Advertisement

அத்தியாயம் 06 

மனோவிற்குப் பெரிதும் ஆச்சரியமாக இருந்தது. தனுஜாவுக்கு திருமணம் முடிந்து இரண்டாவது பிள்ளை வர இருக்கும் நிலை, தர்ஷனுக்குத் திருமணமாக உள்ளது இவர்கள் வயது ஷிவன்யாவிற்குத் திருமணம் ஆகவில்லையா! 

ஏன் கல்யாணம் செய்யலை?” வியப்போடு தர்ஷனை நோக்கி வினவ, “மனோகண்டித்தான். 

இல்லைடா நம்ம மலருக்கே முறைப்பையன்னு நீ இருந்தும் இன்னும் ஏன் கல்யாணம் ஆகலைன்னு சொந்தத்துல சோசைட்டில எவ்வளவு கேள்வி, பிரெஸர்? அப்போ ஷிவிக்கு?” கொஞ்சம் வியப்பாக வினவினான். 

அவ இந்த உறவுகளுக்காகவோ சமூகத்துக்காகவோ வாழலை. அவ வாழ்க்கையை அவளுக்காக வாழ்றாடா!தர்ஷன் இலகுவாகச் சொன்ன போதும் மனோவிற்கு இன்னும் வியப்பு குறையவில்லை.

“அப்படியே இருந்தாலும் அவ பேரன்ட்ஸ் எப்படி விட்டாங்க?” இன்னும் நம்ப முடியாது தோண்டித் துருவிக் கொண்டே வந்தான். 

அவளுக்கு அப்படி யாரும் இல்லை. தனியாதான் இருக்கா

இந்த சேதி இவனின் வியப்பை மேலும் கூட்டியது.

கட்டுப்படுத்த ஆட்கள் இல்லாத வாழ்க்கையிலும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடு? அவள் விருப்பப்படியே வாழ்ந்தாலும் முப்பது வயது வரையிலும் எப்படி?’ இன்னும் தணியாத பிரமிப்பு!

ஒருவேளை லவ், லவ் பெயிலியர் ஆர் ரிலேஷன்ஷிப் அந்த மாதிரி எதுவும்?” வாய் அடங்காது கேட்டு வைக்க, “மனோ போதும் நிறுத்துஉயர்ந்த குரலில் அதட்டிய தர்ஷன், கோபத்துடன் இவன் முதுகில் ஓர் அடியும் வைத்துவிட்டான். 

சுளீரென விழுந்த அடியில் மனோ முகம் சுணங்கிக் கொள்ள, “ஒரு பொண்ணு கல்யாணம் ஆகாம இருந்தா இப்படித்தான் பேசுவியா? இதுதான் காரணம்னு நீங்களே முடிவு செய்துப்பீங்களா என்ன? கல்யாணம் செய்யாத ஒரே காரணத்துக்காக யாரா இருந்தாலும் அவ ஒழுக்க நெறிகளைப் பத்தி பேசலாமாஇப்படி அவளை பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? நீ சொல்ற எந்தவித ரீசனும் இல்லாத நல்ல பொண்ணாவே இருந்தாலும் நம்பாம சந்தேகமாத்தான் பேசுவீங்க?” உஷ்ணம் ஊற்றெடுக்க, படபடவென பொரிந்தான் தர்ஷன்.

மனோவிற்கும் கோபம் கொஞ்சம் துளிர்க்க, “போதும் நிறுத்துடா. என்னை எப்படி நீ இந்த லிஸ்டல சேர்க்கலாம்? நான் இப்போ அவளைப் பத்தி என்ன தப்பா சொன்னேன்? தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல தானே கேட்டேன்?” படபடத்தான். 

அதுக்குன்னு அவ இல்லாத நேரம் அவளைப் பத்திப் பேசுறது தப்பு இல்லையா? அதுவும் போக அவ பெர்சனல் லைப் பத்தி எல்லாம் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை மனோகுறையாத காரத்துடன் கடிந்தவன், முற்றுப்புள்ளி வைக்க முயன்றான்.

