Advertisement

வானம் – 5

 

டிதத்தைப் படித்து முடித்ததும் கண்ணீரில் நிறைந்த கண்கள், “பரத்தோட முன்கோபத்தைப் பத்தித் தெரிஞ்சும் அவசரப் பட்டுட்டியே அனு….” என்று தன்னையே சாட நொந்து கொண்டாள்.

 

அந்த கடிதம் முழுதும் அவன் கோபத்தைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளால் நிறைந்திருந்தது. எப்போதும் என் செல்ல அனுக்குட்டிக்கு என்று அன்பாய்த் தொடங்கும் அழைப்பு காணாமல் போயிருந்தது.

 

அனு,

 

“என்ன நினைத்து இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பியிருக்கிறாய்….. கையெழுத்து மாறினால் இதை எழுதியது நீயென்று தெரியாமல் போய்விடும் என நினைத்தாயா…… உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் நேரடியாய் சொல்லிவிடலாமே…. அதை விடுத்து வேறு யாருக்கோ உன்னை மிகவும் பிடித்திருப்பதாகக் கூறி என்னிடம் விட்டுக் கொடுக்குமாறு கேட்க வேண்டிய அவசியம் என்ன….”

 

“இப்போது உனக்கு என்னைப் பிடிக்காமல் போக நிறைய காரணம் இருக்கலாம்….. நான் தண்ணி அடிக்கறேன்…. ஊர்  முழுக்க கடன் வாங்கி பெரிய கடன்காரனும் ஆகிவிட்டேன்…. இப்போதும் இந்தக் குடும்ப சுமை முழுதும் என் தலையில் தான்…. உன் அழகுக்கு உனக்கு வேறு நல்ல மாப்பிள்ளை கிடைக்கலாம்….. அதனால் தானே இப்போது என்னைப் பிடிக்காமல் போயிருக்கிறது… இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் நானே உன்னை விட்டு விலகிவிட வேண்டுமென்று நினைத்து தானே இதை எழுதி இருக்கிறாய்….. நான் இனி உனக்கு கடிதம் எழுதவோ, தொலைபேசியில் அழைத்தோ தொந்தரவு செய்ய மாட்டேன்….. உனக்கு யாரைப் பிடிக்கிறதோ அவரையே கல்யாணம் செய்து கொள்…. அதை விடுத்து இந்த மாதிரி நாடகத்தனமான கடிதப் பரிமாற்றம் அவசியமில்லை…. நீ இல்லாமல் நானொன்றும் அழிந்து போய்விட மாட்டேன்…. உன் முன்னில் கம்பீரமாய் வேறு ஒரு பொண்ணை மணந்து சந்தோஷமாய் வாழ்ந்து காட்டுவேன்….. இனி நீ உன் வழியில்… நான் என் வழியில்……”

 

“இத்துடன் எல்லாவற்றுக்கும் முற்றும் போட்டுக் கொள்கிறேன்……”

 

இப்படிக்கு,

உனக்கு சொந்தமில்லாத பரத்.

 

மீண்டும் அந்த வரிகளைப் படித்தவளுக்கு மனதுக்குள் வார்த்தைகள் ஈட்டியாய் குத்த அழுகை பீறிட்டது. 

“எனக்கு சொந்தமில்லாத பரத்தாமே…. ராஸ்கல்…. எத்தனை ஈசியாய் சொல்லிவிட்டான்…… நான் கிடைக்காவிட்டால் வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பானாம்… பாவி….. என்ன திமிர் இருந்தால் இப்படி எல்லாம் எழுதியிருப்பான்….. நான்தான் எழுதினேன் என்று எப்படி கண்டு பிடித்தானோ… அப்படியானால் அந்தக் கடிதத்தை எழுதியது யாராய் இருக்கும்…. யாராவது விளையாட்டாய் செய்த விஷயத்தை நான் இவன்தானோ என நினைத்து கண்டுபிடிக்க செய்த முயற்சியில் விவகாரமாய் மாட்டிக் கொண்டேனே……”

 

“கடவுளே இப்போது என்ன செய்வேன்…. இவன் ஒரு முன்கோபம் பிடித்தவனாயிற்றே…. எத்தனை அன்பு இருக்கிறதோ, அதுக்கு சற்றும் குறையாமல் கோபத்துக்கும் குறைச்சல் இல்லை….. சரி போனில் அழைத்து ஏன் இப்படி செய்தோமென்ற விஷயத்தை சொல்லிவிடலாம்….” நினைத்தவள் அவன் அலுவலக எண்ணுக்கு அழைக்க வேறு யாரோ எடுத்து பரத் இன்று லீவ் என்று கூறி வயிற்றில் புளியைக் கரைத்தனர். அவளது மனது தூண்டிலில் சிக்கிய புழுவாய் குழப்பத்தில் சிக்கித் தவித்தது.

