்தான்.

 

“சரி… நான் கீழே போகட்டுமா…. எல்லாரும் என்னைத் தேடுவாங்க…..” என்றவன், “அனு…..” ஒரு குறும்புப் புன்னகையுடன் தலையாட்டி கடந்துவிட்டான்.

 

அந்தக் குரலும் அவன் கண்ணில் வழிந்த காதலும் அனுவின் மனதில் சந்தோஷத்தையும் வெட்கத்தையும் அதிகரிக்க என்னெல்லாமோ எதிர்பார்த்து ஒருவித பயம் கலந்த படபடப்பு அவளுக்குள் தோன்றியது.

 

அதற்குப் பிறகு அனைவரும் குளித்து புறப்பட்டு கல்யாணத்திற்கு தயாராகினர். அழகான இளம் ஊதாப் பட்டில் தலை நிறையப் பூவுடன் மிதமான ஒப்பனையில் தங்க நகையும் புன்னகையும் போட்டியிட்டு ஜொலிக்க தேவதையாய் புறப்பட்டு நின்றாள் அனுபமா.

 

மனம் நிறைந்தவனே மணாளனாய்…

கனவில் வந்த காதலனே காவலனாய்….

நிழலாய் தொடரப் போகும் நிஜமாய்….

வாழ்வின் தொடக்க நாயகன் வந்தான்…

 

பட்டுவேஷ்டி சரசரக்க முகத்தில் நிறைந்த புன்னகையோடு கம்பீரமாய் வந்தவன் அருகில் நின்றவளைக் காதலோடு நோக்கினான். அந்தப் பார்வை ஒன்றே அவள் ஆயுளுக்கும் போதுமானதாய் நெகிழ்ந்து நாணினாள் அவள்.

 

அய்யர் சம்பிரதாயமாய் மந்திரம் சொல்லி முடித்து கெட்டிமேளம் முழங்க அவளது சங்குக் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து தனது மனையாளாய் ஏற்றுக் கொண்டான் பரத். குறுகுறுவென்ற அவனது பார்வை வீச்சைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நாணி தலை குனிந்தாள் அனு. ஐயர் நீட்டிய குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில் வைத்துவிட கண்மூடி அந்த நிமிடத்தை மனதில் அனுபவித்தாள்.

 

கல்யாணம் நல்லபடியாய் நடந்தேற அடுத்து மணமக்களை வாழ்த்துவதும் விதவிதமாய் புகைப்படம் எடுப்பதுமாய் இருந்தனர். வீடியோகிராபர் அவர்களை வீடியோ எடுக்க பரத்தின் நண்பர்கள் சுற்றிலும் நின்று கொண்டு கிண்டலும் கேலியுமாய் அந்த மணமேடையை ரணகளமாக்கிக் கொண்டிருந்தனர். ஊர் விட்டு ஊர் வந்ததில் கட்டுப்பாடில்லாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் கூச்சலும் குரலும் மண்டபத்தில் இருந்த பெரியவர்களை முகம் சுளிக்க வைத்தது. அவர்கள் செய்வது எதுவும் அனுவின் தந்தைக்கும் பிடிக்காவிட்டாலும் ஒன்றும் சொல்லாமல் பொறுமையாய் இருந்தார்.

 

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

 

பரத்தின் நண்பன் ஒருவன் நன்றாகக் குடித்திருக்க மணமக்களின் அருகில் நின்று கொண்டிருந்தவன், மேடையிலேயே வாந்தி எடுத்துவிட்டான். அதைக் கண்டதும் மற்றவர்கள் அருவருத்து முகத்தை சுளிக்க வேகமாய் மற்ற நண்பர்கள் மணமக்களை அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டு பணியாளைக் கூட்டி வந்து அங்கே சுத்தம் செய்து விட்டனர்.

 

அனுவின் தந்தை கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிற்க, அவள் சித்தி தான் சமாதானப் படுத்தினார்.

 

மணமக்களை அங்கே நிற்க விடமால் நந்தினி டைனிங் ஹாலுக்கு அழைத்துச் செல்ல மனதில் விழுந்த முதல் நெருடலின் பயத்தோடு பரத்துடன் சென்றாள் அனு. அதுவரை இருந்த எதிர்பார்ப்பின் சந்தோசம் மாறி புதியதாய் ஒரு அச்சம் மனதை அலட்டத் தொடங்கியது.

