Advertisement

அத்தியாயம் 03

கதிரேசன் ஊரை விட்டு விரட்டியதால் மட்டும் தலையசைத்து வந்து விடவில்லை மனோகர். அப்படியொன்றும் இவன் தந்தை கிழித்த கோட்டை தாண்டாத தனயனுமில்லை.

இவனுக்கு இவன் கேமராவைச் சரி செய்ய வேண்டி முக்கிய தேவை இருந்தது. ஆகையால் தான் உற்சாகமாக ஊரை விட்டு வந்துவிட்டான். 

இப்போதோ அது முடியாது என்றான பின், புதிதாக ஒன்றை வாங்கும் திட்டம் இருந்தது. இங்கும் சரி, அங்கும் சரி இரு வீட்டிலும் கேட்டால் கிடைத்து விடும். ஆனால் இந்த முறை சொந்த உழைப்பில் வாங்க வேண்டுமென வைராக்கியமாக இருக்கிறான்.

தன் தந்தை சொல்லிக்காட்டிய ஒரு சொல்லில் உடைந்த கேமராவோடு இவன் உள்ளமும் உடைந்து போய் விட்டது. 

அதனால்தான் தந்தை வேலைக்கு அனுப்பி வைக்கும்படி அத்தை வீட்டில் சொல்லியிருக்க, அதற்கும் தலையாட்டிவிட்டுச் செல்கிறான். 

ஊரிலிருந்த போது, இவர்கள் நிலத்திலும் அனைத்து தொழில் இடத்திலும் பணியாட்களோடு இணைந்து வேலை செய்திருக்கிறான். ஆனால் ஒருநாள் முழுக்க, ஒரு இடத்தில் இருந்ததே இல்லை. நினைத்த நேரத்திற்கு இருக்கும் இடத்தில், கிடக்கும் வேலைகளை முடித்துவிடுவான்.

அதுவும் போகப் பாதி நாள் புகைப்படக்கருவியோடு காடு, மலை எனச் சுற்றி வந்தே கழிந்துவிடும். யாரும் இவனைக் கட்டாயப்படுத்த மாட்டார்கள் இவனும் கட்டுப்பட மாட்டான்.

அப்படியே பழக்கமாகிப் போன மனோவிற்கு வெளியிடத்தில் வேலைக்குச் செல்வது வேம்பாகக் கசந்தது.

ஏனோ வேலைக்குச் சென்றாலும் இவனால் ஒன்ற முடிவதில்லை. ஏதோ மனதிற்குப் பிடிக்கவில்லை, சலிப்பு தட்டி விடுகிறது, இரண்டு வாரத்திற்கு மேல் வெறுப்பே உதித்து விடுகிறது. 

முழு அர்ப்பணிப்போடு செய்யும் வேலை, மனதிற்குப் பிடித்தாக இருந்தால் மட்டுமே சுமையாகத் தெரியாது.

ஃபோட்டோகிரபராக வேலை, தர்ஷன் காட்டிய பாதை சரியானதாகத் தோன்றியது. அதுவும் இந்த துறைக்குள் இவன் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருக்க, ஆர்வமும் ஆசையும் பேயாட்டம் போட்டது.

வேலைக்கு ஊதியமும் கிடைக்கும், தேவையானவற்றையும் கற்றுக் கொள்ள இயலும். மேலும் சில மாதங்கள் சேமித்தால் நினைத்தபடி புதிய புகைப்படக்கருவியும் வாங்கிக் கொள்ளலாம். ஆக ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்று நினைக்க, இப்போதே பசியாக உணர்ந்தான்.

அதுவும் இன்று ஷிவன்யாவின் ஸ்டுடியோவை பார்த்து வந்ததில் இருந்து மனம் ஒரு நிலையில் இல்லை, ஓ பேபியை நோக்கியே ஓடியது. 

ஷிவன்யாவின் நினைவு வர, சொல்லில் வடிக்க முடியாத நமைச்சல், தகதகவென எரிச்சல்.

‘அவள் என்ன தன்னை வேண்டாம் என்பது? அங்குதான் வேலை செய்வேன்’ உறுதியான முடிவில் இருந்தான்.

இரவு உணவிற்குப் பின் தொலைக்காட்சி முன் வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்தான் மனோகர்.

