Advertisement

இவளின் மென் குரலிலும் இலகுவான நிலையிலும் கொஞ்சம் தைரியம் வரப் பெற்றவன், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் முன் அமர்ந்தான். 

“ஏங்க இப்போ எப்படி இருக்கு? ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்றான் தன்மையாக. 

மறுப்பாய் தலை அசையத்தவள், “நோ நீட் டு வொரி, ஐம் ஆல்ரெட்” என்றவள், கையூன்றி தலை குனிந்து, உள்ளங்கைக்குள் முகம் புதைத்துக் கொண்டாள்.

“ஏங்க நானும் தானே அங்கே இருந்தேன், எனக்கு ஒன்னும் செய்யலை? உங்களுக்கு மட்டும் ஏன் மூச்சு முட்டுது? அப்படி ஒன்னும் அங்கு காற்றுப் பற்றாக்குறையும் இல்லையே?” புரியாது குழப்பமான நிலையில் முகம் பார்த்து வினவினான். 

“மனோ அது பேனிக் அட்டாக்” மென்குரலில் மொழிந்தாள். 

“அதான் கேட்குறேன்? நீங்க ஏன் அவ்வளவு பேனிக் ஆனிங்க?” விவரம் அறிந்து கொள்வதில் விடாக்கண்டனாக இருந்தான்.

“ஐ ஹேவ் கிளோஸ்ட்ரோ போஃபியா” தாழ்ந்த குரலில் உரைத்தாள்.

“என்ன பிரியா?” புரியாது கேட்க, நிமிர்ந்து பார்த்தவளின் மூக்கு லேசாக விடைத்தது. 

அவள் பார்வையில் அடங்கியவன், “இல்லை அப்படின்னா என்னங்க?” மீண்டும் கேட்டான். 

“இது ஒருவகை போஃபியாதான் மனோ, க்ளோஸ்ட் ஆனா பிளேஸ்ல லாக்கானா பயம் வந்துடும். ரொம்ப சின்ன சின்ன மூடுனா மாதிரி இருக்குற இடதுக்குள்ளே என்னால இருக்க முடியாது. அதுவும் கைக்கு எட்டுன தூரம் சுத்தி நாலு சுவர் இருந்தாவே என்னை வந்து இறுக்கி, நொறுக்கிற மாதிரி பீல் ஆகும், செத்துப் போயிடுவேனோன்னு பயம்” தன்னை மீறி தன்னைப் பற்றி உரைத்தாள். 

அதிர்ச்சியில் ஒருநொடி வாயடைத்துப் போனான். ‘இதனால் தான் எப்போதும் மின்தூக்கியை தவிர்க்கிறாளோ? ஸ்டுடியோ, இவள் அறை  என அனைத்து இடங்களுக்கும் விஸ்தாரமாகவும் வெளிச்சமாகவும் வைத்துள்ளளோ?’ மனதில் நினைத்தான். 

“ஏங்க இதைச் சரி செய்ய முடியாதா?” கொஞ்சம் இறங்கிய கரகரத்த குரலில் கேட்டான். 

அதில் ஒளிந்து கிடக்கும் கவலை, அக்கறையை இருவரும் அறிந்திருக்கவில்லை. 

“ஆல்ரெடி ட்ரீட்மெண்ட், தெரபி எல்லாம் பார்த்தாச்சு மனோ. மெடிஷன், மெடிட்டேஷன் அண்ட் யோகா இன்னும் பாலோ பண்ணிட்டுதான் இருக்கேன்” என்றாள் ஒடுங்கிய குரலில்.

உள் வாங்கிய சேதியை அசைப் போட்டபடியே, “ரொம்ப வருஷமா இந்தப் பிரச்சனை  இருக்கா?” விடாது வினவினான்.

“சின்ன வயசுல இருந்து, என்னோட பத்து வயசுல இருந்தே இருக்கு” 

“ஹோ! இதை வைச்சுகிட்டு தனியா வேற இருக்கீங்க?” உரிமையாகக் கடிந்து கொண்டான்.

