Advertisement

அத்தியாயம் 07

முன்பெல்லாம் ஷிவி தனது வேலைகளில் குறை கூறினாலே வார்த்தைக்கு வார்த்தை வாதாடுவான். அவள் குற்றச்சாட்டுகளைக் கேட்காது அலட்சியப்படுத்துவான் மனோகர்.  

ஆனால் இப்போதெல்லாம் காது கொடுத்துக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் அந்தஸ்திற்கும் அனுபவத்திற்கும் தன் வேலையைக் குறை கூறுவது நெருடியது.

முன்பெல்லாம் கோபம் வரும், இப்போதெல்லாம் துவண்டு ஒருநொடி சோர்வை உணர்ந்தாலும் சரியாகச் செய்கிறேன் பாரென உத்வேகமும் கொண்டான்.

என்னதான் ஜெனி அறிவுரை கூறிய போதும் அதை நிராகரித்தவன், தன் கொள்கையில் இருந்து மாறவில்லை. 

ஷிவன்யாவிடம் நன்மதிப்பைப் பெற்று அவள் மனம் கவர்வதை விட படிப்படியாக முன்னேறுவதே பரவாயில்லை. இருக்கும் குறுகிய காலத்தில் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ? அவ்வளவு கற்றுக் கொண்டால் போதுமானது என்ற உறுதியில் இருந்தான் மனோகர்.

மனோகர் எதையும் விரைவாக கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவன் தான். ஆனால் அவனிடம் இருக்கும் விளையாட்டுக்குணமும் வீம்பும் இத்தனை நாளும் முன்னேற விடாது தேக்கியிருந்தது. 

இப்போது சாஹரைத் தாண்டி ஜெனியிடம் சென்றுவிடும் உத்வேகத்தில் இருந்தான். செய்யும் வேலை மனதிற்குப் பிடித்து, கருத்து ஊன்றினாலே போதும் கண் பார்க்க கை செய்துவிடும். 

ஆகையால் மனோகர் வெகு விரைவாக முன்னேறி இருக்க, இப்போது ஷிவியால் இவன் வேலைகளில் குறை கூற முடியவில்லை. 

ஞாயிறு அன்று அதிகாலை நல்ல உறக்கத்தில் இருந்த தர்ஷனை தட்டி எழுப்பினான் மனோகர். மறுபுறம் மலரிடமிருந்து வந்த அழைப்பில் அலைபேசியும் அதிர்ந்து இசைத்துக் கொண்டிருந்தது. 

உருண்டு பிரண்டு கொண்டிருந்த தர்ஷன் பாதி கண் திருந்து பார்க்க, மனோ ஏதோ அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருப்பது தெரிந்தது. 

“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா? நைட் தான் அக்காளும் தம்பியுமா சேர்ந்து அலப்பறையை கூட்டுனீங்க? இப்போ என்னடா? சண்டே அதுவுமா ஒரு மனுஷனுக்கு நிம்மதியா தூங்குற உரிமை கூட இல்லையா?” தலைமுடிகளை பிய்த்துக் கொண்டு புலம்பினான் தர்ஷன். 

வாயில் பற்பசை தூரிகையோடு எதிரே வந்து நின்ற மனோகர், “உன்னைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. ஆனால் இப்போ உன்னைப் பார்த்துப் பரிதாபப்பட்டு உக்கார்ந்திருக்க எனக்கு நேரமில்லை. அந்த ஷர்ட் மட்டும் கொஞ்சம் அயர்ன் செய்து வைச்சிடு” உளறிவிட்டு குளியலறைக்குள் புகுந்தான். 

மூடிய குளியலறை கதவை எட்டி உதைத்த தர்ஷன், “சண்டே அதுவுமா என்னடா வேலை உனக்கு?” கத்த, “இந்த சட்டமெல்லாம் உன் ஃப்ரண்ட் ஷிவிகிட்ட போய் சொல்” அவனும் உள்ளிருந்து குரல் கொடுத்தான். 

தர்ஷன் சட்டையை இஸ்திரி செய்து வைக்க, குளித்து முடித்து இடையில் கட்டிய துண்டோடு ஓடி வந்த மனோகர், வேக வேகமாக உடுத்திக் கொண்டு கிளம்பினான். 

“சிங்கர் அதிதி தேவ் தெரியும்ல? இன்னைக்கு அவங்க பேபிக்கு அவங்க வீட்டுலதான் ஃபோட்டோஷூட்” என்றவன் தர்ஷன் கடுப்போடு நிற்பதையும் கண்டுகொள்ளாது கிளம்பிவிட்டான். 