அருகே அலைபேசியில் மலரோடு குறுஞ்செய்தி உரையாடலில் இருந்த தர்ஷனை கண்டுவிட்டு இடித்தபடி நெருங்கி அமர்ந்தான். 

“உனக்குக் கொஞ்சமும் உறுத்தலையாடா? ஒரு சிங்கிள் சிங்காரம் பக்கத்துல இருக்காங்கிற நினைப்பே இல்லை. அதுவும் அவளுக்குத் தம்பி வேற! என்னை பக்கத்துல வைச்சிக்கிட்டே இருபத்தி நாலு மணி நேரமும் ஜொள்ளு ஊத்தி காதல் பயிரை வளர்க்குறீங்களேடா!” எனச் சீண்டினான். 

தர்ஷன் அதை அப்படியே ஒலிப்பதிவாக்கி உடனுக்குடன் மலருக்கு அனுப்பி வைத்தான். கவனித்து விட்ட மனோ, “டேய் சகுனி” என்றவாறு பதறி எழுந்தான்.

அதே நேரம் மலரோ காணொளி அழைப்பில் வந்துவிட, இவர்கள் கச்சேரி ஆரம்பமானது. 

தம்பி என்றும் பார்க்காது மலர் பிழி பிழியெனப் பிழிந்து விட்டாள். செவிகளில் இரத்தம் வருகிறதா? எனத் தொட்டுப்பார்த்துக் கொண்ட மனோகரைக் கண்டு தர்ஷன் வெடித்துச் சிரித்தான்.

வேறுவழியே இன்றி, பாவம் பார்த்த தர்ஷன் இடையில் புகுந்து மனோகரைக் காப்பாற்றி விட்டான்.

நிமிர்ந்து பார்த்த மனோ முறைக்க, சிரிப்புடன் கெத்தாகக் காலரைத் தூக்கி விட்ட தர்ஷன், “பார்த்தியா என் செல்வாக்கு என்னன்னு?” பெருமைபாடிக் கொண்டான்.

“அடேய் தர்ஷன், இந்த பெருமை பீத்தல் எல்லாம் மலர்கிட்ட மட்டும் தானே? ஷிவன்யாகிட்ட முடியுமா? அவ்வளவு தானா அவகிட்ட உன் வார்த்தைக்கு மரியாதை?” இளக்காரமாக வினவினான். 

“என்ன? என்னை சீண்டி விட்டு காரியம் சாதிக்க பார்க்குறீயா? நான் சிக்க மாட்டேன்டா” உஷாரான தர்ஷன் எழுந்து கொள்ள, அவன் கரத்தைப் பிடித்தான் மனோ.

“டேய் நான் உன் செல்லம், வெல்லம் தானே? நான் பாவம் இல்லையா? எனக்கு இந்த வேலை வேணும்டா” மனோ கொஞ்சிக் கெஞ்ச, தர்ஷனுக்கு ஒருநொடி உள்ளம் பாகாய் உருகியது. ஆனால் ஷிவன்யாவை நினைக்க ஒரு மிரட்சியும் உருண்டு எழுந்து வந்தது.

கரத்தை உறுவிக் கொண்டவன், “இந்த அறிவு அவகிட்ட வாயடிக்கும் போது எங்க போச்சு? ஆளை விடுடா ஹாப்பாயில்” மனோவின் வலையில் சிக்காது,  நழுவி ஓடினான். 

ஏமாற்றத்துடன் பற்களை கடித்த மனோ, வேறுவழி யோசித்தபடி தலையைச் சொரிந்தான்.

கிழக்கில் எழுந்த கதிரவன் நடைப்பயிற்சியை முடித்து மேற்கில் மறைந்திருக்க, ஒருநாள் முடிந்திருந்தது. சந்திரன் உதயமாகி மிளிரும் இருள் பூசிய நேரம்.

படுக்கையில் விழுந்த தர்ஷனுக்கு ஷிவன்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. நாளையில் இருந்து மனோகரை வேலைக்கு அனுப்பும்படி கூறினாள்.

நம்ப முடியாது, உறக்கத்தில் இருந்த மனோவை, உலுக்கி சந்தோஷமாக உரைத்தான் தர்ஷன்.

என்னவோ கதை கேட்பது போல் தலையாட்டிய மனோகர், உதடுகளில் உதித்த வெற்றிப் புன்னகையோடு மீண்டும் உறங்கிப்போனான்.

