Advertisement

அத்தியாயம் 09

மனோகருக்கு அன்றும் ஷிவான்யாவால் சிவராத்திரியாகிப் போனது.

மாலை வீட்டிற்குள் வந்ததும் நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டான்.

அவளுக்கு மூச்சு கொடுத்ததில் இருந்து இவன் மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டுதான் இருந்தான்.

அவள் சுயநினைவில் இல்லை, ஆனால் இவன் பரிபூரணமாகத் தெளிவுடன் இருந்தான் தானே? அவள் இயல்பாக நொடியில் கடந்து சென்றுவிட, மனோவால் உண்மையில் முடியவில்லை.

அவள் பழைய பத்திரகாளியாகவே இருக்க, அவளை வம்பிழுத்து, வளவளத்தபடி தானும் இயல்பெனக் காட்டிக் கொள்ளச் செய்த முயற்சிதான் அனைத்தும்.
ஆனால் இயல்பில்லை என்ற உண்மை இவன் மட்டும் தானே அறிவான்.

வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்தவன் இணையத்தில் கிளாஸ்ட்ர்ரோபோஃபியாவை பற்றி தேடி, வாசித்து அறிந்து கொண்டான். பெரிதாகப் பயப்பட வேண்டியதில்லை என்றாலும் அவள் தனியாக இருப்பது ஆபத்து தானே?

அதிலும் தனியாகப் பயணம் செய்பவள் எப்படிச் சமாளிப்பாள்? மால், தியேட்டர், பொதுஇடங்களில் உள்ள கழிவறைகள், பெரிய மாடிக் கட்டடங்களின் மின்தூக்கி, மருத்துவமனை பரிசோதனை இடம், ஏடியம் சென்டர் எனப் பெரும் நகரில் எத்தனையோ குறுகிய இடங்களை பயன்படுத்த வேண்டியுள்ளதே?

ஒருவேளை மயங்கினாலும் ஓடி வந்து உதவும் ஆட்கள் இங்கு இல்லையே? உதவுபவர்களும் என்ன எண்ணத்தில் செய்வார்கள் என சொல்ல முடியாது.

எல்லா நேரமும் எச்சரிக்கையுடன் இருந்தாலும் எல்லாவற்றையும் தவிர்த்து விடவும் முடியாதே? அத்தியாவசிய தேவைகளும் இதில் அடங்குமே?

‘இதை வைத்துக் கொண்டு ஏன் தனியாக இருக்கிறாள்? இதற்காகவாவது ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டியதானே இந்தப் பெண்?’ ஆற்றாமையாக உணர்ந்தான். அவள் தனியாக இருப்பதே இவனுக்குத் தவிப்பாக இருந்தது.

தர்ஷன் வந்துவிட, அவனிடம் இன்று நிகழ்ந்ததை சொல்லாது, ஷிவியின் உடல்நிலைப்பற்றி விசாரித்தான்.

“ஷிவிக்கு என்ன? அவளுக்கு எந்த ஹெல்த் ஸ்யூஸூம் இல்லையே? நல்லா தானே இருந்தா?” இவனிடமே கேட்க, அப்படியே பற்களைக் கடித்தவன், பாவம் பார்க்காது தர்ஷன் தலையில் கொட்டிவிட்டுச் சென்றான்.

அடுத்ததாக தனுவிற்கு அழைத்தவன், அவளிடம் விசாரித்தான். தன் உடன்பிறப்பின் பதிலையே அவளும் கூற, தலையில் கை வைத்துக் கொண்டான் மனோகர்.

“நீங்க எல்லாம் என்ன ஃப்ரண்ட்ஸ்?” அவளிடமும் கடுகடுத்தான்.

“அடேய் எங்களை விட உனக்குத் தெரியுமோ அவளைப் பத்தி?” அதட்ட, மறுமுனையில் மனோ இதழ்களில் மலரும் புன்னகையோடு தலையசைத்தான்.

வெகுநேரம் யோசித்த தனுவிற்குப் பதினொன்றாம் வகுப்பில் நடந்த நிகழ்வு நினைவிற்கு வந்தது.

இருவரும் ஒரே விடுதி அறையில் தங்கி இருந்தனர். அப்போது ஒருமுறை குளியலறையின் கதவு திறக்க முடியாது மூடிக் கொண்டதில் உள்ளே அடைபட்டு மயங்கி விழுந்த ஷிவியை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். பின்னர் வெளியே வேறு விடுதிக்கு மாறிக் கொண்ட தகவலையும் உரைத்தாள்.

