Advertisement

அத்தியாயம் 08

நிமிர்ந்து நான்கு புறமும் விழிகளைச் சுழற்றிய ஷிவன்யா, வடமேற்கு மூலையில் சுவரோரம் நின்ற மனோவையும் கண்டுகொண்டாள். 

“என்னை ஏங்க பார்க்குறீங்க? இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க” அவள் ஒரு பார்வைக்கே இவன் பிதற்றிக் கொண்டிருந்தான்.

அவளோ எப்போதும் போல அலட்சியப்படுத்தி விட்டு, இது அது என்று இல்லாது அனைத்து பொத்தான்களையும் விசை கொண்டு அழுத்தினாள். முன்புற கதவை மூன்று நான்கு முறை தட்டிப் பார்க்க, அப்போதும் மின்தூக்கி இயங்கவில்லை, கதவும் திறக்கவில்லை. 

இந்த சிலநொடிகளிலே உடல் மொத்தமும் நீர் ஊற்றைப்போல் வியர்த்து வர,  உட்சட்டை வரைக்கும் நனைத்துப் போனது. புறங்கையால் முகத்தில் வழியும் வியர்வை துடைத்தபடியே தன் அலைபேசியை இயக்கிப் பார்த்தாள். அதிலும் சிக்னல் கிடைக்கவில்லை. 

வேடிக்கை பார்த்திருந்த மனோ, “உங்க சொல்லுங்க நாங்க வேணா தலையாட்டலாம் லிஃப்ட் எல்லாம் கேட்காதுங்க மேடம்” என்றான் எகத்தாளமாக.

எப்போதும் தன்னை தவிர்ப்பவள், தன்னோடு மின்தூக்கியின் உள் வந்த போதே ஏதோ அவசரம் என உணர்ந்திருந்தான். இப்போதோ இவள் நிலையில்லாது படபடப்பதையும் கண் முன்னே கண்டான். 

‘வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?’ என ஆராய்ந்தபடி மேற்கூரையைப் பார்த்தவள், நான்கு பக்கச் சுவர்களைப் பலம் கொண்டு தட்டிப் பார்த்தான். 

தன் மீது அடி விழாது விலகி நின்றுகொண்ட மனோ, இவள் செயலை விசித்திரமாக நோக்கினான். 

“ஏங்க நமக்கு என்ன அவசரமா இருந்தாலும் மெஷின் அதுக்கு என்னங்க புரியும்? அதுவே திறக்கிற வரைக்கும் கொஞ்சம் அமைதியாகத்தான் நில்லுங்களேன்” நிதானமும் பொறுமையுமாக கூறினான்.

“ஜெஸ்ட் ஸ்டாப் இட்” முன் பற்களைக் கடித்து வார்த்தைகளை உமிழ்ந்தாள். தேகத்தின் மொத்த ஆற்றலும் வடிந்த நிலையில், மிக நுண்ணிய தேய்ந்த குரலாக வந்தது வார்த்தை. 

கப்பென்று வாயை அழுத்தமாக மூடிக்கொண்டான் மனோ. 

‘நான் வாயை மூடிக்கொண்டால் மட்டும் கதவு திறந்து கொள்ளுமா? ஏதேனும் இயந்திரக் கோளாறாக இருக்கும், இல்லையேல் கட்டத்தின் மெயிட்னஸ் டீம் ஏதேனும் பழுது பார்த்துக் கொண்டு இருக்கலாம். கொஞ்சமும் அறிவை பயன்படுத்தாமல் இவள் அவசரப்பட்டால் மட்டும் காரியம் நடந்து விடுமா?’ மனத்தில் புகைந்தான்.

இருவரும் ஆளுக்கொரு மூலையில் நின்றிருந்தனர். ஷிவியை பார்க்க, அவளோ நெஞ்சில் கை வைத்து அழுத்தியபடி, உடலைக் குறுக்கி, சுவரில் முகம் புதைத்து முட்டி நின்றிருந்தாள். 

எப்போதும் போல ஷிவியின் பின் பக்கம் மட்டுமே இவனுக்கு காட்சியானது.

‘இவளுக்கு என்னவாயிற்று?’ யோசனையுடன் பார்த்தவனுக்கு ஏதோ விசித்திரமாகத் தோன்றியது. அதிக அச்சத்தில் உள்ளாள் என்பதும் புரிந்தது. 

ஷிவிக்கு கண்கள் இருட்டிக்கொண்டு காட்சி மறைந்தது. உடல் மொத்தமும்  வியர்வையில் குளித்து, ஜில்லென்று ஆக, மூடிய விழிகளுக்குள் நான்கு பக்கச் சுவர்களும் தன்னை நெருங்கி வந்து இறுக்கிக் கொள்வது போன்றும் நொறுக்குவது போன்றும் பிரமை. 

‘உயிரோடு வெளியேறவே மாட்டோம்’ என மனத்தில் ஆழமாக ஊன்றிவிட, சுயநினைவே இழக்கும் படியான உட்சபட்ச பயத்தில் இருந்தாள். 

