Advertisement

 

 

வானம் – 2

 

த்தனயோ நாட்களாய் காணத் துடித்த மாமன் மகன் பரத் தான் அவன் என்பதை வலி நிறைந்த அந்தப் பார்வை உணர்த்த எல்லோரும் இருந்ததால் தயக்கத்தோடு பார்த்தாள் அனுபமா. அவள் தன்னை வேதனையோடு பார்ப்பதை உணர்ந்த பரத்தின் கண்கள் தந்தையை இழந்த வலியை அவளோடு பகிர்ந்து கொள்ளத் துடித்தது. தனக்காய் தன் தந்தை சொன்ன துணை இந்த அழகுப் பெண்தானா…. என்று அந்த நிலையிலும் வியந்தது.

 

அவளையறியாமலே மனதுக்குள் அவன்மீது உருவாகி இருந்த நேசம், அவனை அதிகம் கண்டதோ, பழகியதோ இல்லையென்ற உணர்வைக்கூட தோற்றுவிக்காமல் ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்து ஆறுதல் சொல்லி தேற்றத் தோன்றியது. என்ன சொல்லுவதென்று தெரியாவிட்டாலும் ஆறுதலாய் இருக்க மனம் ஏங்கியது.

 

இருபது வயதில் பட்டாம் பூச்சியாய் சிறகடிக்க வேண்டியவனின் சிறகில் அப்போதே குடும்பத்தின் கவலை வந்து அமர்ந்து கொண்டது. அன்பான அழகான அந்த குடும்பம் தலைவனை இழந்து கதறியது. பழைய வீடும் இடமும் மட்டுமே அவன் தந்தையின் சம்பாத்தியம்.

 

அழுதழுது மயங்கிக் கிடந்த அத்தையும், கல்யாண வயதை எட்டிப் பிடித்த மாமன் மகளும், தன் வயதையொத்த பரத்தின் தம்பியுமாய் அவர்களின் எதிர்காலம் கவலையைக் கொடுக்க அனுவுக்கும் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. எல்லாம் முடிந்து சுற்றமும் உறவினர்களும் கிளம்பத் தொடங்க நெருங்கிய உறவினர் மட்டுமே இருந்தனர்.

 

அத்தையின் வேதனையை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. கண்ணான கணவரின் மறைவை எந்த மனைவியால் அத்தனை சீக்கிரம் ஏற்றுக்கொள்ள முடியும். இவர்களுக்கு கோடை விடுமுறை ஆதலால் பதினாறாம் நாள் காரியம் முடியும்வரை அவர்களை அங்கேயே தங்க சொல்லிவிட்டு அவள் தந்தை மட்டும் ஊருக்குக் கிளம்பினார்.

 

அத்தை, பிள்ளைகளின் எதிர்காலத்தை சொல்லியே கதறிக் கொண்டிருக்க, அவருக்கு குழந்தைகள் மேல் உள்ள நேசத்தைக் கண்டவளுக்கு தனக்காக இப்படி யோசிக்கவும் நேசிக்கவும் தாய் இல்லையே என்ற ஏக்கம் வராமல் இல்லை. பதினாறு வயதில் அவளுக்கு வேறு எதையும் யோசிக்கத் தெரியவில்லை.

 

நாட்கள் அழகாய் நகர, உறவுகளின் ஆதரவால் மெல்ல எழுந்து வந்தார் அத்தை. கண்ணீர் வற்றிப் போய் அன்றாடக் கவலைகள் பயமுறுத்த பிள்ளைகளின் எதிர்காலம் அவரது மனதில் கேள்வியாய் எழுந்தது.

 

பரத் தான் அவருடைய ஒரே நம்பிக்கை. இறுதியாண்டு பிகாம் படித்துக் கொண்டிருந்தவனுக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைக்குமென்றாலும் மகனது இன்ஸ்பெக்டர் கனவும், மகளைப் பெரிய இடத்தில் மணமுடித்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆசையும், இளைய மகனை நன்றாய் படிக்க வைக்க வேண்டுமென்ற அவரது கனவுகளும் கானலாய் கலைந்தன.

