Advertisement

அத்தியாயம் 05

புதிய விடியலில் புத்துணர்ச்சியோடு வேலைக்கு வந்திருந்தான் மனோகர்.

“ஹாய் சேச்சி வந்தாச்சா ஓ பேபி?” எனக் கேலியாக கேட்க, யாரைக் கேட்கிறான்? எனப் புரியாது முழித்தார் மாதவி.

அதன் பின்பே ஸ்டைலாக தலை கோதி நடித்துக் காட்ட, அது ஷிவன்யா எனப் புரிபட, சிரிப்புடனே தலையாட்டினார்.

ஷிவன்யா காலை எட்டுமணிக்கு வந்தால் இரவு எட்டு மணிக்குதான் வீடு திரும்புவாள். அவளுக்கு வேலை நேரம் ஓய்வு நேரம் என்பதெல்லாம் கணக்கிலே கிடையாது. பெரும்பாலும் உழைப்பதற்கே பிறந்ததைப் போல் வேலையிலே மூழ்கி கிடப்பவள்.

மனோ உள்ளே வர ஷிவி அவளறையில் அமர்ந்திருப்பது தெரிய, கண்டுகொள்ளாது எடிட்டிங் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

ஜெனியும் சாஹரும் இன்னும் வந்திருக்கவில்லை. ஸ்டுடியோவிற்குள் இவர்கள் மட்டும்தான் ஆளுக்கொரு அறையில் அடைந்திருந்தனர்.

‘வேலை பற்றிய விவரங்களை நாளை வேலைக்கு வந்தால் கூறுகிறேன்’ என நேற்று நக்கலாகக் கூறியது நினைவில் வந்தது. ஆனால் அதற்காக எல்லாம் அவளிடம் சென்று நிற்க மனம் வரவில்லை.

நேற்றைய ஒரே நாளிலே மனோவிற்கு அனைத்தும் புரிந்துப் போனது. இதுதான் வேலையென குறிப்பிட்டுச் சொல்ல இயலாது, இருக்கும் அத்தனை வேலைகளையும் செய்ய வேண்டுமென.

சுழல் நாற்காலியில் சரிந்தவன் சுழன்று ஆடிய படியே முன் இருக்கும் கணினியை இயக்கி, அதில் இருக்கும் பழைய கோப்புகள் அனைத்தையும் பார்வையிடத் தொடங்கினான்.

ஆரம்பம் முதல் கடந்த மாதம் முடிந்தது வரை அழகு அழகாகக் குழந்தைகளின் புகைப்பட ஆல்பம்கள் வரிசையாக வருடம் வாரியாக இருந்தது.

அனைத்தையும் பொறுமையாக பார்வையிட்டான். பேக்ரவுண்ட், அலங்காரம், வடிவமைப்பு, குழந்தைகளின் உடைகள், பொருத்தி வைத்திருக்கும் போஸ் என ஒவ்வொன்றும் தனித்துவமாக இருந்தது.

ஒன்று மாதிரி மற்றொருன்று இல்லை. அதிலும் செலிபிரெட்டி கிட்ஸ்களின் ஆல்பங்கள் அனைத்தையும் அத்தனை சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. ஒவ்வொரு பிராஜக்ட்டிலும் ஷிவியின் கடுமையான உழைப்பைக் கண்டுகொண்டான்.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இயங்கும் ஸ்டுடியோவின் வளர்ச்சியையும் இதன் வழியாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

அனைத்தையும் பார்வையிட்ட மனோகர் இறுதியில் மலைத்துப் போய் வியப்பின் விளிம்பிற்கே சென்றிருந்தான்.

நிமிர்ந்து பார்க்க, ஜெனி அடுத்த இருக்கையில் கணினி முன் அமர்ந்திருந்தாள். அவளுக்குக் காலை வணக்கம் தெரிவித்தவன் அவள் வேலைப் பற்றிக் கேட்டறிந்து கொண்டான்.