எப்படியும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஷூட் இருக்கும் பிற நாட்கள் ஸ்டுடியோவிற்குள் மற்ற வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது.  

ஷூட் இருக்கும் நாட்களில் குறிப்பிட்டுச் சொல்லவே தேவையில்லை அனைவருக்கும் நிற்க நேரமிருக்காது. வேலைப்பளுவில் வெந்தே போய் விடுவார்கள்.   

மொத்தத்தில் வார நாட்கள் முழுவதுமே மனோவை வேலைப்பளு அழுத்திப் பிழிந்தது. அதுவும் போதாதென ஞாயிறு அன்று ஷூட் இருந்தால் கட்டாயம் அனைவரும் வந்துதான் ஆக வேண்டும் என்ற சட்டம் வேறு. 

முதல் முறையாக அவுட்டோர் ஷூட் அதுவும் திரைத்துறை சார்ந்த பெரும் பிரபலம் வீட்டில் என்பதால் உற்சாகமாகக் கிளம்பியிருந்தான் மனோகர். எப்படியும் தன் கையில் கேமரா தரப் போவதில்லை, வழக்கம் போல் எடுபிடி வேலைகளைச் செய்துவிட்டு வேடிக்கை பார்த்துவிட்டு வருவோம் என்ற எண்ணம் தான் மனோகரிடம். 

கீழே வந்தவன் தனது இருசக்கர வாகனத்தை இயக்கும் போதே சட்டைப்பையில் இருக்கும் அலைபேசி அதிர்ந்தது. எடுத்துப் பார்க்க, ஓ பேபி என்ற பெயர் தாங்கி ஒளிர்ந்தது அலைபேசி திரை. 

சட்டென அழைப்பை ஏற்று, “ஏழு மணின்னு தானே சொன்னீங்க? ஐந்து நிமிஷம் இருக்கு, இதோ வந்துட்டே இருக்கேன்” காற்றில் பறப்பதைப் போன்று படபடத்தான்.

மறுமுனையில், “தேவையில்லை, நாங்க கிளம்பிட்டோம் நீ நேரா ஸ்பார்டுக்கு வந்திடு” உத்தரவிட்ட ஷிவி சட்டென துண்டித்தும் விட்டாள். 

தனக்காக காத்திருக்காது, தான் சொல்வதையும் கேட்காது எரிச்சலூட்டியவளை எண்ணிக்கொண்டு, வண்டியை உறும விட்டுக் கிளம்பினான். 

ஸ்டுடியோவிற்கு வந்திருந்த ஷிவி, தேவையான ப்ராப்பர்டீஸ், லைட்ஸ், கேமராகளோடு ஜெனி, சாஹரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள். 

மனோகர் இப்போது வந்தாலும் கூட அனுமதிக்க மாட்டாள் ஏனெனில் இவர்கள் மூவரோடு மொத்தப் பொருட்களும் ஏற்றியதில் அவள் வாகனமே மூச்சு விட முடியாது திணறிப் போனது. 

அதிதியின் கணவன் பிரேம் பிரபலமான, பெயர் பெற்ற இசையமைப்பாளர். அவள் தந்தையும் சினிமா தயாரிப்பாளர். நாற்பது ஆண்டுகளாக இத்துறையில் இருப்பவர் தற்போது மொத்தத் தமிழ் திரைத் துறையையும் தன் கைக்குள்ளே வைத்துள்ளார். அவள் சகோதரனும் வளர்ந்து வரும் இளம் நடிகன். 

பெரும் பிரபலத்தின் வீடு பிரமிப்பூட்டும்படி தான் இருந்தது. பாதுகாப்பு வளையங்கள், பரிசோதனைகள் என அனைத்தையும் தாண்டி தான் உள்ளே வந்தனர். 

இவர்கள் உள்ளே வர, அதிதியே முன் வந்து வரவேற்றாள். ஷிவியின் முகத்தில் லேசான புன்னகை கீற்றாக உதித்தது. 

வந்தவர்களை உணவுண்ண அனுப்பிவிட்டு ஷிவியோடு பேசிக் கொண்டிருந்தாள் அதிதி. 

நலம் விசாரிப்பிற்குப் பின் ஷூட் பற்றி விவரித்துக் கொண்டிருந்தாள் ஷிவி. வெகு இயல்பாக இருவரும் பேசிக் கொள்வதைப் பார்க்க, வெகுநாள் பழக்கம் என நான்கு புரிந்தது மனோவிற்கு. 