 

வேறுவழியில்லாமல் நடந்ததை ஏற்று சற்று இயல்பு நிலைக்கு திரும்பினர். பரத்தின் அன்னைக்கு நிறைய சகோதரர்கள்… அவர்களின் மகள்களும் வளர்ந்து அனுவுக்குப் போட்டியாய் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ஒரு சகோதர பாசத்துடன் பழகிய பரத்தால் அனுவிடம் அப்படிப் பழக முடியவில்லை.

 

உறவுகள் சொல்லப்

பலரிருந்தாலும்

உணர்வுகள் வெளிப்படத்

துடிப்பது சிலரிடமே…..

 

அவனது பார்வை அவள்மீது ஆவலோடு படிவதை உணரும்போதேல்லாம் அவளது முகத்தில் ரோஜாக்கள் பூத்தன. இருவரின் பார்வைப் பரிமாற்றங்களைக் கண்ட பரத்தின் நண்பர்களும், மாமன் மகள்களும் இருவரையும் சேர்த்து சாடையாய் கிண்டலடிக்கவும் தொடங்கினர்.

 

இளம் வாலிபனாய் லேசான மீசையுடன் எத்தனயோ கவலைகளும் யோசனையும் மனதை நிறைத்தாலும்  அனுவைக் காணும்போது அவன் பார்வையில் ஒரு சாரலடித்தது. சின்னதாய் ஏதாவது பேச்சுக்கள்….. கடக்கும்போது கண்ணால் ஒரு தழுவல்….. அந்தப் பார்வையை சந்திக்கும் போதெல்லாம் தனக்குள் சடசடவென்று ஆயிரம் பூக்கள் ஒன்றாய் மலர்வதை உணர்ந்தாள் அவள். வசீகரிக்கும் அந்த கண்களால் காந்தக் கண்ணன் என்று பெயர் கூட வைத்திருந்தாள்.

 

அவனது கண்களும் அப்படித்தான் இருந்தது. அகண்ட விரிந்த ஆழமான கண்களில் எப்போதும் லேசாய் செவ்வரியோடி ஆணுக்கே உரித்தான அழுத்தமான பார்வை. காதல் சொல்லாமலே அங்கு காதல் கவிதைகள் கண்களில் பரிமாறப் பட்டது.

 

ஒருநாள் சின்னவர்கள் எல்லாம் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சற்றுத் தள்ளி பரத்தின் மாமா புகைத்துக் கொண்டே பரத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.

 

“ஏய் அனு….. இந்த பரத் சரியான கல்லுளிமங்கன்…. எப்பவாவது அவன் மனசுல நீதான் இருக்கேன்னு சொல்லியிருக்கானா…. அதைத் தெரிஞ்சுக்க ஒரு ஐடியா இருக்கு…… செய்யறியா…” பரத்தின் மாமன் மகள் கேட்க, அனுவுக்கும் ஆவலாய் இருக்க தலையாட்டினாள்.

 

“என்ன செய்யணும்…..”

 

“அங்க பார்த்தியா…. சித்தப்பா தம்மடிச்சிட்டு இருக்காங்க….. நீ போயி அவர்கிட்டே அதை வாங்கி புகையை இழுக்குற போல பண்ணு……” ரஞ்சனி கூறினாள்.

 

“ஐயோ…. என்னது…. நான் புகையை இழுக்குறதா….”

 

“அட… சும்மா நடிக்க தான் சொன்னேன்….. இவ ஒரு தொடைநடுங்கி…… நீ இதைப் பண்ணினா பரத் என்ன பண்ணுறான்னு பார்ப்போம்…….” என்றாள் அவள்.

 

“ம்ம்…. அப்படிப் பண்ணினா மாமா என்ன நினைப்பார்….” அவர்கள் சொன்ன அந்த மாமாவும் சின்ன வயதுதான்.