ஃபோட்டோஷாப் மற்றும் எடிட்டிங் அனைத்தும் கற்றிருக்க, அதை தகுதியாகக் கொண்டுதான் இங்கு வேலையில் சேர்ந்திருந்தாள் ஜெனி.

புகைப்படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இந்த வேலைகள்தான் ஜெனிக்கு. அடிப்படை மாற்றம் மட்டுமே செய்து ஷிவிக்கு கொடுக்க, அவள் அதை மேலும் மெருகேற்றி ஆல்பமாக வடிவமைத்து பிரிண்டிங் அலுவலகத்திற்கு அனுப்புவாள்.

மேலும் தற்போதைய ஆள் பற்றாக்குறையால் வீடியோ எடிட்டிங் மொத்தமும் ஷிவி மட்டும்தான் பார்க்கிறாள். அது மட்டுமின்றி வரவு, செலவு, வருமானவரி கணக்குகள், ஸ்டுடியோவின் பராமரிப்பு மற்றும் நிர்வாகம் மொத்தமும் ஷிவியின் பொறுப்பிலே.

மனோகர் எழுந்து வெளியே வந்தான். வெகு நேரம் அமர்ந்திருந்ததும் கணினித் திரையை வெறித்ததும் ஒருவித சோர்வை கொடுத்திருக்க, ஒரு கோப்பை காஃபியை எடுத்து வந்தான்.

ஹாலில் அமர்ந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கும் சாஹர் முன் வந்து அமர்ந்தான்.

கருப்பு நிற ஸ்வெட்டர் பின்னும் நூல், ஊசியைக் கொண்டு பின்னிக் கொண்டிருந்த சாஹர் மிருதுவான யானை பொம்மை ஒன்றை வடிவமைத்துக் கொண்டிருந்தான்.

ஷிவி கேட்பது எத்தகைய பொருட்கள் என்றாலும் அவனே தேடிச் சென்று மூலப்பொருட்கள் வாங்கி வந்து வடிவமைத்துக் கொடுத்து விடுவான். அது மட்டுமின்றி சாஹர் கற்பனை வளத்தால் உருவாக்கி வைத்த பொருட்களே அதிகம் இருந்தது.

தையல், கைவினைப் பொருட்கள் செய்யும் கலையை பெற்றோர்களிடம் இருந்து கற்றுக்கொண்டவன் அதைத் தகுதியாகக் கொண்டு இங்கு வேலை வாங்கியிருந்தான்.

சூட் இல்லாத நாட்களில் சாஹருக்கு இந்த வேலைகள் மற்றும் பிரிண்டிங் அலுவலகம் செல்வது ஆல்பம் எடுத்து வந்து பேக்கிங் செய்வது, டெலிவரி செய்வது என மற்ற வெளி வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்வான்.

சாஹர் திரைப்படக்கல்லூரியில் மூன்றாமாண்டு ஒளிப்பதிவியல் படிக்கும் மாணவன். சினிமாத்துறைக்குள் சாதிக்க வேண்டுமென்பது இவனின் பெருங்கனவு. மாலை நேர கல்லூரிச் செல்வதால் காலை நேரம் வேலைக்கு வருவான்.

பெரும்பாலும் பெயருக்குத்தான் படிப்பு, அனுபவ அறிவுதான் தேவை என்பதால் இங்கே வேலைக்குச் சேர்ந்தான். தந்தையில்லாத குடும்பம், வீட்டு வேலைக்குச் செல்லும் அன்னை, பள்ளிப்படிப்பில் இருக்கும் தங்கை என வறுமையில் தவிக்கும் குடும்பத்திற்கு இவனின் வருமானம் உதவியாக உள்ளது.

தன்னறையில் இருந்து வெளியே வந்தாள் ஷிவி. நேராக சென்றவள் ஒரு கோப்பை காஃபியை எடுத்துக் கொண்டு இவர்கள் முன் வந்து நின்றாள்.

