Advertisement

சட்டென விளையாட்டைக் கைவிட்டு, தர்ஷனுக்கு அழைத்தபடி எழுந்து சென்றான்.

வேலையின் பரபரப்பிற்கு மத்தியில் தர்ஷன் அழைப்பை எடுத்ததுமே, “உன் ஃப்ரண்ட் ஷிவா ஷிவான்னு சொன்னியே அது பொண்ணுன்னு ஏம்லே சொல்லலை?” காய்ந்தான்.

“டேய் அவ பெயர் ஷிவன்யா! நாங்க ஷிவான்னு தான் கூப்பிடுவோம்” மறுமுனையில் தர்ஷன் பெயர்க் காரணம் கூறிக்கொண்டிருக்க, பொறுமை இழந்திருந்த மனோ, “நல்லா வாயில வரும் பார், என்னை இந்தப் பொண்ணுகிட்டதான் வேலை பார்க்க அனுப்புனியா?” என்றான் அதிர்வுடன்.

அப்போதே எதிரே இருக்கும் கண்ணாடியில் லேசாக அவள் பிம்பம் நிழலாடக் கண்டவன், செவியில் இருக்கும் அலைபேசியோடு சடாரென திரும்பிப் பார்த்தான்.

இவனுக்கு நேராகக் கைக்கட்டியபடி நின்றிருந்தாள் ஷிவன்யா. கூர் நாசி நுனி வரையிலும் சிவந்திருக்க, வெப்பக் கதிர்வீச்சாக இவனை நோக்கி வந்தது முதல் பார்வை.

அசராது, அழுத்தமான எதிர் பார்வை மோதலோடு நின்றிருந்தான் மனோகர்.

திரும்பியவள் வரவேற்பறையில் இருக்கும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல, தன்னை அலட்சியப்படுத்துவதாக நினைத்தான் மனோ.

“மேடம் கேபினுக்கு உங்களை வரச் சொன்னாங்க” ரிஷப்ஷனில் இருந்த பெண் செய்தி வாசித்தார்.

வரவேற்பைக் கூட பணியாள் மூலமாகக் கூறியது, மணிக் கணக்காகத் தன்னைக் காக்க வைத்த கடுப்பு. அதுமட்டுமின்றி இவ்வளவு நேரமாகத் தான் ஷிவா என நினைத்திருந்த இடத்தில், சட்டெனப் பெண் ஒருத்தியைப் பொருத்திப் பார்க்க முடியாத தடுமாற்றம், அவள் காட்டிச் சென்ற அலட்சியம் அனைத்தும் மனோகருக்கு எரிச்சலூட்டியது.

கை விரல்களை மடக்கித் தளர்த்திய, மனோ பின்னங்கழுத்தைத் தடவியபடியே உள்ளே சென்றான்.

கதவைத் திறந்தால், குறுகலான வழிப்பாதை இரண்டு பக்கச் சுவரிலும் பிறந்த குழந்தை முதல் பத்து வயது குழந்தைகள் வரை, அழகு அழகானப் புகைப்படங்கள் அணிவகுத்து இருந்தது.

பாதையின் முடிவில் விசாலமான பெரிய ஹால் ஸ்டுடியோவிற்கான அத்தனை அம்சத்துடனும் இருந்தது.

இவன் நிற்கும் இடத்திற்கு இரு பக்கவாட்டிலும் இரண்டு இரண்டு அறைகள் போக, எதிரே கண்ணாடிக் கதவுகள் வெய்த இரண்டு அலுவலக அறைகள்.

அனைத்தும் தாராளமாகப் பரந்த பரப்பளவில், பளிச்சென்ற வெளிச்சத்துடன் இருந்தது. கண்களை உறுத்தாத மென்மையான வண்ணங்கள் எங்கும் சூழ்ந்திருந்தது.

ஒரு அறையில் மூன்று கணினி மேசைகள் இருக்க, அலுவலக அறை என்பதை உணர்ந்து கொண்டான்.

ஹாலில் ஒரு ஓரம் நீல நிறத்தில் பலூன்கள், பனிப்பாறைகள், நட்சத்திரங்கள் எல்லாம் மிருதுவான பஞ்சுப் பொம்மைகளால் அடுக்கி வைத்து, நீல நிறத்தில் விளக்குகளை ஒளிர விட்டு, விண்டர் வோண்டர்லென்ட் தீமில் குட்டிக் குழந்தையின் ஃபோட்டோ சூட்கான ஏற்பாடுகளை ஆணும் பெண்ணுமாய் இருவர் செய்து கொண்டிருந்தார்.