பயத்தில் இதயம் வழக்கத்தை விடத் தாறுமாறாகப் படபடத்து துடிக்க, இத்தனை நேரமும் அடைபட்டுப் போன சுவாசத்தை வேண்டி நுரையீரலும் தவித்தது. 

மொத்த உணர்வும் பயமும் உடலைக் கட்டி இறுக்க, கால்கள் மட்டுமின்றி தேகம் மொத்தமும் வேர் அறுந்த கொடியாகத் துவண்டது. பிடிமானம் இன்றி நிலையில்லாது போனவள் தன் உடலை சுவரில் சரித்து நின்றிருந்தாள். 

மனோவோ தன்னைப் பார்க்கப் பிடிக்காது முகம் திருப்பி, சுவரில் முட்டிக்கொண்டு நிற்பதாக நினைத்தான். 

“ஏங்க ஏன் இப்படி பயப்படுறீங்க? உங்ககிட்ட கசமுசா பற்ற எண்ணமெல்லாம் எனக்கில்லை. தைரியமா இருங்க” அவளுக்குக் கேட்கும்படி சத்தமாக நம்பிக்கை உரைத்தவன், “இவளைப் பார்த்து அப்படியே தோன்றி விட்டாலும்” பின்பாதியை வாய்க்குள் முனங்கினான். 

அதே நேரம் பொத்தென தரையில் விழுந்தாள் ஷிவன்யா. விழி மூடிய நிலையில் நெஞ்சுக்கூடு ஏறி, ஏறி இறங்கியது. வாய் திறந்தும் சுவாசத்திற்கு திண்டாடியபடி இழுத்துக் கொண்டிருந்தாள். 

அவளைச் சுற்றி எதுவுமே இல்லாத வெற்றிடமாக இருந்த போதும், இடிபாடுகளுக்குள் சிக்கியதைப் போல் இறுகி, உடலைக் குறுக்கினாள். 

ஷிவி விழுந்ததும் மனோகர் பயந்து போனான். ஏதோ விபரீதமென அப்போது தான் புத்தியில் உறைக்கப் படபடத்தான். 

தன்னிச்சசையாகத் தரையில் அமர்ந்தவன், அவள் கன்னத்தில் தட்டி தட்டி, “மேம், ஷிவி இங்க பாருங்க” உடல் மொத்தத்தையும் பலமுடன் குலுங்கினான். 

“ஏங்க ஏங்க கண்ணைத் திறந்து பாருங்க” தன் கைக்குட்டை கொண்டு முகத்தின் ஈரமெல்லாம் துடைத்து, தெளிய வைக்க முயன்றான்.  

ஷிவன்யா அணிந்திருக்கும் சட்டையின் முதல் மூன்று பொத்தான்களைக் கழட்டிவிட்டு, உள்ளங்கை, உள்ளங்கால் என அழுத்தத் தேய்த்து விட்டும் பார்த்தான். 

‘நம்ம பாடியை எதுவும் அட்டாக் பண்ணலை, நான் நல்லாதத்தானே இருக்கிறேன்? இவளுக்கு மட்டும் ஏன் இப்படி?’ மனோவின் மூளை கேள்வியால் குடைந்தது.

அதே நேரம் அவள் உடலைத் தளர்வாக நீட்டிப் படுக்க வைத்தவன், இன்னுமே அவளை விழிக்க வைக்க முயற்சி செய்தான். மொத்தமாக மயங்கிப் போயிருக்க, வாய் திறந்த நிலையில் மிக மெல்லியதாய் இறுதி உயிர் சுவாசத்திற்கு இழுத்துக் கொண்டிருந்தாள். 

மடியில் தூக்கி வைத்திருந்த நிலையில் துவண்ட அவள் உடலை இவனால் உணர முடிந்தது. ஏறி இறங்கி இழுத்துக் கொண்டிருக்கும் நெஞ்சுக்கூடு இவனுக்கும் பயத்தைக் கூட்டியது. இது வரையிலும் பார்த்த சினிமாக்களின் மருத்துவ முத்தம் மூலையின் மூளை முடுக்குகளில் இருந்து முன்னெடுத்து வர, ஆபத்திற்குப் பாவம் இல்லை என உள்ளம் உதைத்துத் தள்ள, குனிந்து ஷிவியின் அதரங்களின் தன் உதடுகளைப் பதித்தான்.

அழுத்திப் பதித்தவன் தன் நுரையீரலில் இருந்து ஆழமாக சுவாசம் இழுத்து, சுவாசம் ஊட்டினான் அவளுக்கு. 

அவள் விழித்துக் கொண்டால் போதும் என்பதைத்தாண்டி வேறு எந்தவித எண்ணமும் அப்போதில்லை. இவன் தொடர் செயலில் அவள் சுவாசம் சீரான போதும் ஏனோ விழி திறக்கவில்லை.

