Advertisement

வானம் – 7

 

ரவு உணவு முடிந்து பெரியவர்கள் எல்லாம் அங்கங்கே செட்டிலாக பரத்தின் நண்பர்கள் மணமக்களை தனியே விடாமல் பிடித்து வைத்துக் கொண்டு கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

 

“பரத்…. நீ ஒரு பாட்டுப் பாடு….” எனவும், அவன் அழகாய் ஒரு ஹிந்தி பாட்டை பாடினான். பரத் அழகாய் பாடுவான்.

 

“அனு…. நீயும் ஒரு பாட்டுப் பாடு….. அப்பதான் உங்களைப் போக விடுவோம்….” என்றான் ஒரு நண்பன்.

 

அவள் அவர்களிடம் சிக்கிக் கொண்டு அவஸ்தைப் பட, “ஏதாவது ஒரு பாட்டுப் பாடு… அனு…. இல்லன்னா இவனுங்க விட மாட்டாங்க…..” காதில் கிசுகிசுத்தான்.

 

அவள் குரலை சரியாக்கிக் கொண்டு எப்படியோ ஒருவிதமாய் பாட்டைப் பாடினாள்.

 

“ம்ம்….. குட் கேர்ள்….. டேய் பரத்…. தங்கச்சி நல்ல பொண்ணுடா…. சொல்பேச்சு கேக்குது….. நல்லபடியாப் பார்த்துக்க…… சரி நாங்க கிளம்பறோம்…..” என்று அவர்கள் ஒருவழியாய்க் கிளம்பவும் தான் அனுவுக்கு மூச்சே வந்தது. பரத்தின் நண்பர்களுக்கு குடிப்பழக்கம் இருந்தாலும் எல்லாரும் குடும்பமாய் பழகும் சுபாவம் உள்ளவர்கள்…. நண்பர்களின் கல்யாணம் அவர்களுக்குக் கொண்டாட்டம்…. நண்பனின் மனைவியை இப்படி ஏதாவது செய்ய சொல்லுவது வழக்கம்.

 

அனுவுக்கு அவர்கள் எல்லாரையும் முன்னமே தெரியுமாதலால் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் பழகினாள். அது அவர்களுக்கு அனுவின்மேல் மரியாதையைக் கொடுத்தது.

 

சில பெண்கள் முகத்தை சுளித்துக் கொண்டு என்னால் செய்ய முடியாது…. என்றெல்லாம் கூறிவிட்டு, நண்பனை இரவு முழுதும் போகவிடாமல் பிடித்து வைத்துக் கொள்ளும் சம்பவம் எல்லாம் உண்டு…..

 

நிறையத் திரைப்படங்களில் முதலிரவுக் காட்சியில் அறைக்குள் நுழையும்போதே மணக்கும் ஊதுபத்தி வாசனையும், பால்சொம்பும், பலவித பலகாரங்களும், அழகான மலர்சரங்களால் அலங்கரிக்கப் பட்ட கட்டிலும் எல்லாம் இல்லாமல் எப்போதும் போல அறை சாதாரணமாய் இருந்தது. எத்தனையோ நாட்கள் கனவில் களித்தது நிஜமாகப் போகும் சந்தோஷ அவஸ்தையில் இருவரின் மனமும் குதூகலித்துக் கொண்டிருந்தது.

தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தவளைக் காதலுடன் நோக்கி சிரித்தவன், கைபிடித்து கட்டிலில் அமர்த்தினான்.

 

அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்குப் படபடப்பாய் வந்தது. தலையைக் குனிந்து அமர்ந்திருந்தவளின் காதோரத்தில் காற்றில் பறந்த முடிக் கற்றைகளை மெதுவாய் ஒதுக்கி விட்டான். அவன் விரல் கழுத்தில் பட்டதில் அவளுக்கு கூச்சமாய் இருக்க நெளிந்து கொண்டிருந்தாள்.

 

அவளது வெட்கத்தை ரசித்தவன் காதுக்கருகில் வந்து மென்மையாய் அழைத்தான்.

 

“அனுக்குட்டி…”

 

அந்த அழைப்பில் அவளது உடலில் ரோமக்கால்கள் சிலிர்த்துக் கொண்டு குத்திட்டு நின்றன. சுகமான அந்த அனுபவத்தில் வார்த்தைகளும் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள மெதுவாய் “ம்ம்…..” என்றாள்.

