Advertisement

அத்தியாயம் 02 

மாநகரின் காலை நேரப் பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சமில்லாமல் இருந்தது மனோவின் அத்தை வீடு. 

அத்தை காயத்ரி தலைமை தபால் துறையில் அரசு வேலையில் இருக்க, மாமா செந்தில்நாதன் பல நிறுவனங்களுக்கு ஆடிட்டராக இருக்கிறார். 

செந்தில்நாதனும் இவர்களுக்கு நெருங்கிய சொந்தம். ஆகையால் மனைவியின் உறவுகள் தன் உறவுகள் என்ற வேறுபாடெல்லாம் இவர்கள் வீட்டிலில்லை.

மேல்தட்டு வர்க்கம் இருக்கும் லக்ஸூரி அப்பார்ட்மெண்ட்டில் ஆறாம் தளத்தில் சொந்த வீடு. 

காலையிலே சமையல் வேலைகளை வேலையாள் முடித்திருக்க, அனைவரும் அரக்கப் பறக்க அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த நேரம். 

எந்தவித பரபரப்பும் இல்லாது பஞ்சு மெத்தையில் நிம்மதியான தூக்கத்தில் இருந்தான் மனோகர். இவன் சென்னை வந்து முழுதாக மூன்று வாரம் முடிந்திருந்தது.

அத்தை வீடு என்றாலும் இங்கும் இவன் செல்லத்திற்கும் செல்வாக்கிற்கும் குறைவில்லை. எங்கிருந்தாலும் அங்கே அவன் சுகவாசிதான். 

அத்தை மகன் தர்ஷன் அலுவலக உடைகளை இஸ்திரி செய்து கொண்டிருக்க, அவன் காதில் தாங்கியிருக்கும் அலைபேசி வழி இணைப்பில் இருந்தாள் அவன் மாமன் மகளும் வருங்கால மனைவியுமான மலர். 

“அந்த எருமை இன்னுமா எழலை?” மலர் விசாரிக்க, “எழுந்துட்டான், ஜாக்கிங் போயிருக்கான்” அசால்டாகப் பொய்யுரைத்தவன் மச்சானை விட்டுக் கொடுக்காது, காப்பாற்ற நினைத்தான். 

“டேய் தர்ஷன், என் ட்ரெஸ் அயர்ன் செய்ய வேண்டாம்டா. இனி நான் அங்க வேலைக்குப் போகப் போறதில்லை” படுக்கையில் புரண்டபடியே குரல் கொடுத்தான் மனோகர். 

“என்ன?” தர்ஷன் அதிர்ந்து திரும்ப, “என்ன? என்ன சொன்னான்?” அலைபேசியில் மலரும் அலறிக் கொண்டிருந்தாள். 

சட்டென அலைபேசியை அணைத்தது விட்டு, மனோவின் அருகே வந்து எழுப்பியவன், விசாரித்தான். 

அரை உறக்க நிலையிலே எழுந்து அமர்ந்தவன், “நான் இந்த வீக் அவன் கொடுத்த சேல்ஸ் டார்கெட்டை முடிக்கலையாம். ஓவரா பேசினான் அந்த மேனேஜர், நானும் பதிலுக்கு பேசிட்டு வந்துட்டேன்” அசராது அணுகுண்டைப் போட்டான். 

“அப்போ வேலை போச்சா?” தர்ஷன் வினவ, “இதுக்கும் மேல விளக்கணுமா?” சலித்துக் கொண்டான் மனோகர்.

“அடேய் வீட்டுல கொஞ்சற மாதிரியே வேலை பார்க்குற இடத்துலையும் கொஞ்சுவாங்களாடா? நீ தான் அட்ஜெஸ்ட் செய்துக்கணும்” புலம்பிய தர்ஷனின் குரலுக்குச் செவி மூடிக்கொண்டு படுக்கையில் விழுந்தான். 

“என் ஃப்ரண்டோட ஃப்ரண்ட்கிட்ட ரெக்கமண்ட் பண்ணி, இன்டர்வியூ எதுவும் இல்லாம, உன் குவாலிபிக்கேஷன் பார்க்காம கஷ்டப்பட்டு இந்த வேலை வாங்கிக் கொடுத்தேன் தெரியுமா?” தர்ஷன் தொண்டை தண்ணீர் வற்ற கத்திக் கொண்டிருந்தான். 

