Advertisement

அத்தியாயம் – 7

வேரற்ற மரமாய் கட்டிலில் சோர்ந்து கிடந்தவளைக் காணக் காண நிதினுக்கு நெஞ்சை அடைத்தது. கண்கள் அனிச்சையாய் கலங்க அசைவில்லாமல் கிடந்தவளைப் பார்த்துக் கொண்டே ஓரமாய் நின்றிருந்தான். சரவணன் நிதின் அப்படி நடந்து கொண்டமைக்கு காரணம் கேட்க எதுவும் அவன் காதைத் தாண்டி மனதுக்குள் செல்லாததால் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று அவனும் விட்டு விட்டான்.

கையில் குழந்தையுடன் பதட்டமாய் அந்த அறைக்குள் நுழைந்த சசிகலாவுக்கும் அவளைத் தொடர்ந்து வந்த சாதனாவுக்கும் அங்கே கவலையுடன் நின்றிருந்த நிதினைக் கண்டவுடனேயே பாதி விஷயம் புரிந்துவிட்டது. அவளைக் கண்டதும் அவன் கண்ணில் தெரிந்த அதிர்ச்சியும் வலியும் அவள் மனதில் இருந்த எண்ணவோட்டத்தை உறுதிப் படுத்துவதாய் இருந்தது. எதுவும் தெரியாமல் அவனிடம் தான் நடந்து கொண்டதை நினைத்து குற்றவுணர்ச்சியுடன் நோக்கியபடியே சஹானாவிடம் சென்றாள்.

சாதனா உள்ளே நுழையும் போதிருந்தே அதிர்ச்சியும், வியப்புமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நிதினுக்கு மெதுவாய் எல்லாம் விளங்கத் தொடங்கியது.

“சஹி எப்போதும் கூறும் சர்ப்ரைஸ் தங்கை இவள்தானா… இருவரும் இரட்டை என்பதால் தான் என் தங்கை சதியை பார்த்தா நீங்க அசந்து போயிருவீங்க… அவகிட்ட ஒரு சர்ப்ரைஸ் இருக்கு…” என்று அவள் கூறும்போது “அதென்ன சர்ப்ரைஸ்… அவளுக்கு மூணு கை, ரெண்டு கொம்பு, ஒரு வாலு இருக்குமா…” என்று அவன் கிண்டலாய் கேட்கையில் அவள் முறைத்துக் கொண்டே “நேர்ல பார்க்கும் போது நீங்களே தெரிஞ்சுப்பீங்க…” என்று கூறியிருக்கிறாள்.

அவள் கூறிய சர்ப்ரைஸ் இந்த விதத்தில் இருக்குமென்று அவன் யோசிக்கக் கூட இல்லையே… இருவரும் அசப்பில் ஒரே போல இருந்தாலும் தோற்றத்தில் சின்னச் சின்ன வித்தியாசங்கள், குரல் மாற்றம் எல்லாம் இந்த மூன்று வருட இடைவெளியில் தன்னவளிடம் வந்த மாற்றமென்றே அவன் நினைத்திருந்தான்.  

மகளைக் கண்ணீருடன் நோக்கி நின்ற சசிகலா அருகில் வந்த சரவணனிடம், “நீங்கதான் சஹா கூட வொர்க் பண்ணற சரவணனா… டாக்டர் என்ன சொன்னார் தம்பி…” என்று இயல்பாய் கேட்க அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

“ம்ம், நான்தான் சரவணன்… நிதின் என் கசின் தான்…. மேடம்க்கு சட்டுன்னு பிபி குறைஞ்சது காரணமா மயங்கிட்டாங்க… உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு, நல்லா ஓய்வெடுக்கட்டும்னு உறக்க ஊசி போட்டிருக்காங்க… தூங்கி எழுந்ததும் சரியாகிடும்னு டாக்டர் சொன்னார்மா…” என்றான்.