 

அவளது மென்மையான கையை தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டு அவள் முகத்தையே ஆசையோடு பார்த்தான்.

 

தொண்டையை சரியாக்கிக் கொண்டு, “என்ன பார்க்கறிங்க….” என்றாள் அவள் தவிப்புடன்.

 

“இந்த உதடு தானே அன்னைக்கு மாமா கைல இருந்த சிகரட் புகையை இழுத்துச்சு…. இந்த உதடு தானே என்னைப் போடான்னு சொல்லுச்சு…. அதுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு பார்க்கறேன்….” சொல்லிக் கொண்டே ஒரு விரலால் அவள் உதடுகளைத் தடவ அவளுக்குள் புதுவித உணர்ச்சியலைகள் மின்சாரமாய்ப் பரவுவதை உணர்ந்தாள்.

 

அவளது தோளோடு உரசிக் கொண்டு நெருங்கி அமர்ந்தவன், “அனு….” ஏன் ஒண்ணும் பேச மாட்டேங்கறே….. தூக்கம் வருதா….” என்றான்.

 

“இ… இல்லை…. வரலை….” என்றாள் அவள் அவசரமாக.

 

“அப்ப தூங்காம ராத்திரி எல்லாம் விளையாடிட்டு இருக்கலாமா…..” அவன் குறும்புடன் கண்ணடித்துக் கேட்க இதழில் நெளிந்த புன்னகையுடன் நாணித்து தலை குனிந்தாள்.

 

அவள் மடியில் படுத்துக் கொண்டவன் முகத்தைப் பார்க்க கையால் மறைத்துக் கொண்டாள்.

 

“அட… என் அனுக்குட்டி இன்னைக்கு ஓவரா வெக்கப் படுறாளே…..” சொல்லிக் கொண்டே அவள் கைகளை மெல்ல மாற்ற கண்ணை மூடி அமர்ந்திருந்தாள் அவள்.

 

மெல்ல எழுந்தவன் மூடிய அவள் இமைகளில் மென்மையாய் முத்தமிட்டான். சட்டென்று கண்ணைத் திறக்க அவளது அகண்ட பெரிய கரிய விழிகளில் தொலைந்தே போனான் பரத்சந்தர். அவனது காதல் வழியும் கண்களுடன் கதை பேசி நிற்கும் தன் விழிகளை மாற்ற முடியாமல் பார்த்தவளை அப்படியே தன் நெஞ்சில் கொடியாய் சாய்த்துக் கொண்டான் அவன்.

 

உள்ளங்களோடு உடலும் காதல் கடலில் சங்கமித்தன.

 

அடுத்தநாள் காலையில் சந்தோஷத்துடன் குளித்து முடித்து விளக்கேற்றி அடுக்களைக்கு சென்றவளோடு சாதாரணமாய் பேசினார் அத்தை.

 

அன்று மாலை வீட்டிலேயே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். காலையில் இருவரையும் வீடியோகிராபர் வீடியோவில் சேர்க்க சில ஷூட் எடுப்பதற்காய் வர சொல்லி இருந்தார்.

 

அழகான பட்டுசேலையில் புதுப்பெண்ணின் பொலிவோடு பட்டாம்பூச்சியாய் சிறகடித்தவள், அத்தையிடம் சொல்வதற்காய் தேடிச் செல்ல அவர் வீட்டின் பின்பக்கத்தில் இருந்தார். அவரிடம் சொல்லி விடைபெற்று வாசலுக்கு வர பரத் பைக்கில் காத்திருந்தான்.

 

பின்பக்கத்தில் இருந்து வாசல் தெரியுமாதலால் அங்கே நின்று கொண்டிருந்த அன்னையிடம் போய் வருவதாய் கைகாட்டினான். அங்கே அவர்கள் வாழ்வின் கற்பனைகள் மறைந்து எதார்த்தம் தலை காட்டத் தொடங்கியது.

 

அது ஒரு அழகான புல்வெளி நிறைந்த இடம்…. சிவன் கோவிலுக்குப் பின்னில் இருந்தது. மணமக்களைப் படம் பிடிக்க வீடியோகிராபர்கள் அந்த இடத்தை தேர்ந்தெடுக்கும் வண்ணம் அழகாய் இருந்தது. முதன்முதலில் கணவனின் பின்னில் பைக்கில் அமர்ந்திருந்த அனுவின் மனது சந்தோஷ சிறகடித்துக் கொண்டிருந்தது.

