Advertisement

அத்தியாயம் 11

விட்டுவிட மாட்டேன் என்பதைப் போன்று பிடியின் அழுத்தம் கூட்டியவன், “எங்க போறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க” என்றான் அதிகாரமாக.

முதல் முறையாகப் புன்னகை தொலைத்து, சிறிதும் அச்சமின்றி தன்னைக் கோபமாக முறைக்கும் மனோகரைக் காண, ஏனோ நெருடியது ஷிவன்யாவிற்கு.

கொதித்துப் போனவள், கைகளை உருவிக்கொள்ள முயற்சி செய்தாள். மூக்கு நுனியில் இருந்து காது மடல்கள் வரை கோபத்தில் சிவந்து போனது. 

“அதிகப்பிரசங்கி உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்” முகத்தில் அடித்தது போன்று பளாரென உரைத்தாள்.

அப்போதும் ஒருசிறு அசைவு கூட இன்றி அழுத்தமாக நின்றவன், “இதுவும் என் வேலை தான், என்னோட தானே வந்தீங்க? திரும்ப நீங்க பத்திரமா சென்னை போற வரைக்கும் நீங்க என் பொறுப்புதான்” உரிமையாக உரைத்தான். 

மனோகரை அறையத் துடிதுடிக்கும் கைகளை முயன்று கட்டுப்படுத்து, “என் சேப்டிக்கு இங்க என்ன குறை?” பற்களைக் கடித்து வார்த்தைகளை உமிழ்ந்தாள்.

மனோகர் கட்டிவைத்திருக்கும் பொறுமை நொறுக்கிக் கொண்டிருந்தது. தங்களை நோக்கி வரும் ஆதித்யாவை அனலிலிட்டு எரித்துப் பொசுக்குவது போன்று நோக்கியவன், “உங்களுக்கு கிளாஸ்ட்ர்ரோபோஃபியா இருக்கு. அதுமட்டுமில்லை தெரியாதவங்க கூட எல்லாம் உங்களை இந்த நேரம் என்னால அனுப்பி வைக்க முடியாதுங்க” உரிமை கொண்டாடினான்.

ஷிவி சூடான மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டு, “மனோ நான் உனக்கு முன்னவே இந்த உலகத்தைப் பார்த்தவள், நீ வந்து என்னை பாதுக்காகணும்னு எந்த வித அவசியமும் இல்லை. அதுவும் போக எனக்கு என்ன ஆனாலும் நீ யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்காது. என்னைப் பத்தி கவலைப்பட வேண்டிய அவசியமோ உரிமையோ உனக்கு இல்லை” என்றவள் சடாரென தன் கரத்தை அவன் பிடியில் இருந்து உருவிக்கொண்டாள். 

சரமாரியாக வார்த்தையால் அடித்ததில் ஆடிப்போய் நிற்க, ஆதித்யா நெருங்கி வந்திருந்தான். 

“என்ன பிரச்சனை?” ஷிவியையும் மனோகரையும் மாறி மாறி பார்த்தபடி ஆதித்யா வினவினான். அவனறிந்த வரை மனோகர் ஷிவன்யாவிடம் வேலை செய்யும் ஒரு பணியாள்.

“நத்திங் கிளம்பிலாம்” ஆதித்யாவிற்குப் பதிலுரைத்த ஷிவியின் பார்வை, மனோவை எச்சரிக்க, அறிந்த போதும் அடங்காது அடமாக நின்றான் மனோகர்.

சிலையாக நிற்பவனையும் அவன் பார்வையையும் உதாசீனமாக உதறிவிட்டு ஆதித்யாவுடன் கிளம்பிவிட்டாள் ஷிவன்யா.

தன் பிடியில் இருந்து கரத்தை உருவிக்கொண்டு தன்னை உதறிவிட்டுச் சென்றதை மனோவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் தன்னை விட, ஆதித்யா அதி முக்கியமானவன் என ஷிவியின் செயல் சொல்லிக்காட்டிவிட, மனோகரால் ஜீரணிக்க முடியவில்லை. தேகம் முழுவதும் பற்றிக்கொண்டு எரிவது போன்று கனன்றான். 

இவன் கேள்வி கேட்டது ஷிவிக்குப் பிடிக்கவில்லை, ஆகையால் அவள் உதாசீனம் செய்ய, அவள் செயல் இவனை மேலும் சீண்டி விட்டிருந்தது.