ஏன் இல்லாம? அவ உனக்கு ஃப்ரண்ட், எனக்கு பாஸ். கொஞ்சமாவது அவ மேல அக்கறை வேண்டாமா?” 

உன் அக்கறை சக்கரை எல்லாம் அவளுக்குத் தேவையில்லை. அவளை பார்த்துக்க அவளுக்குத் தெரியும்முகத்தில் அடித்தது போன்று மொழிந்தான் தர்ஷன்.

இருவரின் மனநிலையும் சட்டென இறுகிப் போனது. மனோ மறுவார்த்தை பேசவில்லை.

இந்த நேரத்திற்கு இருவரும் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

வெளியிலே உண்டு வந்துவிட்டதால், ஆளாளுக்கு முகம் திருப்பிக்கொண்டு அவரவர் இடத்தில் படுத்துக்கொண்டனர். 

தர்ஷனுக்கு இதுபோன்று  கோபம் வருவது அரிது, மனோவிற்கு அரிதிலும் அரிது! 

புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தும் தூக்கம் துளியும் வரவில்லை. 

இவன் ஏன் இவ்வளவு கோபப்படுகிறான்? அவள் வாழ்வில் அப்படி என்ன ரகசியம்?’ பூனைக்குட்டியைப் போன்று மனதில் உருண்டு, பிறாண்டிக் கொண்டிருந்தது இந்த கேள்வி. 

தர்ஷன் கண்டிப்பும் நினைவில் வர, ‘அப்படி எதுவும் இல்லாமலும் இருக்கலாம்! நமக்கு என்ன அவளைப் பற்றி?’ அலட்சியப்படுத்தித் தூக்கி எறிந்தாலும் உறக்கம் வரவில்லை. 

ஓர் அளவிற்கு மேல் முடியாது போக, மனதின் புழுக்கம் தாங்காது எழுந்து வெளியில் வந்தான்.

வரவேற்பறையில் மடிக்கணினி, சில கோப்புகளுடன் மாமா செந்தில்நாதன் அமர்ந்திருந்தார். அப்போதே மணியைப் பார்க்க, இரவு ஒன்று முப்பது. 

என்ன மாமா வேலையா?” என்றபடியே அவரை நெருங்கினான். 

சட்டெனத் திரும்பிப் பார்த்தவர், “ஆமாம் மருமகனே.  இந்த மாசம் ஆடிட்டிங் இருக்குல? இதோ கொஞ்சம்தான், வேலை முடிஞ்சதுஎன்றவர் மடிக்கணினியை வைத்துவிட்டுச் சோம்பல் முறித்தார். 

அதுக்குன்னு இவ்வளவு நேரமா?” அக்கறையாகக் கேட்ட மருமகனை வாஞ்சையாக நோக்கியவர், “என்ன செய்ய? ரூம்ல லைட் போடக்கூடாது நான் தூங்கணும்னு சொல்லி விரட்டிவிட்டுட்டா உங்க அத்தைஎனச் சடைத்துக் கொண்டார். 

கதிரேசன் தங்கச்சின்னா சும்மாவா?” மனோவின் கிண்டலில் மாமாவும் சிரித்தார்.

மனதின் இறுக்கம் கொஞ்சம் தளர, சத்தமின்றி ரசித்துச் சிரித்தான் மனோவும். 

டீ போடப் போறேன் உனக்கு?” என்றவர் எழ, “இருங்க மாமா நான் போட்டு கொண்டு வர்றேன்என்றவாறு தடுத்தவன் சமையலறைக்குள் நுழைந்தான்.

சில நிமிடங்களே இருவருக்கும் தேநீரோடு வெளியில் வந்தவன் அவரிடம் ஒன்றை நீட்டினான். 

தனது தேநீரை பருகியபடியே அருகில் அமர்ந்தவனை நோக்கியவர், “நீ ஏன் இன்னும் தூங்கலை?” விசாரித்தார். 

தூக்கம் வரலை மாமாகுரல் குழைய, சலுகையாகச் செல்லம் கொஞ்சினான். 

மீண்டும் மடிக்கணினியை நோக்கித் திரும்பியவரை, “மாமாஎனத் தடுத்து அழைத்தான்.

