Advertisement

அத்தியாயம் – 3

புது ஆர்டர் விஷயமாய் கம்பெனி மானேஜர் ஒருவரைக் காண வந்திருந்தான் நிதின்.

“சார்… இந்த ஆர்டர் தீபாவளிக்குள்ள முடிச்சு மும்பை அனுப்பனும்… அப்புறம் ஒரு மாசத்துக்கு போனஸ் வாங்கிட்டு ஊருக்குப் போற லேபர்ஸ் யாரும் ஒழுங்கா வேலைக்குத் திரும்ப மாட்டாங்க… அதுக்குள்ளே உங்களால முடிக்க முடியுமா…” நிதினுடன் பேசும்போதே அலைபேசி சிணுங்க எடுத்து யாரிடமோ எரிந்து விழத் தொடங்கினார்.

அது ஒரு பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனி. நிட்டிங், கட்டிங், காம்பாக்டிங், டையிங், பிளீச்சிங், ஸ்டிச்சிங் என நூல் துணியாகி கலராகி முழுமையாய் வெளியே வரும் வரை உள்ள அனைத்து பெரிய வேலைகளும் அவர்களே செய்து கொண்டு பனியனில் படங்களை அச்சிடும் சிறிய பிரிண்டிங் வேலையை மட்டும் வெளியே கொடுத்து ஜாப் வொர்க் போல செய்து வந்தனர்.

அவர் போனில் பேசி முடிக்கும்வரை பொறுமையாய் காத்திருந்த நிதின், “நிச்சயம் உங்களுக்கு எப்ப வேணுமோ அந்த தேதிக்குள்ளே முடிச்சுக் கொடுத்திடறேன் சார்… இந்த ஆர்டரை எனக்கே கொடுங்க… கண்டிப்பா நல்லா செய்து தருவேன்… முதல் ஆர்டர் உங்களுக்கு திருப்தியா இருந்தா அடுத்த ஆர்டரைக் கொடுங்க…”

“ம்ம்… சரிங்க… முன்னாடி அக்கவுண்ட்ஸ் செக்சன்ல டீடைல்ஸ் வாங்கிக்குங்க… முதல்ல சின்ன குவான்டிடிக்கு  ஒரு PO அனுப்ப சொல்லறேன்… பார்த்திட்டு பெரிய ஆர்டர் போட்டுக்கலாம்…” அவர் சொல்லிவிட்டு இன்டர்காமில் யாருக்கோ பேசிவிட்டு, “நீங்க போயி பாருங்க சார்…” என அனுப்பி வைக்க அங்கே சென்று கையோடு PO வாங்கிக்கொண்டு வெளிய வந்தான். அன்றே பிரிண்டிங் டிசைனையும் அதற்கான பனியன் துணிகளையும் அனுப்புவதாகக் கூறியிருந்தனர். மனதுக்குள் நம்பிக்கை துளிர்விட சந்தோஷமாய் பைக்கை எடுக்க சென்றான் நிதின். அலைபேசி சிணுங்க பல்லடம் புரோக்கர் அழைத்தார்.

“தம்பி… நம்ம இடத்தைப் பார்க்க இன்னைக்கு ஒரு பார்ட்டியக் கூட்டி வந்தேன்… அவருக்கு இடம் பிடிச்சிருச்சாம்… ஆனா ரேட் தான் அதிகமா இருக்குன்னு பீல் பண்ணறார்…”

“நம்ம இடத்துக்கு ரொம்ப ரீசனபிளா தான் விலை சொல்லிருக்கோம்… நமக்கு பணத்துக்கு அவசரம்னா அடிமாட்டு விலைக்கு கூட கேப்பாங்க… அதுக்காக நஷ்டத்துக்கு கொடுக்க முடியாது… நீங்க பேசிப் பாருங்க… தங்கச்சிக்கு இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் முடிவு பண்ணிருக்கோம்… அதுக்குள்ளே அந்த இடத்தை வித்துட்டா கொஞ்சம் உதவியா இருக்கும்…”