கேள்விக்குப் பொறுப்புடன் பதில் சொல்லியிருந்தால் பொறுமையாக விட்டிருப்பான். அதே போல் மனோகர் பொறுமையாகக் கேட்டிருந்தால் ஷிவியும் சீண்டியிருக்க மாட்டாள்.

அறைக்குச் செல்ல விருப்பமின்றி வரவேற்பில் இருக்கும் சோஃபாவில் சோர்ந்து போய் அமர்ந்து கொண்டான் மனோ. 

ஆதித்யா நடிகன், பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறான் ஆனால் அவனைப் பற்றிய ஒரு தகவலும் நன்றாகக் கேள்விப்பட்டதில்லை. அப்படிப்பட்ட அவனுக்கு ஏன் இவள் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்? அவனோடு ஏன் செல்ல வேண்டும்? ஆற்றாமையில் கனன்றான்.

இந்த நேரத்திற்கு எல்லாம் இவன் உணர்வுகளை, கிண்டிக்கிளறி ஆராய்ந்து இருக்கலாம் அதை விட்டுவிட்டு ஷிவி, ஆதித்யாவையே எண்ணி ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தான். ஏனென்றே தெரியாது இருவரையும் நினைக்கும் போதே நெஞ்சு முழுதும் பற்றி எரிவது போன்று காந்தியது.

‘அது எப்படி ஷிவிக்குத் தன்னை விட அவன் முக்கியமானவனா இருக்கலாம்?’ ஆற்றாமையில் உள்ளம் பொங்கிக் குமுறியது. 

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கழிய, விடிகாலை பொழுதிலே ஷிவி ஹோட்டல் திரும்பினாள். 

உள்ளே வரும் போதே வரவேற்பில் அமர்ந்திருக்கும் மனோவை கண்டுவிட்டு ஒருநொடி திடுக்கிட்டுப் போனாள். 

‘அறைக்குச் செல்லாமல் இவ்வளவு நேரமும் இங்குதான் காத்திருந்தானா?’ வியந்து போனாள். அதே நேரம் கோபமும் கட்டுப்பாடில்லாமல் கனன்றது.

கொஞ்சம் சரிந்து படுத்திருந்த மனோ, ஷிவி இவனைத் தாண்டி செல்லும் போது கவனித்துவிட, வேகவேகமாக எழுந்து அவள் பின்னே சென்றான்.

“ஷிவி கொஞ்சம் நில்லுங்க” கோபமுடன் சத்தமாக அழைக்க அழைக்க அவள் நில்லாது சென்றுவிட்டாள். 

அடுத்தடுத்து அவள் பின்னே ஓடியவன் அதிரடியாக அவள் அறைக்குள்ளும் நுழைந்தான். 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றபடியே நுழைய, உக்கிர காளியாக நின்றிருந்த ஷிவி, “நீ யாருடா என்னை கேள்வி கேட்க?” என்றாள் அழுத்தமாக.

அவள் கேள்வியைச் சிறிதும் காதில் வாங்காது அசட்டை செய்தவன், “நீங்க அந்த ஆதித்யாவை லவ் பண்றீங்களா?” மனதின் அரிப்பை கேள்வியாக தொடுத்துவிட்டான்.

ஷிவியின் முகம் முற்றிலும் மாறிப் போக, “மனோ ஸ்டே வித்இன் யூர் லிமிட்ஸ்” விரல் நீட்டி எச்சரித்தாள். குரல் உயரவில்லை, சீற்றமில்லை, வேகமில்லை ஆனால் அனைத்தும் அவள் கருவிழிகள் சிவப்பேறி பளபளத்து படமெடுத்துக் காட்டியன.

“அப்புறம் ஏன் அவனோட நைட் அவுட் எல்லாம் போறீங்க? நான் கேள்விப்பட்ட வரை அவன் சரியில்லைங்க, ஏன் நேத்து கூட அவனோடு ஒரு பொண்ணு இருந்தாளே?” அவனைப் பற்றி இவளுக்குப் புரிய வைத்துவிடும் வேகத்தில் படபடத்தான். 

ஷிவி செய்து வைத்த செயலால் மனோகர் முற்றிலும் நிதானம் தொலைத்திருந்தான்.

“ஸ்டாப் இட்” தொண்டை நரம்புகள் புடைத்து எழ அழுத்தமுடன் உரைத்தவள், ‘அவ்வளவு தானா நீ’ என்பதைப் போல் நீ அற்பமான ஒரு பார்வை பார்த்தாள்.  