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த காயத்ரி, “விடுடா, வேலைக்கு போகலைன்னா இருக்கான், இப்போ என்ன?” என்றபடியே மனோவின் அருகே வந்தார். 

செல்ல மருமகனின் தலை கோதியவர், வேலைக்குச் செல்வதால் சொல்லிவிட்டு விடைபெற்றார். 

சரியாக அண்ணன் கதிரேசனிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வர, “அதுக்குள்ள யார்டா விஷயத்தை அங்க சொன்னது?” கேள்வியோடு நீண்ட பெருமூச்சு விட்டார். 

இப்போது மட்டும் வேக வேகமாக எழுந்து அமர்ந்த மனோ, “இவன்தான் அத்தை, மலர்கிட்ட எல்லாத்தையும் லைவ் டெலிக்காஸ்ட் பண்றது” எனப் போட்டுக் கொடுத்தான். 

தான் பார்த்துக் கொள்வதாக மனோவின் தோள் தட்டிக் கொடுத்தவர், மகன் தர்ஷனை முறைத்தபடி அலைபேசியோடு வெளியே சென்றார். 

“உனக்குப் பாவம் பார்த்ததுக்கு எனக்கு இது தேவைதான்” நொந்து, நெற்றியில் அடித்துக் கொண்டான் தர்ஷன். 

மனோ மீண்டும் படுக்கையில் கவிழ, “இருபத்தி ஏழு வயசு எருமைமாடை இன்னும் பச்ச பாப்பா மாதிரி குடும்பமே கொஞ்சிறீங்களேடா!” தன்னையும் சேர்ந்தே நொடிந்து கொண்டான் தர்ஷன்.

மனோகர் எப்போது வந்தாலும் இரண்டு வாரத்திற்கு மேல் தங்குவதே இல்லை. வரும் போதெல்லாம் ஊர் சுற்றிவிட்டு அத்தையின் வீட்டில் விருந்தாடி விட்டுச்சென்று விடுவான். 

ஆனால் இந்தமுறை முடிவாகச் சொல்லிவிட்டார் கதிரேசன். மனோகர் கண்டிப்பாக ஏதாவது ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும். கொஞ்சமாவது பொறுப்பும் பொறுமையும் கற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவாகச் சொல்லியிருந்தார்.

காயத்ரிக்கு தன் பிறந்த வீட்டுச் சொந்தங்கள் மேல் எப்போதும் குறைவில்லாத பாசம். அந்தப் பாசத்திலே தன் அண்ணனின் வீட்டில் பெண் கொடுத்து, பெண் எடுக்க இருக்கிறார். 

காயத்ரி, செந்தில்நாதன் தம்பதியினருக்கு இரட்டையர்கள். மகள் தனுஜாவை அண்ணனின் மூத்த மகன் மாதவனுக்குக் கொடுத்திருக்க, மகன் தர்ஷனுக்கு மலரைப் பேசி வைத்திருந்தனர். 

உச்சியில் வெயில் ஏறிய பின்னரே எழுந்து கொண்டான் மனோகர். சமைத்து வைத்திருப்பதை உண்டுவிட்டு, தொலைக்காட்சியோடு பொழுதைக் கழித்தான். 

மாலை நேரமாக அங்கிருக்கும் பூங்கா, விளையாட்டு மைதானம் எனச் சுற்றிவிட்டு, வேடிக்கை பார்த்தபடி ஒரு பெஞ்சில் சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.

ஊரும் உடன் சுற்றும் நண்பர்களும் நினைவில் வர ஏக்கப் பெருமூச்சை விட்டுக் கொண்டான். அதைத் தொடர்ந்து, உடைந்த கேமராவின் ஞாபகமும் வந்தது. 

வரும் போதே கையோடு அள்ளி வந்திருந்தான். இங்கு வந்ததுமே கடை கடையாக ஏறிப் பார்த்துவிட்டான், பாடி மற்றும் லென்ஸ் முழுவதும் சேதமடைந்து உள்ளது, சரி செய்ய இயலாது என்று விட்டனர். 