இவர்கள் உண்டு வர, பூஜை அறையின் முன் சப்ஜெக்ட் பிளேஷிங் ஸ்பார்ட்டை அட்ரெஸ் செய்தவள் லைட்டிங் தயார் செய்ய சொல்லிவிட்டு காலை உணவிற்குச் சென்றாள் ஷிவி. 

ஏற்கனவே அங்கு ஒரு குழந்தை பராமரிப்பாளர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், உடை வடிவமைப்பாளர் மற்றும் உதவிக்கு என மூன்று நான்கு ஆட்களை அமர்த்தி இருந்தாள் அதிதி.

ஷிவி வரும் முன்பே குழந்தையோடு வந்துவிட்ட அதிதி அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கேட்டறிந்து கொண்டாள். 

அருகே நின்றிருக்கும் மனோவின் கையில் இருக்கும் மயில் இறகைக் கண்டு மயங்கிய குழந்தை அதை பறிப்பதற்கு மனோவை நோக்கிப் பாய்ந்தது. 

மலர்ந்த முகத்துடன் கை நீட்டி வாங்கிய மனோ, குழந்தையைத் தாங்கிக் கொண்டு அதன் கையில் இறகைக் கொடுத்து விட்டு,  முகம் பார்த்துக் கனிந்து சிரித்தான். 

வெள்ளை நிறத்தில் ஓ பேபி ஃபோட்டோகிராபி என அச்சிடப்பட்ட டீசர்ட் அணிந்திருந்தவனை புதிதாகப் பார்த்தாள் அதிதி. 

ஷிவியின் பணியாளர்கள் இவள் அறிந்ததுதான். அப்படியிருந்தும் இந்த புதியவன் இடத்தில் ஒட்டிக்கொண்ட மகளையும் பார்த்தபடி, மனோவோடு பேசத் தொடங்கினாள். 

பெரிய பிரபலம் என்ற எந்தவித தலைக்கனமும் இன்றி, சமமாக மதித்துப் பேசுவது, தன் கையில் குழந்தையைக் கொடுத்தது என அனைத்தும் சேர்த்து மனோவின் மனதில் அதிதியின் மீது ஒரு நன்மதிப்பையும் மரியாதையையும் தோற்றுவித்தது. 

ஹால் நோக்கி வந்த கொண்டிருந்த ஷிவி, இவர்கள் மூவரையும் கண்டுகொண்டாள். 

‘இவர்களையும் கவிழ்த்து விட்டானா?’ மனோவை அளந்தபடியே அருகே வந்தாள் ஷிவி. 

அனைத்து ஏற்பாடுகளையும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டவள், ஜெனியின் கையிலும் ஒரு கேமராவை கொடுத்துவிட்டு ஷூட்டைத் தொடங்கினாள். 

அதைக் கண்ட மனோவிற்கு ஒருநொடி ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் விடாமல் ஜெனி இவனை அருகே அழைத்துக் கொள்ள, அவளின் ஒவ்வொரு கம்போஷிங், ஷார்ட்டுக்கும் ஆலோசனை கொடுத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தான் மனோகர். 

ஷிவி அதை கண்டபோதும் கண்டுகொள்ளவில்லை. எப்படியும் நேர்த்தியாக அழகுடன் வந்திருக்கும் ஒன்றிரண்டு படங்களைத்தான் அவர்கள் எடுத்ததில் இருந்து தேர்வு செய்வாள்.

குழந்தைக்குப் பட்டு கவுன் அணிவித்து பூஜை அறை பேக்ரவுண்டில் இருக்க, தளிர் நடையிட்டு வெளிவருவது போல் அழகான ஷார்ட் ஒன்றைச் சிறை எடுத்தாள். 

குழந்தையை அதன் போக்கில் விட்டாள் ஷிவி. பூஜை அறைக் கதவில் ஆடும் மணிகளை ஆட்டிவிட்டுச் சிரிக்கும் குழந்தை, அதிதியின் குரலுக்குக் கதவின் பின் நின்று எட்டிப் பார்க்கும் குழந்தை, குட்டிக் கிருஷ்ணன் சிலைக்கு பூ போட்டு விளையாடும் பூவை, மயில் இறகு மெத்தையில் படுக்க வைத்து டாப் ஆங்கிள் ஷார்ட் என அனைத்தையும் அழகு அழகாக சேமித்துக் கொண்டாள். 

