Advertisement

குழந்தை நன்றாக ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருக்க, சோஃபாவில் படுக்க வைத்தவள், தன்னிடம் இருக்கும் மிருதுவான வெள்ளை நிற பஞ்சுத் துணியில் குழந்தையைச் சுற்றத் தொடங்கினாள் ஷிவி. 

“என்னடா இது? பேபியை துணி மூட்டையை மாதிரி கட்டுறா? சின்ன குழந்தை பாவம் இல்லையா?” பதறிய மனோ அருகே இருந்த சாஹரின் காதில் முணுமுணுத்தான். 

“ப்ரோ இது ஒன்னும் தப்பு இல்லை. நம்ம பாரம்பரிய பழக்கம்தான். இது wrapping, இப்படி சுத்துறதுக்கும் ஒரு முறை இருக்கு. சரியா செய்யும் போது ஒரு பிரச்சனையும் இல்லை, பேபி சீறாக மூச்சு விடும். அப்புறம் அந்தக் கதகதப்பிலே இன்னும் நல்லா தூங்கும்” எனப் பொறுமையா விளக்கமும் காரணமும் கூறினான் சாஹர்.

இப்போது தான் மனோவால் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.

“குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா

குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா…”

நிசப்தம் சூழ்ந்த அறையில் அனுமதியின்றி யுவனின் இசை திடுமென மனோவின் அலைபேசி வழியாக அதிர்ந்து ஒலித்தது. 

அந்த ஓசைக்கு விழித்து விட்ட குழந்தை வீரிட, ஒரு முறைப்பில் அனல் அருவியில் மனோவை குளிப்பாட்டியிருந்த ஷிவி, “கெட் லாஸ்ட்” மெல்லிய குரலில் அழுத்தமாக உத்தரவிட்டாள். 

படபடத்துப் பதறிப் போன மனோவும் இந்த நேரத்திற்கு எல்லாம் தன் ஜீன் பாக்கெட்டிற்குள் இருந்த அலைபேசியை உருவி எடுத்து அணைத்திருந்தான். 

“மனோ சூட்ல இருக்கிற டைம்ல எல்லாருமே மொபைலை சைலண்ட்ல வைச்சிட்டணும். அது இங்க எழுதப் படாத விதி” சட்டதிட்டங்களை மெல்லிய குரலில் மொழிந்தாள் மறுபுறம் இருந்த ஜெனி.  

‘இதற்குத்தான் இந்தப் பொறுப்பில்லாதவனை வேண்டாம் என்றேன் கேட்டார்களா?’ தன் நட்புகளை மனதில் திட்டிய ஷிவி, மீண்டும் அந்த பெண்மணிகளோடு சேர்ந்து குழந்தையை உறங்க வைக்க தொடங்கினாள்.

ஒருமணி நேரத்திற்குப் பின் சூட் தொடங்கியது. கேமரா, லைட்டிங் அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டாள். குழந்தையை அதற்கான இடத்தில் ஒரு கூடையில் படுக்க வைத்து விட்டு, எதிரே சற்று தள்ளி நின்றாள் ஷிவி. 

பின் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தவள் மனோவை நோக்கி, “ரிப்ளைக்டரால கவர் பண்ணு” என அத்திசை நோக்கி கை காட்டினாள். 

அதுவரையிலும் தன் கையில் கேமராவை தருவாள், இல்லையெனில் தனக்குக் கற்றுத்தருவாள் என்ற மிதப்பின் உச்சியில் இருந்த மனோகர் சட்டென்று பள்ளத்தில் விழுந்து உடைந்து போனான். ஏமாற்றத்தில் முகமே சுண்டிப் போனது.

‘இதற்காகவா வந்தாய்? அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிடு’ மனோவின் மனம் தன்மானத்தோடு கூச்சலிட, இதே எண்ணத்தில் தான் சவாலாகப் பார்த்தாள் ஷிவன்யா.

அவள் பார்வை இவனை வெகுவாகச் சீட்டிவிட, அனைவரின் முன்பும் சிறுபிள்ளை என நிரூபிக்க விருப்பமில்லை. பற்களைக் கடித்தபடி, மௌனமாக அவ்விடத்தில் சென்று நின்றான்.