“ம்ம்… என் பொண்ணு இப்படியாச்சும் தூங்கட்டும்…” என்றவர் அமைதியாய் அவள் அருகில் கட்டிலில் அமர்ந்து கொள்ள, அவர் மடியிலிருந்த ஸ்ரீக்குட்டி, சஹானா சலனமின்றிக் கிடப்பதைக் கண்டு “பாத்தி, மம்மிக்கு காய்ச்சலா… ஊசி போத்தாங்களா…” என்று மழலையில் கேட்க, “ஆமாடி செல்லம்…” எனவும், அது விரலை வாயில் வைத்து “உஸ்… சத்தம் போதாத… மம்மி தூங்கதா… தித்துவா…” என்றது.

குழந்தை அவளை மம்மி என்று அழைக்கவும் திடுக்கிட்டு நோக்கிய நிதின் குழப்பமாய் நோக்க சசிகலா, “நீ அம்மாகிட்ட போடா செல்லம்…” என்று குழந்தையை சாதனாவிடம் கொடுக்கவும் தான் நிம்மதியானது. வங்கியிலிருந்து அவர்களுடன் துணைக்கு வந்திருந்த பெண் இவர்கள் வந்ததும் சொல்லிக் கொண்டு கிளம்பினார். சசிகலா என்ன நடந்ததென்று கேட்க சரவணன் வங்கியில் நடந்ததை உள்ளபடியே கூறினான்.

மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் அலட்டிக் கொண்டிருக்க அதுவரை மௌனமாய் நின்ற நிதின் சிறிது நேரம் கழித்து சசிகலாவின் அருகில் வந்தான்.

அவரை ஏறிட முடியாமல் குற்றவுணர்வில் தலை தாழ்த்தியவன், “என்னை மன்னிச்சிருங்கம்மா… நேத்து சஹின்னு நினைச்சு உங்ககிட்ட தெரியாமப் பேசிட்டேன்… ரெண்டு பேரும் ட்வின்ஸ்னு எனக்குத் தெரியாது…” என்று கூற “பரவால்ல தம்பி… நேத்து அதெல்லாம் நடக்கலைன்னா உங்களைப் பத்தி நாங்க தெரிஞ்சுக்குற சந்தர்ப்பமும் கிடைக்காமப் போயிருக்குமே… அங்கிருந்து கிளம்பின பின்னாடி தான் நாங்களும் யோசிச்சோம்… நீங்க சஹான்னு நினைச்சு சாதனா கிட்ட பேசினிங்களோன்னு…”

“ம்ம்… ஆமாம்மா, இப்ப அவ ஹாஸ்பிடல்ல கிடக்கவும் நானே காரணமாயிட்டேன்…” என்றான் வேதனையுடன். சற்று நேரம் மௌனமாய் நீங்க, “உங்களுக்கும் சஹாவுக்கும்  எப்படி…” சாதனா கேட்க, நிமிர்ந்தான்.

“என் பேரு நிதின் ரூபன்… எங்களைப் பத்தி நான் சொல்லறதுக்கு முன்னாடி ஒரு கேள்வியை மட்டும் தெளிவு படுத்திக்கலாமா…” என்றான் நிதானத்துடன்.

“என்ன கேக்கணும் நிதின்…”

“இந்தக் குழந்தை…” அவன் இழுக்கவும், சசிகலா சட்டென்று “சஹா…” என்று சொல்லத் தொடங்குவதற்குள், “அம்மா…” என்று பேச்சை நடுவிலேயே சாதனா துண்டிக்க, அவர் பட்டென்று நிறுத்திக் கொண்டு முழித்தார்.

“அதுவந்து… நான் சொல்லறேன், ஸ்ரீக்குட்டி என்னோட குழந்தைன்னாலும் சஹாவும் அவளுக்கு அம்மா போலத்தான்… அதான் அவளை மம்மின்னும் என்னை அம்மான்னும் அழைக்கறா…” என்றாள் சிரிப்புடன்.

“ஆ…ஆமாம்… அப்படித்தான்… ஸ்ரீக்குட்டி சாதனா குழந்தை தான்… நானும் அதான் சொல்ல வந்தேன்…” என்று சசிகலாவும் சமாளித்தார்.