“சரி தம்பி… வேற பார்ட்டி ஒத்து வருதான்னு பார்ப்போம்… வச்சிடறேன்…” என்றவர் போனை வைக்க, அவரிடம் பேசிக் கொண்டே நிமிர்ந்தவன் அதிர்ந்தான். சாலையின் எதிர்புறம் இருந்த ஆட்டோவில் கையில் குழந்தையுடன் ஏறிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்… அது… அவள்தானே… வேகமாய் கிராஸ் செய்ய முயல அவனது அவசரம் புரியாமல் வாகனங்கள் நிற்காமல் போய்க் கொண்டிருந்தன. அதற்குள் அந்த ஆட்டோ கிளம்பிவிட கையை ஆட்டி அழைக்கப் பார்த்தான்.

“ஹேய் நில்லு… ஆட்டோ….” அவனது குரல் காற்றில் கரைய அது வேகமாய் சாலையில் சென்று மறைந்தது. தலையில் கை வைத்து அதையே பார்த்து நின்றவன் நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

“ச்சே… கண்ணுக்கு முன்னாடி சிக்கியும் அவளைக் கோட்டை விட்டுட்டேனே… அவ எப்படி இங்கே…” குழப்பமாய் யோசித்துக் கொண்டே மீண்டும் திரும்பிப் பார்த்தான். பைக் நிறுத்திய இடத்துக்கு வந்தவன் சீட்டில் அமர்ந்து சாவியைப் போட்டுத் திருக அது ஸ்டார்ட் ஆக மறுத்தது.

“ச்சே… நேரம் காலம் தெரியாம இந்த பைக் வேற…” திட்டிக் கொண்டே அதை ஓங்கிக் குத்தவும் அருகே கடை ஒன்றில் நின்று எதோ வாங்கிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் வேகமாய் ஓடி வந்தான்.

“சார்… இது என்னோட பைக்…” என்று கூறவும் முழித்தவன், அருகில் இருந்த தனது பைக்கை நோக்கிவிட்டு, “ச…சாரி… மாறிடுச்சு…” என்று இறங்கி தன் பைக்கை எடுத்தான். அந்த இளைஞன் நிதினை திருட வந்தவனைப் போல் பார்க்க மீண்டும் ஒரு சாரி சொல்லிவிட்டு வண்டியை விட்டான்.

வீட்டு போர்டிகோவில் தடதடத்த பைக்கின் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த மீனாட்சி, “நிதின் மதிய சாப்பாடுக்கு வர மாட்டேன்னு சொன்னான்… இப்போ வந்திருக்கான்…” என யோசித்துக் கொண்டே முன்னில் வந்தவர், “என்னப்பா, சாப்பாட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டுப் போன… நான் எங்களுக்கு மட்டும் சிம்பிளா சமைச்சுட்டேனே…” என்று அங்கலாய்க்க, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் உள்ளே நுழைந்து மாடிப்படியேற அவனை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டே “இங்கே ஒருத்தி கேட்டுட்டு இருக்கேன்… அவன் பாட்டுக்குப் போறான் பாரு… சரியான லூசுப்பய…” சொல்லிக் கொண்டே சீரியலைப் பார்க்கத் தொடங்கினார். அறைக்குள் இருந்து எட்டிப் பார்த்த பிரபா, “அண்ணா வண்டி சவுண்டு கேட்டுச்சு… வந்திருச்சா மா…” ஆவலுடன் கேட்க, “ஆமா வந்தான் மாடியேறிப் போனான்… நான் ஒருத்தி கேக்குறதுக்கு எப்ப நின்னு முழுசா பதில் சொல்லியிருக்கான்… கிறுக்குப் பய… நீ போயி வேலையப் பாரு…” சொல்லிவிட்டு சின்னத் திரையில் சீரியலை கவனிக்கத் தொடங்கினார்.

அறைக்குள் நுழைந்த நிதினின் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்குமாய் அறையை அளந்து கொண்டே நடந்தவன் உள்ளத்தின் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியாமல் தவித்தான்.

