Advertisement

ஒருவாரமும் ஓய்வில்லாது பம்பரமாக சுழன்றது ஸ்டுடியோ. காலையில் முதல் ஆளாக வந்துவிடும் ஷிவி இரவு வரையிலும் இங்குதான் இருந்தாள்.

காலையில் மனோ வரும் போது, ஷிவி அவளறையில் இருந்தாள்.

வெகு நேரமாகியும் காலை உணவிற்குக் கூட எழுந்து செல்லாது, வேலையில் ஆழ்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

ஒன்பதரைக்கு வேலைக்கு வந்த மனோவின் முதல் பார்வை அவளைச் சுற்றித்தான். மாதவியிடம் பேசும்போதே ஷிவி எப்போது வந்தாள்? வெளியில் சென்றாளா இல்லையா? என விசாரித்து அறிந்து கொண்டான்.

கீழே இருக்கும் உணவகம் சென்று உண்டவனுக்கு அவள் ஞாபகத்தில் ஒருவித நெருடல்.

அவளுக்கும் உணவினை வாங்கிக்கொண்டு மீண்டும் ஸ்டுடியோவிற்குள் வந்தான்.

காஃபி வெண்டர் மிஷினைத் தவிர்த்து, எலக்ட்ரிக் ஸ்டவ் உதவியோடு இவனே இருவருக்கும் காஃபி வைத்து, அவரவர் கோப்பையில் ஊற்றினான்.

ஷிவியின் அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தவன், “மேம் உங்க வேலை வெனீஸ்க்கு ஓடிப் போயிடாது. சாப்பிட்டு வேலையைப் பாருங்க” என்றபடியே மேசையின் மீது உணவையும் காஃபியையும் வைத்தான்.
சாண்ட்விச்சும் ஆவி பறக்கும் காஃபியும் பார்த்தபடியே பார்வையை உயர்த்தினால் இளநகை மின்ன வசீகரனாய் மனோகர்.

ஒரு பார்வை உற்றுப்பார்த்தவள், “என்ன இதெல்லாம்? நான் கேட்டேனா?” அழுத்தமான குரலில், மூக்கு விடைக்க, அதட்டல் தொனியில் வினவினாள்.

“உங்க காசுதான். ஃபஸ்ட் மன்த் சேலரி வாங்கியிருக்கேன்ல அதான்” உள்ளே பற்களை கடித்தவன், வெளியே முத்துப் பற்கள் மின்ன இளித்தான்.

“மனோ” ஆரம்பித்தவளின் வாயிலிருந்து அடுத்த வார்த்தை வரும் முன் குடுகுடுவென அறையில் இருந்து ஓடிவிட்டான்.

அவன் உருவம் கண் மறைய, ஷிவி மீண்டும் உணவின் மீது பார்வை வைத்தாள். வயிற்றில் அமில சுரப்பிகள் அதன் இருப்பை உணர்த்தி, பசியைத் தூண்டியன.

வழக்கத்தை விடவும் இந்த காஃபியின் வாசம் நாசி வழி நுழைந்து வசியம் செய்தது. காஃபி கோப்பையை எடுத்து உள்ளங்கைகளுக்குள் பற்றும் போதே இதமான இளஞ்சூட்டை உணர்ந்தாள்.

நுனி நாக்கை வைக்கும் போதே சுள்ளெனப் பற்றியது. அதரங்களில் அழுத்தி வாயில் சரித்து விழி மூடியவள் ஒருநொடி உலகம் மறந்து போனாள். எப்போதும் போல் இல்லாத புதுசுவை ஒருதுளி தூக்கலான காஃபி பவுடரின் ஆதிக்கம் இவளை அடிமையாக்கியது.

ஒருதுளி உதட்டால் தொட்டவள், கடைசி துளி வரையிலும் உறிஞ்சி விட்டாள். சாண்ட்விச்சையும் கரங்களில் எடுத்துக் கொண்டவளுக்கு வேலையை விட்டுவிட்டு மனோவின் அக்கறை பற்றிய ஆராய்ச்சிக்கு நேரமிருக்கவில்லை.

புகைப்படக் கண்காட்சிப் பற்றிய தகவல்களை கடைசி நிமிடங்களில் அறிந்த போதும் குறுகிய காலத்திலே ஊண் உறக்கமின்றி அனைத்து வேலைகளையும் அசுர வேகத்தில் முடித்துவிட்டாள் ஷிவன்யா.

எடிட்டிங் அறையில் மீட்டிங், அனைவரும் குழுமியிருந்தனர். முதலில் இந்த சில வாரங்களில் ஓய்வில்லாது கடினமான உழைப்பைக் கொண்டிய தனது ஊழியர்களுக்கு பாராட்டுகளை உரைத்தாள்.