‘கொலை கேஸ்ல என்னை உள்ள தள்ளுற திட்டமோ?’ மனோகரின் எண்ணம் எக்குத்தப்பாகச் சென்றது. 

இதற்கு மேல் என்ன செய்வதென மனோவிற்குத் தெரியவில்லை. அவன் அலைபேசியை இயக்கிப் பார்க்க, சிக்னல் இல்லை. 

விழி மூடி தன் கரத்தில் துவண்டு கிடக்கும் குழந்தை முகத்தை இமைக்காது சில நொடிகள் பார்த்தான். இந்த முகம் அப்படியே அவனுள் கல்வெட்டாக பதிந்து போகுமென அப்போது அவனுக்குத் தெரியவில்லை. 

அதே நேரம் மின்தூக்கி இயங்கத் தொடங்கியிருந்தது. சிலநொடியில் மூன்றாம் தளத்தில் நின்றதும் கதவுகள் திறக்கப்பட, ஷிவியை கைகளில் அள்ளி தூக்கிக்கொண்டு வெளியில் வந்தான். 

“ஆளு தான் அஞ்சடி ஆனா அண்ணாச்சிக்கடை அரிசி மூட்டையை விட என்ன கனம்?” புலம்பிக் கொண்டான்.

ஸ்டுடியோவின் கதவுகளைத் திறப்பதற்கான பாஸ்வேர்ட் இங்கே பணியில் உள்ள அனைவரும் அறிவர். 

ஷிவியை ஏந்தியபடி, நுழைந்தவன் நேராக அவள் அறைக்குள் கொண்டு சென்று நீள சோஃபில் கிடத்தினான். 

உண்மையில் மனோகரும் இவள் நிலைகண்டு சற்று பயந்துதான் போயிருந்தான். 

அவள் சட்டையைச் சரி செய்தவன் தண்ணீரை அடித்துத் தெளித்தான். மீண்டும் கன்னம் தட்டி எழுப்ப முயன்றான். இம்முறை எழவில்லை எனில் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் முடிவில் இருந்தான். 

‘இவளுக்குத்தான் யாருமில்லையே இவளை பற்றிய விவரத்தை யாரிடம் சொல்வது? மருத்துவமனையில் கேட்டால்?’ என்ற கவலையில், அவள் முன் தரையில் அமர்ந்தவன் கன்னத்தில் கை வைத்து, தன் முகம் தாங்கிக் கொண்டான்.

ஷிவியின் விழிகள் மெல்ல மலர, மங்கலான காட்சிகள் பின் மெல்ல மெல்லத் தெளிவாகத் தொடங்கியது. முதல் காட்சியே, கண் எதிரே கன்னத்தில் கை வைத்திருக்கும், கவலையான மனோகர் முகம் தான். 

ஷிவி கண் திறக்கவும் மனோவிற்கு இதுவரையிலும் இருந்த பயம் விலக, மீண்டும் ஒரு பயம் துளிர்த்தது. 

தான் செய்து வைத்த செயலை இவள் உணர்ந்திருந்தால் தன்னை துண்டு துண்டாகத் துண்டித்து விடுவாளே! 

‘ஐயோ முழிக்கிறாளே! மார்டன் மாரியத்தா வேப்பிலை இல்லாமலே சாமியாடப் போறா, செத்தடா மனோகர்’ உள்ளம் எச்சரிக்கையாகக் கூவியது.

தளர்ந்த உடலைத் தாங்கிக் கொண்டு மெல்ல எழுந்து அமர, வேக வேகமாகத் தண்ணீரை எடுத்து நீட்டினான். மௌனமாக வாங்கிப் பருகியவள்,  பின் அழுத்தமாக முகம் துடைத்தாள். 

மேசையில் கிடக்கும் இவள் கைப்பையை நோக்கி கை நீட்ட, அதை எடுத்துக்கொடுத்தான். வாங்கிக் கொண்டவள் உள்ளே தேடி ஒரு மாத்திரை எடுத்துப் போட்டுக் கொண்டாள்.

மனோ இவளையே பார்த்திருக்க, நிமிர்ந்து முகம் பார்த்தவள், “மனோ” என்றழைக்க, இவனுக்கு பயத்தில் படபடப்பு கூடியது.

“தேங்க்ஸ் ஃபார் யூர் ஹெல்ப்” என்க, அப்போது தான் மனோவிற்கு மூச்சே திரும்பி வர, நிம்மதியாக உணர்ந்தான்.

‘ஒருவேளை தன் செய்த செயலை இவள் உணரவில்லை போலும்’ என மிதப்பாக நினைத்துக் கொண்டான். 

ஷிவி உணர்ந்துதான் நன்றி கூறினாள். மயக்கத்தில் இருந்த போதும் மனதில் இவன் முத்தத்தை அவளால் உணர முடிந்தது. உதவியாகச் செய்தாலும் அதைப்பற்றிப் பேசிக் கொள்ள விரும்பாமல் நன்றியோடு முடித்துக்கொள்ள முயன்றாள். 

Advertisement