 

“ஒண்ணும் நினைக்க மாட்டார்…. அவர் ரொம்ப ஜாலி டைப்…. நீ செய்து பாரேன்…..” தூண்டி விட்டனர் அவள் வயதில் உள்ள இளம்பெண்கள்.

 

“சரி…..” தயக்கத்துடன் சொல்லிக் கொண்டே அங்கே சென்றவள், “மாமா… இதில் அப்படி என்னதான் இருக்கு…. குடுங்க… நானும் இழுத்துப் பார்க்கறேன்…..” கூறியதோடு அவரது கையில் இருந்த சிகரட்டைப் பறித்து வாயில் வைத்து லேசாய் இழுக்க புகை சேராமல் இருமல் வந்தது.

 

அவள் செய்வதை புரியாமல் பார்த்து நின்ற பரத்,  தலையில் ஓங்கிக் கொட்டிவிட்டு “என்னடி…. பண்ணிட்டு இருக்கே….” கோபத்தோடு கேட்டுக் கொண்டே, கையில் இருந்த சிகரட்டைப் பிடுங்கி எறிந்தான்.

 

“டேய்…. என்னடா அவளை அடிச்சிட்டே…. உன் மாமன் புள்ளைங்க எல்லாம் இந்த மாதிரி பண்ணினபோது ஏதும் சொல்ல மாட்டியே….” என்றார் மாமா சிரிப்புடன்.

 

“என் அனு இப்படி செய்யறது எனக்குப் பிடிக்கலை….” கோபத்துடன் சொல்லிவிட்டு நகர்ந்தவனை பின்னில் நின்று நமட்டு சிரிப்பு சிரித்தனர் மாமா மகள்கள்….. அனுவுக்கோ அவன் சொன்ன வார்த்தைகளும் அந்தக் கொட்டும் தேனாய் இனித்தது. அவனது மனதில் தான் இருப்பதை உணர்ந்து கொண்டவளுக்கு சிறகில்லாமலே வானத்தில் பறப்பது போலத் தோன்றியது.

 

பரத் மிகவும் எதார்த்தமானவன்…. உருகி உருகி காதல் வார்த்தை எல்லாம் பேசவில்லை…. தந்தையின் வார்த்தையைத் தாண்டியும் அவளைப்  பிடித்திருந்தது…. ஒருவேளை அவளுக்கு அவன்மேல் விருப்பம் இல்லையென்று தோன்றியிருந்தாலும் வருத்தப்படாமல் அப்போதே விலகியிருப்பான்.

 

அத்தைக்கும், பிள்ளைகளுக்கும் இருந்த புரிதலும் அன்பும், பரத்தின் அக்கறையும் பொறுப்பும், தானும் அந்த குடும்பத்தில் வாழ்ந்தால் எத்தனை அழகாயிருக்கும் என்ற எண்ணத்தை விதைக்க, அவனது சிறுசீண்டல்களும், சாரல்பார்வையும் அதை செடியாய் முளைக்க வைத்தது. அன்னை, அக்கா, தம்பி மீது அவன் வைத்திருந்த அன்பைக் கண்டவளுக்கு தனக்கும் அந்த அன்பு வேண்டுமென்று எண்ணம் அதிகமானது. 

 

அவர்கள் ஊருக்குக் கிளம்பும் நாளும் வந்தது. மறுநாள் கிளம்புவதாய் இருக்க பெரியவர்கள் வராண்டாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் வாசலில் விளையாடிக் கொண்டிருக்க அனுபமா துணிகளை மடக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ஜன்னல் பக்கத்தில் அமர்ந்திருந்தவளின் காதில் அந்தக்குரல் மிகவும் மென்மையாய் கேட்டது.

 

“அனுக்குட்டி…….” சட்டென்று திடுக்கிட்டவள் சுற்றிலும் பார்த்துவிட்டு ஜன்னலில் எட்டிப்பார்க்க யாருமில்லை…. மீண்டும் மடித்துவைக்கத் தொடங்கியவளின் காதில் அதே அழைப்பு மீண்டும் கேட்டது.