காலையில் கிளம்பியவன், கண்ணாடி முன் நின்று தனது தோற்றத்தையே ஆராய்ந்து பார்த்தான்.

அவ்வழியாகக் கடந்து சென்ற காயத்ரியைக் கண்டு, “அத்தை இங்க வா” என்றழைத்து முன் நிற்க வைத்து, “நான் பார்க்க எப்படியிருக்கேன்?” என்றான்.

இப்படியும் அப்படியுமாக உடலை வளைத்துக்காட்டி, குஸ்தி பயில்வான் போல் புஜங்களையும் உயர்த்திக் காட்டிக் கேட்டான்.

காலை நேரப் பரபரப்பில் இருந்த காயத்ரி, மனோவின் கன்னங்களைத் தொட்டு வழித்து இதழ்களில் ஒற்றிக் கொண்டு, “உனக்கு என்ன? நீ மன்மதராசாடா!” எனக் கொஞ்சிவிட்டுச் சென்றார். எப்போதும் அண்ணன் மகன் அவருக்கு அழகன்தான்!

மனோகர் மீண்டும் கண்ணாடியில் தன் பிம்பம் பார்த்தான்.

குறையெனக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை. பெயரைப் போலவே மன்மதனாகத்தான் இருந்தான் அவன் பார்வைக்கு. ஐந்து அடி எட்டு அங்குலம், அதீத சதைப்பற்று எங்கும் இன்றி, உயரத்திற்கு ஏற்ற உடல்வாகோடு, வயதிற்கேற்ற வனப்போடு கச்சிதமாக இருந்தான். 

செல்லத்திலும் செல்வத்திலும் வளர்ந்தவன் என்பதை மேனியின் பளபளப்பு எடுத்துக்காட்டும். உதட்டிலே எப்போதும் உறைவிடமாகக் கிடக்கும் குறுநகை.

கருகருவென கற்றையான கேசம், பரந்த நெற்றி, குறும்பும் துருதுருப்பும் வழியும் விழி, கூர் நாசி, போதும் என்னும் அளவிற்கு மீசை, பார்வைக்கு நம்பிக்கையான முகம்.

மனோவிற்கு அவன் தோற்றம் பார்க்கத் திருப்தியாக இருந்தது. ‘இப்படி இருக்கும் தன்னைப் பார்த்தா சுள்ளான் என்றாள்? க்கும், அவள் கண்ணில்தான் கோளாறு இருக்க வேண்டும்’ சடைத்துக் கொண்டான்.

‘எடுத்துவிட்ட தாடியை மட்டும் மீண்டும் வளர்க்க வேண்டும், நாளையில் இருந்து தினமும் ஜிம்மிற்கு செல்லவேண்டும்’ என்ற உறுதியோடு கிளம்பிக் கீழே வந்தான்.

சரியாக அப்போதுதான் தர்ஷன் அவனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டிருக்க, பாய்ந்து வந்து குறுக்கே நின்றான் மனோகர்.

அடாவடியாக இவன் வண்டியைப் பறிக்க, “அப்போ நான் எப்படி ஆபிஸ் போக?” புலம்பினான் தர்ஷன்.

“போய் தெரு முக்குல நில்லு, உங்க கம்பெனி கேப் வரும் அதுல போ. புதுமாப்பிள்ளை வெயில்ல அலையக்கூடாது தங்கம் போங்க, போங்க” என்றபடியே வண்டியை இயக்கினான் மனோ.

“அடேய் ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350, நான் ஆசை ஆசையா வாங்கினதுடா” தர்ஷன் பதற, “பரவாயில்லை உன் மாமனார்கிட்ட வாங்கப் போற சீர்வரிசை லிஸ்ட்ல இதையும் சேர்த்துக்கோ” என்றவன் பறந்து, மறைந்து போனான்.

சுட்டுவிரலில் சாவியை சுழற்றியபடி, உற்சாகமாக, ‘ஓ பேபி’ ஸ்டுடியோவிற்குள் நுழைந்தான் மனோகர்.

வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணைக் கண்டதும், “குட் மார்னிங் சேச்சி” வசீகரப் புன்னகையோடு முன் வந்து நின்றான்.