 

அலுவலகத்தில் இருக்கவே முடியாமல் ஒவ்வொரு நிமிடங்களையும் நெட்டித் தள்ளியவள் மதியத்துடன் சொல்லிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினாள். மனதும் கண்களும் கட்டுப்பாட்டில் இல்லாமல் கலங்கிக் கிடந்தன.

 

வீட்டு வாசலில் நிறைய செருப்பு கிடப்பதைப் பார்த்ததும் குழம்பியவள், யோசனையுடன் உள்ளே நுழைய பரத்தின் அம்மா, சித்தி, பரத்தின் அத்தை, மாமா எல்லாரும் உள்ளே பேசிக் கொண்டிருந்தனர்.

 

“இவர்கள் வருவதாக சொல்லவே இல்லையே…. அதுவும் எல்லாரும் வந்திருக்கிறார்கள்….” யோசனையுடன் உள்ளே நுழைந்தவளைக் கண்ட பரத்தின் மாமா, “அடடே….. அனு சாயந்திரம் தான் வருவான்னு சொன்னிங்க….. இப்ப நேரமாவே வந்திருச்சே…..” என்றார் சிரிப்புடன்.

 

“அதெல்லாம் அவளுக்கு அழைக்க வேண்டியவங்க அழைச்சு விஷயத்தை சொல்லியிருப்பாங்க…” என்று சிரித்தார் மாமாவின் மனைவி.

 

அவர்கள் ஏதோ அவளுக்குத் தெரியாத புதிய பாஷையில் பேசிக் கொள்வது போல விளங்காமல் திருதிருவென்று முழித்தவள், பரத்தின் அன்னையிடம் சிநேகமாய் சிரித்தாள்.

 

“வாங்க அத்தை….. நல்லாருக்கிங்களா… எல்லாரும் எப்ப வந்திங்க…..” எதார்த்தமாய் அவள் கேட்க, “பார்த்தியா அனுவை….. அவ அத்தையை மட்டும் தனியா விசாரிக்கறா…. நம்மளை எல்லாம் கவனிச்சாளா….” பரத்தின் அத்தை வம்பிழுக்கவும், “ஐயோ சித்தி…. நான் எதார்த்தமாய் தான் கேட்டேன்….. எல்லாரும் எப்படி இருக்கீங்க….” பதறியவளைக் கண்டு அவர்கள் சிரித்தனர்.

 

“சரி…. அதிருக்கட்டும்…. என்ன அனு இன்னைக்கு நேரமா வந்துட்டே…..” என்றார் அவளது அத்தை அமிர்தவள்ளி.

 

“அது சும்மா….. தலை வலிக்குதுன்னு வந்தேன் அத்தை…..”

 

“ஓ…. சரி சாப்டியா……”

 

“இல்லத்தை…. திருப்பி கொண்டு வந்துட்டேன்…..”

 

“சரி சாப்பிடு…. சரியாகிடும்…..” என்றார் அவர்.

 

“இவங்க மட்டும் தான் வந்திருக்காங்களா…. பரத்தும் வந்திருப்பானா….. அவனைக் காணோமே….” யோசித்துக் கொண்டே அடுக்களையில் சித்தியிடம் சென்றவள்,

 

“சித்தி… இவங்க எதுக்கு திடீர்னு வந்திருக்காங்க…. என்ன விஷயமாம்…..” கிசுகிசுத்தாள்.

 

“தெரியலை…. வந்து கொஞ்ச நேரம் தான் ஆச்சு… நீ போயி எல்லாத்தையும் மேசைல எடுத்து வை…. நான் அப்பளம் காச்சிடறேன்….. சாப்பிட்டு பேசலாம்…..” என்றார். யோசித்துக் கொண்டே சித்தி சமைத்து வைத்திருந்த உணவுகளை சாப்பாட்டு மேசையில் கொண்டு வைத்தாள்.