பயனற்ற பொருள் ஆன போதும் தூக்கிப்போட மனமில்லாது பந்துஸ்தாக பாதுகாத்து வைத்துள்ளான். இவன் நேசம் வைத்து விட்டால், அந்தப் பொருள்  எந்த நிலையில் இருந்தாலும் அதன் மீதான இவன் நேசம் மாறுவதே இல்லை. 

இரவு உணவிற்குப் பின், மனோகர் அலைபேசியில் கவனம் செலுத்தியபடி படுக்கையில் இருந்தான்.

“டேய் என் ஃப்ரண்ட் ஷிவாகிட்ட உன் வேலைக்குப் பேசியிருக்கேன், உன்னைப் பத்தின டீடெயில்ஸ் எல்லாம் நான் ஆல்ரெடி சொல்லிட்டேன். நான் அனுப்புற அட்ரெஸ்ல நாளைக்குப் போய் பார்” என்ற தர்ஷன், குறுஞ்செய்தியில் முகவரியை பகிர்ந்தான்.

“என்ன வேலைடா?” அசுவாரஸ்யமாக மனோ வினவ, “உனக்கு செட் ஆகுற மாதிரியான வேலைதான். ஷிவாக்கு எல்லாம் தெரியும், நீ போய் பார்” முடிவாக உரைத்தவன், படுக்கையில் சென்று விழுந்தான். 

மறுநாள் காலையில் தர்ஷன் முக்கிய வேலை என விரைவாக அலுவலகம் சென்று விட, கிளீன் சேவ் செய்து, தலைக்கு ஜெல் வைத்துப் படிய வாரி, ஃபார்மல் உடையில் நேர்த்தியாக கிளம்பி, நேரத்திற்கு சென்றான் மனோகர். 

தர்ஷன் அனுப்பிய முகவரிக்குச் சரியாக வந்து சேர்ந்திருந்தான். பெரியதொரு வணிக வளாக கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இருந்தது அந்த அலுவலகம்.

நுழைவில் நட்சத்திரங்களைத் தொங்க விட்டதைப் போன்றிருந்த அலங்காரத்திற்கு நடுவில், வெள்ளை நிறத்தில் பிறை நிலா வடிவில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில், ‘ஓ பேபி! ஃபோட்டோகிராபி’ என்றிருந்ததைக் கவனித்தபடிதான் உள்ளே நுழைத்தான்.

வரவேற்பில் ஒரு பெண் அமர்ந்திருக்க, அவரிடம் தன்னைப் பற்றிய அறிமுகத்தைக் கூறினான். அலைபேசியில் யாருக்கோ அழைத்துப் பேசியவர், சிறிது நேரம் காத்திருக்கும்படி அறிவுறுத்தினார்.

நீண்ட சோஃபாவில் அமர்ந்த மனோ, சுற்றிலும் வேடிக்கை பார்த்தான். குட்டி வரவேற்பறை மட்டும்தான் இவனுக்குக் காட்சியானது. அதில் ஒரு ஓரம் கதவு ஒன்று தெரிய, உள்ளே ஸ்டுடியோவாக இருக்கும் எனக் கணித்தான்.

வெள்ளை வர்ணம் பூசப்பட்ட, சுத்தமான சுவர்களில் மூன்று பக்கமும் ஆங்காங்கு அழகு அழகாகக் குழந்தைகளின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தது. சில புகைப்படங்களைப் பார்க்கையிலே செலிபிரட்டி கிட்ஸ் என்பதையும் கண்டுகொண்டான்.

ஒருபக்கச் சுவர் முழுதும் கண்ணாடி அமைப்பாக, வெளிப்புறத்தைக் காணும்படி இருந்தது. அனைத்தையும் ஐந்து நிமிடத்தில், பார்வையால் அலசி ஆராய்ந்து முடித்து விட்டான்.

கணினியிலே கண்ணாக இருந்த அந்தப் பெண்ணின் எதிரே வந்து நின்றவன், “ஹாய், யூர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்? இங்க எவ்வளவு நாளாக வொர்க் பண்றீங்க?” என ஆரம்பித்தவன் நூல் விட்டுப் பார்த்தான்.