“இப்போ உங்க பெயர் சொல்லலாமே? இனி நானும் இங்க தான் வொர்க் பண்ணப் போறேன். நம்ம பாஸ் கூப்பிட்டு வேலை கொடுத்து இருக்காங்க, அப்படின்னா என் பவர் என்னன்னு பார்த்துக்கோங்க”

தன்னை பேசவிடாது வளவளத்துக் கொண்டிருந்தவனை, வாஞ்சையாகப் பார்த்திருந்தவரின் இதழ்களில் மென்னகை உதித்தது.

இன்முகமாகப் பதில் வணக்கம் உரைத்தவர், “ஐம் மாதவி” எனத் தன்னை அறிமுகம் செய்து கொள்ள, “நான் மனோ, மன்மதன் மனோ” இவனும் தன்னை முறையாக அறிமுகம் செய்தான்.

“மன்மதன் உன் பெயரா? இல்லை வாங்கின பட்டமா?” சிரிப்புடனே கேலியாகக் கேட்க, கலகலவெனச் சிரித்தான் மனோகர். 

“நல்லா தமிழ் பேசுறீங்களே?” வியப்பும் பாராட்டுமாக உரைக்க, “இங்கிலீஷ் தவிர இந்தியன் லேக்குவேஜ் நாலு பேசுவேன். அதனாலதான் இப்படியிருந்தும் இந்த வேலை எனக்குக் கிடைச்சது” என்றபடியே எதையோ உயர்த்திக் காட்டியது போன்று தெரிந்தது. இடையில் இருக்கும் மேசையைத் தாண்டி மனோ எட்டிப்பார்க்க, அப்போதுதான் அது ஊன்றுகோல் எனப் புரிந்தது.

“ஹோ…” என்றவனின் குரலில் இப்போது கொஞ்சம் மரியாதையும் அன்பும் வெளிப்பட, அவன் புன்னகை மேலும் விரித்தது.

மாதவி திருமணம் முடிந்து, விவாகரத்தும் பெற்று விட்ட பெண். விபத்து ஒன்றால் காலில் சிறு குறைபாடு வாங்கிக் கொண்ட மாற்றுத்திறனாளி பெண். அவர் தேவைக்காக வேலைக்கு வந்திருக்க, ஷிவன்யாதான் இந்த வேலையைக் கொடுத்து, நிறைவான ஊதியமும் கொடுக்கிறாள். 

மனோவின் வசியத்தால் இருவருக்கும் இடையில் ஒரு நல்லுறவு சட்டெனத் துளிர்த்து, அரும்பத் தொடங்கியது.

இருவரும் பேசியபடியே இருக்க, சடாரென ஸ்டுடியோவின் கதவினை திறந்து கொண்டு, வெளியே வந்தாள் ஷிவி. அவளைப் பார்த்ததும் நொடிப்பொழுதில் இருவரும் மௌனமாகினர். 

‘முதலாளியோடு வம்பு வேண்டாம், வேலை முக்கியம்’ எனப் பொறுப்பாக நினைத்திருந்தான் மனோ.

ஆகையால் அவனாகவே ஓர் அடி முன் வந்து காலை வணக்கம் தெரிவிக்க, ஷிவியோ கண்டுகொள்ளாது வெளிக்கதவு வழியாக வெளியேறிப் போனாள். 

மீண்டும் அவள் காட்டிய அலட்சியத்தில் இழுத்துப்பிடித்த பொறுமை போக, இவனுக்குச் சுருக்கென ஏறியது. 

ஷிவன்யாவிற்கோ காலையிலேயே இவனோடு பேசி தலைவலியை வாங்கிக்கொள்ள விருப்பமில்லை. 

ஷிவன்யாவைத் தவிர, ஏற்கனவே பணியில் இருந்த சாஹர், ஜெனி இருவரோடும் இவனாகவே சென்று அறிமுகமாகிக் கொண்டு நட்பும் ஏற்படுத்திக் கொண்டான். 

மனோ வந்ததில் இருந்து ஸ்டுடியோவிற்குள் தான் வளைய வந்து கொண்டிருக்கிறான். அவர்களோடு இவனையும் சேர்த்துக் கொண்டனர். ஆனால் இவனுக்கு என்ன வேலையென யாரும் எதுவும் சொல்லவில்லை. ஷிவன்யாவும் அவர்களுக்கு எந்தவித அறிவிப்பும் கொடுக்கவில்லை.