அதைக் கேட்டதும் தான் அவன் மனம் தெளிந்தது.

“ம்ம்… அதானே… சஹியால என்னை மறந்திட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்ன…” என்ற நிம்மதியில் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டான். அதைக் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட சசிகலாவும், சாதனாவும் “உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா…” என்று கேட்க அந்த நேரத்தில் உள்ளே வந்த நர்ஸ் ஒருவர், “பேஷண்டை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்… ஒருத்தர் மட்டும் பக்கத்துல இருந்தா போதும்…” என்றார்.

“அம்மா, நீங்க சஹா கிட்ட இருங்க… நாங்க வெளிய பேசிட்டு இருக்கோம்…” என்ற சாதனா நிதினிடம், “அவ கண் விழிச்சதும் உங்களைப் பார்த்தா மறுபடி உணர்ச்சி வசப்படுவா… நாம வெளிய போயி பேசலாமா…” என்றாள்.

“ம்ம்…” என்றவன் சஹானாவை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு, வெளியே நடக்க சரவணனும் தொடர்ந்தான். குழந்தையை அன்னையிடம் கொடுத்துவிட்டு சாதனாவும் வர, “நாம கான்டீனுக்கு போயிடலாமா…” என்றான் சரவணன்.

அவள் தலையசைக்க கான்டீனை நோக்கி நடந்தனர்.

“நீங்க எப்ப திருப்பூர் வந்திங்க…

“நாங்க திருப்பூர் வந்து 20 நாள் தான் ஆகுது… சஹாக்கு முதல்ல பாலக்காடு தான் போஸ்டிங் போட்டாங்க… டிரான்ஸ்பர்ல இங்கே மாத்திட்டாங்க… கான்சல் பண்ண ரொம்ப டிரை பண்ணோம்… பட் முதல் டிரான்ஸ்பர் அக்சப்ட் பண்ணிதான் ஆகணும், அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாங்க… அவளைத் தனியா விட வேண்டாமேன்னு நாங்களும் கூட வந்துட்டோம்…” பேசிக்கொண்டே கான்டீன் வர, லஞ்ச் டைம் முடிந்ததால் கூட்டமில்லாமல் இருந்தது. ஓரமாய் இருந்த மேசையை சுற்றி அமர்ந்தனர்.

“ஏதாச்சும் சாப்பிடறீங்களா… ஆர்டர் பண்ணட்டுமா…” என்றான் சரவணன்.

“இல்ல, நான் காலைல லேட்டா தான் சாப்பிட்டேன்… நீங்கதான் பாவம்… லஞ்ச் மிஸ் பண்ணிருப்பீங்க… சாப்பிடுங்களேன்…” என்று சாதனா கூற நிதின் அந்த யோசனையே இல்லாதவன் போல இருக்க சரவணனுக்கு நன்றாகப் பசித்தது. இருந்தாலும் சூழ்நிலை கருதி காபி வித் வடை மட்டும் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தான்.

நிதினின் மௌனம் அவன் பழைய நினைவுகளுக்குள் ஆழ்ந்திருப்பதைக் கூற காபி வரும்வரை மௌனமாகவே கழிந்தது. வடையோடு அதைக் குடித்து முடித்தவர்கள் நிதின் சொல்வதைக் கேட்பதற்காய் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் சொல்லத் தொடங்கினான்.

சரவணனை ஒரு பார்வை பார்த்தவன், நானும் சஹியும் கோவைல ஒரே காலேஜ்ல படிச்சோம்… அவ M.Com முதல் வருடம் ஜாயின் பண்ணும்போது நான் கடைசி வருஷம் MBA படிச்சிட்டு இருந்தேன்… அப்போல்லாம் ராகிங் பேர்ல புதுசா வர ஸ்டூடண்ட்ஸ்க்கு சீனியர்ஸ் நிறைய டாஸ்க் கொடுத்து அவங்களை செய்ய சொல்வாங்க… அப்படி ஒருநாள் தான் நாங்க சந்திச்சோம்…” அவன் சொல்லத் தொடங்கினான்.