கேட்ட போது மனோவிற்குக் கவலையாகிப் போனது. எல்லாரையும் போல இயல்பான வாழ்க்கை வாழ்வதே இவளுக்கு போராட்டம் என்றால் என்ன வாழ்க்கை வாழ்கிறாள்?

வெகு நேரமாக அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவன், அத்தையின் குரலில் தெளிந்தான்.

அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு, இரவு உணவிற்குப் பின் படுக்கையில் விழுந்தான்.

என்னவோ கண்ணெல்லாம் உறக்கம் வேண்டிச் சொருகிய போதும், வெகு நேரமாக உறங்க முடியவில்லை. விழி மூடினாலே விழி மூடிய ஷிவிதான் தன் கரங்களில் விழுந்து கிடந்தாள்.

எப்போதும் இவள் முகம் நோக்கினாலும் விழிகளோடு விழி மோதியே நிற்பவன் இன்றுதான் அவள் விழி தாண்டிய முகம் பார்த்துள்ளான்.

அந்த மிருதுவான மலர் ஸ்பரிசம், ‘உண்மையிலே சில்க் தான்’ என எண்ண வைத்தது.

அவள் அதரங்களின் அருட்சுவையை விட, விழி மூடிய, முகமூடியில்லாத குழந்தை முகம் தான் அதிகம் இவனை இம்சித்தது. ஒருவேளை விழி திறந்து இருந்தால் அந்த கருவிழிகளின் தீட்சண்யத்தில் எப்போதும் போல அலட்சியமாக எட்டிப் போயிருப்பானோ என்னவோ?

மீண்டும் அவள் பஞ்சுக் கன்னத்தை வருடி, மலர் மேனியை மடி தங்கி, உதடுகளை தொட்டுப் பார்க்கும் ஆசை கனன்றது.

இது என்ன வித உணர்வு? அதுவும் அவள் மீது? அவனை நினைத்து அவனே கீழாக உணர்ந்தான்.

இவளை போன்ற எந்த ஒரு விஷயமும் இத்தனை ஆண்டுகளில் இவனை இவ்வளவு தூரம் தொந்தரவு செய்ததே இல்லை.

தர்ஷன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவனை தொந்தரவு செய்யாது எழுந்து பக்கத்தில் இருக்கும் காலி அறைக்குள் நுழைந்து கொண்டான்.

மின் விளக்கை ஒளிரச் செய்துவிட்டு, பேப்பர், பென்சில்களோடு நாற்காலியை இழுத்து போட்டு எழுதும் மேசையின் முன் அமர்ந்தான்.

கண்மூடி சிலநொடிகள் தன்னுள் இம்சிக்கும் அவள் முகத்தை நினைவில் அச்செடுத்துக் கொண்டான்.

விழி திறந்தவன், பெஞ்சில் பிடித்து வரையத் தொடங்கினான். வரையும் போது வேறு எந்தவித சிந்தனையும் இன்றி மெய்யும் உயிருமாக ஷிவியுடன் ஒன்றிப் போனான்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழிய, வெகு நேர்த்தியாக, தத்ரூபமாக வரைந்து முடித்தான்.

‘பென்சில் பிடித்து பல வருடங்கள் இருக்குமே தன்னால் வரைய இயலுமா?’ என்ற சந்தேகம், ஆரம்பிக்கும் போது இவனுக்கே இருந்தது.

அப்படியே மனதில் இருந்த சுமையை இறக்கி வைத்ததை போன்று இப்போதுதான் இலகுவாக உணர்ந்தவன், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடியே நாற்காலியில் பின் பக்கமாக சாய்ந்தான்.

காலையில் தர்ஷன் வந்து எழுப்பும் போதுதான் கண் விழித்தான் மனோ.

“என்னாச்சு? ஏன்டா இங்க வந்து படுத்திருக்க?” அக்கறையோடு தர்க்ஷன் வினவ, பதறி எழுந்தான் மனோ.

உள்ளங்கை விரித்து, முகத்தை அழுத்தித் தேய்த்துக் கொண்ட மனோ, “ஒன்னுமில்லை நீ நைட் தூங்கிட்டே, அதான் இங்க வந்து படம் பார்த்திட்டு இருந்தேன்” எனச் சமாளித்தான்.