“ச்சே…” இகழ்ச்சியாக உதட்டையும் சுழித்துவிட, மனோகருக்கு பளீரென முகத்தில் அறைந்தது போன்றிருந்தது. அவள் ஒரு உதட்டுச் சுளிப்பே காரி உமிழாத குறையாக இருக்க, முகமே கன்றிப்போனான்.

“சா… சாரிங்க, நான் உங்களை எதுவும் தப்பா சொல்லலை” பட்டென அந்த நொடியே வேண்டினான்.

“கெட் லாஸ்ட்” வெடித்தவள், வாசலில் நிற்பவனை முழங்கையால் எட்டித் தள்ளிவிட்டு கதவையும் அடைத்துக் கொண்டாள்.

“ஷிவி ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க ப்ளீஸ். என்னைப் பேச விடுங்க” படபடவென கதவைத் தட்டி அழைத்தான். வெகு நேரமாகியும் அவள் திறப்பதாக இல்லை.

மனோகர் கூனிக்குறுகிக் குன்றிப் போனான் ஆதித்யாவைத் தவறாகச் சொல்ல வந்து இவன் தவறானவன் ஆகிப் போனான் அவள் பார்வையில்!

கடுப்போடு கால்களை எட்டிச் சுவரில் உதைத்தவன், பின்னந்தலையை அழுத்திக் கோதினான். ‘ஆதித்யாவைப் பேசியதற்கு இவள் ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டும்?’ தகதகவென காய, ஆத்திரம் அடங்கவில்லை.

அவனுடன் சென்றதற்கு இவன் ஏன் உணர்ச்சிவசப்படுகிறான்? இவனுக்கு என்ன உரிமையுண்டு என்பதையெல்லாம் வசதியாக மறந்து போனான்.

வெறுப்போடு கதவில் ஓங்கித் தட்டிவிட்டு தன் அறைக்குள் வந்தவன், கட்டிலில் கவிழ்ந்தான்.

ஒடுங்கிப் போய் கண்மூடி, அமர்ந்தாள் ஷிவி. கைகளை ஊன்றி முகம் புதைத்திருந்தவளின் உடலே கிடுகிடுவென நடுங்கியது. மனதுள் என்னென்னவோ எண்ணங்கள் அலைமோதி மேலெழுந்து வர, மூடிய இமைதாண்டியும் சூடான விழி நீர்த் துளி உருண்டோடி வந்தது. 

‘என்ன நினைத்துவிட்டான் என்னை?’ நெஞ்சு தீக்காடாக எரிந்தது. ‘நேற்றைய அரை நாள் மனோவோடு ஊர்சுற்றியதும் முறைப்பை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு கொஞ்சம் இயல்பாக இருந்ததன் விளைவு தானோ இது?

ஆதித்யாவைத் தவறாகக் கூறுபவன் அவனோடு சென்றதற்கு என்னையும் தவறாக நினைக்கிறானோ? அதனால் தானே இந்த வார்த்தை வந்திருக்க வேண்டும்?’ இதயம் விடைத்து விம்மியது.

உதடுகள் வரை ஈரத்தின் உவர்ப்பை உணர்ந்தவள் விழிகளைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள். நெற்றியோரம் தடவிக் கொண்டவள் மனோவை பற்றி சில நொடிகள் சிந்தித்தாள். 

அவனை அறிந்து கொள்ளும் எண்ணத்தில் தான் தன்னோடு வரவும் அனுமதித்தாள். ஆனால் ஒருசிறு விஷயத்தை ஊதி பெரிதாக்கி விட்டோமோ? என இப்போது உறுத்தியது. இன்னும் அவன் எண்ணப்போக்கு எதை நோக்கி என தெளிவுற தெரியவில்லை. ஆனாலும் இதற்கு மேல் இவனைத் தள்ளி வைக்கச் சொல்லி உள்மனமும் தெளிந்த அறிவும் அறிவுறுத்தின. 

அலைபேசியை இயக்கி அடுத்த விமானம் எப்போது எனப் பார்த்து விட்டு, எழுந்தவள் முகம் துடைத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். 

சில நொடிகளிலே கிளம்பி வந்தவள், பின் தனது உடைமைகளை பேக் செய்து கொண்டு, விறுவிறுவென கீழே வந்தாள். 

வரவேற்பில் இருவர் அறைக்கும் இன்றைய நாளுக்கும் சேர்த்து பணத்தைக் கட்டியவள், இவள் அறைச் சாவியை ஒப்படைத்து விட்டுக் கிளம்பி வெளியே வந்தாள். 