“இல்லை எப்பவும் கவனமாதான் இருப்பேன். இன்னைக்குத்தான் லேட்டாச்சு, அதுவும் நீ இருக்கிற நம்பிக்கையில தான் லிஃப்ட் உள்ள வந்தேன்” முன் கிடக்கும் சுருள் முடிகளை கொதி, முதுகின் பின் தள்ளினாள். 

இந்த வார்த்தை மனோவை அடியோடு அசைத்துப் பார்த்தது. ‘என்னை நம்பினாளா? என் மீது நன்மதிப்பா இவளுக்கு? நான் தான் காரணமில்லாது இவளோடு முட்டிக்கொண்டு உள்ளேனா?’ தன்னை நினைத்தே கீழாக உணர்ந்தான்.

ஏதோ இறுக்கம் தளர்ந்து, இளகிய நிலையில் அனைத்தையும் கொட்டிவிட்டாள் ஷிவின்யா. 

அலைபேசி இசைக்க, அப்போது தான் இவ்வளவு நேரமாக தன் பலகீனங்களை இவனிடம் உளறிக் கொண்டிருப்பது புத்தியில் உறைத்தது. 

அலைபேசியை எடுத்துக் கொண்டவள் மெல்ல எழுந்து செல்ல, மனோவும் வெளியே சென்றான்.

ஷிவி தன்னை சரிசெய்து கொண்டு, சில நிமிடங்களிலே தன் அலைபேசி, மடிக்கணினி, கைப்பையோடு வெளியே வர, வழி மறித்தபடி நின்றிருந்தான் மனோ. 

கேள்வியாக வேல்விழிப் பார்வை தெறித்து விழ, முகத்திற்கு நேராக ஒரு கோப்பை குளம்பியை நீட்டினான். 

மற்றொரு கையில் தனது கோப்பை. ஷிவியின் பலகீனங்களில் இதுவும் அடங்கும் என்பதை அறிந்து கொண்டானோ என்னவோ?

தனது உடைமைகளை மேசையில் வைத்தவள், மௌனமாக வாங்கிக் கொண்டாள். தளர்வான உடலுக்கும் இன்னும் முழுதாக தெளியாத புத்திக்கும் இந்த காஃபி இதமாக இருந்தது.

இருவரும் ஆளுக்கு ஒரு கோப்பையோடு எதிர் எதிர் சுவரில் சாய்ந்து நின்றனர்.

என்ன காரணம் என்ற கணக்கு இல்லாது அவளை நோக்கி அலைபாயும் விழிகளை முயன்று கட்டுப்படுத்திக் கொண்ட மனோகர், பார்வையை இலக்கில்லாது எங்கோ வைத்தான்.

ஆனால் ஷிவியோ நிதானமாக அவனை உரசிப் பார்த்துவிட்டு, “இன்னைக்கு உனக்கு லீவ் தானே? பின்ன ஏன் இங்க வந்திருக்க?” அழுத்தமாக வினவினாள். 

பழைய பாகற்காயாகத் திரும்பி விட்டதை அவள் குரலே அறிவிக்க, கசப்போடு முகம் சுளித்தான். 

அதேநேரம், “என்ன இன்னைக்கு லீவா? ஏங்க யாரும் எங்கிட்ட சொல்லலை?” மூக்கு விடைக்க, அவளைப் பார்த்து வினவினான்.

“சாஹர், ஜெனிகிட்ட சொல்லிட்டேனே?” 

“என்ன?” அதிர்ந்தான். தன்னை வஞ்சித்தவர்களை வசைபாட வார்த்தையின்றி அடக்கி வைத்தான். 

“அவங்க சொல்லலை சரி, நீங்க என் பாஸ் தானே எங்கிட்ட சொல்லியிருக்கணும்ல?” சண்டைக்கு நின்றான். 

“எனக்கு டைம் இல்லை” உதட்டுச் சுளிப்போடு உரைத்தவள், காலி கோப்பையை வைத்துவிட்டு தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

எப்போதும் போல இந்த உதாசீனம் உசுப்பேற்றி விட்டது. 