 

அனுவின் சித்தி அவர்களை சாப்பிட அழைக்க, “இரு சாரதா…. அண்ணாவும் வந்திடட்டும்…..” நாத்தனாரிடம் அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் அனுவின் தந்தை ராஜேஷின் வண்டி சத்தம் கேட்டது.

 

“அதோ…. அவங்களும் வந்துட்டாங்க அண்ணி…..”

 

தந்தையுடன் உள்ளே நுழைந்த பரத்தைக் கண்டதும் திகைப்பில் அனுவின் இதயம் நின்று துடித்தது.

 

“பரத்… வந்திருக்கிறானா…. அப்படியானால் எதற்காய் இருக்கும்…. என்மீதுள்ள கோபத்தில் வேறு பெண்ணை இவனுக்கு முடிவு செய்து நிச்சயத்திற்கு அழைக்க வந்திருப்பார்களோ….” குழப்பத்துடன் அவனையே நோக்கியவளை, அவன் கண்டு கொள்ளாதது மட்டுமில்லாமல் முகத்தை மிகவும் சந்தோஷமாய் வைத்திருந்தான்.

 

“வா பரத்….. சாப்பிட வாங்க………” சாரதா சொல்லவும், எழுந்து உணவு மேசைக்கு வந்தனர். எல்லோரும் சந்தோஷமாய் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிட அனுவின் கண்கள் நொடிக்கொருமுறை பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.

 

அவனோ அங்கே ஒருத்தி நிற்பதே தெரியாத போல மாமாவோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தான். ஒரு பார்மாலிட்டிக்கு கூட நலம் விசாரிக்கவில்லை. அவனுக்கு தான் பார்மாலிட்டிக்கு பேசத் தெரியாது… என்று அடிக்கடி கூறுவானே… மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் அடுத்து சாப்பிட அமர்ந்தவளுக்கு தொண்டையை விட்டு சாப்பாடு இறங்குவேனா என்றது. பேருக்கு சாப்பிட்டு தண்ணியைக் குடித்து இறக்கியவள் எழுந்து விட்டாள். தலையைக் கழற்றி வைத்து விடலாம் போல வலித்தது. இதில் அவனது பாராமுகமும் சேர்ந்து கொள்ள அவனோடு பேசும் சந்தர்பத்திற்காய் காத்திருந்தாள்.

 

அவளுக்கு தனிமை தேவையாய் இருந்தது. பெரியவர்கள் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பின்பக்கம் வந்து திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.

 

கடிதத்தில் அத்தனை கடுமையாய் எழுதிய சிறுவருத்தம் கூட இல்லாமல் மிகவும் சந்தோஷமாய் இப்போதைய பரத்தின் வருகை புரியாமல் கலங்கினாள். தலைவலி தாங்காமல் கண்மூடி அப்படியே திண்ணையில் படுத்துக் கொண்டாள். கண்ணிலிருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவளுக்கு தலைவலி அதிகமானால் இப்படிதான் கண்ணீர் வந்து கொண்டே இருக்கும். மனதில் உள்ளதை யாரிடமும் சொல்லவும் முடியாமல் தனக்குள்ளேயே வைத்து புழுங்கிக் கொண்டு காய்ச்சல் வருவது போல உணர்ந்தாள்.

 

“பரத்தின் கோபத்தை எப்படித் தணிப்பது… அவன் நான் சொல்லுவதை எப்படி எடுத்துக் கொள்வான்…. நான் படித்து வேதனைப் படுவேன் என்று தெரிந்தும் இப்படி எழுதியிருக்கிறான்….” இயலாமையும், சுயகழிவிறக்கமும் கண்ணில் ஓயாமல் கண்ணீர் சிந்த வைத்தன. 

 

சிறிது நேரத்திற்குப் பிறகு யாரோ நெற்றியில் கை வைக்கவும் மெல்ல கண்ணைத் திறந்தவள் கண்ணீரின் வழியாய் மங்கலாய்த் தெரிந்த பரத்தின் உருவத்தைக் கண்டதும் துள்ளி எழுந்து அமர்ந்தாள்.

 

“எல்லாம் பண்ணிட்டு அழுதா சரியாகிடுமா…..” எதிரில் நின்றவனின் முகம் இப்போதும் புன்னகையுடன்.