காலை ஆறுமணி அடர் குளிரும் மெல்லிய வெளிச்சமும் பரவிக்கொண்டிருக்கும் புலரிப் பொழுது. டேக்ஸி பிடித்து விமானம் நிலையம் வந்து சேர்ந்தாள். 

இது எதுவும் தெரியாது படுக்கையில் கவிழ்ந்திருந்த மனோ அப்படியே அசதியில் அவனறியாது உறங்கிப் போயிருந்தான்.

ஒன்பது மணிப் பொழுதில் மனோகர் கண் விழிக்க, ஷிவன்யா இந்த நேரத்திற்குச் சென்னை சென்று சேர்ந்திருந்தாள். 

மனோவிற்குக் கண் விழித்த சிலநொடிகளுக்குப் பின்புதான், நேற்றைய இரவிலும் சற்று முன்பும் செய்து வைத்த கலவரம் அனைத்தும் நினைவிற்கு வந்தது.

பட்டென எழுந்து அமர்ந்தவன், நெற்றியில் அடித்துக்கொண்டான். ‘தான் என்ன உளறி அவள் என்ன மாதிரியாகப் புரிந்து கொண்டாளோ?’ ‘கவலையாக இருந்தது. ‘பொறுமையாகப் புரிந்து கொள்ளும்படி நடந்திருக்க வேண்டுமோ?’ இப்போது வருந்தினான். 

குளியலறைக்குள் நுழைந்தவன் வேகவேகமாக முகத்தில் நீரை அடித்துத் தெளித்து முகம் கழுவினான். கண்கள் இரண்டும் மிளகாயைப் பூசியதைப் போன்று எரிந்தன. 

‘அவளை தவறாக நினைப்பதாக நினைத்துக் கொண்டாளோ?  தன்னை கீழ்த்தனமாக நினைத்து விட்டாளோ?’ 

தன்னை என்னவென்று நினைத்திருப்பாள்? ஏற்கனவே அவளுக்கு தன் மீது கொஞ்சம் நன்மதிப்பு இல்லை. நன்மதிப்பு என்ன வெறும் மதிப்பு கூட இல்லை. அற்பமாகத் தானே பார்த்தாள்? 

அவள் மீதான அக்கறை தானே இன்றி அவளை எந்த வித்திலும் தவறாக நினைக்கவில்லையே?’ அதன் விடவும் தன்னை தவறாக நினைத்துக் கொள்வதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 

வெளியேறியவன் விறுவிறுவென ஷிவியின் அறை முன் சென்று நின்று அழைத்து மணியை இசைந்து கொண்டிருந்தான். அவள் உள்ளே இருப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை. முழுதாக ஐந்து நிமிடத்திற்கு மேல் பொறுமை காக்க மனோவால் இயலவில்லை.

வரவேற்பிற்கு வந்தவன் அவள் பெயர் மற்றும் அறை எண்னைக் கூறி விசாரிக்க, இருவர் அறையையும் காலி செய்துவிட்டு அவள் கிளம்பி வெகு நேரமாகிவிட்டது எனத் தெரிவித்தனர். 

மனோகர் கொதி நிலையின் உச்சிக்கே சென்று விட்டான். உஷ்ண பெருமூச்சை விட்டவன், அழுத்தி தலை கோதியபடியே அங்கே குறுக்கும் நெடுக்கமாக நடந்தான். 

ஷிவியின் எண்ணிற்கு அழைக்க, அழைப்புகள் செல்லவே இல்லை. ‘தனது அலைபேசி எண்னைத் தடை செய்து வைத்துள்ளாளோ?’ கொதிப்புடன் நின்றான். 

விரைந்து அறைக்கு வந்தவன் சரசரவென தனது உடைமைகளை பேக் செய்து கொண்டு கிளம்பினான். 

‘அப்படி என்ன செய்துவிட்டேன் என என்னை விட்டுச் சென்றுள்ளாள்? அதுவும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட அறிவிக்காமல்? இவள் விட்டுச்சென்றால் தன்னால் தனியாகச் சென்னை செல்ல முடியாது என நினைத்துக் கொண்டாளா? நான் என்ன குழந்தையா?’ பொருமினான். 

அவள் முன் நின்று நறுக்கென நன்றாக நான்கு கேள்வி கேட்க வேண்டுமென்ற வேகத்துடன் கிளம்பினான். 