எடிட்டிங் அறையில் கணினி முன் அமர்ந்திருந்த ஜெனி வேலையாக இருக்க, அடுத்த இருக்கையில் இவளை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான் மனோ.

இடையில் நீண்ட பெரிய மேசையிருக்க, அதன் மறுபுறம் அமர்ந்திருந்த சாஹர் கிளைன்ட்டுக்கு கொடுக்க வேண்டிய ஆல்பம் ஒன்றை அழகாக பேக்கிங் செய்து கொண்டிருந்தான்.

“சாஹர் ஒன் கப் ஆப் காஃபி ப்ளீஸ்” நெற்றியோரம் வருடியபடி, குரல் மட்டும் கொஞ்ச வேண்டினாள் ஜெனி. அந்த நொடி, சாஹரை விடவும் முந்திக்கொண்டு எழுந்தான் மனோகர்.

“நான் கொண்டு வரேன் இருங்க” என்றபடியே வெளியேறியவன், காஃபி வெண்டிங் மிஷினை நெருங்கினான்.

ஸ்டுடியோவின் ஹால் பகுதியில் ஒரு ஓரம் பெரிய மேசையோடு அனைத்தும் இருந்தது. அதன் எதிரே நீண்ட சோஃபாவும் ஆங்காங்கு பல வண்ணங்களில் மெத்திருக்கைகளும் இருந்தது.

மேசையை ஒட்டிய கண்ணாடிக் கதவிற்கு வெளியே பால்கனி. அங்கும் மூன்று மெத்திருக்கைகளும் எதிர்புறம் ஒரு மூங்கில் ஊஞ்சலுமாக இருந்தது. தரையிலும் பசுமை நிறத்தில் புல் போன்ற விரிப்பு, தொங்கும் தொட்டிகளில் செடிகளுடன் குளுமையாக இருந்தது அவ்விடம்.

ஜெனிக்கு மட்டுமின்றி தனக்கும் ஒரு காஃபியை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தான் மனோ.

அவள் மேசையில் வைத்தவன் தனது காஃபியை உறிஞ்சியபடியே, “இங்க காஃபி நல்லாவே இல்லை. நீங்க ஃப்ரீயா இருந்தா வாங்களேன், கீழே ஒரு காஃபி ஷாப் இருக்கு போயிட்டு வரலாம்” என அழைத்தான்.

ஜெனி நிமிர்ந்து மனோவைப் பார்த்தாள். இதழ்களில் இளநகை தாண்டவமாட, முகம் மலர்ந்திருந்தாள்.

மெல்லிய குரலில், “மனோ” என அழைத்தவள், தனது இடது கை விரல்களை உயர்த்திக் காட்டினாள். அதில் மோதிர விரலில் தங்க மோதிரம் ஒன்று மிளிர, அதிலும் பதிக்கப்பட்டிருந்த பெயரில் இது அவளின் திருமண மோதிரம் என உரைத்தது.

சட்டென மனோவின் முகம் காற்றுப் போன பலூனாகிப் போனது. ஜெனி மெல்லியதாகப் புன்னகைக்க, கலகலவெனச் சிரித்த சாஹர், “ஆறு வயசு பாப்பா ஸ்கூல் போயிட்டு இருக்கா” என்றான் கூடுதல் தகவலாக. 

பின்னந்தலையில் தட்டிக்கொண்டு சிரித்த மனோவும், “ஆக மொத்தம் இங்க யாருமே சிங்கிளா இல்லையா?” இறங்கிய குரலில் சோக கீதம் வாசித்தான். 

“ஏன் இல்லாம? நம்ம சாஹர் இருக்கானே?” ஜெனி நக்கலடிக்க, “ஐயோ நான் அப்படியெல்லாம் இல்லைங்க” பதறிப் போனவனாய் நடித்துக் காட்டினான் சாஹர். 

அதில் மூவருமே கலகலத்துச் சிரித்தனர். இவர்கள் சிரிப்பொலி ஷிவியின் அறை வரைக்கும் சென்றது. 

“இந்த மன்மதனுக்கு இவ்வளவு பெரிய மாநகர்ல ஒரு பொண்ணு இல்லாம போச்சே! ச்சே, வெக்கம், வேதனை, அவமானம்” வாய்விட்டுப் புலம்பியபடியே எழுந்தான்.

புண்பட்ட நெஞ்சை மீண்டும் ஒரு குளம்பியை ஊற்றி ஆற்றச் சென்றான் மனோகர். 