மனோகரும் நில்லாது, அவள் பின்னே நிழல் போலச் சென்றான். 

“ஏங்க அதெல்லாம் எனக்குத் தெரியாது, இன்னைக்கு வேலைக்கு வந்துட்டேன் ஓவர் டைம்மா போட்டு ஒழுங்கா தனி சேலரி கொடுத்துடுங்க” கறாராகப் பேரம் பேசிக் கொண்டிருந்தான். 

இந்த நேரம் இருவரும் படிகளில் கீழிறங்கி, ஷிவியின் கார் வரைக்கும் வந்திருந்தனர். 

“சரி நீ கிளம்பு” என்றவள், கைப்பைக்குள் இருந்து கார் சாவியை எடுத்தாள்.

பட்டெனப் பறித்துக் கொண்டவன், “என்னால சும்மா வேலை பார்க்காம சம்பளம் வாங்கிக்க முடியாதுங்க” என வம்படியாக ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான். 

“எப்படி? சும்மா சம்பளம் வாங்க மாட்ட நீ?” நக்கலாகக் கேட்டபடியே மறுபுறம் வந்து அமர்ந்தாள் ஷிவி.

கடுகடுப்போடு பற்களைக் கடித்தவன், அவள் மீதான கோபத்தை அவள் வாகனத்தில் காட்டினான். ஷிவி சிறிதும் அசரவில்லை, வாகாக அமர்ந்து கொண்டு அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

ஷிவிக்கு தொடர் சிலநாட்களாக வேலைப்பளு, அலைச்சல், காலை உணவைக் காணாத வயிறு, மயக்கத்தில் விழுந்து எழுந்தது என எல்லாம் சேர்ந்து சுழற்றி அடித்ததில் அதிகப்படியான அயர்ச்சியில் இருந்தாள். 

ஆகையால் தான் மனோவை எட்டித் தள்ளாது, எப்போதும் போல் எடுபிடியாக எடுத்துக் கொண்டாள். 

சற்று தாமதமாக க்ளையண்டைச் சந்திக்க, முதலில் மன்னிப்பு வேண்டினாள்.

மனோகர்தான் முன்வந்து ஷூட் பற்றிய விவரங்களை, இத்தனை நாள் தனது அனுபவங்களைக் கொண்டு விவரமாக விளக்கினான்.

‘இவ்வளவு தூரம் அறிந்து வைத்துள்ளானா?’ வியந்து போன ஷிவி, ‘விளையாட்டுப் பையன் என்றாலும் விவரமானவன்தான்’ மனதில் நினைத்தாள். 

மனோ மணக்க மணக்கப் பேசி, மயக்கியே விட, அவர்கள் புக் செய்ய முன் வந்தனர். 

இறுதியில் பேக்கேஜ் மற்றும் பேமெண்ட் பற்றிய தகவல்களை மட்டும் ஷிவி உரைத்தாள். 

அவர்களுக்கு வசதிபடும் தேதியில் புக்கிங் செய்ய, அனைத்தையும் குறித்துக்கொண்டு மனோவும் ஷிவியும் விடைபெற்றுக் கிளம்பினர். 

வரும் வழியிலே, “ஏங்க பசிக்குதுங்க, உங்களை நம்பி வந்ததுக்கு ஒரு வாய் சோறு கூட வாங்கித் தர மாட்டிங்களா?” பசியோடு அவளை வம்பிழுத்தான்.

ஷிவியோ இவனிடம் பேசுவதற்குக் கூட இயலாத பசியில் மௌனமாக இருக்க, அவனோ சாலையோரம் சிறு உணவகத்தை நோக்கி வண்டியை நிறுத்தினான். 

“ஹேய் ஏன் இங்க நிறுத்தின?” கோபமாகக் கேட்க, “நீங்க வாங்கித் தரலைன்னாலும் பரவாயில்லை. சொந்தக்காசுல சோறு சாப்பிட்டு வரேன்” என்றான். 