கோவை ஹிந்துஸ்தான் காலேஜ்.

கல்லூரியின் பெரிய காம்பஸ் பட்டாம் பூச்சிகளின் உற்சாகச் சிறகடிப்பில் களை கட்டியிருக்க அன்று புது மாணவர்களை வரவேற்று ராகிங் என்ற பெயரில் வைத்து செய்வதற்காய் சீனியர் பட்டாளம் அங்கங்கே கூடியிருந்தது. உள்ளே நுழைந்த புது மாணவர்களை பாட்டு, டான்ஸ், மோனோ ஆக்டிங் என்று செய்ய சொல்லி அதைப் பார்த்து கை கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது சீனியர் பட்டாளம். மோசமான முறையில் ராகிங் செய்யக் கூடாது என்று கல்லூரி நிர்வாகம் தடை விதித்திருந்ததால் அமைதியான முறையில் அகிம்சை வழியிலேயே உற்சாகமும், கும்மாளமுமாய் சிறப்பாய் செய்து கொண்டிருந்தனர்.

முன்னில் ஒரு சீனியர் மாணவிகள் குரூப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவர்களுக்கு எதிரில் சற்றுத் தள்ளி ஒரு கேங்காக சீனியர் மாணவர்கள் புது மாணர்களை பெண்களைப் போல சேலையணிந்து நடக்க சொல்லி ஆரவாரம் செய்ய அவர்களுடன் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான் நிதின் ரூபன். நீல நிற ஜீன்சும் வெள்ளை ஷர்ட்டுமாய் கண்ணில் கூலருடன் அசத்தலாய் இருந்தான்.

அவனை அவ்வப்போது திரும்பி நோக்கிக் கொண்டிருந்த தன் தோழியிடம், “ஏன் நிதா… நீயும் காலேஜ்ல சேர்ந்த நாள் முதலா அந்த ரூபனை பிராக்கெட் போட டிரை பண்ணிட்டே இருக்கே… அவன் என்னடான்னா உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்காம நழுவிட்டே இருக்கான்… போடான்னு விட்டுட்டுப் போகாம எதுக்கு இந்த லுக்கு…” என்றாள் கீதா.

“நானெல்லாம் அவனைக் கை கழுவி ரொம்ப நாளாச்சுடி… ஹூம்… எத்தன பேர் நம்ம காலேஜ்ல என் பின்னாடி சுத்துறாங்க… எவனையும் கண்டுக்காம இவன் பின்னாடி நான் சுத்தினேன்… அவன் என் பிரபோசலை உதாசீனப் படுத்தின போதே அவனை மனசுல இருந்து நான் தூக்கிப் போட்டுட்டேன்… ஆனாலும் அந்த வலியை மறக்க முடியல…”

“ம்ம்… அவனுக்கு தான் ஒரு ஹீரோன்னு மிதப்பு… என்ன ஸ்டைலா உக்கார்ந்துட்டு இருக்கான் பார்த்தியா…”

“ம்ம்… இவன் பெரிய விஸ்வாமித்திரன்… படிக்க வந்தவன் எந்தப் பொண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டானாம்… இவனையும் அசைக்க ஒரு மேனகா வராமலா இருப்பா…” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே கல்லூரிக்குள் நுழைந்தாள் வெள்ளைச் சுரிதாரில் அந்த அழகிய தேவதை. கண்கள் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க சிறு மெல்லிய இதழ்கள் புன்னகை சிந்த காற்றில் அலைமோதிய கூந்தலை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே தோளில் தொங்கிய பாகுடன் உற்சாகமாய் உள்ளே நுழைந்தாள்.

“வந்துட்டா…” உள்ளே நுழைந்தவளைக் கண்டதும் நிதா சொல்ல, “யாருடி வந்துட்டா…” என்றாள் கீதா.

“நீ அந்த மேனகையை மடக்கு… நான் இப்ப வந்திடறேன்…” என்றவள் அங்கிருந்து நகர கீதா சக தோழிகளுடன் அவளை மடக்கி அழைத்துச் சென்றாள்.