உள்ளே வந்த இவனை இருவருமே நிமிர்ந்து ஒரு புதுப்பார்வை பார்த்தனர். சிநேகமாக இவனை நோக்கிப் புன்னகை வீச, பதிலுக்கு லேசாக முறுவலித்தான் மனோ.

பின் மீண்டும் அவர்கள் தங்கள் வேலையில் கவனம் திருப்பிக் கொண்டனர்.

மற்றொரு அலுவலக அறையில் ஷிவன்யா அமர்ந்திருக்கக் கண்டவன், கண்ணாடிக் கதவினை அனுமதிக்காகத் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.

இவன் வரும் நேரத்திற்குச் சரியாக, அவளும் தர்ஷனை அலைபேசியில் அழைத்திருந்தாள்.

எடுத்த எடுப்பிலே, “தர்ஷன் ஒரு பொண்ணுக்கு கீழ வேலை பார்க்கிறதை கௌரவ குறைச்சலா நினைக்கிறவங்க யாரும் இங்க வேலைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதை விடவும் வேலைக்கு வாங்கன்னு நான் யாரையும் தாம்பூலம் வைத்து அழைக்கலை” வெடுக்கெனப் பேசினாள், எதிரே மனோவை நிற்க வைத்துக் கொண்டு.

“ஹே! இல்லை ஷிவா, மனோ அப்படிச் சொல்லலை. ஒரு மிஸ்அண்டர்ஸ்சன்ட் ஆகிடுச்சு. என்னோட தப்புதான், நான் தான் அவன்கிட்ட கிளியரா சொல்லலை.

உன் பெயருக்கு உன் பொசிஷன்ல ஒரு ஆணை எதிர்பார்த்திருப்பான் போல, உன்னை பார்க்கவும் அந்த ஷாக்ல அப்படி பேசிட்டான். எனக்காகக் கொஞ்சம் கன்சிடர் பண்ணேன் ப்ளீஸ்” மறுமுனையில் மச்சானுக்காகக் கெஞ்சினான் தர்ஷன்.

மனோவோ அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் அவளையே இமை சிமிட்டாது ஆராய்ந்தான். மாநிறத்திற்கும் சற்று கூடுதலான வெண்ணிறம். மாசுமறுவற்ற பளிங்கு முகத்தில் மை தீட்டிய புருவங்கள் தனியாகத் தெரிந்தது. லிப் பாம் பூசிய இளம் ரோஜா வண்ண இதழ்கள் அவளை இன்னும் மென்மையானவளாகக் காட்டியது.

தோற்றம் அவளை மென்மையானவளாக் காட்டினாலும் அவள் அப்படியில்லை என்பதை நொடிக்கொரு தரம் தெறித்து வந்து விழும் வார்த்தைகள் இவனுக்கு நிரூபித்துக் கொண்டே இருந்தது.

“நோவே, நீ என் மேல கோபப்பட்டாலும் ஐ டோன்ட் கேர். இந்த மெச்சூரிட்டி இல்லாத சின்னப் பையனுக்கு இங்க வேலையில்லை” கறாராக உரைத்தாள். குரலின் தொனி உயரவில்லை, ஆனாலும் அழுத்தமும் நிதானமும் நிறைந்திருந்தது.

சிறுவன் எனக் குறிப்பிட்டது மனோகரின் தன்மானத்தை உரசிப்பார்க்க, தகதகவென காய்ந்தான்.

“ஹே ஷிவா, என் மேரேஜ் வரைக்கும் தான். ஜஸ்ட் ஃப்யூ மன்த் ப்ளீஸ்” தர்ஷன் நட்பைக்காட்டி வேண்டினான்.

“தர்ஷன்” அதட்டி அழைத்தவள், “இது ஒன்னும் மத்த வொர்க் பிளேஸ் மாதிரி இல்லை. சைல்ட் ஃபோட்டோகிராபி எவ்வளவு கவனமான, பொறுப்பான வேலை? அதுக்கு இவர் எப்படி சூட் ஆவார்? இவரால இரண்டு மணிநேரம் கூட ஒரு இடத்துல பொறுமையாக இருக்க முடியலை. இவரை வேலைக்கு வைத்து ரிஸ்க் எடுக்க என்னால முடியாது, சாரி தர்ஷன்” நிதானமுடன் தெளிவாக தன் மறுப்பதற்கான காரணங்களை அடுக்கினாள்.

தோழியின் கூற்றில் இருக்கும் நியாயங்கள் புரிபட, அதற்கு மேல் கட்டாயப்படுத்த முடியாத இயலாமையில் தர்ஷன் அமைதியாகிப் போனான்.