மெத்திருக்கையில் சாய்ந்து சுகமாக அமர்ந்திருப்பவனைக் காண, ஏனோ புகைந்தது.

சுகவாசி! நேற்று தான் படுத்திய பாட்டிற்கு இன்று வேலைக்கு வர மாட்டான் என்றே நினைத்திருந்தாள். ஆனால்
மனோ உற்சாகமாக வந்து அமர்ந்திருப்பதில் கொஞ்சம் ஆச்சரியம் கொண்டவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஷிவி வந்து நின்ற போதும் அலட்சியப்படுத்துவதாக நினைத்துக்கொண்ட மனோ கண்டுகொள்ளாது இருந்தான்.

“சாஹர் மனோவையும் உன்னோட வேலையிலே சேர்த்துக்கோ” அருகில் இருக்கும் மனோவை விடுத்து, சாஹரிடம் கூறினாள்.

இப்போது மின்னலென துள்ளி எழுந்தவன், “ஏங்க எனக்கு இந்த கிராஃப்ட் ஒர்க் எல்லாம் தெரியாதுங்க” வெடுக்கெனக் கூறினான்.

“தெரியாதுன்னா கத்துக்கோ” இலகுவாக கூறிவள் தோள்களை குலுக்க, “ஏங்க நான் இந்த வேலைக்கு எல்லாம் வரலைங்க” அவனும் பதிலுக்குப் பதில் வாதாடினான்.

“ஃபோட்டோகிராபரா அப்பாய்ட் பண்றதா நான் எங்கேயும் மென்ஷன் பண்ணலையே?” அவளும் அழுத்தமாக நின்றாள்.

“அதுக்காக?” கேள்வியோடு முகம் சுருக்கியவன் வார்த்தையை விடாது வாயை மூடிக்கொள்ள, “இதுதான் வேலை” என்ற ஷிவி, ‘இஷ்டமில்லை என்றால் செல்லலாம்’ வாயிலை நோக்கி கைக்காட்டியவள், வார்த்தையின்றி சைகையில் சொல்லிவிட்டாள்.

மனோவின் ஆசை மனம் அடிபட்டதில் அப்படியே போய்விடத்தான் உள்ளம் துடித்தது. ஆனால் வழக்கம் போல அவன் பார்வையில் விழுந்த சோனி சொக்குப்பொடி வீசினாள்.

பேச்சுவார்த்தை அவ்வளவுதான் என்பதைப் போல் காலி கோப்பையை மேசையில் வைத்த ஷிவி, அங்கிருந்த அவள் புகைப்படக்கருவியை தூக்கிச் சென்றாள்.

அதைக் கண்டதும் அப்படியே அடங்கிப் போன மனோ, உள்ளுக்குள்ளே குமுறினான்.

“மீசை மட்டும்தான் இல்லை கதிரேசா” ஆற்றாமையில் பற்களைக் கடித்தான்.

“கதிரேசனா யாரு?” சாஹர் புரியாது கேட்க, “வேற யாரு? என்னை பெத்து இவங்ககிட்ட பேச்சு வாங்க அனுப்பி வைச்ச எங்க அப்பன்தான்” என்றவன் நெஞ்சில் அடித்துக் கொள்ளாத குறையாக விம்மினான்.

சாஹருக்கு குபீரென வெடித்துக் கொண்டு சிரிப்பு வந்தது. உதட்டை மடித்து, கடித்து அடக்கியவன், “இப்படி வாங்க ப்ரோ” இலகுவாக மனோவின் கரம் பற்றி அழைத்து அருகே அமர்த்திக் கொண்டான்.

“இதெல்லாம் ப்ராப்ஸ் ஸ்டோர்ஸ்ல இல்லை ஆன்லைன் மார்கெட்ல பார்த்து வாங்கிக்கலாமே?” மனோ அங்கலாய்க்க, “வாங்கலாம் பட் எல்லாமே கிடைக்காது ப்ரோ, நமக்கு வேணுங்கிற விதத்துல கொஞ்சம் நாம தான் மேக் பண்ணனும். அன்ட் பேபிஸ்க்கு பேபிஸ் போல ஷாப்ட்டா குவாலிட்டியா இருக்கணும்” என்றும் விளக்கம் கூறினான்.