“ஏய்… உன் பேரென்ன…” அதட்டலாய் வந்த அவள் கேள்விக்கு “நான் சஹானா… எம்காம் சிஏ பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட்…” என்றாள் பளிச்சென்று.

“என்னடி, MComனு சொல்லுறா, இவளை சீனியர் காட்டகரில சேத்துறதா, புது ஸ்டூடன்ட் லிஸ்ட்ல சேத்துறதா…” அங்கிருந்த மாணவிகள் தங்களுக்குள் கிசுகிசுக்க அதைக் கேட்டு புன்னகையுடனே நின்றிருந்தாள் சஹானா.

“இங்க பாரு, நீ Mcom னு சொன்னாலும் இந்த காலேஜ் பொறுத்தவரை நியூ ஸ்டூடன்ட் தான்… சோ நாங்க சொல்லுறதை செய்து தான் ஆகணும்…” கீதா கெத்தாய் கூற, தலையை அழகாய் கோதிக் கொண்டாள்.

“ஓகே… நோ பிராப்ளம்… நான் என்ன பண்ணனும்…” என்றாள் அதே சிரிப்புடன்.

“ம்ம்… சரி, நீ எந்த ஊரு… கேரளாவா…” என்றாள் அவளது தமிழில் லேசாய் வீசிய மலையாள வாடை கண்டு.

“பேசிக் தமிழ்நாடு தான்… இப்ப இருக்கறது கேரளா…”

“ஓ… கேரளத்து ஓமனக்குட்டியாக்கும்…” கேட்டுக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தாள் நிதா.

“சரி, ஒரு மலையாளப் பாட்டு பாடு…” அவள் கேட்கவும் ஒரு நிமிடம் யோசித்தவள் அழகாய் பாடத் தொடங்கினாள்.

பூமானமே… ஒரு ராக மேகம் தா….

கனவாய்… கனமாய்…

உயரான் ஒழுகான் அழகிய

பூமானமே… ஒரு ராக மேகம் தா…

அவள் பாட, புரியாமல் முகத்தை சுளித்தவர்கள், “ஏய்… இரு, இரு… இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது… நமக்குத் தெரிஞ்ச மலையாளப் பாட்டு கடலினக்கற போனோரே யும், ஜிமிக்கி கம்மலும் தான்… அதைப் பாடு…” என்றாள் கீதா.

அதைக் கேட்டு சிரித்த சஹானா வேறு பாடினாள்.

என்டம்மேட ஜிமிக்கி கம்மல்

என்டப்பன் கட்டோண்டு போயே…

என்டப்பன்டே பிராந்தி குப்பி

என்டம்மா குடிச்சு தீர்த்தே…

அவள் பாடத் தொடங்கும்போதே அங்கு களைகட்ட அவளைச் சுற்றிலும் கை தட்டி சீனியர்ஸ் ஆடத் தொடங்கினர். அதைக் கண்ட மற்ற மாணவர்களும் கவனிக்க நிதினும் பார்த்தான். ஆனால் அவளைச் சுற்றிலும் நின்ற சீனியர் கூட்டத்தில் அவளைத் தெரியவல்லை.

“ஓ… புதுசா ஒரு பட்டாம்பூச்சி அவளுங்க கைல சிக்கிடுச்சு போலருக்கு…” என்று சக நண்பன் கமண்ட் அடிக்க இவர்கள் இங்கே கவனித்தனர்.

“ஓகே, ஓகே… உங்க வீட்டுல உனக்கு சரியான பேரை தான் வச்சிருக்காங்க, சஹானான்னு… அழகாப் பாடறே… நம்ம காலேஜ்க்கு ஒரு சூப்பர் பாடகி கிடைச்சுட்டாடி…” என்று சிரித்த நிதா, “இதெல்லாம் சூப்பரா பண்ணிட்டே… இன்னும் ஒரு டாஸ்க் மட்டும் முடிச்சுட்டா நீ கிளாஸ்க்கு போகலாம்…” என்றாள்.