ஷிவியை போல யாருமே தன்னை உதாசீனம் செய்ததில்லை என்ற போதும் மீண்டும் மீண்டும் அவளிடமே சென்று நிற்கிறது இந்த மானங்கெட்ட மனம் தன்னையே நொந்து கொண்டான். 

மனோகர் உச்சி வெயில் நேரம் வீடு வந்து சேர்ந்திருந்தான். இவன் வந்த வேளை தர்ஷன் வீட்டில் இருந்தான்.

தன்னறைக்குள் வந்ததும் மாதவிக்கு அழைத்து ஷிவி ஸ்டுடியோவில் இருக்கிறாளா? என விசாரித்தான். நல்லவேளையாக அவள் அங்குதான் இருந்தாள். 

குளியலறைக்குள் நுழைந்தவன் உடல் உஷ்ணம் தணிய, குளித்து உடை மாற்றி வந்தான். காலையில் இருந்து உணவைக் காணாத வயிறு கூப்பாடு போட, இருப்பதை அள்ளி வைத்து, வாயில் அடைத்து, உள்ளே தள்ளினான். 

ஷிவியுடன் சண்டையிடுவதோ இல்லை சமாதானம் செய்வதோ? எது என்றாலும் அவளுடன் அத்தனை எளிதில்லை, நிச்சமாகத் தெம்பு வேண்டும்.  

எதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்த தர்ஷன், ஆமாம் நீ ஏன் கொச்சி போன? ஷிவா உன்னைக் கூப்பிடவே இல்லையாம்?” விசாரணையைத் தொடங்கினான்.  

ஷிவா என்ற அழைப்பிற்கு அதிருப்தியுற்றவன், “டேய் ஷிவன்யா இல்லை ஷிவின்னு சொல்லுஅதட்டினான்.  

என்னவோ இவன் தான் அவளுக்குப் பெயர் வைத்ததை போன்று அதிகாரம் செய்கிறானே!பற்களை கடித்தான் தர்ஷன்.

தனியா போறாளேன்னு கூட போனேன். இப்போ அதுவா முக்கியம்? அத்தை மாமாவை எங்கே?”

“ஊருக்குப் போயிருங்காங்க. எங்க கல்யாணத்துக்குத் தேதி குறிக்க, அது இருக்கட்டும் ஷிவாவும் வந்துட்டாளா?”

“காலையிலே மேடம் வந்தாச்சு, என்னைப் பத்திரமா பார்த்துக்கச் சொல்லி சொன்னியாமே? பாசம்!” என்றபடியே எட்டி இடது கையால் தர்ஷனின் தாடையைப் பற்றி கொஞ்சியவன், “ஆனால் என்னைத் தனியா தவிக்க விட்டுட்டு வந்துட்டா, என்னன்னு கேளு” எனக் கேலியுடன் சீண்டினான்.

மனோவின் கரங்களைத் தட்டிவிட்ட தர்ஷன், “நீ என்ன பிரச்சனை செய்த?” வினவ, மூக்கு விடைக்க செல்லக் கோபமாக முறைத்தான் மனோ.

“நைட் பேசுவோம்” என்றபடியே உண்டு முடித்ததும் கை கழுவியவன், வண்டிச் சாவியை எடுத்துக்கொண்டு ஓ பேபியை நோக்கி ஓடினான்.

‘ஷிவன்யாவை எப்படி மலையிறக்குவது? எல்லாம் உன் வாயால வந்த வம்பு, வாயைக் கட்டி வைடாஅவனை அவனே திட்டிக்கொண்டு, சமாதானம் செய்யும் திட்டத்திலே ஸ்டுடியோவிற்குள் நுழைந்தான்.

அவள் தன்னை தனியாக விட்டு வந்துவிட்டாள் என்ற கோபமும் உள்ளுக்குள்ளே இருக்க, முயன்று அடக்கி வைத்திருந்தான்.

வரவேற்பில் இருந்த மாதவிக்குப் புன்னகை முகமாக வழக்கம் போல வணக்கம் தெரிவித்து விட்டு, உள்ளே சென்றான். 

நல்ல நேரமாக, சாஹர் செமஸ்டர் எழுதச் சென்றுள்ளதால் விடுமுறையில் இருந்தான். ஜெனி தற்போது தான் மதிய உணவிற்கு வெளியில் சென்றிருந்தாள். 

ஸ்டுடியோவிற்குள் ஷிவன்யா மட்டுமே தனியாக அவளறையில் அமர்ந்திருக்க, அதிரடியாக உள்ளே வந்தான் மனோகர். 