 

மனதில் நிறைந்தவனே மணாளனாய் வந்த சந்தோஷம் முகத்திலும் மின்ன வீடியோகிராபர் சொன்னது போல இருவரும் கதாநாயகன், நாயகியாய் மாறி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். வேண்டிய ஸ்டில்களை எடுத்துக் கொண்டு அவர் திருப்தியுடன் செல்ல கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பினர்.

 

“அனு….” காற்றில் பறந்த சேலை முந்தானையை கைக்குள் அடக்கிப் பிடித்துக் கொண்டே, “ம்ம் என்னங்க…” என்றாள்.

 

“நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாருக்கேன்….. இப்படி பைக்கில் அமர்ந்து போவதெல்லாம் வெறும் கனவோன்னு கூடத் தோணுது….” அவன் சொல்லவும், இடுப்பில் நறுக்கென்று கிள்ளி வைக்க துள்ளினான்.

 

“ராட்சசி…. வண்டி ஓட்டும்போது இதென்ன விளையாட்டு…”

 

“பின்னே…. கல்யாணம் முடிஞ்சு எல்லாம் முடிஞ்சு இப்ப இதெல்லாம் கனவு போலத் தோணுதுன்னு சொன்னா…..” அவள் சிரிக்க சட்டென்று வண்டியை நிறுத்தினான்.

 

“ரொம்ப சிரிக்காத…. அப்புறம் இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிப்பே…..” சிரித்துக் கொண்டே மிரட்டியவனின் பார்வை தாளாமல் நாணத்துடன் தலை குனிந்தாள் அவள்.

 

பைக்கில் பயணித்துக் கொண்டே சிறகில்லாமல் வானில் சிறகடித்துக் கொண்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

 

“அனு…. மேசைல டிபன் வச்சிருக்கேன்…. எடுத்து சாப்பிடுங்க….” சொன்ன அத்தையின் முகத்தில் ஏதோ மாறுதலை உணர்ந்தாள். பரத்தும் வந்து உணவுமேசையில் அமர சூடான புட்டும் கடலைக் குழம்பும் தட்டில் பரிமாற, அவளையும் அமர சொன்னான்.

 

சுற்றிலும் நோக்கிக் கொண்டு பரத் அவளுக்கு ஊட்டிவிடப் போக தயக்கத்துடன் பார்த்துக் கொண்டே வாய் திறந்தாள் அனு. மேசைக்கடியில் அவனது கால்கள் அவளது காலில் கோலம் வரைந்து கொண்டிருக்க அவஸ்தையான சந்தோசத்தை அனுபவித்துக் கொண்டே சாப்பிட்டாள். அவனது அருகாமையில் பசியும் தோன்றவில்லை.

 

ஒருவித பரவசம் அவளுக்குள் ஓடிக் கொண்டே இருக்க அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அத்தையைத் தேடி வந்தாள். அவர் பரத்தின் அத்தையிடம் பேசிக் கொண்டிருந்தார். உடன் நந்தினியும் இடுப்பில் கைவைத்து வயிற்றைத் தாங்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். தயக்கத்துடன் அவர்களுக்கு அருகில் வந்து நின்றாள் அனு. அவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியாததால் வந்த தயக்கம் அது.

 

“நந்தினி…. எதோ வாங்கப் போகணும்னு சொன்னியே… சீக்கிரம் போயிட்டு வந்திடு….” என்றவர், “சாப்பிட்டியா அனு….” என்றார் மருமகளிடம்.

“ம்ம்…. சாப்பிட்டேன் அத்தை….” சொல்லிக் கொண்டே அவருடன் அடுக்களைக்குள் நுழைந்தவளை நோக்கி கண்ணடித்துக் கொண்டே அங்கு வந்தான் பரத்.

 

“அம்மா…. என்ன பண்ணுறிங்க…..” கேட்டுக் கொண்டே அனுவிடம், கண்ணால் வருமாறு சாடை காட்ட, அவள் கண்ணாலேயே மறுத்தாள்.