பின் நடக்கவிற்கும் சர்வதேச புகைப்படக் கண்காட்சிக்கு தனக்கு உதவியாக, தன்னோடு யாரால் வர இயலும்? என்றவள் அவர்கள் முகம் பார்த்தாள்.

“சாரி மேம், எனக்கு லாஸ்ட் செமஸ்டர். ஏற்கனவே உங்ககிட்ட லீவ் சொல்லியிருந்தேன். காலேஜ்தான் போறதில்லை, எக்ஸாம்க்கு போகணுமே?” சாஹர் தன் நிலைமையை விளக்க, தலையசைத்தாள் ஷிவி.

ஜெனியின் புறம் பார்வையைத் திருப்பியவளுக்கு, “சாரி மேம்” என்னும் பதிலே அவள் இயலாமையைச் சொன்னது.

ஜெனியின் சூழ்நிலையையும் அறிந்தவள் ஷிவி என்பதால், அதற்கும் தலையாட்டினாள்.

இருவருமே கவலையாகப் பார்த்திருக்க, “ஒன்னும் பிரச்சனையில்லை, அங்க இருக்கிற ஃப்ரண்ட்ஸ் மூலமா வேற ஆப்ஷன் பார்த்துக்கிறேன்” என்ற ஷிவி எழுந்து சென்றுவிட, மனோவிற்கு முகமே சுண்டிப் போனது.

இருவரையும் கேட்டவள் தன்னை ஒருவார்த்தை அழைக்கவில்லை. தன்புறம் ஒருபார்வை கூட வீசாததில் வெகுண்டு எழுந்தான்.

அவள் பின்னே சென்றவன், அவளறை வாசலை நெருக்கும் போதே, “நான் ப்ரீதான், நான் வர்றேன்” தன்மானம் விட்டு, தானாக வினவியபடியே முன் வந்து நின்றான்.

அடர்கருவிழிகள் கூர்மையாக, ஏற இறங்க ஒருப்பார்வைப் பார்த்தாள்.

“நீயெல்லாம் அதுக்குச் சரிபட்டு வர மாட்டே, நான் உதவிக்குத்தான் ஆள் கேட்டேன் உபத்தரத்துக்கு இல்லை” என்றவிட்டு அறையினுள் நுழைந்தாள்.

மனோவிற்கு மூக்கு உடைந்தது போன்றிருந்தது. பற்களை கடித்தவன், ‘அவள் என்ன தன்னை வேண்டாம் என்பது?’ எப்போதும் போல அவளுடன் மோதிக் கொண்டே இருந்தது இவன் உணர்வுகள்.

ஜெனிக்கு உண்மையில் வேலைக்கு வர வேண்டிய எந்தவித பொருளாதரத் தேவையும் இல்லை. நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் கணவன், அழகு தேவதையாக ஆறு வயதில் ஒரு பெண்பிள்ளை, உடன் மாமியாரோடு நிறைவான குடும்பம்.

பெயருக்கு ஒரு பட்டப்படிப்பை முடிக்கவும் திருமணம், குழந்தை என வாழ்க்கையின் பாதை நன்றாகச் சென்றது. ஆரம்பத்தில் அனைத்தும் தித்தித்த போதும் ஒரு கட்டத்தில் திகட்டி, பின் ருசியற்றுப் போனது.

‘வீட்டில் தானே இருக்கிறாய்? இதைச் செய், அதைச் செய், இதைக் கூட உன்னால் ஒழுங்காக செய்ய முடியாதா?’ மாமியார், கணவரின் வார்த்தைகளில் சுருண்டு போனாள்.

என்னவோ அவர்கள் தயவில் இவள் வாழ்வதைப் போன்ற தோற்றத்தைக் காட்டினர். அதிலும் மாமியாரின் வார்த்தைகளில் எப்போதும் ஒரு அதிகார ஏவல் இருந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் வீணாக அமர்ந்து உண்டுகொண்டு இருக்கிறாய் என்னும் மறைமுக மட்டம் தட்டுதல் எல்லாம் இவள் தன்மானத்தை அதிகம் சீண்டிப்பார்த்தது.

அன்பான மனிதர்கள்தான் ஆனாலும் இவளை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற உணர்வு அதிகம் அரித்தது. தான் என்னும் அடையாளம் தொலைந்து போனதை அப்போதுதான் உணர்ந்தாள். அதிலும் பிள்ளையை பள்ளிக்கூடம் அனுப்பிய பின் வெறுமையை அதிகம் உணர்ந்தாள்.