இந்த ஸ்டுடியோவே செல்வச் செழிப்பு நிறைந்த வீடு போன்று அத்தனை வசதிகளுடன் இருக்க, இந்தச் சுகவாசிக்குச் சொல்லவும் வேண்டுமா? நன்றாக அனுபவித்தான்.

சில நிமிடங்களில் ஷிவி காஃபி எடுக்க வர, மனோவை கண்டுகொண்டாள். 

பால்கனியில் குழந்தைக்கான கரடி பொம்மை ஒன்றை மடியில் வைத்துக்கொண்டு மெத்திருக்கையில் சரிவாக அமர்ந்தபடி, ஒரு கையில் காஃபி கோப்பை மற்றொரு கையில் அலைபேசியோடு இருந்தான். அதிலும் வித விதமான செல்ஃபிகளை கிளிக் செய்து, அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தான். 

நடுவில் இருக்கும் கண்ணாடிக் கதவையும் மறந்து, கையில் இருக்கும் காஃபி கோப்பையை அவன் மீது எறிந்து விடத் துடித்தன இவள் கரங்கள். 

‘இவன் என்ன இங்க மாமியார் வீட்டு விருந்துக்கா வந்திருக்கான்?’ மனதில் புகைந்தபடி மீண்டும் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் ஷிவி. 

முதல்நாள் இவனின் பேச்சையெல்லாம் தூசி போல் தூக்கி எறிந்தவள், இவன் வெளியேறிய ஐந்தே நிமிடத்தில் மறந்து போயிருந்தாள். 

ஆனால் இரவு தனுஜாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்க, வெகு நாட்களுக்குப் பின் தோழிகள் இருவரும் பேசிக்கொண்டனர். 

நலம் விசாரிப்புக்குப் பின் மைத்துனன் மனோகரைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள் தனுஜா. ஒருநொடி ஷிவிக்கு, ‘யார் அவன்?’ என்றுதான் தோன்றியது.

அவள் பேசப் பேசத் தான் காலையில் வந்து சென்றவன் என்பது புரிய, இவள் இப்போதும் அதே முடிவையே உரைத்தாள். 

தனுவோ விடாது, மனோவை பற்றி அனைத்தையும் கூறி, பொறுப்பு ஒன்றைக் கையில் கொடுத்தால் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வான் எனப் புகழாரமும் பாடினாள்.

அவன் எடுத்த நல்ல புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்தவள், உடன் அவன் எடுத்த புகைப்படங்கள் தொகுத்து நிறைந்திருக்கும் அவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் இணைப்பையும் அனுப்பி வைத்தாள். 

மனோ தனக்கு முக்கியமானவன் என்ற தனுஜா, தங்கள் நட்பைக் காட்டி வாய்ப்புக் கேட்டாள். தர்ஷனிடம் மறுத்ததைப் போல் தனுவின் குரல் கேட்ட பின், ஸ்திரமாக மறுக்க முடியவில்லை ஷிவன்யாவால். 

ஷிவன்யாவிற்கு தர்ஷன், தனுஜா இருவரும் நெருங்கிய நட்புகள். குறிப்பிட்டு சொல்வதென்றால் இவர்கள் மட்டும் தான் அவளுக்கு இருக்கும் ஒரே நட்பும் உறவும். 

அது மட்டுமன்றி ஷிவன்யாவிற்கும் வேலைக்கு ஆள் தேவையாக இருந்தது. இப்போதுதான் இரு பெண்கள் அம்மாவிற்கு அறுவைசிகிச்சை, பிரசவ விடுப்பு எனக் காரணம் கூறி நீண்ட விடுப்பில் சென்றுள்ளனர்.

முடிக்க வேண்டிய, வேலைகள் அதிகம் தேங்கியிருக்க, கண்டிப்பாக பணியாட்களின் தேவை இருந்தது. தர்ஷனின் திருமணம் வரை மட்டுமே எனக் கேட்டதால் மனோவிற்கு வேலை கொடுத்தாள். 

ஆனால் ஷிவிக்கு இப்போது வரையிலும் தெரியாத ஓர் உண்மை, தனுஜாவை பிடிவாதமாகப் பேச வைத்து, தான் நினைத்தபடி சாதித்துக் கொண்டது மனோகர்தான் என்று. 

Advertisement