மனோ சுவாரஸ்யமின்றி தலையாட்டி, “ஒருவேளை இது உங்க பொறுமையை சோதிக்கிற டெஸ்ட்டா கூட இருக்கலாம் ப்ரோ” கிண்டலோடு எச்சரிக்கையும் செய்தான் சாஹர்.

“என்ன?” ஒருநொடி பதறிய மனோகர், “இருந்தாலும் இருக்கும்” கிசுகிசுப்பாக முனங்கியவன், வேலையில் கவனம் திருப்பினான்.

‘முதல்நாளே தன்னை காத்திருக்க வைத்து பரிசோதித்தவள் தானே?’ மனதில் நினைத்தவன் சடைத்துக்கொண்டான்.

சாஹர் கற்றுத்தர, ஆர்வமே இல்லாது அவனோடு இணைத்து அத்தனை வேலைகளையும் செய்தான் மனோ.

ஃபோட்டோசூட்கான பொருட்கள் அனைத்தையும் புதிது புதிதாக தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

வண்ண வண்ண மலர் கீரிடம், பூங்கொத்து, பொம்மைகளை வடிவமைக்க வேண்டும். மூங்கில் கூடைகள், குட்டியான மேசை, நாற்காலி, ஊஞ்சல், பாத் டப் போன்ற மினியெச்சர் பொருட்கள் அனைத்தும் தேடித் தேடி வாங்கி வந்து வர்ணம் பூசுவது என வேலைகள் இருந்து கொண்டே இருந்தது.

என்னதான் மனோ கஷ்டப்பட்டு உழைப்பைக் கொட்டினாலும் பரிசோதனை பார்க்கும் போது அனைத்தையும் வீண் என்பதை போல் ஒதுக்கி விடுவாள் ஷிவி.

மனோவிற்கு அப்படியே கதகதவென பற்றிக்கொண்டு வரும்.

பொறுமையின்றி, “அப்புறம் ஏன் என்னை செய்ய சொல்றீங்க?” கோபித்து கொண்டவனை, வெறுமையாக வெறித்தாள்.

‘உண்மையிலே இவன் குழந்தை தானா?’ சந்தேகமாக பார்த்த போதும் உள்ளுக்குள் இளநகை அரும்பியது.

ஷிவன்யாவின் உள்ளத்தில் புயல் காற்று, பூகம்பமே வந்தாலும் வெளியில் காட்டாது உர்ரென்ற முகம்தான் எப்பொழுதும்.

“மனோ இங்க பார், இந்த பிளார் ஹேர் பேன்ட்ல குட்டி கம்பி நீட்டிட்டு இருக்கு. அப்புறம் இந்த கூடையிலே பார் ஈவனா கயிறு சுத்தலை. அப்புறம் இந்த சர்பேஸ்ல பெயிண்டிங்கைத் தொட்டுப் பார் எவ்வளவு சொரசொரப்பாக இருக்கு. எனக்கு பேபியோடு சேப்டி அண்ட் கம்போர்ட்தான் முக்கியம். காசும் பொருளும் வீணாகுறது பெருசு இல்லை” என்றபடி இவன் படைப்பில் உள்ள குறைகளை பட்டியலிட்டாள்.

அவள் கூற்றில் இருக்கும் நியாயம் புரிந்தாலும் ஏனோ மனம் ஏற்றுக்கொள்ளாது முரண்டியது.

“இதுக்கு நீங்க காரணம் கேட்காமலே அமைதியா இருந்திருக்கலாம் அமைச்சரே” சாஹர் கிசுகிசுத்தான்.

தனக்கு தெரியாத, பழக்கமில்லாத வேலையை கொடுத்து இந்த வேலைக்கு நான் தகுதி இல்லை என முதல்நாள் அவள் கூறிய வார்த்தைகளை நிரூபிக்க முயல்வதாக நினைத்து கனன்றான்.