 

“அனுக்குட்டி…..” சிறுவயது முதல் அன்பான ஒரு அழைப்புக்காய் ஏங்கிக் கிடந்த அவள் மனதை சுகமாய் வருடிச் செல்லும் இதமான அழைப்பு.

 

அவளது உடல் சிலிர்த்தது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரன் யாரென்று அவள் அறியாமல் இல்லை. மனதுக்குள் உறைந்து கிடந்த ஏதோவொன்று கரைந்து போவது போல் உணர்ந்தாள். அந்த நேரம் முதல் பரத்தின் அழைப்புக்காய் அவளது உள்ளம் காத்திருக்கத் தொடங்கியது. 

 

சற்றுநேரம் கழித்து ஒன்றுமறியாதது போலே உள்ளே வந்தவனை அவள் கண்டுகொள்ளாமல் இருக்க, “அனு….. என் வாட்ச் இங்கே இருந்துச்சு பார்த்தியா….” கேட்டான். அவள் அமைதியாய் இருக்க, தலையில் செல்லமாய் கொட்டினான்.

 

“அனு….. நாளைக்கு ஊருக்குப் போனதும் என்னை மறந்திடுவியா…….” அவனது குரலில் பிரிவின் வேதனை.

 

அதைக் கேட்டதும் அவளுக்கு துக்கம் தொண்டையில் அடைத்தது. எத்தனயோ நாட்கள் ஒன்றாய் இருந்துவிட்டுப் பிரிவது போல ஒரு வேதனை மனதைப் பிசைந்தது. கண்ணீருடன் ஏறிட்டவளைக் கண்டு பதறிப் போனான்.

 

“அனு…… என்ன இது….. அழாதே….” அவசரமாய் அவள் கண்ணைத் துடைத்துவிட்டான்.

 

“பரத்…… என்னைப் பார்க்கலைன்னா மறந்திடுவீங்களா…..”

 

கேட்டவளின் பார்வையில் தன்னையே தொலைத்தான். அந்த இள உள்ளங்கள் ஒன்றின் அருகாமைக்காய் மற்றொன்று ஏங்கியது.

 

“அனு…….” அவளது உருவத்தை கண்ணின் வழியே இதயத்தில் படம் பிடித்துக் கொண்டான்.

 

“ம்ம்….. இனி எப்பப் பார்ப்போம்……” அவளது வார்த்தையில் தொனித்த பிரிவின் வலியை தன்னுள் உணர்ந்தான்.

 

“இதுவரை பார்க்கலைனாலும் இனி எப்பவும் உன்னை என் மனசில் பார்த்துட்டு தான் இருப்பேன்…..” அவனது குரல் அழுத்தமாய் வந்தது.

 

“பரத்…. எ… எனக்குப் போகவே பிடிக்கலை…..”

 

“அனு….. இப்ப நமக்கு படிப்புதான் முக்கியம்….. நாம ஒண்ணா சேர்ந்திருக்குற நாளுக்காகக் காத்திருப்போம்….. நம்ம கடமையெல்லாம் முடிச்சிட்டு…..”

“ம்ம்….” சொல்லியவளின் மனது அவனுக்கும் புரிய நெகிழ்ந்தான். தந்தையை இழந்து துக்கத்தில் இருந்தவன் மனது அவள் அருகாமையிலேயே மெல்லத் தேறி வந்தது.

 

“என் அத்தை எனக்காகவே உன்னைப் பெத்து வச்சிருக்காங்க….. இந்த அழகுப் பெண்ணை வேற யாரும் கொண்டு போயிடக் கூடாதுன்னுதான் என் அப்பா நீ பிறந்ததுமே உன்னை எனக்கு புக் பண்ணிட்டார் போல…..” சொல்லியவன் இதமாய் சிரித்தான்.

 

அந்த வசீகர சிரிப்பை மனதுக்குள் சேமித்து வைத்துக் கொண்டவள் நாணத்தில் முகம் சிவந்தாள்.