என்னப்பா?” அசுவாரஸ்யமாக வினவ, “தர்ஷன் ஃப்ரண்ட் ஷிவன்யா பத்தி தெரியுமா?” சட்டென அடங்காது கேட்டான். 

யார்? உன்னோட பாஸ் தானே?” உறுதிசெய்து கொள்ளக் கேட்க, ஆமெனத் தலையாட்டினான். 

ரொம்ப நல்ல பொண்ணுடாஎன ஆரம்பிக்க, வெளிக்காட்டிக் கொள்ளாது ஆர்வமுடன் செவிகளை கூர்மையாக்கிக் காத்திருந்தான் மனோ. 

காயத்திரி, செந்தில்நாதன் வேலை காரணமாக வெவ்வேறு நகரங்களில் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்த நேரம் பிள்ளைகள் இருவரையும் ஊட்டியில் விடுதியுடன் கூடிய பெரிய பள்ளியில் சேர்த்திருந்தனர். அங்கிருந்துதான் இவர்களுக்கு ஷிவன்யா அறிமுகம்.

ஒன்பதாம் வகுப்பில் ஷிவன்யாவுடன் தொடங்கியது தர்ஷன், தனுவின் நட்பு. அங்கிருந்து பள்ளிப்படிப்பு முடியும் வரை ஒன்றாகப் படித்தார்கள்.  

பின் சென்னையில் தொடங்கிய கல்லூரிப் படிப்பிலும் ஷிவன்யாவைத் தொடர்ந்து தர்ஷன் செல்ல, இவர்களைப் பிரிய விருப்பமின்றி தனுவும் உடன் சேர்ந்து கொண்டாள். 

அப்போது ஷிவன்யாவிற்கு மட்டும்தான் விடுதி வாழ்க்கை. இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்திருந்தனர். 

ஒரே கல்லூரியில் ஒரே பாடப்பிரிவில் நான்கு ஆண்டு ஒன்றாகவே சுற்றினர். 

கல்லூரிப் படிப்பை முடிந்த உடன் அமெரிக்காவில் உள்ள பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குத் தேர்வாகினர் ஷிவியும் தர்ஷனும். 

தர்ஷனுக்கு வெளிநாடு செல்ல விருப்பமில்லை பெங்களூரில் வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச்  சேர்ந்தான். ஷிவியையும் தனது அலுவலகத்திலே விண்ணப்பிக்கும்படி உரைக்க, அவளோ தனியாக அமெரிக்கா கிளம்பி விட்டாள்.

கை நிறைந்து வழியும் சம்பளத்தோடு நல்லதொரு வெளிநாட்டு வேலையில் அமர்ந்த நேரம், இங்கே தனுஜா தனது மேற்படிப்பைத் தொடர்ந்தாள். 

விரும்பி படித்த படிப்பு, கணினித் துறையில் வேலை என வெளிநாட்டில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த போதும் ஷிவிக்கு மூன்றே வருடத்தில் அத்தனையும் திகட்டி விட்டது. 

எதிலும் பிடிப்பில்லாத வெறுமை உணர்வு, இறுகிப் போன மனநிலை, சுற்றியிருக்கும் அத்தனையும் மெல்ல மெல்ல சலிப்பூட்டத் தொடங்கி இறுதியில் கசந்து போனது. 

போதும் போதுமென வெறுத்து வேலையை விட்டவள், இந்தியா திரும்பினாள். 

அடுத்து என்ன? மனம் அலைபாய, தர்ஷனும் தனுவும் அக்கறையாக ஆளாளுக்கு ஒரு யோசனை கூறினர். ஷிவியோ தனக்குப் பிடித்த புகைப்படத்துறையை முறையாகக் கற்றுக்கொள்ள நினைத்தாள். 

அதிலும் இவள் ஆசையைத் தூண்டிவிட்டு அதிகம் கவர்ந்த குழந்தை புகைப்படக்கலையை முறையாக, சில மாதங்கள் மும்பையில் தங்கி கற்க ஆரம்பித்தாள். 