 

“ச… சாரி பரத்…. நான் ஏன் அப்படி லெட்டர் போட்டேன் தெரியுமா…..”

 

சொல்ல வந்தவளை தன் கையால் விரல் மூடியவன் அவள் விழிகளுக்குள் தன் விழியைக் கலக்க விட்டான். உயிரை உருக்கும் அந்தப் பார்வையில் தொலைந்து கரைந்து போனவள் பாரம் தாங்காக் கொடியாய் மரமாய் நின்றவன் மீது தேம்பலுடன் சாய்ந்தாள்.

 

அவனது வலிமையான வலக்கரம் வளையாளை மென்மையாய் தாங்கி மார்பில் சேர்த்துக் கொண்டு அவள் முதுகில் ஆதரவாய் தடவிக் கொடுத்தது.

 

“லூசு….. இப்ப எதுக்கு அழுகறே…..”

 

“நான் லூசுதான் பரத்…. சாரிடா…… எனக்கு யாரோ இதேமாதிரி ஒரு லெட்டர் போட்டிருந்தாங்க….. ஒருவேளை நீதான் எங்கிட்ட இப்படி எழுதி விளையாடறியோன்னு நினைச்சு நானும் அதே போல எழுதிட்டேன்….. ஆனா உன் லெட்டரைப் படிச்சதும் என்னால தாங்கிக்கவே முடியலை….. எவ்ளோ வலிச்சது தெரியுமா…”

 

விலகியவள், அவன் நெஞ்சில் மென்மையாய் குத்தினாள்.

“ஏண்டா… இப்படி எழுதினே…. நான் வேறோருத்தனைக் கல்யாணம் பண்ண வேண்டியா இப்படிப் பண்ணினேன்…. அதெப்படி… நீ வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்திடுவியா….. அப்படி மட்டும் நடந்துச்சு…. நான் தற்கொலை பண்ணிட்டு செத்திடுவேன்….” கோபமாய் சொன்னவளின் அன்பில் கரைந்தவன், “ஏய்… இதென்ன பேச்சு…..” என்றான்.

 

“ஓ…. நான் தற்கொலை பண்ணி செத்திடுவேன்னு சொன்னது நீ கிடைக்காமன்னு நினைச்சியா…. அதெல்லாம் இல்லை….. பேயா வந்து உன்னைக் கொடுமை பண்ணறதுக்குதான்…. என்னை விட்டுட்டு வேற யாரையாவது நீ கல்யாணம் பண்ணிப்பாரு….” அவள் சொல்லவும் அவனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

 

“ராட்சசி…..” காந்தக் கண்ணால் அவளை ரசித்துக் கொண்டே சொல்ல, “ஆமா நான் உன் விஷயத்துல ராட்சசி தான்……” என்றவளை புன்னகையோடு பார்த்தான்.

 

“ஹஹா…. உனக்கு ஈடு நீ மட்டும்தான்…. உனக்கெல்லாம் சப்ஸ்டியூட்டே தேவையில்லை….” என்றவனின் கட்டி மீசையை செல்லமாய் இழுக்க, “ஆ…. வலிக்குதுடி….. ராட்சசி…..” என்றான் அவன்.

 

“நல்லா வலிக்கட்டும்…. அப்படில்லாம் எழுதினப்ப வலிக்கலை தானே…..” என்றவளை குறுகுறுவென்று பார்த்தவன், “ஏய் லூசு…. நாங்கல்லாம் இப்போ இங்கே எதுக்கு வந்திருக்கோம் தெரியுமா…..” என்றான் சிரிப்புடன். அப்போதுதான் அது நினைவு வந்தவளாக, “ஆமா, எதுக்கு சொல்லாமல் கொள்ளாமல் இந்த வருகை….” என்றாள்.

 

“நமக்கு கல்யாணம் பேசத்தான்…..” என்றதும் சட்டென்று அவள் முகத்திலிருந்த கவலை மேகங்கள் விலக நிலவாய் முகம் ஜொலித்தது.

 

“நிசமாலுமா…..” என்றவளின் வார்த்தைகள் நாணத்துடன் கலந்து சிணுங்கலாய் காற்றில் ஒலிக்க சிரித்தான்.