“ஏண்டி… ஏன்… எதுக்கு என்னை விட்டுட்டுப் போன… உன்னை உருகி உருகி காதலிச்சதைத் தவிர நான் என்ன தப்பு பண்ணேன்… எப்படில்லாம் கனவு கண்டிருந்தேன்… உன்னை ராணி போலத் தாங்கணும்னு கற்பனை பண்ணி வச்சிருந்தேன்… மனசுக்குள்ளே குடும்பம் நடத்தி குழந்தை கூட பெத்துகிட்டோமே… எல்லாத்தையும் மறந்திட்டு எந்தக் காரணமும் சொல்லாம எதுக்கு என்னை விட்டுட்டுப் போன… இன்னைக்கு வருவ, நாளைக்கு வருவேன்னு நான் காத்திருந்த காத்திருப்புக்கு என்ன அர்த்தம்…” கோபத்தில் தலையை உலுக்கிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவன் மனதில் மீண்டும் அவள் ஆட்டோவில் ஏறியது நினைவில் வர, “அவ கையில் ஒரு குழந்தை இருந்துச்சே… அதும் அப்படியே அவ சாயல்ல… அப்படின்னா, அவளுக்குக் கல்யாணம் ஆகிருச்சா… என்னை அடியோட மறந்துட்டாளா…” நினைக்கும்போதே மனம் பதற அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டான்.

ஆத்திரமும் வேதனையும் உதாசீனத்தின் வலியும் மாறி மாறி அவனைத் தாக்க கண்ணை மூடி அப்படியே கட்டிலில் சாய்ந்தான்.

“ஐ லவ் யூ ரூபன்…” காதுக்குள் ஒலித்த குரல் இதயத்தை சம்மட்டியாய் தாக்க தலையை உலுக்கிக் கொண்டு எழுந்தவன், “மறக்கவும் முடியாம வெறுக்கவும் முடியாம என்னை இப்படி நரகத்தில் தள்ளிட்டுப் போயிட்டியேடி பாவி…” வாய்விட்டு புலம்பியவன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாய் வெளியே வந்தான்.

ஹாலிலிருந்த மீனாட்சி மகனைக் கண்டு, “எப்பா நிதின்…” என அழைத்துக் கொண்டே பின்னில் வர காதில் வாங்கிக் கொள்ளாமலே கடந்தவன் பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தான். திகைப்புடன் நோக்கி நின்றவர், “இவன் எதுக்கு இப்ப இங்க வந்தான்… ஏன் இப்ப போறான்… எதைக் கேட்டாலும் பதில் சொல்லறதும் இல்ல… கிறுக்குக் கீது பிடிச்சிருச்சா… என்ன பையனோ…” என சலித்துக் கொண்டே மீண்டும் சோபாவில் நிறைந்தார்.

****************

சஹானா வங்கியில் பொறுப்பெடுத்துக் கொண்டு ஒரு வாரம் கழிந்திருந்தது. புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலை மனதுக்கு இதத்தையும் உற்சாகத்தையும் அளிக்க புத்துணர்வுடன் வலம் வந்தாள். அவளுக்கான சின்ன காபினில் மேசை மீதிருந்த பைல்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள் நேர்த்தியாய் உடுக்கப்பட்ட காட்டன் புடவையில் அழகாய் கம்பீரமாய் இருந்தாள். காதில் சிறிய தோடும் கழுத்தில் சன்னமாய் ஒரு சங்கிலியும் அன்னையின் வற்புறுத்தலில் அணிந்திருக்க அவளுக்கு பாந்தமாய் இருந்தது. பைலில் மூழ்கி இருந்தவள் இன்டர்காம் சிணுங்கவும் எடுத்து காதுக்குக் கொடுத்தாள். எதிர்புறத்தில் மானேஜர் அவளை தன் காபினுக்கு வரும்படி அழைக்க சரி சொல்லி வைத்துவிட்டு எழுந்தாள்.

அவரது கண்ணாடிக் கதவின் முன் நின்று, “எக்ஸ்யூஸ் மீ சார்…” என்று சம்பிரதாய வார்த்தையை உதிர்த்து அவரது தலையாட்டலுக்குப் பிறகு உள்ளே நுழைந்தாள்.

உள்ளே மேசைமீது “சாந்தமூர்த்தி-மானேஜர்” என்ற பெயர்ப்பலகை பளபளக்க ஐம்பது வயது சாந்தமூர்த்தி கண்ணாடி அணிந்து நாற்காலியில் உண்மையிலேயே சாந்த மூர்த்தியாய் அமர்ந்திருந்தார்.   