 

“நான் என்ன பண்ணறேன்னு இங்கே யாருக்கென்ன கவலை…..” என்றவரின் வார்த்தையில் இருந்த குத்தல் அவனுக்கு யோசனையைக் கொடுக்க, “என்னம்மா… ஏன் ஒரு மாதிரிப் பேசறீங்க….” என்றான்.

 

“நான் எல்லாம் எப்பவும் போலத்தான் பேசறேன்….”

 

“அப்படின்னா நான் எப்பவும் போலப் பேசலைன்னு சொல்லறீங்களா….” அவன் சற்றுக் கோபமாய்க் கேட்க அனுவுக்கு பயமாய் இருந்தது.

 

“என்னாச்சு அத்தைக்கு…. ஏன் இப்படிப் பேசறாங்க…. இவர் வேற கோபப்படறார்….. யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க…..” அவளது மனம் தவித்தது. அதற்குள் பரத்தின் அத்தை அங்கே வரவும் பரத் அமைதியாக, தம்பி மனைவியிடம் பேசிக் கொண்டே சென்றுவிட்டார்.           

முதன்முறையாய் அத்தையின் முகம் காணித்தல் அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. முகத்தில் சிரிப்பைத் தொலைத்து ஏதோ பிடிக்காமல் பேசுவது போலிருந்த அவரது பாவம் அவளுக்குப் புதிது.

அவள் அப்பாவியாய் நினைத்திருந்த அத்தைக்கு எத்தனையோ மாற்றம். அதேபோல் நந்தினிக்கும் நாத்தனார் ஜாடை அதிகமாய் இருந்தது. இவள் ஏதோ அந்த வீட்டுக்கு விருந்துக்கு வந்தது போலவும், அவள்தான் அந்த வீட்டுப் பெண் என்பது போல அதிகாரமாய் நடந்து கொண்டாள்.

 

சிறுவயது முதலே அக்காவைப் போல கண்டவள் ஆதலால் அனுவுக்கு அது ஒன்றும் பெரியதாய் தோன்றவில்லை. பரத்தின் மீதிருந்த காதல் மயக்கம் அதைக் கருத்தில் பதியாமல் விட்டதென்றும் சொல்லலாம்.

 

பரத்துக்கு காரணமில்லாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால் பிடிக்காது… அவன் எதார்த்தமானவன். எதையும் ஓப்பனாகப் பேசிடுவான்…. சீக்கிரமே கோபம் வந்து கத்தினாலும் எல்லாப் பொறுப்புகளையும் தன் தோளில் போட்டுக்கொண்டு செய்தும் முடிப்பான்….

 

பரத் கோபத்துடன் வெளியே சென்றுவிட்டான். உறவினர்கள் மதிய உணவுக்கே வீட்டுக்கு வரத் தொடங்கியிருந்தனர். சொந்தங்களைக் கண்டதும் ஊர்ப்பேச்சு பேசும் சந்தோஷத்தில் பரத் அன்னையின் முகம் மலர்ந்திருந்தது. மதிய உணவு முடிந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டு அனைவரும் மாலை வரவேற்புக்குத் தயாராயினர். அழகான இளநீலநிற சட்டை அவனுக்கு பொருத்தமாய் இருக்க, அனுவோ சந்தனப்பட்டில் மெல்லிய அலங்காரத்தில் தேவதையாய் ஜொலித்தாள்.

 

சொந்தங்களும் நட்புகளும் சுற்றமும் சூழ காதில் ஒலித்த மெல்லிசையும் சேர்ந்து விழாக் கோலமாக அனைவரும் பிசியாகி விட்டனர். அனுவுக்குத் தெரியாதவர்களை எல்லாம் பரத் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தான். அவனது அலுவலக நண்பர்கள், வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் என்று.

 

“சோடிப் பொருத்தம் பிரமாதமாருக்கு…. உங்க மருமக ரொம்ப அழகாருக்கா…. அதனால தான் மகனுக்கு இங்கே இத்தனை முறைப்பொண்ணுங்க இருந்தும் கணவன் வீட்டு சொந்தத்துல பொண்ணைப் புடிச்சுட்டிங்களா…..” ஒன்றுவிட்ட உறவினர்களின் பாராட்டில் மனம் குளிர்ந்தாலும் பரத்தின் அன்னை மனதில் ஏதோ ஒரு அச்சம் அலட்டிக் கொண்டிருந்தது.