உண்மையில் ஷிவன்யா இவனை பரிசோதித்துக் கொண்டுதான் இருக்கிறாள். மனோகர் இப்போது தான் இந்தத் துறைக்குள் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறான். காத்திருப்பும் பொறுமையும் நிதானமும் வேண்டும், ஆதி முதல் அனைத்தையும் கற்றுத் தேற வேண்டும். இதையெல்லாம் இவனால் தாக்குப் பிடிக்க முடியாதெனில் ஓடிவிடுவதே நல்லது.

பொறுமையுடன் உறுதியாக நின்று தாண்டி வர முடியாதவன் வேறு துறைக்கோ தொழிலுக்கு செல்லட்டும் என்ற எண்ணம் ஷிவன்யாவிற்கு.

இவன் என்றில்லை அவளுக்கு கீழ் வரும் யாராக இருந்தாலும் இப்படித்தான் கையாள்வாள் என மனோ அறிந்திருக்கவில்லை.

பத்து நாட்கள் பறந்தோடியிருந்தது. வேலையிடத்தில் ஷிவியைவிட மற்ற அனைவரிடமும் நெருக்கமாக நட்பை ஏற்படுத்தி இருந்தான் மனோ. அதுவும் வெகு குறுகிய காலத்திலே!

அதிலும் மாதவி எடுத்து வரும் மதிய உணவை மனோவோடு பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு உறவை உருவாக்கியிருந்தான்.

மனோகரின் பேச்சில் இருக்கும் வசீகரம் எவரையும் எளிதில் வசியப்படுத்தி விடும். விதிவிலக்கு ஷிவன்யா மட்டும்தான்.

வேலை சார்ந்த அவசியம் தாண்டி அநாவசியமான பேச்சுவார்த்தைகள் எதுவும் ஷிவியிடம் வைத்துக் கொள்வதில்லை. பேசினாலும் தன்னை மதிக்காது, அலட்சியம் காட்டுவாள் என்பதை இந்த நாட்களில் அனுபவித்து உணர்ந்திருந்தான்.

சில மாதங்கள் மட்டுமே அல்லது புதிய புகைப்படக்கருவி வாங்குவதற்குத் தேவையான பணத்தைச் சேமிக்கும் வரை மட்டும் இந்த வேலையில் தாக்குப்பிடித்தால் போதுமென மனதைத் தேற்றி வைத்திருந்தான்.

சனிக்கிழமை இரவு தர்ஷனை தள்ளிக்கொண்டு சினிமாவிற்கு வந்திருந்தான் மனோ. படம் முடிய, உணவகத்திலே இரவு உணவினை முடித்துக்கொண்டு இருவரும் வீடு திரும்பினர்.

அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியவர்கள் பேசியபடியே நடக்கத் தொடங்கினர்.

தர்ஷன் தான் கார் ஓட்டி வந்தான் என்ற போதும் மனோ கைகளை உயர்த்தி சோப்பல் முறித்துக்கொள்ள, “வொர்க் எப்படிப் போகுடா? கஷ்டமா இருக்கா?” அக்கறையாக வினவினான்.

“ம்ம்” ராகமிழுத்தவன் வாய் திறந்து சொல்லவில்லை.

“கேட்குறேன்ல சொல்லுடா எருமை” தர்ஷன் காய, “ஆமான்னு சொன்னா நீ வந்து என் வேலையைப் பார்க்கப் போறீயா என்ன?” சிடுசிடுத்தான்.

“நான் ஏன் பார்க்கணும்? இந்த வேலைதான் வேணும்னு நீயா பிடிவாதமா தேடிக்கிட்டது தானே?” நறுக்கெனக் கேட்க, மனோ முறைத்தான்.