 

“இவன் நண்பர்கள் ஏன் வந்த இடத்தில் அதுவும் கல்யாண மண்டபத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்…. பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்…. ஐயோ…. அப்பா…. அவர் மனது எத்தனை வலித்திருக்கும்…. வீட்டில் நடக்கும் முதல் சுபகாரியத்தை எத்தனை சந்தோஷமாய் செய்ய நினைத்தார். அவருக்கு இந்த மாதிரி விஷயங்களை எளிதாய் எடுத்துக் கொள்ள முடியாதே….” தந்தையை நினைத்து மனம் கலங்கினாள்.

 

அதற்குப் பிறகு எல்லா விஷயங்களும் சம்பிரதாயமாய் நடந்தது. பேருக்கு உணவு உண்டு மணமகன் வீட்டாரோடு கிளம்பி விடை பெறவும் சித்தி அவளைக் கட்டிக் கொண்டு கண்கலங்கினார்.

 

காரில் பரத்தின் அருகில் அனு அமர்ந்திருக்க நந்தினி அவளுக்கு அருகில் அமர்ந்தாள். டிரைவர் அருகில் நந்தினியின் கணவனும் அமர பரத்தின் வீடு நோக்கிப் பயணமானது அவளது வாழ்க்கை. முதல் பயணமே அவர்களுக்கான தனிமையோடு இனிமை சேர்க்கவில்லை. பரத்தின் அருகாமையும், யாருமறியாமல் அவன் செய்த சில்மிஷங்களும் அவளை திக்குமுக்காட வைக்க மற்றவர் முன்னில் மறைத்துவைக்க சிரமப்பட்டாள்.

 

நந்தினி அலுப்பில் உறங்கத் தொடங்கியிருக்க அவள் கணவனும் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து அப்படியே உறங்கிப் போனார்.

 

அனுவுக்கு அவ்வப்போது மண்டபத்தில் நடந்த விஷயம் மனதில் தோன்றி அலட்டினாலும் பரத்தின் அருகாமை இதமாய் இருப்பதையும் உணர்ந்தாள். அவனது மூச்சுக்காற்று கழுத்தை உரச, விரல்களோ இடுப்பில் சில்மிஷம் செய்து கொண்டிருந்தன. இன்ப அவஸ்தை உடலெங்கும் பரவ தனிமைக்காய் மனம் ஏங்கியது.

 

நீண்ட பயணத்திற்குப் பின் பரத்தின் வீடு வந்து சேர்ந்தனர். வாசலில் திருஷ்டி கழித்து மணமக்களை உள்ளே அழைத்துச் சென்று சம்பிரதாயமாய் பாலும் பழமும் கொடுத்து மாலை சிற்றுண்டி ஏற்பாடுகளைப் பார்க்க சென்றனர்.

 

பரத்தை அவனது நண்பர்கள் அழைத்துச் செல்ல பட்டுச்சேலையை மாற்றி குளித்து சாதாரணமாய் ஒரு புடவை அணிந்து கொண்டாள் அனு.

 

பரத்தின் அத்தை அவளிடம் விளக்கேற்றும்படி கூற எண்ணை பாட்டிலை எடுத்தவளின் கையிலிருந்து பாட்டில் நழுவி நிலத்தில் விழுந்து திறந்து கொள்ள எண்ணை வேகமாய் வெளியேறி பரவியது. முதன்முதலில் விளக்கேற்றப் போகும்போது இப்படி நடந்த அதிர்ச்சியில் அவள் உறைந்து நிற்க, பரத்தின் அன்னை முகமோ கடுகடுவென்று இருந்தது.

 

அதைக் கண்டதும் அவளது அச்சம் அதிகமாக பரத்தின் அத்தை ஒரு துணியுடன் வேகமாய் வந்தார் எண்ணையைத் துடைக்க.

 

“என்ன அனு…. முதல் நாளே இப்படி எண்ணையைக் கொட்டிட்ட…. சரி பரவாயில்லை விடு…. மூடி சரியா மூடலை போலிருக்கு…. நீ ஒண்ணும் வருத்தப் படாதே…..” என்றார் அவள் காதில் கிசுகிசுப்புடன்.

 

அவள் அப்படியே அதிர்ச்சியுடன் நிற்க, “கவனமா செய் அனு….” என்று சொல்லிவிட்டு அமிர்தவல்லி அங்கிருந்து சென்றுவிட்டார். மனதில் பயத்துடனே குத்துவிளக்கை ஏற்றியவள் கடவுளை மனமார வேண்டிக் கொண்டாள்.

 

ஆயிரம் ஆசைகளை

அகத்தில் சுமந்து

அழகாய்த் திரியிட்டு

அகல்விளக்கேற்றுகிறாள்….

அகமும், கிரகமும் குளிர்ந்திட

அருள் புரிவாய் தாயே….

Advertisement