அப்போதும் மாறாத புன்னகையுடன் பொறுமையாய் நின்ற சஹானா, “என்ன பண்ணனும் சொல்லுங்க…” என்று கேட்க, நிதா பண்ண சொன்னதைக் கேட்டு திகைத்துப் போனவள் புன்னகை முகம் வெளிறிப் போக, “என்ன சொல்லறீங்க…” என்றாள் பயத்துடன்.

“அட, இதுக்கெல்லாம் பயந்துட்டா எப்படி… இங்கே எல்லா வருஷமும் இதெல்லாம் நடக்குறது தான்… இந்தாப் புடி…” என்று அவள் கையில் ஒரு மாலையைத் திணித்து, “அங்க எதிர்ல நிறைய பசங்க நின்னுட்டு இருக்காங்கல்ல… அதுல அந்த வெள்ளைசட்டை பையன் கழுத்துல இந்த மாலையைப் போட்டு, ஐ லவ் யூ ன்னு சொல்லிட்டுப் போயிடு…”

“அச்சோ, அதெல்லாம் வேண்டா… தேவையில்லாத பிராப்ளம் ஆகிடும்… எனக்கு வேற டாஸ்க் கொடுங்க… நான் வேணும்னா டான்ஸ் ஆடட்டா…” என்றாள்.

“ஹலோ, என்ன… ஓவர் ஸ்மார்ட் ஆக வேண்டாம்… சொன்னதைச் செய் போ…” என்று விரட்டினாள் கீதா. தயங்கியவள் அவர்கள் முறைத்துப் பார்க்கவும், “இதெல்லாம் தப்பில்லையா, அவங்க என்ன நினைப்பாங்க…” என்று பயமாய் கேட்க, “அவங்க எதுவும் நினைக்க மாட்டாங்க… எல்லாரும் எங்க பிரண்ட்ஸ் தான்… போ, போ…” என்று விரட்ட தயக்கமாய் ஒவ்வொரு அடிக்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டே நிதின் கேங்கை நோக்கிப் போனாள்.

ஒரு பையனுக்கு நெற்றியில் பொட்டு வைத்து, தலையில் பூ வைத்துக் கொண்டிருந்த மாணவன் தங்களை நோக்கி ஒரு பெண் வருவதைக் கண்டதும், “என்னடா மாமு… நம்மை நோக்கி ஒரு பட்டாம்பூச்சி வருது…” என்றான் ஆவலுடன். அதைக் கேட்டு மற்ற மாணவர்களும் திரும்பிப் பார்க்க நிதினும் பார்த்தான்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் அருகில் வந்த சஹானா, “சேட்டா… மன்னிச்சிடுங்க… அந்த சீனியர் கேர்ள்ஸ்  எல்லாம் இப்படி செய்தா தான் என்னை கிளாசுக்கு விடுவேன்னு சொல்லிட்டாங்க… அதான்…” என்று சொல்லிக் கொண்டே கையில் வைத்திருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டு, “லவ் யூ சேட்டா…” என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் ஓடிவிட்டாள்.

என்ன நடந்ததென்று புரிவதற்குள்ளேயே அவள் அங்கிருந்து ஓடியிருக்க, அழகான தேவதையாய் தன் முன்னில் நின்று கண்களில் நிறைந்த கலக்கத்துடன் அழகான சிறிய உதடுகள் திறந்து தன்னிடம் அவள் கூறிய வார்த்தைகள் காதுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்தான் நிதின் ரூபன். சுற்றிலும் நின்ற மாணவர்கள் அதைக் கண்டு “ஹே…..” என்று ஆரவாரிக்க தன் கழுத்தில் மாலை இட்டவளை கண்கள் தேட அவளோ எங்கோ ஓடி மறைந்திருந்தாள்.

யாரோ அவள் யாரோ அவள்

என் நெஞ்சிலே பூ பூத்தவள்…

யாரோ அவள்… யாரோ அவள்…

கண் முன்னிலே கவிப்பூ அவள்…

காணாமலே தவிப்பானவள்…

காதுக்குள் தேனானவள்…

யாரோ அவள்… யாரோ அவள்…

   

Advertisement