“இப்படிதான், கீ லைட் எங்க இருக்கோ அதுக்கு ஆப்போசிட் எங்க லைட் தேவையோ அங்க ரிப்ளைக்டர் (Light reflector) வைச்சிக்கிட்டா போதுமானது” என விளக்கிக் கூறிய சாஹர் அந்த இடத்தில் நின்று பிடித்தும் காட்ட, பின் மனோ வாங்கிக் கொண்டு வேலையைத் தொடர்ந்தான். 

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆனது. முதலில் குழந்தை உயரத்திற்குக் குனிந்து ஒளி எதிரொலிப்பானை பிடித்திருந்த மனோ, சிறிது நேரத்திற்குப் பின் மண்டியிட்டு, பின் அதுவும் முடியாது தரையிலே அமர்ந்து விட்டான். 

மனோவிற்குக் கொடுக்கப்பட்ட முதல் வேலையிலே அவன் பொறுமையை அதிகம் சோதித்து இருக்க, ஷிவி உரைத்ததைப் போல் இந்த துறையில் பொறுமை எவ்வளவு அவசியம் என அனுபவித்து உணர்ந்தான். 

ஐந்து மணி நேரத்தில், இருபது நிமிடத்திற்கு மேல் அந்தக் குழந்தை இவர்களுக்கு ஒத்துழைக்கவே இல்லை. கொஞ்சம் குழந்தைக்குத் தேவையான உணவு, ஓய்வு பின் மீண்டும் சூட் என்றே நேரம் சென்றது. 

ஷிவன்யாவிற்கு எப்போதும் குழந்தையின் சௌகரியமே முக்கியம். அவர்களுக்குத் தேவையான நேரம் கொடுப்பவள், பொறுமையாகவும் நிதானமாகவும் காத்திருப்பாள். 

இதனாலே இவள் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் அழகோடு சிறப்பானதாக இருக்க, வாடிக்கையாளர்களும் அதிகம் இவளைத் தேடி வந்தனர். குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஓ பேபியில் புக்கிங் செய்து காத்திருப்பார்கள்.

புகைப்படப் பிடிப்பிற்கு இடைப்பட்ட நேரத்திலும் இவர்களுக்கு ஓய்வில்லை. அடுத்த அடுத்த தீமிற்கு தேவையான ப்ராப்ஸ் (properties) எடுத்து வந்து, பேக்ரவுண்ட் செட் செய்வது, குழந்தைக்கான உடை என அனைத்தையும் ஏற்பாடுகளை செய்வதிலே நேரம் இறுக்கிப் பிடிக்க, பரபரப்பாகச் சுழன்றனர்.

இடைப்பட்ட நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக ஜெனியும் சாஹரும் மதிய உணவிற்குச் சென்று வந்துவிட்டனர். மனோவாலே ஒருமணி நேரம் தாமதமான கடுகடுப்பில் இருந்தாள் ஷிவி.

மனோவிற்கு வேலையைக் கொடுத்து அமர வைத்துவிட்டு, அவளும் உண்ணவில்லை. இடையில் இரண்டு முறை காஃபி மட்டும் எடுத்துக் கொண்டனர். 

ஒரு வழியாக மாலையில் சூட் முழுதும் முடிந்திருந்தது. அடி வயிற்றில் ஊற்றெடுத்த அமில சுரப்பிகள் குடலைக் கவ்வ, வாழ்க்கையிலே முதல் முறையாகப் பசி என்ற உணர்வு எப்படியிருக்கும் என உணர்ந்தான் மனோகர். 

‘பாவி ஒரே நாள்ல இந்த மனோவை வாடிய கொடியா, ஒடிந்த செடியா, காய்ந்த கருவாடா மாத்திட்டாளே!’ மனதில் பொருமினான்.

ஷிவன்யாவின் அனுமதிக்கு எல்லாம் காத்திருக்கவில்லை. நேராக ஸ்டுடியோவில் இருந்து வெளியேறியவன், அதே கட்டத்தின் கீழ்த் தளத்தில் இயங்கும் உணவகத்திற்குள் நுழைந்தான். 