“ஹோ சரி, டைமாச்சு வேலைக்குக் கிளம்புற வழியை பார்” என்றபடியே வெளியேறினான் தர்ஷன்.

பட்டென திரும்பிய மனோ, மேசையில் கவிழ்ந்து கிடக்கும் காகிதத்தை கையில் எடுத்தான்.

இரவில் செய்து வைத்த பைத்தியக்காரத்தனமெல்லாம் இப்போது நினைவில் வர, கரத்தில் ஷிவியின் ஓவியம்.

கையில் இருக்கும் காகிதம் கனக்க, ‘என்ன செய்கிறேன் நான்?’ தன்னையே கேட்டுக் கொண்டவன் தலையை உலுக்கிக் கொண்டான்.

இது வரையிலும் பழக்கமில்லாத பொய்யை தர்ஷனிடம் உரைத்தது ஒருமாதிரி உள்ளத்தில் நெருடலாக உறுத்தியது.

தனிமையே வெறுப்பவன் இன்று தனிமையில் உழல்கிறான், நம்பிக்கைக்குறிய உறவிடம் உண்மையை மறைக்கிறான். இந்த கள்ளம் புதிதாகத் தெரிகிறது.

வேலைக்குக் கிளம்பியவன் அந்த ஓவியத்தையும் மறக்காமல் கையோடு எடுத்துச் சென்றான்.

இதை அவளிடம் கொடுத்து விட்டு, ‘கொடுத்து விட்டு, ம்ம் என்ன சொல்வாய்?’ மனசு கேட்க, பதில் தெரியவில்லை.
தன் உணர்வுகளை பிரித்து அறிந்து ஆராய்ந்து ஒரு பெயரிட அவனால் இயலவில்லை.

மொத்தமாக இதை தூக்கி எறிய தான் நினைத்தான்.
ஓவியத்தை கொடுத்துவிட்டு, ‘நானும் ஒரு ஆர்ட்டிஸ்ட் தான்’ என சொல்லிவிட்டு வந்துவிடும் முடிவில் சென்றான்.

ஸ்டுடியோவிற்குள் வந்தவன் எப்போதும் போல் அனைவரையும் புன்னகை முகமாக எதிர்கொண்டான்.
பின் ஷிவியின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான்.

மனோவின் வருகையை உணர்ந்தவள், காலை வணக்கம் தெரிவிக்க வந்ததாக நினைத்தாள்.

வேலையில் முழு கவனமாக இருந்தவள், நிமிர்ந்தும் பார்க்காது முந்திக்கொண்டு எப்போதும் போல தலையசைப்பைக் கொடுத்தாள்.

நிலையாக நின்றவன், “இப்போ உங்க ஹெல்த் நல்லாயிருக்கா?” என உடல்நலன் பற்றி விசாரித்தான்.

கீபோர்ட்டில் துள்ளியாடும் அல்லிவிரல்கள் செயலிழந்து அப்படியே நிற்க, கருவிழிகள் மட்டும் உயர்ந்து, எதிரே இருப்பவனை எரித்தன. ஒரு கூரான பார்வையில் ஆராய்ந்தாள்.

‘தன்னை என்னவோ தீரா நோய் கொண்டவளை போல் பரிதாபமாக பார்க்கிறனா? இல்லை தன் இயலாமையை அறிந்து கொண்டதில் எதுவும் திட்டமிடுகிறானா?’ என்ற எச்சரிக்கை உணர்வில்தான் அரை நிமிடம் ஆராய்ந்தாள் ஷிவன்யா.

அவள் அழுத்தமான பார்வையை, எப்போதும் போல் சலைக்காமல் எதிர்கொண்டான் மனோகர்.

அதில் நிம்மதியுற்றவள், வேலையில் கவனம் திருப்பினாள். பார்வை தாழ, “பீல் குட்” என்றாள் தன்மையான மென்குரலில்.

அகம் மலர குறுநகையில் நிரம்பியது மனோவின் உதடுகள். ஒருவேளை புதிதான இந்தப் புன்னகையைக் கண்டிருந்தால் இவள் பதில் வேறு மாதிரியாக இருந்திருக்குமோ? யோசனையிலே கால் கடுக்க நின்றான் மனோ.