 

“ம்ம்….. நமக்குதான் எப்பவோ என் அப்பாவும், உன் அம்மாவும் நிச்சயம் பண்ணிட்டாங்களே….. அதனால நிச்சயம் எல்லாம் தேவை இல்லை…. நேரா கல்யாணம் போதும்னு சொல்லிட்டேன்…..” என்றவனின் குறும்புப் பார்வையில் தவித்துப் போனவள் மனதில் சடசடத்தன சந்தோஷத்தின் சிதறல்கள்.

 

“இதெல்லாம் எப்போ நடந்துச்சு… அப்புறம் ஏன் இப்படி கோபமா ஒரு லெட்டர் எழுதுனிங்க…….” குழப்பமாய் கேட்டவளின் மூக்கைக் கிள்ளியவன், “அது கோபமா எழுதினதில்லை…. கோபம் இருக்குற போல எழுதினது….” என்றான்.

 

“என்ன சொல்லறிங்க பரத்……”

 

“ம்ம்…. அதை எழுதினது நீதான்னு தெரிஞ்சதும் கோபம் வந்தது உண்மை…. மனசுல என்ன நினைக்கறியோ அதை நேரடியா சொல்லாம இப்படி சுத்தி வளைச்சு பேசறது எனக்குப் பிடிக்கலை…. உன்மேல கோபமா இருந்தப்ப தான் என் பிரண்டு ஒருத்தன் இப்படி விளையாடி இருக்கான்னு தெரிஞ்சது…. எதுலதான் விளையாடறதுன்னு இல்லியான்னு அவனை ஓங்கி அறைஞ்சிட்டுதான் வீட்டுக்கு போனேன்….. அம்மாகிட்ட பேசினேன்…. உடனே எங்க கல்யாணத்தை முடிவு பண்ணனும்….. யாரை நம்ம கூட வர சொல்லணுமோ சொல்லிக்கங்கன்னு சொல்லிட்டேன்….. இன்னைக்குதான் உனக்கு அந்த லெட்டர் கிடைக்கும்னு நினைச்சுதான் இன்னைக்கு இங்க வர்ற மாதிரி பிளான் பண்ணினேன்….”

 

“அடப்பாவி…. நான் எத்தனை கலங்கிப் போயிட்டேன் தெரியுமா…. சரி… இந்த லெட்டரை என் பிரண்டு தானே எழுதினா… நான்தான் அனுப்பினேன்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது….” அவள் பாவமாய் கேட்டாள்.

 

“ஏண்டி லூசு….. ரொம்ப விவரமா மண்டைய மறைச்ச நீ கொண்டைய மறைக்காம விட்டுட்டியே…. அப்புறம் அது நீன்னு தெரியாமலா இருக்கும்….” என்றான்.

 

“என்ன சொல்லறீங்க பரத்… எனக்குப் புரியலையே…..” அவள் கேட்கவும், அந்தக் கடிதத்தைப் பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டினான் அவன்.

 

எடுத்ததும் “god is love” என்று ஆங்கிலத்தில் தொடங்கி இருந்தது சாட்சாத் அனுவே தான்…. அதற்குப் பிறகு தான் தமிழில் அவளது தோழியின் கையெழுத்து இருந்தது. எப்போதும் சின்னதாய் பூக்கள் போட்ட பேப்பரில் எழுதி ஒரு கவரில் போட்டு அவனுக்கு அனுப்புவது தான் வழக்கம். அதற்காக ஒரு லெட்டர் பேட் தனியாய் வாங்கி வைத்திருந்தாள். முக்கியமாய் இப்போது அனுப்பிய கடிதமும் அதே பேப்பராக இருந்தது. அதைக் கண்டவள், அவசரமாய் எழுதி அனுப்பியதில் இதை கவனிக்காமல் விட்ட தன் முட்டாள்தனத்தை எண்ணித் தலையில் தட்டிக் கொண்டாள்.

 

அவளை சிரிப்புடன் பார்த்தவன்,  “இப்பப் புரியுதா…..” எனவும், நாணத்துடன் தலையாட்ட, அவள் தலையில் தன் தலையால் செல்லமாய் முட்டினான்.

 

நியூட்டனின் விசைகளும் கைகட்டி

நிற்கும் விசைதான் பெண்ணே….

உன் கண்ணீர்ப்பு விசை….
கட்டுண்டது பெண்ணே

காளையின் ஐம்புலன்களும்..

Advertisement