“வாங்க சஹானா… கொஞ்சம் பீல்டு வொர்க் இருக்கு… ஒரு பெரிய கம்பெனி புரோஜக்ட்க்கு வால்யூஷன் பார்க்கப் போகணும்… கிளாஸிக் குரூப்ஸ் பனியன் துறையில் பெரிய குரூப்… அவங்க லோன் அப்ளிகேஷன் பைல் உங்க டேபிள்ள இருந்திருக்குமே.. பார்த்திங்களா…”

“ம்ம் பார்த்தேன் சார்… 50 கோடி புரோஜக்ட் போலருக்கு…”

“எஸ் மா… அதுதான் பார்க்கப் போறோம்… பத்து நிமிஷத்தில் பைலோட ரெடியா இருங்க… கார் வந்திடும்…”

“ஓகே சார்…” சொன்ன சஹானா அவரது அறையை விட்டு வெளியேற அவர் மூக்குக் கண்ணாடியை மேலேற்றிக் கொண்டே கம்ப்யூட்டரில் எதையோ பார்க்கத் தொடங்கினார்.

மேசை மீது திறந்து வைத்திருந்த பைல்களை எடுத்து வைத்தவள் அவரது அழைப்புக்காய் காத்திருக்க சொன்னது போல் பத்து நிமிடத்தில் அழைப்பு வர, கொண்டு செல்ல வேண்டிய பைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். வேறொரு வங்கி ஊழியருடன் பேசிக் கொண்டிருந்த சாந்தமூர்த்தி, இவளைக் கண்டதும் எழுந்து வந்தார்.

“பைலை எடுத்தாச்சு தானே…”

“எஸ் சார்…”

“குமார்… அவங்க புளு பிரிண்ட்ல ஏதோ சந்தேகம் சொன்னிங்களே… அதை கேட்டு கிளியர் பண்ணிக்கங்க…”

“ஓகே சார்…”

“நாம வரோம்னு இன்பார்ம் பண்ணியாச்சு தானே…”

“பண்ணிட்டேன் சார்…”

“ஓகே கிளம்பலாம்… அப்புறம் சஹானா…” என்று நடந்து கொண்டே அவளிடம் ஏதோ கேட்க பதில் சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி நடந்தவள் காதில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த குரல் ஒன்று காதில் விழுந்தது.

“இனி யாருடைய முகத்துல முழிக்கவே கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேனோ அவனோட குரல் தானே இது…” இதயத்தை உலுக்கிய அந்தக் குரலில் அதிர்ந்து சட்டென்று  திரும்பிப் பார்க்க நிதின் சரவணனின் மேசைக்கு முன்னே அமர்ந்து எதோ பேசிக் கொண்டிருந்தான்.

முகம் சிவக்க பேயறைந்த போல் அங்கேயே நின்று விட்டவளை கவனித்துவிட்ட சாந்தமூர்த்தி, “என்னாச்சு மா… ஆர் யூ ஓகே… போகலாம் தானே…” என்று கேட்க, வேகமாய் தலையாட்டியவள் அவசரமாய் வாசலுக்கு விரைந்தாள்.

“சட்டுன்னு என்னாச்சு இந்தப் பொண்ணுக்கு…” குழந்தைகள் இல்லாத அவருக்கு மகள் வயதிலிருந்தவளை நினைத்து வருத்தம் தோன்ற எதும் பேசாமல் தொடர்ந்தவர் காரில் ஏறிக் கொள்ள வண்டி கிளம்பியது. அதுவரை இருந்த சூட்டிப்பும் உற்சாகமும் வடிந்து போக எங்கோ வெளியே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை யோசனையுடன் கவனித்துக் கொண்டிருந்தார் சாந்தமூர்த்தி.

மீட்டுக் கொண்டதாய்

நான் நினைத்ததெல்லாம்

மீள முடியாக் கடலென்று

உனக்காய் என் இதயம்

துடிக்கையில் உணர்ந்து கொண்டேன்…

Advertisement