“ஏன் சொல்லாம இப்படி ஓடி வந்திருக்கீங்க?” என எதுவுமே நடக்காததைப் போல் கேட்பவனை, நோக்கி கை கட்டிக்கொண்டு முன் வந்து நின்றவள் வெறுமையாக வெறித்தாள். 

“என்னைக் கேள்வி கேட்க நீ யார்? என் பர்சனல் பத்தி பேச உனக்கு என்ன உரிமை இருக்கு? நான் யார் கூட எங்க வேணாலும் போறேன் உனக்கு என்ன பிரச்சனை மனோ?” ஒவ்வொரு வார்த்தையும் தீத்துளியாக வந்து விழுந்தன. 

மனோவிடம் பதிலே இல்லை, ஒருநொடி தலை குனிந்தவன், “உங்களைக் கேள்வி கேட்டது என் தப்புதான். சாரி, மன்னிச்சுக்கோங்க” குரல் குறுக வேண்டினான். 

இவன் மன்னிப்பை வைத்து, தன் கேள்விக்கான பதிலைத் தவிர்ப்பது ஷிவிக்கு நன்கு புரிந்தது. இதற்கு மேல் அவனைச் சீண்டிவிட்டு, தோண்டித் துருவி எதுவும் ஏடா கூடமான பதிலை வாங்கிக் கொள்ள விரும்பவில்லை இவள்.  அதுமட்டுமின்றி இது தேவையுமில்லை என்பதில் ஏக எச்சரிக்கை உணர்வில் இருந்தாள். 

அவள் கைக்கட்டிக் கொண்டு நின்று விசாரிக்கும் தோரணையும் இவன் தலை குனிந்து நிற்கும் தோற்றமும் மனோவிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. 

“உனக்கு இனி இங்க வேலையில்லை. கிளம்பலாம் மனோ” இவனோடு பேச்சு வார்த்தையே வேண்டாம் என்பதைப் போல் வெட்டிவிட்டு மொத்தமாகத் தூக்கி ஏறிய முயன்றாள்.

எந்த வித உணர்வுகளையும் வெளிப்படுத்தாத கற்சிலையைக் கண்டு எந்தவித கணிப்பிற்கும் வர இயலவில்லை மனோகரால்.

“நான் ஏன் போகணும்? என் வேலையில ஏதாவது தப்பு இருந்தாளோ இல்லை என்னால ஏதாவது நஷ்டம் ஆனாலோ என்னை அனுப்புறதுல நியாயம் இருக்கு. சும்மா உங்களை ஒரு கேள்வி கேட்டேன்னு எல்லாம் என்னை நீங்க வெளியே அனுப்ப முடியாது மேடம்” சட்டம் பேசிக்கொண்டு வாதத்திற்கு நின்றான்.

“ஓஹோ…” இதழ் குவியக் கூவியவள், அழுத்தமாகப் பார்த்தாள். 

“ஏன் இப்படி ஓடுறீங்க? உங்களை மீறி நான் உங்களை என்ன செய்திட போறேன்?”

“மனோ”

“ஒன்னு நீங்க விலகி ஓடுறீங்க? இல்லை என்னைத் தள்ளி வைக்கிறீங்க? அப்படியென்னங்க பயம் என் மேல?”

ஷிவன்யாவின் முகமே ஒருநொடி மாறிப்போக, விழி சிமிட்டாது பார்த்திருந்த மனோ சரியாகக் கண்டுகொண்டான்.

“உங்க மேல உள்ள அக்கறையில தான் அப்படி கேட்டுட்டேன் மத்தபடி உங்களைத் தப்பா எதுவும் நினைக்கலை, என்னையும் தப்பு சொல்லாதீங்க தாங்கிக்க முடியலை ப்ளீஸ்” குரலே இறங்கிக் கெஞ்ச வலியோடு வேண்டினான். 

புதிதாக விசித்திரமாகப் பார்த்தவளின் இறுகிய இதழ்கள் மட்டும் பிரிந்து, “கெட் அவுட்” விரட்டின.

இவன் சொல்லாவிட்டாலும் இதுதான் உண்மையென ஷிவியும் அறிவாள். ஆனால் இவனுக்கு என்ன தன் மீது அக்கறை? அதைத்தான் இவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனோவால் இயல்பாக எளிதாக அனைத்து ஜீவராசிகளின் மீதும் அன்பும் அக்கறையும் காட்ட இயலும். ஆனால் ஷிவன்யாவால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Advertisement