ஷிவிக்கு இப்போதும் ஓய்வில்லை. எடிட்டிங் அறைக்குள் அந்த பெண்மணிகளை அழைத்து வந்தவள், அவர்களுக்கு வசதியாகப் பெரிய திரை கொண்ட கணினி ஒன்றில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் காட்டினாள். 

அதிலிருந்து அழகாக வந்திருக்கும் புகைப்படங்கள், இவர்கள் தேர்வு செய்த விலையடக்கப் பட்டியலில் இவர்களுக்குத் தேவையானது சிலதை மட்டும் தேர்வு செய்து கொடுத்தனர். பின்னர் உறங்கும் குழந்தையோடு விடைபெற்றுக் கிளம்பினர். 

முப்பது படம் எடுத்திருந்தால் அதில் பதினைந்து அல்லது இருபது படங்கள்தான் தேர்வு செய்வார்கள். ஆனால் ஷிவன்யா எடுத்த அத்தனை புகைப்படங்களும் சிறப்பானதாக இருக்கும். ஆகையால் அதிலிருந்து தேர்வு செய்வதற்குக் கூட சற்று அதீத நேரம் தேவையாகும். 

உணவினை முடித்துவிட்டு உள்ளே வந்தான் மனோகர். ஷிவி இன்னும் உணவுண்ணவில்லை என மனதில் தோன்றினாலும் அதைக் கண்டுகொள்ளாது, சாஹர் ஜெனியோடு சேர்ந்து கொண்டான். 

மாலை வேலை நேரம் முடிய, சாஹர், ஜெனியும் கிளம்பினர். மனோகர் ஒருநொடி தயங்கினான். அவனுக்கு இங்கே முதல் நாள் ஆனால் இது வரையிலும் எந்த வித, விதிமுறைகளும் அறிவுரைகளும் சொல்லியிருக்கவில்லை ஷிவி. 

‘ஸ்டுடியோ க்ளோசிங் டைம் இதுதான், பின் ஏன் அவளிடன் சென்று அனுமதி கேட்க வேண்டும்? இல்லை கேட்போமா?’ என யோசித்து நின்றான். 

அதே நேரம் தோளில் ஒரு லேப்டாப் பேக், கையில் சாவியோடு வெளியே வந்த ஷிவி இவனைக் கடந்து விறுவிறுவென சென்றாள். 

பொதுவாக இறுதியாக, இரவு அவள்தான் ஸ்டுடியோவை மூடிவிட்டுச் செல்வது, ஆனால் இன்று வேலைப்பளுவில் அடித்துப் போட்டதை போல் அலுத்துப் போயிருந்தவள், விரைவாக வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள். 

ஒரு கையால் கட்டியிருக்கும் குழலை அவிழ்த்து விட்டு, தலைமுடிகளைக் கோதியபடியே விறுவிறுவென நடந்தாள். உழைத்து, அலுத்து, களைத்திருந்த போதும் கம்பீரம் குறையாத தோற்றம். 

விறுவிறுவென அவள் வேக எட்டுகளுக்கு, ஓடிச் சென்று அவள் நடையோடு இணைந்து கொண்டான் மனோ.

“மேம்” என்றழைக்க, நிமிர்ந்து ஒருமுறை நோக்கினாள். பட்டை தீட்டிய கத்தியாகப் பாய்ந்தது பாவையின் பார்வை. மனோவிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. 

தனது வேலையைப் பற்றிய விவரங்களைக் கேட்க வந்தவன், இந்த ஒரு பார்வையில் பேச வந்த அனைத்தையும் மறந்து போனான். 

“வாட்?” குரல் மட்டுமே கொடுத்தவள் பின் இவன் புறம் திரும்பவில்லை, நடையின் வேகமும் குறைக்கவில்லை.

“உங்களுக்குச் சிரிக்க தெரியுமா?” வியப்பாக வினவினான். முகத்தை மட்டும் பக்கவாட்டில் திருப்பி இவனைக் கண்டு முறைக்க, நொடிக்கு நொடி பாவனைகளை மாற்றும் விழிகள் காட்டும் விந்தையில் மிரண்டு போனான்.