அப்போதுதான் இணைய தளத்தில் பார்த்து, ஓ பேபி ஸ்டுடியோவில் வேலை வாய்ப்பு இருக்க, விண்ணப்பித்து வைத்தாள்.

கல்லூரி காலத்தில் கூடுதலாக கற்றுக்கொண்ட ஃபோட்டோஷாப் இப்போது கை கொடுத்தது.

வீட்டினற்குத் தெரியாமல் ஷிவியிடம் வந்து நேர்காணலில் பக்கெடுத்து விட்டுச் சென்றுவிட்டாள். வேலையில் சேர்வதற்கான மின்னஞ்சல் வந்த பின்பே வீட்டில் தெரிவிக்க, பலமான எதிர்ப்பு.

‘நீ இப்போது வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? நீ சென்று விட்டால் குழந்தையை, குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வது?’ கேள்விகளை அடுக்கி முட்டுக்கட்டை போட்டனர்.

‘இவ்வளவு தானே? வீட்டையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் செல்கிறான். என் வேலைகளை எல்லாம் நானே சமாளித்துக்கொள்வேன்’ என்றவள் பிடிவாதமுடன் அவள் ஓட்டத்தை தொடங்கினாள்.

‘போகட்டுமே இவளால் எத்தனை நாள் சமாளிக்க முடியும் பார்ப்போம்?’ சவாலாக நினைத்தனர்.

வேலையாள் வைக்கும் வசதி இருந்தும் வைக்காது ஜெனிக்கான பாரத்தை ஏற்றி வைத்து வேடிக்கைப் பார்த்திருந்தனர்.
முதலில் கடினமாக இருந்தது, பின்னர் அதுவே பழகிப்போனது ஜெனிக்கு.

தன் கனவு, தனக்கென ஒரு அடையாளத்தை தேடித் தொடங்கிய அவள் ஓட்டம் ஒன்றரை வருடமாகியும் ஓயவில்லை. என்ன ஆனாலும் விட்டுவிடக் கூடாது என்ற வைராக்கியம், கடினாமன சூழ்நிலையை கடந்து வரும் வலுவைக் கொடுத்தது.

அனைத்தையும் அறிந்திருந்த ஷிவி, இவளுக்கென சில சலுகைகளையும் வழங்கினாள். அதுவே ஜெனிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

காலையில் கணவனும் மகளும் கிளம்பும் முன் அனைத்து வேலைகளையும் முடித்திருக்க வேண்டும், மாலையில் அவர்கள் வரும் முன் வீடு திரும்பியிருக்க வேண்டும் என்னும் விதிமுறைகளுக்குள் சிக்கிக்கொண்ட ஜெனியால் இரண்டு, மூன்று நாள் என்றாலும் வெளியூருக்கு ஷிவன்யாவுடன் செல்ல இயலாது.

சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, காத்திருப்பு இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஷிவன்யா. தனியாக பயணம் செய்வதெல்லாம் இவளுக்கு பழக்கம்தான் என்பதால் பெரிதாக யாரையும் எதிர்பார்த்தது இல்லை.

அலைபேசியில் கவனம் பதித்திருக்க, சரியாக தர்ஷனிடமிருந்து அழைப்பு வந்தது. வேலை விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதெல்லாம் இல்லை.

ஆகையால் எதார்த்தமாக அழைத்திருப்பதாக நினைத்த ஷிவி அட்டென் செய்து, “ஹெலோ தர்ஷன்” என்றாள்.

மறுமுனையில், “ஏன் ஷிவா உனக்கு வேற ஆளே கிடைக்கலையா? இருந்திருந்தும் இவனை தான் நீ கூட்டிட்டிப் போகணுமா?” எடுத்ததுமே வினவ, ஷிவன்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

“நான் எவ்வளவோ சொல்லியும் இவன் கேட்காம கிளம்பிட்டான். இவன் வெளியூர் எல்லாம் போயிருக்கான் ஆனால் தனியா போனதில்லை அதான்… நீ கொஞ்சம் பார்த்துக்கோ ஷிவா ப்ளீஸ்…” வேண்டினான் தர்ஷன்.

அலைபேசி காதில் இருக்க, இந்த நேரத்திற்கு ஷிவியின் கருவிழிகள் சுற்றுப்புறத்தை ஒரு வட்டமடித்து இருந்தது. இவள் யூகம் சரிதான் என்பதைப் போல் சற்றே தொலைவில் இருந்து இவளை நோக்கி மனோ மன்மதனாக வந்து கொண்டிருந்தான்.

Advertisement