நமட்டுச் சிரிப்புடன், “ஏன்டா? வைச்சு செய்றாளா என் தோஸ்து?” கேலியாகக் கேட்க, “பசின்னா என்னனு காட்டிட்டா பரமா! வியர்வை சிந்த வேலை பார்க்கிறேன்டா” பாவமாக முகத்தைச் சுருக்கி பெருமூச்சு விட்டான் மனோ.

“ஏன் அவ்வளவு வேலையா இருக்கு ஸ்டுடியோல? அப்படி என்னதான் வேலை பார்க்கிற?” புரியாது தர்ஷன் வினவினான்.

“க்கும் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம். நானும் உன் வீட்டுலையே இருந்திருக்கலாம். அம்புட்டும் ஆகாத வேலை, என்னை எடுபிடி மாதிரி ட்ரீட் பண்றாடா” அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு குமுறினான்.

சின்னச் சிரிப்புடன், “இந்த வேலைக்காகவா தனுவை தாஜா செய்து ரெக்கமண்ட் பண்ண வைச்ச? சொந்த செலவுல சூனியமா?” என்றான் தர்ஷன் கேலியாக.

கட்டுப்படுத்த முடியாது தர்ஷன் கலகலவென சிரிக்க, கடுப்பாகிப் போன மனோகர் கையில் இருக்கும் காலி தண்ணீர் குடுவையை அவனை நோக்கி வீசினான்.

தர்ஷன் சுதாரித்து விலகிவிட, சரியாக அவனைத் தாண்டி அங்கிருந்த கார் ஒன்றில் பட்டுக் கீழே விழுந்தது பாட்டில்.

“அடப்பாவி” முனங்கிய தர்ஷன் பதற, மனோகரோ அசட்டையாக அருகே வந்தான்.

அந்த நேரம் காரின் கதவைத் திறந்து கொண்டு, நீண்ட ஹீல்ஸ் பாதங்கள் கீழிறங்க, கண்டுவிட்டு மனோவின் பார்வை ஆர்வமுடன் கூர்மையானது.

பாதம் பற்றி மேலேறியவனின் பார்வை, பாவை முகம் காண பேயறைத்ததைப் போன்று இருண்டு போனது.

ஷிவன்யாதான் கீழிறங்கி கைக் கட்டியபடி நின்றிருந்தாள்.

“ஹேய் ஷிவா!” உற்சாக கூவலோடு அவளை நோக்கி முன்னேறிய தர்ஷனை தடுத்துப் பிடித்த மனோ, “இவ எப்படி இங்க?” மென்குரலில் ரகசியமாக கேட்டான்.

“ஷிவாவும் இந்த அப்பார்ட்மெண்ட்தான்” என்றுவிட்டு, ஷிவியை நெருங்கிய தர்ஷன், அவளிடம் நட்புடன் உரையாடத் தொடங்கினான்.

விண்வெளியில் இருந்து இறங்கிய வேற்றுக்கிரகவாசியைக் காண்பதைப் போல் பேரதிர்ச்சியோடு நோக்கினான் மனோ. ஆணியடித்தது போன்று அசையாது அதே இடத்தில் உறைந்து விட்டான்.

‘நாங்க பேசுனதைக் கேட்டு இருப்பாளா?’ மனோவின் மனம் படபடக்க, ஷிவியின் விழிகள் ஒருநொடி இவனை முறைப்பாகத் தழுவி, பின் தர்ஷனிடம் தஞ்சமடைந்தன.

மெல்லிய வெளிச்சம் வீசும் அவ்விடத்தில், மேனியின் பால் வண்ணத்தைப் பளிச்சென்று எடுத்துக்காட்டியது அவள் அணிந்திருக்கும் பார்ட்டி கவுன். கருப்பு நிறத்தில் கழுத்தில் இருந்து முட்டி வரைக்கும் மூடியிருந்தது.

இன்று அலுவலகத்தில் பார்த்ததுக்கும் இப்போது பார்ப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் புரிய, எங்கோ வெளியில் சென்று வந்துள்ளாள் எனப் புரிந்தது.