இதற்குள்ளாக குழந்தை சோர்ந்து போய் அன்னையின் மடியில் அடைக்கலமாகி இருந்தது. 

அனைவருக்கும் இடைவேளை என உரத்த குரலில் அறிவித்தாள் ஷிவி. 

ஆடை வடிவமைப்பாளரிடம் அடுத்து மாற்ற வேண்டிய ஆடையைப் பற்றிப் பேசிவிட்டுத் திரும்ப, கை கட்டியபடி நின்றிருந்தான் இளைஞன் ஒருவன். 

“ஹேய்! ஹெலோ வென் டிட் யூ கம்?” ஷிவி வினவ, “ஹாஃப் நவர் ஆச்சு, ஷிவ் ஒர்க்ல இருந்ததால டிஸ்டர்ப் பண்ணலை” எனப் பதிலளித்தான். 

ஆதித்யா தேவ் பல இளம்பெண்களின் மனம் கவர்ந்த பூலோக மன்மதன். நடிகன் என்பதற்கான அத்தனை அம்சத்துடன் நின்றிருந்தான். 

பார்ன் வித் சில்வர் ஸ்பூன். வெயிலே பார்க்காத வெளிர் தேகம், ஆறடி தாண்டிய உயரம், இறுகிய உடற்கட்டு சின்ன புன்னகை அனைத்து இதயங்களையும் கொள்ளையிட்டுவிடும் அழகன்.

இவர்கள் குரலுக்கு, இருவரும் இருக்கும் திசைக்குத் திரும்பியது மனோவின் பார்வை.

ஷிவியின் அருகே நிற்பவனைக் கண்டு அதிர்ந்தவன், சட்டென முன் நிற்கும் சாஹரின் முதுகின் பின் மறைந்தான். 

“என்னாச்சு ப்ரோ?” சாஹர் கேட்க, “இது அவன்ல?” எனச் சந்தேகமாகக் கிசுகிசுத்தான். 

“அவர் தான் ஆதித்யா தேவ் அதிதி மேமோடா தம்பி! இவங்களோட உங்களுக்கு என்ன பிரச்சனை?” 

“இந்த மைதாமாவு மூட்டையைக் கலாச்சி ஆரம்பித்துல இருந்தே எக்கச்சக்கமா என் பேஜ்ல, சேனல்ல மீம்ஸ், ட்ரோல் எல்லாம் போட்டு வைச்சு இருக்கேன்டா”

சத்தமின்றி அதிராது குலுங்கிச் சிரித்த சாஹர், “அது எப்படி இவருக்குத் தெரிய போகுது? நீங்க என்ன உங்க சொந்த அடையாளத்திலையா போட்டு இருக்கீங்க?” என்றான். 

‘அதானே?’ புத்தியில் உறைக்க, தலையில் தட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றான் மனோ. 

கையில் கேமராவோடு ஆதித்யாவுடன் பேசியபடியே தோட்டத்துப் பக்கம் சென்றிருந்தாள் ஷிவி. 

வெகு இயல்பாக இருவரும் பேசிக் கொள்வதையும் ஷிவியின் இளகிய முகத்தையும் கண்டுகொண்ட மனோ, ‘இந்த சிடுமூச்சி சிலுக்கு அவதாரம் எல்லாம் நம்ம கிட்ட மட்டும் தானா?’ மனதோடு சடைத்துக் கொண்டான். 

வேறு இடத்தில் லைட்டிங் பிக்ஸ் செய்து கொண்டிருந்த சாஹருக்கு உதவியபடி, “ரொம்ப நாளா தெரியுமோ?” என்றான் குறுகிய குரலில். 

“ம்ம் அதிதி மேம்மோட மெட்டானிட்டி ஷூட்ல இருந்து பேபியோட மூனாவது, ஆறாவது மாசம்னு ஒவ்வொரு மைல் ஸ்டோனையும் நாம தானே டாக்குமென்ரி செய்து இருக்கோம்” 

“ஹோ…” கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகக் கொண்ட உறவு என மனதிற்குள் கணக்கிட்டுக் கொண்டான். 

‘உனக்கு ஏன் இந்த வேலை?’ உறங்கிக் கிடந்த மனசாட்சி பிறாண்டி எடுக்க, அதானே தன்னை தானே திட்டிக் கொண்டு தலை கோதினான். 

அதற்குப் பின் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. 

நண்பகல் நேரம் குழந்தைக்கான ஷூட் முழுதும் முடித்துவிட, மீண்டும் சிறிது நேரம் உணவு இடைவெளி. 