வரவேற்பறை தாண்டி இருவருமே வெளியில் வந்திருந்தனர். 

“குழந்தைங்ககிட்ட மட்டும் சிரித்த முகமா இருக்கீங்க தானே? இப்போ மட்டும் ஏன் இந்த முறைப்பும் விறைப்பும்? எங்கிட்ட மட்டும் தான் இப்படியா? இல்லை எல்லார்கிட்டையும் இப்படியா? பட் குட் ஆட்டிங் ஸ்கில்” போலியான பாராட்டுடன் வாய் ஓயாது வளவளத்தபடியே வந்தான். 

ஏற்கனவே எனர்ஜி எல்லாம் வடிந்து, வதங்கிய வத்தலாக வந்து கொண்டிருந்த ஷிவிக்குத் தலைவலி கூடும் உணர்வைக் கொடுத்தான். 

நெற்றியோரம் தடவியபடியே, “மனோ ஐம் யூர் பாஸ்” கடிந்து கூறியவள், அதிகாரம் காட்டி, அவன் வாயை அடைக்க முயன்றாள். 

“அதுக்குன்னு சிரிக்கக் கூடாதா? சிரிங்க மேம்” என்றவன், சிரித்தும் காட்ட, எரிச்சலின் உச்சிக்கே சென்றவள், நடையைத் தடை செய்து, சிலையாகத் திரும்பி நின்றாள்.

“நான் எப்படியிருக்கணும்னு நீ சொல்லத் தேவையில்லை. இப்போ என்ன வேணும் உனக்கு?” வார்த்தைகளிலே வெட்டி விட்டாள். எட்டி உதைத்து தூரம் நிறுத்தினாள். 

அப்போதே நினைவு வந்தவனாக, “என்னோட வேலை பத்தின விவரம் வேணும்” என்றவன் வினவ, “நீ நாளைக்கு வேலைக்கு வந்தா சொல்றேன்” வெறுமையான குரலில் கூறினாள்.

‘அலட்சியமா? சவாலா? இல்லை கிண்டலா? என்ன சொல்கிறாள்?’ மனோவின் அறிவு ஆராய்ந்து அறிய முயன்றது.

மின்தூக்கியின் அருகே வந்திருந்தனர் இருவரும். கதவு திறந்த மின்தூக்கியின் உள் நுழைந்த மனோ, “சரி வாங்க மேம்” அடங்கிய குரலில் அவளையும் அழைத்தான். 

அவளோ தாண்டிச் சென்று படிகளில் தடதடவென இறங்கத் தொடங்கி விட்டாள்.

‘சரியான சிடுமூச்சி சிலுக்கு! என்னோட வந்தால் நான் என்ன கடிச்சா திக்கப் போறேன்? ஏற்கனவே டயர்ட்டா இருக்காளேன்னு கரிசனப்பட்டா, ரொம்ப தான்! போனா போகட்டும், மூனு மாடி இறங்கின பின்னாடி தெரியும்’ புகைந்தான்.

என்னவோ அவள் வேண்டும் என்றே தன்னை அலட்சியப் படுத்துவதாகத் தோன்ற, மனோவிற்கு நெஞ்சு விம்மிப் புடைத்தது. 

‘முதல் நாள் நிகழ்வை மனத்தில் வைத்துக்கொண்டு இது என்ன சிறுபிள்ளைத் தனம்?’ என்றும் தோன்றியது. 

ஆனால் உண்மையில் ஷிவன்யா இவனிடம் அலட்சியம் காட்டவில்லை, இவனை ஒரு பொருட்டாகவே இன்னும் அவள் பார்க்கவில்லை என்பதை இவன் உணர்ந்திருக்கவில்லை.

அவள் காட்டிய அலட்சியத்திற்கு இனி தானும் குறைவில்லை எனக் காட்டிவிட வேண்டும். அவளைக் கண்டுகொள்ளவே கூடாதென இவன் தான் சிறுபிள்ளைத்தனமான உறுதியோடு கிளம்பினான்.

Advertisement