 

“ஓஹோ…. அப்ப மாமா சொன்னதுக்காகத் தானா….”

 

புன்னகை வழிய கேட்டவள் கடைக்கண்ணால் பார்த்தாள்.

 

“ம்ம்…… நீ பிறந்தவுடனே தன் பையனுக்குன்னு அப்பா சொல்லி வைக்குற அளவுக்கு நீயென்ன பெரிய ரதியோன்னு நானும் நினைச்சுப்பேன்…. பார்த்த பிறகு தான புரிஞ்சுது…..” சொல்லி நிறுத்தியவனை ஏறிட்டாள்.

 

“என்ன புரிஞ்சுது…..” ஆவலோடு கேட்டாள்.

 

“நீ அந்த அளவுக்கெல்லாம் வொர்த் இல்லை…. வெறும் டம்மிப்பீசு, அப்பா அவசரப்பட்டு வாக்கு கொடுத்துட்டார்னு புரிஞ்சது……” புன்னகையுடன் கூறியவனை முறைத்தவள்,

 

“நானும் தான் நினைச்சேன்….” என்றாள்.

“ஓஹோ…. என்ன நினைச்சே….”

 

“என் மாமா எனக்காகப் பெத்து வச்ச பையன் மாஸா இருப்பான்னு நினைச்சேன்…. இங்க வந்ததும் தானே புரிஞ்சது….. சரியான லூஸா இருக்கான்னு…..” சொல்லிக் கொண்டே அவனுக்குப் பழிப்பு காட்டிக் கொண்டு ஓடியவளை மனதில் நிறைத்துக் கொண்டான் பரத்.

 

அடுத்தநாள் அத்தை வீட்டாரை வழியனுப்ப பரத்தும் ரயில்நிலையம் சென்றிருந்தான். எல்லோரும் இருந்ததால் அனுவும் அவனும் கண்ணாலேயே விடைபெற்றுக் கொண்டனர். மனம் நிறைய பிரிவின் சுமையை சுமந்து கொண்டு வெளியே காட்ட முடியாமல் முகத்திரையுடன் நடமாடினர்.

 

போகுதே…. போகுதே

என் பைங்கிளி ரயிலில்….

நானும் சேர்ந்து போகவே

லைசன்ஸ் இல்லையே…..

முறையும் இல்லையே…. என்று பாடாத குறைதான். ஒரு பிரிவின் துயரத்தில் கண்டவர்கள் ஒருவரை ஒருவர் பிரியும்போது மனம் நெருங்கி இருந்தனர்.

 

பிரிவுக்கும்

பிரியத்திற்குமிடையே

பிளவு பட்டுக் கிடக்கிறது….

பிரியம் கொண்ட நெஞ்சங்கள்….

 

நாட்கள் அழகாய் நகர, அவரவர் கடமைகளில் ஓடத் தொடங்கினர். அவனைக் காணத் தோன்றும் ஆசையை மனதைப் பிசையும் வலியோடு மாற்றிக் கொள்வாள் அனுபமா. எத்தனயோ இரவுகளில் அவன் பெயரையே மந்திரமாய் ஜெபித்திருக்கிறாள்.

 

உறங்க மறுக்கும் குழந்தையாய்

சிணுங்கிக் கொண்டேயிருக்கும் – உன்

நினைவுகளைத் தாலாட்டுவதிலேயே

முடிந்துவிடுகிறது என் இரவுகள்……

 

சிலநேரம் மனதுக்குள் அவனது உருவத்தைக் கொண்டுவர முயற்சி செய்தால் சரியான தோற்றமே வராது…. தன் அன்பும் பிரியமும் உண்மையில்லையோ என்று கூட வருந்துவாள். வருடங்கள் கடந்து போனது.