பெருமூச்சை விட்டவள், “இங்க வேண்டாம் அங்க போ” தொலைவில் தெரியும் நட்சத்திர ஹோட்டலின் பெயர்ப் பலகையைச் சுட்டிக் காட்டினாள்.

மனோ மீண்டும் காரை இயக்க, “பசின்னு வந்துட்டா பந்தா எல்லாம் பார்க்கக் கூடாதுங்க” அவளுக்கே அறிவுரைகளை அள்ளி வழங்கி கொண்டிருந்தான். 

ஷிவி கூறிய உணவகதிற்கே சென்றனர். வெட்கமோ தயக்கமோ இன்றி வேண்டியதை எல்லாம் ஆடர் செய்தவன், வஞ்சனை இல்லாது வழித்து வயிறார உண்டான். 

பசிக்கு ஏதோ உண்டு கொண்டிருந்த ஷிவி, ஒருநொடி மனோகரைக் கண்டு வியந்தாலும் சட்டெனப் பார்வையை மாற்றிக் கொண்டாள். 

பில் வர, கையில் எடுத்து எவ்வளவு எனப் பார்த்துக் கொண்டவன், பின் அவள் புறமே நகர்த்தினான். 

அவளோ முறைத்தபடியே, “மனோ” அழுத்தமாக அழைக்க, “யெஸ் நீங்க என் பாஸ் தான் அதுக்காக ஒரு எம்பிளாயிக்கு இது கூட செய்ய மாட்டீங்களா? அதுவும் லீவ் நாள்ல வேலைக்கு வந்திருக்கேன், வந்ததுல இருந்து உங்களுக்குத்தான் வேலை செஞ்சிருக்கேன். ஒரு பில் கூட பே பண்ண மாட்டீங்களா? இதெல்லாம் உழைப்புச் சுரண்டல்” என ஆரம்பித்தவன், கம்யூனிஷம், சித்தாந்தம் தொட்டுச் சொற்பொழிவே ஆற்றிக் கொண்டிருந்தான். 

இலவச இணைப்பாக வந்து ஒட்டிக்கொண்ட இம்சையையே என்ன செய்வதென்றே தெரியவில்லை ஷிவன்யாவிற்கு.

“உஷ்” மேசையில் தட்டி தன் உதட்டின் மீது விரல் வைத்து சைகை செய்தவள், மற்றொரு கரத்தால் நெற்றியோரம் தடவிக் கொண்டாள். 

பொது இடம் கருதி பொறுமையை இழுத்துப் பிடித்தவள், அவளே பணம் செலுத்திவிட்டுக் கிளம்ப, அவளோடு விரைந்து நடந்தவன், “இதை முதல்லையே செய்திருக்கலாம்ல? இவ்வளவு பேசுனதுல சாப்பிட்டதெல்லாம் கரைந்து போய் இப்போ மறுபடியும் பசிக்குது” வளவளத்தான்.

“உஷ்…” கருவிழிகள் விரிய முறைத்தவள், “உன்னால பேசாம வர முடியாதா?” அதட்டினாள்.

“உங்களால முறைக்காம பேச முடியாதா?” பதிலுக்குப் பதில் வாதாடினான்.

“பேசாம வீட்டுக்குப் போ” உத்தரவாக உரைத்தவள், கண் மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள். 

“பின்ன, எப்போ பார் என்னை மட்டும் முறைச்சிக்கிட்டே இருக்க நான் என்ன முறைப்பையனா?” முனங்கினான். 

ஷிவியின் செவி தீண்ட, விழி திறக்காது, “அதிகப்பிரசங்கி” சத்தமாக உரைத்தாள். 

அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை வந்தடைய, மனோ இறங்கியதும் இவளே காரை லாக் செய்துவிட்டு, எதுவும் பேசாது நடக்கத் தொடங்கினாள். 

இங்கும் அவள் படிகளில் ஏற, ஒருநொடி நின்று யோசித்த மனோ, அவ்வளவு அலுப்பையும் சுமந்து கொண்டு அவளைப் பின் தொடர்ந்தான். 

Advertisement