தேவையான பதில் கிடைத்தும் கிளம்பாதவனை, இவள் ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை.
தயங்கி நின்ற மனோவிற்கு ஓவியத்தை தூக்கி அவளிடம் கொடுத்துவிட, மனம் வரவில்லை இந்தநொடி.

என்னவோ தன் உடலில் ஒருபகுதியை வெட்டி எடுத்துக் கொடுப்பதற்கு நிகரான வேதனையை உற்பத்தி செய்துகொள்ள விருப்பமில்லை.

எண்ணி வந்ததை நிகழ்த்தாது, இனிய இம்சையைத் தாங்கிக் கொண்டு பாரமுடன் மாலை வீடு சென்றான்.

மறுநாளில் இருந்து மனோவின் பார்வை மாறியது. மாறியது என்பதை விடவும் ஷிவியை பின் தொடர்ந்தது என்பதே சரி. அவன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அவளை கவனிப்பது மட்டுமே வேலையாக மாற்றிக் கொண்டான்.

அதே நேரம் ஓ பேபியும் ஒருவாரமாகப் பரபரப்பாக இருந்தது. பேபி ஃபோட்டோஷூட் இன்றி, தாய்மையடைந்த இளம் மாடல்களை கொண்டு மாடலிங் ஷூட் நிகழ்ந்தது.

ஒப்பனையாளர், குழந்தை பரமரிப்பாளர் என மேலும் சில பணியாளர்கள் வந்திருக்க, ஜெனி அவர்களுக்கான வேலையை ஒதுக்கி, அனைத்தையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சாஹர் வந்திருக்கும் மாடலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, ஷூட்டிற்கான ஏற்பாடுகளை செய்வது என வெகு மும்முரமாக இருந்தான்.

ஷிவியே லைட்டிங் செட் செய்து கொண்டிருக்க, அவள் அருகே வந்து நின்றான் மனோகர்.

“இது என்ன ஷூட்? ஏன் இங்க நடத்துறீங்க?” சாஹர், ஜெனியை விடுத்து நேராக ஷிவியிடமே கேட்டு வைத்தான்.

“பார்த்தா எப்படித் தெரியுது?” பட்டெனக் கேட்டவள் தன் புகைப்படக்கருவியை ஆராய்ந்தபடியே இருந்தாள்.

“மாடலிங் ஷூட் மாதிரி தெரியுது” பொறுப்பாக பதில் சொன்னவன்,

“ஆனாம் நீங்க இதெல்லாம் செய்ய மாட்டீங்களே? இப்போ மட்டும் ஏங்க?” அறியாப்பிள்ளையாக வினவினான்.

நிமிர்ந்து பார்த்தவள், “இன்டெர்னேஷ்னல் ஃபோட்டோ ஃபெஸ்டிவல் வருது மனோ. அதுக்கு டிஸ்பிளே செய்ய தான்” என்றாள் பொறுமையாக.

மனோ தலையாட்டி வைக்க, “சன் லைட் தேவையில்லை, அந்த விண்டோஸ் க்ளோஸ் பண்ணு அண்ட் சப்ஜெக்ட்டுக்கு பேக் லைட் வேணும் அதை செட் பண்ணு போ” வேலையைக் கொடுத்து அனுப்பினாள்.

அனைத்தையும் செய்து முடித்தவன் மீண்டும் ஷிவியின் அருகில் வந்து நின்று கொண்டான்.

ஷூட் முடியும் வரையிலும் இடை இடையில் சந்தேகம் கேட்க, வேலைப்பளு, அழுத்தத்திற்கு இடையில் இம்சையாக நிற்பவனை காணக் கொதித்துப் போனாள்.

அனைத்தையும் குறித்து வைத்து இறுதியில் கேட்கும்படி கூறியவள், தன் அருகிலே நிற்க விடாது விரட்டிவிட்டாள்.

அன்று அதிதியின் குழந்தையை எடுத்த புகைப்படங்களில் ஜெனி மூலமாக மனோ எடுத்தது அனைத்துமே நன்றாக வந்திருந்தது. அதிலே மனோவின் திறமையும் இப்போது சுற்றி வருவதில் இதில் இருக்கும் ஆர்வமும் ஷிவிக்கு நன்கு புரிந்தது.

ரோஷமுடன் விறுவிறுவென விலகிப்போனவன் மாடலாக வந்திருக்கும் அழகியின் அருகே அமர்ந்து கொண்டு, அவன் வேலையை ஆரம்பித்திருந்தான்.

Advertisement