அவளைக் கண்ட நொடி, அலட்சியமாக இதழ் சுளித்துக் கொண்டவனுக்கு சிறிதும் ரசிக்கத் தோன்றவில்லை. அழகென்றாலே அள்ளிக்கொள்ளும் மனோவின் பார்வைக்கு இவள் என்னவோ கல்லும் மண்ணும் போல் காட்சியளித்தாள்.

ஆறடி தூரத்திற்கு அப்பால் இருந்த போதும் அனல் வீச்சு, பாய்ந்து வந்து சூழ்ந்து கொண்டதைப் போன்று ஒவ்வாமையாக உணர்ந்தான்.

ஷிவி, தர்ஷன் இருவருமே இங்கொரு ஜீவன் நிற்பதையே மறந்து போய், தங்கள் சிநேகத்தைச் சீராட்டிக் கொண்டிருந்தனர்.

ஷிவியின் இந்த அலட்சியம் அறிந்ததுதான் என்ற போதும் இருவரும் சேர்ந்து தனித்துவிட்டது இவனைச் சீண்டிவிட, பற்களைக் கடித்தான். பிடரியை அழுத்திக் கோதியபடி அவளையே வெறித்தான்.

‘அவ தான் பார்க்கலையே? அவ பார்க்கணும்னு நீ பார்க்குறியா?’ ரோஷம் கொண்ட மனசாட்சி உமிழ, சட்டெனப் பார்வையைத் திரும்பிக் கொண்டான்.

டக் டக்கென தரையில் கீறிச்சிடும் ஹீல்ஸ் ஓசை தன்னை நெருங்கி வருவது செவி தீண்டிய போதும் திரும்பாது இருக்க, அவளோ, “கேடி” என மென்குரலில் முனங்கிவிட்டு இவனைத் தாண்டிச் சென்றிருந்தாள்.

சடரெனத் திரும்பிப் பார்க்க, ஷிவியின் வெளிர் முதுகு தான் காட்சியானது.

‘இவள் எதுவும் கூறிச் சென்றாளா? இல்லை தன் பிரமை தானா?’ உண்மை உணராத குழப்பமான நிலையில் நின்றிருந்தான்.

சற்று முன் இவர்கள் இருவரும் பேசியதை கேட்டிருந்தாள் ஷிவன்யா. ‘எப்படி இவனாக என் ஸ்டுடியோவிற்குள் வாரலாம்? அதுவும் தனுவை பயன்படுத்திக் கொண்டு?’ என்ற கோபத்தைத்தான் கொட்டிவிட்டாள் ஒரே வார்த்தையில்.

தன்னை நெருங்கி வந்த தர்ஷனின் தோள்களை பற்றிக்கொண்டு, “பொண்ணாடா இவ? எப்படிதான் இவ குடும்பத்துல சகித்துகிடுறாங்களோ? பாவம்தான் இவ புருஷன்!” பச்சை மிளகாயைக் கடித்ததைப் போல் காய்ந்தான்.

குழப்பமாக புருவம் இரண்டும் சுருங்க, “ஷிவாக்கு கல்யாணமாச்சுன்னு யார் சொன்னா?” ஒளியின் வேகத்தில் விரைந்து வந்தது தர்ஷனின் கேள்வி.

அதுமட்டுமின்றி அழுத்தமான குரலில் இவனின் கேள்வி அவனின் கேள்வியைக் கண்டித்தது.

கண்மூடிய மனோ, மூளையின் மூலையில் கிடந்த ஷிவன்யாவின் பிம்பத்தை முன்னெடுக்க, முறைக்கும் முசுட்டு முகமே காட்சியானது. அதிலும் திருமதி என்பதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லாத வெறுமை.

விழி திறந்த மனோ, “உனக்கும் தனுக்கும் கிளாஸ்மெட் தானே ஷிவி?” சந்தேகமாக வினவ, “ம்ம்” தலையாட்டினான் தர்ஷன்.

Advertisement