அனைத்தையும் கேட்ட மனோவின் முகமே சுண்டிப்போனது. இவ்வளவு நேரமும் இவள் தன்னை காத்திருக்க வைத்தது தனக்கு வைத்த பரிசோதனை என்ற அறியப் பற்களைக் கடித்தான்.

அவள் என்னவோ பள்ளி ஆசிரியைப் போலவும் இவனைத் தவறு செய்த மாணவனாகவும் பாவித்து தர்ஷனிடம் முறையிட்டுக் கொண்டிருக்க, மனோகரின் தன்மானம் வெகுவாக சீண்ட பட்டுவிட்டது.

இவன் பொறுமையை மொத்தமாக நெருப்பில் இட்டு பொசுக்கிப் பார்த்துப் பரிசோதித்து விட்டாள். தாள முடியவில்லை, சுயமரியாதை வீறுகொண்டு எழ, விறைத்து நின்றிருந்தான்.

‘இதென்ன அத்தனைப் பெரிய அரச பதவியா? சரிதான் போ’ எனத் தூக்கி எறிந்து விட்டுப் போகச் சொல்லி மனோவின் மனம் துடித்தது.

சரியாக, அதே நேரம் மனோவின் பார்வை தாழ, அவள் மேசையில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் சோனி (sony alpha 7) சொக்க வைத்தாள்.

புகைப்படக்கருவி பட்டு விட்டதும் ஆசை மனம் ஆட்டம் காட்டியது. பால் கண்ட பூனையாகப் பசியில் உள்ளம் குதூகலித்தது.

அதுவரையிலும் ஆற்றாமையில் அனலாகத் தகித்தவன், பன்னீரே தெளித்ததைப் போன்று நமத்து போனான்.

மேசையிலிருந்து உயர்ந்த பார்வை அவளைத் தழுவியபடியே எழுந்து தாமரை முகத்தில் குவியமிட்டது.

முகம் பார்த்தபடியே, “தோற்றத்தை வைத்து ஒருந்தவங்களை இப்படிதான் ஜட்ஸ் பண்ணுவீங்களா? உங்க ஜட்மெண்ட் ரொம்ப தப்பு மேடம்” நேரடியாகக் குற்றம் சுமத்தினான். 

தர்ஷனோடு பேசிக்கொண்டிருந்தவள், நிதானமாக நிமிர்ந்து இவன் முகம் பார்த்தாள். 

“ஹோ…” ராகமாக இசைத்த குரலோடு, “சரி முறைப்படி ஒரு இன்டர்வியூ வைத்துக்கலாமா?” நக்கலுடன் வினவினாள்.

‘நீ யார் சிறுவன்? என் அறிவுக்கும் அனுபவத்திற்கும் நீ என்னைச் சுட்டுக்காட்டுவதா?’ என்பதைப் போல் மிதப்பான பார்வை வீசினாள். வளைந்த இதழோரம் ஏளனச் சிரிப்பு ஒன்று பூக்க, இவனை நோக்கி வீசிய மென்னகையில் இளக்காரம் தெறித்தது.

மறுபுறம் அனைத்தையும் கேட்டிருந்த தர்ஷன் தலையில் அடித்துக் கொண்டான். 

‘அவளே மனசு இறங்கி வந்தாலும் வந்திருப்பாள். வெண்ணெய் திரண்டு வரும் நேரம் தாழியை உடைத்து விட்டான் முட்டாள்’ நொந்து கொண்டான் தர்ஷன். 

அவள் நேர்காணல் என்ற நொடியே உள்ளுக்குள் கொஞ்சம் சறுக்கிய மனோ, வெளிகாட்டிக் கொள்ளவில்லை.

“ப்ரோபஸ்னலா வொர்க் பண்ண எக்ஸ்பீரியன்ஸ் இல்லைதான் அதுக்குன்னு என்னோட வொர்க், வொர்க் ஸ்டைல் எப்படின்னு பார்க்காமலே சொல்லாதீங்க” முகம் சுருக்கிக்கொண்டு மூக்கு விடைக்க, சிறுவனாக முறையிட்டான்.

‘ரொம்ப பேசுறானே’ மனதில் நினைத்தவள் நெற்றியோரம் தடவியபடியே, “தேவையில்லை. என் ஸ்டுடியோக்குள்ள வர்றதுக்கு அடிப்படைத் தேவை, பொறுமையும் நிதானமும் தான். அதுவே உங்ககிட்ட இல்லையே?” முகத்தில் அடித்ததை போல் நேராகச் சொல்லிவிட்டாள்.

“மேடம்” சீற்றமாக அழைக்க, “கெட் அவுட் ஆப் த ஸ்டுடியோ” அழுத்தமாகப் பற்களைக் கடித்தபடி வார்த்தைகளை வீசினாள்.

Advertisement