 

பரத் தந்தையின் அலுவலகத்தில் இருந்து கிடைத்த பணத்தில் பழையவீட்டை இடித்து கட்டிக் கொண்டிருந்தனர். அக்காவுக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்க எதுவும் சரியாகாமல் இருந்தது. மூன்று வருடத்துக்குப் பிறகு பரத்துக்கு தந்தையின் அலுவலகத்தில் வாரிசு வேலைக்கு நியமனமாகி ஆர்டர் வந்திருந்தது. வேலை முடிவாகி விட்டதால் அவனை நம்பிக் கடனும் கிடைக்க இளவயதில் பொறுப்புடன் வீட்டைக் கட்டி முடித்தான்.

 

அனுவும் படிப்பு முடிந்து ஒரு தனியார் அலுவலகத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். அலுவலகம் வீட்டிலிருந்து பதினைந்து நிமிடம் நடந்து போகும் தூரத்திலேயே இருந்தது. ஒருநாள் மாலையில் வேலை முடிந்து சோர்வுடன் வீட்டை நோக்கி நடைபோட்டாள். வீட்டின் வளைவில் திரும்பியவள் ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தவனைக் கண்டு திகைத்தாள்.

 

“பரத்……” அவனைக் கண்டதும் அவளது உடலிலுள்ள ரத்தம் முழுதும் ஒன்றாய் எம்பிக் குதித்தது போல ஒரு உணர்ச்சி தோன்றியது. திகைத்து நின்றவளைப் புன்னகையுடன் அவன் நெருங்க அவனது தோற்றம் கண்டு வியந்து நின்றாள்.

 

மூன்று வருடத்தில் ஆளே மாறியிருந்தான். கட்டி மீசையும் உருவத்தில் தோன்றிய கம்பீரமும் அவளைத் திகைக்க வைத்தது. சந்தோஷத்தில் ஸ்தம்பித்து நின்றவளை ஆவலுடன் நெருங்கினான்.

 

“அனு……..” அந்த அழைப்புக்காய் வருடக் கணக்கில் காத்திருந்தவளின் கண்கள் கலங்கின. ரோட்டில் யாரும் காணுவதை விரும்பாமல் எதுவும் பேசாமல் வேகமாய் வீட்டை அடைந்தாள். அதை உணர்ந்து கொண்டவன் அமைதியாய் பின் தொடர்ந்தான்.

 

மூன்று வருடத்தில் அனு இன்னும் அழகாகி இருந்தாள். பெண்மைக்கே உரிய நளினமும் அச்சமும் கண்ணில் தெரிந்தாலும் ஒரு மிடுக்கும் இருந்தது.

 

“ம்ம்… இனியும் இந்தக் காத்திருப்பும் பிரிவும் அவஸ்தை…..” பெருமூச்சு விட்டான்.

 

சீக்கிரமே அக்காவின் கல்யாணம் முடித்ததும் வீட்டில் சொல்லி விடவேண்டும் என நினைத்துக் கொண்டான். வீட்டுக்கு சென்றவளுக்கு அங்கே பரத்தின் குடும்பமே வந்திருக்கவும் இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.

 

அத்தை மிகவும் மெலிந்திருந்தார். வீடு கிரகப் பிரவேசத்திற்கு அழைக்க வந்திருப்பதாய் கூறினர்.

 

சந்தோசத்தோடு அனைவரும் பேசிக் கொண்டிருக்க, பரத்தும், அனுவும் கண்களால் பேசிக் கொள்வதை வீட்டில் எல்லாரும் அறிந்திருந்தாலும் கண்டும் காணாமல் இருந்தனர்.

 

அனுவின் தம்பி ஆதவன்தான் அவளைக் கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

 

காதல் சொல்லக் கண்களிருக்க

கவிதைக்கங்கே வேலையில்லை…

கண்கள் எழுதும் கவிதை போதும்

கண்ணே மணியே தேவையில்லை….

கடிதம் எழுத மைதான் வேண்டும்…

காதல் சொல்ல கண்மை போதும்….

கன்னியவளின் கண்ணின் அசைவில்

காற்றும் கடலும் காதல் சொல்லும்….

 

Advertisement