ஷிவியை இவர்களோடு விடாது, ஆதித்யா பிரத்யேகமான அவர்கள் வீட்டு ஆட்களுக்கான உணவு மேசைக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

மனோவையும் ஜெனியையும் போலவே ஆதித்யாவும் ஷிவியும். அவர்கள் வேலைப் பற்றிய பேச்சுகள்தான், ஷூட்டின் போது தொந்தரவு செய்யாது, அதன் பிறகு காரணமும் கேட்டு ஆலோசித்துக் கொண்டிருந்தான். ஆகையால் மீதி நேரமெல்லாம் ஷிவிக்கு அவனுடனே கழிந்தது.

மாலை நேரமாக தனது மியூசிக் ஸ்டுடியோவில் முக்கியமான ரெக்கார்ட்டிங்கை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்திருந்தான் பிரேம். 

வந்தவன் வேஷ்டி சட்டை எனத் தயாராகி வர, அதிதியும் கரும்பச்சைப் பட்டில் வர, குழந்தைக்கும் அதே நிறங்கள் கலந்த வண்ணத்தில் உடுத்தி இருந்தனர். 

மூன்று பேரையும் விதவிதமான போஸ்களில் வெவ்வேறு இடங்களில் நிற்க வைத்து, பேமிலி ஷூட்டையும் ஒரு வழியாக முடித்தாள் ஷிவி. 

பிரேம் அதிகம் பேசாது மௌன ஸ்வரூபனாக, விறைத்த நிலையிலே இருந்தான். யாராலும் அவனை நெருங்க முடியாது என்ற தோற்றத்தை தன் உடல்மொழியிலே காட்டி விட்டான். 

எண்ணிப் பார்த்தால் கூட அதிதியிடம் ஒரு வார்த்தை, ஷிவியிடம் ஒரு வார்த்தை பேசியிருப்பான் அவ்வளவுதான். ஆனால் அதிதி அவனுக்கு எதிர்ப்பதமாக இருந்தாள். 

இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றறிய, வியந்துதான்  பார்த்தான் மனோகர். 

ஒருமுறை குழந்தை அழுத போது, மாறி மாறி தோளில் போட்டுத் தாங்கியபடி இருவருமே ஒரே பாடலைப் பாடினர். 

மனோகரோடு அங்கிருந்த அனைவருமே இவர்கள் குரலின் வசீகரத்தில் கட்டுண்டனர். பிரேமின் ஹம்மிங், அதிதியின் குரலின் மென்மையிலும் மயங்கி நின்று ரசித்தனர்.

ஜன்னல் வழி நுழையும் மாலை மஞ்சள் வெயிலை வாங்கிக் கொண்டு, ஜன்னல் ஓரம் அதிதி குழந்தையை அணைத்து நிற்க, அவளுக்கு பின் நின்று அணைத்தபடி பிரேம். லேசாக முகம் திருப்பியபடி ஒருவர் விழியை ஒருவர் காதலோடு பார்த்திருந்தனர். பின் ஒன்றாகக் குழந்தையை அன்போடு பார்த்தனர்.

இந்த குடும்பப் புகைப்படங்கள் வெகு திருப்தியுடன் நிறைவாக இருந்தது ஷிவிக்கு. 

தம்பதிகளாக அவர்களைக் காணப் பரிபூரண அழகோடு நிறைவாகத் தெரிந்தது பார்ப்பவர்களுக்கு.

பாடலின் போது குரலில் கசிந்த ஒலியிலும் இப்போது இவர்கள் கண்களில் வழியும் ஒளியிலும் இதுதான் காதலெனக் கண்டுகொண்டான் மனோகர். 

இந்த காட்சியே அழகு கவிதையாக வண்ணம் கொண்டு தீட்டியது போன்று இருந்தது.

ஷூட் முடிய, அன்றைய வேலைப்பளுவில் அனைவரும் அடித்துப் போட்டதைப் போன்று அசதியுற்றனர்.

பிரேம் இறுதியில் வந்தான், அதிதியும் குழந்தையும் கூட அவ்வப்போது ஓய்வெடுத்தனர். ஆனால் காலையில் இருந்தே மாலை கிளம்பும் வரையிலும் ஷிவியுடன் இருந்தது ஆதித்யாதேவ் தான். 

இருள் சூழ்ந்த நேரம் இறுதியாக அவனிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினாள். 

காலையில் தனக்காகக் காத்திருக்காததால் இப்போது ஸ்டுடியோவிற்கு வர மாட்டேன் எனக் கோபித்துக் கொண்ட மனோ, நேராக வீட்டிற்குக் கிளம்பிவிட்டான். 