இங்கே தனுஜா மேற்படிப்பை முடிந்ததுமே பெரியவர்கள் கூடி மாதவனுடன் திருமணம் பேசி முடித்து வைத்தனர். 

பயிற்சியை முடித்து வந்த ஷிவன்யா சின்னதாக சொந்தமாக ஸ்டுடியோவை தொடங்கினாள். ஷிவிக்கு எப்போதும் பணம் ஒரு தடையாக இருந்தது இல்லை என்ற போதும் முழுக்க முழுக்க தன் சொந்தப் பணத்தில்தான் தொழில் தொடங்கினாள். 

அப்போது தான் மெட்டானிட்டி ஃபோட்டோசூட், பேபி ஃபோட்டோசூட்கள் எல்லாம் செலிபிரெட்டிகளால் அறிமுகமாகிக் கொண்டிருந்த நேரம். 

அந்த நேரம் ஷிவி ஓ பேபியை ஓபன் செய்ய, சமூக வலைத்தளங்களின் வெளிச்சம் விரைந்து முன்னேற உதவியாக இருந்தது. 

அது வரையிலும் பெரிய பெரிய செலிபிரெட்டிகள் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த புகைப்பட வகைகளை எல்லாம் சாதாரண மக்களும் எடுத்துக்கொள்ள விரும்பி முன் வந்த நேரம்.

ஷிவியின் கடின உழைப்பும் தொடர்ந்து புதிது புதிதாகக் கற்றுக்கொண்டு உட்புகுத்திய வேகமும் தொழிலில் அவளை உயர்ந்து பார்க்கும் உயரத்தில் தூக்கி வைத்தது. 

அசாத்திய வளர்ச்சியை ஆறே ஆண்டில் தனியாக அடைந்தவள், தனித்து நின்றுவிட்டாள். 

தர்ஷனும் அவன் துறையில் முன்னேறி மேற்பதவிகளை அடைந்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறான். 

அரவணைத்துக் கொள்ளும் சொந்தங்கள், அன்பான கணவன், அழகான பிள்ளையுடன் தனுவும் மகிழ்ச்சியாக உள்ளாள்.

வாழ்க்கை ஓட்டத்தில் மூன்று பேரும் வெவ்வேறு திசையில் சென்றபோதும் ஷிவியுடன் இவர்களுக்குள் இருந்த நட்பும் பிணைப்பின் இறுக்கமும் சிறிதும் குறையவில்லை.  நாளும் பசுமையுடன் தழைத்து வளர்கிறது.

செந்தில்நாதன் ஷிவியை பற்றி தான் அறிந்த வரை கூறி முடிக்க, மீண்டும் பிரமிப்பில் உறைந்து போனான் மனோகர். 

அது எப்படி யாரும் இல்லாம இருக்க முடியும்? ஷிவியோட பேமலி எல்லாம் எங்க?” அவளை அறிந்து கொள்ளும் ஆவலில் இன்னும் ஆழமாகத் தோண்டினான். 

பேரண்ட்ஸ் இல்லை. பட் அத்தை, சித்தப்பான்னு சொந்தமெல்லாம் கோயமுத்தூர், திருப்பூர் பக்கம் இருக்காங்க. இவ தான்  விலகி இருக்காளோ இல்லை அவங்களை விலக்கி வைச்சிருக்காளோ? அதெல்லாம் சரியாத் தெரியலை மனோ. ஆனால் அவங்களோட ஆரம்பத்துல இருந்து ஒட்டுதல் இல்லாம தனியாதான் இருக்காள். திறமையான, தைரியமான பொண்ணுடா!பிரமிப்பும் பெருமையுமாக உரைத்தார். 

சரி மாமா, டைம் ஆச்சு நீங்க போய் தூங்குங்கஎன்றவன் அனுப்பி வைக்க, எழுந்து சென்றார் செந்தில்நாதன். 

அப்படியே சோஃபாவில் தலைசாய, சரிந்தவனுக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்தது சஞ்சலம். அன்றைய இரவு சிறிதும் நித்திரை அண்டாது, நிம்மதி தொலைந்து போனது. 

Advertisement