“உங்களை வெயிட் பண்ணச் சொன்னாங்க” தன்மையான குரலில் அவர் பதில் மட்டுமே உரைக்க, கருகருவென கண்மை பூசிய விழி, மஞ்சள் முகம் சந்தனப் பொட்டென ஒருநொடி உற்று கவனித்தவன், “சேச்சி கேரளாவோ? நாம பக்கம் தான் திருநெல்வேலி, தென்காசி டிஸ்ட்ரிக்ட்” என நட்புறவை வளர்க்க முயன்றான்.

ஒரு அழுத்தமான பார்வையில் ஊடுருவிப் பார்த்தவர், அலட்சியமாகத் தோள் குலுக்கிவிட்டு வெடுக்கெனத் திருப்பிக் கொண்டார்.

மனோகருக்கு மனம் சுண்டிப்போக, ‘க்கும் ஆண்டிக்கு ரொம்பத்தான்! ஊர்ல எத்தனை முறைப்பொண்ணுங்க இந்த மன்மதன் பார்வைக்கு வரிசையில நிக்கிறாங்க’ நொடித்து கொண்டான்.

தர்ஷனுக்கு அழைத்து அவன் நண்பனைக் கேட்க, அவனுமே காத்திருக்கும்படி கூறியதில் சூடாகிப்போனான்.

மனோகரால் ஒரு இடத்தில் ஒருமணி நேரத்திற்கு மேலாக சும்மா இருப்பது இயலாத காரியம். குறுக்கும் நெடுக்குமாக நடந்தே அளந்து முடித்திருந்தவன், பொறுமை பறக்க, ஊரில் இருக்கும் தன் நண்பர்களுக்கு அழைத்தான்.

“ஏலே மச்சான், ஒரு மேட்ச் போடுவோம்லே” என அழைத்தவன், அவனின் அத்தனை நண்பர்களையும் அணி திரட்டி, ஆன்லைனில் கேம் விளையாடத் தொடங்கிவிட்டான்.

“டேய் மச்சான் உனக்கு லெப்ட் கார்னர்ல இருக்கேன் பார், என்னை ரெஸ்க்யூ பண்ணுடா”

“டேய் பங்காளி, உனக்குப் பின்னாடி இருக்கான் பார் தக்காளி” ஆர்வ மிகுதியில் தன் கூட்டாளிகளுக்குச் சத்தமாக கமென்ட்ஸ் கொடுத்தபடி தன்னை மறந்து விளையாட்டில் மூழ்கியிருந்தான்.

இவனின் இந்த அலப்பறைக்கு எல்லாம் திரும்பி ஒரு பார்வை பார்த்த பெண், பின் எதுவும் கண்டுகொள்ளவில்லை.

நேரம் செல்வதே தெரியாது மனோகர் விளையாண்டு கொண்டே இருந்ததில் சுற்றுப்புறம் மறந்து போனான்.

இவன் எதிரே ஒரு உருவம் அவனைக் கடந்து சென்றது. இரண்டே எட்டில் மீண்டும் திரும்பி, இவன் எதிரே நின்று ஒரு வினாடி உற்றுப்பார்த்து விட்டு பின் விலக, அப்போதுதான் உள்ளுணர்வு உந்த, சட்டென நிமிர்ந்து பார்த்தான் மனோகர்.

சாம்பல் நிறத்தில் ஃபார்மல் பேன்ட், அதே நிறத்தில் பிளேஸரும் உள்ளே வெள்ளை நிறத்தில் டீஷர்டும் அணிந்தபடி, பிரவுன் நிறத்தில் கலரிங் செய்த சுருள் குழல்கள் தோளில் தொகையாக விரிந்து ஆட, விறுவிறுவென செல்லும் பெண்ணின் பின்பக்கத் தோற்றம்தான் கண்டான்.

“நூடுல்ஸ் மண்டை!” ஆர்வமிகுதியில் தன்னாலே இவன் உதடுகள் முனங்கிக் கொள்ள, அப்போதுதான் வரவேற்பில் இருந்த பெண் வேறு அவளுக்கு வணக்கம் தெரிவிக்க, மனோவின் மனதில் என்னவோ உறுத்தல்.

Advertisement