‘இவனெல்லாம் என்ன ரகம்?’ வெறுமையோடு பார்த்த ஷிவி, களைப்பின் காரணமாகப் போனால் போகிறான் என விட்டுவிட்டாள். 

மற்ற இருவரின் வாடிய முகம் பார்த்த ஷிவி, நாளை ஒருநாள் விடுமுறை என அறிவித்தாள்.

பின் ஜெனியை அனுப்பிவிட்டு சாஹரோடு ஸ்டுடியோ கிளம்பினாள்.  அவன் உதவியோடு பொருட்களை அனைத்தையும்  ஸ்டுடியோவில் வைத்து விட்டு அதன் பிறகே ஷிவி தன் வீடு கிளம்பினாள்.

இருக்கும் களைப்பிற்குக் கட்டிலில் கவிழ்ந்து விட்டனர். நாளை ஸ்டுடியோ விடுமுறை என்ற சேதியை மனோகரிடம் யாரும் சொல்லியிருக்கவில்லை. ஜெனி சொல்லியிருப்பாள் என சாஹரும், சாஹர் சொல்லியிருப்பான் என ஜெனியும் நினைத்துக் கொண்டனர். 

விடுமுறை என்பது வேலையாட்களுக்குத் தானே ஷிவிக்கு இல்லையே? அன்று ஒரு க்ளையண்ட்டோடு மீட்டிங் இருந்தது. 

பெரும்பாலும் ஸ்டுடியோவிற்கு அழைத்தே பேசிவிடுவாள். ஆனால் பெரும் பிரபலங்கள் சாதாரண மனிதர்களைப் போல் நடமாடும் சுதந்திரம் பெற்றவர்கள் இல்லையே? 

பிரபலமான நடிகையின் மெட்டானிட்டி ஷூட்டிற்கு புக் செய்ய விரும்பியவர்கள் ஷிவியை நேரில் அழைத்திருந்தனர். 

இன்னும் ஒருமணி நேரத்திற்குள் செல்ல வேண்டும் ஆனால் லேப்டாப் ஸ்டுடியோவில் இருந்தது. 

மடிக்கணினியை எடுப்பதற்குக் கிளம்பிய பின் நேராக ஸ்டுடியோ வந்திருந்தாள். வாகன நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தியவள், சற்றே முன் சென்று கொண்டிருந்த மனோகரைக் கண்டுகொண்டாள்.

தாமதமாகிறதே என்ற பரபரப்பிலே இருப்பவளுக்கு வேறு எதுவும் கருத்தில் பதியவில்லை.

மின்தூக்கியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மனோவை கண்டவள், வழக்கமாகச் செல்லும் மாடிப்படிகளைத் தவிர்த்து இவளும் மின்தூக்கியை நோக்கிச் சென்றாள். 

மனோ அலைபேசியில் பார்வையை வைத்திருக்க, அவன் மீது பார்வை வைத்திருந்தாள் ஷிவன்யா. ஆகையால் இருவருமே வெளியில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு சுவரொட்டியைக் கவனிக்கவில்லை.

மின்தூக்கியில் நுழைந்த மனோ கதவடைக்கும் முன், மின்னலென இவளும் உள் நுழைய, அதன் பின் தானியங்கிக்கதவு மூடிக்கொண்டது. 

மூன்றாம் தளத்திற்கான பொத்தானை அழுத்திவிட்டு இவளை நோக்கி ஒரு பார்வை வீசினான். 

எப்போதும் போல் ஒரு வெள்ளை நிற ஜீனும் மேலே ஒரு ஃபார்மல் ஷர்ட்டும் உள் ஒரு டீஷர்ட்டும் அணிந்திருந்தாள். 

“குட் மோர்னிங் மேம்” ராகமிழுத்தவனுக்கு காலை வேளையிலே இவளைச் சீண்டிப் பார்ப்பதில் உற்சாகம். 

தனது கைப்பைக்குள் எதையோ தேடிக்கொண்டு இருந்த ஷிவிக்கு, இவன் குரல் தொனியும் இவனும் பெரிதாகக் கருத்தில் படவில்லை. ஆகையால் எப்போதும் போல ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தாள். 

அந்தநொடி நில நடுக்கம் போன்ற அதிர்வுடன், மெல்லிய குலுங்கலுக்குப் பின் மின்தூக்கி அதன் இயக்கத்தை நிறுத்தியது.

Advertisement