 

அனுவுக்கு வெகுநேரம் நின்றதில் கால் வலிக்க தலைவலியும் சேர்ந்து சோர்வுடன் இருந்தவளை அமர சொன்னவன், வருபவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

 

நண்பர்களின் உற்சாகபானக் குரல் வீட்டுப் பின்பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தது. பாட்டும் டான்சுமாய் ஒரே கும்மாளமாய் இருந்தனர்.

 

வீட்டுக்குள் நந்தினியின் குரல் உரக்கக் கேட்க அனு உள்ளே சென்றாள். அங்கே அவளது அறைக்குள் நந்தினி கணவனை அதட்டிக் கொண்டிருக்க அவர் நல்ல குடிமகனாக அவர்கள் கட்டிலில் அமர்ந்திருந்தார்.

 

“ஒரு விசேஷம் நடக்குற வீட்டில் கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம வீட்டோட மாப்பிள்ளை இப்படி மூக்கு முட்டக் குடிச்சிட்டு வந்தா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க…..” நந்தினி காளியாய் கத்திக் கொண்டிருக்க பரத்தின் நண்பன் ஒருவனும் அங்கு இருந்தான்.

 

நந்தினியின் கணவன் நல்ல மப்பில் இருந்தாலும் அமைதியாக தான் இருந்தார். நந்தினி தான் அதை பெரிது படுத்திக் கொண்டு துள்ளிக் கொண்டிருந்தாள்.

 

அவள் பேச்சு சகிக்காமல் “நந்தினி…. இப்ப எதுக்கு இப்படி கத்தறே….. நான் என்ன குடிச்சிட்டு யார்கிட்டயாவது ரகளை பண்ணிட்டா இருக்கேன்….” அவர் எழுந்து வந்து கேட்கவும், “ஓ… உனக்கு அப்படி வேற ஒரு நினைப்பு இருக்கா குடிகாரப் பயலே…” என்றவள் கோவத்தில் அவரைத் தள்ளிவிட ஓரமாய் போடப்பட்டிருந்த குஷன் சோபாவில் அவர் விழவும் ஒரு கால் சரியில்லாமல் இருந்த சோபா சரிந்து உள்ளே வந்த அனுவின் காலில் அதன் முனை பட்டு மெட்டி வளைந்து விரலில் குத்தி லேசாய் ரத்தம் வந்தது.

 

அதை கவனிக்காமல் அதிர்ச்சியுடன், “அண்ணா…..” என்று அவரை ஒருபக்கம்  தூக்க மறுபக்கம் பரத்தின் நண்பன் அவரைப் பிடித்துக் கொண்டான்.

அதற்குள் பரத்தும் அங்கே வந்திருக்க, “என்ன பண்ணிட்டிருக்கே…. இங்கே… நீயே எல்லாத்துக்கும் தெரிய வச்சிருவே போலருக்கு….. அவர் அமைதியா தானே இருக்கார்….. நீ பேசாம போ….” என்று அக்காவை அனுப்பிவிட்டு, நண்பனிடம் கண் காட்டி பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, “அனு… நீ இங்கே வந்து நின்னா எப்படி… வர்றவங்க உன்னைக் கேக்குறாங்க வா……..” என்று பந்தலுக்கு அழைத்துச் சென்றான்.

 

அவள் மனதில் இருந்த ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் காற்றில் கரைந்து போக புதுவிதமான அந்த வாழ்க்கைக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ளும் வழியறியாமல் திகைத்தாள். காலில் எரிச்சல் தொடங்க குனிந்து பார்த்தவள் அதிர்ந்தாள். மெட்டி அழுந்தி வளைந்ததில் விரலில் காயமாகி ரத்தம் துளிர்த்திருந்தது.

 

கற்பனைகள் எல்லாம்

கற்பூரமாய் காற்றில் கரைய

கனவுகள் எல்லாம்

காட்சியில் நிறம் மாற

உறவாக நினைத்ததெல்லாம்

உருமாறிப் போய்விட…..

புதிய வாழ்வின் படியிலேறி

புதுவரவாய் வந்தவள்

புதுஜனனம் கொள்ளுகிறாள்….

புகுந்தவீட்டில் பொருந்துவாளா….

புரியாத புதிராய் வாழ்க்கை….

 

Advertisement